தி.ஜானகிராமன் சிறப்பிதழ் குறித்து…

thija-logo5இது சொல்வனத்தின் ஐம்பதாவது இதழ். இந்த இதழை தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமன் குறித்த சிறப்பிதழாகக் கொண்டு வர விரும்பினோம். ஜானகிராமன் வாழ்ந்த காலத்தில் பெரிய கவனத்தையும், மதிப்பையும் பெற்றவராயினும், அவர் மறைந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகிவிட்ட நிலையில் அவரைக் குறித்து சில நினைவுகளையும், மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கவேண்டும் என்று தோன்றியது. 61 வயதிலேயே மறைந்துவிட்டதாலும், இயல்பாகவே தன்னை முன்னிருத்திக் கொள்ளாத இயல்புடனும் இருந்தவராதலால் தன்னுடைய ஆளுமை, படைப்புலகம், இலக்கியச்சூழல் குறித்து அவர் பெரிய அளவில் பதிவு செய்யவில்லை. அவருக்கு மிக நன்றாக வசமாகியிருந்த இசைத்திறனைக் குறித்து கூட அதிகம் வெளியில் சொல்லிக்கொண்டதில்லை.

இவ்வகையில், ஜானகிராமனைக் குறித்து அவர் மறைவுக்குப் பின் அவருடைய நெருங்கிய நண்பர்கள் கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தஞ்சை பிரகாஷ், சிட்டி, ஸ்வாமிநாத ஆத்ரேயன், வெங்கட் சாமிநாதன் ஆகியோர் ‘யாத்ரா’ வெளியீடாக வந்த தி.ஜானகிராமன் நினைவு மலரில் எழுதிய கட்டுரைகளே மிக முக்கியமான ஆவணங்களாகின்றன. இப்படி அவர் நண்பர்களைக் கேட்டு எழுதவைத்து ஜானகிராமன் மலரை வெளியிட்ட வெங்கட் சாமிநாதன் அவர்களுக்குத் தமிழ் இலக்கிய உலகம் மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளது.

தி.ஜானகிராமன் சிறப்பிதழைக் கொண்டுவரும்போது அதில் இக்கட்டுரைகள் இடம்பெறுவது அவசியம் என்று நாங்கள் நினைத்ததாலேயே அக்கட்டுரைகள் இவ்விதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சாவி இதழில் சுஜாதா, தி.ஜானகிராமனுக்கு எழுதிய இரங்கல் கட்டுரையும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. வெங்கட் சாமிநாதன், தி.ஜானகிராமனோடு புதுடெல்லி வானொலியில் நடத்திய உரையாடல் அவருடைய ஆரம்பகால இசை, இலக்கிய பாதிப்புகளைக் குறித்து விரிவான தகவல்களைத் தருகிறது. அந்த உரையாடலும் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது.

ஜானகிராமனின் பிரபலமான படைப்புகளான மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு போன்றவை அதிகம் பேசப்பட்டவை, விவாதிக்கப்பட்டவை. அதனால் ஜானகிராமனின் பிற முக்கியமான படைப்புகளான சிறுகதைகள், பயணப்புத்தகங்கள், அதிகம் கவனிக்கப்படாத நாவல்கள், இசையுலகம் ஆகியவற்றைக் குறித்துப் புதிய படைப்புகள் இருக்கவேண்டும் என்று விரும்பினோம்.

தி.ஜானகிராமனின் சிறுகதைகள் குறித்து அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரை அவ்வகையில் மிக முக்கியமான கட்டுரை. அக்கட்டுரை ஜானகிராமன் எந்த அளவுக்கு தேர்ந்த சிறுகதையாளர் என்பதைச் சுட்டுவதோடு மட்டுமல்லாமல், அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் எந்த அளவுக்கு நேர்த்தியானது என்பதையும் காட்டுகிறது. இந்தச் சிறப்பிதழுக்காக முதலில் வரப்பெற்ற கட்டுரை அ.முத்துலிங்கம் அவர்களுடையதுதான். அப்படி ஒரு உத்வேகம் அளித்ததற்காக முத்துலிங்கம் அவர்களுக்கு சொல்வனத்தின் சிறப்பு நன்றிகள்.

அசோகமித்திரன் அவர்களால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எழுத முடியாவிடிலும், தொலைபேசியில் ஜானகிராமனைக் குறித்தத் தன் எண்ணங்களைச் சொல்லி, ஜானகிராமனின் அதிகம் விவாதிக்கப்படாத நாவல்களையும், சிறுகதைகளையும் சுட்டியிருக்கிறார். ஜானகிராமனின் மகள் உமா சங்கரி, தன் தந்தையைக் குறித்த புதிய பார்வையை அளிக்கும் ஒரு கட்டுரையை எழுதித் தந்ததோடு மட்டுமில்லாமல், ஜானகிராமன் குறித்த பல அரிய தகவல்களையும், பல பழைய, அரிய படைப்புகளையும், ஒளிப்படங்களையும் தந்திருக்கிறார். ஜானகிராமனின் முக்கியமான பங்களிப்பான பயணப்புத்தகங்கள் குறித்து ராமன் ராஜாவும் (ஜப்பான் பயணம்), ரா.கிரிதரனும் (நடந்தாய் வாழி காவேரி) எழுதியிருக்கிறார்கள். அதிகம் பதிவு செய்யப்படாத ஜானகிராமனின் இசையாளுமை குறித்து சேதுபதி அருணாசலம் எழுதியிருக்கிறார். ஜானகிராமனுக்கு பறவைகள், எளியமனிதர்கள், பயணங்களிலிருக்கும் வியப்பை நந்தன் தன்னுடைய கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார்.

இவையெல்லாம் போக ஜானகிராமனின் கவனம்பெறாத முக்கியமான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் பிரசுரிக்கவேண்டும் என்று நினைத்தோம். அவ்வகையில் அவருடைய சிறுகதை நேர்த்தியைச் சுட்டும் ‘குழந்தைக்கு ஜுரம்’, அவருடைய இசையனுபவத்தையும், இசைச்சூழல் குறித்து அவருக்கிருந்த விமர்சனங்களையும் காட்டும் ‘இசைப்பயிற்சி’, ‘ஆயிரம் பிறைகளுக்கு அப்பால்’ ஆகிய சிறுகதைகளும், ஜானகிராமனின் இயற்கை, இசை, இலக்கியச் செறிவை விளக்கும் கட்டுரைகளையும் இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். இச்சிறுகதைகளை ‘ஐந்திணைப் பதிப்பகம்’ வெளியிட்ட தொகுப்புகளிலிருந்து எடுத்தோம். அவர்களுக்கு எங்கள் நன்றிகள். கட்டுரைகள் நண்பர்களின் சேகரங்களிலிருந்தவை. கு.ப.ராஜகோபாலனுக்கு அஞ்சலி செய்து தி.ஜானகிராமன் எழுதியிருக்கும் கட்டுரை மிக முக்கியமான ஒன்று. 24 வயதிலேயே இசை, இலக்கியம், இயற்கை இவற்றை ஒருசேரச் சொல்லிவிடமுடியும் எழுத்தாளுமையைச் சுட்டும் ஒன்று. கலாமோகினி இதழில் வெளிவந்த அரிய கட்டுரை. உமா சங்கரி தன் சேகரத்திலிருந்த கணையாழியில் வெளியான ‘மதுர மணி’ கட்டுரையைத் தந்துதவினார்.

நினைவுகளின் மறுபிரசுரங்கள்
தி.ஜானகிராமன் – சில நினைவுகள் – கரிச்சான் குஞ்சு
தி.ஜானகிராமன் – ஓர் அஞ்சலி – வெங்கட் சாமிநாதன்
ஜானகிராமனுக்காக ஒரு கதை – எம்.வி.வெங்கட்ராம்
பண்பின் சிகரம் – சிட்டி
ஜானகிராமன்… – தஞ்சை பிரகாஷ்
தி.ஜானகிராமன் – சுஜாதா
புதுப்பார்வைகள்
பற்கள் – அ.முத்துலிங்கம்
அசோகமித்திரன் பேட்டி – வ.ஸ்ரீனிவாஸன்
அப்பா, நல்ல அப்பா – உமா சங்கரி
தி.ஜானகிராமனின் ஜப்பான் – ராமன் ராஜா
நடந்தாய் வாழி காவேரி – ரா.கிரிதரன்
தி.ஜா-வின் இசையுலகம் – சேதுபதி அருணாசலம்
மலைவெளியில் விழுகின்ற நீர்த்துளிகள் – நந்தன்

இந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும், தட்டச்சுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்த நண்பர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த இதழ் தயாரிப்பில் வெங்கட் சாமிநாதன் அவர்கள் காட்டிய அக்கறை மிகவும் நெகிழ வைத்த ஒன்று. யாத்ரா இதழில் வெளிவந்த படைப்புகளை மீள்பிரசுரம் செய்வதற்கு அனுமதி அளித்தது போக, இச்சிறப்பிதழுக்காக அவர் சிறப்புக்கட்டுரை ஒன்றும் எழுதவிருந்தார். ஆனால் அவர் உடல்நலக் குறைவால் அதை எழுதமுடியாமல் போனது. இருந்தாலும், அவர் ஜானகிராமனுக்காக முன்பு எழுதிய அஞ்சலிக்கட்டுரையைத் தேடியெடுத்து, அந்தச் சூழ்நிலையிலும் தொடர்பு கொண்டு கொடுத்தார். தொடர்ந்து இந்த இதழ் உருவாகிவரும் விதம் குறித்து கேட்டறிந்தபடியே இருந்தார். இந்தச் சிறப்பிதழை அவருக்குச் சமர்ப்பிக்கிறோம்.

சொல்வனத்தைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, விமர்சனம் செய்து, அக்கறை காட்டிவரும் அத்தனை நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் ஐம்பதாவது இதழைத் தொட்டிருக்கும் இத்தருணத்தில் எங்கள் நன்றிகள்.