ஆப்பிரிக்க நிலங்களை வளைத்துப் போடும் அமெரிக்கப் பல்கலைகழகங்கள்
அமெரிக்கப் பல்கலைகளில் பெரும் சக்திகளான ஹார்வர்ட், வாண்டர்பில்ட் போன்றவை ஆஃப்ரிகாவில் ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போடுகின்றனவாம். ஊக முதலீட்டில் கவனம் செலுத்தும் ஹெட்ஜ்ஃபண்ட்ஸ் எனப்படும் நிறுவனங்களின் உதவியுடன், தன் பெரும் நிதியை ஆஃப்ரிக்காவில் விளை நிலங்களில் முதலீடு செய்வது எதன் பொருட்டு என்று விளக்கச் சொல்லிக் கேட்டால், இந்த பல்கலைகள் ஆஃப்ரிக்காவின் வளர்ச்சிக்காக முதலீடு செய்கிறோம் என்று பொய் சொல்கின்றன. தென் சூடானில் கேவலம் 25,000 டாலர்களுக்கு 400,000 ஹெக்டேர்கள் நிலம் வாங்கி இருக்கின்றனர். இதில் ஏதோ அமெரிக்க நிறுவனங்கள் மட்டும்தான் ஆஃப்ரிக்க மக்களின் வாழ்வில் சூறாவளியாக உலவுகின்றன என்று நினைக்க வேண்டாம். சீனாவும், அரபு நாடுகளும் அமெரிக்காவிற்கு வெகு நாள் முந்தியே இந்தக் கொள்ளையடிப்பில் இறங்கியாயிற்று. ஏன் தூங்குமூஞ்சி இந்தியாவே கூட சில பகுதிகளில் விளை நிலங்களை வாங்கி இருக்கிறது என்று ஒரு செய்தி சொன்னது. அமெரிக்காவின் மற்றுமொரு கொள்ளையடிப்பைப் பற்றிய இந்தச் செய்தியை லண்டனின் கார்டியன் பத்திரிகையில் காண இங்கே செல்லுங்கள்.
http://www.guardian.co.uk/world/2011/jun/08/us-universities-africa-land-grab
விதிகளை மீறிய உயிர் வெளிப்பாடு
ஜுராஸிக் பார்க் படத்தில் ஒரு கணிதவியலாளன் வருவார். அவர் அடிக்கடி ‘Life will find its way’ என்று சொல்லுவார். பொதுவாக பூமியின் மிகவும் ஆழமான பகுதிகளில் பல செல் உயிரினங்கள் வாழ முடியாது என்றுதான் அறிவியலாளர்கள் இன்று வரை கருதி வந்தனர் இந்த சூழல்களில் பாக்டீரியங்கள் போன்ற ஒற்றை செல் உயிரினங்களே காணப்படுவது உண்டு. ஆனால் முதன் முறையாகத் தென் ஆப்பிரிக்க ஆழ்-சுரங்கங்களில் பூமியின் அடியாழங்களில் பலசெல்கள் கொண்ட நுண்புழுக்கள் (nematodes) இருப்பது அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உயிர் தன்னை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறது…நம் விதிகளையெல்லாம் மீறி…மேலும் அறிய இங்கே படியுங்கள்…
மதமெனும் மானுட அடிப்படை?
இது வரைக்கும் கிடைத்ததில் உலகிலேயே மிகவும் பழமையான கோவிலை அகழ்வாராய்ச்சி செய்திருக்கிறார்களாம். துருக்கியில். இதில் என்ன விசேஷம் அவ்வப்போது நடக்கும் சமாச்சாரம்தானே என்கிறீர்களா… இந்த கோவிலின் பழமை அகழ்வாராய்ச்சியாளர்களையும் மானுடவியலாளர்களையும் சற்றே யோசிக்க வைத்திருக்கிறது. அதாவது கற்காலத்திலேயே இது எழுப்பப்பட்டுள்ளது. பொதுவாக கற்காலம் தாண்டி உலோக காலங்களுக்கு பிறகுதான் கோவிலெல்லாம் கட்டக் கூடிய அளவுக்கு சமுதாயத்தில் சமய வளர்ச்சி ஏற்படும் என்கிற ஒரு எண்ணம் இருக்கிறது. மானுடவியலுடன் இணைந்த அகழ்வாராய்ச்சியின் அடிப்படைகளை உருவாக்கிய கோர்டன் சைல்ட் (Gordon Childe) அப்படித்தான் கூறினார். (அவருக்கு மார்க்சிய தாக்கம் இருந்தது.) இது பொதுவான அடிப்படைக் கோட்பாடாக வரலாற்று கதையாடல்களில் அமைந்திருந்தது. இப்போது இந்த கண்டுபிடிப்பு மதம் என்பது ஒரு சமுதாய உருவாக்கமா அல்லது மானுடத்தின் அடிப்படை தன்மைகளில் ஒன்றா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்த நேஷனல் ஜியாக்ராபிக் பத்திரிகையின் கட்டுரையை இங்கே படியுங்கள்.
http://ngm.nationalgeographic.com/2011/06/gobekli-tepe/mann-text/1
ஜெர்மனியில் செம்புரட்சியா?!
பொதுமக்களின் பயண வசதிகள், தொடர்பு சாதனங்கள். போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்து விட்டால் தாம் வென்று விடுவோம் என்பது 15ஆம் நூற்றாண்டு இடதுசாரிகளின் அரசியல் பார்வை. மேற்படி வழிமுறைகள் எந்த அரசையும் ஸ்தம்பிக்க வைப்பதில்லை. மாறாக ஏற்கனவே அல்லலுற்று வாழும் சாதாரண மக்களைத்தான் ஸ்தம்பிக்க வைக்கின்றன. அரசுகளோ அனேகமாக வேறெந்த அமைப்புகளையும் விடக் கூடுதலான சாதன வசதிகளும், ஏராளமான செலவுக்கான நிதி வசதியும், அதெல்லாம் தீர்ந்தாலும் மக்களிடமிருந்து மறுபடி நிதி திரட்டும் வசதியும் கொண்டவை.
மக்களை நிராதரவான நிலைக்குக் கொண்டு நிறுத்தினால் அவர்கள் புரட்சிக்காரர்களாகி விடுவார்கள் என்ற பயங்கரக் கனவு இந்தச் செயல்களில் இறங்கச் சொல்கிறது. இங்கே உலகின் வளமிக்க நாடுகளில் ஒன்று எனக் கருதப்படும், ஏதோ ஒரு ஏனோதானோ சோசலிச வழிமுறைகள் நிலவும் ஜெர்மனியில் தீவிர இடது சாரியினரின் ‘தீரச் செயல்’ பற்றிய செய்தி. ரயில்களுக்கான கேபிள்களைக் கொளுத்திப் புரட்சி செய்து விட்டார்களாம். அட்டேயப்பா, ஆங்கெலா டொரொதியா மெயர்க்கில் (ஜெர்மன கான்ஸ்லர்) அப்படியே துடித்துப் போய் வீழ்ந்து விட்டார், ஜெர்மனியில் புரட்சி வந்து விட்டது.
http://www.spiegel.de/international/germany/0,1518,764558,00.html
நடு இரவில் ஒரு சூரிய கிரகணம்
நடு இரவில் ஒரு சூரிய கிரகணம்…என்ன ஏதோ ஆர்தர் கொய்ஸ்லர் புத்தக தலைப்பை உல்டா செய்தது போல இருக்கிறதா? ஆனால் ஜூன் ஒன்றாம் தேதி அதுதான் நிகழ்ந்தது. இதற்கு முன்னால் இந்த விஷயம் ஜூலை 31, 2000 இல் நிகழ்ந்தது. அதாவது நடு இரவில் ஒரு சூரிய கிரகணம்… கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் – எப்படி நடு இரவில் சூரிய கிரகணம் நடக்க முடியும்? தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்:
http://science.nasa.gov/science-news/science-at-nasa/2011/31may_midnightsun/
குறையும் நிலத்தடி நீர் : பிரச்சனைக்கு தீர்வு?
இப்படி அல்லவா அறிவியல் வளர்கிறது? எங்கோ ஒரு ஊகம், எங்கோ ஒரு சிறு வட்டத்தில் வியப்பு, பின் பல ஆண்டுகள் எங்கெல்லாமோ தகவல் திரட்டப்பட்டு, ஒரு நீண்ட கால கட்டத்துக்குப் பிறகுதான் பிரச்சினையே துலக்கமான வடிவு பெறுகிறது, பின் திடீரென வசதிகள் கிட்டுவதால் அறிதலில் ஒரு தாவல்.
குறைந்து வரும் நிலத்தடி நீர் குறித்த கவலை மனிதகுலத்திற்கு மெல்ல மெல்ல பெரும் தலைவலியாக வளர்ந்து வருகிறது. மாறிவரும் தட்பவெட்பம் எந்த அளவிற்கு விஞ்ஞானிகள் மத்தியில் பேசப்படுகிறதோ, அதே அளவிற்கு நிலத்தடி நீர் குறித்த கவலையும். இதற்கு என்ன தீர்வு என்று யோசிக்க ஆரம்பித்து, தற்போது இரண்டு செயற்கைகோள்களின் உதவிக் கொண்டு கடுமையான நிலத்தடி நீர் பற்றாக்குறை நிலவும் இடங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் உறுதியான துல்லிய முடிவுகளை வெளியிடுகின்றனர். இது குறித்த செய்தி கீழே:
http://www.nytimes.com/2011/05/31/science/31water.html?_r=1&hpw=&pagewanted=all
அமெரிக்கா : ஒரு கொடுங்கோன்மை அரசு?
அமெரிக்கா அதன் தனிமனித சுதந்திரத்திற்காக பெரிதும் போற்றப்படுகிறது. ஆனால், இது ஒரு பிரமை, சற்றும் உண்மையல்ல என்று இந்த கட்டுரை சொல்கிறது. மெல்ல மெல்ல அமெரிக்கா ஒரு கொடுங்கோல் அரசாக மாறிவருவதாகக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். ஊடகங்களின் செயல்பாடு உண்மை நிலையை உணர்த்தாமல் மக்களை ஏமாற்றவே பயன்படுவதாகச் சொல்கிறார். குறிப்பாக நாட்டுப் பற்றாளர் (Patriot act) சட்டத்தைக் கடுமையாக விமர்சிக்கிறார். தனக்குத் தெரிந்து தற்போதைய நிலையில் அமெரிக்காவிற்கு (அதாவது சாமானிய அமெரிக்கருக்கு) எந்த மீட்சியும் இல்லை என்று கூறுகிறார். உலகெங்கும் சர்வாதிகாரிகள், ராணுவ அரசுகள், கொடுங்கோலர்களின் ஆட்சிக்குத் துணை போகும் அரசியலைத் தொடர்ந்து ஆட்சியில் ஏற்றும் அமெரிக்கச் சாமானியருக்கு, முற்பகல் செய்தது பிற்பகலில் விளைகிறது. இதென்ன ஐயா ஆச்சரியம் என்பீர்கள். அமெரிக்கக் கட்டுரையாளர்களில் பாதிப் பேருக்கு இப்போதுதான் பகல்கனவுகள் கலையத் துவங்கி இருக்கின்றன. மேலும் விவரங்கள் அறிய கீழே சுட்டியைச் சுண்டினால் கிட்டும் கட்டுரையை படியுங்கள்.
http://www.huffingtonpost.com/john-w-whitehead/one-week-in-the-life-of-a_b_868721.html
அஹமதியாக்களின் அவல நிலை
இஸ்லாத்தின் ஒரு பிரிவான அஹமதியாக்கள் அதன் பிற குழுவினர்களால் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். நம் அண்டை நாடும், நிரந்தர எதிரியாகத் தன்னைப் பாவித்துக் கொண்டதுமான பாகிஸ்தானின் பெருநகரமான ஃபைஸலாபாதில், ”அஹமதியாக்களை அழித்தொழிப்பது முற்றிலும் சரி” என்று சொல்லும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதோ அந்தச் செய்தி:
http://www.indianexpress.com/news/ahmadiya-community-fit-to-be-killed-say-pamphlets-in-pak/801411/