’ ஒரு எடிட்டராக நான் என்ன செய்கிறேன் என்பது உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை’

ராபர்ட் காட்லீபுக்கு அறிமுகமே தேவையில்லை- அவர் படித்து, எழுத்தாளர்களோடு கலந்தாலோசித்து ஒரு எடிட்டராகத் திருத்திப் பதிப்பித்த புத்தகங்கள் எந்தவொரு தரமான நூலகத்தின் புத்தக அடுக்குகளையும் நிறைக்கும். வெவ்வேறு காலகட்டங்களில் சைமன் அண்ட் ஷஸ்டர் மற்றும் க்னாப் போன்ற பதிப்பகங்களில் எடிட்டராகவும் தலைமை எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார் காட்லீப். ஜான் லென்னன், பால் சைமன், பாப் டிலன் போன்ற பண்பாட்டு ஆதர்ச ஆளுமைகள் முதல் சல்மான் ரஷ்டி, வி எஸ் நைபால், ரே ப்ராட்பரி என்று இலக்கிய சாதனையாளர்களின் பெயர்களோடு நீளும் இவரது பட்டியலில் ப்ரூனோ பெத்தேல்ஹீம், பி எப் ஸ்கின்னர் போன்ற அறிவியலாளர்களும் உண்டு.

சிலர் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பார்கள், உண்மையோ பொய்யோ தெரியாது. ராபர்ட் காட்லீப் தொட்டதெல்லாம் தரமான புத்தகங்களாக வெளிவந்து வாசகர்களாலும் விமரிசகர்களாலும் கொண்டாடப்படும் படைப்புகளாக நிலை கொள்ளும் என்பது பெருமளவில் உண்மை. எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, ந்யூ யார்க்கர் என்ற இதழுக்கும் இவர் பதிப்பாசிரியராக இருந்திருக்கிறார்.

ஆங்கில இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பங்களிப்பு தந்துள்ள காட்லீபின் பேட்டி ஒன்றை இங்கு பிரசுரிக்கிறோம். இதன் துணையாக இந்தப் பேட்டியையும் படித்தால் அவரது முக்கியத்துவம் விளங்கும்.

http://www.theparisreview.org/interviews/1760/the-art-of-editing-no-1-robert-gottlieb

”Salon” எனும் பத்திரிக்கையின் மூத்த எழுத்தாளரான லாரா மில்லர் காட்லீபுடனான இந்த நேர்காணலை மேற்கொண்டார். லாரா மில்லர் “The Magician’s Book: A Skeptic’s Adventures in Narnia” எனும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். magiciansbook.com எனும் இணையதளத்தை நடத்தி வருகிறார்.

 

கேள்வி : நீங்கள் எப்போது முனைப்போடு எழுதத் துவங்கினீர்கள்?
எழுத்து எனக்கு நேர்ந்த ஒன்று. நான் எழுத்தாளனாக வேண்டுமென்றோ எழுத வேண்டுமென்றோ தீர்மானித்துத் துவங்கவில்லை. நான் எழுத்தாளனாக ஆசைப்பட்டதே கிடையாது. எனக்கு எழுதப் பிடிக்காது–சொல்ல நினைப்பதைச் சொல்வது அவ்வளவு கடினமான விஷயமாக இருக்கிறது. அதைவிட, மற்றவர்கள் எழுதியதை எடிட் செய்து அவர்கள் சொல்ல நினைப்பதை சொல்ல உதவுவது எளிது.

ந்யூ யார்க் சிடி பாலேவின் ஐம்பதாவது ஆண்டையொட்டி தங்களுக்காக ஒரு பெரிய கட்டுரையை எழுதித் தரும்படி வானிடி ஃபேர் என்னிடம் 1998ல் கேட்டார்கள். பெருமளவில் என் வாழ்க்கை ந்யூ யார்க் சிடி பாலேவில் அவர்களுடன் வாழப்பட்ட ஒன்று, அதனால் நான் அதை எழுதிப் பார்க்க முயல வேண்டுமென முடிவெடுத்தேன். நான் அதை மிகவும் நேசித்தேன், அது குறித்து தீவிரமான கருத்துகள் வைத்திருந்தேன்.  நான் மிகவும் நேசித்த, தீவிரமான கருத்துகளை கொண்டிருந்த ஒன்றைப் பற்றி எழுதுவது  என்பது  எனக்கு அச்சுறுத்துவதாக இருந்தது.

பின்னர் ந்யூ யார்க்கரில் எனக்குஉதவியாக இருந்த சிப் மக்க்ரா அந்த இதழை விட்டு ந்யூ யார்க் டைம்ஸுக்குப் போனார். அங்கு அவரது பொறுப்பில் புத்தக மதிப்புரை பகுதி இருந்தது. தனக்காக அங்கு எழுதும்படி அவர் என்னிடம் கேட்கத் துவங்கினார். என் எழுத்துக்காக அன்றி நான் சொன்ன வேலையை சரியாக முடித்துக் கொடுத்து விடுவேன் என்பதுதான் அவர் என்னை எழுதச் சொன்னதற்கான முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன். இந்த மாதிரி வேலையில், அதுவே பாதி யுத்தத்தை ஜெயித்த மாதிரி. நான் எதைச் செய்வதாக ஒப்புக் கொள்கிறேனோ, அதைச் செய்து கொடுத்து விடுவேன், அதுவும் சொன்ன நேரத்தில் முடித்துத் தந்து விடுவேன். நானே அதை எடிட் செய்து முடித்திருப்பேன் என்பதால் அதைப் பதிப்பிப்பதற்கும் அதிக வேலை செய்ய வேண்டியிருக்காது, தான் கவலைப்படத் தேவையில்லை என்பதை அவர் அறிந்திருந்தார்.

நீங்கள் ந்யூ யார்க் அப்சர்வர் இதழிலும் புத்தக மதிப்புரைகள் எழுதத் துவங்கினீர்கள்.

நான் அதை செய்வதில் பெரிய ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆனால் (எடிட்டர் ஆடம் பெக்லி) என்னிடம் பரிந்துரைத்த முதல் புத்தகம் சைமன் அண்ட் ஷஸ்டர் குறித்த மைகேல் கோர்டாவின் பதிப்புலக அனுபவங்கள். மைக்கேல் அங்கு இணைந்தபோது நான் அங்கிருந்திருந்தேன். அவர் ஒரு வகையில் என் சீடனைப் போலானார். நாங்கள் பல ஆண்டுகள் நெருங்கிப் பழகியிருந்தோம். அதனால் என்னால் மறுக்க முடியவில்லை.

நீங்கள் ஒரு முக்கிய பாத்திரமாக இருந்த சுயசரிதை ஒன்றுக்கும் உங்களை மதிப்புரை எழுதச் சொல்லி கேட்டார், இல்லையா?

ஆமாம். இது(தான்) ந்யூ யார்க் அப்சர்வர்! விஷயமே அதுதான்.

“இந்தப் புத்தகம் என்னை அவ்வளவு நேசத்துடனும் இணக்கமாகவும் அணுகியிருக்கிறது; இதில் பிழைகள் மலிந்திருப்பதாகவும் நான் அவற்றைத் திருத்தியாக வேண்டும் என்றும் நினைத்திருக்காவிட்டால் இந்தப் புத்தகத்துக்கு மதிப்புரை எழுதுவதிலிருந்து நான் பின்வாங்க வேண்டியதாகியிருக்கும்,” என்று நான் என் மதிப்புரையைத் துவங்கியது எனக்கு நினைவிருக்கிறது. அது தொடங்கிய நாளில் மைக்கேல் என்னை அழைத்து, “நான் எப்படி இந்தத் தவறுகள் அனைத்தையும் செய்தேன்?” என்றார். நான் “நீ எதையும் சரிபார்க்கவில்லை. நீ சொன்னதைத்தான் உன் புத்தகத்தில் செய்திருக்கிறாய்- இது மிகு புனைவுகள் நிறைத்த புத்தகம், ஒரு மிகு புனைவாளனின் புத்தகத்தைதான் நீ எழுதியிருக்கிறாய். அதிலும் கதை சொல்வதில் நீ ஒரு ஜாலக்காரன். வெறும் தகவல்களைப் பற்றி நீ ஏன் கவலைப்பட வேண்டும்?” என்றேன்.

ஜேம்ஸ் தர்பரின் கடிதங்கள் குறித்தும் நீங்கள் ந்யூ யார்க்கரில் ஒரு கட்டுரை எழுதினீர்கள்.

அதிலும் அர்த்தமிருந்தது. ஏனென்றால் நான் தர்பரைப் படித்து வளர்ந்தவன்- என் பதினான்காம் வயதில் அவர்தான் நான் மிகவும் விரும்பிய எழுத்தாளராக இருந்தார். சைமன் அண்ட் ஷஸ்டரில் அவரது புத்தகங்களுக்கு நான் கொஞ்ச காலம் பொறுப்பேற்றிருந்தேன். அதனால் அவரை சந்தித்து அவரைக் கையாண்ட அனுபவம் எனக்கு இருந்தது. அது தவிர, ந்யூ யார்க்கரின் சரித்திரமும் இதில் வருகிறது. நான் அங்கு எடிட்டராக இருந்திருக்கிறேன். இங்கு ந்யூ யார்க் சிடி பாலே போலவே நான் என் கட்டுரையின் பொருளை உள்ளிருந்தும் வெளியே இருந்தும் அறிந்திருந்தேன்.

இப்போது பார்த்தால் நான் இப்படி இவ்வளவு வேறுபட்ட இடங்களில் எழுதிக் கொண்டிருந்தேன், ஆனால் எனக்கு இன்னும் இதைச் செய்வதில் விருப்பம் வந்திருக்கவில்லை. “என்னால் இது இனியும் முடியாது, மிகக் கடினமாக இருக்கிறது, மிகவும் உளைச்சல் தருகிறது இந்த வேலை” என்று நான் (என் மனைவி) மரியாவிடம் சொல்வதுண்டு. ஆனால் அடுத்த நாள் பார்த்தால் “தெரியுமா உனக்கு, இன்னாரைப் பற்றி இப்படி ஒரு புத்தகம் வருகிறதாமே, அதைப் பற்றி என்னால் எழுத முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என்று நான் தொலைபேசியில் (ந்யூ யார்க் ரிவ்யூ ஆப் புக்ஸ் இதழின் எடிட்டர் ராபர்ட் சில்வர்ஸிடம்) சொல்லிக் கொண்டிருப்பேன். தனக்குத் தானே குழப்பமான சமிக்ஞைகளைக் கொடுத்துக் கொள்வதைப் பற்றி என்ன சொல்ல!

உங்களுக்கு அதில் மகிழ்ச்சி இல்லை என்றால் ஏன் அதைச் செய்கிறீர்கள்?

இந்தக் கட்டுரைகளில் எனக்குக் கிடைக்கும் சந்தோஷம், ஏன் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதுவதில் கிடைக்கும் சந்தோஷம்கூட அதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் கிடைக்கும் சந்தோஷம்தான். டிக்கன்சின் கடிதங்களின் பன்னிரெண்டு ராட்சத தொகுப்புகள் மொத்தத்தையும் படித்தபடி உட்கார்ந்திருக்கையில் நான் முழுக்க முழுக்க மகிழ்ச்சியாக இருப்பேன். குறிப்புகள் எடுத்துக் கொள்வது, அடிக்கோடிடுவது- எவ்வளவு த்ரில்லிங்கான அனுபவம் தெரியுமா! அதை எல்லாம் முடித்தபின், இந்த விஷயம் அனைத்தையும் உள்வாங்கிவிட்ட திருப்தி எனக்குக் கிடைத்தானபின் பாருங்கள், படித்த அத்தனையையும் செரித்து அதை எழுதத் துவங்க வழி தேடும் கொடும் கணத்தை துரதிருஷ்டவசமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அல்லது வழி தேடாமலும் இருக்கலாம்- எழுதத் துவங்கினால் போதும். எழுத்துத் தடைபட்டிருந்த பல தலைமுறை எழுத்தாளர்களிடம் நானே சொல்லியிருந்த மாதிரி, “எழுதுவதைப் பற்றி நினைக்காதே. தட்டச்சு செய்வதைப் பற்றி நினைத்துப் பார்.”

உதாரணத்துக்கு, அப்படித்தான் நான் என் பெர்ன்ஹார்ட் புத்தகத்தைத் துவங்கினேன். என்னிடம் எந்த திட்டமோ வரைவு வடிவமோ இருக்கவில்லை. ஆகவே நான் என்னைக் கட்டாயப்படுத்திக் கொண்டு உட்கார்ந்து, “சாரா பெர்ன்ஹார்ட் 1844ஆம் ஆண்டின் ஜூலை அல்லது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் பிறந்தார். அல்லது அது 1843ஆ? 1841ஆகக்கூட இருந்திருக்குமோ?” என்று தட்டச்சு செய்தேன். அது என்னை புத்தகத்துக்குள் கொண்டு சென்றது. புத்தகத்தின் தொனியையும் அது நிறுவியது. அதன்பின் எல்லாம் எளிதாக இருந்தது, புத்தகத்தின் பாதி வரை. அப்போதுதான் நான் அங்கு இரண்டு கதைகள் இருப்பதை கண்டு பிடித்தேன்- அவரது தொழில் மற்றும் அவரது கலை ஒரு கதை, அவரது பெருமளவில் தூற்றப்பட்ட தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அதை இந்த உலகம் எதிர்கொண்ட விதம் என்ற இன்னொரு கதை. அப்போது நான் எழுதுவதை நிறுத்தி, இவ்விரண்டையும் எப்படி பிரிப்பது என்று யோசிக்க வேண்டியதாகி வந்தது. அதிருஷ்டவசமாக நீங்கள் ஒரு எடிடராக இருந்தால் உங்களுக்கு இருக்க வேண்டிய வடிவமைப்பதில் தேர்ச்சி கொண்ட மனம் எனக்கு இருந்தது. ஆனால் என்னால் முன்கூட்டியே வடிவமைக்க முடியாது.

என்னால் ஏன் இது போல் செய்ய முடிகிறதென்றால் நான் என்னை ஒரு எழுத்தாளனாக நினைத்துக் கொள்வதில்லை என்பதுதான் காரணம் என்று தோன்றுகிறது. நான் ஒரு பிரதியை எடுத்துக் கொள்கிறேன், அதை எடிட் செய்கிறேன். பார்: எது இந்த இரவைக் கடக்க உதவுகிறதோ அது போதும்.

ஒரு எடிடர் என்னும் உங்கள்அனுபவத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட – எழுத்தாளராக மட்டுமே இருந்த ஒருவர் அறிந்து கொள்ள முடியாத – விஷயங்கள் உண்டா?

நான் எதையும் இப்படி செய்ய வேண்டும் என்று நினைத்து துவங்குவதில்லை. எல்லா எடிட்டர்களையும் போல நானும் எதிர்வினை ஆற்றுபவன்தான் என்று நினைக்கிறேன்.

பொதுவாக எழுத்தாளர்களிடம் உனக்குள்ளிருக்கும் எடிட்டரை முடக்கிவிட்டு உன் எழுத்து தன்னால் வர வழி விடு என்று சொல்வதுண்டு. உனக்குள்ளிருக்கும் எடிட்டர் உன் படைப்பூக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்பதே இந்த பொதுவான அறிவுரையின் அடிப்படை.

எனக்கு ‘படைக்க’ வேண்டும் என்ற ஆசை கிடையாது. நான் என்ன செய்கிறேனோ அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, நான் செய்வது ஒரு சேவகப் பணி. “முடித்துக் கொடுத்தான்” என்று என் கல்லறையில் எழுதப்பட வேண்டும் என்றுதான் நான் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்- ஆனால் அப்புறம் இப்படியும் நினைத்துப் பார்க்கிறேன், ஒரு நிமிடம் நில்: நீ அடால்ப் ஐஷ்மன் குறித்தும் இதையே சொல்ல முடியும். இருந்தாலும்கூட என் இயல்பு, என் மனப்பாங்கு, முடித்துக் கொடு,(செய்து முடி) ஒரு கட்டுரை எழுதிக் கொடுப்பதானாலும் சரி, பாத்திரங்களைத் தேய்த்துத் தருவதானாலும் சரி: செய். எதையோ யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்காதே.

மறு பக்கம் பார்த்தால், நான் எதையோ யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கவும் செய்கிறேன். எழுத வேண்டும் என்று வரும்போது, என்னால் கணினிக்கருகில் போக முடிவதில்லை. நாளெல்லாம் அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். வழக்கமாக, இரவு பதினோரு மணியளவில், என்னை அங்கே இழுத்துக் கொண்டு போகிறேன். “சரி, எதையாவது தட்டச்சு செய்தாக வேண்டும்,” என்று சொல்லிக் கொள்கிறேன். அப்புறம் எழுதத் துவங்கியபிறகு, எல்லாம் சரியாகி விடுகிறது. எழுதுவது பிரச்சினை இல்லை, என்னை எழுத வைப்பதுதான் பிரச்சினை. அது முடிந்தால் திரும்பத் திரும்ப எழுதியதைத் திருத்தத் துவங்கி விடுகிறேன்!

நான் இந்த மாதிரியே இல்லாத எழுத்தாளர்களுடன் பழகியிருக்கிறேன், அவர்களை கவனித்திருக்கிறேன். அவர்கள் தன்னிச்சையாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள். உட்கார்ந்தால் தட்டச்சு செய்யத் துவங்கி விடுகிறார்கள். எனக்கு அந்த மாதிரி மூன்று பேரைத் தெரியும், அவர்களில் இருவருடன் நான் நெருக்கமாக இருந்திருக்கிறேன்: டோரிஸ் லெஸ்ஸிங், அந்தோணி பர்கஸ், அப்டைக். இவர்களின் எண்ணத்துக்கும் செயலுக்கும் இடையில் எந்த நிழலும் விழவில்லை என்பதை உங்களால் உணர முடியும். அவர்கள் எழுதாதபோது உயிர்ப்பில்லாமல் இருப்பார்கள். அப்டைக் கோல்ப் விளையாடும்போது உற்சாகமாக இருந்தார் என்று நினைக்கிறேன். ஆனால் டோரிஸ்- நாற்பத்தைந்து ஆண்டுகள் போல் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறேன் – என்றாவது எழுதவில்லையென்றால் அந்த நாளைத் தான் வாழ்ந்திருக்கவில்லை என்பது போலிருக்கும் என்று மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். நாமெல்லோரும் சுவாசிப்பவர்கள் என்பது போல் இந்த மூன்று பேரும் எழுதுபவர்கள். நான் அப்படியல்ல. எனக்கு படிப்பதுதான் சுவாசிப்பது போன்றது.

மாக்ஸ்வெல் பெர்க்கின்ஸ் மற்றும் மார்ஜரி கின்னன் ராலிங்ஸ் பற்றிய கட்டுரையில் நீங்கள் விபரங்களில்தான் எடிட்டிங் இருக்கிறது என்று எழுதுகிறீர்கள்.

ஆமாம், ஆனால் அது பருந்துப் பார்வையிலும் இருக்கிறது. இரண்டும்தான். உங்களால் ஒரு புத்தகத்தை முழுதாகப் பார்க்க முடிய வேண்டும், அதன் பின் நீங்கள் முன்சென்று உற்றுப் பார்த்தாக வேண்டும்.

நான் ந்யூ யார்க்கரில் இருந்த போது ஏராளமான கட்டுரைகளை எடிட் செய்திருக்கிறேன், ஆனால் நான் என்னை ஒரு எடிட்டராக நினைத்துப் பார்க்கிறேன் என்றால், அது புத்தகங்களின் எடிட்டராகத்தான். உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் எந்தக் குறையும் அற்ற கைப்பிரதி உங்கள் கைக்குக் கிடைக்கும். நீங்கள் எதையும் செய்ய வேண்டாம், “நன்றாக இருக்கிறது. அற்புதம்!” என்று சொல்லி விட்டு அதை அடுத்த கட்டத்துக்கு அனுப்பி வைத்தால் போதும். சில சமயம் பிரச்சினைகள் மேற்பூச்சில் இருக்கும், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், எந்த இடத்தில் நடை பிசகுகிறது, எங்கு முரண்பாடு அல்லது சொன்னதே திரும்ப வருகிறது என்றெல்லாம் சொல்ல வேண்டும்- இதெல்லாம் மேற்பரப்பில் உள்ள விஷயங்கள். ஆனால் சில சமயம் வடிவ அமைப்பில் பிரச்சினைகள் வரும், எழுதப்பட்ட வடிவில் புத்தகம் அர்த்தமில்லாமல் இருக்கும். அப்போது நாம் எழுத்தாளருடன் அமர்ந்து எப்படி அனைத்தையும் கூட்டி ஒருமித்த பொருள் தருவது என்று யோசித்தாக வேண்டும். மற்ற சமயங்களில், என்ன சொல்வது, புத்தகமே இருக்காது. அது ஒரு பிரச்சினைதான். காரணம், இதை சொல்ல எனக்கு ரொம்பப் பிடிக்கும்- உன்னால் இருப்பதை வெளியே எடுக்க முடியும், ஆனால் இல்லாததை உள்ளே சேர்க்க முடியாது.

சில சமயங்களில் மிகையான விஷயங்கள் இருக்கும். அப்போது எங்கே அதிகமாக இருக்கிறது என்றும் ஏன் அது மிகையானதாக இருக்கிறது என்றும் எழுத்தாளரிடம் சொல்லி அவரை ஏற்றுக்கொள்ள வைப்பது உங்கள் வெளியாகிறது- அது ஏற்றக்குறைச்சலாக இருந்தாலும் இருக்கலாம். பெரும்பாலும் அது துவக்கம் மற்றும் முடிவு தொடர்பான கேள்வியாக இருக்கும். சிலசமயம் ஒரு புத்தகம் நெருடலாகத் துவங்கலாம். எழுதியவர் இன்னும் வேகம் பிடிக்கவில்லை, அதனால் அது தட்டையாக எழுதப்பட்டிருக்கலாம். இப்போது நீங்கள், “முதல் இரண்டு பத்திகளைக் கழித்துக் கட்டிவிடு, நன்றாக வரும்” என்று சொல்ல வேண்டியிருக்கும்.

சில சமயம் காத்திரமான முடிவெடுக்க வேண்டியிருக்கும். சைம் போடோக்கின் “தேர்ந்தேடுக்கப்பட்டவன்” (The Chosen) என்ற நாவல் பெருமளவில் விற்பனையானது. இன்றும் அது பலராலும் நேசிக்கப்படும் புத்தகமாக இருக்கிறது. அதன் கைப்பிரதி என்னிடம் தரப்பட்டபோது, நான் அதை மிக உற்சாகமாகப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அதை விருப்பமில்லாமல் படித்தேன். அதன் பின் இன்னொரு முன்னூறு கையால் எழுதப்பட்ட பக்கங்களைப் படித்துவிட்டு அவரது ஏஜெண்டை அழைத்தேன். “இது எனக்கு முழுக்க முழுக்க பிடித்திருக்கிறது, ஆனால் இதை இப்போது இருக்கிறபடியே பதிப்பிக்க முடியாது. இதை எழுதியவரிடம் இதை நான் எடிட் பண்ணி பதிப்பிக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொல்ல முடியுமா? ஆனால் அவர், இந்தப் புத்தகம் இந்த இடத்தில் முடிந்து விட்டது, ஆனாலும்கூட அதைத் தொடர்ந்து இரண்டாவது புத்தகத்தையும் எழுதியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டாக வேண்டும். இரண்டையும் ஒன்றாகச் சேர்க்க முடியாது,” என்று நான் சொன்னேன். நல்ல வேளை, சைம் இதை ஏற்றுக் கொண்டார்.

எவ்வளவு தூரம் எடிட் செய்ய வேண்டும் என்பது குறித்து ஏதாவது வரைமுறைகள் வைத்திருக்கிறீர்களா?

எழுத்தாளரின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து உங்களுக்கு ஒத்திசைவு இருக்க வேண்டும். எழுத்தாளர்களுக்கு எப்போதும் அது தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை. எடிட்டிங் குறித்த உரைகள் மற்றும் எடிட்டர்களுடனான உரையாடல்களில் நூற்றுக்கணக்கானவர்களிடம் சொல்லியிருக்கிறேன்: எப்போதாவதுதான் நான் முன் சொன்ன உதாரணம் மாதிரி முற்றிலும் எதையாவது மாற்ற வேண்டி வரும். மற்றபடி, எழுத்தாளர் என்ன செய்கிறாரோ அதை இணக்கமாக அணுகி அது எப்படி இருக்கிறதோ அதை இன்னும் சிறந்ததாக அவர் படைக்க நீங்கள் உதவ வேண்டும். அதை வேறொன்றாக மாற்றுவது உங்கள் வேலையல்ல. ஏனென்றால் அப்படிச் செய்தால் அது துயரில்தான் முடியும்.

நீங்கள் இப்படிப்பட்ட தவறை செய்திருக்கிறீர்களா?

நான் இந்தப் பாடத்தை ஓரிரு முறை கற்றிருக்கிறேன். அப்படி செய்யும்போதே நான் தவறு செய்கிறேன் என்பதை உணர்ந்திருந்தேன். அப்படி செய்தால் சரிவராது. ஒரு எழுத்தாளரின் நோக்கத்துக்கு இணக்கமாக நீ இருந்தால், அவர் ஹிஸ்டெரிக்காகவோ பாரனாய்டாகவோ அல்லாது பைத்தியக்காரனாகவோ இருந்தாலொழிய, எழுத்தாளர் உன் ஒத்திசைவை உள்ளுணர்வால் உணர்வார். அவர் நீ சொல்வதை கேட்கத் தயாராகவே இருப்பார். நீ சொல்லும் மாற்றத்தை அவர் செய்யாதிருக்கலாம், ஆனால் நீ கைப்பிரதி எங்கு போக வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்த இடத்துக்கு அதைக் கொண்டு செல்லக்கூடிய மாற்றத்தை அவர் செய்தாலும் செய்வார். ஆனால் எடிட் பண்ண யாருக்கும் கற்றுத் தர முடியாது. அது பயனற்ற வேலை. நான் இப்போது எவ்வளவு நல்ல எடிட்டராக இருக்கிறேனோ அவ்வளவு நல்ல எடிட்டராக என் முதல் நாள் அன்றே நான் இருந்தேன் என்று நினைக்கிறேன். ஒருவேளை, இன்னும் நல்ல எடிட்டராகக்கூட இருந்திருக்கலாம், அப்போது எனக்கு இன்னும் அதிக சக்தி இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக எனக்கு இப்போது உள்ள அளவு சாதுர்யம் இருந்திருக்கவில்லை. அதை நான் கற்க வேண்டியிருந்தது.

நீங்கள் எழுத்தாளர்களுக்கு இவ்வளவு இணக்கமானவராக இருக்கிறீர்கள். ஆனால் உங்களை ஒரு எழுத்தாளராக நினைத்துக் கொள்வதை இவ்வளவு தூரம் தவிர்க்கிறீர்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அது உண்மைதான், நான் என்னை ஒரு எழுத்தாளராக நினைத்துக் கொள்ளவில்லை. ஆனால் நான் ஒரு எழுத்தாளர்தான் என்பதைக் காட்ட இவ்வளவு சான்று இருக்கிறது. நான் புத்தகங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளும் மதிப்புரைகளும் செய்திருக்கிறேன். அதனால் முடிவாக, “எழுதுகிறேன்” என்பதை நான் சொல்லியாகவே வேண்டும்.

நீங்க இப்போதும் புத்தகங்களை எடிட் செய்து கொண்டிருக்கிறீர்களா?

இன்றும் எடிட் செய்து கொண்டு தானிருக்கிறேன், பல ஆண்டுகளாக நான் இணைந்து பணியாற்றிய குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் புத்தகங்களை எடிட் செய்கிறேன்: டோனி மாரிசன், ராபர்ட் ஏ காரோ, நோரா எப்ரான். எனக்கு ஆர்வம் இருக்கும் துறைகளிலும் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன்: நடன புத்தகங்கள், திரைப்பட புத்தகங்கள், வாழ்க்கை வரலாறுகள், சரித்திரம், தொகுப்புகள்.

பாரிஸ் ரிவ்யூ உங்களிடம் ஒரு நீண்ட பேட்டி எடுக்க விரும்பியபோது, உங்களுக்கு அதை ஏற்பதில் சிக்கல் இருந்தது. அது ஏன் என்று விளக்க முடியுமா?

அவர்கள் எந்த எடிட்டரையும் பேட்டி கண்டதில்லை. “நீங்கள்தான் முதலாமவராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறோம்,” என்று என்னிடம் சொன்னார்கள். “அந்த எண்ணத்தை விட்டு விடுங்கள். ஒரு பக்கம் பார்த்தால் எடிட்டர்களுக்கு பைத்தியக்காரத்தனமான தலைக்கனம் இருக்கிறது, சித்தம் கலங்கிய முட்டாள்கள் போல் பேசுகிறார்கள். மறு பக்கம் பார்த்ததால் இதில் பல விஷயம் ரகசியமானது. ஒரு கன்பெஷனலில் சொல்லப்படுவது போன்ற ரகசியங்கள். நான் ஏ, பி அல்லது சி ஐடம் எனன சொன்னேன் என்பது யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. அப்படி சொல்லி அவர்களுடைய மாபெரும் புத்தகங்கள் முழுமையாகத் தொலைந்து போகாதபடி நான் என் சுண்டு விரலை உயர்த்தி அவற்றை எப்படி காப்பாற்றினேன் என்பதெல்லாம் தேவையில்லாதவை” என்று சொன்னேன். “நாங்கள் உங்கள் எழுத்தாளர்களிடம் பேசுகிறோம், அவர்கள் சொல்வது குறித்து நீங்கள் பேசுங்களேன்,” என்று அடுத்து சொன்னார்கள். அதில் எனக்குப் பிரச்சினை இல்லை என்று சொன்னேன்.

அப்படியானால் ஒரு எடிட்டருக்கும் எழுத்தாளருக்கும் இடையிலான விவாதங்கள் பொதுவில் பேசப்படக் கூடாதவை என்று நீங்கள் சொல்வீர்களா?

ஆமாம். சில எழுத்தாளர்கள் இதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. உதாரணத்துக்கு “catch 22″க்கு மிகையான அளவில் ஜோ ஹெல்லர் என்னைப் பெருமைப்படுத்தாமலிருக்க நான் அவரைத் தடுக்க வேண்டியிருந்தது. ந்யூ யார்க்கர் டோனி மாரிசன் பற்றி ஒரு கட்டுரை எழுதியபோது ஹில்டன் அல்ஸ் என்னிடம் நான் டோனியுடன் செய்த எடிட்டோரியல் வேலை பற்றியும் அது அவரது புத்தகங்களில் எத்தகைய பாதிப்பு ஏற்படுத்தியது என்றும் பேச விரும்பினார். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அதன் பின் அவர், “இந்தத் தகவல்களை உங்களை அழைத்து பெற்றுக் கொள்ளச் சொல்லி அவர்தான் கேட்டுக் கொண்டார்,” என்று சொன்னார். நான் எங்கள் எடிட்டோரியல் விவாதங்கள் குறித்த ஆவணங்களை சேமித்து வைத்திருக்கவில்லை. அதனால் நான் டோனியை அழைத்து, “நீதான் எனக்கு நினைவூட்ட வேண்டும். நான் உன்னிடம் என்னென்ன சொன்னேன்?” என்று கேட்டேன்.

ஆனால் நான் டோனிக்குத் தந்த அறிவுரை எடிட்டோரியல் அறிவுரை அல்ல, அதுவும் நல்ல விளையாட்டு போல்தான் இருந்தது என்றாலும். எல்லாவற்றையும் விட முதலில், அவர் உடன் பணிபுரிய அருமையான பெண். நாங்களிருவரும் ஒத்த வயதினர், எங்களுக்கு ஒரே மாதிரியான வாசிப்பு அனுபவம் இருந்தது, நாங்கள் ஒரே மாதிரி படிப்பவர்கள், அதனால் விளக்கங்கள் தேவைப்படவில்லை: “இது இருக்கட்டும், இது வேண்டாம்” “புரிகிறது, சரி”. நான் அவருக்கு செய்த பெரிய உதவி என்னவென்றால் அவரது முழுநேர வேலையில் இருந்து அவர் விடுபட நான் ஊக்குவித்தேன் என்பதுதான். அவர் ராண்டம் ஹவுசில் எடிட்டராக இருந்தார். “நீ ஒரு எழுத்தாளர். இதை நீ செய்தாக வேண்டியதில்லை. உனக்குத் தேவையானா பணம் கிடைக்கும். கவலைப்படாதே,” என்று நான் அவரிடம் சொன்னேன்.

அவர் தன் குழந்தையைத் தனியாய் வளர்த்தார், இல்லையா?

ஆமாம், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். “சூலா”வை அடுத்து நான் அவரிடம் சொன்னதுதான் நான் சொன்னதிலேயே அவருக்கு மிகப் பயனுள்ளதாயிருந்த விஷயம் என்று நினைக்கிறேன். “சூலா எந்த குறையுமில்லாத புத்தகம். நீ இதை மறுபடி எழுத வேண்டியதில்லை” என்று சொன்னேன், “வெளிப்படையாக இனி எழுது”

அது மிகுந்த கட்டுப்பாட்டுடன் எழுதப்பட்டிருந்ததால் குறையற்ற புத்தகமாக இருந்ததா?

அது அளவாக எழுதப்பட்ட வடிவ நேர்த்தி கொண்ட நாவல். அது ஒரு சானட் போன்றது. அவருக்கு அதை மீண்டும் செய்ய வேண்டிய தேவை இனியும் இல்லை. அப்போதுதான் அவர், “Song of Solomon” எழுதினர், அதன் ஸ்கேலே வேறு. இந்தக் கதையின் பாடம் நான் அவ்வளவு பெரிய ஜீனியஸ் என்பதல்ல. அவர் தான் செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே உணர்ந்திருந்ததைச் செய்யும்படி நான் அவருக்கு ஊக்கம் கொடுத்தேன். இப்படித்தான் ஒரு எடிட்டர் உண்மையாக உதவ முடியும், எடிட்டரும் தன் உள்ளுணர்வை நம்பினால்.

எழுத்தாளரின் முன்னேற்றம் குறித்த உள்ளுணர்வுகளா?

வாசிப்பு குறித்த உள்ளுணர்வுகள். இங்கே, இதை நான் சொல்லியாக வேண்டும், எனக்கு வலுவான ஈகோ இருக்கிறது. என் வாசிப்பை நான் நம்புகிறேன்.

ஒரு எடிட்டராக நான் என்ன செய்கிறேன் என்பது உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை. நான் இதைப்பற்றி உண்மையாகவே யோசித்ததில்லை. என்னை பேட்டி எடுக்கும்போதுதான் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். நான் செய்து முடிக்கிறேன், அவ்வளவுதான். அது என் இயல்போடு ஒட்டியது, எழுத்து என் இயல்பல்ல. அதனால்தான் எனக்கு எடிட்டிங்கில் இல்லாத சவால் எழுத்தில் இருக்கிறது. நான் சரி செய்கிறவன். இருப்பது இன்னும் நன்றாக வரும்படி சரி செய்வது என் இயல்பு.

சாலையில் நடந்து செல்லும்போது என்னெதிரே வரும் பெண்ணைப் பார்த்து, “சற்றே பொறுங்கள் அம்மணி, நீங்கள் உண்மையாகவே அழகாக இருக்கிறீர்கள், ஆனால் ஆரஞ்சு உங்களுக்கு ஏற்ற வண்ணமல்ல,” என்று நான் சொல்ல நினைத்த கணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன், அதில் ஒரு புத்திசாலித்தனமும் இருக்கிறது பாருங்கள் – அதனால்தான் இந்தக் கதையைச் சொல்ல உங்கள் முன் இன்று இருக்கிறேன்.

நீங்கள் பாரிஸ் ரிவ்யூ பேட்டியில் சொன்னதில் இது சுவையாக இருந்தது- ஒரு எழுத்தாளன் தன் எடிட்டரிடம் எதிர்பார்க்கும் முதல் விஷயம் அவர் தன் கதை குறித்து எவ்வளவு சீக்கிரம் பேச முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதைச் செய்ய வேண்டும் என்பதுதான். பல எடிட்டர்கள் இதை உணர்வதில்லை.

பல பேருக்கு இது தெரியாது. அது ஒரு வதை.

காத்திருத்தல்?

அது யாருக்கும் வதையாகவே இருக்கும். ஒரு எழுத்தாளராக எனக்கு இப்படி நேர்ந்தபோது நான் கடும் கோபம் கொண்டிருக்கிறேன், சீக்கிரம் பதில் சொல்ல அதிக நேரம் தேவைப்படாது என்பது எனக்குத் தெரியும். அது ஒரு புத்தகமென்றால் அடுத்த நாளே சொல்லி விடலாம். அதிகபட்சம் வார இறுதி வரைக் காத்திருக்கலாம். 350 பக்க கைப்பிரதியைப் படிக்க எவ்வளவு நேரமாகும்? அதிக அவகாசம் தேவையில்லை.

எனக்குத் தெரிந்தவர்களில் நீங்கள் மிக வேகமாக வாசிக்கக்கூடியவர்களில் ஒருவர்.

நீ தொழில்முறையில் ஒரு பிரதியை முதல் தடவை படிக்கும்போது விவரணைகளுக்காக அதைப் படிக்க வேண்டியதில்லை. எழுத்தாளர் நீங்கள் அது குறித்து ஒட்டுமொத்தமாக என்ன நினைக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளவே காத்திருக்கிறார்.

நீங்கள் ஒரு நல்ல எடிட்டரா மோசமான எடிட்டரா இல்லை எடிட்டரே இல்லையா என்பது முக்கியமில்லை: நீங்கள் ஒரு மிக முக்கியமான வாசிப்பின் பிரதிநிதி. ஆமாம் அவருடைய கணவர் அதைப் படித்திருக்கிறார். ஆமாம், அவருடைய ஏஜண்ட் அதைப் படித்திருக்கிறார். ஆனால் நீ அதிகாரத்தின் குறியீடாக இருக்கிறாய், அதற்கான தகுதி உனக்கு இல்லை என்றாலும். நீ பணத்தின் குறியீடாகவும் இருக்கிறாய். உனக்கு ஓரளவு நல்ல பெயர் இருந்தால், ஒரு எழுத்தாளர் ஓரளவு நல்ல பெயர் இருக்கிற ஒருவர் தன் புத்தகத்தைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார். நீ பல ஆண்டுக்காக இணைந்து பணி புரிந்த எழுத்தாளராக இருந்தால், உன் வாசிப்பு இன்னும் முக்கியமானதாக இருக்கிறது- visceral connection இருப்பதால்.

நம்புங்கள். 350 பக்கங்களை ஒரே நாளில் படித்து முடிப்பது என்பது மிக சுலபமான ஒன்று, உங்கள் நேரத்தை வீணாக்கும் அத்தனை இதர விஷயங்களையும் நீங்கள் செய்யாதிருந்தால். –  ஏதாவது ஒரு தொடரைப் பார்த்துக் கொண்டிருப்பது. பழைய நண்பர்களுடன் ஒரு ட்ரிங்க்ஸ் எடுத்துக் கொள்ள வெளியே போவது. காடுகளில் நடப்பது – என்பன போல் செய்யாமலிருந்தால். சும்மா உட்கார்ந்து படித்துவிட்டு அதைப் பற்றி சொன்னால் போதும். “நாம் இந்தப் பகுதிகளைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. நான் இப்போது திரும்பப் போய் ஒரு எடிட்டராக அதை மறுபடியும் படிக்கவிருக்கிறேன்,” என்று சொன்னால் போதும். இப்படி செய்யும்போது ஒரு கவலையை நாம் தீர்த்து விடுகிறோம், எழுத்தாளரின் கவலையை.

900 சொற்களில் எழுதப்படும் கட்டுரைகளில் இப்படி எனக்கு நேர்ந்திருக்கிறது. அதை ஆறு நாட்களாக படிக்குமளவுக்கு எந்த எடிட்டராவது பிசியாக இருக்க முடியுமா? அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? என்னால் அதைப் புரிந்து கொள்ள முடிவதே இல்லை. அதே போல் ஒரு விஷயம் கொடுக்கப் பட்டிருந்தாலோ, அதற்காக பணம் தந்திருந்தாலோ,  எப்படி ஒரு எடிட்டரால் அது என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்த தீவிரமான ஆர்வம் இல்லாமல்  இருக்க முடியும் என்பதும் எனக்குப் புரிவதில்லை. எழுத்தாளர் என்ன செய்திருக்கிறார் என்பதை எப்போதும் நான் உடனே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். என்னிடம் கொடு! நான் ஏன் சாப்பிட்ட வேண்டும்? அது கால விரயம். பிள்ளைகளுக்குக் கதை சொல்லித்தான் ஆக வேண்டுமா? (ஆமாம்தான்). நான் இன்றிரவு 500 பக்கங்கள் படித்தாக வேண்டும்!

காலபோக்கில் எடிட்டிங்கும் பதிப்புத் துறையும் எவ்வளவுக்கு மாறி விட்டது என்பதை எப்போதும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். நீங்களும் அப்படிதான் நினைக்கிறீர்களா?

நிச்சயம் எனக்கு எதுவும் மாறவில்லை. 1956ல் செய்து கொண்டிருந்ததையே அச்சு அசலாக இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த மாறுதல் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லை தெரியுமா? நிச்சயம் நல்ல பதிப்பகங்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. க்னாப்பில் எனக்கு இப்போதும் ஒரு அலுவலக அறை இருக்கிறது, அங்கே இளம் எடிட்டர்கள்- 45, 35, 22 வயதானவர்கள் வந்தும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். இப்போது எல்லாவற்றையும் எலக்ட்ரானிக்கலாக அனுப்பிக் கொள்கிறார்கள், அதனால் நான் செய்த மாதிரி அவர்கள் செய்ய வேண்டியதாயில்லை. நான் கைப்பிரதியை வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு போய் அடுத்த நாள் காலையில் திரும்பக் கொண்டு வரவேண்டியிருந்தது. ஆனால் சிலர் இன்னும் அதை செய்யவும் செய்கிறார்கள். அவர்கள் மிகுந்த தொழிலுணர்வுடன் இருக்கிறார்கள். ஆர்வம் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். எல்லாம் மாறி விட்டது என்பது ஒரு கட்டுக்கதை என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் சோம்பல் மிகுந்த எடிட்டர்களும் இருக்கிறார்கள். நான் அவர்கள் பெயரை சொல்ல முடியும், ஆனால் அது மாட்டேன், மான நஷ்டம் குறித்து சட்டங்கள் அப்படி. அவர்கள் எதையும் செய்வதே இல்லை. அதற்கான அக்கறையும் அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் தங்களுக்கு முக்கியமாக இருப்பதுதான் எழுத்தாளருக்கு முக்கியமாக இருப்பனவற்றைவிட மிக முக்கியமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொது நிலவரம் அப்படியில்லை. எனக்குத் தெரிந்த எடிட்டர்கள் தங்கள் துறையிலும் தாங்கள் பணியையும் அர்ப்பணிப்புடன் செய்கிறார்கள். இதைவிட எப்படி அவர்களை உயர்த்திச் சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

பதிப்புத் துறையில் சில விஷயங்கள் நிச்சயம் மாறி இருக்கின்றன, குறிப்பாக டெலிவரி சிஸ்டம் விஷயத்தில். டெக்னிகல் எடிட்டிங் கொஞ்சம் மழுங்கிப் போயிருக்கிறது.

டெக்னிக்கல் எடிட்டிங் என்று எதை சொல்கிறீர்கள்?

இப்போதெல்லாம் காப்பி எடிட்டிங் பொதுவாக குறைந்திருக்கிறது. நான் அருமையான காப்பி எடிட்டர்களை சந்தித்திருக்கிறேன். நான் பதிப்பித்த எல்லா இடங்களிலும் அவர்களை சந்தித்திருக்கிறேன். பாந்தியனில் இருந்து ஹார்ப்பர்ஸ் முதல் யேல் வழியாக பர்ரார் ஸ்ட்ராஸ் மற்றும் ஜிரோக்ஸ் வரை எல்லா இடங்களிலும்.

இப்போதெல்லாம் யாரும் எடிட் செய்வதில்லை என்று குறை சொல்பவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்: காப்பி எடிட்டிங்கின் தரம் இப்போது சிறிது குறைந்திருக்கிறது. நாம் பேசிக்கொண்டிருந்த வகை எடிட்டிங்கை அவர்களில் பலர் கவனிக்கவே போவதில்லை. ஏதாவது பெரியதாக இருந்தால் அவர்கள் அதைத் தெரிந்து கொள்ளப்போவதில்லை.

“இந்தப் புத்தகத்தை இன்னும் நன்றாக எடிட் செய்திருக்கலாம்” என்று விமர்சிக்கப்படும் புத்தகங்கள் பெரும்பாலும் நீங்கள் வெகு நேரம் எடிட் செய்த புத்தகங்களாகவே இருக்கும். அதற்குக் காரணம் அதன் சிக்கல்கள் மிகக் கடுமையாக இருந்த காரணத்தால் நீங்கள் எழுத்தாளருடனும் பிரதியுடனும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலை செய்திருந்திருப்பீர்கள். எடிட்டராக உங்களுக்கோ அல்லது எழுத்தாளருக்கோ அதைத் திரும்பப் பார்க்க முடியாத கட்டம் வரும்: அவ்வளவுதான், இனி எதுவும் செய்வதற்கில்லை என்று விட்டுவிட முடிவு செய்திருப்பீர்கள்.

டெலிவரி சிஸ்டம் என்று சொன்னீர்கள். அது என்ன?

பதிப்புத் துறையில் நிகழ்வது எல்லாம் எனக்குப் புரிகிறது என்று சொல்ல மாட்டேன், எலக்ட்ரானிக் புத்தகங்கள் மற்றும் வேவ்வேறு ராயல்டி திட்டங்கள்- இதெல்லாம் எனக்குப் பிடிபடவில்லை. சிலபேருக்கு இதில் பெரிய ஈர்ப்பு இருக்கிறது, இருக்கட்டும், ஆனால் எனக்கு அதெல்லாம் எதுவும் இல்லை. 55 ஆண்டுகளுக்கு அப்புறம், போதும் போதுமென்றாகி விட்டது.

ஐம்பதுகளின் மத்தியிலிருந்து நான் பதிப்புத் துறையில் இருப்பதால், “மீடியம்தான் மெசேஜ்” என்பது தொட்டு எல்லாம் மோசம் போய் விட்டது என்று குரலெழுப்பப்பட்ட அத்தனையையும் பார்த்திருக்கிறேன். “புத்தகம் இறந்து விட்டது”- என் வாழ்நாளில் நாம் எவ்வளவு முறை புத்தகத்தைப் புதைத்திருக்கிறோம் என்பதை சொல்லி மாளாது. புத்தகம் இன்னும் சாகவில்லை என்பதுதான் உண்மை, இது எல்லாம் எப்படி முடிந்தாலும், நாம் புத்தகத்துக்கு முடிவு கட்டப் போவதில்லை. புத்தகம் படிக்கத்தான் போகிறார்கள், அதை கிண்டிலில் படிக்கிறார்களோ வழக்கமான கெட்டி அட்டை புத்தகமாக படிக்கிறார்களோ இல்லை பேப்பர்பாக்காகப் படிக்கிறார்களோ, இல்லை போனில் படித்தாலும், ஆடியோபுக்காக படித்தாலும் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிடப் போகிறது? ஒரு எழுத்தாளர் இன்னும் தன் எழுத்தை உங்களுக்கு அனுப்பத்தான் போகிறார், நீங்களும் அதை உள்வாங்கப் போகிறீர்கள். அந்த வாசிப்புதான் புத்தகம்.

______________________________________________

முழு பேட்டியை மூலத்தில் படிக்க இங்கே செல்லவும்:

http://www.salon.com/books/laura_miller/2011/04/26/robert_gottlieb_interview