என் கடவுளின் சாமரம்

எப்படி பிழைத்தது இந்தப் புங்கை,sc-s
நிழல்கூட அளவாக விழுமாறு
எழுப்பப்பட்ட இந்த பிரம்மாண்டக்
கட்டிடம் முன்?
கட்டிடக் கூரையிலிருந்து
வான வேடிக்கை போல
விரிந்து மறையும் புறாக் கூட்டம்
அறிந்திருக்க வேண்டும்.
கூரை களையப்பட்ட பேருந்து நிறுத்தத்தில்
காலையில் ஓடும் காலத்தை
கிலுகிலுப்பையில் சலங்கையாக
ஆட்டிக்கொண்டிருக்கிறது
என் கடவுளின் சாமரம்.
அதன் நிழல் வட்டத்தில்
நான் ஏற வேண்டிய
பேருந்துகளுக்காக காத்திருப்பதில்லை.
அவை நகர்ந்துகொண்டே இருக்கின்றன.