கரிச்சானின் கீதம்

kupara-1

[கு.ப.ராவுக்கு தி.ஜானகிராமன் ‘கலாமோகினி’ – 01.06.1944 – இதழில் எழுதிய இரங்கல் கட்டுரை]

ந்தக் கரிச்சான் குருவி இலக்கியத்திற்கு ஒரு புது விருந்தாளி. பட்டுக்கருப்பு. நல்ல அழகு. சுறுசுறுப்பே வடிவம். நிமிஷத்தில் நூறு முறை கழுத்தைத் திருப்பி அது எட்டுத்திக்கும் பார்ப்பதிலேயே ரொம்ப சூட்டிகையான பிரகிருதி என்று தெரிந்துவிடும். சன்னமான சாரீரம். சங்கீதத்தில் தேட்டையான ஞானம். சம்பிரதாயத்தையும் இலக்கணத்தையும் உண்டு பிழைத்துக் கொண்டிருந்த கவிமகாசயர்களுக்குக் குயிலோடு சங்கீதம் அற்றுப் போய்விட்டதுபோல் தோன்றிற்றோ என்னவோ? அலுக்காமல் சலிக்காமல் குயிலைக் கூப்பிட்டுப் பாடச்சொல்லி, தாங்களும் பாடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆயுஸில் ஒரு தரமாவது அதை நேரே பார்த்திராவிட்டாலும் அது மாம்பூவைத் தின்று கம்மல் குரலில் பாடிற்று, அதற்கு அஜீரணம் என்று அதன் போஜனத்தைக் கூடப் பாடினார்கள். அந்த அதிஸ்தோத்ரத்தில் இன்னும் பல பெரிய பாடகர்கள் அவர்களுடைய கண்ணில் படவில்லை. அதிர்ஷ்டக்கலம் பூஜ்யமாகி இருளில் வீழ்ந்து கிடக்கும் பல சங்கீத மேதைகளைப் போல பிரகிருதியின் சில பெரிய பாடகர்களும் தங்களுக்கு உரித்தான புகழைப் பெறவில்லை. இந்த துரதிர்ஷ்டக் கோஷ்டியில் கரிச்சானும் ஒன்று. ஆனால் அது புகழைப் பற்றிக் கவலைப்படவில்லை. வெறும் இனிமைக்காக ஆத்மார்த்தமாக தன்னுடைய ஆனந்தத்திற்காகவே நாதோபாசனை செய்தது.

இந்தக் கரிச்சானுக்கு பாரத்வாஜம் என்று சமஸ்கிருதப் பெயர். வால்மீகி இதைப் பார்த்துவிட்டு மற்ற பறவைகளோடு இதுவும் பாடிற்று என்று சொல்லிக்கொண்டே போவார். ஆனால் அவர் ஆதிகவி. குயிலைப் போல இது அவருடைய கவனத்தை அவ்வளவாக இழுக்கவில்லை. பின்னால் வந்த கவிகள் கவனித்திருக்கலாம். ஆனால் கவனிக்கவில்லை.

காரணம்? கரிச்சானின் கவிதைகளை ஒருவரும் கேட்கவில்லை என்று தோன்றுகிறது. அது பாடும் நேரத்தில் பஞ்சபஞ்ச உஷத் காலத்தில் உலகம் முழுவதும் தூங்குகிறது. கதை எழுதுவோர்க்குக் கேட்பானேன்? இராக்கண் விழித்து நடுநிசியில் பேனாவை மூடிவைத்து படுக்கையை விரிப்பவர்கள்.

ஒரு சமயம் கவிகள் கேட்டிருக்கலாம். ஆனால் வெளியே சொல்ல சங்கோஜப்பட்டிருப்பார்கள். குயில் மாதிரி இது பாடுகிறதோ? இது நல்ல பாட்டோ? என்று அவர்களே குழம்பியிருக்கவேண்டும். மயிலையும் குயிலையும் கமலப்பொய்கையையும் சந்திரனையும் போற்றிய பழமையின் கூச்சலுக்குப் பயந்துவிட்டார்களோ என்னவோ?

குடியானவர்கள் மூன்றாம் ஜாமத்தில் வயலுக்குச் செல்லும்போது அதைக் கேட்பார்கள். ஆனால் அவர்களுக்குக் கடிகாரம்தான் அது. ஓரிரண்டு பேர் ரசித்தாலும் ரசிக்கலாம். இறுதியாக கரிச்சானின் புகழ் மிகவும் சிறிய எல்லைக்குட்பட்டதுதான். குடவிளக்கு.

thija-logo4இலக்கியச்சோலையில் புது விதை நடப்போன கு.ப.ரா., பிச்சமூர்த்திகளின் காதில் அது விழுந்தபோது அதற்கு அதிர்ஷ்டம் பிறந்தது. பிச்சமூர்த்தி பஞ்சமகாகவிகளில் ஒன்று என்று அதில் லயித்துவிட்டார். கு.ப.ரா அதன் பெயர்களையே தமிழ், சமஸ்கிருதம் இரண்டு பெயர்களையும் ஸ்வீகரித்துக் கொண்டார். இந்த மனுஷ்யக் கரிச்சான் பல காதல் கவிதைகளையும், கட்டுரை, கதைகளையும் பாடிற்று. யதுநாத சர்க்காரின் கையில் கருகிப்போன சிவாஜியின் புகழ், வீரம், தூய்மைகளுக்கு இந்த பாரத்வாஜம்தான் புத்துயிர் அளித்தது.

கு.ப.ராவின் ஒரு பெரிய குணத்திற்கும் இந்தக் கரிச்சான் காதலுக்கும் சம்பந்தமுண்டு. இளம் எழுத்தாளர்களுக்கு அவர் பெரிய ஆதரவாக இருந்தார். அவர்கள் எழுதி வாசித்துக் காட்டிய ஆயிரக்கணக்கான கட்டுரை, கதைகளை அலுப்பில்லாமல் சுணங்காமல் கேட்டுத் திருத்தங்களைச் சூசித்துக் கொண்டே இருப்பார். இந்த இளம் ஹிருதயங்களை முன்னுக்குக் கொண்டு வந்த ஆர்வம் கரிச்சானையும் முன்னுக்குக் கொண்டு வந்தது. ஆனால் கரிச்சானைத் திருத்த வேண்டிய அவசியம் மட்டுமிருக்கவில்லை. அது பிறக்கும்போதே மகாவித்வானாகத்தான் பிறக்கிறது.

பழமைக்கும் புதுமைக்கும் ‘ராஜி’ செய்து வைக்க கு.ப.ரா செய்த பல முயற்சிகளின் முத்திரையாகக் கூடத் தோன்றுகிறது இந்த கரிச்சான் காதல்.

இலக்கியக்காரர்களின் வழக்கம் கு.ப.ரா-விடம் பூர்ணமாக இருந்தது. இரா முழுதும் பேசுவார். படிப்பார். சிந்திப்பார். தீராப் பறியாகத் தூங்கின தூக்கம் மூன்றாம் ஜாமத்தில் கலைந்துவிடும். கரிச்சானின் உஷத் கால கீதத்தை அவர் கேட்காமல் இருந்ததில்லை.

ஒரு நாள் இரவு. நான்கு மணி வரையில் பேசிக்கொண்டே இருந்தோம்.

“சிரமமாயிருக்குமே. படுத்துக் கொள்ளலாமே!” என்று ஆரம்பித்தேன்.

“என்ன ஸார்… வந்திப் பாடகன் ஆரம்பித்துவிட்டானே. இனிமேலா?” என்று சொன்னவர் சற்று பெரிதாகவே சிரிக்க ஆரம்பித்தார். கரிச்சான் அந்த நிசப்தத்தில் ஒரு மெட்டைத் திருப்பித் திருப்பிப் பாடிக்கொண்டிருந்தது. சாதகம் செய்பவன் வரவர அபிவிருத்தி காண்கிறது போல, அதன் மெட்டு போகப் போகத் தெளிவுபடவே அது உயிர் முழுவதையும் செலுத்திப் பாடத் துவங்கிற்று.

இப்போதுதான் சூடு ஏறி மேளம் கட்டியிருக்கிறது,” என்றார் அவர். அதன் புதுப்புது மழலைகளைக் கேட்டு அவருக்குச் சிரிக்காமல் இருக்க முடியாது.

ஒரு இம்மி கூட மறதி, மாறல் இல்லாமல் அது ஒரே மெட்டை அனுபவித்துப் பாடும்போது, “பெரிய ஜீனியஸ்,” என்று சொல்லிவிட்டுக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

சற்றுக் கழித்துப் பறவை ஓய்ந்துவிட்டது.

“இனிமேல் படுத்துக் கொள்ளலாம். இனிமேல் கோழி கத்தும். வெயில் வந்ததும் ஒரு நிகழ்ச்சி உண்டு. நாம் எழுந்து கொள்வதற்கும், அதற்கும் சரியாக இருக்கும்” என்று அவர் யோசனை சொன்னார்.

கரிச்சானைக் கேட்கும்போதெல்லாம் கு.ப.ரா சொல்வார், “நல்ல இருட்டில் வெளிச்சத்தினாலே கோடு எழுதுகிறாற்போல மின்னல் மாதிரி. என்ன சன்னமான சாரீரம் பார்த்தேளா?”

இரட்டையர்கள் கு.ப.ராவும், ந.பி-யும் கடைசி முறையாகச் சந்தித்தபோது கூட கரிச்சானைப் பற்றித்தான் பேசினார்கள். தஞ்சாவூர் மொட்டை மாடியில் தேய்பிறை ஒளியில் படுத்துக்கொண்டிருந்தபோது பறவை பாடிற்று.

“ஒவ்வொரு வார்டுக்கு ஒரு குருவி உண்டு போல இருக்கு,” என்றார் கு.ப.ரா.

வானம்பாடி, மைனா, கரிச்சான் இன்னும் இரண்டு பேரைச் சேர்த்து ‘பஞ்ச மகா கவிகள்’ என்று ஒரு பாட்டைப் பாடிக்கொண்டிருந்தார் பிச்சமூர்த்தி.

கடைசிமுறையாக இரட்டையர்கள் சேர்ந்து கேட்கவேண்டுமென்று ஒரு கவிதை பாடிவிட்டுக் கரிச்சான் பறந்து போயிற்று. இப்பொழுது அதற்கே பெரிய நஷ்டம்.

கலாமோகினி 01.06.1944.

One Reply to “கரிச்சானின் கீதம்”

Comments are closed.