அறிவிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

கடந்த முப்பது ஆண்டுகளாக மென்பொருள் துறை பொருளாதாரத்தில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் ஏராளம். தொழிற்புரட்சி காலத்திலிருந்து நாம் பொருள் உற்பத்தியைப் பற்றிக் கொண்டிருந்த பல நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஒரு மூல அச்சை உருவாக்கி, அதிலிருந்து வன்பொருள் பாகங்கள் உருவாக்குவதற்கும், மென்பொருள் உற்பத்திக்கும் வேறுபாடு உண்டு. முதலில் சரியாக வேலை செய்யக் கூடிய மென்பொருளை உருவாக்குவதுதான் கடினம். அந்த முதல் ஒன்று உருவாகி விட்டால், அதனுடைய நகல்கள் நொடிப் பொழுதில் உருவாகி விடும். எத்தனை முறை பக்கம் பக்கமாக வளைத்துப் போட்டு ’காப்பி – பேஸ்ட்’ (copy->paste) செய்திருக்கிறீர்கள்? திட்டப்பணி அறிக்கையாகட்டும், பயனீட்டாளருக்குத் தரப்படும் கோரிக்கைகளாகட்டும் எல்லாமே இந்த காப்பி-பேஸ்ட் முறையில் துரிதமாக உருவாகி விடுகின்றன
காப்பியடிப்பவனுக்கு இது ஆதாயம் என்றால், முதலில் உழைத்து உருவாக்கியவன் முட்டாளாகி விடுகிறான். மனச்சாட்சியை முன்னிறுத்திச் சொல்லுங்கள்: எத்தனை முறை மென்பொருளை விலை கொடுத்து வாங்கியிருக்கிறீர்கள்?  நம்மில் பெரும்பாலாரிடம் நண்பனிடமிருந்து காப்பியடிக்கப்ப்பட்ட மென்பொருட்கள்தான் அதிகம். இதனால் காப்பிரைட் சட்டங்களைக் கடுமையாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் காப்பியடிப்பது வெகுவாகக் குறைந்து விட்டது என்று சொல்ல முடியாது.

இந்த ‘காப்பி-பேஸ்ட்’ உலகத்தில் தம்முடைய படைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மென்பொருள் நிறுவனங்கள் நினைப்பது நியாயமே. சந்தையில் நீங்களும் நானும் வாங்கும் / உபயோகிக்கும் மென்பொருளில் அவர்கள் எவ்வளவுதான் கட்டுப்பாடு கொண்டு வந்து விட முடியும்? உங்கள் வீட்டுப் படிப்பறையில் / படுக்கையறையில் சி.டியிலிருந்து நீங்கள் லபக்-லபக்கென்று களவாடி (மன்னிக்கவும்: சட்டப்படி அது களவாடல்தான்) உங்கள் வன் தகட்டை நிரப்பி விடுவீர்கள்? எந்தப் போலீசுக்கு என்ன தெரியும்? நேற்று வந்த படங்கள் இன்று கடையில் ஐம்பது ரூபாய் சி.டியாக வந்து விடுகின்றனவே?

ஆனால் படத்தயாரிப்பாளர்களுக்கு இல்லாத ஒரு சௌகரியம் மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு உண்டு. இவர்கள் சந்தையில் விற்பது பூடகமான உருவில் உள்ள, கணினிகள் மட்டுமே படிக்கக்கூடிய நிரல்கள். இந்த நிரல்களை நீங்கள் உங்கள் கணினியில் ஓட்டலாம். ஆனால் படிக்க இயலாது. ஆக அந்த மென்பொருளை நீங்கள் அப்படியே உபயோகிக்கலாம். அதை தட்டி ஒட்டி உங்கள் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களானால் – ஊஹூம், அதற்கு இந்த மென்பொருளின் மூல நிரல்கள் தேவை. அதை உற்பத்தி நிறுவனங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன் வரா.
உபயோக அளவில் காப்பியடிப்பதை ஓரளவே கட்டுப்படுத்த முடிந்தாலும், மூல நிரலைப் பத்திரமாகப் பாதுகாப்பதின் மூலம் மேன்மேலும் அதிகமான பண்புக்கூறுகளைத் தம் மென்பொருளில் சேர்த்து தம்முடைய தனித்தன்மையை ஒரு மென்பொருள் நிறுவனம் பாதுகாத்துக்கொள்ள முடியும். இது கூட இல்லா விட்டால், மென்பொருள் உற்பத்தியாளர்கள் பிழைப்பது எப்படி? இது நியாயமானதுதான் என்று தோன்றுகிறதல்லவா?

தொழில் உலகப் பொருளாதாரத்தின் அடிப்படை நியாயம் போல் தோன்றும் இந்த வாதத்தை மறுத்தார் ரிசர்ட் ஸ்டால்மன் என்ற கணினி விற்பன்னர். தம்மைத் தகவல் ஊடுருவி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொண்ட ஸ்டால்மன், மென்பொருள் தொழில் முறைகளை மாற்றியமைக்க விழையும் தீவிரவாதி. இள வயதில் பார்ப்பதற்கும் இவர் ஒரு லத்தீன் அமெரிக்கப் புரட்சியாளரைப் போலிருப்பார். இளமைப் பருவம் கடந்த நிலையில் நீண்ட முடியும், தாடியுமாய் முனிவர் போல் (ஹிப்பி என்றும் சொல்லலாம்) இப்போது காட்சி தருகிறார். ஆனால் கருத்துகளின் தீவிரம் கொஞ்சம் கூடக் குறைய வில்லை.

மூல நிரல்கள் மறைத்து வைக்கப்படுவதால், ஒரே விதமான மென்பொருள் செய்யும் ஒவ்வொரு நிறுவனமும், ஒரே விதமான செயல்பாடுகளுக்காக தனித்தனியாக நிரல்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. சமூகக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது மிகப்பெரிய விரயம். ஒரு நிறுவனத்தின் மென்பொருள் மூல நிரல்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டால், அந்தப் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அந்த மூல நிரல்களை மேலும் மேலும் செப்பனிட்டு, அதிகமான செயல்பாடுகளுடன் ஒரு மேன்மையான மென்பொருளைக் குறைந்த நேரத்தில் உருவாக்கித் தர முடியும். இதுதானே சமுதாயத்திற்குத் தேவை? நல்லது? இத்தகைய சமூக நன்மையை மறுத்து, மூல நிரல்களைத் தம்முடைய சொத்துகளாகப் பதுக்கிவைக்கும் நிறுவனங்களை எதிர்த்துக் குரல் கொடுத்தார் ஸ்டால்மன். அவர்களுடைய செயல் அதர்மமானது என்று ஆணித்தரமாக வாதாடினார். இவர் சொல்வதும் நியாயம் போல் தோன்றுகிறதா? அப்போது எது சரி?

மூல நிரல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பது புதியது அன்று. யூனிக்ஸின் ஆரம்ப நாட்களில் அதை உருவாக்கிய ஏ.டி & டி அம்மென்பொருளை மூல நிரலுடன் வழங்கியது. பின்னர், கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்திலிருந்து பெர்கலி மென்பொருள் வினியோகம் (Berkely Software Distribution – BSD) என்ற திட்டத்தின் கீழ் யூனிக்ஸ் மூல நிரலுடன், மாற்றியமைக்கும் / விற்கும் உரிமையுடன் சகாய விலையில் (ஆயிரம் டாலர்) விற்கப்பட்டது. இப்படி உருமாறிய எல்லா மென்பொருளுமே யூனிக்ஸ் என்ற பெயரில் விற்கப்படுமானால் குழப்பம் வரலாம் என்ற நோக்கத்துடன் அந்தப் பெயரின் உரிமையை மட்டும் தங்களுடனேயே வைத்துக் கொண்டனர் பல்கலைக் கழகத்தினர். இதனால்தான் யூனிக்ஸ் என்ற பொதுப் பெயரால் அது அறியப்பட்டாலும், ஒவ்வொரு நிறுவனத்திலிருந்து வரும்போதும் அய்க்ஸ், அல்ட்ரிக்ஸ் என்று வெவ்வேறு பெயரைத் தாங்கி வரும்.
ஸ்டால்மனின் எதிர்ப்பு வார்த்தைகளுடன் மட்டும் நின்று விட வில்லை. உயர்நிலைப் பள்ளி நிலையிலேயே ஐ.பி.எம்மால் அழைக்கப்பட்டு அவர்கள் கொடுத்த ஃபோர்ட்ரான் நிரல்பணியை இரண்டு வாரத்தில் முடித்து விட்டு மீதம் இருந்த நேரத்தில் ஏ.பி.எல். என்ற நிரல் மொழிக்கு பதிப்பான் (editor) எழுதிய சூரர் அல்லவா அவர்? GNU (க்நூ என்று அழைக்க வேண்டும்) என்ற இயக்க அமைப்பை உருவாக்கி அதற்கு General Public License (GPL) என்ற பொது உரிமப்படி மூல நிரலை வினியோகித்தார். அது என்ன GNU? GNU என்பது GNU is Not Unix என்பதன் சுருக்கம். க்நூ என்ன என்று விரித்துப் பார்த்தால் அதற்குள்ளேயே ஒரு க்நூ இருக்கிறது – யசோதா கண்ணனின் வாய்க்குள்ளே பார்த்தபோது அந்த வாய்க்குள் தெரிந்த அண்டத்தில் யசோதா கண்ணனின் வாய்க்குள் பார்ப்பதும் தெரிந்ததாம். இந்த மாதிரி பெயரை ஸ்டால்மனை தவிர யார் கொடுக்க முடியும்? இதை மறுசுழற்சி (recursion) என்பர் நிரல் விற்பன்னர்.

மைக்ரோஸாஃப்ட், ஐ.பி.எம் போன்ற எந்த நிறுவனத்தின் படைப்பாக இல்லாமல் தனித்து நின்றது யூனிக்ஸ் மட்டும்தான் என்பதால் தான் படைத்திருப்பது யூனிக்ஸினின்றும் வேறுபட்டது என்று நிலை நாட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஸ்டால்மனிற்கு இருந்திருக்க வேண்டும். இது யூனிக்ஸ் போன்றதேயன்றி யூனிக்ஸ் அன்று.

அது என்ன பொது உரிமம்? இதன் கீழ் நான்கு விதமான உரிமைகளை வழங்கினார் ஸ்டால்மன். முதலாவதாக எல்லோரையும் “வாருங்கள் தோழர்களே, இதை பயப்படாமல் காப்பியடித்து உபயோகியுங்கள் என்றார். இப்படி வழங்கப்படும் மென்பொருளோடு மூல நிரல்களும் வழங்கப் படும். அதனைப் பார்க்கவும், அதில் மாறுதல்கள் செய்யவும் பயனீட்டாளருக்கு உரிமை உண்டு. அது மட்டும் அல்ல, இவர் கொடுக்கும் மூல நிரலை ஒரு பகுதியாக வைத்து எழுதப்படும் மென்பொருளை மற்றவர்க்கு விற்கவும் அந்தப் பயனீட்டாளருக்கு உரிமை உண்டு – முதல் மூல நிரலை உருவாக்கியவர்க்கு ராயல்டி எதுவும் கொடுக்காமல். நீங்கள் மூல நிரலை இலவசமாகப் பெற்றிருந்தாலும், அதனை உள்ளடக்கி நீங்கள் தயாரிக்கும் மென் பொருளை விற்க உங்களுக்கு உரிமை உண்டு. இந்த உரிம முறை copyleft என்று வர்ணிக்கப் படுகிறது. காப்பிரைட்டுக்கு எதிராக இப்படி ஒரு குதர்க்கமான பெயர்!

இந்தக் கோட்பாடுகளை நிலை நிறுத்த ஸ்டால்மன் Free Software Foundation என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அது என்ன Free? முதலில் இந்த அமைப்பின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட பலரும் மென் பொருளை பண நோக்கமின்றி வினியோகித்ததால் ஃப்ரீ என்பதற்கு இலவசம் என்றே பொருள் கொள்ளத் தொடங்கினர். இலவசம் என்றாலே நமக்கு தனி கிக்குதான். சீப்புக்காக நாம் வாங்கிய சோப்புகள்தான் எத்தனை? தேர்தல் வந்தாலோ இலவச அணிவகுப்புதான். ஓ இது அறிவியல் கட்டுரை. அரசியல் பேசக் கூடாது. ஆசிரியர் முறைக்கிறார்.

ஆனால் இங்கு சொல்லப்படும் ஃப்ரீ அது அன்று. அதனால் விளக்கம் அளிப்பது போல் ஓர் உபவரியைச் சேர்த்தார் ஸ்டால்மன்: ‘Free as in freedom’ . இந்த ஃப்ரீ சுதந்திரத்தைக் குறிக்கிறது. இந்த மென்பொருளை நீங்கள் சுதந்திரமாக உபயோகிக்கலாம்; வினியோகிக்கலாம். மாறுதல் செய்யலாம். மாற்றியதை வினியோகிக்கலாம் – இலவசமாகவோ, காசுக்காகவோ.

ஆடம் ஸ்மித் காலத்திலிருந்து நம்பப் பட்டு வந்த பொருளாதாரக் கொள்கைகளை மறு பரிசீலனை செய்யத் தூண்டிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைப் போல், ஸ்டால்மனின் புதிய கோட்பாடுகள் லாப நோக்குடன் நிறுவப்பட்ட மென்பொருள் நிறுவனங்களின் வியாபார அடிப்படையையே தகர்ப்பதாக அமைந்தன. சும்மா விடுமா இந்த நிறுவனங்கள்? பொருளாதாரப் போட்டியை ஓர் யுத்தமாக நடத்தும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் ஸ்டால்மனை ஓர் எதிரியாகவே பார்க்கத் தொடங்கின. வியாபார நோக்கின்றி மென்பொருள் உற்பத்தி செய்யப்படுமாயின், அது தரத்தைப் பாதிக்கும். பொருள் உற்பத்திக்குப் பொருளாதார நோக்கம் தேவையில்லை என்று சொல்வது ஒரு பெரிய லட்சியமாக மேடைகளில் பேசப்படலாம். ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது என்றெல்லாம் வாதிட்டன. சந்தைப் பொருளாதாரம்தான் நாட்டின் செழிப்புக்கு முழுக் காரணம் என்று தீவிரமாக நம்பும் அமெரிக்காவில் ஸ்டால்மன் போன்றோர் குரல் தனித்தே ஒலித்துக் கொண்டிருந்தது.

ஸ்டால்மனும் விடவில்லை. ‘எல்லா மென்பொருளும் சுதந்திர அடிப்படையிலேயே வினியோகிக்கப் பட வேண்டும் என்ற கருத்தை நாடு நாடாகச் சென்று மேடை போட்டு பிரசாரம் செய்யலானார். தங்கள் அனுமதியின்றி மென்பொருளை நகல் எடுப்பது சட்டத்திற்கும், நியாயத்திற்கும் புறம்பானது என்று மென்பொருள் நிறுவனங்கள் வாதாடுமேயானால், அதை விடப் பெரிய அதர்மம் அத்தகைய நகலெடுப்பை அனுமதிக்காமல் அறிவு வளர்ச்சியைத் தடுப்பது என்று குற்றம் சாட்டினார். ஸ்டால்மனின் தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பலரும் கூட அவருடைய இந்தத் தீவிரவாதம் தத்துவத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்குத் தடையாக இருப்பதாகவே கருதினார்கள். புரட்சி ஒன்று செய்து புதிய உலகம் காணக் கனவு கண்டு கொண்டிருந்த ஸ்டால்மனை விட்டு விலகி open source initiative (திறந்த நிரல் முனைப்பு) என்ற அமைப்பைத் துவக்கினார்கள். வியாபார நோக்குடைய நிறுவனங்கள் மீது இவர்களுக்கும் கடுமையான வெறுப்பு உண்டு. ஆனால் அந்த ‘தீய சக்திகளை’ (அவர்களுடைய மொழியில்) முறியடிக்கும் வழி பிரசாரம் அன்று, அந்நிறுவனங்களுக்கு இணையாகப் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றின் மூல நிரல்களை வினியோகித்து, போட்டியாளர்களை விட வேகமாகச் சிறந்த பொருட்களைத் தயாரிப்பதே என்று நம்பினார்கள் இந்தத் தொழில் நுட்ப விற்பன்னர்கள்.
இந்த அமைப்பில் முக்கியமானவர் லைனஸ் டோர்வால்ட்ஸ். இவர் தன்னுடைய முது நிலைப் பட்டத்துக்காக ஓர் இயக்க அமைப்பை உருவாக்கினார். யூனிக்ஸ் போன்ற இந்த இயக்க அமைப்பைத் (யூனிக்ஸின் மூல நிரல் வெகுஜனமாகப் பலருக்கும் கிடைத்தபடியினால் பல மென்பொருட்கள் யூனிக்ஸை ஒட்டி உருவாகின) தன்னுடைய பெயரையும் சேர்த்து லைனக்ஸ் என்று அழைத்தார். க்நூவிலிருந்து சில நிரல் தொகுப்புகளை இவர் பயன்படுத்தியிருந்த்தால், இதன் சரியான பெயர் க்நூ / லைனக்ஸ் என்பதே. காலப் போக்கில் அது சுருங்கி க்நூ மறக்கப்பட்டு இப்போது எல்லோராலும் லைனக்ஸ் என்று மட்டுமே அழைக்கப் படுகிறது. வேலூர் பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்திருந்தபோது, லைனக்ஸில் க்நூ கலந்திருக்கிறது என்று தெரியாத மாணவர்களைப் பார்த்து உறுமினார் ஸ்டால்மன். பொருமினார் என்று கூடச் சொல்லலாம். க்நூ வலைய தளத்திற்குப் போய்ப் பாருங்கள்: க்நூ இன்றி லைனக்ஸ் என்று அழைப்பவர்களை இகழ்ந்திருப்பார். மைக்ரோசாஃப்ட் தன்னுடைய படைப்பை நகல் எடுப்பவர்களைக் கொள்ளையர்களாக நோக்குவதை அறவே வெறுக்கும் இவர் தன்னுடைய படைப்பில் இவ்வளவு உரிமை உணர்வுடன் இருக்கிறாரே என்ற முரண்பாடு உறுத்தாமல் இல்லை.

பட்டப்படிப்புக்காக உருவாக்கிய மென்பொருள் மற்றவருக்கும் பயன்படட்டுமே என்ற பரந்த நோக்குடன் அதன் மூல நிரலை இணையத்தில் பதிப்பித்தார் டோர்வால்ட்ஸ். இதில் எந்த மாற்றம் செய்ய விரும்புபவர்கள் அவ்வாறு செய்ய உரிமை உண்டு என்ற ஸ்டால்மனின் தத்துவத்தை நடைமுறையாக்கினார். தானே நடுவராக இயங்கி, தரப்படும் மாற்றங்களைப் பரிசீலித்து ஏற்றுக் கொண்டார். சிறிது காலத்திற்குப் பின் நடுவர் பொறுப்பை ஒரு சமூகப் பேராண்மையிடம் ஒப்படைத்தார். லைனக்ஸின் இந்த உருவாக்கம் மென்பொருள் தயாரிப்பிலேயே ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. மென்பொருள் தயாரிப்பு என்பது கட்டுக்கோப்பான முறையில், சீரான நியதிகளைக் கடைப்பிடித்து, விரிவான ஆவணங்களுடன் ஒரு வேள்வி போல் செய்யப்பட வேண்டும் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தோம். சி.எம்.எம் முறைகளைக் கடைபிடிக்கும் நிறுவனங்களில் வேலை செய்யும் மென்பொருள் விற்பன்னர்களைக் கேட்டுப் பாருங்கள் – ஒரு மென்பொருளைத் தயாரித்து வெளிவிடும் முன் அவர்கள் படும் பிரசவ வேதனையையும், சந்திக்கும் சோதனையையும்.

அவ்வளவு கட்டுப்பாட்டுடன் தயாரித்த மென்பொருளே பயனீட்டாளர் மத்தியில் பல சமயம் ‘பே’ என்று விழித்து விடுகிறது. லைனக்ஸ் தயாரிப்பில் இவர்கள் இணையத்தில் போடுவார்களாம்; யார் வேண்டுமானாலும் வந்து மாற்றங்கள் செய்யலாமாம். அநாதைக் குழந்தைக்கு அவரவர் வீட்டு மிச்சம் மீதியைக் கொடுத்து விட்டு அது நோஞ்சானாக இருக்கிறதே என்றால் அது பின் எப்படி இருக்கும்? மென்பொருள் தயாரிப்பு உலகமே டோர்வால்ட்ஸின் முயற்சியை எள்ளி நகையாடியது. ஆனால், லைனக்ஸ் என்ற அந்தக் குழந்தை எல்லோருடைய எதிர்பார்ப்புக்கும் மாறாக கொழு கொழு என்று வளர்ந்து விட்டது. விண்டோஸுக்கு சவால் விடும் அளவில் திறன்மிகு இயக்க அமைப்பாக, எளிய முகப்புடன், வலுவான பாதுகாப்பு கவசத்துடன் (பாதுகாப்பு விஷயத்தில் லைனக்ஸ் விண்டோஸை விடவும் சிறந்ததாகக் கருதப் பட்டது) லைனக்ஸ் அவதரித்தது.

இது எப்படி சாத்தியம்? கட்டுப்பாடுகள், நியதிகள் ஏதுமின்றி, எந்தப் பேராண்மையும் வழி நடத்தாமல், விரிவான சோதனைகளும், பரிசீலனைகளுமின்றி, பொருளாதார ஊக்கங்களெதுவுமின்றி, நிரந்தர அமைப்பைச் சாராமல் சுதந்திரப் பறவைகளான பலர் ஒன்று சேர்ந்து சீர்மிகு மென்பொருள் தயாரிக்க முடியும் என்றால், நாம் இத்தனை நாள் கடைப்பிடித்த நடைமுறைகள் அநாவசியமானவையா?
லைனக்ஸின் இந்த அவதாரம் ஒன்றைப் புரிய வைத்தது. நோக்கங்கள் மெய்ப்பட மேலே சொன்ன எல்லாக் காரணங்களையும் விட பெரிய ஒரு காரணம் எதிரி ஒருவனை அடையாளம் கண்டு கொள்வதே. பங்கேற்கும் யாவருக்கும் பொதுவான எதிரி ஒருவன் இருக்கும் பட்சத்தில், வெறியுடன் சீர்மிகு பொருள் உற்பத்தி செய்ய இயலும். பாகிஸ்தானுடன் மேட்ச் விளையாடும்போது, ஜாதி, மத, கருத்து வேற்றுமைகளை மீறி நாம் ஒன்றுபடுவதில்லையா? பில் கேட்ஸை இவர்கள் எல்லொருமே தீய சக்தியென வெறுத்தனர். அவருடைய சாம்ராச்சியத்தைத் தகர்த்தெறிவதில் தமக்கும் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதுவே லைனக்ஸின் வெற்றிகரமான உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது.

திறந்த வெளித் தயாரிப்பில் லைனக்ஸ், அதன் முன்னோடி க்நூவையும் ஒரு படி விஞ்சி விட்டது. க்நூவில் உருவக்கிய பொருளை மட்டுமே வஞ்சனையின்றித் திறந்து காட்டினார்கள். லைனக்ஸிலோ, தயாரிப்பு முறையே திறந்த வெளிக்கு வந்து விட்டது. பலர் கண்களுக்கு எதிரில் உருவாகும் பொருளில் குறைகள் விரைவில் களையப்படும் என்பது டோர்வால்ட்சின் வாதம். இப்போது புரிகிறது சரவண பவனில் வாடிக்கையாளர் கண்ணில் தெரியும்படி ஏன் ஆப்பம் சுடுகிறார்கள் என்று. க்நூ முறையை ஆசாரமான நியமத்துக்குட்பட்ட ஆலய சம்பிரதாயம் (Cathedral Method) என்றும், லைனக்ஸின் தயாரிப்பு முறை நாலு பேர் திண்ணையில் உட்கார்ந்து பலகையில் தாளம் போட்டு வரி வரியாக உருவாக்கும் கானா பாட்டு மாதிரியான கடை வீதி முறை (Bazaar method) என்றும் வேறுபடுத்திக் காட்டுகிறார் ரேமாண்ட் என்ற திறந்த நிரல் ஆர்வலர் (டோர்வால்ட்ஸுடன் சேர்ந்து திறந்த நிரல் முனைப்பை நிறுவியவர்களுள் ஒருவர் இவர்). இதைப் பற்றி ‘The Cathedral & the Bazaar’ என்ற புத்தகமே எழுதியிருக்கிறார்.

லைனக்ஸின் வெற்றி மென்பொருள் தயாரிப்பில் ஒரு நம்பிக்கையான வேற்று முறையாகி, இன்னும் பல பொருட்கள் வருவதற்கு வித்திட்டது. அவை எவை எவை என்று இங்கு நாம் பட்டியலிடப் போவதில்லை. இணையத்தில் ஓபன் ஸோர்ஸ் என்று கேட்டீர்களானால் அனுமார் வால் போல நீளமாக வந்து கொண்டே இருக்கும் – நிரல் மொழிகளின் இன்றைய நாயகன் ஜாவா உட்பட.

இந்த திறந்த மூல நிரல் விழைவாளர்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து ஆதரவு வரத்தொடங்கியது. என்னுடைய எதிரிக்கு எதிரி என் நண்பன் என்ற அடிப்படையில், மைக்ரோசாஃப்ட்டின் சவாலற்ற முதன்மையால் இரண்டாம், மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்ட நிறுவனங்களும், அதன் ஏகபோக ஆதிக்கத்தால் பேரச் சக்தியை இழந்து நின்ற வன்பொருள் நிறுவனங்களும் கை கோர்த்துக் கொண்டு இந்த லைனக்ஸ் குழந்தையை ஆரத்தி எடுத்து வரவேற்றன. தன்னுடைய படைப்பான பி.சி.க்காக இயக்க அமைப்பைத் தயாரிக்க வந்த குத்தகைக்காரர் இன்று தம்மை விட அதிக வருவாய் வரக் கூடிய நிறுவனமாக மாறி விட்டதை நினைத்து நினைத்துப் பொருமிக் கொண்டிருந்த ஐ.பி.எம், லைனக்ஸின் வருகையை ஒரு வரப்பிரசாதமாகவே கருதியது. பி.சி.

தயாரிப்பையே இன்னொரு நிறுவனத்துக்கு விற்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்ட இந்த சிங்கம் தன்னுடைய காயங்களை நக்கிக் கொண்டிருந்தபோது இதை விடப் பெரிய வாய்ப்பு என்ன கிடைத்து விட முடியும்?. அங்கே இன்னொரு பக்கம் கடைசி வரை எனக்கு வெள்ளிப் பதக்கம்தானா என்று முதன்மைக்கு ஏங்கும் ஆரகிள் (இதன் நிறுவனர் எல்லிசன் பேரவாவின் மறு உரு. இவரது வாழ்க்கையைப் பற்றி எழுதிய ஆசிரியர் சொல்லுகிறார்: “கடவுளுக்கும் எல்லிசனுக்கும் உள்ள ஒரே வேற்றுமை கடவுள் தன்னை எல்லிசன் என்று நினைத்துக் கொள்வதில்லை”), இன்னும் எச்.பி, சன் என்று எட்டு பெரிய பெயர்கள் லைனக்சை ஆதரிப்பது என்று முடிவு செய்தனர். தங்களுடைய வன்பொருளிலும், மென்பொருளுக்கும் முதல் சூழலாக லைனக்சைத் தரத் தொடங்கின. ஆனால் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்: தங்களுடைய தயாரிப்புகளை இவர்கள் திறந்த வெளி முறைக்குக் கொண்டு வரவில்லை. தத்துவ ரீதியாக திறந்த வெளி முறையை ஆதரிக்காத இவர்கள், மைக்ரோசாஃப்டை வலுவிழக்கச் செய்யவே லைனக்சை ஆதரித்தனர்.

இத்துணை பெருந்தலைகள் கூட்டணி சேர்ந்தும், லைனக்ஸ் விண்டோஸைப் போன்ற வெகுஜன ஆதரவைப் பெற வில்லை என்பது உண்மை. நிறுவனம் சாரா குழுக்களின் படைப்புகள் மூலம் பெரிதும் இலவசமாகத் தரப்பட்டாலும், அவை வெகுஜன ஆதரவைப் பெறாததன் காரணம், வாங்கிய பொருளின் குறைகளைத் தீர்க்கவும், அவற்றில் மேன்மேலும் அதிகத் திறனைக் கொண்டு வருவதற்கும் யார் பொறுபேற்பர் என்ற பயனீட்டாளர் அச்சமே. விண்டோஸில் பிரசினை என்றால் மைக்ரோசாஃப்டை அணுகலாம். மென்பொருள்பால் கொண்ட அவாவினால் மட்டுமே பலரும் ஒன்று கூடி, சட்டரீதியாக அங்கீகரிப்பட்ட எந்த நிறுவன அமைப்புமினறி உருவாக்கிய பொருளைப் பயன்படுத்துவதில் பயனீட்டாளர் தயக்கம் காட்டினர். எல்லோருடைய பணி என்றால் ஒருவருடைய பணியும் அன்று என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் அல்லவா? அரசாங்க மருத்துவ மனையில் இலவசமாக ஊசி போடுகிறார்கள் என்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய் விடுகிறார்களா? கடுமையான நோய் என்றால் ஃபீஸ் அதிகம் வாங்கும் தனியார் மருத்துவமனைக்குத்தானே ஓடுகிறோம்?

கான்சருக்கு அபோல்லோ போகிறார்கள் – நியாயம். ஆனால் ஜலதோஷத்திற்குக் கூடவா? உயிர்நிலை மென்பொருளாகக் கருதப்படும் ஈ.ஆர்.பி (ERP) போன்ற மென்பொருளுக்காக எஸ்.ஏ.பி, ஆரகிள் போன்ற நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுப்பது புரிகிறது. காசு எதுவும் எதிர்பார்க்காமல், ஒரு தட்டலுக்கு இணையத்திலிருந்து அருவியாகக் கொட்டும் ஈ.ஆர்.பி மென்பொருட்கள் உண்டு. காலம் காலமாய் தன்னுடைய பெயரையும், முதன்மையையும் நிலை நாட்டி வந்திருக்கும் எஸ்.ஏ.பியை இந்த இலவச மென்பொருட்கள் அவ்வளவு விரைவில் அரியாசனத்திலிருந்து இறக்கி விட முடியாது. இந்த உண்மை புரிகிறது. ஆனால் ஜீரணிக்கமுடியாத விஷயம் என்னவென்றால், அலுவலக அன்றாட வேலைகளுக்குப் பயன்படும் MS Officeஐ விடுத்து திறந்த வெளி உருவாக்கமான Open Office பயன்படுத்தலாம் அல்லவா? அதற்குக் கூட நிறுவனங்கள் பெருமளவில் முன்வரவில்லை. எம்.எஸ் ஆஃபீசில் இருக்கும் பெரும்பாலான செயல்பாடுகள் ஓபன் ஆஃபீசில் இலவசமாகக் கிடைத்தாலும் மாற்றம் நேராததற்கு ஒரு காரணம் எம்.எஸ். அஃபீஸ் பெருமளவில் திருடப் படுவது (மீண்டும் கோபித்துக் கொள்ளாதீர்கள். ஆங்கிலத்தில் இதைக் கொள்ளை (piracy) – அதுவும் பகற்கொள்ளை என்கிறார்கள்) மைக்ரோசாஃப்ட் தன்னுடைய சட்ட நாணை இறுக்க இறுக்க ஓபன் ஆஃபீஸ் பயனீடு அதிகரித்து விடும். இத்தருணத்தில் தமிழ்நாடு (முந்தைய ஜெயலலிதா) அரசு அரசு பள்ளிகளில் ஓபன் ஆஃபீசைப் பாடதிட்டத்தில் கொண்டு வந்ததைப் பாராட்ட வேண்டும். எம்.எஸ். ஆஃபீஸ் வாங்க அரசு பள்ளிகளிடம் ஏது பட்ஜெட்? கல்வி நிறுவனங்களுக்கான் சிறப்பு திட்டத்தின் கீழ் எம்.எஸ். ஆஃபீஸ் வாங்கும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களுக்கான காப்பியை மட்டும் இலவசமாக வழங்குகிறது மைக்ரோஸாஃப்ட்.. பள்ளி நிலையில் கொடுக்கப்படும் இந்த சலுகை மறைமுகமான மூளைச் சலவை என்று குரல் எழுப்பினார் ஸ்டால்மன்.

அரசாணை மூலம் திறந்த நிரல் அங்கீகாரம் பெற்றது உலகிலேயே முதன்முதலில் நம் நாட்டில்தான் -கேரளாவில். அதற்குப் பின்தான் வெனிசுவேலா, பிரேஸில், சைனா போன்ற நாடுகள் திறந்த நிரலுக்காக அரசாணை பிறப்பித்தன.

லைனக்ஸ் முகப்புக் கணினிகளில் பேராதரவு பெற வில்லை என்பது உணமை. ஆனால் தரவுத் தளங்களைத் தாங்கும் பெரும் கணினிகளில் விண்டோஸைப் பெரிதும் விஞ்சிவிட்டது. ஸூபர் கம்ப்யூட்டர் என்று சொல்லப் படும் மஹா கணினிகளில் முதல் 500 –இல் 446 கணினிகள் ஒடுவது லைனக்ஸிலாக்கும். ஹாலிவுட்டில் 95% கணினிகள் லைனக்ஸில் ஓடுகின்றன. அனிமேஷன் என்று சொல்லப்படும் அசைவூட்ட மென்பொருட்களுக்கு அதிகமான கணினிச் சக்தி தேவை. அது லைனக்ஸில் கிடைக்கிறது திறந்த வெளிப் பொருள்களுக்கு ஆதரவு பெருகிவருவதற்கான இன்னும் சில எடுத்துக்காட்டுகள்: மேலோடிகளில் (Browser) ஃபைர்ஃபாக்ஸ் இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரை விட விரைவான செயல்பாடு உடையதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்னதின் ஆதிக்கத்தை முறியடித்துக் கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், விகிபீடியா இவை எல்லாம் திறந்த வெளி நிரல்களின் வெற்றிக்கு எடுத்துக்காட்டுகள். இவை ஒவ்வொன்றும் பிரும்மாண்டமான அளவில் தரவுகளைத் தன்னிடத்தே அடக்கி வைத்துச் செயல்படுபவை.

திறந்த வெளிப் பொருட்களின் குழுமமாக LAMP (Linux, Apache, MySQL, Perl/ PHP / Python) என்ற பாடதிட்டம் வழங்கப்படுகிறது. இந்தப் பாடதிட்டத்திற்கு நம் நாட்டில் கிடைத்திற்கும் வரவேற்பும் கவனிக்கத் தக்கது.

சந்தைப் பங்கில் திறந்த வெளி நிரல்கள் எவ்வளவில் இவ்வுரிமை மறுக்கப்படும் வியாபார மென்பொருட்களைப் பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். ஸ்டால்மன், டோர்வால்ட்ஸ் போன்றவர்கள் காட்டியிருக்கும் சிந்தனைப் போக்கு ஒரு புது வழியை வகுத்திருக்கிறது. இந்த முறை மென்பொருளைத் தாண்டி மருத்துவம், மருந்து தயாரிப்பு, உயிரித் தொழில் நுட்பம் (Bio technology) என்ற பல துறைகளையும் தொற்றிக் கொள்ளும் என்று ஆருடம் கூறினார்கள் இச்சிந்தனையாளர்கள். ஆனால் இந்த சிந்தனை மற்ற துறைகளைப் பெரிதாகப் பாதித்திருப்பதாகத் தெரிய வில்லை.

ஃப்ரீ சாஃப்ட்வேர் என்பது ஓர் இயக்கம்; ஓபன் சாஃப்ட்வேர் என்பது மென்பொருள் தயாரிப்பு முறை என்று வேறுபடுத்திக் காட்டுகிறார் ஸ்டால்மன். ஆனால் நம் பார்வையில் இந்த இரண்டுமே கவனத்துக்குரிய சிந்தனைப் போக்குகளாகவே தோன்றுகின்றன. ஞானப் பதுக்கலை எதிர்த்து இவ்வியக்கங்கள் குரல் கொடுத்திருக்கின்றன. “தடையற்ற ஞானப் பகிர்வே எங்கள் கலாசாரத்தின் சாரம். ராயல்டி, பேடன்டுகளெல்லாம் மேற்கத்திய கலாசாரம் நம்மிடையே விதைத்த விஷ விதைகள்” என்று ஐ.ஐ.டி பேராசிரியர் கல்யாணகிருஷ்ணன் கூறக் கேட்டிருக்கிறேன். ஞானம் என்ற அக்கினிக் குஞ்சை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தல் மடமை அன்றோ? வாருங்கள் சோதரரே, ஞானப் பொதுவுடமை என்ற தாரகத்துடன் புதிய உலகம் சமைப்போம். தத்திகிட, தத்தரிகிட தித்தோம்..