மகரந்தம்

indian-currஉலகளவில் முக்கியத்துவம் பெறத்துவங்கியிருக்கும் இந்திய நாணயம்

இதைப்படித்து ஆச்சரியப் படாமல் இருக்க முடியவில்லை. டெர் ஷ்பிகல் (கண்ணாடி) என்னும் ஜெர்மன் பத்திரிகை இதை எழுதுகிறது. டாலரின் மதிப்பு உலகச் சந்தையில் தொடர்ந்து சரிகிறது. அதல்ல ஆச்சரியத்துக்குக் காரணம். தொடர்ந்து போர்களில் நிதியைக் கொட்டிக் கொண்டிருந்தால் எந்த வளமான நாடும் உருப்படாமல் போவதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. எல்லா ஏகாதிபத்தியங்களும் அப்படித்தான் ஒழிந்து போகின்றன. ஔரங்கசீஃபின் போர் வெறியில்தான் முகலாய சாம்ராஜ்யம் அழிந்தது, இந்தியருக்கு பெரும் நசுக்கலில் இருந்து கொஞ்சம் விடுதலை கிட்டி மறுபடி தம் மூடத்தனத்தால் வெள்ளையரின் ஏகாதிபத்தியத்தில் சிக்கினார்கள். அதே பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் போர்வெறியில் உலகெங்கும் அகலக் கால் வைத்துத்தான் வீழ்ந்தது. ஆச்சரியம் அதை ஒட்டிய கருத்தை டெர் ஷிபீகல் வெளியிடுவதுதான். இந்தக் கருத்தும் அவ்வளவு புதிதல்ல. ஒரு பெரும் நாணயம், உலகிலெங்கும் ஏற்பு பெற்ற, மதிக்கப் பெற்ற கரன்ஸி விழுந்தால் அதன் இடத்தில் அடுத்தடுத்த தளங்களில் உள்ளவை மேலெழும். ஆனால் இப்போதைக்கு உலகெங்கும் அப்படி ஏற்பு பெற்ற எந்த ஒரு கரன்ஸி/ நாணயமும் இல்லை. அதனால் சில நாணயங்களின் கூட்டு மொத்தம் மேலெழும் என்கிறது இந்தப் பத்திரிகை. இதை நாணயங்களின் கூடை என்று பல பத்தாண்டுகளாகச் சொல்லி வந்திருக்கிறார்கள். அப்போது யூரோப்பில் பல நாணயங்களிருந்தன. பிரிட்டிஷ் பௌண்ட், ஜெர்மன் மார்க், ஃப்ரான்ஸின் ஃப்ராங்க் என்று. பிரிட்டிஷ் பௌண்ட் இன்று மதிப்பில்லாத நாணயம். காலிப் பெருங்காயப் பாத்திரம். மணம் மட்டும் இன்னும் வீசுகிறது. இதர யூரோப்பிய நாணயங்கள் ஒன்றாகி யூரோவாகி விட்டன, ஆனால் யூரோ பொருளாதாரம் இன்னும் உலகப் பொருளாதார மையமாகும் அளவு பெரிதாகவோ, முக்கியமாகவோ இல்லை. அதனால் டெர் ஷ்பிகல் சொல்கிறது, அடுத்த நாணயங்கள்- ரென்மின்பி (சீனா), ரூபாய் (இந்தியா), ரியல் (ப்ரேஸில்), யூரோ (யூரோப்பிய மையம்) மேலும் டாலர் (அமெரிக்கா) ஆகியன சேர்ந்த கூட்டணிதான் உலக நாணயமாக இருக்கப் போகிறது என்கிறது. ஜப்பானிய யென் எங்கே போயிற்று என்று தெரியவில்லை.

ஆச்சரியம் இதில் என்னவென்றால் இந்திய ரூபாய் எப்போது இவ்வளவு முக்கிய நாணயமாயிற்று என்பதுதான். நீங்களென்ன நினைக்கிறீர்கள்?

http://www.spiegel.de/international/business/0,1518,druck-761398,00.html

ஆசியாவில் அதிகரிக்கும் பிரிட்டிஷ் தூதரகங்கள்

மேலே உள்ள செய்தியோடு தொடர்புள்ள ஒரு செய்தி. யு.கே என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் கூட்டரசு, இந்தியா, சீனா நாடுகளில் உள்ள தூதரகத்தை விரிவுபடுத்த முடிவு செய்து பெரும் செலவு செய்யப் போகிறதாம். யூரோப்பில் உள்ள தூதரகங்களின் அளவைக் குறைக்கப் போகிறதாம். இது எதிர்காலத்தில் எந்த நாடுகள் எழவிருக்கின்றன என்பதைப் பற்றி பிரிட்டனின் ஊகம் என்று சொல்கிறது கார்டியன் பத்திரிகை. பல்லில்லா சிங்கம் பிரிட்டன் என்பது கொஞ்சம் உண்மை. ஆனால் இந்தியாவை முன்பு அவர்கள் பார்த்து நாக்கில் எச்சில் ஊற வந்து நுழைந்தது முன்னூறு ஆண்டுகள் முன்பு. அப்போது நரிபோலத்தான் வாலை ஒளித்து நுழைந்தனர். பின் நம்மைப் பிடுங்கி நரி ராஜ்யம் நடத்தினர் ஒரு மூன்று நூற்றாண்டுகள். அந்தக் காலகட்டத்தில் உலகில் ஐந்து அல்லது ஆறு முக்கியமான நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா நரி வெளியே போகும்போது உலகின் கடைசிப் பத்து நாடுகளில் ஒன்றாக ஆகி இருந்தது. மேற்கத்திய மதம் உலகுக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது என்று புதுப் புராணம் எழுதும் நியால் ஃபெர்கூஸன் போன்ற வரலாற்றுப் புரட்டாளர்கள் இந்த ஏகாதிபத்திய நரித்தனம் இந்தியாவை முன்னேற்றியது என்று நாக்கூசாமல் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை ஆமோதித்து ஜால்ரா போட இந்தியாவில் ஒரு பெரிய இடதுசாரி ஒட்டுண்ணிக் கூட்டம் பல்கலைகளில் பாடம் போதிக்கிறது. பிரிட்டிஷ் தூதரகம் விரிவுபடுவது நமக்கு நல்லதா? ஏழு சதவீதம்தான் அதிகரிப்பு என்றாலும் ஒவ்வொரு அதிகரிப்பும் நம்மைக் குறைக்கும் வேலை என்று தோன்றுவது வரலாற்றின் பாடத்தால்தானே? இதைப் பார்த்து மகிழ்வதா, அச்சப்படுவதா என்றுதான் தெரியவில்லை.

http://www.guardian.co.uk/politics/2011/may/11/hague-diplomats-asia-embassies

தாழக் கிடக்கும் (எந்திர)மனிதனை தற்காப்பதே (எந்திர)தர்மம்

உயிர்களின் அடிப்படை விழுமியமாக “தியாக”த்தை சொல்லலாம். இந்த குணம் எப்படி தோன்றியிருக்கும்? பரிணாமவிய உளவியலாளர்கள் இதற்கான விடையை “Hamilton’s rule” என்று விதியின்படி விளக்குவர். ”தன்னுடைய ஒரு செயலால் தனக்கு நேரும் தீமையை விட தன் நெருக்கமானவர்களுக்கு அதிக நன்மை விளையும் எனும் பட்சத்தில் உயிர்கள் ‘தியாக’த்திற்கு தயாராகின்றன”, என்பது தான் அந்த விதி. ஆனால் இத்தகைய பரிணாம விதிகளை பரிசோதிப்பது கடினம். உயிர்களின் பரிணாம வளர்ச்சி சற்றே மெதுவாக நடைபெறும். அதுவரை ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வைத்து சமாளிக்க முடியாது. ஆகையால் இந்த விதியை எந்திர மனிதர்களிடையே பரிசோதித்த விஞ்ஞானிகள் தற்போது “வெற்றி” என்று முழங்கியிருக்கிறார்கள். மேற்தகவலுக்கு இந்த செய்தியை படியுங்கள் : http://www.wired.com/wiredscience/2011/05/robot-altruism/

சுவனமெனும் சிறுகதையும் இறைவனெனும் கற்பனையும்

அப்படித்தான் சொல்லிவிட்டார் ஸ்டீபன் ஹாக்கிங் – அவரது அண்மை நூலான ‘Grand Design’ இல் கூடவே கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஆபிரகாமிய மதங்களின் அடிப்படை கோட்பாடாக விளங்கும் சுவர்க்கம் என்பது சிறுகுழந்தைத்தனமான கற்பனை (Fairytale imagination) என்றும் சொல்லிவிட்டார். மேற்கத்திய இறையியலாளர்கள் கொதித்துப் போய் ரிச்சர்ட் டாவ்கின்ஸின் முகாமில் இவரும் சேர்ந்துவிட்டாரே என அவரது ‘arrogance’ ஐ கண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். தீவிர சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் அந்த பேட்டி இங்கே :

http://www.guardian.co.uk/science/2011/may/15/stephen-hawking-interview-there-is-no-heaven

நிலக்கரியும் மாசடையும் சூழலும்

அனேக நாடுகளில் இன்னமும் மின்சக்தி உற்பத்திக்கு கரிதான் பெருமளவு பயன்படுகிறது. நிலக்கரியை எரித்து உஷ்ணத்தால் பலவிதங்களில் மின்சக்தியை உற்பத்தி செய்கிறார்கள். இதிலென்ன பிரச்சினை என்பவரே நம்மில் பலர். கரியை எரித்தால் வெளிவரும் கழிவு வாயுக்களும், கரிப் புகையால் மாசுபடும் காற்றும், சூழ்ந்த நிலங்களும் என்னென்ன விதங்களில் மனித ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன என்று இந்தக் கட்டுரை பட்டியலிடுகிறது.

http://www.wired.com/wiredscience/2011/05/coalcares/

venomவெடிபொருட்களை கண்டறிய உதவும் தேனீக்களின் விஷம்

உயிரியல் சமீபகாலங்களில் நிறைய தொழில் துறை நுட்பங்களுக்கு உதவுகிறது. தேனீக்களின் கொட்டு நமக்கு நிறைய கடுக்கும் என்பதைக் கொட்டு வாங்கியவர்கள் அறிவர். சிலருக்கு இந்தத் தேனீக்களின் ‘விஷம்’ ஒவ்வாததால் துரிதமாக எதிர் மருந்து ஏதும் கொடுக்கப்படாவிட்டால் ஆள் உயிருக்கே கூட ஆபத்து நேரும். இந்த ‘விஷத்தை’ என்ன விதங்களில் பயன்படுத்தலாம் என்று அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகையில் இதை வைத்து வெடிமருந்துகள் இருப்பதைக் கண்டறிய ஒரு கருவி செய்ய முடியும் என்று அறிந்தனர். எங்கிருந்து எங்கே போயிருக்கிறார்கள் என்று யோசித்தால், மனிதக் கற்பனை என்பது என்னவொரு அசாத்தியமான தாவல்களைச் செய்கிறது என்பது புரியும். அந்த விஷத்தில் உள்ள பாம்பொலிடின் என்ற ஒரு புரதத் துணுக்கு வெடிமருந்துகளின் ஒரு மாலிக்யூலைக் கூடக் கண்டறிய சில கருவிகளில் உள்ள நுகரும் கருவிக்கு உதவும் என்று பாஸ்டனில் உள்ள எம் ஐ டி பொறியியல் பல்கலையில் கண்டறிந்து இருக்கிறார்கள். இக்கருவிகள் விமான நிலையம் போன்ற இடங்களில் பொருத்தப்பட்டால் பாதுகாப்பு பலமடங்கு பலப்படுத்தப்படும் என்று தெரிகிறது. மீதி விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.

http://www.gizmag.com/bee-venom-used-to-create-ultra-sensitive-explosives-sensor/18609/

aphoஆசிய இயற்பியல் ஒலிம்பியாட்…

எனப்படும் போட்டி சமீபத்தில் நடந்தது இஸ்ரேலில். அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது இது. பல ஆசிய நாடுகளில் இருந்து உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கெடுக்கும் போட்டி இது. இந்த வருடப் போட்டியில் சீனாவும் தாய்வானும் முதலிடம் பெற்றன- தலா எட்டு பதக்கங்கள். மொத்தம் 65 பதக்கங்களில் பெருவாரி இதர நாடுகளான சிங்கப்பூர், தாய்லாந்து (தலா 7 பதக்கங்கள்), இஸ்ரேல், ரஷ்யா (தலா 6 பதக்கங்கள்). மீதம் 23 பதக்கங்களில் சிலவற்றை இந்தியா மேலும் இதர நாடுகள் வென்றனவாம். இந்தியாவால் சிங்கப்பூர், தாய்வான், தாய்லாந்து நாடுகளோடு கூடப் போட்டி போட முடியவில்லை. அவ்வளவு வளப்பமான கல்வி முறை நம் நாட்டில் உள்ளது என்று கருத வேண்டுமா? இல்லை இந்த மாதிரிப் போட்டிகளுக்குக் கூட அரசியல் வழியேதான் நாம் போட்டிக்காரர்களைத் தேர்ந்தெடுக்கிறோமா?

http://www.jpost.com/LandedPages/PrintArticle.aspx?id=220021

dominique-strauss-kahnடொமினீக் ஸ்ட்ரௌஸ் கான்…

பற்றிய செய்தி இது. பன்னாட்டு பணக் கட்டுப்பாட்டு நிதி (International Monetary Fund) எனப்படும் அமைப்பின் தலைவராகச் சமீபத்து வாரம் வரை இருந்தார். பலாத்காரப் பாலுறவு முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு நியுயார்க் சிறையில் வைக்கப்பட்டு, இப்போது வழக்கை வாதாடிக் கொண்டு வருகிறார். பதவியை விட்டு விலகி இருக்கிறார். இவர் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி, ஏன் உலகெங்கும் இவரைக் குறித்துச் செய்திகள் பரவி எங்கும் பேச்சு இவரைப்பற்றி?

ஐ.எம்.எஃப் எனப்படும் நிதி அமைப்பு உலகின் பெரும் செல்வக் கொழிப்பு மிக்க நாடுகளின் கைப்பாவையாகப் பல்லாண்டு காலமாகச் செயல்பட்டு வருகிறது. இந்திய இடது சாரிகளின் அபிமான குத்துப் பயிற்சிப் பை இது. இந்த ஐ.எம்.எஃப் அப்படி ஒரு பூதமா இது என்றால், வருந்தத்தக்க விதத்தில் இந்திய இடது சாரிகள் வழக்கமாக அவிழ்த்து விடும் புளுகு மூட்டைகளில் காணப்படும் ஓரிரண்டு உண்மைகளில் இதுவும் ஒன்று. ஆம், ஐஎம் எஃப் ஒரு ஐந்தாம் படைதான்.
பணக்கார நாடுகளின் சார்பில் செயல்பட்டு ஏழை நாடுகளை நிரந்தரமாக ஏழ்மையில் வைத்திருக்க முயலும் ஒரு விஷக் காளான் நிறுவனம் இது. இந்த டொமினீக் ஸ்ட்ரௌஸ் கான் என்பவரோ ஒரு பொருளாதாரப் பேராசிரியர், ஃப்ரெஞ்சு சோசலிஸ்டு கட்சியின் தலைமைப்பதவிக்கும், ஃப்ரெஞ்சு அதிபர் தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடவும் பெரு முயற்சி செய்து அதில் தோற்றிருந்தவர். இந்த முறை இவர் தேர்தலுக்கு நின்றால் வெல்வார் என்று எதிர்பார்க்கப் பட்டது. இவர்  ஐஎம் எஃப் தலைவராக இருந்த போது ஏன் ஏழை நாடுகளுக்குப் பேராபத்தாக விளங்கினார்? ஒரு சோசலிஸ்டு எப்படி மக்களெதிரியாக மாறினார்? அதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஆப்பிரிக்காவின் கினி நாட்டை மொத்தமாக சுரண்ட உலக ஏகாதிபத்திய நாட்டுக்கும், இதர கூட்டாளி ஒட்டுண்ணி நாடுகளுக்கும்- ஆம் சீனாவும் இதில் அடக்கம்- பேருதவி செய்தவர். அதை இந்தக் கட்டுரை சொல்கிறது.

http://dandelionsalad.wordpress.com/2011/05/20/strauss-kahn-screws-africa-by-greg-palast/