சீனா- பாரம்பரியக் கிராமங்கள்

(முந்தைய பகுதி : பகுதி 04 – பெருகிப் பிதுங்கும் நகரங்கள்)

சீனாவில் சுமார் ஆறு லட்சம் (601,000) கிராமங்கள் இருக்கின்றன. நகரங்கள் மற்றும் சிறுநகரங்களோ 83,000 போல இருக்கும். மொத்த மக்களில் 70% பேர், சுமார் எண்பத்தி ஆறரைக் கோடி பேர் (864 மில்லியன்) கிராமப்புறங்களில் தான் வசிக்கிறார்கள். தனிநபர் ஆண்டு வருவாய் சராசரி சுமார் 1450 யுவான்கள். நகரங்களில் இது கிட்டத்தட்ட இரட்டிப்பாக இருக்கிறது. கிராமங்களில் இருக்கும் மூன்றில் ஒரு பகுதி தொழிலாளிகள், அதாவது சுமார் (150 மில்லியன்) 15 கோடிப் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்; அல்லது திறனுக்குப் பொருத்தமில்லாத தொழில் செய்கிறார்கள்.

இந்தக் கிராமங்களை இருவகையாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒரு வகைக் கிராமங்கள், பாரம்பரியக் கிராமங்கள்- வெகுகாலமாக இருப்பவை. இவை பெருமளவும் இயற்கைச் சூழலை ஒட்டி மக்கள் தம் வாழ்வை அமைத்துக் கொள்வதில் உருவானவை.  இன்னொரு வகை, சமீபத்தில் இயற்கையை சீன அரசின் பெருந்திட்டங்கள் மாற்றி அமைத்ததால்- பெரும் அணைகள், சதுப்பு நிலங்களை மீட்டெடுத்தல், இருந்த இடங்களை தொழிலுற்பத்திக்காக கையகப்படுத்தி மக்களை அங்கிருந்து அகற்றி வேறிடங்களில் பொருத்துவதால் உண்டான கிராமங்கள் போன்றவை.  இவற்றை செயற்கைக் கிராமங்கள் என்று அழைக்கலாம். இந்தக் கட்டுரை பாரம்பரியக் கிராமங்களைப் பார்க்கிறது. அடுத்ததில் சமீபத்தில் உருவான, ‘செயற்கை’க் கிராமங்களைப் பார்ப்போம்.

கிராமத்திலிருந்து நகரத்துக்கு மட்டுமே விவசாயிகள் இடம்பெயர்வதில்லை. பொருளாதார மேம்பாடு தேடி மிகவும் பின் தங்கிய கிராமத்திலிருந்து சற்றே வளர்ச்சி பெற்ற கிராமத்துக்குப் போகிறவர்களும் நிறையவே இருக்கிறார்கள். அதே போல ஒரேயொரு கிராமத்தை மட்டும் கணக்கில் எடுத்தால் சிறியதாகத் தோன்றக்கூடிய இடப்பெயர்வு குறுகிய காலத்தில் சடசடவென்று பரவி அடுத்தடுத்த கிராமங்களுக்கும் தொத்திக் கொள்கின்றது . வெள்ளமாகி விடுகிறது.

சமீபத்தைய கணக்கெடுப்பின் படி, வேலை தேடும் விவசாயிகளில் 61% மாகாணத்துக்குள்ளும் 39% பேர் மாகாணத்தையே விட்டு இடம்பெயர்ந்தனர். வட்டாரத்தை விட்டுப் போனவர்களில் 48.8% பேர் நகரல்லாத பெரிய ஊர்களுக்குப் போனார்கள். மிச்சமிருக்கும் 51.2% நகரங்களுக்குப் போனார்கள். அதில் 17.3% பேர் சிறுநகரங்களுக்கும் 29.5% பேர் சிறிய மற்றும் நடுத்தர ஊர்களுக்கும் போனார்கள். 3.8% மட்டும் தான் பெருநகரங்களுக்கும், அதையும் விடச் சிறு அளவே ஆன 0.6% பேர் வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கிறார்கள். இடம்பெயர்ந்தோரின் மொத்த எண்ணிக்கையில் 91% பேர் கிராமங்களிலிருந்தும்,  9% பேரூர்களிலிருந்தும் எனத் தெரிகிறது.
மேற்படி இடப்பெயர்வுகளில் இருந்து வெளி நாடு போகும் சீனர்கள் கூட்டு எண்ணிக்கையில் பல லட்சம் பேர் என்றாலும், மொத்த மக்கள் தொகையில் மிகச் சிறு சதவீதமே வெளிநாட்டுக்குப் போயிருப்பது தெரிகிறது. ஒரு காரணம், உலகப் பொருளாதாரங்களில் சமீபத்திய சில பத்தாண்டுகளில் சீனப் பொருளாதாரத்தின் அளவு வேறு எந்தப் பொருளாதாரமும் விரிவடையவில்லை, உலக மொழிகளைக் கற்கும் வாய்ப்பு அதிகமில்லாத கிராமத்துச் சீனர்கள் உலகப் பயணிகளாவது கடினம் என்பதோடு, உள்நாட்டை விட்டுப் போக அவர்களுக்கு அத்தனை அவசியம் இருக்கவில்லை.

பொதுவாகவே உலகெங்குமே இடப்பெயர்வு அருகாமை நிலங்களுக்கே இருக்கிறது என்பதும் இன்னொரு உண்மை நிலை. அதைத் தவிரவும் பல உலக நாடுகளின் இடப்பெயர்வுகளின் குணங்கள் சீனர்களின் இடப்பெயர்வுகளிலும் இருப்பதை நாம் காணலாம்.

உதாரணமாக உலகெங்கும் நடப்பது போலவே, இடம்பெயர்ந்து வேறு ஊருக்கு ஆண் மட்டும் போகும் குடும்பங்களே அதிகமாக சீனக் கிராமத்திலும் இருக்கின்றன. முன்பு, கிராமங்களின் விவசாய/பண்ணைத் தொழில்களில் ஈடுபடுவோரைத் தவிர்த்து,  தேவைக்கதிகமாக 13 கோடி (130 மில்லியன்) விவசாயத் தொழிலாளிகள் இருந்தார்கள். இந்நிலையில் நகரங்களில் தொழில்துறை வளர்ச்சியால் தொழிலாளர்களின் தேவை அதிகரித்தது. அங்கே கிடைக்கும் ஊதியம் நகரவாசிகள் பார்வையில் தான் குறைவு; கிராமத்தினருக்கோ பெருந்தொகை. ஐந்திலிருந்து பத்துக் கோடி பேர் (50-100 மில்லியன்) இடம்பெயர ஆரம்பித்தனர். 1994ல், ஷாங்காய் மற்றும் பேய்ஜிங்கிற்கு மூன்றேகால் கோடி பேர்கள் (3.3மில்லியன்) இடம்பெயர்ந்து வந்தனர். அப்போதைய கணக்குப்படி, நகரில் 25-30% பேர் வெளியூர் வாசிகள்.

மிகவும் ஏழ்மையிலிருக்கும் கிராம மக்கள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு இடம்பெயர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் வெளியூருக்கோ நகரத்துக்கோ போக பயணச்செலவுக்கான தொகை கூட அவர்களிடம் இருப்பதில்லை. மாதக்கணக்கில், வருடக்கணக்கில் விவசாயம், சிறு தொழில், சிறுபண்ணை போன்ற தொழில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பயணச்செலவுக்கானதைச் சேர்த்துக் கொண்ட பிறகோ, கடன் வாங்கிக் கொண்டோ வெளியூருக்கு வேலை வாய்ப்பும் அதிக வருவாயும் தேடிப் போவோர் தான் அதிகம். கடுங்குளிர், மழையில்லாததால் ஏற்படும் வறட்சி போன்றவற்றைச் சமாளிக்க மொத்த குடும்பமோ அல்லது குடும்பத்தலைவன் மட்டுமோ வேறூர் செல்வதுண்டு. இவை எல்லாமும் கூட உலகின் பல நாடுகளிலும் ஏற்படும் இடப் பெயர்வுகள் போன்றனவே.

நகரமயமாக்கல் காரணமாக ஏற்படும் இந்த சமூகப் புரட்சியை அரசு சாமர்த்தியமாகக் கையாள்கிறதா இல்லையா என்பதைக் கூறுவது சாத்தியமில்லை. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கலாசாரப் புரட்சியால் முன்பு நாட்டில் ஏற்படுத்த நினைத்த வளர்ச்சியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் சீனாவில் இன்று ஏற்படுத்துவோர் விவசாயிகள் என்று சொல்வதொன்றும் மிகையில்லை. தேசத்தின் தலையெழுத்தையே மாற்றுகிறார்கள். கிராமத்தின் 40% பேர் நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் இடம்பெயர்கிறார்கள். இந்த விகிதம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். பொதுவாகவே சீனாவில் கணக்கில் வராத பெரிய எண்ணிக்கை எல்லாவிதக் கணக்கெடுப்பிலும் இருப்பதுண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம். சீனாவின் கணக்கு வகைகளே அலாதியானவை என்பதையும் நாம் மறக்காமல் இருப்பது அவசியம். இரட்டைக் கணக்குதான் இந்தியருக்குத் தெரியும், சீனருக்கோ சந்தர்ப்பத்துக்கேற்றபடி பயன்படும் பல வகைக் கணக்குகள் பழகி இருக்கின்றன.

கிராம/சிறிய/நடுத்தர நகரங்களின் ஹூகோவ் (வசிப்பு அனுமதிச் சீட்டு) வைத்திருப்பதால் பெரிய பலன்களில்லை என்றெண்ணுவோர் பெரும்பான்மையினர். நகரங்களில் தான் கவர்ச்சியான ஊதியங்கள் காத்திருப்பதால், இடம்பெயர நினைப்பவர்களில் நகர ஹூகோவையே அதிகபேர் விரும்புகிறார்கள். கிராமங்களையும் கிராமத்தினரையும் நகரங்களில் இழிவாகப் பார்ப்போர் தான் அதிகம் பேர். கிராமம் என்றால் அழுக்கும் வறுமை நிறைந்தது, வாழத்தகுதியற்றது என்ற பொதுப்புத்தி நகரங்களில் நிலவுகிறது. பேய்ஜிங் நகரவாசிகள் கிராமத்தினரைப் பார்க்கும் பார்வையில் அருவருப்பும் ஏளனமும் நிறைந்திருக்கும். தொழிலாளிகள் என்றென்றைக்கும் இரண்டாவது குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். பள்ளிகள், பள்ளியாசிரியர்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவர்கள் என்று எல்லாமே கிராமப்புறத்தில் தரந்தாழ்ந்திருக்கும் என்பதே பொதுக்கருத்து. உண்மை நிலவரமும் அதுதான். உள்ளடங்கிய ஊர்களில் பணிபுரியும் பெரும்பாலான அதிகாரிகள் நிதியையும் அதிகாரத்தையும் தன்னலத்துக்குப் பயன்படுத்துவது இதற்கு முக்கிய காரணம்.

சமவெளிகளில் இருக்கும் கிராமங்கள் மலைச்சரிவுவெளிகளில் இருக்கும் கிராமங்களை விடப் பெரியதாகவும், மலைச்சரிவுவெளிக் கிராமங்கள் மலைக் கிராமங்களை விடப் பெரியதாகவும் இருக்கின்றன. கிராமங்களில் முறையே 189-755, 130-528, 114-458 குடும்பங்கள் சராசரியாக இருக்கின்றன.

பேய்ஜிங்கிலிருந்து தென் மேற்கில் இரண்டு மணிநேர விமானப் பயணதூரத்தில் இருக்கும் கிராமம் நிங்ஸியா. 17% பேர் ‘ஹுய்’ என்றறியப்பெறும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கே இருக்கும் விவசாயிகள் இரண்டாண்டுகளாக பெரும் வறட்சியால் துன்புறுகின்றனர். வறட்சியால் விவசாயமே இல்லை. “அரசாங்கத்தின் பொருளியல் கொள்கையால் நகரங்களில் உழைக்க நாங்கள் எங்கள் இளைஞர்களை அனுப்பினோம். அதனால் சில குடும்பங்கள் பிழைக்கின்றன என்பது உண்மை தான். ஆனால், இங்கே விடப்பட்டிருக்கும் எங்களைப் போன்றோருக்கு அரசாங்கம் செய்ததென்ன? எங்க வறுமைக்கு என்ன தான் வழி?”, என வருந்துகிறார்கள் இங்கிருக்கும் எளிய மக்கள்.

“சீனாவின் ஆக தரித்திரம் பிடித்த 700 கிராமங்களுள் இதுவும் ஒன்று,” என்று சொல்கிறார் மலைக் கிராமங்களுள் ஒன்றான நிங்ஸியாவின் வறுமை ஒழிப்புத் துறை முன்னாள் அதிகாரி தாவ் ஷான் யாவ், “குடிநீர் கூட இல்லை அம்மக்களுக்கு. மழை பெய்தால், அந்நீரைச் சேகரித்து வைத்துக் கொள்வர். மழையின்றிக் காய்ந்தாலோ 10 கிலோமீட்டர் போய் தான் தண்ணீர் சுமந்தெடுத்துக் கொண்டு வரவேண்டும். வாழ்க்கை மிகக் கடினம் இங்கே,” என்று கூறுகிறார். கல்வி கற்பிப்பது, கிராமத்தினரை ஏழ்மையிலிருந்து மீட்பது ஆகிய இரட்டைப் பணியில் அமர்த்தப்பட்ட தாவ் ஷான் யாவ் உள்ளூர் பள்ளியில் வேலை செய்கிறார். 2 வருடத்திற்குள் மூன்றில் ஒருவரை ஏழ்மையிலிருந்து வெளியேற்றுவது என்பதே போடப்பட்ட திட்டம். இதற்காக 270 கிராமங்களில் விவசாய உற்பத்தியைப் பெருக்க குடியானவர்களுக்கு உதவுகிறார்கள். தாவ் ஷான் யாவ் ஒரு மில்லியன் யுவானுக்கு விண்ணப்பித்துள்ளார். கிராமத்தின் வறட்சியின் அளவைப் பார்த்தால் இது ஒரு தொகையே அல்ல என்று கூறுகிறார். இடப்பெயர்வு தான் விவசாயிகளுக்கான விடிவுகாலம் என்று சொல்கிறார்.

“இந்த கிராமத்துல இருக்கற ஹுய் மக்கள் மற்ற ஆட்களோட அதிகம் ஒட்ட மாட்டாங்க. கல்விக்கும் முக்கியத்துவம் தர்றதில்ல. அதுவும் பெண்கல்விக்குக் கொஞ்சங்கூட கொடுக்கறதில்ல,” என்று கூறும் இவர், “நாங்களும் கல்விக்கும் பெண்கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கச் சொல்லி வற்புறுத்திட்டே தான் இருக்கோம்,” என்று முடித்தார். தேசத்தின் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை கிராம மக்கள் அனுபவிக்கவில்லை என்று சொல்வது போதாது; பொருந்தாது. ஏனெனில், இவர்கள் ஒரு நூற்றாண்டு பின் தங்கியிருக்கிறார்கள்.

இன்னும் கொஞ்ச தூரம் குறுகிய சாலையில் நடந்தால் ஸியாங்ஜுங் என்ற இன்னொரு ஏழை கிராமம் வரும். 18000 பேர் வாழும் இக்கிராமத்தில் கிட்டத்தட்ட அனைவரும் தாமே உருவாக்கிய குகைகளில் வசிக்கிறார்கள். எல்லோருமே விவசாயக் குடிகள். சுமார் 500 பேர் கிராமத்துக்கு வெளியே சில மாதங்களேனும் வேலை செய்யப் போய்விடுகிறார்கள். மழையில்லாமல் விதைக்க வேண்டிய காலத்தில் இவர்கள் நிலை மிகப் பரிதாபம். “அரசாங்கம் கொடுக்கும் சொற்ப உதவித் தொகையில் தான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறோம். அதுவுமில்லாவிட்டால் சாவு தான்,” என்று சொல்கிறார் ஓரு முதியவர். இன்னொருவரோ, “எனக்கும் நகரத்துக்குப் போக ஆசை தான். ஆனால், எனக்கு வயதாகி விட்டதே. அங்கே போய் என்ன வேலை செய்வேன் நான்?” என்று கேட்கிறார்.

“வேற ஊருக்கும் நகருக்கும் போறது தான் இப்போதைய போக்கு. அதத் தடுக்கவும் முடியறதில்ல,” என்கிறார் இந்த முன்னாள் அதிகாரி. அப்படிப் போவது எல்லோருக்கும் சரி வருவதில்லை. மாவ் யூ பா என்ற விவசாயி வயற்காட்டுக்குள் இருக்கும் குகைக்குள் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசிக்கிறார். வீட்டுக்குள் 19 ஆம் நூற்றாண்டு பாணியில் அமைந்த அடுப்பும், புகை வெளியேற வாசற்கதவில் நீட்டியிருக்கும் குழலும், மண்ணால் அமைக்கப்பட்ட படுக்கை மேடையும் இருக்கின்றன. ஏழைகளிலும் ஏழைகளாக வாழும் குடும்பங்களுள் ஒன்று. அந்தக் குடும்பத்தலைவி, “பிறந்ததுலயிருந்து இங்க தான் வாழறேன். எப்பயுமே இப்டி தான்,” என்று பொதுவாகச் சொல்கிறாரே தவிர வெளியுலகம் தெரியாததால் ஒப்பிட்டு நோக்கக் கூடிய அறிவு இல்லை. “பொருளாதார முன்னேற்றமா? அப்டின்னா என்ன?” என்று கேட்கும் அப்பாவிகள், மாதாமாதம் கிடைக்கும் 165 யுவான் (சுமார் 1142 ரூபாய்கள்) அரசாங்க உதவித் தொகையை எண்ணி எண்ணிச் செலவு செய்து உயிர் வாழ்கின்றனர். “பணம் சம்பாதிக்கணும்னா நா வெளியூர் போகணும். ஆனா, நா போயிட்டா என் குடும்பம் ரொம்பத் தவிக்கும். அதனால, நா இங்கயே இருக்கேன்,” என்கிறார் மாவ் யூ பா. “எங்க மகனுக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கு. இன்னொரு மகனுக்கு எலும்பு ஒடஞ்சிருக்கு. இப்படியிருக்கும் போது நா எப்டி நகரத்துக்குப் போறது?”

இவ்வட்டாரத்தில் இருக்கும் மலைகளில் மிக உயர்தர நிலக்கரி உள்ளிட்ட இயற்கை வளங்கள் பெருமளவில் இருப்பதால் அவற்றையும் அரசு கிராமவளர்ச்சி திட்ட நோக்கில் ஆராய்கிறது. மஞ்சள் ஆற்றுக்கு மேற்கில் நீரைத் திருப்பி விடும் பணியும் தொடர்ந்து நடை பெறுகிறது. நிங்ஸியா உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் பயனடைவிருக்கின்றன. அப்படிப் பயன் பெற்ற ஒரு கிராமம் தான் மே நீ யின். இது உருவாக்கப்பட்ட கிராமம். 20 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே அப்படியொரு கிராமமே இருக்கவில்லை. ஆற்றிலிருந்து திருப்பிவிடப்பட்டு கால்வாய்கள் மூலம் இன்றைக்கு நல்ல நீர்ப்பாசனம் கிடைத்திருப்பதால் செழிப்பாக இருக்கிறது. “இதுபோலத் தான் கிராமங்களில் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இடப்பெயர்வு என்ற பெயரில் வரும் போது மொத்த கிராமத்தையும் வேறிடம் மாற்றிவிடலாம்,” என்கிறார் தாவ் ஷான் யாவ். ஆனால், அப்படிச் செய்தாலும் பழைய ஊருக்கும் புது கிராமத்துக்கும் மாறிமாறி மக்கள் அலைகிறார்கள். சொந்த ஊர் மீதான பற்று மிக அதிகமாக இருக்கிறதால், புது இடத்தில் நிரந்தரமாக அவர்களை இருத்துவது பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது. நீர்ப்பாசனம் பெறும் கிராமங்களுக்கிடையில் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய இடப்பெயர்வுகளை அரசாங்கம் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.

பெரிய வல்லரசாக, உலகப் பொருளாதாரத் தலைமை நாடாக உருவாகும் கனவுகளுடன் சீனா படு வேகமாக தொழிற்துறையை நகரங்களில் முடுக்கி விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ஏராளமான கிராமப்பகுதியினர் இந்த ஓட்டத்தில் ஒட்டாமல் பின் தங்கியிருப்பது மிகவும் முரண்பட்டதாகவே தோன்றுகிறது. கிராமத்திலிருக்கும் சிறார்கள் இப்போது கலவரங்கொள்ளவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே ஓட்டத்தில் பங்கேற்பதா அல்லது ஏழ்மையைத் தேர்ந்தெடுப்பதா என்று யோசிக்க வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்படுவர். கிராமங்களை உற்று நோக்கும் ஒருவருக்கு ஒலிம்பிக்ஸில் சீனா காட்டிய நேர்த்தி, பளபளப்புகள் எல்லாமே பொருளற்ற அபத்தமாகத் தோன்றக்கூடும்.

நகரங்களில் கொள்ளை, கொலை, குண்டர் கும்பலின் தொல்லைகள் போன்றவற்றைச் சமாளிக்க துணிச்சல் இல்லாமல் கிராமத்துக்கே திரும்புவோரும் இருக்கிறார்கள். அதே சமயம், அவற்றை எதிர்கொண்டு சமாளித்து பணம் சேர்ப்பதையே குறியாகக் கொண்டு நகரில் வாழ்வோரும் உண்டு. மில்லியன் கணக்கில் விவசாயிகள் வேலை தேடி வெளியேறி வேறு ஊருக்குப் போகும் போது சட்டவிரோதமாகவே அதிகம் போகிறார்கள்.

சீனா குடும்ப அடிப்படையிலான சமூகத்தைக் கொண்ட நாடு. சமீபத்தில் தான் பொருளாதாரத் தேடல் குடும்பப் பிணைப்புகளைப் பின்னுக்குத் தள்ளி வருகிறது. நகரமயமாக்கலையும், மேலைக்கலாசாரத்தையும் பின்பற்றும் சீனர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைபிடித்து வந்த குடும்பநெறிகளை முற்றிலும் துறந்து விடமுடியாமல் தத்தளிக்கிறார்கள். நகரங்களுக்குப் போய் சம்பாதித்து, காசு பணத்தின் ருசியை அறிய ஆரம்பித்து விட்டனர். வறுமையிலும், பட்டினியிலும் இருந்த காலத்திலும் கிராமத்தினருக்கு இல்லாதிருந்த செல்வ செழிப்புகளுக்கான விழைவு இன்றைக்கு மிகவும் கூடியுள்ளது. “இப்பல்லாம் குடும்பம், உணர்வுகள் போன்றவற்றை விட எங்க மக்களுக்கு பணங்காசு தான் முக்கியமாயிருச்சு,” என்று கிராம முதியோர் அங்கலாய்க்கிறார்கள்.

நகரங்களுக்கு இடம்பெயரும் கிராமத்தினரில் பலர் சொந்த ஊர் திரும்பத்தான் நினைக்கிறார்கள். சொந்த ஊரில் விட்டு விட்டு வரும் துண்டு நிலத்திலேயே தான் மனமெல்லாம் இருக்கும். ஆனால், பொருளாதார மேம்பாட்டுக்காக அவர்கள் மேலும் உழைக்கவும், ஈட்டவுமே செய்கிறார்கள். வேலை செய்யும் ஊரில் விண்ணப்பித்துப் பெறும் வசிப்புரிமை, பின்னாளில் கிடைக்கக்கூடிய ஓய்வூதியம் போன்றவையும் கிராமத்திற்குத் திரும்பவிடாமல் அவர்களை நகரங்களிலேயே வைத்திருக்கின்றன. சொந்த ஊரில் நல்ல வீடு, வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் என்று பலவசதிகளைச் செய்து கொண்டு கிராமத்துக்கும் நகரத்துக்குமாக அலைகிறார்கள். அவற்றையெல்லாம் அனுபவிப்பது குடும்பத்தினரோ உறவினரோ தான். மண் வீடுகளின் கூட்டத்தில் இவர்கள் கட்டும் சிமெண்ட் வீடுகள் தனித்துத் தெரிகின்றன.

சின்ன பெட்டிக்கடை, பலசரக்குக் கடை, துணிக்கடை என்று வைக்கத் தேவையானதை மட்டும் நகரத்தில் கிடைக்கும் ஊதியத்தின் மூலம் சேர்த்துக் கொண்டு கிராமத்துக்குத் திரும்பிவிடுவோரும் இருக்கிறார்கள். நீண்ட காலமாக பேய்ஜிங்கில் வீட்டுவேலை செய்து மாதம் சுமார் 1000 யுவான் (சுமார் 6,900 ரூபாய்கள்) சம்பாதிக்கும் பெண்மணி தன் மகனுடைய திருமணச் செலவுக்கும் புதிய விளைநிலம் வாங்கவும் சேர்த்து விட்டார். நவீனக் கழிவறை வசதியுடன் வீட்டையும் கட்டி விட்டார். காசு சேர்ப்பதற்காகப் போன்றவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட செலவிடுவதில்லை. காசு சேர்ப்பதொன்றையே குறியாகக் கொண்டு கடுமையாக உழைக்கிறார்கள். துணிமணி போன்ற தேவையானதை கிராமத்திலிருந்தே வாங்கி வந்து விடுகிறார்கள். சேர்த்த பணத்தைப் பாதுகாக்கவும் இவர்கள் பற்பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். உழைப்பாளிகளில் சில அரிய அதிபுத்திசாலிகள் உண்டு. கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை கிராமத்தில் சிறுதொழில்களில் முதலீடு செய்து கிராமத்தில் தாமே சிலருக்கு வேலை கொடுத்து, பணம் பெருகுவதைத் திருப்தியுடன்
காண்கிறார்கள். நகரத்தில் தாம் கற்ற திறன்களை உபயோகிக்கிறார்கள். திறன்களை மட்டுமா? தொழிலாளர்களின் மலிவான உழைப்பைச் சுரண்டும் வேலையையும் தான்.

பக்கத்து வீட்டுக்காரர் வேறு ஊருக்கு வேலை தேடிப்போகும் போது, அடுத்த வீட்டுக்காரர் இடம்பெயரும் சாத்தியம் 1.1% கூடுகிறதாம். அதைக் காணும் அதே கிராமத்தின் இன்னொரு விவசாயி கிராமத்தை விட்டு வேலைவாய்ப்புக்குக் கிளம்பும் வாய்ப்பும் 0.727% கூடுகிறது. ஒருவரின் வயது போன்ற நீண்டகால மாற்றங்களைக் கணக்கில் எடுக்காவிட்டால், முதலாண்டில் 1% இடம்பெயர்வோர் இருக்கும் கிராமத்தில் ஐந்தாம் ஆண்டில் 6% ஆகக் கூடி, பதினோராம் ஆண்டில் 60% ஆக உயர்கிறது.
கிராமத்தில் அண்டை அயலில் நடப்பதைக் கூர்ந்து கவனிப்பதும் அதில் தன்னைப் பொருத்திக் கொண்டு முயற்சிகளில் இறங்குவதும் மிகவும் சகஜம். தனக்குப் பிறக்கும் முதல் பிள்ளை ஆணா பெண்ணா, அண்டை வீட்டுக்காருக்குப் பிறப்பது ஆணா பெண்ணா என்று ஒப்பிட்டுப் பார்க்கும் குணமும் இவ்வெளிய மக்களிடம் இருக்கிறது. அவர்களுக்கு இரட்டைப்பிள்ளை பிறந்திருக்கிறதே, நமக்கும் பிறக்குமா என்று ஆசைப்படுவோரும் கோவிலுக்குப் போய் வேண்டிக் கொள்வோரும் உளர். இதற்கெல்லாம் இரண்டு காரணங்களுண்டு. சீனாவின் ஒரேயொரு குழந்தை சட்டம். இன்னொன்று அவர்களில் ஆழமாகப் படிந்திருக்கும் ‘ஆண் வாரிசு’க்குக் கொடுக்கும் முக்கியத்துவம். குழந்தை ஆணா, பெண்ணா என்று சோதித்து பெண் என்று தெரிந்தால் கருக்கலைப்பு செய்கிறார்கள் என்று அதைத் தடுக்கும் பொருட்டு கிராமத்தினர் இரண்டாவது குழந்தை பெற அரசு அனுமதிக்கிறது.

கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து சம்பாதிக்கும் ஒருவரைப் பார்க்கும் மற்ற கிராமத்தினரும் அதே போலச் சம்பாதித்து பொருளாதாரத்தில் உயர்வடையவே நினைக்கிறார்கள். அவரிடம் போய் எந்த நகரில் எந்த மாதிரி வேலை கிடைக்கும், ஊதியமென்ன, என்னையும் கூட்டிக்கொண்டு போகிறாயா என்று கேட்கிறார்கள். அவர் திரும்பிப் போகும் போது அவருடனோ அல்லது தானே தனியாகப் போய் நகரில் அவருடன் இணைந்துகொள்வதோ செய்கிறார்கள். கிராமத்திலிருந்து போகும் விவசாயத் தொழிலாளிகள் ஒரே நகரத்தின் ஒரே வட்டாரத்தில் குவிகிறார்கள். இது போன்ற கூட்டு இடப்பெயர்வுகள் தான் தற்காலத்தில் நகரங்களில் ஏற்பட்டு வரும் இடநெருக்கடி போன்ற பல்வேறு நகரம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் மூலகாரணமாக இருக்கிறது என்று சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள். கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் நிகழும் இடப்பெயர்வுகளால் சில பாதைகளில் காரணமே இல்லாமல் ஏற்படும் அதிக போக்குவரத்து நெரிசல் போன்றவற்றுக்கும் கூட்டு இடப்பெயர்வுகளே பெரிய காரணமாகின்றன. இடம்பெயர்ந்து நகரங்களுக்கும் பேரூர்களுக்கும் போவோரில் பெரும்பாலோர் ஆண்கள். அதில் படித்தவர்களும் அடங்குவர். விவசாயத் தொழிலாளிகளே அவர்களை விட அதிகம். கிராமங்களில் விடப்படும் பெரும்பகுதியினர் முதியோர், பிள்ளைகள் மற்றும் பெண்கள். இதனால், தேசத்தின் ஒட்டு மொத்த விவசாயம் சார்ந்த துறைகளில் பாதிப்புகள் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. எதிர்காலத்தில், மேலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசு மிக அஞ்சுகிறது.

கிராமத்தில், விவசாயம் தவிர குழந்தை வளர்ப்பு, கல்வி, முதியோர் பராமரிப்பு ஆகியவற்றிலும் குழப்பங்களே அதிகரிக்கின்றன. கூட்டம் கூட்டமாக இடம்பெயர்வதால் குறிப்பிட்ட கிராமத்துக்கும் நகரத்துக்குமான தொடர்பும் பந்தமும் வலுப்பெறுகின்றன. உதாரணத்துக்கு, சமீபத்தில் ஏற்பட்ட உலகப்பொருளாதார நெருக்கடியைச் சொல்லலாம். ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகளில் மிக அதிகமாக வேலைக்கமர்ந்திருந்த கிராமத்தினர் பாதிக்கப்பட்டனர். மேற்குலகின் இறக்குமதி குறைந்து தொழிற்சாலைகள் மூடப்பட்ட போது வேலையில்லாதோர் எண்ணிக்கை மிகக் கூடியது. உள்ளடங்கிய ஊர்கள் தான் மிக அதிகமாக அடிவாங்கின. இது போன்ற பாதிப்பு கூட்டாக இடம்பெயர்வதால், கிராமத்தையே முழுமையாகத் தாக்குகிறது.
கூட்டு இடப்பெயர்வுகளால் கிராமத்துக்கு வேறு பாதகங்களும் உண்டு. இளையோர் நகரங்களுக்குப் போய்விட கிராமத்தில் மிச்சமிருக்கும் விவசாயிகள் நடு வயது அல்லது முதுமையடைந்தோர் மட்டுமே. ஆகவே, விவசாயத்துறை கடுமையாகவே பாதிக்கப்படுகிறது. பள்ளிக்குப் போவோர் குறைகின்றனர். பள்ளிக்குப் போகாமல் உடலுழைப்பை மூலதனமாக்கி மிகச்சிறு வயதிலேயே தகப்பனுடன் நகருக்குப் போய் உழைக்கும் சிறுவர்கள் கூடிப் போவதால், தொடக்கப்பள்ளிகள் மூடப் படுகின்றன. விவசாயத் துறைக்குக் கிடைக்க வேண்டிய உடலுழைப்பும் கிடைப்பதில்லை. அத்துறையினரின் ‘இயற்கை’ குறித்த அறிவு அடுத்த தலைமுறைக்குப் போவதும் நடப்பதில்லை, சமூகமே பல தலைமுறையாக உழைப்பில், வாழ்வில் சம்பாதித்த அரிய தொழிலறிவு அழிகிறது. விவசாயப் பொருட்களின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படுகிறது. வானிலை மாற்றங்களால் விவசாயத்துறை பாதிக்கப்படும் போது பிழைப்புக்காக நகரங்களையும் தொழிற்சாலைகளையும் நோக்கிய இடப்பெயர்கள் அதிகரிக்கின்றன. அப்போதும், தேசிய அளவில் விவசாயத் துறை தான் பாதிக்கப் படுகின்றது. கிராமத்தில் ஆண்பால் பெண்பால் விகிதமும் மாறுகிறது.

கிராமத்திலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை எப்போதுமே சீராக அமைவதில்லை. இன்னும் சொல்லப்போனால், கிராமத்தில் இருக்கும் மோசமான சாலைகள், கல்வி வசதியில்லாமை, வளங்களின் போதாமை ஆகிய பலவும் குடும்ப இடப்பெயர்வுகளைக் கொணர்கின்றன. நல்ல கல்வி வசதியும், சிறப்பான சாலைகளும் உள்ள கிராமங்களில், குடும்பத்தை விட்டுவிட்டு ஆண்கள் மட்டுமே போகின்றனர். வருடங்கள் போகப் போக குடும்பத்துடன் கிராமத்தை விட்டுக் கிளம்புவோர் அதிகரித்து வருகின்றனர். இது கிராமத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றாலும், இப்படி குடும்பத்துடன் இடம்பெயர்வோர் நிலை போகும் ஊர்களில் கொஞ்சம் பரவாயில்லை. வாலிபர்கள் எல்லாம் வெளியேறி விடுவதால், இளம்பெண்கள் அதிகமாக இருக்க திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க நினைப்போர் வெளியிடங்களில் தான் தேட வேண்டியுள்ளது. அநியாயத்துக்கு எதிராக என்று அவர்கள் சொல்கின்றனர்.

நகரங்களிலும் பெருநகரங்களிலும் கற்ற திறன்களை கிராமத்துக்குக் கடத்திக் கொண்டு போய் சொந்த ஊர்களின் வளர்ச்சிக்குத் துணை புரிவார்கள் என்று நம்பப்பட்ட இளைய சமுதாயம் கூடவே வேண்டாவதற்றையெல்லாம் கொண்டு வருகிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் போன்ற பழமையையும் பண்பாட்டையும் மறந்தவர்களாகவும், மறுப்பவர்களாகவும் திரும்பி வருகிறார்கள் என்பது மூத்த தலைமுறையின் முக்கிய அக்கறை. குடும்ப உறுப்பினர்களுக்கிடையே புதிய வகையான கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

கிராமத்தில் ஒருவரது பொருளாதாரத் திட்டமோ செயலோ மற்றவரைப் பாதிப்பதில்லை. ஒரே போன்ற இயல்புகள் கொண்டவர்களோ அல்லது ஒரே மாதிரியான கல்வி அல்லது வளர்ப்புப் பின்னணியோ கொண்டவர்கள் தான் இடம்பெயர்வின் போது ஒன்றாக ஒட்டிக் கொள்கிறார்கள். ஒருவர் கிராமத்திலிருந்து நகருக்குப் போகும் போது மற்ற கிராமத்தினரில் அதே போன்ற ஆசையை விதைக்கிறார்கள். கிராமத்துக்கு ஒரு விதத்தில் இது நல்லது தான். இது போன்ற கூட்டு இடப்பெயர்வுக்கு கிராமத்தினரின் இணக்கமான நெருக்கமான உறவுகளே காரணமாகின்றன.

அந்த நெருங்கிய பந்தப் பின்னல் தான் இடப்பெயர்வு தொடர்பான தகவல்களும் வழிமுறைகளும் எல்லோராலும் அறியப்பட்டு அதனால் கிராமமே காலியாகும் அளவில் எல்லோரும் நகரை நோக்கிப் போகிறார்களா, அல்லது ஒருவரையொருவர் பார்த்து தானும் பொருளாதார நிலைத் தன்மையை அடைய வேண்டும் என்ற ஆர்வம் தான் பெருகி வருகிறதா என்பது ஆய்வுக்குரியது. இரண்டுமே தான் என்பது சில பேர் கருத்து. பின்னதை விட முன்னதே அதிக காரணமாகிறதென்பதும் இவர்களது கருத்து. ஒரே நகருக்கு/தொழிற்சாலைக்குப் போகும் அதிகமான ஆட்கள் ஒரே மாதிரியான வேலையில் அமர்கிறார்கள். சீனாவில் உள்ளடங்கிய கிராமங்களிலிருந்து வெளியேறிப் பயணப்படுவதும், வேலைவாய்ப்புத் தகவல் அங்கே எட்டுவதும் உண்மையில் மிகவும் கடினம்.

ஓர் ஆய்வின் படி 17 மாகாணங்களில் இருக்கும் 2749 கிராமங்களில், தொலைதூரம் பயணம் செய்து வேறிடம் போய் உழைக்கக்கூடிய வலுவுள்ள தொழிலாளிகளே இல்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். எல்லோரும் நகரத்துக்குப் போயாயிற்று. நகரத்தில் உழைத்துக் காசு பார்த்த தொழிலாளிகளுக்கு மீண்டும் கிராமத்துக்குத் திரும்பவே பிடிப்பதில்லை. கிராமத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை ஊருக்கு குறுகியகாலப் பயணமாகப் போகும் போது இவர்கள் கூர்ந்து அவதானிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், தரத்தில் கிராமத்துப் பள்ளிக்கூடங்கள் நகரப் பள்ளிக்கூடங்களைக் காட்டிலும் பலபடிகள் கீழே இருக்கின்றன. அதே போலத் தான் மருத்துவச் சேவைகள். அரசுக்கும் கிராமத்தினருடன் சேர்ந்து பணியாற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவங்களுக்கும் கிராமத்தினரின் கூட்டு இடப்பெயர்வுகளை மேலும் நுட்பமாக ஆராய்ந்தறிந்தால் மேலும் சிறந்த கல்வி வாய்ப்பும் மற்றும் சாலை வசதிகளும் ஏற்பட்டு வறுமை ஒழியவும் கிராமங்கள் முன்னேறவும் ஏதுவாக இருக்கும் என்பதே இவர்கள் கருத்து.

கிராமத்துக்குப் போகும் பணம் சிறிதெனினும் பன்மடங்காகப் பெருகுகிறது. முன்பெல்லாம் வருடத்திற்கு 470 யுவான் (சுமார் 3250 ரூபாய்கள்) கொடுத்து கதிரடிக்கும் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து தான் வேலை செய்தார், மேய்ச்சுவான் என்ற பெண்மணியின் அப்பா. பேய்ஜிங்கில் வேலை செய்து மிங்குவாசுன் என்ற தனது கிராமத்திலிருக்கும் அப்பாவுக்கு 1562 யுவான் (சுமார் 10,800 ரூபாய்கள்) அனுப்பினார். அதை வைத்து தகப்பன் 551 யுவான்(சுமார் 3812 ரூபாய்கள்) கொடுத்து கதிரடிக்கும் இயந்திரம், செயற்கை உரம் மற்றும் நான்கு பன்றிக்குட்டிகள் வாங்கினார். பன்றிக்குட்டிகள் கொழுத்ததும் சந்திரப் புத்தாண்டின் போது விற்று 1056 யுவான் (7,300 ரூபாய்கள்) பெறுவார்.

விவசாயிகள் போதிய உற்பத்தியை எட்ட முடியாமல் எதிர்காலத்தில் பெரிய நெருக்கடி ஏற்படும் என்று மிங்குவாசுன் கிராமத்து கட்சி அதிகாரி மோ வென்கோ பயந்து கொண்டே தான் இருக்கிறார். மிளகாய் மில்லோ உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலையோ திறக்கத் திட்டமிட்டுள்ளார். மிளகாயும் உருளைக்கிழங்கும் தான் உள்ளூர் விவசாயிகள் வழக்கமாக பயிரிடும் பணப்பயிர்கள். “கிராமத்த விட்டுப் போனவங்க கண்டிப்பாத் திரும்பி வந்து இங்க முதலீடு செய்யணும். வியாபாரம் தொடங்கினா உள்ளூர் பொருட்களப் பதப்படுத்தி நாங்க கொடுக்கற எங்க பொருட்கள அவங்க வெளிய கூட கொண்டு போய் விக்கலாம்,” என்கிறார். கிராமத்தினது பொருளாதாரம் மேன்மையடைந்து கிராமமே முன்னேற வேண்டும் என்பது அவர் எண்ணம்.

குறைந்து வரும் விவசாயத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு வேறுமாதிரி நடவடிக்கைகளை எடுக்கிறது. ஃபூச்சோவ், ஃபுஜியான், ச்சாவ்தா போன்ற நவீன விவசாய நிறுவனங்களைத் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 21 நவீன பண்ணைகளில் 35 வித காய்கறிகளை விளைவிக்கிறார்கள். 7000 ஏக்கர் நிலப்பரப்பில் எட்டு விதமான நெல் வகைகளைப் பயிரிடுகிறார்கள். உலச் சந்தையில் போட்டியிடும் பொருட்டு தேசத்தின் சிறுசிறு பகுதிகளாக இருக்கும் விவசாயத் துறையைப் பெரியளவில் ஒருங்கிணைத்து முறையாகச் செய்வதன் துவக்கம் தான் இது என்கிறார்கள்.

உள்ளடங்கிய மிங்குவாசுன் போன்ற குக்கிராமங்களில் இது போன்ற முதலீடுகளை எதிர்பார்ப்பதற்கில்லை. ஆனால், கிராமத்தின் முக்கியச் சாலைப் பராமரிப்புகளே சரியாக இல்லை என்பது தான் கிராம அதிகாரிகளின் அக்கறை. அருகருகே இருக்கும் கிராமத்தினர் இன்றைக்கும் பொதுப்பேருந்து இல்லாததால் கால்நடையாகவே ஊர் விட்டு ஊர் செல்கின்றனர். சோனியான கழுதை அல்லது கோவேறு கழுதை மீதேறியும் செல்கிறார்கள். மோ வென்கோ, “சரியான சாலை இல்லாம எங்கள் கிராமம் எப்படித் தான் முன்னேறும்,” என்று கேட்கிறார்.

அக்கம்பக்கம் இருக்கும் மற்ற கிராமங்களுக்கோ மேலும் பெரிய பிரச்சனைகள். மத்திய அரசு ஒதுக்கும் நிதி போதாததால் உள்ளூர் அதிகாரிகள் அதிக வரி விதித்தனர். பதிலுக்கு எந்தச் சேவையும் தமக்குக் கிடைக்காததே விவசாயிகளின் அதிருப்திக்குக் காரணமானது. காலங்காலமாகச் சகித்துக் கொண்டே இருந்த விவசாயிகளிடையே சமீபத்தில் பெருங்கோபம் மூண்டது. சீனாவெங்கும் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்தபடியே இருக்கின்றன. அதிகாரிகளுக்கு எதிராகக் கொடிபிடிக்கும் விவசாயிகள், “உள்ளூர் அதிகாரிகளால ஒரு பயனுமில்ல. போராட்டத்தைத் தவிர வேற வழியில்ல எங்களுக்கு,” என்கிறார்கள். மத்திய அரசு சிற்றூர்களுக்கு ஒதுக்கும் நிதியை மேலும் குறைத்துக் கொண்டே வருவதால் இந்தப் போராட்டம் மேலும் வலுக்கும் என்றே முன்னுரைக்கிறார்கள். அது போன்ற போராட்ட மனநிலை இன்னும் மிங்குவாசுன் போன்ற கிராம விவசாயிகள் வரை பரவவில்லை.

ஜியாங்ஸியில் கிட்டத்தட்ட 10,000 விவசாயிகள் ஒன்று திரண்டு பல நாட்களுக்கு அலுவலகங்களையும் போலிஸ் கார்களையும் கொளுத்தினர். எந்தெந்த வரிகள் ஏற்கக்கூடியது, எதெல்லாம் ஏற்கக்கூடியதல்ல என்று அச்சிட்டு விநியோகிக்கப்பட்ட துண்டுத்தாளை போலிஸார் நிறுத்தி வைக்க முயன்றனர். நாட்டின் துணை அதிபர் விவசாயிகளின் பிரச்சனைகள் நன்கறிந்தவராகப் பரிந்து பேசிவருகிறார். கடந்த ஆண்டில் குவாங்தோங்கில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகளைக் கட்டுப்படுத்த காவல்படை வந்தது. போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று விவசாயிகள் குண்டடிபட்டு இறந்தனர். ஆனால், இறந்தவர்கள் எண்ணிக்கை உண்மையில் 20 என்று கிராமத்தினர் சொன்னார்கள்.

விவசாயிகள் கிளந்தெழுவது வறுமையினால் அல்ல, இடம்பெயர்ந்து உழைக்கும் தொழிலாளிகள் இப்போதெல்லாம் உரிமைகள் குறித்து நன்கறிந்து வைத்துள்ளனர். மற்ற தொழிலாளிகளுடன் பேசி அளவளாவி அறிவதும் நாளேடுகளில் செய்திகளை வாசித்தறிவதும் முன்பைவிட கூடி வருகிறது. மிகத் தீவிரமும் கடுமையுமான சொற்களில் ஏராளமான பிரிவுகள் கொண்டு இயற்றப்படும் தொழிலாளர் சட்டங்கள் அரிதாகவே பின்பற்றப்படுகின்றன என்றும் இவர்கள் அறிந்துகொள்ள ஆரம்பித்து விட்டனர். ருபோ என்ற தொழிலாளி, “பொதுவா சட்டங்கள் இங்க செல்லுபடியாறதில்ல. எனக்கு ஏதும் பிரச்சனைன்னா மொதல்ல எனக்கான உரிமைகள் என்னென்னன்னு கேட்டாச்சும் தெரிஞ்சுக்குவேன்,” என்கிறார். தொழிலாளிகள் கூடி சங்கம் அமைத்துத் தம்மைக் காத்துக் கொள்கிறார்கள். அரசின் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலே இருப்பது அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது.

கிராமத்தினருக்கும் தொழிற்கல்வி கொடுக்கப் போவதாக அறிவித்தது அரசு. வயலில் இறங்கி உழவில் ஈடுபடும் முன்னர் நான்காம் வகுப்பு மட்டுமே படித்து முடித்திருப்பவர் வென்ஜி. “கல்வியில்லாம நல்ல வேல கெடைக்கறதில்ல. எனக்கு இந்தத் தொழில் கல்வி கெடச்சா ரொம்ப சந்தோஷம் தான்,” என்கிறார். ஆனால், கிராமத் தொழிலாளிகளுக்கும் வழங்கப்படும் என்று சொல்லப்பட்ட வேலைப்பயிற்சித் திறன் திட்டம் பெரும்பாலும் நகரின் அரசு நிறுவனங்களில் வேலை இழந்து வெளியேறி வேறிடம் தேடுவோருக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. அதே போல, நாடு தழுவிய சமூகநலப் பாதுகாப்பு நகரங்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்படுகிறது. “கிராமங்களும் சிற்றூரும் ‘நாடு தழுவிய பின்னலி’ல் வராதா?” என்று பொருமும் எளியோர் அதிகரிக்கின்றனர்.

“காசிருந்தாவே போதும்,.. எல்லாத்தையும் சமாளிச்சிரலாம்,” என்கிறார் பேய்ஜிங்கில் உழைக்கும் விவசாயி. அரசின் வாக்குறுதிகளை நம்பாமல் கிராமத்திலிருந்து நகருக்குப் போன விவசாயச் சமூகம் தமக்கான பள்ளிகளையும் மருந்தகங்களையும் அமைக்க ஆரம்பித்து விட்டன. சட்டதிட்டங்களின் மூலம் இடம்பெயர்வோரைத் தடுக்கவும் ஒடுக்கவும் முயலும் கட்சியின் அதிகாரமும் பலமும் சிற்றூர்கள் மட்டுமின்றி எல்லா நகரங்களிலும் வரவரத் தேய்கிறதென்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

நாளாவட்டத்தில் தேசத்தின் தானிய உற்பத்தி போதாமல் போகுமோ என்ற பயம் அரசுக்கும் வந்திருக்கிறது. இதனால், குறைந்தது 120 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பை விளைச்சலுக்கென்றே ஒதுக்கியுள்ளது. அது குறைந்து விடாமல் பார்த்துக் கொள்வதே திட்டம். ஆனால், விளைச்சல் நிலத்தின் அளவுக்குள் நகரமயமாக்கல் தன் காலை வைக்கிறதோ என்ற சந்தேகமும் பயமும் முன்பே அதிகாரிகளுக்கு வந்துவிட்டது. 1959-1961 வரையில் சீனத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சம் ஏற்படுத்திய அதிர்வுகளின் தாக்கம் இன்னமும் இருப்பதால், தானிய உற்பத்தி குறைந்து நாட்டு மக்களுக்கு வேண்டிய தானியத்திற்கு இறக்குமதியை நம்ப வேண்டியிருந்தால் நாட்டின் பாதுகாப்புக்கே குந்தகம் வருமோ என்று அஞ்சுகிறார்கள் சீன வல்லுனர்கள். மனைகளின் விலை ஏறுவதைக் கட்டுப்படுத்தாமல், நிலம் விற்பதும் வாங்குவதும் எளிமைப்படுத்தப்பட்டால் விளை நிலங்களெல்லாம் மனைகளாகுமே என்பதும் மிக முக்கிய கவலை. எப்படியிருந்தாலும், நகர ஹூகோவ் இல்லாத ஆட்களுக்கு எந்தப் பலனுமில்லை. நகரவாசிகள் வேண்டுமானால் பயனடைவர்.

கடந்த சில பத்தாண்டுகளில் கிராம நகரவாசிகளிடையே நிலவி வரும் இறுக்கமும் இடைவெளியும் கூடுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, நகரையொட்டிய இடங்களில் இருக்கும் விளைநிலங்களுக்குப் போட்டி போடும் வீட்டுமனைத் தரகர்களும் மனைகளை வாங்கத் தயாராக இருக்கும் பணக்காரர்களினால் உயரும் மனைகளின் விலைகளும். இன்னொன்று, நகரம் நோக்கிய கிராம விவசாயிகளின் நகர்வு. கிராமத் தொழிலாளிகள் நகருக்குள் அடைகிறார்கள். நகரங்களோ கிராமங்களைச் சுற்றி வளைக்கப் பார்க்கின்றன. கிராமங்களும் நகரங்களும் ஒன்றையொன்று விழுங்கும் இந்தப் போக்கு மிக விநோதமானது.

இடம்பெயர்ந்து நகரில் உழைக்கும் விவசாயத் தொழிலாளிகள் பெற்றுக் கொண்டிருந்த ஒரே சலுகை என்றால் சொந்த கிராமத்தில் தமக்கென்று ஒரு துண்டு விளைநிலம். அதற்கும் வந்தது ஆபத்து. சீனாவில் பெரும்பாலும் நடப்பது கூட்டு விவசாயம் தான். ஆகவே, விவசாய நிலங்கள் கட்சியைச் சேர்ந்தது. கோப்புகளின் படி கிராமத்தைச் சுற்றியிருக்கும் நிலங்கள் கிராமத்தினருக்குச் சொந்தம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் துண்டு நிலம் கட்சியால் நீண்ட கால குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட அந்நிலத்துக்கு பெருமானம் பூஜ்யம். ஆனால், நகரங்கள் விரிவடையும் வேளையில், மனைகளாகும் விளைநிலங்களுக்குக் கிடைக்கும் விலை உயர்கிறது. தேவையும் கூடுகிறது.

மாதிரிக்கு, பேய்ஜிங்கிற்கு அருகில் இருக்கும் யாங்கே என்ற கிராமத்தைச் சொல்லலாம். நகர மையத்திலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் மிக அழகாக இருக்கும் இந்த கிராமம் பணக்காரர்களைக் கவரும் இடம். மாளிகைகள் கட்டிக்கொள்ளும் ஆசையில் அங்கே மனை வாங்க விரும்புவோர் அதிகரிக்கிறார்கள். உள்ளூர் அதிகாரிகளிடம் ஏழு மில்லியன் யுவான் கொடுத்து வாங்கினார் ஒரு சொத்துத் தரகர். கிராமத்தினரிடம் ஒன்றுமே கலந்து பேசாமலே விற்பனையும் முடிந்தது. விற்ற பணத்தில் விவசாயிகளுக்கு சல்லிக் காசு கூடக் கிடைக்கவில்லை. கிராமத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் இருந்த அந்நிலத்தில் அமெரிக்க பாணியில் பெரியபெரிய வீடுகள் கட்டப்பட்டன. இன்னும் ஆயிரக்கணக்கில் கட்டப்படவுமுள்ளன. ஒவ்வொரு வீடும் ஒரு மில்லியன் டாலர் (6478500 யுவான்- சுமார் நாலரை கோடி ரூபாய்கள்) பெருமானம்.

தமது நிலங்கள் எல்லாம் விற்கப்பட்டு பல மில்லியன்களுக்கு வீடுகள் அமைக்கப்பட்டு வருவதை கிராமத்தினர் தொடர்ந்து பார்த்துக் கொண்டே தான் வருகிறார்கள். வரிசை வரிசையாகச் சென்று கிராம அதிகாரியைச் சந்தித்துப் பேச முயல்கிறார்கள். குடும்பத்தையும் வீட்டையும் விட்டுவிட்டு நகரில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள் ஏமாற்றப்பட்டு வருவதை மெதுமெதுவாகத் தான் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். சட்ட அடிப்படையிலேயே திருத்தங்கள் வராவிட்டால் 700 மில்லியன் விவசாயிகளும் இப்போது போலவே தொடர்ந்து இரண்டாம் குடிமக்களாகவே இருக்கும் நிலை தான் தொடர்ந்தும் நீடிக்கிறது.
சற்றுக் கவனித்தால் இங்குள்ள நிறைய விவரங்களும், பிரச்சினைகளும் இந்திய விவசாயிகள், கிராம மக்களின் பிரச்சினைகளைப் போன்றவைதான். மக்கள் தேர்ந்தெடுக்கும் விடைகளும் அப்படியேதான் இருக்கின்றன. இந்தியாவில் அரசு உள்நாட்டு நகர்வுகளைத் தடுப்பதில்லை. நிலங்களும் அரசுடைமையும் இல்லை. ஆனால் இந்திய அரசியல் கட்சியின் பெரும் தலைகள், உள்ளூர் வட்ட மாவட்டங்கல் மக்களை நெருக்கி குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கிப் பெரும் விலைக்கு நகர வாசிகளுக்கு விற்கும் அநியாயம் என்னவோ சீனாவைப் போலத்தான். இங்கு ஓரளவு விவசாயிகள், மக்களின் போராட்டங்கள் எளிதில் வெடிக்கின்றன. அரசு ஏதேதோ செய்து அவற்றைச் சமாளிக்கப் பார்க்கிறது. சில நேரம் ஆளும் கட்சிகள் ஆட்சியிலிருந்து தேர்தல் மூலம் அகற்றப்படுகிறார்கள். சீனாவில் மக்களுக்கு கட்சியை அகற்றும் வாய்ப்பு கிட்ட இன்னும் ஒரு நூறாண்டுக்குக் கூட வாய்ப்பில்லை. அதனால் கட்சியாகப் பார்த்து அநீதியை நிறுத்தினால்தான் உண்டு.

(முற்றும்)