ஆயிரம் பிறைகளுக்கப்பால்

typewritermusic

ஒரு கிழ டைப்ரைட்டர் (தட்டச்சுப்பொறி) பிறந்தது இங்கிலாந்தில் ஒரு தொழிற்சாலையில். இப்போது 83 வயது முடிந்துவிட்டது. ஆயிரம் பிறை கண்டாதாச்சே. இந்தியாவில் குடியேறிய இத்தாலிய, அமெரிக்க, இங்கிலாந்தில் இன்னும் மற்ற விதேச டைப்ரைட்டர்களும், இந்தியாவிலேயே பிறந்த சுதேச இள – நடுவயது டைப்ரைட்டர்களும் கூடி விழா எடுத்தன.

“”முதுபெரும் பொறியீர், மூத்த பொறியீர், ஆயிரம் பிறை கண்ட உமக்கு ஆயிரம் தண்டன்கள்…” என்று தொடங்கி தென்னிந்தியாவின் தோல் ஏற்றுமதிக்கும் பொதுவான பொருளாதார உயர்வுக்கும் முதுபெரும்பொறியர் ஆற்றிய சேவையைப் பல இளவயது – நடுவயது பொறிகள் பாராட்டிப் பேசின. பாராட்டுகளுக்கு நன்றி கூறுமுகத்தான் முதுபெரும் டைப்ரைட்டர் பேசியதாவது!

“”அன்புள்ள இள – நடு வயது நண்பர்களே!

நன்றி, நன்றி, நன்றி, நன்றி. இந்த 83 ஆவது வயதில் பழைய நினைவுகள் பொங்கி வருகின்றன. இந்தப் புனித இந்தியாவுக்கு நான் அனுப்பப்பட்டது முதற் பெரும்பாக்கியம். தோல் உற்பத்தியில் இந்த ஸ்தாபனம் நூறு மடங்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறது இந்த 80 ஆண்டுகளில் உண்மை.

இதைவிட மகத்தான சாதனை ஒன்று நிகழ்ந்திருக்கிறது. நான் இந்த ஸ்தாபனத்திற்கு வந்த முதல் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, லோகநாதய்யர் இந்தக் கம்பெனியை விலைக்கு வாங்கினார். அவர் பெரிய சங்கீத ரசிகர். கர்நாடக இசை மட்டுமின்றி, இந்துஸ்தானி இசையிலும் மோகம் கொண்டவர். மாலை ஏழு மணிக்குப் பிறகு இசை பெருக்கெடுத்து ஓடுகிற வீடு அது. வட நாட்டிலிருந்தும் தென் ஜில்லாக்களிலிருந்தும் இசைக் கலைஞர்கள் வந்த வண்ணம், பாடிய வண்ணம், வாசித்த வண்ணமாக இருப்பார்கள். கரீம்கான், ஜபர்கான், அல்லாவுதீன் கான், கோனேரி ராஜபுரம் வைத்தியநாதய்யர், உமையாள்புரம் ஸ்வாமிநாதய்யர், நாயனாப் பிள்ளை, மகராஜபுரம், திருக்கோடி காவல், மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை, திருமருகல் நடேச பிள்ளை, சின்ன பக்கிரி என்ற மகா வித்வான்கள் அமுத மழையாகப் பொழிந்து கொண்டிருப்பார்கள். லோகநாதய்யர் வட நாட்டு சங்கீதக்காரர்கள் பாடும்போது கண்ணை மூடிக்கொண்டுதான் இருப்பார். “ஆகா ஆகா’ என்று அவர் வாய் மட்டும் தாங்க முடியாமல் ஆர்ப்பரிக்கும். “”என்ன ச்ருதி! என்ன ச்ருதி! ஆகா! ஆகா!” என்பார். அவரே சங்கீதமாய்விட்டாரே என்று பயமாயிருக்கும்.

thija-logo4கர்நாடக சங்கீதக்காரர்கள் பாடும்போது கண்ணைத் திறந்து கொண்டுதான் கேட்பார் லோகநாதய்யர். யாராவது வடநாட்டுச் சங்கீதக்காரர்களைப் போல ஒரு ராகத்தை ஒரு மணி நேரம் பாடினால் கண்ணை மூடிக்கொள்வார். மற்ற சமயத்தில் படார் படாரென்று கையிலும் தொடையிலும் தாளம் போட்டு அவர்களோடு சேர்ந்து கும்மாளம் போடுவார். விரல் விரலாக எண்ணுவார். சீட்டாட்டத்தில் சின்னத் துருப்பால் பெரிய சீட்டுகளை வெட்டுவதுபோல் ஓங்கிக் கையைத் தட்டுவார். சுரம் பாடுவது என்கிறார்களே அப்போது அய்யர் விரல் எண்ணுவதையும் சப்பாணி கொட்டுவதையும் தொடை நோக அடிப்பதையும் பார்க்க வேண்டும். எனக்கு அந்த நேரங்களில் தலை கொள்ளாத ஆனந்தம். படபடவென்று என்னையும் யாராவது தட்டக்கூடாதா என்றிருக்கும். ஆனால் அந்தக் காலத்தில் இது ரொம்ப அபூர்வம். ராகமாக மணிக் கணக்கில் இழுப்பார்கள். அய்யர் அழுவார். பிறகு அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் என்று ஒரு வித்வான் வந்தார். அவர் ரொம்ப சிக்கனம். ராகம் மூன்று நிமிஷம் பாடுவார். கீர்த்தனம் நாலு நிமிஷம் பாடுவார். சுரம் மூன்று ஐந்து நிமிஷம் அடிப்பார். எனக்கும் சந்தோஷம். நவருசி சாக்லேட் டப்பா மாதிரி எல்லோருக்கும் திருப்தியாக ராகம், பாட்டு, சுரம், நிரவல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பாடுவார். “காதை ரொப்பரேடா ராமானுஜம்!’ என்று அவரைப் பார்த்துக் கூத்தாடுவார் லோகநாதய்யர். அவரைப்பார்த்து, பிறகு வந்த வித்வான்களும் விதூஷிகளும் காதை ரொப்ப ஆரம்பித்தார்கள். எனக்கு உயிர் வந்தது. வடநாட்டு சங்கீத வித்வான்கள் பாடவா பாடுகிறார்கள். தம்புரா ஒலியோடு முழுகிப்போகிறார்கள். கீழ் “பா’ வாம் கீழ் “தா’வாம். அங்கு அரைமணி நேரம் தம்புரா ஒலி மேலேயே படுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் குரலா, தம்புரா குரலா என்று கூடத் தெரியவில்லை. அப்புறம் ஒருபுறம் சுரமாக ஏறுகிறார்கள். மறைகிறார்கள். இது ஒரு பாட்டா? தம்புராவோடு மறைவதானால் இவர்கள் ஏன் பாட வேண்டும்? இப்போதுள்ள கர்நாடக இசைதான் இசை. தம்புராவிற்கு இவர்கள் அடிமையாவதில்லை. சுதந்திரப் பிரியர்கள், சரப்பிரியர்கள்,

இப்பொழுது அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் இல்லை. பெரிய நஷ்டம்தான். ஆனால் சின்ன வாரிசுகள் அவர் மறைவை நஷ்டம் என்று ஆக்கிவிடாமல் பார்த்துக்கொண்டுவிட்டார்கள். தொண்ணூறு நிமிஷத்தில் தொண்ணூறு பாட்டுப் பாடுவார்கள். ஜட்கா வண்டி சக்கரத்தைச் சாட்டைக் கழியால் சீந்துவது போலவும், ஜன்னல் கம்பிகள் மீது கம்பை ஓட்டுவது போலவும் சுரம் பாடி உண்மையான இசையை எழுப்பி வருகிறார்கள்.

இப்போது மக்களுக்குத் தெரிந்த ஓசைகள் ஜட்கா சக்கர சாட்டை ஓசை, ஆட்டோ ரிக்ஷா ஒசை, மோட்டார் சைக்கிள் ஓசைகள். மோட்டார் சைக்கிள் சைலன்சரை நீக்கிவிட்டு இளங்காளைகள் அண்ணா சாலையில் சடசட சடசட வென்று இசை யெழுப்பிப் போவது கர்நாடக இசையும் பொறி நுணுக்க இயலும் ஒன்றே என்று நிரூபிக்கத்தான். வடநாட்டு இசைக்காரர்களும் இப்போது கர்நாடக சங்கீதக்காரர்களைப் பார்த்து இதையெல்லாம் செய்து பார்க்க முயலுகிறார்கள். இது வான்கோழித்தனம். நம்முடைய இளமயில்களை வெல்ல முடியாது.

நான் இதுகாறும் பேசியதன் உண்மை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். எண்பது ஆண்டுகளாக இசை கேட்டு நான் கண்டடுத்த உண்மை இது. அதாவது, டைப்ரைட்டர்களை ஏதோ தட்டச்சுப் பொறி என்று மட்டுமல்ல, இசைப்பொறி, தற்காலக் கர்நாடக இசையோடு உடன் பிறப்புரிமை கண்டு கொண்டிருக்கிற இசைக்கருவி. நாம் இப்போது பியானோ, புல்புல்தராஸ், ஜலதரங்கம் இவற்றையெல்லாம் விட கர்நாடக இசைக்கு மிகமிக நெருங்கிய இசைப்பொறிகள் ஆகிவிட்டோம். நாம் கலைஞர்கள், இசைஞர்கள். நம் உடல்கள் இசைப்பொறிகள். தம்புராவுக்கோ ஆதாரசுருதிக்கோ ஆட்பட்ட கொத்தடிமைகள் அல்ல. கர்நாடக சுரப்ரஸ்தார இசைப்பொறிகள்.”

என்று சொல்லிவிட்டு முதுபெரும் கலைஞரும் மூத்த கலைஞருமான டைப்ரைட்டர் அமர்ந்து கொண்டது.

கேட்டுக் கொண்டிருந்த எல்லா இளநடுவயது டைப்ரைட்டர்களும் தாங்களும் கலைஞர்கள், கலைஞர்களிலே உயர்ந்த இசைக் கலைஞர்கள் என்று இறும்பூது கொண்டன, சுரம்பாடுகிறோம் என்று அடித்துக்கொண்டன. ஜவ்வாது கடைக்கும் ஜவுளிக் கடைக்கும் ஜின் போன்ற அமுத ரகசியக் கடைக்கும் போகலாமா என்று கலந்துரையாடத் தொடங்கின.

அமுதசுரபி

ஆகஸ்ட், 1979.