ஜானகிராமனுக்காக ஒரு கதை

m-v-venkatram-1

அன்புடையீர்,

18, 19-11-82 இந்த நாட்களில் எனக்கு ஏகப்பட்ட அலைச்சல். ரேடியோ கேட்கவோ, நியூஸ் படிக்கவோ நேரம் இல்லை. ஆகவே, ஜானகிராமனின் மறைவு பற்றி எனக்குத் தெரியாது. 19-11-82 பிற்பகல் 12:30 மணி அளவில் சைக்கிளில் வியர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருந்த என்னை ஒரு நண்பர் நிறுத்தி, “உங்கள் நண்பர் போய்விட்டாரே” என்றார் வருத்தமாக. ஒன்றும் புரியாமல் “யாரு?” என்றேன். “உங்களுக்குத் தெரிந்திருக்காதுன்னு நினைச்சேன், ஜானகிராமன்தான்” என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நம்ப முடியவில்லை. “இதென்ன விளையாட்டு?” என்றேன் கோபமாக. “இல்லை, நிசந்தான்” என்று தினமணி எடுத்து வந்து காட்டினார். இருவருக்கும் சில நிமிடம் மௌனம்.

இந்த நண்பர் ஜானகிராமனின் இலக்கிய ரஸிகர் இல்லை. 27, 28 ஆண்டுகளுக்கு முன்னால் ஜானகிராமனின் வீட்டில், அய்யம்பேட்டையில் என்னோடு அவர் வத்தக்குழம்புடன் சாப்பிட்டார். தி.ஜா உடன் இருக்க, அவருடைய அக்கா பரிமாறினார். அந்த வத்தல் குழம்பு மணமும், அவர்களுடைய அன்பும், இன்னும் அவருக்கு நினைவிருக்கின்றன.

நம்புங்கள். வேறு எந்த மரணமும் என் மனத்தில் இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஒருமாதம் ஆகிவிட்டது. இன்று வரை கலக்கமாகவே இருக்கிறது. சென்னைக்கு வந்தபிறகு அவர் எனக்குக் கடிதம் எழுதவில்லை. நானும் எழுதவில்லை. அவர் மேல் எனக்குக் கோபம். சென்னை சென்று அவரிடம் சண்டை பிடிப்பது என்று எண்ணியிருந்தேன். நான் சென்னை போகும்முன் அவர் புறப்பட்டுவிட்டார்.

இந்தக் கட்டுரை அவருடைய இலக்கியத் திறனாய்வு அல்ல. நண்பராக அவர் எவ்வளவு noble ஆக நடந்துகொண்டார் என்பதைச் சொல்லவே இதை எழுதினேன். Subjective தான். நீங்கள் எதிர்பார்த்தது இதுதானே? என்னைப் பற்றி அவர் கூறியவற்றை இயன்றவரை சுருக்கிவிட்டேன். நிகழ்ச்சிகளையும் குறைத்துவிட்டேன்.

எம்.வி.வெங்கட்ராம்.

ஜானகிராமனுக்கும் எனக்கும் உள்ள நட்பு. எங்களுடைய கனவுகள் பற்றி ஒரு சிறு புத்தகமே எழுதலாம் போல இருக்கிறது. பார்க்கலாம்.

திசைகள் எல்லாம் இருளடைந்து, போக்குவரத்துப் பாதைகள் யாவும் அடைபட்டுவிட்டால், இரவில் பயணம் செய்யும் பாதசாரிக்கு எப்படி இருக்கும்? அம்மாதிரி ஒரு சூழ்நிலையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் சிக்கியிருந்தேன். செல்வமும், செல்வாக்கும் ஒரு வார்த்தை கூட சொல்லிக் கொள்ளாமல் என்னை விட்டுக் கழன்று ஓடின. உடனே, உறவும் நட்பும் என்னிடம் முறைத்துக்கொண்டன. இது அதிசயமான செய்தி அல்ல. உலகம் தோன்றியது முதல் நடந்துவரும் சங்கதிதானே? ஆனால், என்னுடைய துன்பத்துக்கு விந்தையான ஒரு புதிய பரிமாணம் ஏற்பட்டது.

முருகன் என்னும் தெய்வத்தைக் குருவாக வரித்து, அவரைக் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று எனக்குத் தெரிந்த வழிகளில் முயற்சி செய்துகொண்டிருந்தேன். அதனால் அவர் மகிழ்ச்சியுற்று, ஒரு கோஷ்டி வேதாளங்களை அனுப்பிவிட்டார் போல் இருக்கிறது. அவை என்னுடைய மூளையின் மரைகளை ஒவ்வொன்றாய்க் கழற்றத் தொடங்கிவிட்டன போலும். வேறு யாருக்கும் கேளாத ஒலிகளை நான் கேட்க ஆரம்பித்தேன். வேறு யாராலும் கற்பனை செய்ய முடியாத காட்சிகள் எனக்குத் தெரிந்தன. எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா, பிடிக்கிறதா, பிடிக்கப் போகிறதா என்று என்னாலேயே நிர்ணயிக்க முடியாத நிலைமை. ஆக, வறுமை காலைக் கவ்விக்கொண்டிருந்த அதே நேரத்தில், என் தலையை யாரோ திருகிக்கொண்டிருந்தார்கள்.

எனக்குப் பெரிய குடும்பம். உள்ளூரில் பிழைக்க முடியாது என்றாகிவிட்டது. மூலையில் முடங்கிக் கிடந்த என்னிடம் “மதராஸ் போய்ப்பாருங்கள்” என்று மனைவி கெஞ்சிக்கொண்டிருந்தாள். மதராஸ் போனால், கதை எழுதியோ, வேலையில் அமர்ந்தோ குடும்பத்தைக் காப்பாற்றிவிடுவேன் என்று அவளுக்கு ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனேனில், எனக்கு என்மீதே நம்பிக்கை இல்லை. சென்னைக்குப் போனால் எங்கே தங்குவது என்பதும் எனக்குப் பிரச்சினை. அதுவரையிலும் நான் எந்த நண்பரையும் நாடிப் போனதில்லை. ஏதாவது ஜோலியாக சென்னைக்குப் போனால் ஹோட்டலில் தங்கித் திரும்பிவிடுவேன். இப்போது நிலைமை மாறிவிட்டது. நான் என்னைத் தொலைத்துவிட்டவன் என்ற அவலட்சணக்களை என் முகத்தில் ஏறி உட்கார்ந்திருந்தது. என் கண்ணாடியே எனக்கு அதைச் சொல்லியது. என்னைப் புரிந்துகொண்டு உதவி புரிய யாரால் முடியும்?

ஜானகிராமனின் ஞாபகம்தான் எனக்கு வந்தது. மயிலாப்பூரில் இருந்த அவருக்கு எழுதினேன். உடனே வருமாறு மறுதபாலில் பதில் வந்தது. மூட்டை கட்டிக்கொண்டு புறப்பட்டேன். சென்னைக்குப் பிழைப்புத் தேடிப் போவதாக நான் எண்ணவில்லை. பஸ்ஸிலோ, ரயிலிலோ அரைபட்டு விடுதலைபெறப் போகிறோம் என்ற எண்ணத்தோடு தான் புறப்பட்டேன். அண்ணன் தம்பி வீட்டில் இரண்டாவது வேளை சாப்பிடுவது என்றாலும், என் உடம்பு நடுங்கத் தொடங்கும். நல்ல நேரத்திலேயே என் காரியங்களை எனக்குச் செய்துகொள்ளத் தெரியாது. நாலு ஆள் உதவி தேவை – நான் அப்படித் தயாரானவன். நிலை குலைந்த இந்நேரத்தில் ஜானகிராமன் எத்தனை நாள் என்னைக் காபந்தாக வைத்துக்கொள்ள முடியும்? இந்தச் சந்தேகம் என்னை அரித்தபடி இருந்தது.

ஜானகிராமன் வழக்கமான அன்போடு என்னை வரவேற்றபோது எனக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. என் தோற்றத்தைக் கண்டதுமே நான் கண்காணிப்பில் இருக்க வேண்டியவன், சுயேச்சையாக நடமாடத் தகுதி இல்லாதவன் என்பதை அவர் புரிந்துகொண்டார். மாடியில் அவர் படிப்பதற்கும், ஓய்வு எடுத்துக்கொள்வதற்கும் பயன்பட்ட அறையை என்னிடம் ஒப்படைத்தார். அங்கே ஒரு சிறிய லைப்ரரி இருந்தது.

மாடியில் தனிமைப்பட்டு அமர்ந்ததும் “என்ன நேர்ந்தது? ஏன் இப்படி ஆகிவிட்டீர்கள்?” என்று கவலையோடு கேட்டார். என் கதை முழுவதும் சொன்னேன். ஆன்மீக முயற்சியில் எனக்கு நேர்ந்த அதிபயங்கரமான அயிட்டங்களைக் கேட்டு அவர் அஞ்சிவிடுவார் என்று எதிர்பார்த்தேன். மாறாக அவருக்கு என்னிடம் இருந்த அக்கறை அதிகமாயிற்று.

“உங்களுக்கு இத்தனை தெய்வ பக்தி இருப்பது எனக்குத் தெரியவில்லையே?”

“தெய்வத்துக்கு என் மேல் பக்தி இருப்பதுபோல் என் கதை இருக்கிறதே!”

“நீங்கள் இங்கேயே இருங்கள். நான் ரேடியோ ஸ்டேஷனுக்குப் போய் மாலையில் திரும்பும்வரை ஏதாவது படித்துக்கொண்டு இருங்கள். கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள். அப்புறம் என்ன செய்வது என்று யோசிப்போம். தனியாக வெளியில் போக வேண்டாம். மாலையில் இரண்டு பேரும் சேர்ந்து போவோம்” என்று பல தடவை எச்சரித்துவிட்டு அவர் ஆபீசுக்குப் புறப்பட்டார்.

காலையில் சாப்பிட்டுவிட்டு ஒன்பது ஒன்பதரை மணிக்கு ரேடியோ ஸ்டேஷனுக்குப் போவது அவருடைய பழக்கம். காலையில் சாப்பிட்டால் எனக்குத் தூக்கம் வரும். ஆகையால் எனக்கு மட்டும் ஹோட்டலிலிருந்து டிபன் வரும். காலையில் குளிப்பதற்கும், சாப்பிடுவதற்கு மட்டும் நான் கீழே இறங்குவேன். மற்ற நேரம் எல்லாம் மாடியில்தான் வாசம். படித்துக்கொண்டோ, தூங்கிக்கொண்டோ இருப்பேன். மாலையில் அவர் திரும்பியதும் எங்காவது வெளியில் போவோம். எனக்கு ஒரு சிறு அசௌகரியமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர் மட்டும் அல்ல, குடும்பமே கவனமாக இருந்தது.

எனக்கு நான் காணாமல் போனவன்; என்னைத் தேடி என்னிடம் ஒப்படைத்ததற்காக அவர் மேற்கொண்ட முயற்சி மிகவும் சுவாரசியமானது.

ஜானகிராமனுக்கு என்னிடம் இந்தச் சிரத்தை உண்டாகக் காரணம் என்ன?

நாங்கள் இருவரும் கல்லூரி நண்பர்கள். 1936-37லிருந்து கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சக மாணவர்கள். முதல் ஆண்டிலேயே என் கதைகள் மணிக்கொடியில் வெளிவரத்தொடங்கி நான் எழுத்தாளன் ஆகிவிட்டேன். என் கதை வெளிவந்ததும் கல்லூரியில் என்னை மிகவும் சங்கோசத்துடன் அணுகிப்பாராட்டுவார்,அவரைவிட அதிக சங்கோசப்பட்டபடி அவருக்குப் பதில் கூறுவேன். இப்படி ஆரம்பித்தது எங்கள் தொடர்பு. நான் எழுதுவதைப் பார்க்க அவர் எங்கள் வீட்டிற்கு வருவதும், நான் அவர் இருப்பிடம் செல்வதுமாக எங்கள் நெருக்கம் அதிகரித்தது. அவருக்கு அப்போதே எழுத வேண்டும் என்ற ஆவல். இரண்டொரு கதைகளை எழுதி என்னிடம் காட்டினார். எனக்குத் தோன்றிய குறைகளைச் சுட்டிக் காட்டியதும், அவர் அவற்றை பத்திரிக்கை எதற்கும் அனுப்பாமல் இருந்துவிட்டார்.

கல்லூரிப்படிப்பு முடிந்ததும், அவரைப் போல் எனக்குக் கட்டுக்கோப்பான வாழ்க்கை அமையவில்லை. அவர் அய்யம்பேட்டையில் பள்ளி ஆசிரியரானார். நான் மிலிடரி அக்கவுண்ட்சில் சேர பூனாவுக்குப் போய்விட்டேன். அங்கே இருப்புக்கொள்ளாமல் 1943இல் நான் திரும்பியபோது கும்பகோணம் ஓர் இலக்கிய க்ஷேத்திரமாகி இருந்தது. துறையூரிலிருந்து வெளிவந்த “கிராம ஊழியன்” ஆசிரியராக கு.ப.ரா கும்பகோணத்தில் இருந்தார். அவரைச் சுற்றிலும் ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, சாலிவாகனன், திரிலோக சீதாராம், இன்னும் பல எழுத்தாளர்கள். என்னுடைய வருகையால் கு.ப.ரா. மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். புதிதாய்ப் பத்திரிகை தொடங்க விரும்பிய என்னைத் தடுத்து தமது பத்திரிக்கையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கூறினார். இந்தக் கால கட்டத்தில் ஜானகிராமனுக்கும், எனக்கும் இருந்த நெருக்கம் மிகுந்தது. கு.ப.ரா., ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, நான் ஆகிய நால்வரும் கும்பகோணம் தொண்டர் ஷாப்பிலோ, கு.ப.ரா. வீட்டு மாடியிலோ, கணபதி விலாஸ் ஹோட்டலிலோ கூடிப் பேசிக் கழித்த மாலைகளும், இரவுகளும் எத்தனை!

கு.ப.ரா. மறைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு என் வாழ்க்கையில் மற்றொரு திருப்பம். வியாபாரத்தில் இறங்கின எனக்குப் பெரிய வெற்றிகள் கிட்டின. ஜானகிராமன் அப்போதும் என்னை அடிக்கடி சந்திப்பது உண்டு. தீபாவளி, அமாவாசையன்று நான் செய்யும் “குபேரபூசை”யிலும் அவர் கலந்துகொண்டது உண்டு. அந்தக் காலத்தில் நான் இருந்த சூழலை வைத்துத்தான் அவர் “மோகமுள்”ளில் என்னை ஒரு கதாபாத்திரமாக்கிப் பார்த்தார். என்னுடைய சுபாவம் பற்றி அவர் இவ்வளவு சரியாகக் கணித்திருப்பதை இப்போதும் வியக்கிறேன்.

அப்போது “மாதம் ஒரு புத்தகம்” வெளியீடுகள் பிரபலமாக இருந்தன. நான் அப்படி ஒரு வெளியீடு தொடங்க வேண்டும் என்று கரிச்சான் குஞ்சு சொல்லிக்கொண்டிருந்தார். ஜானகிராமனைக் கலந்தபோது மாதப்பத்திரிகையாக நடத்தலாம் என்று கூற, அப்படியே முடிவு செய்தோம். “தேனீ” இப்படித்தான் ஆரம்பமாயிற்று. கரிச்சான் குஞ்சு உள்ளூர்க்காரர். எனக்குத் துணையாக இருந்தார். ஜானகிராமன் அய்யம்பேட்டையில் இருந்தார். விடுமுறை நாளன்று எங்கள் வீட்டில்தான் இருப்பார். தேனீக்காக நான் போட்ட திட்டத்தைவிட, அவர் போட்ட திட்டம் மகாப் பெரிது.

thija-logo4தேனீக்காக விளம்பரம் சேகரிப்பதற்கென்று நான் ஜானகிராமனை அழைத்துக்கொண்டு பம்பாய் போனேன். வழியில், புனாவில் அவருடைய மாமனார் -ராணுவத்தில் காப்டன் – பங்களாவில் தங்கினோம். தேனீயில் மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரின் ஒத்துழைப்பு இருந்தது. புதுமைப்பித்தனையும் எழுத வைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவர் தியாகராஜ பாகவதரின் “ராஜமுக்தி” என்ற படத்திற்கு வசனம் எழுதப் பூனாவுக்குப் போயிருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் அவருடைய முகவரி எங்களுக்குக் கிடைக்கவில்லை. நாங்கள் இருவரும் பூனாவில் சுற்றி அலைந்து புதுமைப்பித்தன் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்தோம். எங்களுடைய துர்பாக்கியம், இரண்டு நாளுக்கு முந்திதான் அவர் முற்றிய நோயாளியாகத் திருவனந்தபுரம் சென்றுவிட்டதாகத் தெரிந்தது. பிறகு, நாங்கள் பம்பாய்க்குச் சென்று சில நாட்கள் தங்கி விளம்பர நிறுவனங்கள் சிலவற்றை அணுகினோம். நாங்கள் இருவருமே இத்துறைக்குப் புதியவர்கள். யாருடைய ஆலோசனையும் கேளாமல் களத்தில் இறங்கியிருந்தோம். எங்களுக்கு விளம்பரம் கிடைக்கவில்லை. எங்களை விளம்பரம் செய்ய எங்களிடமே பணம் பறிக்க முயன்றார்கள். எல்லா வகையிலும் பம்பாய்ப் பயணம் படுதோல்வி. ஊருக்குத் திரும்பிவிட்டோம்.

தேனீ பன்னிரண்டு இதழ்களே வெளிவந்தன. ஒவ்வொரு இதழிலும் அவருடைய கதைகள் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவ்வாறே எழுதிக் கொடுத்தார். “தேனீயில் ஸீரியஸான கதைகள் வருகின்றன. லைட்டாக ஏதாவது எழுதுங்கள்” என்றேன். அவரால் முடியாது என்பது என் எண்ணம். ஆனால், அழகான நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதிக்கொண்டு வந்து என்னை திகைக்கவைத்தார். தேனீயில் நான் எழுதியது கொஞ்சம். ஜானகிராமனின் கைவண்ணம்தான் அதிகம்.

தேனீ ஓராண்டுதான் வாழ்ந்தது. ஏராளமான நஷ்டம் மட்டும் அல்ல, கூட்டாளி ஒருவரின் துரோகமும் சேர்ந்து பத்திரிகையை நிறுத்த வேண்டியதாயிற்று. அதற்காக என்னோடு துக்கம் கொண்டாடியவர்களில் ஜானகிராமன் முக்கியமானவர். தேனீ பற்றி என்னைவிடப் பெரிய கனவு கண்டவர் அவரே.

பிறகு, அவர் ஆசிரியத் தொழிலை விடுத்து வானொலி நிலையத்தில் சேர்ந்தார். சேருவதற்காக அவர் சென்னைக்குப் போகுமுன், கும்பகோணத்துக்கு என்னிடம் விடை பெற வந்தார். அவர் வந்த போது “904” எட்டுபேர் ஆட்டத்தில் மெய் மறந்து இருந்தேன். அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்ததையும் நான் கவனிக்கவில்லை. ஆட்டம் முடிந்து அவரை நான் கண்டபோது அவர் முகம் வாடிவிட்டது. என்னைத் தனியாக அழைத்துப்போய் “இதை விடமாட்டேன் என்கிறீர்களே! இந்தக் கும்பல் உங்களுக்குத் தேவையா?” என்று அவர் கோபித்துக் கொண்டார். சீட்டாடுவதற்காக அவர் என்னைக் கண்டிப்பது இது முதல் தடவை அல்ல. “நான் சூதாடவில்லை, பொழுதுபோக்குக்காக ஆடுகிறோம். நாலு மணியானால் எல்லோரும் கலைந்துவிடுவார்கள்” என்று அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். அவர் சமாதானப்படவில்லை. “உங்களுக்கு இது வேண்டாம். உங்களுடைய talent-ஐ இது வீணாக்கிவிடும்” என்று என்னை எச்சரித்த பிறகு, தாம் வானொலி நிலையத்திற்குப் போவதைத் தெரிவித்தார். நான் மகிழ்ச்சியோடு விடை கொடுத்தேன். சென்னைக்கு வரும்போது அவரைச் சந்திப்பதாய்க் கூறினேன்.

சில ஆண்டுகளில் என் வாழ்க்கையில் ஒரே அல்லோலகல்லோலம். நான் மிகவும் சாமர்த்தியமாகக் கட்டிய வியாபார கோட்டை இடிந்து விழலாயிற்று. தெய்வத்தின்பால் எனக்கு இருந்த ஈடுபாடும், முயற்சியும் அதன் தொடர்பான நிகழ்ச்சிகளும் ஆழம் தெரியாத ஆழத்திற்கு என்னை இழுத்துச்சென்றுவிட்டன. தலைமை குலைந்ததால் என் குடும்பம் தத்தளிக்கலாயிற்று.

இந்த இக்கட்டான நேரத்தில்தான் ஜானகிராமனைத் தேடிச் சென்றேன்.

நான் சென்னைக்கு வந்த இரண்டொரு நாளில் ஜானகிராமன் ஒரு தேர்ந்த சைகியாட்ரிஸ்டு போல் தம் வேலையை ஆரம்பித்துவிட்டார்.

அப்போது அவர்தம் “நாலுவேலி நிலம்” படக்கதைக்கான வசனம் எழுதிக்கொண்டிருந்தார். ஆபீசிலிருந்து நடிகர் சகஸ்ரநாமத்தின் காரில் திரும்பினார். ஆபீஸ் உடைகளைக் களைந்து வேட்டி கட்டிக்கொண்டு, “வாருங்கள் போவோம்” என்று என்னையும் அழைத்தார். “நான் எதற்கு? நீங்கள் போய் வாருங்கள்” என்றேன். வெளியில் அநாமதேயனாக அலைய எனக்கு ஆர்வம் இருந்ததே தவிர யாரையும் சந்திக்க வேண்டும் என்ற விருப்பமே எனக்கு இல்லை.

“இல்லை, சகஸ்ரநாமம் கட்டாயம் நீங்கள் சந்திக்க வேண்டிய ஒருவர். A perfect gentleman. அவர் உங்கள் ரசிகர், உங்களைச் சந்தித்தால் சந்தோஷப்படுவார்,” என்று வற்புறுத்தி ஜானகிராமன் என்னை அழைத்துப் போனார். சகஸ்ரநாமத்தின் இல்லத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.

சகஸ்ரநாமம் நடிப்புப் பயிற்சிப்பள்ளி நடத்திக் கொண்டிருந்தார் என்று ஞாபகம். என்னை அறிமுகப்படுத்தியதும் மிகவும் மகிழ்ச்சியுற்றார். தம்முடைய சட்டைப்பையில் வைத்திருந்த ஒரு கற்றைக் கடிதங்களை என்னிடம் கொடுத்து, “இதைப்பாருங்கள்” என்றார். மாசு படிந்த கிழியத் தொடங்கியிருந்த கடிதங்கள், இரண்டொரு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய “கோடாரி” என்ற கதை ‘கலைமகளி’லிருந்து கத்தரித்து எடுக்கப்பட்டது.

“இந்தக் கதை எப்போதும் என் பையில் இருக்கும். எனக்கு மனச்சோர்வு ஏற்படும்போது இந்தக் கதையை ஒருமுறை படிப்பது என் வழக்கம். உங்களைப் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை,” என்றார் சகஸ்ரநாமம்.

“உங்களுடைய அடுத்த டிராமா எம்.வி.வி.யை எழுதச் சொல்லவேண்டும்,” என்றார் ஜானகிராமன்.

“அதற்காகத்தானே அவரைப் பார்க்க விரும்பினேன்,” என்றார் சகஸ்ரநாமம்.

இப்படி எல்லாம் அவர்கள் பேசிய உற்சாகத்தில், நான் எழுத்தாளன் என்ற பிரக்ஞை என்னுள் மூண்டது. நாடகம் எழுதுவதாய் அவர்களிடம் ஒப்புக்கொண்டேன்.

ஜானகிராமன் யாரையும், எதனையும் மிகைப்படுத்தி வருணிப்பார். போற்றுவதும் அப்படித்தான், தூற்றுவதும் அப்படித்தான். ஆனால், அவர் சகஸ்ரநாமத்தைப் பற்றிக் கூறியது சரியான உண்மை.

அடைமழையாகப் பிடித்துக்கொண்டிருந்தது. தெருக்களில் அதிகப்படியாகவோ அநாவசியமாகவோ நடமாட்டம் இல்லை. ஆகையால் நான் தனியாக வெளியே போய்விடுவேன் என்ற கவலை இல்லாமல் ஜானகிராமன் ஆபீசுக்குப் போகலானார். படிப்பதற்கு எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. எழுத வேண்டும் என்று தோன்றவில்லை.

“நீங்கள் ஏன் எழுத முயற்சி செய்யக்கூடாது? எழுத்தில் concentrate செய்தால் அது உங்களுக்கு ஒரு நல்ல distraction ஆக இருக்குமே?’ என்றார் ஒரு நாள்.

“நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. என் மனத்தில் நடப்பதை டயரி போல் எழுதி வை என்று பிச்சமூர்த்தியும் சொன்னார். அது பிரசுரம் ஆகாவிட்டாலும் யாருக்காவது பயன்படும் என்றார். ஆனால், எழுதுவதற்கான அமைதியை எனக்கு மனம் தரவில்லை.”

“மனக்குழப்பம் என்கிறீர்கள். உங்கள் அனுபவங்களைக் கதைபோல் தெளிவாய்ச் சொல்கிறீர்களே, சொல்வது போலவே நீங்கள் ஏன் எழுதக்கூடாது?”

“பேசுவது வேறு, எழுதுவது வேறு. எழுதுவதற்க மிக அதிகமான concentration தேவைப்படுகிறது. எழுத உட்காராதபடி மனசில் குளறுபடி நடந்தபடி இருக்கிறதே!”

“Concentrationஆல் அந்தக் குளறுபடியை அடக்க முயலுங்கள் என்றுதான் நான் சொல்கிறேன்.”

என்னுடைய சங்கடத்தை அவருக்குப் புரியும்படி சொல்ல என்னால் முடியவில்லை என்று தோன்றியது. “என் நிலைமை எனக்கே வினோதமாக இருக்கிறது. மனசுக்குள் நான் பைத்தியம். வெளியே சித்த சுவாதீனம் உள்ளவன் போல் நிர்வாகம் செய்கிறேன். இது எப்படிச் சாத்தியம் ஆகிறது என்று எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது. எழுத்து மனத்தைப் பொறுத்த விஷயம் ஆயிற்றே!”

“இவ்வளவு தெளிவாய்ப் பேசுகிறீர்கள். இந்த உறுதியோடு ஏன் எழுதக்கூடாது? நீங்களும், நானும் Clarityயோடு எழுதக்கூடியவர்கள். Communication கலையின் முதல் தேவை என்பதைத் தெரிந்து எழுதுகிறவர்கள். நாம் இருவரும் சேர்ந்து எத்தனையோ திட்டம் போட்டோம். இப்போதும் நாம் அதைச் செய்ய முடியும்.”

பல ஆண்டுகளுக்கு முன் நாங்கள் கண்ட கனவுகளின் எதிரொலியாக அவர் பேசினார். கு.ப.ரா.வைப் போல் ஜானகிராமனுக்கும் சன்னக்குரல். இருவருமே சற்றே நாசி வழியாகப் பேசுவது போல் இருக்கும். இருவருமே குரலைத் தூக்கிப் பேசியதை நான் கேட்டதில்லை. ஆனால் இருவருடைய பேச்சிலும் மென்மை இருந்தாலும் அழுத்தம் இருக்கும்.

எனக்குத் தூக்கம் கலைவது போல் இருந்தது. அவர் ஆபீசுக்குப் போன பிறகு, காகிதம் எடுத்துக்கொண்டு எழுத முயலுவேன். கிறுக்குக் கிறுக்கிக் கிழித்துப் போட்டதுதான் மிச்சம். கொஞ்ச தூரம் மனம் என்னோடு வரும். திடீரென்று தலையில் கை வைத்துக்கொண்டு ஒப்பாரி வைக்கும். ஆபாசமான காட்சிகளைக் காட்டி ஆனந்தப்படும். கையில் பேனாவும், எதிரில் காகிதமும் இருப்பதை மறந்து போவேன்.

நாளாக ஆக, இது பெரிய தொல்லை ஆகிவிட்டது. மாலையில் திரும்பியதும் ஜானகிராமன், “ஏதாவது எழுதினீர்களா?” என்று கேட்டால் என்ன சொல்வது என்று தப்பு செய்த மாணவன் போல் எனக்குச் சங்கோசமாக இருந்தது.

ஜானகிராமனுக்கும் தெய்வ நாட்டம் மிகுதி. அவருடைய வழி வேறு, என் வழி வேறு.

இந்தோனேஷியாவில் (அப்படித்தான் ஞாபகம்) ஒரு குரு தேவராம், எனக்கு அவர் பெயர் மறந்துவிட்டது. அவர் ஒரு புதிய தியானமுறை போதிக்கிறாராம். அவருக்கு உலகம் எங்கும் சீடர்களாம். அவருடைய ஆசியும் அங்கீகாரமும் பெற்ற ஒரு தலைமைச் சீடர் மயிலாப்பூரிலேயே இருக்கிறாராம். அவருக்குத் தியானமுறை போதிக்கும் அதிகாரம் இருக்கிறதாம். அவரிடம் தீட்சை பெற்ற சென்னை சீடர்கள் வாரத்திற்க ஒருமுறை அவர் இல்லத்தில் கூடித் தியானப் பயிற்சி செய்வது வழக்கமாம். ஜானகிராமனும் ஒரு சீடர். தியானக் கிழமையன்று புறப்பட்டார். என்னையும் கூப்பிட்டார்.

“அது என்ன புதிய தியானமுறை?’ என்று கேட்டேன். “எல்லோரும் ஒரே ஹாலில் கூடுவோம். தனித்தனியாக அமருவோம். ஆசனம் என்று எதுவும் கிடையாது. மந்திரம் இல்லை. சிரிப்பு வந்தால் சிரிக்கலாம். அரிப்பு வந்தால் சொரிந்துகொண்டே இருக்கலாம். கெட்டாவியை அடக்க வேண்டாம். கவனம் மட்டும் அகத்தில் இருக்க வேண்டும், இருக்க முயல வேண்டும்.

எனக்கு நம்பிக்கை உண்டாகவில்லை. “இந்தோனேஷியக் குருவைப் பார்த்திருக்கிறீர்களா?”

“இல்லை, அடுத்த வருடம் இந்தியாவுக்கு வருகிறார், பார்ப்பேன். தியானத்தில் கலந்து கொள்வதால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.”

“என்னைச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.”

“நான் பேசி ஏற்பாடு செய்கிறேன்.”

இருவரும் சைக்கிளில் தலைமைச் சீடர் (வக்கீல் என்று ஞாபகம்) வீட்டுக்குப் போனோம். ஜானகிராமன் அங்கே கூடியிருந்த ஒரு டஜன் சீடர்களிடம் என் கஷ்டத்தைச் சொல்லி, என்னை அன்றைய தியானத்தில் கலந்துகொள்ள அனுமதி கேட்டார். என் கதையைக் கேட்டதும் தலைமைச் சீடர் உள்பட எல்லோரும் என்னைப் பீதியோடு பார்த்தார்கள். “இது எங்களால் ஆகாத காரியம், குருதேவர் நேரில் பார்க்க வேண்டிய கேஸ்,” என்று என்னைச் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். நான் வீட்டுக்குத் திரும்பினேன்.

ஜானகிராமன் திரும்பியதும் சிரித்தபடி கேட்டேன். “என்னய்யாது? என்னைப் பார்த்து அவர்கள் இப்படி பயப்பட்டார்கள்?”

“இம்மாதிரி பயங்கரமான சமாச்சாரங்களை அவர்கள் கேட்டதில்லையாம். இந்தோனேஷியாவுக்கு எழுதி குருவின் யோசனையைக் கேட்பதாய்ச் சொன்னார்கள். நாளைக்கே எழுதிவிடுவார்கள்.”

“நான் விழுங்கி இருப்பது கடப்பாரை. சுக்கு காசாயம் என்ன செய்யும்?”

கிழித்துப்போட்ட கடிதங்களை ஜானகிராமனிடம் காட்டி,

“நான் எழுத முயற்சி செய்த குப்பைதான் சேர்த்திருக்கிறேன்” என்றேன்.

“அதனால் என்ன? உங்களால் முடியும். முடியும் என்ற நம்பிக்கையால் எழுதுங்கள். இது உங்களுடைய வளர்ச்சியில் முக்கியமான கட்டம். கட்டாயம் வெற்றிகிட்டும். பிச்சமூர்த்தி சொன்னபடியாவது, உங்கள் மனப்போக்குகளை எழுதலாமே.”

“எழுதி என்ன செய்வது? புராணக் கதை, புரியாத கதை என்பார்கள் அச்சேறாது.”

“வெளியாவதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? அது வேண்டாம், உங்களுக்குச் சுலபமாக, சிறுகதை, கட்டுரை எழுதுங்களேன்.”

மறுநாளே அவர் என்னைத் தம்மோடு ரேடியோ ஸ்டேஷனுக்கு அழைத்துப்போனார். அங்கே மீ.ப.சோமு முதலிய நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஷேக்ஸ்பியரின் வெனீஸ் வர்த்தகன் கோர்ட் ஸீன் மொழிபெயர்ப்பு அவசரமாக மறுநாளே தேவை என்று என்னைச் செய்து தருமாறு கேட்டார்கள்.

அன்று இரவு வெகுநேரம் கண் விழித்திருந்து தமிழாக்கம் செய்து கொடுத்தேன். அவசரம், எழுதியாக வேண்டிய நிர்ப்பந்தம், மனம் ஒன்றி மூன்று மணி நேரம் எழுதிக்கொடுத்தேன். அடுத்த நாளே அது ஒலிபரப்பாயிற்று.

முயன்றால் என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கை என்னுள் தழைத்தது.

“சிருங்கேரி சங்கராசாரிய சுவாமிகள் இங்கே முகாமிட்டிருக்கிறார்கள். நாளைக்கு சோமுவோடு அவரைத் தரிசிக்கப் போவோம்,” என்றார் ஜானகிராமன்.

எனக்கு விருப்பம் இல்லை, ஆயினும் அவருடைய ஏற்பாட்டை மறுக்க முடியவில்லை. என் சித்தத்தைச் சேதப்படுத்த முயலும் தாமசத்தைக் களைவதற்காக அவர் செய்து வந்த முயற்சியின் ஒரு பகுதி இது. இந்த முயற்சியும் வெற்றி பெறும் என்று எனக்குத் தோன்றவில்லை.

மறுநாள், நாங்கள் மூவரும் சிருங்கேரி மடத்திற்குப் போனோம். சோமுவிடம் ஜானகிராமன் என் கதையை ஓரளவு சொல்லி இருந்தார். இருவரும் சுவாமிகளிடம் என் கஷ்டத்தை உரைத்துப் பரிகாரம் வேண்டினார்கள். பூசை செய்து ரட்சை தருவதாகவும், நாலைந்து நாள் கழித்து வருமாறும் சுவாமிகள் கூறினார்கள்.

நாலைந்து நாள் கழித்து ஜானகிராமன் என்னை மடத்துக்கு அழைத்தார். உறுதியாக மறுத்துவிட்டேன். சென்னைக்கு வருமுன்பே நான் காஞ்சி பெரியவாளைத் தரிசித்து முறையிட்டேன். அவர்கள் ரட்சை தருவதாய்ச் சொல்லவில்லை. “பயப்படாதே, உன் குரு உன்னை ரட்சிக்கிறார்” என்று ஆசி கூறினார்கள்.இதை ஜானகிராமனிடம் சொன்னேன்.

“தெய்வத்தைக் கும்பிட்டால் வந்த வினைதானே இது? இதைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அவருக்குத்தானே? எனக்கு ரட்சை, கவசம், மந்திரம், யந்திரம், தந்திரம் எல்லாம் கந்தரநுபூதிதான். எனக்கு வேறு ரட்சை வேண்டியதில்லை,” என்ற என்னுடைய முரட்டுப் பிடிவாதத்தைக் கேட்டு, அவர் மடத்துக்கு வருமாறு என்னை வற்புறுத்தவில்லை.

ஓர் இரவு ஜானகிராமன் நாற்பது பக்கம் நோட்டு ஒன்றை என்னிடம் கொடுத்தார். எண் சாத்திரப்படி (Numerology) அவருடைய வாழ்க்கையைக் கணித்து யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்த குறிப்புகள் நோட்டில் இருந்தன.

எனக்கு ரொம்பக் கொஞ்சம் நியூமரலாஜி தெரியும், ஜானகிராமனின் பெயர் 28 எண்ணில் இருந்தது. 28=2+8=10=1. 1 எண் சூரியனைக் குறிப்பது. இந்த எண்ணின் ஆதிக்கத்தில் உள்ளவர்களுடைய வாழ்க்கைப் பிரகாசமாக இருக்கும். ஆனால் 28 எண்ணுக்கு ஒரு பலவீனம் உண்டு. புகழின் உச்சிக்குத் தள்ளிச் சென்று திடீரென்று கீழே தள்ளிவிடும். தளபதி Mac Arthur பதவியிலிருந்து திடீரென்று விலக்கப்பட்டதை ஒரு புத்தகம் 28 எண்ணுக்கு உதாரணமாய்த் தருகிறது. இதை ஜானகிராமனிடம் கூறினேன்.

அவர் சிரித்தார். இதை எழுதித் தந்தவரும் அதைச் சொன்னார். புகழின் உச்சியில் இருக்கும்போது பெயர் spelling ஐ மாற்றிக் கொள்ளும்படி ஒரு தந்திரமும் சொல்லியிருக்கிறார்.

“புகழின் உச்சியை எப்படிக் கண்டுகொள்வீர்கள்?”

“புகழ் வந்தாகட்டும். பிறகு உச்சியைத் தேடலாம்” என்றார் அவர்.

புகழ் வந்தாயிற்று. ஆனால் இதுதான் அவருக்கு உச்சியா? இதற்கும் மேலே ஏற வல்லவராயிற்றே அவர்?

மழை கொட்டிக்கொண்டே இருந்தது. வெட்டவெளி தண்ணீரைக் கொட்டி பூமியைக் குட்டை ஆக்கிவிடும் போலிருந்தது. எனக்கு மழை எப்போதும் வசீகரம், அதனுடைய மெல்லிசை எனக்குப் பிடிக்கும். வல்லிசையும் பிடிக்கும். அதற்குப் பயந்து கூரையடியிலும், மரத்தடியிலும் பதுங்கியவர்கள் பரிகசிக்குப்படி, கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி மெள்ள நடந்து போவதென்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஜானகிராமனின் வீட்டு மாடியிலிருந்தபடி மழையின் ஆர்ப்பாட்டத்தோடு ஒன்றிப் போகிறேன். கீழே இறங்கி ரயில்வே ஸ்டேஷனுக்கு நடகக்கலாமா என்றோர் எண்ணம் வருகிறது.

ஒரு காரணமும் இல்லாமல் எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணியின் நினைவு வந்தது.கணவனை இழந்து வேறொருவனை ஏற்றவள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு குழந்தைகளுடன் இப்படி ஓர் அடைமழையில் மின்சாரம் செத்த நள்ளிரவில் கதவைத் தட்டி என்னை எழுப்பி உதவி கேட்டாள். இயன்றதைச் செய்தேன். மடியும் ஆசாரமுமாக அவள் நடந்து கொண்டதால் எனக்கு அவளிடம் அப்போது கோபம் உண்டாயிற்று.

அந்த நள்ளிரவு நாடகம் இப்போது தரிசனம் ஆயிற்று. அப்படியே கதைக் கருவாய் உருவாயிற்று. உடனே பிறப்பதற்காக வழி தேடி உதைத்தது. ரிஷி கர்ப்பம்!

காகிதத்தை எடுத்துக் கதையைக் கிறுக்கத் தொடங்கினேன்.

ஜானகிராமன் எதையும் ஒருமுறை எழுதுவார். எழுதியதைப் படித்தும் பார்க்க மாட்டார். ப்ராஸஸிங் பூராவையும் மனதிலே செய்து கொண்ட பிறகே உட்காருவதாய்க் கூறுவார். எனக்கு அப்படி அல்ல. எதையும் 2, 3, 10, 20 தடவை எழுதியாக வேண்டும். படித்துப் படித்துச் செதுக்கியபடி இருப்பேன். அவருடைய கைப்பிரதியைப் பார்த்தால் ஆயிரக்கணக்கான எட்டுக்கால் பூச்சிகள் ஒன்றின் மீது ஒன்று விழுந்தடித்துக் கொண்டு ஓடுவதுபோல இருக்கும். எனக்கு, கைப்பிரதி பார்க்க அழகாக இருக்க வேண்டும்.

அப்பாடா, நான் ஒரு சிறுகதை எழுதிவிட்டேன்! உலகத்துக்கு விமோசனம் பிறந்துவிட்டது!

அவருக்குக் கதை மிகவும் திருப்தியாக இருந்தது. “இந்த டாலன்டை வீணாக்குகிறீர்களே?” என்று வழக்கம்போல் வருந்திவிட்டு, “யாருக்கு அனுப்பலாம்?” என்று கேட்டார்.

“கல்கிக்கு.”

கதையை அவர் எடுத்து வைத்துக் கொண்டார்.

“காலையில் நான் போஸ்ட் செய்கிறேனே?”

“ஆபீஸ் போகும்போது நான் செய்கிறேன்,” நான் தபாலில் சேர்க்கமாட்டேனோ என்ற சந்தேகம் அவருக்கு.

கல்கியில் “மழை” என்ற பெயரோடு அந்தக் கதை வெளிவந்தது.

ஜானகிராமன் வீட்டில் சுமார் இருபது நாள்கள் தங்கியாகிவிட்டது. இப்படித் தங்குவது என் இயற்கைக்கு ஒவ்வாத காரியம். இப்படித் தங்க முடிந்தது என்றால், அவர் மட்டும் அல்ல, குடும்பத்தினர் எல்லாருமே அவ்வளவு அன்போடு பழகினார்கள். ஆனால், தீபாவளி நெருங்க நெருக்க, “இவர்களை அளவு மீறி தொல்லைபடுத்துகிறோம்,” என்ற எண்ணம் வலுத்து வந்தது. தீபாவளிக்கு ஒரு வாரம்தான் இருக்கிறது என்றதும், ஜானகிராமனிடம் “நாளைக்கு ஜனதாவில் ஊருக்குப் புறப்படுகிறேன்” என்றேன்.

திகைத்துப் போனவர், “என்னது, ஊருக்குப் போய் என்ன செய்யப்போகிறீர்கள்? இங்கே மித்திரனில் சொல்லி இருக்கிறேன். எங்காவது சேர்ந்துவிடலாம்,” என்று அப்போதும் கட்டாயப்படுத்தினார்.

நான் இணங்கவில்லை. “தீபாவளிக்கு நான் இல்லாமல் குழந்தைகள் தவித்துப் போவார்கள்,” என்று நான் சொன்னது ஓர் உண்மை. ஊரில் புதுமையான அல்லல்களும் என்னை எதிர்பார்த்துத் தவிக்கின்றன என்ற மற்றோர் உண்மையை நான் அவரிடம் சொல்லவில்லை. மறுநாள் ஊருக்குப் புறப்பட்டேன்.

இந்த நண்பர் இப்போது எனக்கு இல்லை என்றாகிவிட்டார். என்னைப் பற்றி அவர் எழுதுவார் என்று நான் எண்ணியிருந்தேன். கெட்டிக்காரர், என்னைவிட இளையவர், என்னை முந்திக்கொண்டுவிட்டார்.

யாத்ரா இதழ் (40&41)

One Reply to “ஜானகிராமனுக்காக ஒரு கதை”

Comments are closed.