[எழுத்தாளர் சிட்டி ‘யாத்ரா’ இதழில் எழுதிய கட்டுரை]
இரண்டு ஆண்டுகளுக்கு முன், அமரர் மணி ஐயரின் இசை விருந்து ஒன்று ரேடியோ அகில பாரத சங்கீத நிகழ்ச்சியில் ஒலிபரப்பாயிற்று. நிகழ்ச்சியைத் தயாரித்து அளித்து, மணி ஐயரின் இசைப்புலமையை அறிமுகம் செய்தவர், அதற்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற மணி ஐயரின் கச்சேரி ஒன்றைக் குறிப்பிட்டார். அமரர் கு.ப.ராஜகோபாலனின் குடும்ப உதவிக்காக மதுரை மணி கைங்கர்யமாகப் பாடிய கச்சேரியை நினைவு கூறும் வேளையில், அந்த இரண்டு மேதைகளுக்கும் அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு தி.ஜானகிராமனுக்குக் கிடைத்தது. கு.ப.ரா.வின் அடிச்சுவட்டில் நடந்து மணிக்கொடியில் சிறுகதை எழுதி இலக்கிய வாழ்க்கை தொடங்கிய ஜானகிராமனின் குரலில் அன்று ததும்பிய உணர்ச்சி அவருடைய கலாச்சார நோக்குக்கு ஒரு நல்ல சான்றாக ஒலித்தது. சாதாரணமாக இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பாடகரின் பாடல் பட்டியல் மட்டுமே அறிவிக்கப்படும். ஜானகிராமனோ இந்த வழக்கமான ஒலிபரப்பையும் ஒரு சிறுகதையாக மாற்றிவிட்டார்.
அவருடைய சில கதைகளில் நிறைந்து பரவும் மனிதாபிமானமும் இசையில் அவருக்கிருந்த ஈடுபாடும் சேர்ந்து அன்று அவருக்குக் கைக்கொடுத்தன. இசை நிகழ்ச்சியைப் போலவே, அறிவிப்புகளும் கேட்போர் கவனத்தை ஈர்த்ததற்குக் காரணம் அதை சாதித்தவர் ஓர் இலக்கியப் படைப்பாளி என்பது மட்டுமல்ல திறமையைப் போற்றுவதில் தயங்காதவர் என்பதையும் நிரூபித்தது.
திருச்சியில் நடந்த அந்தக் கச்சேரியின்போது ஜானகிராமன் எனக்குப் புதிய பழக்கம். முந்திய ஆண்டு கும்பகோணத்தில் கு.ப.ரா.வின் வீட்டில் அவரைச் சந்தித்தபோது கு.ப.ரா. மிகவும் பரிவுடன் அவரை அறிமுகம் செய்து வைத்தார். அப்பொழுதே அங்கு வந்த “கரிச்சான் குஞ்சு”, “ஸ்வாமிநாத ஆத்ரேயன்” இருவரையும் சந்தித்தபோது கு.ப.ரா.வின் இலக்கிய பரம்பரை ஒன்று தோன்றுவதற்குச் சூழ்நிலை உருவானதை ஒருவாறு அறிய முடிந்தது.
மதுரை மணியின் கச்சேரிக்கு வந்திருந்த ஜானகிராமனை, கேட்க வருபவர்களை வரவேற்று உரிய இடங்களில் அமர்த்தும்படி கேட்டுக்கொண்டேன். “கு.ப.ரா. குடும்ப சகாய நிதிக்கமிட்டி” என்ற பெயரில் நான், “குகன்”, அ.வெ.கிருஷ்ணசாமி ரெட்டியார், பிச்சமூர்த்தி முதலியோர் முன்பின் பழக்கமின்றி கச்சேரி ஏற்பாட்டைக் கவனித்துக் கொண்டிருந்தோம். 1980இல் ஜானகிராமன் அதைக் குறிப்பிட்டபோது அன்றைய சூழ்நிலை முழுவதும் மீண்டும் தோன்றி அன்று கேட்ட இசையின் மெல்லிய எதிரொலியை உணரும் பிரமை ஏற்பட்டது. ஜானகிராமனின் அந்த சாதனை அவர் மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதால் மட்டும் ஏற்படவில்லை. மனிதன் என்ற முறையில் எதிலும் அழகைப் பார்க்கும் அவருடைய தன்மைதான் காரணம்.
அவர் சென்னை ரேடியோவில் கல்வி ஒலிபரப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, அவருடன் நெருங்கிப் பழகியதில் அவரை ஒரு இளைய சகோதரனாகப் பாவிக்கும் உணர்வு ஏற்பட்டதும் அவருடைய பரிவினாலும் அன்பினாலும்தான். அவர் மயிலையின் வடகோடியில் வசித்துவந்தார். நான் மந்தைவெளியில் மாலை வேளைகளில் வீட்டுக்கு வந்து அளவளாவி விட்டுச் செல்பவரை வழியனுப்ப லஸ் வரை பேசிக்கொண்டே போவோம். அங்கிருந்து நான் விடைபெறும்போது என்னை வழியனுப்ப அவர் திரும்பவும் கூட வருவார். கடைசியில் கபாலி தெப்பக் குளக்கரை படிகளில் உட்கார்ந்து இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருப்போம். இது பெரும்பாலும் நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சி, இலக்கியப் படைப்பில் என்னென்ன சாதிக்க வேண்டும், மற்ற ஐரோப்பிய மொழிகளில் எவ்வாறு சிறந்த படைப்புகள் தோன்றியுள்ளன என்பதே பேச்சின் பொருள்.
அப்பொழுதுதான் அவருடைய மனதில் “மோகமுள்” உருவாகிக் கொண்டிருந்தது. உண்மையான காதல் பக்திக்குச் சமம் என்பதைப் பற்றி அவர் விளக்க முயன்றதால் ஏற்பட்ட சர்ச்சையில் பொழுது பொன்னாகத்தான் போகும். “மணிக்கொடி” நாட்களும், “கலாமோஹினி”, “கிராம ஊழியன்” சூழ்நிலையும் மீண்டும் உருவாகும் உணர்வில் உரையாடல் நீடிக்கும்.
அன்பு ஒன்றையே வைத்து “இந்த வையத்தைப் பாலித்திட வேண்டும்” என்ற கொள்கையில்தான் ஜானகிராமன் தம்முடைய படைப்புகளை மேற்கொண்டார் என்பதற்கு, அவர் நண்பர்களுடன் பழகிய விதமே சான்றாக இருந்தது. எழுத்து வேலை ஒருபுறமிருக்க தம்முடைய வானொலிப் பணியை அவர் முழுமூச்சுடன் மேற்கொண்டு நுணுக்கமான ஒவ்வொரு ஒலிபரப்பிலும் கவனம் செலுத்தியதைப் பற்றி இன்னும் அவருடன் பணியாற்றியவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
தாம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட கு.ப.ராவைப் போலவே ஜானகிராமனும் பல நெருக்கடிகளில் நிதானமிழக்காமல் சமாளித்திருக்கிறார். மனமறிந்து சூடாகப் பேசியதே கிடையாது. எல்லோருடனும் சுமுகமாகப் பழகி வாழ்க்கையில் மகிழ்ச்சி காணவேண்டும் என்பதில் அவருக்குத் தளராத நம்பிக்கை. அவர் டெல்லிக்கு மாற்றலாகிப்போகும்போது “தீபம்” அலுவலகத்தில் நடைபெற்ற பிரிவுபசாரத்தில் பலர் அவரைப் பாராட்டினார்கள். “அவர் மனசு புஷ்பம் போன்றது” என்று லட்சுமி கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டது எல்லோரும் கொண்டிருந்த எண்ணத்தைச் சுருக்கமாக வெளியிட்டது.
இந்தப் புஷ்பம் போன்ற மனம் கொண்டிருந்ததால் எங்கும் மகிழ்ச்சி என்ற மணத்தைப் பரப்புவதில் அவர் முனைந்தார். இசை மணம், பறவைகளை இனம் காணுதல் போன்ற வாழ்க்கையின் சில சிறப்பான கணங்களை அவர் பிடித்து நிறுத்தி அவைகளின் எழிலை அனுபவிப்பதில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். மதுரை மணியின் இசையில் ஒரு ஸ்வரப்பிரயோகம், கலாஷேத்திராவின் மகா பட்டாபிஷேக நாட்டிய நாடகத்தில் ஒரு சம்பவம், சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது சென்னையில் கூட சில சமயங்களில் குறுக்கே பறக்கும் மைனா போன்ற பறவை. இந்த நிலைகளைக் கண்டதும் சொக்கிப்போவார். ஆனந்தக் கண்ணீர் அவருடைய உணர்ச்சியைப் பிழிந்து கொட்டும்.
இம்மாதிரி பல சத்திய கணங்களை நித்திய கணங்களாகப் பார்க்கும் வாய்ப்பு ஜானகிராமனுடன் பழகியதில் எனக்கு ஏற்பட்டது போலவே மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். மேற்கத்திய மலைத்தொடருக்குப் போகும் மலைப்பாதை – லம்பாடி ஒருவன் வழிகாட்டியாக வருகிறான். திடீரென்று ஜானகிராமன் நின்று “ஏதோ வாசனை வருகிறதே! எந்த மரத்திலிருந்து?” என்று வியந்தார். வழிகாட்டியைக் கேட்டபோது, அவன் ஏதேதோ மரங்களைக் காண்பித்து “அந்த மரம்” என்றான். திருப்தி அடையாமல் அந்த வாசனையைத் தேடிக்கொண்டு புதர்களில் நடந்துசென்ற புதுமை முழுவதும் எங்கள் நூலில் வெளியிடப்படவில்லை. அருகில் இருந்து அனுபவித்த என் போன்றவர்களுக்கு அனுபவத்திற்கும் வெளிப்பாட்டுக்கும் இடைவெளி கிடையாது என்ற உணர்வுதான் தோன்றியிருக்க வேண்டும்.
பல காட்சிகளை நாமும்தானே பார்க்கிறோம். ஜானகிராமனுக்கு மட்டும் வேறு மாதிரியாக, இன்னும் அழுத்தமாகத் தோன்றுவதற்கு என்ன காரணம் என்று என்னையே பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். “மோகமுள்” போன்ற படைப்புகளை மேற்கொள்ள முடியாமல் போனதற்குக் காரணம் புரிந்துவிட்டது. ஜானகிராமனின் கதை மாந்தர்களின் உரையாடல்களில் நிகழும் அர்த்த புஷ்டியான மௌன இடைவெளிகளைக் குறிப்பிடுவது திறனாய்வாளர்களுடைய பல்லவி. இந்த மௌன இடைவெளிகள் அவருடைய வாழ்க்கையிலும் உண்டு என்பது அநேகருக்குத் தெரியாது. சிக்கலான ஒரு விஷயத்தைப் பற்றிய சர்ச்சையின் இடையில் வெற்றிலை குதப்பிய வாயைச் சற்றுத் திறந்து பேசாமல் புன்முறுவல் செய்யும்போது அவருடைய ஒலிக்காத எண்ணங்கள் நமக்கு உணர்த்துவது எவ்வளவோ.
சரித்திர நாவல்கள் ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு ஜானகிராமன் அளித்த பதில், “நான் சரித்திரம் படித்திருக்கிறேன்.”
எழுத்தாளனின் எழுத்தை விட்டு, எழுத்தாளன் என்ற மனிதனை விமர்சிக்கும் சர்ச்சைகளில் அவர் ஈடுபட்டதில்லை. தன்னைக் கடுமையாகத் தாக்கியவர்களை அவர் மிகப் பெரியவர்களென்ற முறையில்தான் நோக்கினார். எழுத்தில் பெண்களுக்கு அநீதி இழைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு கு.ப.ரா.வைப் பற்றியே “மணிக்கொடி’ காலத்திலேயே இருந்ததால் தம்மைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டபோது அவர் கவலைப்படவில்லை.
பல நாடுகள் சென்று வந்தார். அநேகமாக உலகின் பெரும்பான்மைப் பகுதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் எந்த நாட்டில் இட்லி, சாம்பார், வடை, முறுக்கு கிடைக்கும் என்று சொல்லத் தெரியாது. அவர் பயணம் மேற்கொண்ட நாட்டில் வாழும் மக்களின் ஆத்ம தரிஸனத்தை விவரிக்கும் சிரத்தையில் இந்த முக்கியமான பயணக்கதை பல்லவியை அவர் பாட மறுத்துவிடுவார்.
ஹனுமானுக்குத் தன் பலம் தெரியாது என்று சொல்வார்கள். தன் புகழ் தெரியாது வாழ்ந்த ஜானகிராமனின் அடக்கம் பொதுவாகப் படைப்பாளிகள் புறக்கணிக்கும் அம்சம். சமுதாயத்திற்குச் சவுக்கடி, தத்துவ போதனை, உத்தி வேடிக்கைகள், மேல்நாட்டு இலக்கிய போலி போன்ற வர்த்தக சாதனங்களைப் பற்றி ஜானகிராமனுக்குத் தெரியாது. தான் அநுபவித்த நிலைகளை, தான் கண்ட காட்சிகளை அதே உணர்வுடன் மறுபடைப்பு செய்யும்போது வேறு சாதுர்யங்களைக் கையாளாமல் தம்முடைய திறமையை மட்டும் துணை கொண்டதனால்தான் அவர் எழுத்துக்களில் ஒரு பிரதேசத்தின் மண் வாசனை வீசுகிறது என்று வாசகன் உணர்கிறான். இவ்வகையில் இலக்கியப் படைப்பில் உண்மையின் அவசியத்தை அவர் நன்றாக உணர்ந்திருந்தார்.
தனி மனிதனின் பண்பாடு மேம்பட்டால் சமுதாயம் பிழைத்துவிடும் என்ற ரகசியத்தைக் கூரைமீது நின்று கூவாமல் மெல்லிய சைகைகளில் விளக்கும் சக்தி அவருக்கு இருந்தது. இதற்க அடிப்படை அவருடைய சொந்த தன்மையே. வாழ்க்கைக்கு அழகு தரும் சம்பவங்களுக்குச் சற்றுப் பிரகாசமான வண்ணம் கொடுப்பது, வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும் செயல்களை உணர்ச்சி நிலையிலிருந்து புலப்படுத்துவது என்ற தன்மைதான் அவருக்கு இலக்கியத்தில் மனிதத் தன்மையின் அடிப்படைப் பெருமையை எடுத்துக்காட்ட உதவிற்று. “முள் முடி”யில் உண்மையை அறியும் பள்ளி ஆசிரியரின் தன்மையும் ஜானகிராமனுடைய வாழ்க்கை முறைதான்.
நண்பர்களுடன் பழகுவதில் ஏற்படும் மகிழ்ச்சியைத் தொடர்ந்து நுகர்வதற்கு அவருக்கு ஆவல் அதிகம். நட்பு நிலைத்திருக்க வேண்டும் என்பதே அவர் வாழ்க்கையில் தேடிய செல்வம். “நண்பர்களை இழந்துவிடுவது என்னால் தாங்க முடியாத ஒரு நிலை” என்று ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு எழுதியிருந்தார்.
எழுத்தாளராகவோ, இலக்கியகர்த்தாவாகவோ நடந்து கொள்ளத் தெரியாத ஜானகிராமனிடம் காணப்பட்ட பெருங்குறை, அவர் தம்முடைய படைப்புகளைப் பற்றிப் பேசாததுதான். பொதுவாக தம்முடைய எழுத்தைப் பற்றிப் பேசாததுதான். பொதுவாக, நம்முடைய எழுத்தைப் பற்றி பேட்டிகளிலோ, கூட்டங்களிலோ பேசும் வாய்ப்புகள் அல்லது நிர்ப்பந்தங்கள் ஏற்படும்போதெல்லாம் எப்படியாவது இலக்கியப் பொதுமையைப் பற்றிப் பேசிவிட்டுத் தம்முடைய சாதனையைக் குறிப்பிடாமல் விட்டுவிடுவது அவருக்குக் கைவந்த கலை.
நண்பன் என்ற முறையில் ஜானகிராமனை, பாரதி கண்ணனைப் போற்றிய நிலைகளில்கூடப் பலருக்குப் புலப்படுவதற்குக் காரணம் அவர் எந்த நிலையிலும் அன்பு காட்டி ஆதரவு தந்ததுதான். எத்தனையோ இக்கட்டான சமயங்களில் தமக்கு ஏற்பட்ட அசம்பாவித நிலைகளை மற்றவர்களுக்குக் கெடுதல் வரக்கூடாது என்பதற்காகச் சமாளித்திருக்கிறார்.
ஜானகிராமனின் பண்புகளுக்குச் சான்று காண்பிக்க முற்பட்டால் சொல்பவரின் சுய சரிதமாக முடித்துவிடும் அபாயம் உண்டு. ஏனெனில் அவர் அளிக்கும் உதவி, ஆறுதல் போன்ற நற்செயல்களில அவருடைய முத்திரை இல்லாமலேயே நடந்துகொள்வதும் அவருக்கு இயல்பாக இருந்தது. என்னை அவருடைய மூத்த சகோதரனாகப் பாவிப்பதாக அவர் சொன்னபோது எனக்கு வயது 60 முடியவில்லை. அவருடைய சொந்தத் தமையனாரின் சஷ்டி அப்த பூர்த்தி அழைப்பு வந்தபோது நானும் அவரும் ஒரே ஆண்டில் அதே மாதத்தில், அதே நாளில் பிறந்தவர்கள் என்ற தகவல் மிகவும் சாதாரணமாகிவிட்டது.
ஜானகிராமனைப் பற்றி இவ்வளவு பேசுவதற்கு அவர் இல்லை என்பதுதான் தைரியம் கொடுக்கிறது. அவர் இருந்தால், இதைப்போன்ற பேச்சு அவருக்குப் பிடிக்காது. ஆனால் இந்த சந்தர்ப்பம் எவ்வளவு கொடிய நிலையின் விளைவாகிவிட்டது!
யாத்ரா இதழ் 40&41
சிட்டி – புகைப்படம் நன்றி: காலச்சுவடு