தி.ஜானகிராமன்

sujatha-5

[சுஜாதா ‘சாவி’ 5.12.1982 இதழில் எழுதிய கட்டுரை]

ஜானகிராமனுடைய சிறுகதைகளை நான் என் பதினேழாம் வயதில் முதலில் படித்தேன். கல்கி, தேவன் போன்றவர்கள் எழுத்தால் மிகவும் வசீகரப்பட்டிருந்த எனக்கு ஜானகிராமனை முதலில் படித்தபோது உடனே இது வேறு தினுசு என்று தோன்றிவிட்டது. அப்போது அவர் கலைமகள், அமுதசுரபி, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். சில தீபாவளி மலர்களிலும் அவர் கதைகள் வரும். ஜானகிராமன் கதை இருந்தால் மட்டும் தீபாவளி மலர் வாங்குவேன். ‘மணம்’, ‘சிலிர்ப்பு‘, ‘கொட்டு மேளம்’, ‘சிவப்பு ரிக்ஷா’, ‘பரதேசி வந்தான்’, ‘தவம்’, ‘கடன் தீர்ந்தது’ போன்ற கதைகள் இன்றைக்கும் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. மற்றவர்கள் எழுத்தை மறந்து அவரையே தேடத்தூண்டியது அவரது சிறுகதைகள். அவருடைய முதல் நாவலை (அமிர்தம்) தேடிப்படித்தேன். கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. நான் எல்க்ட்ரானிக்ஸ் படித்துக் கொண்டிருக்கும்போது இரண்டாவது நாவல் ‘மோகமுள்’ சுதேசமித்திரனில் தொடர்கதையாக வெளிவந்தது. சுமார் ஒரு வருஷம் வந்திருக்கும் என ஞாபகம். ஒவ்வொரு வாரமும், பாபுவும், யமுனாவும் என்னை ஆக்ரமித்தார்கள். பக்கத்து வீட்டுப் பெண் சூட்டியிருந்த மல்லிகை மணம் இன்னும் என்னிடம் வீசுகிறது. அவள் தற்கொலை பண்ணிக் கொண்டு இறந்தது இப்பவும் எனக்கு ராத்திரி தூக்கத்தைக் கெடுக்கிறது. மோகமுள் போன்ற முழுமையான நாவலை நான் அதன் பின் தமிழில் படிக்கவில்லை!

thija-logo4இருந்தும் ஜானகிராமனுக்கு தமிழ் இலக்கிய சரித்திரத்தில் பிரதானமான இடம் அவரது சிறுகதைகளால்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. மிக நுட்பமான பார்வையும் தஞ்சாவூர்த் தமிழின் சரளமும், சிறுகதைக்கு மிக முக்கியமான காலப் பிரமாணமும் அவர் எழுத்தில் இருக்கும். சிக்கனமான வார்த்தை அமைப்புகளில் மிக அதிகமான விஷயங்களைச் சொல்லிவிடுவார். அவர் நடையில் இருந்த நளினத்தை இன்னும் யாரும் எட்டிப் பிடித்ததாகத் தெரியவில்லை.

“வாசலோடு ரயிலடியிலிருந்து வாடிக்கையில்லாமல் திரும்பிய ஒற்றை மாட்டு வண்டி மெதுவாக ஊர்ந்து நடந்து கடந்தது” என ஒரு வாக்கியத்தில் கதையில் மூடை ஏற்படுத்தி விடுவார். மெலிதான நகைச்சுவை எப்போதும் அவர் கதைகளில் இருக்கும்.

“பழைய பேப்பர்காரன் தராசு, தெய்விகக் கொல்லன் கைவேலை. ஆனையை வைத்தால் ஆறுபலம் காட்டும். ஆறு மாச தினசரிக் காகிதம் எந்த மூலை? கண்ணில் விளக்கெண்ணைய் போட்டுக் கொண்டு இப்பால் அப்பால் திரும்பாமல் தவம் புரிந்து முள்ளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.”

உரையாடலிலும் அவர் ஒரு உண்மையான கலைஞர்.

“சாமி இந்த தராசைப் பார்த்து இப்படிச் சொல்றீங்களே! எளுதின வித்தியாசம் காட்டும் சாமி. உங்களுக்கு சந்தேகமா இருந்தா கடையிலே போய் ஒரு தராசை வாங்கிட்டு வாங்க. எதுக்கு பொல்லாப்பு.”

அவர் சிறுகதைகள் தொடர்ந்து வெளி வந்த அந்த ஐம்பதுகளில் இளைஞர்களாக இருந்த எங்கள் ஒவ்வொருவரையும் ஜானகிராமன் ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்கிறார். இன்று எழுதுபவர்கள் பலரின் நடையிலும் கருத்தமைப்பிலும் அவர் வெளிப்படையாகவோ, பொதிந்தோ இருக்கிறார். ஜானகிராமன் டில்லிக்குப் போனாலும், ஜப்பான் சுற்றினாலும், ஆஸ்திரேலியாவுக்குச் சென்றாலும் தஞ்சாவூர்க்காரரின் காவிரி நதி ஏக்கமும் குறும்பும் அவரை விட்டுப் போகவில்லை. சில அபாரமான பயணக் கட்டுரைகளை அவர் எழுதியிருப்பது பலருக்குத் தெரியுமோ இல்லையோ (உதய சூரியன்).

ஜானகிராமனை என் இளமைக் காலத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் முதன் முறை சந்தித்தேன். அதாவது அவரை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை என் பக்கம் திரும்பி அவர் புன்னகைத்தபோது அதை எடுத்து பைக்குள் போட்டுக் கொண்டு திருப்தியுடன் திரும்பினேன்.

அப்புறம் டில்லியில் அவரை ஆகாஷ்வாணி பவனில், அவருடைய கர்ஸான்ரோடு பலமாடி வீட்டில், கணையாழி இலக்கியக் கூட்டங்களில் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். பேச்சில் முதன்மையாக நகைச்சுவை இருக்கும். மற்றப் பேர் எழுத்தைப் பற்றி குறை சொல்லவேமாட்டார். பதிலாக சற்று மிகையாகவே புகழ்வார். கர்நாடக சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சில வேளை சன்னமான குரலில் பாடிக்காட்டுவார். தஞ்சாவூர் திட்டு வார்த்தைகளை அவர் உபயோகிக்கும்போது அவைகளின் மதிப்பு உயரும்.

ஜானகிராமன் கதைகளில் சோரம் – அடல்ட்டரி – அதிகம் என்று ஒரு சமீப காலத்து குற்றச்சாட்டு உண்டு. அவர் சிறுகதைகளை முழுமையாகப் படித்தவர்கள் அவர் மற்ற எவ்வளவோ விஷயங்களைத் தொட்டிருக்கிறார் என்பதை சுலபமாக உணரமுடியும். அவர் எழுத்தைப் பொதுப்படுத்துதல் அவ்வளவு எளிதல்ல. ஏழ்மையில் உள்ள கவிதை கலந்த அவலங்களைப் பற்றி அவர் எழுதினார். நம்பிக்கைத் துரோகம் பற்றி, வயசாவதில், அழிவில் உள்ள சோகம் பற்றி, சங்கீதம் போன்ற கலையம்சங்களை உபாசிக்க வேண்டியது பற்றி.

இளம் வயதில் நீங்கள் சில கதைகளை ஓஹோ என்று ரசித்துப் படித்திருப்பீர்கள். அதையே கொஞ்சம் வருஷம் கழித்து திருப்பிப் படித்தால் “சட் இதைப் போயா அப்படிப் புகழ்ந்தோம்” என்று தோன்றும். ஜானகிராமனின் கதையை முப்பது வருஷம் கழித்துப் படித்தபோது கூட அந்தச் சிலிர்ப்பு எனக்கு மறுபடி ஏற்படுகிறது. அவர் இறந்து விட்டாரா என்ன!

சாவி
5-12-82.

One Reply to “தி.ஜானகிராமன்”

Comments are closed.