சந்தை என்னும் கோவில்: நுகர்வோர் என்னும் கடவுள்

90களில் நடந்தது இது. வேலு மிலிட்டரியில், நடப்பனவற்றையும், நீந்துவனவற்றையும் சேர்த்து ஒரு கட்டுக் கட்டி விட்டு, நானும் நண்பர் ஜெயப்ப்ரகாஷும் ஒரு ஞாயிறு மதியம் சென்னைக்கு வெளியே உள்ள அவரின் தொழிற்சாலைக்குக் காரில் புறப்பட்டோம். இரண்டு பீடாக்கள் உள்ளே சென்று வந்த பிரியாணி ஏப்பம் சுகமாக இருந்தது.. ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம் -நினைவில்லை. சென்னை நகர் எல்லை தாண்டியது கார். உண்ட மயக்கத்தில் கண்கள் செருகி தூக்கத்தில் ஆழ்ந்தோம். தடக்கென்று ஒரு சத்தம். கார் நின்றது.

“என்னப்பா?” என்றார் ப்ரகாஷ்.

“மாடு குறுக்கால பூந்திருச்சு சார்,” என்றார் ட்ரைவர்.

சரி, மீண்டும் தூங்க முற்பட்டோம். கார் நகர வில்லை.

“என்ன ஆச்சு வடிவேல்?” என்றார் ப்ரகாஷ் எரிச்சலுடன்.

“ஸார்.. கீர் (கியர்) ஜாம் ஆயிடுச்சு.”

வெறும் பத்தாயிரம் கிலோமீட்டரே ஓடியிருந்த புதுக் கார்!

கார் நின்ற இடத்திலிருந்து, அவர் தொழிற்சாலை மூன்று கிலோ மீட்டர். போக்குவரத்து வசதிகள் ஏதுமில்லாத இடம். வேறு வழியில்லை. இறங்கி நடந்துதான் போக வேண்டும். கோடை கால வெயில் சுட்டெரிக்க, நடக்கத்துவங்கினோம்.

”தாயோளி!” என்று துவங்கி, அந்தக் கார் கம்பெனி முதலாளியின் தாய், தந்தை, சகோதரி அனைவருக்கும், கோர்ட் ஆணைகள் ஏதுமின்றி, தூய தமிழில் அர்ச்சனை செய்தார் ப்ரகாஷ்.

“அப்பவே யோசிச்சிருக்கணும். லாரிக் கம்பெனிக்காரன் கார் செய்றானே.. அவன நம்பி வாங்கலாமான்னு..” அப்படி வாங்கிய தன் முட்டாள்தனத்தைச் செருப்பால் அடிக்கும் ஒரு திட்டத்தையும் தீவிரமாக எடுத்துரைத்தார்.

அந்தக் காரை உற்பத்தி செய்திருந்த நிறுவனம், இந்தியாவில் லாரிகளை உற்பத்தி செய்யும் ஒரு முன்ணனி நிறுவனம். அவற்றின், பெரிய வாகனங்களும், சிறு வாகனங்களும் நுகர்வோரிடையே மிகப் பிரபலமானவை. அவற்றைப் பயன் படுத்தும் செலவு, மற்ற ஜப்பானிய, ஐரோப்பிய வாகனங்களை விட மிகக் குறைவு. வாகனம் எந்தக் காட்டில் நின்றாலும், அருகிலுள்ள ஒரு வொர்க் ஷாப்பில் சரி செய்து கொண்டு கிளம்பிவிடலாம்.

அவர்கள் கார் தயாரிப்பில் ஈடுபட்டனர். அதுவும் சொகுசுக் கார். மிக அவசர அவசரமாக, தங்களின் சிறு லாரியின் சேஸிஸ் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு, அதன் மீது ஒரு காரின் உடலைப் போர்த்தித் தயாரித்தனர். விளைவு.. லாரி போன்ற கார். சஸ்பென்ஷன் மோசம். அதிகத் தொந்தரவுகள் தரும் எஞ்சின். கியர் பாக்ஸ். சில வருடங்களுக்குள்ளே, விற்பனை பூஜ்யத்தை எட்டியது. மொத்த முயற்சியையும் மீண்டும் சுழியத்தில் இருந்து துவங்க நேரிட்டது.

இந்தியா தன் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் துவங்கிய பின்னர், வெளிநாட்டுக் கார் நிறுவனங்கள் உள்ளே வந்தன. 1996 ஆம் ஆண்டில், அமெரிக்க நிறுவனம் ஒன்றும், தென்கிழக்கு ஆசிய நிறுவனம் ஒன்றும் கடை திறந்தன. அமெரிக்க நிறுவனம், தன் நாட்டில் பிரபலமான ஒரு பெரிய காரின் மாடலைக் கொண்டு வந்தது. அவற்றின் பாகங்களை இறக்குமதி செய்து, பூட்டி, விற்கத் துவங்கினர். விளம்பரத்திற்காக, டென்னிஸ் வீரர் ஒருவரை உபயோகித்தனர். தெ.கி.ஆசிய நிறுவனமோ, முதலில் சந்தையை ஆராய்ந்தது. அப்போது இந்தியாவில் பிரபலமான சந்தைப் பகுதி, சிறு கார்களுக்கானது என்று கண்டது. அப்போதைய சிறு கார் ஒன்றை விட, ஒரு சிறந்த மாடலை இந்தியச் சாலைகளுக்கேற்ப உருவாக்கினர். இந்தியாவில் மிகப் பிரபலமான விஷயங்களில் ஒன்று சினிமா என்று கண்டு கொண்டு, இந்தி (ய) சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஒருவரை விளம்பர மாடலாக உபயோகித்தனர். விளைவு.. இன்று, அந்த தெ.கி.ஆசிய நிறுவனம், இந்தியாவின் இரண்டாவது பெரும் கார் உற்பத்தியாளர். மிகப் பெரும் ஏற்றுமதியாளர். அமெரிக்க நிறுவனம் இன்றும் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

எங்கே தவறு நிகழ்ந்தது?

சொகுசுக் கார் தயாரிப்பில் ஈடுபட்ட லாரி நிறுவனம், சொகுசுக் கார் உபயோகிக்கும் நுகர்வோரின் எதிர்பார்ப்புகள் என்னவென்று புரிந்து கொள்ள முயலவில்லை. லாரி உபயோகிப்பாளரும். சொகுசுக் கார் உபயோகிப்பாளரும் வேறு வேறு என்னும் அடிப்படைப் பாடத்தையே படிக்காமல், லாரி சேஸியின் மீது கார் கட்டி விற்க முயன்றனர். தாங்கள் ஒரு வெற்றிகரமான லாரி நிறுவனம். வாகனம் பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்த நிறுவனம் என்னும் ஒரு மிதப்பு.

அமெரிக்க நிறுவனம் – தாமொரு முன்னிலை அமெரிக்க நிறுவனம். அமெரிக்கா உலகின் மிகப் பெரும் கார் சந்தை. முன்னேறிய நாட்டில் விற்கும், ஒரு பழைய மாடல், இந்தியா போன்ற ஒரு பின் தங்கிய நாட்டுக்குப் போதும்.. அதுவும், அமெரிக்க ப்ராண்ட். சொன்ன விலைக்கு, இந்தியர்கள் வாங்கிப் போவார்கள் என்ற ஒரு அலட்சியத்துடன் வந்தது. டென்னிஸ் விளையாட்டு இந்தியாவில் எவ்வளவு பிரபலம் என்று கூட யோசிக்கத் தோன்றாத அறியாமையோடு. இந்தியச் சாலைகளுக்குத் தேவையான தொழில்நுட்பம் என்ன என்றும் யோசிக்க வில்லை. அந்நிறுவனம், இன்று வரை லாபமீட்டியதாகத் தெரியவில்லை.

ஆனால், தெ.கி.ஆசிய நிறுவனம், தான் வியாபாரம் செய்யப் போகும் சந்தையை முதலில் ஆராய்ந்தது. இந்திய நுகர்வோரின் தேவைகளையும், கார் ஓடும் சாலைகளையும் கண்டு கொண்டு, அதற்கேற்றார்போல் ஒரு காரை உற்பத்தி செய்தது. அவர்களுக்குப் பிடித்தமான ஒரு ஆளுமையைக் கொண்டு விளம்பரம் செய்தது.

”ஆரம்பப் பாடம், எனதருமை வாட்ஸன்,” என்று சொல்லியிருப்பார் ஹோம்ஸ். என்ன செய்வது? ஐ.ஐ.டிகளில், அமெரிக்கக் கல்லூரிகளில் உயர் தொழில்நுட்பம் படித்தால், ஆரம்பப் பாடங்கள் மறந்து விடுகின்றன போலும்.

அதே தொண்ணூறுகளில், பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் இந்தியாவினுள்ளே நுழைந்தன. அது வரை இந்தியக் குளிர்பான ராஜாக்கள் 200 மில்லி பாட்டில்களில் குளிர் பானங்களை ஐந்து ரூபாய்க்கு விற்று வந்தனர். ப.கு.நிக்கள், அகில உலகத் தரம் என்று 300 மில்லி பாட்டில்களில் குளிர் பானங்களை அறிமுகப் படுத்தினர். வேறு வழியில்லாமல், இ.கு.நிக்களும் 300 மில்லிக்கு மாறினர். பப்பு அதிகம் வேகவில்லை. ஒரு ஐந்தாறு வருடங்கள் கழித்து, ஏன் வியாபாரம் பெருகவில்லை என்று ஆராய்ந்தனர். அப்போதுதான் புரிந்தது, இந்தியர்கள் 200 மில்லி அளவுதான் விரும்புகிறார்கள். முன்னூறு மில்லி அவர்களுக்கு அதிகம் என்று. ஏழு வருடங்கள் கழித்து, “சின்ன பாட்டில், அஞ்சு ரூவா!” என்று ஒரு இந்தி(ய) நடிகருக்குக் கோடிக் கணக்கில் காசு கொடுத்து, நுகர்வோருக்கு அறிவித்தார்கள். “நல்ல வேள, இவனுங்க ஆணுறை உற்பத்தியில் இல்லை,” என்று அந்தப் ப.கு. நிறுவன மேலாளர் ஒருவர் வெறுப்பில் சொன்னார்.

சாதுர்யத்துக்கும், நிதி நுட்பத்துக்கும் பேர் போன பெரும் நிறுவனம் ஒன்று அலைபேசித் தொழிலில் ஈடுபட முடிவெடுத்தது. துணி மற்றும் பெட்ரோலியம் தொடர்பான தொழில்களில் முன்னோடி அந்த நிறுவனம். பல்லாயிரம் கோடி ப்ராஜக்டுகளை வேகமாக முடித்து, நிதியைச் சேமித்து, உலகின் மிகக் குறைந்த செலவில், பெட்ரோலியப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம். தான் விற்கும் பொருட்களின் விலையைத் தானே நிர்ணயிக்கும் பலம் பெற்ற பெரும் நிறுவனம். அரசாங்கங்களை முடிவு செய்யும் பலம் வாய்ந்த ஒன்று என்று பலராலும் பேசப்பட்ட குழுமம். அவர்கள் இத்தொழிலில் நுழைந்தபோதே, அவர்கள் வெற்றி பெறுவது உறுதியென்று பத்திரிகைகள் எழுதின.

அலை பேசித் தொழிலையும், தங்கள் மற்ற தொழில் போல பாவித்து, தங்கள் பலத்தைக் காட்டித் துவங்கினர். பல (பத்து மில்லியன் என்று சொன்னார்கள்) மில்லியன் அலைபேசிக் கருவிகளை, தெ.கி.ஆசிய நிறுவனம் ஒன்றில் இருந்து, மொத்தமாக, மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்து, மிக அதிக விலைக்கு, (கிட்டத் தட்ட இருபதினாயிரம்) இந்திய நுகர்வோருக்கு, மூன்று வருடத் தவணை முறையில் வட்டிக்கு விற்றது. (நிதி நுட்பமாம்!). ப்ரிபெய்ட் கிடையாது என்று சொன்னார்கள். குறுஞ்செய்தி வசதியும் இல்லை. பேப்பரில், மிகச் சாதுர்யமான திட்டம். அலைபேசிக் கருவி விற்பனையே முதல் மூன்று ஆண்டுகளுக்கு லாபமீட்டித் தரும் என்று யோசனை. இந்திய தொலைக் காட்சி நிறுவனங்களிடம் மொத்தமாகப் பேசி, விளம்பரச் செலவில் 200 கோடி சேமிப்பு என்று பேட்டிகள். இவர்களின் ஆயத்தங்களைக் கண்டே, போட்டியாளர்கள் நெஞ்சு வெடித்துச் செத்துவிடுவார்கள் என்று சொல்லப் பட்டது.

பொருள் சந்தையில் இறக்கப் பட்டது. விளம்பரங்கள்.. வாண வேடிக்கைகளுக்குப் பஞ்சமில்லை.. ஒரு ஆறு மாதம் கழித்து, அந்தக் கசப்பான உண்மை வந்தது. சில லட்சம் கைபேசிகளே விற்றனவாம். வழக்கம் போல ஆய்வுசெய்து, கீழ் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்கள்.

1. அலைபேசித் தொழிலில், அலை உரிமையும், கருவிகள் விற்பனையும் வேறு வேறு தொழில்கள்.

2. அலைபேசித் தொழிலில், ப்ரிபெய்ட் வசதிதான் பெரும்பான்மையோர் விரும்புவது. குறுஞ்செய்திகள் மிக அத்தியாவசியமான ஒன்று

3. அலைபேசிக் கருவிகள் வெறும் கருவி மட்டுமல்ல. ஒரு ஃபேஷன் ஸ்டேட்மெண்ட். ஒரே மாதிரி கருவியை எல்லோரும் வாங்க விரும்பவில்லை. அன்றையக் காலகட்டத்தில், இருபதினாயிரம் ரூபாய்க்கு வாங்கவோ, தவணை முறையை உபயோக்கிக்கவோ நுகர்வோர் தயாரில்லை.

அதுவுமில்லாமல், அலைபேசிக் கட்டண பில்கள் சரியான முறையில் தயாரிக்கப் படாமல், அலைபேசி உபயோகிப்பாளர்களின் விலாசங்கள் சரிபார்க்கப் படாமல் மிகப் பெரும் குளறுபடிகள் நடந்தன. ஆறுமாதங்கள் பில் வராமல் இருந்தது.. குடிசையில் வசிக்கும் நுகர்வோருக்கு லட்சக் கணக்கில் பில் சென்றது.

குப்புற விழுந்து, மூஞ்சியும் முகரையும் பெயர்ந்த பின்பு, அந்நிறுவனம், தொலைபேசிக் கட்டணம், ஒரு தபால் கார்டை விட மலிவானதாக இருக்க வேண்டுமென்று எங்கப்பாரு சொன்னாருன்னு ஒரு புதுக் கதை சொன்னது.. நுகர்வோருக்கான மாபெரும் சலுகை என்று அலைபேசிக் கருவிகளை ஐந்நூறு ரூபாய்க்குத் தந்தது.. பல ஆயிரம் கோடிகள் நஷ்டம். வேறு யாராக இருந்தாலும் காலியாகி இருப்பார்கள்
அலைபேசித் தொழில், நுகர்வோரை முன்னிலைப் படுத்தி, அவர்களுக்குச் சேவை செய்து லாபமீட்டும் தொழில். அவர்களுடன் உரையாட, அவர்களுக்குச் சேவை செய்யவென்றே ஒரு பெரும் படையோடு அணுக வேண்டிய தொழில். இவர்களோ, அது வரை, பெரும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை, முன்பணம் வாங்கிக் கொண்டு விற்றுப் பழகியவர்கள். விலையையும் அவர்கள் தாம் முடிவு செய்வார்கள். தேவைப் பட்டால், விதிமுறைகளையும் அரசாங்கங்களையும் மாற்றும் வல்லமை படைத்தவர்கள். ஆனால், பாவம் பத்து ரூபாய் ப்ரீபெய்ட் வாங்கும் ஒரு சாதாரண நுகர்வோரை வீழ்த்த முடியாமல் போயிற்று.

இதே நிறுவனம், சில்லறை விற்பனையில் ஈடுபட முடிவெடுத்தது. சொல்லப் போனால், எல்லா பெருந்தொழிலதிபர்களும் ஒரே சமயத்தில் முடிவெடுத்தனர். ஒரு லட்சம் கோடி எங்கள் இலக்கு என்று அறிவிப்பு வந்தது. வேளான் பொருட்களை, பஞ்சாபில் இருந்து கொண்டு வர ஒரு ஏர்போர்ட், நான்கைந்து விமானங்கள் என்று பேட்டிகள் கொடுத்தது.. உலகின் மிகப் பெரும் சில்லறை வியாபாரி வால் மார்ட் 860000 கோடி விற்பனை செய்கிறது.. எங்களாலும் முடியும் என்றது. அந்தத் தொழிலுக்காக, போட்டி நிறுவனத்தில் 50 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த மேலாளருக்கு, ஐந்து கோடி சம்பளம் கொடுத்து, தலைவராக்கியது. அவரும், இந்திய தட்ப வெப்ப நிலைக்குத் தலைகீழ் உறவுடைய உடையணிந்து, ஒரு தொழிற் தொலைக்காட்சிக்கு, கல்லூரியில் பயின்ற மிகச் சிறந்த ஆங்கிலத்தில் லட்சம் கோடிகளைப் பற்றிப் பேட்டிகள் கொடுத்தார்.

தமிழகத்தில், அந்நிறுவனத்தின் சில்லறைத் தொழிலின் முதன்மை அலுவலர், எங்கள் இலக்கு 5000 கோடி என்றார். 20 பெரும் மாநிலங்கள், மாநிலத்துக்கு ஐயாயிரம் கோடி என்றால், ஒரு லட்சம் கோடி கணக்கு சரியாகத் தான் இருந்தது.ஆனால், எனக்குத் தான் கணக்கு கொஞ்சம் உதைத்தது. அந்த முதன்மை அலுவலரைச் சந்தித்த போது, என் சந்தேகத்தைக் கேட்டேன். 15 ஆண்டுகளாக சில்லறை விற்பனையில் 40 கிளைகளுடன் சென்னையில் இருக்கும் ஒரு நிறுவனமே 50-60 கோடிக்கு மேல் விற்பனை செய்வதில்லை. இங்கே 500 கோடி என்பதே நடக்காத விஷயம்.. நீங்கள் எப்படி 5000 கோடி என்று பேசுகிறீர்கள் என்று கேட்டேன். தான் கொஞ்சம் பிஸியாக இருப்பதாகவும், பின்னர் தொலைபேசுவதாகவும் சொன்னவர், இன்றுவரை கூப்பிடவில்லை.. ஆறு வருடங்களாகின்றன.

பஞ்சாப் பிரச்சினை உச்சத்தில் இருந்த போது, காலிஸ்தான் பற்றி ஒரு ஜோக் உண்டு. ஒரு நாள் அவர்கள், பாராளுமன்றத்தைத் தாக்க முடிவு செய்தார்கள். தங்களிடமிருந்த போராளிகளைத் திரட்டிக் கொண்டார்கள். நான்கைந்து ஜீப்களில், தங்களிடமிருந்த துப்பாக்கிகள், குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் முதலியவற்றை வண்டியில் ஏற்றிக் கொண்டு, மின்னல் வேகத்தில் புறப்பட்டார்கள். சாலையில் புழுதி பறந்தது.. ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த கோழிகளும் ஆடுகளும் சிதறி ஓடின.. மின்னல் வேகத்தில் சென்ற முதல் வண்டி, ஒரு நால் ரோட்டில் சாலையோரமாக இருந்த தேநீர்க் கடையில் க்ரீச்சிட்டு நின்றது.. பின்னர் வந்த வண்டிகளும் க்ரீச்சிட்டு நின்றன. முதல் வண்டியில் இருந்து எம்பிக் குதித்த சர்தார் கேட்டாராம், “ தில்லிப் பார்லிமெண்டுக்கு எப்படிப் போகணும்?”

தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் மிகப் பெரும் தலைவராக இருந்த காந்தி, 1915ல் இந்தியா வந்தார். தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரும் வக்கீல். அவரின் வருட சம்பாத்யம், எந்த ஐரோப்பிய அட்டர்னியை விடவும் அதிகம். தான் சேர்த்த செல்வம் அனைத்தையும், மற்றவர்களுக்கு வழங்கி விட்டு, வெறுங்கையுடன், இந்தியா திரும்பி, மக்களுக்குச் சேவை செய்ய முடிவெடுத்தார். அவர் இந்தியா வரும் முன்னரே அவரை, இந்தியக் காங்கிரஸின் தலைவராக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால், வந்தவுடன், அவர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்கச் செல்லவில்லை. தம் அரசியல் குருவான கோகலேவிடம் சென்று என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டார். ஒரு வருடம் இந்தியாவெங்கும் பயணம் செய்து, அதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றும், அதற்கு முன்னால், இந்திய அரசியல் பற்றி பேசக் கூடாதென்றும் கோகலே அவருக்கு அறிவுறுத்தினார்.

காந்தியும், இந்தியாவெங்கும், சாதாரண மக்களோடு, புகைவண்டியின் மூன்றாம் வகுப்பில் பயணித்தார். (சஸி தரூர் சொன்ன அதே cattle class தான்). தான் அரசியல் செய்யப் போகும் பூமியைக் கூர்ந்து நோக்கினார். இப்போதைய தொழில் வழக்கில் சொன்னால் “சந்தை ஆய்வு (market study)”. தாம் சேவை செய்யப் போகும் மக்களையும், அவர்கள் சமூக நிலவரத்தையும், பொருளாதார நிலையையும் படித்தார். தொழில் வழக்கில் “consumer study”. ஓராண்டு ஆய்வுக்குப் பின், கீழ்க்கண்ட முடிவுகளை அடைந்தார்.

1. இந்தியாவின் பெரும்பான்மை ஏழைகள்.

2. வறுமை, தீண்டாமை அவர்களின் பெரும் பிரச்சினைகள்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டே, தன் அரசியல் தொழிலைத் தொடங்கினார். அத்தொழிலின் நோக்கம், ப்ரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, தான் பிரதமராவதல்ல. விடுதலை பெற்று சகலரும் சமூகப் பொருளாதார முன்னேற்றமடைந்து வாழ வேண்டுமென்பதே. அதற்கான நடவடிக்கைகளே, கதர் உற்பத்தி, அந்நியத் துணி பகிஷ்கரிப்பு, மதுவிலக்கு, கோவில் நுழைவுப் போராட்டம் முதலியன. அவற்றோடு வெள்ளையர்களை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தினார். ஏனெனில், சுதந்திரமில்லாமல், மக்கள் முன்னேறுவது கடினம் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதனால்தான், விடுதலை தினத்தன்று, மற்ற அரசியலர் பதவிகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கையில், காந்தி, அவர் தொழிலைச் செய்து கொண்டிருந்தார்.

மிகப் பெரும் மேலாண் சிந்தனையாளரான பீட்டர் ட்ரக்கரும் கிட்டத் தட்ட காந்தியைப் பரதிபலிக்கிறார். தொழிலின் நோக்கம் லாபமீட்டுவதல்ல என்கிறார். ஒரு தொழில் லாபகரமாக இயங்குகிறதென்றால், அது மிக ஆரோக்கியமாக இருக்கின்றதென்று பொருள். மற்றபடி, தன் நுகர்வோரைக் கண்டடைதலும், அவர்தம் தேவைகளை அறிந்து கொண்டு, மிகச் சிறந்த முறையில் பூர்த்தி செய்ய முற்படுவதுமே, ஒரு தொழில் நிறுவனத்தின் உண்மையான நோக்கமாக இருக்க முடியும் என்கிறார். நுகர்வோரின் தேவைகளை நூதனமான பொருட்களாலும், சேவைகளாலும் தொடர்ந்து பூர்த்தி செய்யும் முறைகளை முதன்மைப் படுத்திக் கொள்ளும் நிறுவனங்களே காலத்தை வென்று நிற்கும் என்பது அவர் கணிப்பு.