தி.ஜானகிராமனின் இசையுலகம்

ஜானகிராமனுக்கு நல்ல செவி இருந்தது. ஒருமுறை கேட்டதை அப்படியே பாடிவிடுவார். மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் பாட்டென்றால் எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். அவர் பாடிக் கேட்டதும், அந்தப் பாட்டுமுறையை அப்படியே திருப்பிப் பாடிவிடுவார். பல வித்வான்களோடு ஜானகிராமனுக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. லால்குடி ஜெயராமன், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் போன்றோருக்கு ஜானகிராமனின் பாட்டென்றால் மிகவும் பிடிக்கும். அவரைப் பாடச்சொல்லிக் கேட்பார்கள். ஜானகிராமன் கச்சேரிகள் செய்வதில்லையென்று அவர்கள் ஆதங்கப்பட்டுக்கொள்வார்கள். லால்குடி ஜெயராமன் ஜானகிராமனின் சங்கீத அனுபூதியை வியந்து போற்றுவார்.