ஆயிரம் தெய்வங்கள்-10

வர்ணத்தார்களின் முன்னோடிகள் – மற்றும் உல்லிக்கும்மிஸ்

மெசப்பட்டோமிய புராணங்களில் ஹிர்ரைட்டியர் நடந்து கொண்ட விதத்தையும், மேற்படியார்களின் வரலாறு, இயக்கம் ஆகியவற்றை வைத்து ஊகித்தால் இவர்களே பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறிய ஆரியர்களாக இருக்கலாம். ஹிட்டைட்டியர்களே இந்தியாவில் க்ஷத்திரியர்கள் என்று டி.டி.கோசம்பி ஆதாரத்துடன் கூறுவதும் சரியாக இருக்கலாம். ஹீர்ரைட்டியர்களின் செயலைப் பார்த்தால் ஒருக்கால் இவர்கள் “ஆரிய பிராமணர்களின் ” முன்னோடிகளாகவும் இருக்கலாம்.

ஹிட்டைட் மொழி பேசிய மக்கள் இனம் தெற்கு ருஷியாவிலிருந்து புறப்பட்ட இந்தோ-ஐரோப்பியர்கள் என்று வரலாறு-மாந்தனியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கி.மு.18-ம் நுõற்றாண்டில் ஆசியாமைனரில் – அதாவது துருக்கியின் மேற்கு எல்லையும், மெசப்பட்டோமிய நதிகளின் உற்பத்தியிடங்களில் குடியேறிய இவர்கள் கிழக்கு நோக்கி இந்தியா வரை முன்னேறியவர்களாவர். பழைய பைபிளில் மாபெரும் யூத மன்னர்களான டேவிட், சாலமன் இருவருக்கும் ஹிட்டைட் இன மனைவியர் உண்டு. கி.மு. 1000 அளவில் பலம் வாய்ந்த பேரரசை மெசப்பட்டோமியாவில் தோற்றுவித்தனர். கி.மு. 1285-இல் பரோ ராம்சே என்ற பலம் வாய்ந்த எகிப்திய மன்னனையே எதிர்த்து வென்றனர். ஹிட்டைட்டியர் நாகரிகம் ஹட்டுசாஷியில் அதாவது துருக்கியில் உள்ள போகஸ்காயில் துலங்கியுள்ளது. சுமார் 1000 களிமண் கியூனிஃபார்ம் எழுத்துப்பலகைகளும், கல்வெட்டுக்களும் இவர்களின் சாதனைகளை விளக்கும்.

ஹிட்டைட்டியர்களைப் போல் இந்தோ-ஐரோப்பிய இனத்தின் மற்றொரு பிரிவினர் ஹீர்ரைட்டியர் ஆவர். இவர்கள் டைக்ரீஸ் நதியின் கிழக்குப் பகுதியில் கி.மு. 2000 ஆண்டளவில் குடியேறி பாபிலேனிய மன்னர்களுக்கு பக்கபலமாக பல்வேறு சிறு நகர அரசுகளை உருவாக்கியவர்கள். பிற்கால இந்தியர்கள் பாரசீகம் வழியே இந்தியாவுக்குள் நுழைந்த வைதீக ஆரியர்களாவும் இருக்கலாம் என்பது ஐரோப்பிய வல்லுனர் கருத்து. இந்தியாவின் பிற்கால வைதீக மரபில் எவ்வாறு பழங்குடி மக்களின் குலச்சின்ன வழிபாடுகளைத் தமதாக்கியபடி புராணங்களை எழுதினார்களோ அவ்வாறே ஒருமைப்பாட்டின் முயற்சியாக சுமேரிய- பாபிலோனிய வழிபாடுகளை ஹீர்ரைட்டியர் தமதாக்கிக் கொண்டனர். எனினும் கி.மு. 1650-20 காலகட்டத்தில் ஹீர்ரைட்டிய நகர அரசுகளை ஹிட்டைட்டியர்கள் வென்றனர். ஹீர்ரைட்டியப் புரோகிதர்களைக் கைது செய்தனர். கோவில் சிலைகளைக் கைப்பற்றினர். பின்னர் ஹீர்ரைட்டியர் வழிபாடுகளை ஹிட்டைட்டியர் தமதாக்கியதாகவும் கூறப்படுகிறது.

ஹிட்டைட்டியர்களின் வழிபாடுகளும் ஹீர்ரைட்டியர்களின் வழிபாடும் ஒன்றே. ஹிட்டைட்டியர் வரிபாடு என்று கூறிக்கொள்ள அவர்களிடம் ஏதுமில. அதே சமயம் ஹீர்ரைட்டியர் புராண வழிபாடுகளை ஹிட்டைட்டிய மொழியில் உள்ள விவரங்கள் மூலமே புத்துருவம் செய்யப்பட்டுள்ளது.

மண்ணுலகு, விண்ணுலகு, பாதாள உலகு, விண்ணுலக அரியாசனம் பற்றிய புராணங்களின் தொடர்ச்சியாக உல்லுக்கும்மிஸ் வதம் சூரசம்ஹாரம் கதை போல் சுவாரசியமானது. சிந்து சமவெளி நாகரிகத்தை எடுத்துக்காட்டும் எழுத்துவடிவங்கள் எவ்வளவு புதிரானவை. அவற்றைப் புரிந்து கொள்வது கடினம். ஹீர்ரைட்டிய மொழியில் எழுதப்பட்டுள்ள ஆவணங்கள் இன்னமும் துருக்கியில் போகஸ்காய் அரண்மனைப் பொக்கிஷங்களாயுள்ளன. இவற்றில் மாயமந்திரங்கள், தந்திரவித்தைகள், வழிபாடுகள் பற்றிய குறிப்புகளாயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஹிர்ரைட்டிய புராணங்கள் ஹிட்டைட்டில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதியில் இரண்டு சிறப்பு தெய்வக்கதைகளைப் பகுத்தறியலாம். முதலாவதாக தெய்வீக அரியாசனம்.

தெய்வீக அரியாசனம்

இன்றைய ஜனநாயகத்தில் யார் ஆட்சியைக் கைப்பற்றி யார் அரியாசனத்தில் அமரப்போகிறார் என்பதை மக்களின் வாக்குச்சீட்டுகள் முடிவு செய்தாலும்கூட தோற்றவர் ஜெயிப்பதும், ஜெயித்தவர் தோற்பதும் நிகழத்தானே செய்கிறது. புராணகாலத்தில் யார் விண்ணுலக அரியாசனம் ஏறுவது என்பதில் போட்டியிருந்தது. எந்த தெய்வம் முதல் தெய்வம் என்பதில் போரும் சண்டையும் தெய்வங்களையும் விட்டுவைக்கவில்லை. எந்த தெய்வம் பெரிது? என்ற கேள்விக்கு சரியான விடை இல்லையென்றாலும் மெசப்பட்டோமியாவிலும் பின்னர் பாரசீகத்திலும் நிகழ்ந்த போட்டிக்கு இந்தியாவில் தீர்வு காணப்பட்டது. சிவனுக்குக் கைலாசம், விஷ்ணுவுக்கும் வைகுண்டம், பிரம்மாவுக்கு பிரம்மலோகம், இந்திரனுக்கு சொர்க்கலோகம் என்றெல்லாம் கூறுபோடத் தெரியவில்லை போலும்! இனி ஹீர்ரைட்டியர் கதைக்குள் செல்வோம்.

தொடக்கத்தில் அலாசஸ் என்பவர் விண்ணுலகு தெய்வீக அரியாசனத்தில் வீற்றிருந்தார். முதல் கடவுளாக இருந்த எனுஸ், தொடக்கத்தில் அலாசஸின் அடிமையாகத்தான் இருந்தார். 9 ஆண்டுகள் அடிமையாயிருந்த எனுஸ் அலாசஸ் மீது போர் தொடுத்தார். அலாசஸ் தோற்றுப்போய் பாதாள உலகில் மறைந்து போனார். எனுஸ் தெய்வீக அரியாசனத்தில் அமர்ந்த போது குமாரபிஸ் அடிமையானார். 9 ஆண்டுகள் அடிமையாயிருந்த குமாரபிஸ் எனூசைப் போருக்கு அழைத்தார். போரின் இறதியில் தோற்று ஓடிய எனுஸைக் குமாரபிஸ் பிடித்துவிட்டார். எனுஸின் தொடையைப் பிடித்துக் கடித்த குமாரபிஸ் வாய்க்குள் எனுஸின் ஆணுறுப்பு சென்றுவிட்டது. குமார பிஸ் அகமகிழ்ந்த போது, எனுஸ் “உன் மகிழ்ச்சி நிரந்தரமல்ல. நீ உண்ட பீஜத்தில் அரண்சாஹஸ் என்ற நதியின் விதை, தஸ்மைசஸ் என்ற அசுரனின் விதை, தெஷப் என்ற புயலின் விதை உள்ளதால் அவை உன்னை அழித்துவிடும்” – என்று சாபம் இட்டு எனுஸ் விண்ணில் மறைந்தது. இந்த சாபத்தால் கவலையடைந்த குமாரபிஸ் நிம்மதி இழந்து இறுதியில் கன்சுராஸ் மலை மீது வாந்தி வரவழைத்து எனசிஸ் பீஜங்களைத் துப்ப முயன்றான். மூன்றில் இரண்டு பீஜங்கள் மட்டும் விழுந்து அந்த இடம் புனிதமானது. சொர்க்கத்திற்குச் செல்லும் வழியாக கன்சுராஸ் மலைமாறியது. எனினும் எனுசிஸ் உருவாக்கிய புயல் தெய்வமான தெஷப் குமாரபிஸ் வயிற்றுக்குள் தங்கிவிட்டது. பின்னர் தெஷப் எனக்கு என்று விடுதலை என்று எனுஸிடம் வினவியது. “உனக்கு நல்ல காலம் வரும்போது விடுதலை பெறுவாய்” என்று எனுஸ் தெஷப்பிடம் பேசியதை குமார பிஸ் கேட்டு அமைதியானார். குமாரபிஸ் பிள்ளை வரம் வேண்டிய இயாவை வணங்கியது. இயா வழங்கிய பிரசாதத்தை கண்ட குமாரபிஸ் இயாவின் யோசனைப்படி ஒரு மந்திரவாதியிடம் சென்றது. மந்திர சக்தியால் தெஷப் புயல் குமாரபிஸ்ஸின் புத்திரனாக அவதரித்தாலும் இயாவின் உதவியால் எனஸிடம் சேர்ந்தது. தெஷப் பிறந்தவுடன் தஸ்மைசஸ் அசுரன் தெஷப்புடன் சேர்ந்தான். அரண்சாஹஸ் டைக்கிரிஸ் நதியானது. தஸ்மைசஸ் உதவிடன் தெஷப் போராடி குமார பீஸை வென்று தெய்வீக அரியாசனத்தைக் கைப்பற்றியதோடு கதை முடியவில்லை. புயல் தெய்வத்தை வென்று மீண்டும் தெய்வீக அரியாசனத்தைக் கைப்பற்ற குமாரபிஸ் முயன்று வெற்றிபெற்ற விவரமே உல்லிக் கும்மிஸ் ஜனனம்.

உல்லிக்கும்மிஸ்

தெய்வீக அரியாசனத்தை மீண்டும் கைப்பற்ற குமாரபிஸ் ஒரு அசுரக் குழந்தை ஒன்றைப் பெற முயன்றார். கால்களில் இறக்கைகளைக் கட்டிக்கொண்டு பறந்தார். குல்சேஷ், மஷி தேவதைகளுக்குச் சொந்தமான நீண்ட பாறைகளை நோக்கிப் பறந்தார். அப்பாதைகள் பலமைல் நீளத்திற்கு நீண்டிருந்தது. குமாரபீஸ் அப்பாதைகளில் பல தடவை புணர்ந்தார். இதன் விளைவாக ஒரு மாயாஜாலக் குழந்தை உருவானது. குல்சேஷ்-மஷி தேவதைகள் அக்குழந்தையை குமாரபிஸ் மடியில் கிடத்தினர் அதை உச்சி முகர்ந்து உல்லிக்கும்மிஸ் என்று பெயரிட்டனர். இது பிறந்ததும் ரகசியம். வளர்ந்ததும் ரகசியம். புயல்தெய்வமான தெஷாப் – கும்மியா, சூரியன், சந்திரன் இஷ்டர் போன்ற பெருந்தெய்வங்கள் அறியாவண்ணம் உல்லிக்கும்மிசை வளர்க்க குமாரபிஸ் திட்டமிட்டனர். இம்பாலுரிஸ் தெய்வத்தின் காலில் இறக்கை கட்டி இருள் பூமிக்கு அனுப்பி இர்சிர்ரா தெய்வங்களை வரவழைத்தார். அட்லசை- அதாவது உலகைத்தாங்கும் உபல்லூரிஸின் வலது தோளில் அம்புபோல் உல்லிக்கும்மிசை நிறுத்தி வைக்க ஆணையிட்டார். உபல்லூரிஸ் ஆழ்கடலில் உள்ள தெய்வம். உபல்லுரிசின் வளர்ச்சி அசுரத்தனமாயிருந்தது. ஒரு நாளில் 1 கியூபிட் வளர்ந்தான். ஆழ்கடலிலிருந்து உயர உயர வளர்ந்து ஆகாயத்தைத் தொட்டுவிட்டான். சூரிய தெய்வமான என்லிலின் பார்வையும் உல்லிக்கும்மிஸின் பார்வையும் நேருக்கு நேர் சந்தித்தன. இதனால் விண்வெளிப் பயணத் தடையுற்றது. விண்ணுலகை யாரும் உல்லிக்கும்மிசைக் கடந்து செல்ல முடியாது. என்லில் அவன் மீது ஊதாக்கதிர்களையும் செங்கதிர்களையும் பாய்ச்சினான். உல்லிக்கும்மிஸ் கல்லுக்குப் பிறந்த ஸ்படிகலிங்க ஸ்வரூபியாயிற்றே! என்லிலின் மீதே ஒளிக்கதிர்கள் திரும்பின. உல்லிக்கும்மிசை வெல்ல முடியாது என்றுணர்ந்த தெய்வங்களில் இஷ்டார் தேவதை கட்சி மாறிவிட்டது. இஷ்டார் உல்லிக்கும்மிசுடன் நட்புக் கொண்டது. ஆகவே, விண்ணுலக தேவர்கள் உல்லிக்கும்மிசை எதிர்த்துப் போரிடும் தலைமைப் பொறுப்பு என்கியாகிய இயாவுக்கு வழங்கப்பட்டது. இயா ஆழ்கடலுக்குச் சென்று உல்லிக்கும்மீசுக்கு ஆதாரமாகத் தோள் சுமக்கும் உபல்லூரிசிடன் உன்தோளில் நிற்பது யார் தெரியுமா, என்று வினவியது. அதற்கு உபல்லுரிஸ், “என்மீது பூமியையும், வானத்தையும் வைத்துள்ளதே தெரியாது. பின்னர் வானமும் பூமியும் பிரிந்ததும் தெரியாது. நீங்கள் சொன்ன பிறகுதான் வலது தோள் வலிப்பதை உணர்கிறேன்” என்றது. பின்னர் இயா, “குமாரபிஸ் ஒரு அசுரப்பிள்ளையைப் பெற்று உன்தோளில் வைத்துள்ளது மிகவும் கனமான ஸ்படிகம். அதன் ஸ்படிகம் பூதாகரமாக வளர்ந்து உன்தோளை அழுத்தி வலியை உருவாக்குகிறது. அது பூமியை விட கனமானது. இப்படி வளர்ந்து உயர்ந்த உல்லிக்கும்மிஸ் பிரபஞ்ச இயக்கத்தை நிறுத்திவிட்டான். விண்ணுக்கும் மண்ணுக்கும் வழி இல்லாமல் போய்விட்டது. அவனை வீழ்த்தினால்தான் தேவர்களுக்கு விமோசனம்” என்று உபல்லுõரிசிடம் வேண்டியது.

உல்லிக்கும்மிசை வீழ்த்த உபல்லூரிஸ் ஒப்புக்கொண்டு தேவர்படை ஆழ்கடலில் இறங்க அனுமதித்தது. என்கியாகிய இயா,தனக்கு முற்பட்ட தெய்வங்களின் படை ஆயுதங்களையும் பயன்படுத்தி உபல்லுரிஸின் ஒத்துழைப்புடன் உல்லிக்கம்மீசின் பாதத்தை வெட்டிச் சாய்த்தது. அவ்வளவுதான் உல்லிக்கும்மீஸ் உயரம் குறைந்து பாதாளத்திற்குள் மறைந்துவிட்டான். தேவர்களுக்கு விமோசனம் கிட்டியது. இப்படிப்பட்ட சூரசம்ஹாரத்துடன் உல்லிக்கும்மிஸ் புராணம் நிறைவுறுகிறது. இத்துடன் மெசப்பட்டோமியக் கதைகளும் நிறைவுபெறுகிறது. அடுத்த இதழில் பழைய பைபிளுக்கு முற்பட்ட மேற்கு செமிட்டிக் என்று கூறப்படும் பாலஸ்தீனக் கதைகளுக்கு முன் செல்வோம். “பால்” , “பாலத்” என்பதெல்லாம் தெய்வீகப் பெயர்களே. தெய்வம் ஒன்று என்றால் அது “அல்லா” என்கிறார் சிலர். தெய்வம் ஒன்று என்றால் அது “பால்” என்கிறது புராணகாலத்து பாலஸ்தீனம்.

அடுத்த இதழில் விடை உண்டு.

(தொடரும்)