20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 12

போன்ட் அவென் பாணி (Pont-Aven School-1850s)

பிரான்ஸ் நாட்டின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் அட்லாண்டிக் கடலில் சங்கமிக்கிறது அவென் நதி. போன்ட் அவென் (Pont-aven) என்னும் பெயருடன் விளங்கும் அந்நிலப் பகுதி நாகரிகத்தின் பாதிப்புகளினின்றும் தப்பித்துத் தனது அழகு குலையாமல் இருந்தது. 1850 களிலிருந்து அதை நோக்கி பல ஓவியர்கள் பயணப்படத் தொடங்கினார்கள். கோடைகாலத்தில் நகரம் ஒதுக்கி, குறைந்த செலவில் அங்கு சென்று வாரக்கணக்கில் தங்கி மனம் கவர் இயற்கையெழிலை அவர்கள் ஓவியங்களாக்கினர். அதுவே பின்னாளில் ‘போன்ட் அவென் பாணி’ (Pont-aven school) என்று அழைக்கப்பட்டது.

1886 இல் ஓவியர் பௌல் கூகென் (Paul Gauguin) அங்கு முதல் முறையாகச் சென்றார். அங்கு சில மாதங்கள் தங்கி ஓவியங்கள் படைத்தார். மீண்டும் 1888இல் அவர் அங்கு சென்ற போது கிராமத்தின் முகம் வெகுவாக மாறிவிட்டிருந்தது. உல்லாசம் தேடி வரும் மக்களின் எண்ணிக்கை கூடிவிட்டிருந்தது. இடையூறு இன்றி ஓவியம் படைப்பது என்பது கடினமாக ஆகிவிட்ட நிலையில் அவர் அதற்குத் தோதாக வேறு இடம் தேடினார். 1889 இல் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் லைடா (Laita) நதி முகத் துவாரத்தில்  லெ போல்டு (Le Pouldu) என்னும் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். தனது ஓவிய நண்பர்களுடன் அங்கு பல மாதங்கள் தங்கி ஓவியங்கள் படைத்தார்.

அவருடைய பல ஓவிய நண்பர்களில் குறிப்பிடப்பட வேண்டியவர்களில் மூவரைப் பற்றிய சிறு அறிமுகம்:

ஈமில் பெர்னாஹ் (Émile Bernard )

ஓவியர் ஈமில் ஹென்ரி பெர்னாஹ் (Émile Henri Bernard) , கூகெனைச் சந்திந்தது 1888-89களில். அது போன்ட் அவெனில் நிகழ்ந்தது. அங்கு மலர்ந்த நட்பு லெ போல்டுவிலும் தொடர்ந்தது. இருவரும் ஒன்றாகவே ஓவியங்களைத் தீட்டினர். அதனால் பல சமயங்களில் அவற்றில் ‘கரு’ ஒன்றாகவே இருந்தது. ஒருவரை ஒருவர் மனரீதியில் பாதிக்கவும் செய்தனர். ‘சிம்பாலிஸம்’ (Symbolism) பாணிக்கு வித்திட்டவர்கள் இவர்களே.

மேயர் தெ ஹான் (Meyer de Haan)

மேயர் தெ ஹான் வசதியான பொருளாதாரப் பின்புலம் கொண்டவர். பெற்றோர் அளித்த பண உதவியுடன் அவருடைய சொந்த ஆலைகளிலிருந்தும் வந்த பணம் அவருக்கு பணத் தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கையைக் கொடுத்தது. ஓவியர் கூகெனுடனான சந்திப்பும் நட்பும் லெ போல்டு (Le Pouldu) விலும் தொடர்ந்தது. அவருடைய கலைமேதமையில் மயங்கி எப்போதும் கூகெனை நிழல் போலத் தொடர்ந்தார். அவருடைய அனைத்து செலவுகளையும் தான் ஏற்றுக் கொண்டார்.

பால் செரூசியேர் (Paul Serusier)

பால் செரூசியேர் மற்றொரு குறிப்பிடப்படவேண்டிய ஓவியர். பள்ளியில் சிறந்த மாணவனாக விளங்கி, மரபுவழியில் சிறந்த ஓவியங்களைப் படைத்த அவர் கூகெனை லெ போல்டு வில் சந்தித்தபின் அவருக்கு ஒரு புதிய உலகு புலப் பட்டது. தனது பாணியிலிருந்து முற்றிலுமாக மாறி கூகென் பாணியில் ஓவியங்கள் தீட்டினார். பின்னர் ‘போன்ட் அவென்’ பள்ளிக் குழுவுக்குத் தலைமை ஏற்றுச் செயற்பட்டார். பினாளில் ‘நபி’ (Nabis) பாணி இயக்கத்துக்கு அடிக்கோலியவரும் அவர்தான்.

அந்த இடம் (Pont-aven) இன்று ‘ஓவியர் குடியிருப்பு’ (Artist’s Colony) என்று குறிக்கப்படுகிறது. கலைவிரும்பிகளையும் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் நிலமாக விளங்குகிறது. ஒரு நுண்கலைப் பள்ளியும் அங்கு இயங்குகிறது. (Pont-Aven School of Contemporary Art)

ஸிம்போலிஸம் (Symbolism)

ரொமோன்டிஸிஸம் (Romanticism) என்னும்சிந்தனையிலிருந்து விரிவடைந்தது தான் ஸிம்போலிஸம் (Symbolism) சிந்தனையும் செயற்பாடும். அது இலக்கியத்தில் தொடங்கி ஓவியம், சிற்பம் போன்ற காட்சிவழிக் கலைகளிலும் பரவியது. ஆனால், இரண்டும் பயணித்த பாதை ஒன்றல்ல. படைப்பில் இயற்கையைப் பிரதி பலிப்பது (Naturalism), தத்ரூப அணுகல் (Realism) போன்றவற்றுக்கு எதிர் விளைவாகத் தோன்றிய ஒரு நிகழ்வு அது. ஸிம்போலிஸம் மனித வாழ்க்கையின் தன்மையை கூர்மைப்படுத்தி நமக்கு துரிதமாக வசப்படும் விதத்தில் தோற்றப்படுத்த முயன்றது. சிந்தனையில் சிறந்தது என்று சொல்லப்பட்ட, குறிக்கோள் சார்ந்த மனப் போக்கை அகற்றி, எளிமையும் உண்மையுமான மனவுணர்வை அங்கு அமர்த்த யத்தனித்தது.

இந்தவுத்தி இலக்கியத்திலும், ஓவியத்திலும் பெருந்தாக்கத்தை உண்டாக்கியது. கனவுகள், கற்பனைகள், ஆன்மீக-அமானுஷ்யம் சார்ந்த சிந்தனை கள் கூடிய படைப்புப்பாணி இரண்டிலும் விரைவாகப் பரவியது. அவை வெவ்வேறான அணுகுதலைப் பின்பற்றினாலும், பல தருணங்களில் ஒன்றை யொன்று பாதித்தன. 1880 களில் ஷார்ல் புத்லேயர் (Charles Baudelaire),  எட்கர் ஆலன் போ (Edgar Allen Poe) போன்ற எழுத்தாளர்களின் கற்பனை, ஓவியர்களுக்கு தமது படைப்பிற்கான கருப் பொருளைத் தேர்ந்தெடுக்க பேருதவியாக விளங்கியது. அவர்களது படைப்புக் கருப்பொருள் என்பது வலிந்து கொணரப்பட்ட குழப்பமாகவும், அந்தரங்கமானதாகவும், மற்றவருக்குப் புதிரானதாகவும், இருந்தது.

ஸிம்போலிஸம் சிந்தனையை பின்பற்றிய, ஆனால் ஒன்றையொன்று பிரதிபலிக்காத பல ஓவியக் குழுக்கள் அப்போது இயங்கிவந்தன. கலைஞர்கள் கருவூலம் போன்ற இதிகாசங்களிலிருந்து உருவகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் தமது கற்பனையைக் கலந்து, ஆத்மாவின் விழி மொழியாக கொணர்ந்தனர். மறைந்து கிடக்கும் சலனமற்ற உள்மன உலகைப்பற்றித் தமது படைப்புகளில் கூற முற்பட்டனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய குறியீடுகள் பெரும்பாலானோர் முன்னமேயே அறிந்தவையல்ல. பொதுவானதும் அல்ல. அவை படைப்பாளிக்கு மிகவும் நெருக்கமானதும், குழப்பமானதும், தெளிவற்றதுமான அந்தரங்கம்.

நசிவுக் கலை இயக்கம் (Decadent Movement)

மேற்கு ஐரோப்பாவிலும் குறிப்பாக பிரான்ஸிலும், இலக்கியம், கலை சார்ந்த புதிய சிந்தனையும் அதையொட்டிய படைப்புகளும் ‘ரொமான்டி-ஸிஸ’ச் சிந்தனையிலிருந்து நவீனத்துவம் நோக்கி நிகழ்ந்த பயணம் என்று வகைப்படுத்துகின்றனர் கலை வரலாற்று ஆவணக்காரர்கள். சிம்போலிஸ்ட் (Symbolist) இயக்கம் அடிக்கடி நசிவுக்கலை இயக்கத்துடன் (DECADENT MOVEMENT) குழப்பிக்கொள்ளப் பட்டுள்ளது. நசிவுக் கலை இயக்கம் என்னும் பெயரால் அதை அதன் எதிர்ப்பு சிந்தனாவாதிகள் இழிவுசெய்தனர். ஆனால் அந்த இழிவான சொல்லையே தங்களது அடையாளமாகப் பயன்படுத்திக் கொண்டனர் சிலர். என்றாலும், பல படைப்பாளிகள் தாங்கள் நசிவுக்கலை இயக்கத்துடன் தொடர்புப் படுத்தப்படுவதை விரும்பவில்லை. இவையிரண்டும் தத்தமது வளர்ச்சியில் ஒன்றுடன் ஒன்று குறுக்கிட்டாலும் அவற்றின் தனித்தன்மை என்பது எப்போதும் தெளிவானதாகவே காணக்கிடைத்தது.

பின்னாட்களில் இந்த சிந்தனை பல கலை இயக்கங்களுக்கு உந்து சக்தியாகப் பயன்பட்டது. பல படைப்பாளிகள் -குறிப்பாக ஓவியர்கள்- எக்ஸ்ப்ரஷனிஸம் பாணிக்கோ அல்லது அதன் தொடர்புடைய பாணிக்கோ நேரிடையாக நகர்ந்தனர்.  வாஸ்ஸிலி கன்டின்ஸ்கி (W.Kandinsky), கஸ்ஸிமிர் மாலேவிச் (Kazimir Melevich) இருவரும் அரூபப் பாணியில் புதுமைகளை நிகழ்த்தினர்.  குஸ்டாவ் க்ளிம்ட் (Gustav Klimt) போன்ற ஓவியர்களுக்கு ‘ஆஹ் நூவோ’ (Art Nouveau) பாணிப் படைப்பு உத்திகள் தோன்றக் காரணமாயிற்று. 1920 களில் இந்த சிந்தனைதான் சர்ரியலிஸம் என்னும் படைப்பு சிந்தனைக்குத் தளம் அமைக்க உதவியது.

லெ நபி (Le Nabis)
தட்டை வெளியில் வண்ணக்கோலம்.
(Post Impressionism- 1880-1900)

நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஓவியர்களும், கலை விமர்சகர்களும் ஒரு பெருங்குழப்பத்தில் சிக்கியிருந்தனர். 19 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதி போர்க் களத்திலேயே வீணாகிப்போனது. 18 ஆம் நூற்றாண்டின் கலை, இலக்கிய வளர்ச்சிக் குழு அங்கத்தினர்களும் இம்ப்ரஷனிஸம் (Impressionism) என்று அடையாளம் காணப்பட்ட பாணிப் படைப்புகளும் கலை ஆர்வலர் களுக்கு அன்னியமாகவே இருந்தன.

இன்று நாம் இம்ப்ரஷனிஸக் கடப்பு (Post Impressionism) என்று குறிப்பிடும் பாணிப் படைப்புகள் பார்வையாளரிடம் அதிர்ச்சியையும் வெறுப்பையும் உண்டாக்கின. அவற்றை மனநோயாளியின் வெளிப்பாடுகள் என்று விமர்சித்தனர். இன்று உலகம் போற்றும் ஓவியர்களான வான் காஃப் (Van Gogh), கூகென் (Gauguin), செசான் (Paul Cézanne) போன்றவர்களும் இதில் அடங்குவர். ஆயின், அவ்விதம் மனநோயாளி என்று குறிப்பிடப் பட்டவர்களின் பாதிப்புக்குள்ளான ஒரு ஓவியர் கூட்டம் இருக்கத்தான் செய்தது. இன்று அது பற்றி எங்கும் பேசப்படுவதில்லை என்றபோதிலும், அவர்கள்தான் நவீனபாணி ஓவியப் படைப்புக்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னாளையக் கலைஞர்களுக்கு முன்னோடிகள்.

1888 இல் ஜூலியன் அகாடமி (Julian Academy)* என்னும் தனியார் கலைப்பள்ளி மாணவன் பால் செருஸியே (Paul Serusier), பிரான்ஸ் நாட்டின் கடற்கரை நகரமான பிரிட்டனி (Brittany) யில் ஓவியர் பால் கூகென் (Paul Gauguin) ஐ சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது பாணி இளைஞனை வெகுவாகக் கவர்ந்தது. அவரிடம் அவன் பயிற்சியும் பெற்றான். அவர் இளைஞனை உள்ளக்கற்பனை வெளிப்படும் விதமாக ஓவியம் படைக்க உற்சாகப் படுத்தினார். தூய வண்ணங்களைப் பயன்படுத்தி ஓவியப்பரப்பை சீராகவும் அடர்த்தியாகவும் நிரப்பும் உத்தியையும் காட்டிக் கொடுத்தார். ஒரு காட்சியை நேரிடையாக, காணும் விதத்தில் படைப்பதினின்று விலகி, அக்காட்சியை மனத்தில் பதிந்து கொண்டு, பின்னர் ஓவியமாக்குவதின் சிறப்பையும் காட்டிக் கொடுத்தார். முப்பரிமாண அணுகல்களிலின்று விலகி இருபரிமாணம் கொண்டு உருவங்களில் படிமங்களை தோற்றுவித்துப் படைப்பது அவரது பாணியாக இருந்தது.

அதே ஆண்டு அக்டோபர் மாதம் அந்த இளைஞன் பாரிஸ் நகரம் திரும்பினான். ஓவியர் பால் கூகெனுடைய கவனிப்பில் தான் படைத்த நிலக் காட்சி ஓவியத்தை நண்பர்களுக்குக் காண்பித்தான். ப்வான் அவ் (Point Ave) என்னும் பகுதியில் ஒரு சுருட்டுப் பெட்டியின் மூடியில் எண்ணெய் வண்ணம் கொண்டு தீட்டப்பட்ட அது வழக்கமான இயற்கையை பிரதிபலிக்கும் பாணியில் இல்லாமல் கலைஞனின் கற்பனை வெளிப்பாடாக இருந்தது. அவனுடைய உற்சாகமான பேச்சு நண்பர்களிடையே புதிய விழிப்புணர்வை தோற்றுவித்தது. நண்பர்கள் பால் செருஸியேவின் யோசனைப்படி ஒரு குழுவைத் தொடங்கினர். குழுவுக்கு ‘நபி’ (Nabis) என்னும் பெயரைத் தெரிவு செய்தான் பால் செருஸியே. அது இறை தூதரைக் குறிக்கும் ஒரு ஹிப்ரு மொழிச் சொல். மாஹீஸ் டொனி (Maurice Denis), ப்யெர் பொன்னாஹ் (Pierre Bonnard), எடுவா உய்யாஹ் (Edouard Vuillard), மற்றும் ஆங்கிலேய ஓவியன் வால்டர் சிகெர்ட் (Walter Sickert) குழுவின் முதன்மை உறுப்பினர்கள். இருபதே வயது நிரம்பிய மாரிஸ் டெனி குழுவின் முதன்மைக் கோட்பாடுகளை விளக்குபவனாகத் திகழ்ந்தான். இலக்கிய இதழ்களுக்கு பல கலை கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதினான்.

அவர்கள் படைத்த ஓவியங்களில் இறை நம்பிக்கை கொண்ட ஆத்மபலம் வெளிப்பட்டது. தொன்மையான கிருஸ்துவ இறை நம்பிக்கை, புத்தமதத்தின் தாக்கம், சமூகம் விடுதலை அடைய அரசு அதிகாரத்தைக் களைந்து எறிய வேண்டும் என்னும் கொள்கை (Anarchism) போன்ற பார்வைகள் அவர்களிடம் இருந்தன. என்றாலும், அவர்களை ‘ஓவியத்தில் உருவங்களை எளிமைப் படுத்துவதும், வண்ணங்களைக் கொண்டாடுவதும்’ என்னும் பொது அணுகல் தொடர்ந்து ஒற்றுமையுடன் குழுவாக இயங்க உதவியது.

ஓவியத்துடன் நின்றுவிடாமல் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன் படும் பொருட்களை எளிய கலை அம்சம் கொண்டதாகக் கொடுக்க வேண்டும் என்னும் உந்துதலில் அவர்கள் செயற்பட்டனர். தங்கள் படைப்புத் தளத்தை விளம்பரச் சுவர் ஒட்டல்கள், நூதன உடுப்புகள், கண்ணாடி ஓவியங்கள் (Stained Glass) வண்ண நூல் கொண்டு கைகளால் உருவாக்கப்பட்ட ஓவியத் துணிகள் (Tapestry), இருக்கை, மேசை போன்ற பயன்பாட்டுப் பொருட்கள் (Furniture), மடக்கும் அமைப்புக் கொண்ட திரைத் தடுப்புகள், அரங்க அமைப்புகள், அலங்கார வடிவங்களை அறைகளின் உட்புறச் சுவர்களில் தீட்டுதல் என்று விரித்துக் கொண்டு சென்றனர். புதிய அச்சுக்கலை உத்தி கொண்டு ஜப்பான் நாட்டு மர அச்சுகளை நூதன விளம்பரப் பிரதிகள் செய்யப் பயன் படுத்தினார்கள். நூவொ (Nouveau) இயக்கத்துக்கு இணையாக சமகாலத்தில் தங்கள் சோதனைகளை மேற்கொண்டவர்கள் இவர்கள்.

1888 /1896 களுக்கு இடையிலான ஆண்டுகளில் தொடர்ந்து மாதம் ஒரு முறை இரவு உணவுடன் கூடிய சந்திப்பு அவர்களிடையே நிகழ்ந்தது. அந்த இரவுகளில் வெண்மையான நீண்ட அங்கியை அனைவரும் அணிந்துகொள்வது என்னும் ஒழுக்கம் கடைபிடிக்கப்பட்டது. சந்திப்பின் தொடக்க நிகழ்வாக, கூட்டத்தை வழிநடத்துபவர் ஒரு செங்கோல் போன்ற அமைப்பைக் கொண்ட தடியை உயர்த்தி, தேவாலய பாதிரி போன்ற பாவனையில், ‘ஓசைகள், வண்ணங்கள் மற்றும் சொற்களாகியவை ஒரு அதீத வலிமைகொண்டதாக, சொற்களில் வெளிப்படும் பொருளைத் தாண்டிய தளத்தில் உலாவுகின்றன’ (‘Sounds, colours and words have a miraculously expressive power beyond all represntation and even beyond the literal meaning of the words’) என்று உரத்தகுரலில் கூறுவார். உறுப்பினர் அனைவரும் தங்கள் அண்மைப் படைப்பு ஒன்றை அனைவரின் பார்வைக்கு வைப்பதும் அவை பற்றின கருத்துப் பரிமாறல்களும் சர்ச்சைகளும் நிகழ்ந்தன. அரங்கம், இலக்கியம், நாட்டியம், சமூக விழிப்புணர்வு சார்ந்த கருத்துப் பகிர்தல்களும் அங்கு இடம் பெற்றன. இலக்கியப் படைப்புகள் அங்கு உரக்கப் படிக்கப்பட்டன.

அவ்வித மாதாந்திர சந்திப்புகளுடன் சனிக்கிழமை பிற்பகல்களில் பால் ரான்சன் (Paul Ranson) தம்பதியர் தங்கள் இல்லத்தில் குழுவின் உறுப்பினர்களை அழைத்துக் கூட்டங்கள் நடத்தினர். அவற்றில் ஓவியர் கூகெனும் அவ்வப்போது கலந்துகொண்டு சிறப்பித்தார். குழு உறுப்பினர் தங்களுக்குள் அனுப்பிக்கொண்ட கடிதங்களில் “எனது எண்ணமும் சொல்லும் உந்தன் உள்ளங்கைகளில்” (D.T.P.M.V.E.M.P. [D`an ta paume mon verbe et me pensee`] இதன் ஆங்கிலப்பொருள் In your palm my word and thought என்னும் வாக்கியத்துடன் கையெழுத்திட்டனர். குழுவில் எல்லோருக்கும் தனித்தனி அடையாளப்பெயர் சூட்டப் பட்டது. அது அவர்களது படைப்பின் தன்மையை அடையாளப்படுத்தும் விதமாக [(ஓவியர் பால் செருஸியே ‘லெ நபி அ லா பார்பெ’ (`Le Nabi `a la barbe) என்றும், சிற்பி லகோம் (lacombe) ‘லெ நபி ஸ்கல்ப்டொர்’ (`Le Nabi Sculpteur) என்றும் பெயரிடப் பட்டனர்)] அமைந்தது.

லா ரெவூ ப்ளான்ஷ் (La Revue Blanche) என்னும் கலை இதழ், டொனி , செருஸியே இருவரின் கலை சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டது. அக்குழுவில் பொன்னாஹ் , உய்யாஹ் இருவர் மட்டுமே ஓவியர்கள் என்னும் ஒப்புதல் பெற்றனர். இருவருமே தமக்கென தேர்ந்தெடுத்த வழியில் ஓவியங்கள் தீட்டினர். இருபதாம் நூற்றாண்டுப் பரிசோதனைகளை (Cubism, Absractionism) அவர்கள் ஏற்கவில்லை. குழுவின் முதல் ஓவியக் கண்காட்சி 1892 ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. ஆனால், 1899க்குப் பிறகு அக்குழு உறுப்பினர்கள் அதிலிருந்து விலகி, தனித்துப் பயணிக்கத் தொடங்கினர். குழுவின் பொதுவான கொள்கையை தொடர்ந்து பின்பற்ற அவர்களால் முடியவில்லை. ஆனால், இருபதாம் நூற்றாண்டிற்கு ஒரு புதிய கலைப் பயணத்தைத் தொடங்கியவர்கள் என்னும் பெருமை கிட்டியது.

குறிப்பு
Academie Julian

சர்க்கஸ் நிர்வாகி, மல்யுத்த வீரர், வர்த்த உரிமையாளர் என்று பலவிதத் தளங்களில் செயற்பட்ட ஹொடால்ஃப் ஜூலியன் (Rodolph Julian) ஒரு ஓவியரும் கூட. 1868 இல் அவரால் நிறுவப்பட்டதுதான் Academie Julian ஓவியப் பள்ளி. 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் இது புகழ்பெற்ற தனியார் ஓவியப்பள்ளியாக பிரான்ஸ் நாடு முழுவதும் விளங்கியது.

அவ்வமயம் அரசு உதவித்தொகை பெற்றுவந்த ஓவியப்பள்ளி ‘எகோல் தெ போ-ஆர்ட்ஸ்’ (E’cole des Beaux – Arts) யில் பெண்களுக்கு பயில அனுமதி மறுக்கப்பட்டது. உடை களைந்த பெண்ணை பார்த்து வரைவதும், ஓவியம் படைப்பதும் பெண்களுக் கானது அல்ல என்னும் மனோபாவம் நிலவிய சமயம் அது. ஆனால், இங்கு பெண்களும் ஆண்களுக்கு சமமாக ஓவியம் பயில சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

வெளி நாடுகளிலிருந்து இளைஞர் அதிக அளவில் அங்கு சேர்ந்து ஓவியம் பயின்று பின்னாட்களில் புகழ்பெற்ற ஓவியர்களாகச் சிறந்து விளங்கினர். அவர் களது படைப்புகள் ப்ஹீ டு ஹாம் (Prix de Rome) என்னும் விருதுக்குப் பரிசீலிக்க அனுமதிக்கப் பட்டன. ஓவியத்தைப் பொழுதுபோக்காகக் கற்க விழைந்தவருக்கும் அங்கு இடம் இருந்தது.

1968 இல் இப்பள்ளி ‘எகோல் சுபெரியர் டொஆர்ட்ஸ் கிராஃபீக்ஸ்’ (Ecole Superieure d’Arts Graphiques) என்னும் நிறுவனத்துடன் இணைந்தது.

(வளரும்)

[DDET]
01_pont-aven-school02_pont-aven-school-gauguin03_pont-aven-school04_decadent-movent05_by-william-blake-d-m06_decadent-movement07_le-nabis08_le-nabis09_by-cezanne-le-nabis10_le-nabis
[/DDET]