பாலையும், சில பாம்புகளும் – இறுதிப் பகுதி

ஸ்டாவினின் பெற்றோர் அவளை எதிர்பார்த்து, அவர்களின் கூடாரத்தின் வெளியே, வாயிலருகிலேயே காத்திருந்தனர். அவர்கள் இறுக்கமாய், தற்காப்பு நிலையில், மௌனமான ஒரு கூட்டமாய் நின்றிருந்தனர். அவளைத் திரும்பிப் போகச் சொல்லத் தீர்மானித்துவிட்டார்கள் என ஒரு கணத்துக்கு ஸ்னேக் நினைத்தாள். பின்பு வருத்தமும், பயமும் கொதிக்கும் இரும்பு போல் அவள் வாயில் சுட, ஸ்டாவின் இறந்துவிட்டானா எனக் கேட்டாள். அவர்கள் இல்லை என்று தலையை அசைத்து அவளை உள்ளே அனுமதித்தனர்.

ஸ்டாவின் அவள் அவனை விட்டுப் போனபோது இருந்தது போலவே படுத்து, இன்னும் தூங்கிக்கொண்டு இருந்தான். உற்று அவளை நோக்கிய பெரியவர்களின் பார்வை அவளைத் தொடர்ந்தது, அவர்களது பயத்தை அவளால் முகர முடிந்தது. தன் நாக்கை வெளியே சொடுக்கிய மிஸ்ட், ஆபத்து சூழலில் இருப்பதாக உணர்ந்து படபடப்பாகத் துவங்கினாள்.

”நீங்கள் இருக்க விரும்புவீர்கள் என்று எனக்குத் தெரியும்,” என்றாள் ஸ்னேக். ”நீங்கள் உங்களால் ஆகக்கூடிய உதவியைச் செய்ய விரும்புகிறீர்கள் என்று தெரியும். ஆனால் இங்கு என்னைத்தவிர யாரும் எதுவும் செய்வதற்கில்லை. அதனால் தயவு செய்து, மறுபடி வெளியே போய் இருங்கள்.”

mcintyreஅவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், பின் அரெவினைப் பார்த்தனர், ஒரு கணம் அவர்கள் மறுப்பார்கள் என அவள் நினைத்தாள். அந்த மௌனத்தினுள் சரிந்து, உறங்க விரும்பினாள். ” சுற்றங்களே, வாருங்கள,” என்றான் அரெவின் ” நாம் அவளையே நம்பி இருக்கிறோம்.” கூடாரத்தின் வாயில் மறைப்பைத் திறந்து அவர்களை வெளியே போகுமாறு சைகை செய்தான். ஸ்னேக் ஒரு பார்வையினால் மட்டும் அவனுக்கு நன்றி சொன்னாள். அவன் கிட்டத்தட்ட புன்னகைத்தான். அவள் ஸ்டாவின் பக்கம் திரும்பி அவன் அருகே மண்டி இட்டு அமர்ந்தாள். ”ஸ்டாவின் -”அவன் நெற்றியைத் தொட்டாள்; அது மிகவும் சூடாய் இருந்தது. தன் கை முன்பை விட நிதானம் குறைந்து இருப்பதை அவள் கவனித்தாள். லேசாய் தொட்டதில் குழந்தை விழித்துக்கொண்டான்.

”நேரம் வந்துவிட்டது,” என்றாள் ஸ்னேக்.

கண்ணைக் கொட்டினான், ஏதோ குழந்தைக் கனவிலிருந்து மீண்டு, அவன் விழித்தான், மெல்ல அவளை அடையாளம் புரிந்து கொண்டான். அவன் பயப்பட்டதாய் தெரியவில்லை. இதற்காக ஸ்னேக் சந்தோஷப்பட்டாள்; ஆனால் அவளால் இனம் காண முடியாத ஏதோ காரணத்தினால் அவளுக்கு நிம்மதியாய் இல்லை..

” அது வலிக்குமா?”

”இப்போது வலிக்கிறதா?”

அவன் தயங்கினான், வேறு பக்கம் பார்த்தான், திரும்பப் பார்த்தான். ”ஆமாம்.”

”அதைவிடக் கொஞ்சம் அதிகம் வலிக்கலாம். அப்படி இருக்காது என்று நம்புகிறேன். நீ தயாராக இருக்கிறாயா?”

”க்ராஸ் இருக்கலாமா?”

”நிச்சயமாய்,” என்றாள்.

அப்போது அவளுக்கு என்ன பிசகி இருந்தது எனப் புரிந்தது.

”ஒரு நிமிஷத்தில் வருகிறேன்,” தன் குரலை இறுக்கிப் பிடித்திருந்ததில் அது மிகவும் மாறிப்போனதால், அவளுக்கு அவனை பயப்படுத்தாமல் இருக்க முடியாமல் போயிற்று. அவள் கூடாரத்தை விட்டு வெளியேறி, மெதுவாய், நிதானமாய், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு நடந்தாள். வெளியே, அவர்கள் முகங்களால் அந்தப் பெற்றோர்கள் தாம் எதனால் பயந்திருந்தோம் என்பதைச் சுட்டினர்.

”க்ராஸ் எங்கே?” அவளுக்கு முதுகைக் காட்டி இருந்த அரெவின், அவள் குரலின் தொனியால் அதிர்ந்தான். வெளுத்த முடியுடைய அந்த மனிதர் ஒரு சோக ஒலியை எழுப்பினார். அவரால் அவளைப் பார்க்க முடியவில்லை.

”எங்களுக்கு பயமாய் இருந்தது,” மூத்தவரான கூட்டாளி சொன்னார். ”அது குழந்தையை கடித்துவிடும் என்று நாங்கள் நினைத்தோம்.”

”அது கடிக்கும் என்று நான் நினைத்தேன். நான் தான் அப்படி. அது அவன் முகத்தின் மேல் ஊர்ந்தது, என்னால் அதன் பற்களைப் பார்க்க முடிந்தது –” ஸ்டாவினின் தாய் தன் கைகளை தன் இளைய கூட்டாளியின் தோளில் வைத்தாள், அவன் வேறு ஏதும் பேசவில்லை.

”எங்கே அவன்?” அவளுக்கு அலற வேண்டும் போலிருந்தது; அவள் அலறவில்லை.
திறந்திருந்த ஒரு சின்னப் பெட்டியை அவளிடம் கொண்டு வந்தனர். அவள் அதை வாங்கி உள்ளே பார்த்தாள்.

கிட்டத்தட்ட இரண்டாய் துண்டிக்கப்பட்டு, தன் உள்ளுறுப்புக்கள் உடலின் வெளியே வழிந்தபடி, பாதி மல்லாந்து க்ராஸ் கிடந்தான், நடுங்கியபடி அவள் பார்க்கையில் அவன் ஒருமுறை துடித்து, நாக்கை ஒருமுறை வெளியே சொடுக்கி, உள்ளே இழுத்தான், ஸ்னேக் ஏதோ ஒரு ஒலியை எழுப்பினாள், அடித்தொண்டையிலிருந்து வந்தது அழுகை என்று சொல்ல முடியாத அளவு சிறு ஒலி. அவனுடைய அசைவுகள் அனிச்சையானவையாக இருக்கட்டும் என விரும்பினாள், ஆனாலும் அவனை மிக மென்மையாகத் தூக்கினாள். கிழே குனிந்து அவன் தலைக்குப் பின்னே இருந்த மிருதுவான, பச்சையான செதிள்களைத் தன் உதட்டால் தொட்டாள். அவன் தலையின் கீழ்ப் பகுதியில் சரெலென்று, கூர்மையாய், அவனைக் கடித்தாள். அவன் ரத்தம் அவள் வாயில் சில்லென்று உப்புக் கரிப்புடன் வடிந்தது. அவன் இதற்குமுன் இறந்திருக்கவில்லையானால், அவள் அவனை உடனடியாய் கொன்றிருந்தாள்.

அவள் அந்தப் பெற்றோர்களையும், அரெவினயும் பார்த்தாள்; அவர்கள் எல்லோரும் வெளுத்துப் போயிருந்தனர், ஆனால் அவர்களது பயம் பற்றி அவளுக்கு அனுதாபம் இல்லை, துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளவும் அவள் விரும்பவில்லை. ”அத்தனை சிறிய ஜந்து,” அவள் சொன்னாள். ”அத்தனை சிறிய ஜந்து, கனவுகளும் சந்தோஷமும் மட்டுமே கொடுக்க்க்கூடியது.” அவர்களை இன்னுமொரு கணம் பார்த்து விட்டு கூடாரத்தைப் பார்த்துத் திரும்பினாள்.

”பொறுங்கள் –” வயதில் மூத்த கூட்டாளி பின்னிருந்து அவளருகே வந்தார். அவள் தோளைத்தொட்டார்; அவள் அவர் கையை உதறினாள். ”உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்கிறோம்,” அவர் சொன்னார், “எங்கள் குழந்தையை விட்டுவிடுங்கள்.”

அவரிடமிருந்து அவள் பெரும் சீற்றத்துடன், சுழன்று நகர்ந்தாள். ”உங்கள் மடத்தனத்துக்காக நான் ஸ்டாவினைக் கொல்ல வேண்டுமா?” அவர் அவளைத் தடுக்க முயற்சிப்பது போல இருந்தது. தன் தோளை அவரது வயிற்றில் வலுவாக ஒரு இடி இடித்து, கூடாரத்தின் வாயில் தடுப்புக்கு அப்பால் துள்ளிப் போனாள். உள்ளே, தன் பையை எட்டி உதைத்தாள். திடுமென்று எழுப்பப்பட்டு, கோபத்துடன், ஸாண்ட் வெளியே ஊர்ந்து தன்னை வளையங்களாய் சுற்றிக்கொண்டான். யாரோ உள்ளே வர யத்தனித்தபோது, இதுவரை ஸ்னேக் அவனிடம் பார்த்தறியாத ஆக்ரோஷத்துடன் சீறித் தன் முள்வளையங்களால் சத்தப்படுத்தினான். அவள் தன் பின்னே திரும்பிப் பார்க்கச் சிறிதும் முயலவில்லை. தன் தலையைத் தாழ்த்தி, அங்கியின் கைப்புறத்தால், ஸ்டாவின் பார்க்குமுன், தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அவனருகே மண்டியிட்டு அமர்ந்தாள்.

”என்ன ஆச்சு?” கூடாரத்தின் வெளியே குரல்களயும் ஓட்டத்தின் சப்தத்தையும் அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

”ஒன்றும் இல்லை, ஸ்டாவின்,” ஸ்னேக் சொன்னாள். ”நாங்கள் பாலைவனத்தைத் தாண்டி வந்தோம் என்று உனக்குத் தெரியுமா?”

”இல்லை,” என்றான் வியப்புடன்.

”அங்கு மிகவும் சூடாய் இருந்தது. எங்கள் யாருக்கும் சாப்பிட எதுவும் இல்லை. க்ராஸ் இப்போது இரை தேடிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு ரொம்ப பசியாயிருந்தது. நீ அவனை மன்னித்து, என்னை ஆரம்பிக்க விடுவாயா? நான் முழுக்க இங்கேயே இருப்பேன்.”

அவன் அவ்வளவு களைப்பாக இருந்தான்; அவனுக்கு ஏமாற்றம்தான், ஆனால் அவனுக்கு வாதம் செய்ய திராணி இல்லை. ”சரி.”’ அவன் குரல் விரல்களிடையே நழுவும் மணல் போல் சலசலத்தது.

ஸ்னேக் மிஸ்டை தோளிலிருந்து தூக்கி, ஸ்டாவினின் சின்ன உடலிலிருந்து போர்வையை உருவினாள். அந்தக் கட்டி கீழிருந்து எழுந்து அவனுடைய விலாக்கூட்டின் மேல் நோக்கி அழுத்தியது, அவன் உருவையே கோணலாக்கியது, முக்கிய உறுப்புக்களை நசுக்கி, தன் வளர்ச்சிக்காகச் சத்துக்களை அவனிடமிருந்து உறிஞ்சி, தன் கழிவுகளால் அவனை நச்சுப்படுத்தி இருந்த்து. மிஸ்டின் தலையை பிடித்துக் கொண்டு ஸ்னேக், அவளை, அவனைத் தொட்டுக்கொண்டும் சுவைத்துகொண்டும் அவன் மேல் படர விட்டாள். நாகப்பாம்பு தாக்காமல் அவளைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தது; ஆரவாரம் அவளை அதிரச்செய்திருந்தது. ஸாண்ட் தன் கிலுகிலுக்கும் முள்வளையங்களை உரசியபோது அந்த அதிர்வுகள் அவளைக் கூச வைத்தன. ஸ்னேக் அவளை வருடினாள், அமைதிப்படுத்தினாள்; நாகத்தின் இயல் சுபாவத்தை மீறிக்கொண்டு பயிற்சியாலும், வளர்ப்பினாலும் உருவாக்கிக் கொணரப்பட்ட மறுவினைகள் எழ ஆரம்பித்தன. கட்டிக்கு மேலிருந்த சருமத்தை நாக்கின் துரித உதறலால் தொட்ட மிஸ்ட் நிதானித்தாள், ஸ்னேக் அவளை விடுவித்தாள்.

நாகம் தலையைப் பின்னே தூக்கினாள், தாக்கினாள், நாகங்களைப் போலக் கொத்தினாள், சிறிதே நீண்ட தன் பற்களை ஒருமுறை பதித்து, பின் விடுவித்து, உடனே இன்னும் நல்ல பிடிப்புக்காகக் கடித்து, பிடித்துக்கொண்டு, தன் இரையை மென்று கடித்தாள். ஸ்டாவின் கூவி அழுதான், ஆனால் அடக்கிக்கொண்டிருந்த ஸ்னேக்கின் கைகளுக்கு எதிராய் அசையவில்லை.

மிஸ்ட் தன் நச்சுப்பைகளில் இருந்தவற்றை குழந்தையினுள் விடுவித்துவிட்டு, அவனை விட்டாள். மேல் எழும்பி சுற்றிலும் பார்த்துவிட்டு தன் படத்தை மடித்து, பாய்களின் மேல் ஊர்ந்து நூல் பிடித்தது போல் நேர்கோடாய் தன் இருண்ட மூடிய பெட்டியை நோக்கிச் சென்றாள்.

”அவ்வளவும் ஆச்சு ஸ்டாவின்.”

”இப்போது நான் செத்துப் போய் விடுவேனா?”

”இல்லை,” என்றாள் ஸ்னேக். ”இப்போதைக்கு இல்லை. இன்னும் பல வருஷங்களுக்கும் இல்லை என நம்புகிறேன்.” ஸ்னேக் தன் பெல்டின் பையிலிருந்து ஏதோ பொடி இருந்த ஒரு குப்பியை எடுத்தாள்.

”வாயைத் திற.” அவன் அப்படியே செய்தான், அவள் அவன் நாக்கின் மேல் பொடியைத் தூவினாள். ”இது வலிக்கு உதவும்.” மேலோட்டமான துளைப்பால் ஏற்பட்ட வரிசையான புண்களின் மேல், ரத்த்தை துடைக்காமல், துணிக் கற்றை ஒன்றைப் பரப்பினாள்.

அவள் அவனிடமிருந்து திரும்பினாள்.

”ஸ்னேக்? நீங்கள் போய் விடுவீர்களா?”

”உன்னிடம் சொல்லிக்கொள்ளாமல் போகமாட்டேன். சத்தியமாய்.”

குழந்தை படுத்துக் கண்களை மூடிக்கொண்டு, மருந்துக்கு ஆட்பட்டான்.

ஸாண்ட் அமைதியாய் கறுத்த பாய்களின் மேல் சுருண்டிருந்தான். ஸ்னேக் தரையைத் தட்டி அவனைக் கூப்பிட்டாள். அவன் அவளிடம வந்து, அவனைப் பைக்குள் போட விட்டான். அவள் பையை மூடி அதைத் தூக்கினாள். இருந்தும் அது காலியாய் தோன்றியது.

கூடாரத்துக்கு வெளியே இருந்து சப்தங்கள் கேட்டன. ஸ்டாவினின் பெற்றோரும் அவர்களுக்கு உதவி செய்ய வந்திருந்தவர்களும் கூடார மூடியை இழுத்துத் திறந்து, பார்ப்பதற்கு முன்பே கழிகளை நீட்டிக்கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தனர். ஸ்னேக் தன் தோல் பெட்டியைக் கீழே வைத்தாள். ”எலலாம் முடிந்தது.”

அவர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்களுடன் அரெவினும் இருந்தான்; அவன் கையில் ஏதுமில்லை.

”ஸ்னேக் –” அவன் துக்கம், பச்சாதாபம், குழப்பம் எல்லாவற்றோடும் பேசினான். அவன் என்ன நம்பினான் என்று அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை. அவன் திரும்பிப் பார்த்தான். ஸ்டாவினின் தாய் அவன் பின்னே இருந்தாள். அவள் தோளைப் பிடித்தான். ”அவளில்லாமல் அவன் இறந்திருப்பான். இப்போது என்ன நடந்தாலும் அவன் இறந்திருப்பான்.”

அவள் அவன் கையை உதறினாள். ”அவன் வாழ்ந்திருக்கலாம். அது தானே போயிருக்கலாம். நாம் – “ அவளால் கண்ணீரை மறைத்துக்கொண்டதால் மேலே பேச முடியவில்லை.

அவளைச் சுற்றிக்கொண்டு மக்கள் நகர்வதை ஸ்னேக் உணர்ந்தாள். அரெவின் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான், பின் நின்று விட்டான். அவளே தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என அவன் விரும்புகிறான் என்று அவளுக்குத் தெரிந்தது.

”உங்களில் யாருக்காவது அழ முடியுமா?” அவள் கேட்டாள். “எனக்காகவும், என் அவல நிலைக்காகவுமோ, அல்லது அவர்களுக்காகவும் அவர்களின் குற்ற உணர்வுக்காகவுமோ, அல்லது சிறிய பிராணிகளுக்கும் அவற்றின் வலிக்காகவுமோ உங்களில் யாராவது அழக் கூடியவர்களா?” கன்னங்களில் கண்ணீர் வழிவதை உணர்ந்தாள்.

அவர்களுக்கு அவ்ள் சொன்னது புரியவில்லை. அவள் அழுதது அவர்களுக்குக் கோபமூட்டியது. அவர்கள் பின்னே போனார்கள், இன்னுமே அவளைக் கண்டு பயந்த போதும், ஒன்றாகச் சேர்ந்து நின்றனர். குழந்தையை ஏமாற்ற உபயோகித்த நிதானம் இப்போது அவளுக்குத் தேவையாயில்லை. ”அட, முட்டாள்களே.“ அவள் குரல் உடைந்திருந்தது. ”ஸ்டாவின் –”

வாயிலிலிருந்து வெளிச்சம் அவர்களைத் தாக்கியது. ”எனக்கு வழி விடுங்கள்.” ஸ்னேக்கின் முன்னே நின்றிருந்தவர்கள் தங்கள் தலைவிக்காக ஒதுங்கி நின்றனர். தன் பாதம் அவள் பையைத தொடுவது போல இருந்ததைப் பொருட்படுத்தாமல் அவள் ஸ்னேக்கின் முன்னே நின்றாள்.”ஸ்டாவின் உயிர் பிழைப்பானா?” அவள் குரல் அமைதியாய், நிதானமாய், மென்மையாய் இருந்தது.

”உறுதியாய் சொல்ல முடியாது,” என்றாள் ஸ்னேக், ”ஆனால் பிழைப்பான் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.”

”எங்களை விட்டுச் செல்லுங்கள்.” அந்த மக்கள் தங்கள் தலைவியின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளும் முன் ஸ்னேக்கின் வார்த்தைகளைப் புரிந்துகொண்டனர்; சுற்றிலும் பார்த்துக்கொண்டு தங்கள் ஆயுதங்களை கீழே இறக்கினார்கள், இறுதியில், ஒருவர் ஒருவராய், கூடாரத்திற்கு வெளியே போனார்கள். அரெவின் அங்கேயே இருந்தான். ஆபத்தினால் தனக்குள் எழுந்த சக்தி இப்போது தன்னிடமிருந்து இறங்கிப் போவதை ஸ்னேக் உணர்ந்தாள். அவள் முட்டிகள் தளர்ந்தன. முகம் கைகளில் இருக்கத் தன் பையின் மேல் குப்புற விழுந்தாள். ஸ்னேக் கவனித்து அவளைத் தடுக்கும் முன் வயதில் மூத்தவளான அந்தப் பெண் அவள் முன் மண்டி இட்டாள். ”உனக்கு நன்றி,” என்றாள். “நன்றி. நான் மிகவும் வருந்துகிறேன்..” அவள் தன் கைகளை ஸ்னேக்கை சுற்றிப் போட்டு, அவளை தன் பக்கம் இழுத்துக்கொண்டாள், அரெவினும் அவர்களின் பக்கத்தில் மண்டியிட்டான், அவனும் ஸ்னேக்கைத் அணைத்துக்கொண்டான். ஸ்னேக் மீண்டும் நடுங்க ஆரம்பித்தாள். அவள் அழுகையில் அவர்கள் அவளை கட்டிப் பிடித்திருந்தனர்.

பின்பு அவள் அயர்ச்சியுடன் தூங்கினாள். களைத்துப் போய், கூடாரத்தில் தனியே ஸ்டாவினுடன், அவன் கையைப் பிடித்துக்கொண்டு. ஸாண்டுக்கும், மிஸ்டுக்கும், அந்த மக்கள் சின்ன மிருகங்களைப் பிடித்திருந்தனர். அவளுக்கு உணவும், தேவையான பொருட்களும், குளிப்பதற்குத் தேவையான நீரும் கொடுத்திருந்தனர். அந்தக் கடைசிப் பொருள், அவர்களுக்கு சிரமமானதாக இருந்திருக்க வேண்டும்.
அவள் விழித்துக்கொண்டபோது, அரெவின் அருகாமையில் படுத்திருந்தான், அவனது அங்கி சூட்டில் திறந்திருந்தது, அவன் மார்பிலும் வயிற்றிலும் வியர்வை பளபளத்தது. அவன் முகத்தின் கடுமை அவன் தூங்கும் போது மறைந்திருந்தது; அவன் களைத்தும், மென்மையாகவும் காணப்பட்டான். ஸ்னேக் அவனை எழுப்பியிருப்பாள், ஆனால் நிறுத்திக் கொண்டாள், தலையை ஆட்டினாள், ஸ்டாவினின் பக்கம் திரும்பினாள்.

கட்டியைத் தொட்டுப் பார்த்தாள், மிஸ்டின் மாற்றப்பட்ட விஷம் தாக்கியதால் அது கரைந்து, சுருங்கி இறந்து கொண்டிருந்ததைக் கண்டாள். தன் சோகத்தினூடே ஸ்னேக்குக்குச் சிறிது சந்தோஷம் ஏற்பட்டது. ஸ்டாவினின் முகத்திலிருந்து அவனுடைய வெளிர் முடியை விலக்கினாள். ‘குட்டி, நான் உன்னிடம் மறுபடியும் பொய் சொல்ல மாட்டேன்,” என்று கிசுகிசுத்தாள். “ஆனால் நான் இங்கிருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டும். நான் இங்கே தங்க முடியாது.” அவளுக்கு அந்தப் புதர்விரியனின் விஷத்தின் விளைவுகளை எதிர்க்க இன்னும் மூன்று நாட்கள் தூக்கம் தேவையாய் இருந்தது, ஆனால் அவள் வேறெங்காவது தூங்கிக் கொள்வாள். ”ஸ்டாவின்?”

அவன் மெதுவாக, அரை விழிப்பிற்கு வந்தான். ”இப்போது வலிக்கவில்லை,” என்றான்.

”எனக்கு சந்தோஷம்.”

”நன்றி.”

”போய் வருகிறேன் ஸ்டாவின். அப்புறமாய் நீ விழித்துக்கொண்டதையும், நான் இருந்து உன்னிடம் சொல்லி விட்டுப் போனதையும் நீ நினைவு வைத்துகொள்வாயா?”

”போயிட்டு வாங்க,” அவன் மீண்டும் தூங்கிப் போய்க்கொண்டே சொன்னான். ”போயிட்டு வாங்க ஸ்னேக், போயிட்டு வா க்ராஸ்,”. அவன் கண்களை மூடிக்கொண்டான்.

ஸ்னேக் தன் பையை எடுத்துக்கொண்டு, கீழே நோக்கி, அரெவினைப் பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் அசையவில்லை. பாதி நன்றியுடனும் பாதி வருத்தத்துடனும் அவள் கூடாரத்தை விட்டு வெளியேறினாள்.

அந்திப் பொழுது நீண்ட மசமசப்பான் நிழல்களுடன் நெருங்கியது; அந்த முகாம் சூடாக, நிசப்தமாக இருந்தது. புலி வரி கொண்ட அவளது மட்டக்குதிரை நீருடனும் உணவுடனும் கட்டப்பட்டு இருப்பதைக் கண்டாள். புதிய, தண்ணிர் நிரம்பிய தோல் பைகள் தரையில் சேணத்தினருகிலும், பாலைவனத்துக்கான அங்கிகள் சேணக் கரணையின் மீதும் இருந்தன, இத்தனைக்கும் ஸ்னேக் ஊதியம் எதுவும் வாங்க மறுத்திருந்தாள். அவளைப் பார்த்து அந்த புலிவரி மட்டக்குதிரை மெல்லக் கனைத்தது. வரிகளுடனிருந்த அவன் காதுகளை சொறிந்துவிட்டு, அவனுக்குக் கடிவாளமிட்டு, தன் பொருட்களை அவன் முதுகில் ஏற்றினாள். அவன் கயிற்றைப் பிடித்துகொண்டு கிழக்குப்புறமாய், தான் வந்தவழியே புறப்பட்டாள்.

”ஸ்னேக்-”

ஒரு தரம் மூச்சை இழுத்தாள், அரெவினைப் பார்க்கத் திரும்பினாள். அவன் முகம் சூரியனைப் பார்த்து இருந்தது; அது அவன் முகத்தை இளஞ்சிவப்பாகவும் அங்கியை ஆழ்ந்த சிவப்பாகவும் காட்டியது. இளநரை கலந்த அவனது தலைமுடி தோள் வரையில் அவிழ்ந்து படர்ந்து அவன் முகத்தை மென்மையாக்கியது. ”நீங்கள் போய்த்தான் ஆகவேண்டுமா?”

”ஆமாம்.”

”நீங்கள் அதற்கு முன் போகமாட்டீர்கள் என்று நம்பினேன்…நீங்கள் இன்னும் கொஞ்ச நாள் தங்குவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.”

”விஷயம் வேறு விதமாய் இருந்தால், நான் தங்கி இருக்கலாம்.”

”அவர்கள் பயந்து விட்டார்கள் –”

”க்ராஸால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்களிடம் நான் சொன்னேன், ஆனால் அவர்கள் அவன் பற்களை மட்டுமே பார்த்தார்கள். அவனால் கனவுகளை மட்டுமே கொடுக்க முடியும், இறப்பை எளிதாக்குவதைத்தான் செய்ய முடியும் என்று அவர்கள் அறியவில்லை.”

”ஆனால் நீங்கள் அவர்களை மன்னிக்கக் கூடாதா?”

”அவர்களுடைய குற்ற உணர்வை என்னால் சகிக்க முடியாது. அவர்கள் செய்தது என்னுடைய தவறுதான், அரெவின். காரியம் கை மீறும் வரை நான் அவர்களைப் புரிந்து கொள்ளவில்லை.”

”நீங்களேதான் சொன்னீர்கள். எல்லா வழக்கங்களையும், எல்லா அச்சங்களையும் உங்களால் தெரிந்துகொள்ள முடியாது என்று.”

”நான் முடக்கப்பட்டுவிட்டேன்,” என்றாள் அவள். ” க்ராஸ் இல்லாமல் என்னால் ஒருவரை குணமாக்க முடியாதென்றால், நான் அவர்களுக்கு உதவவே முடியாது. நான் என் ஊருக்குப் போய், என் ஆசிரியர்களை எதிர்கொண்டாக வேண்டும், அவர்கள் என் மடமையை மன்னிப்பார்கள் என்று நம்பவேண்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட பெயரை அவர்கள் அரிதாகத்தான் கொடுப்பார்கள். ஆனால் எனக்கு அவர்கள் கொடுத்திருந்தார்கள்- அவர்கள் ஏமாற்றம் அடையப் போகிறார்கள்.”
”என்னை உங்களுடன் வர அனுமதியுங்கள்.”

அவள் அதையே விரும்பினாள்; தயங்கினாள், அந்த பலவீனத்துக்காக தன்னை இகழ்ந்து கொண்டாள்.

”அவர்கள் மிஸ்டையும் ஸாண்டையும் எடுத்துக்கொண்டு என்னை வெளியேற்றி விடக் கூடும். அப்போது நீங்களும் வெளியேற்றப்படுவீர்கள். நீங்கள் இங்கேயே இருங்கள், அரெவின்.”

”அது எனக்குப் பொருட்டாகாது.”

”ஆகும். சிலகாலத்துக்குப் பின், நாம் ஒருவரை ஒருவர் வெறுப்போம். எனக்கு உங்களைத் தெரியாது, உங்களுக்கு என்னைத் தெரியாது. நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நிதானமும், அமைதியும் நமக்குத் தேவை.” அவன் அவளருகே வந்து தன் கைகளால் அவளைச் சுற்றிக் கொண்டான். இருவரும் ஒரு கணம் அணைப்பில் இருந்தனர். அவன் தன் தலையை நிமிர்த்தியபோது, அவன் கன்னங்களில் கண்ணீர் இருந்தது. ”தயவு செய்து திரும்ப வாருங்கள்,” என்றான் அவன். ”எது நடந்தாலும், தயவு செய்து திரும்ப வாருங்கள்.”

”முயற்சி செய்வேன்.” என்றாள் ஸ்னேக். ”அடுத்த வசந்தத்தில், காற்றடிப்பது நிற்கும்போது, நான் வருகிறேனா என்று பாருங்கள். அதற்கு அடுத்த வசந்தத்திலும் நான் வரவில்லை என்றால், என்னை மறந்து விடுங்கள். நான் எங்கே இருந்தாலும், உயிருடன் இருந்தால், உங்களை மறந்து விடுவேன்.”

”நான் உங்களை எதிர்பார்ப்பேன்,” அரெவின் சொன்னான், அதற்கு மேல் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை.

ஸ்னேக் மட்டக்குதிரையின் கயிற்றை எடுத்தாள், பாலைவனத்தைக் கடக்கக் கிளம்பினாள்.

(முற்றும்)

ஆங்கில மூலக்கதை: Of Mist, and Grass, and Sand

ஆசிரியர் இணையதளம் : http://www.vondanmcintyre.com/