‘உதய சூரியன்’ – தி.ஜானகிராமனின் ஜப்பான்

அஸ்தமித்துப் போன வேளையில் புத்தகம் ஒன்று கிடைத்தது : தி.ஜானகிராமனின் ‘உதய சூரியன்’. பெரியவரின் கும்பகோணம் பன்னீர்ப் புகையிலை மணக்கும் ஜப்பான் பயண அனுபவங்கள்.

தி.ஜா எதற்காக ஜப்பான் போனார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அறுபதுகளின் சோசலிச சர்க்கார் செய்த எத்தனையோ தண்டச் செலவுகளில், ஏதாவது குறுக்குக் கலாசாரப் பரிவர்த்தனை என்று அனுப்பியிருப்பார்கள் போலிருக்கிறது. ரூபாய்க்கு 75 யென் கிடைத்துக்கொண்டிருந்த பொற்காலம். போனவர் அங்கே சைவ சாப்பாடு கிடைக்காமல் சற்றுத் திண்டாடியிருக்கிறார். சானோயு தேநீர் உபசாரம், சூமோ குஸ்தி முதல் ஆடை அவிழ்ப்பு நடனம் வரை எதையும் விட்டு வைக்காமல் ஒரு ரவுண்டு பார்த்திருக்கிறார்.

மிடில் க்ளாஸ் தஞ்சாவூர்த் தமிழர் விமானத்தில் ஏறினால் முதலில் தோன்றும் எண்ணம், இந்த இயந்திரப் பறவை எப்போது விழுந்துவிடுமோ என்ற பயம். போதாதற்கு ‘பிராண வாயு விநியோகத்தில் கோளாறு வந்துவிட்டால் இதை எடுத்து மூக்கில் வைத்துக்கொள்ளலாம்’ என்று எதையோ பிரித்துக் காண்பித்துவிட்டுப் போகிறாள் உபசார மங்கை. “ஒரு க்ஷணத்தில் புரிந்துகொள்ளும் மேதையாக இருந்தால்தான் அவள் சொல்வது புரியும். அவள் நின்று விளக்க மாட்டாள். அவளுக்கு இன்னும் எத்தனையோ வேலை.”

மனசுக்குள் லலிதா சகஸ்ரநாமம் சொல்லிக்கொண்டே ஒரு வழியாக டோக்கியோவில் போய் இறங்குகிறார். சுங்கச் சோதனை அரை நிமிஷத்தில் முடிந்துவிடுகிறது. சவத்தை அறுத்து சோதனை செய்யும் டாக்டர் முடிவில் மூளை, இருதயம் எல்லாவற்றையும் வயிற்றில் போட்டுக் கட்டித் தைத்து அனுப்புவது போல் அப்படியே குவித்துத் திணித்து அனுப்புவது நம்ம ஊர் சுங்கச் சிப்பந்திகளுக்குத்தான் வழக்கம். ஆனால் ஜப்பானிய அதிகாரி பணிவாகக் கனிவாக இருக்கிறார். அனுமதிச் சீட்டைப் பார்த்துப் பதிவு செய்துகொண்டதும் தலை தாழ்த்தி விடை கொடுத்துவிட்டு, அடுத்து வருபவரிடம் புன்னகையை மாற்றிக் கொள்கிறார்.

தி.ஜா.வின் பிரத்தியேக நடையும் அந்தக் காலத்து வார்த்தைப் பிரயோகங்களும் வசீகரிக்கின்றன. கின்ஸா வீதியின் நியான் லைட் களேபரம் பற்றி வர்ணிக்கிறார் : “கின்ஸா அப்பேர்ப்பட்ட ஒரு கந்தர்வ லோகம். அங்கே இரவு, பகலாக இருக்கும். மின்சார விளக்குகளால் எத்தனை ஜாலங்களும், பகட்டும் செய்ய முடியுமோ, அத்தனையும் அங்கே செய்து வைத்திருக்கிறார்கள். நியான் விளக்குகளில் எத்தனை வர்ணங்கள் சாத்தியமோ, எத்தனை ஓட்டங்கள், சலனங்கள், வடிவங்கள், கோணல்கள், வியப்புகள் எல்லாம் சாத்தியமோ, அத்தனையும் செய்து காட்டியிருக்கிறார்கள்”.

செயற்கையை இப்படி சிலாகிக்கிறார் என்றால், இயற்கையைப் பார்த்து பிரமிக்கும்போது முதலில் வார்த்தைகள் கடகடவென்று வந்து விழுகின்றன. கடைசியில் பேச்சற்றுச் செயலற்று அழகான மௌனம் கவிந்து போகிறது : “மலைப் பிராந்தியத்தில் ஏறிச் செல்லும் ரயில் அது. நாங்கள் போன சமயம் இலையுதிர் காலம். செர்ரி போன்ற மரங்கள் எல்லாம் தகதகவென்று எரியும் பொன் போலச் சுற்றிலும் சிலிர்த்துக் கொண்டிருந்தன. இலைகள் அப்படித் தங்கமாக மாறி, தாமிரமும் ஆரஞ்சும் மஞ்சளும் சிவப்புமாகப் பல வர்ணத் தீயைப் போல மைல் கணக்கில் அடி வானம் வரையில் பரந்து ஜொலிக்கும் அந்த வனப்பை நான் கண்டதில்லை. உயரமும் அந்த வர்ண நெடும் பரப்பும், தனிமையும் மெல்லிய பட்சியோசையும் புறக் கண்ணை ஊடுருவி, ஒரு அமானுஷ்யமான அந்தராத்மாவில் ஆழ்ந்து தோயும் அனுபவமாக, மறதியாக, மேலும் மேலும் ஆடிச் சென்றுகொண்டே இருந்தன. வாயைத் திறந்து பேசக் கூட முடியவில்லை. திறந்தால் அந்த அமைதி, ஆனந்தம், லயம் எல்லாம் கெட்டுவிடும் போலிருந்தது. மோனம் கிடப்பதைத் தவிர வேறு செய்வதற்கில்லை”.

Oregon Autumn

டோக்கியோவிலும் ஒரு சாமிநாதன் அகப்படுகிறார். தீனா ஜானாவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. “யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஐயாயிரம் மைலுக்கப்பால் நம் ஊர்க்காரனை, நம் மொழி பேசுகிறவனை, நம் சாப்பாட்டைச் சாப்பிடுகிறவனைக் கண்டால் ஏன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து விழுந்து கட்டிக்கொள்கிறோம் ? சீமைப் பற்று வஜ்ரப் பசை. அதை அவ்வளவு லேசில் பிரித்துவிட முடியாது.”

ரயில் நிலையத்துக்குப் போனால் கூலிகள், போர்ட்டர்கள் கிடைப்பது கடினம். அலுவலகங்களில் ப்யூன், டவாலிச் சேவகர் பதவிகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. காரணம் ஜப்பானின் சுபிட்சம். விவசாயமாகட்டும், பெரும் தொழில், சிறு தொழில் ஆகட்டும், எதையெடுத்தாலும் சக்கைப் போடு போடுகிறது ஜப்பான். உற்பத்தி நிரம்பி வழிகிறது. வருமானத்தில் மலை மடு வேறுபாடுகள் மிக மிகக் குறைந்து போயிருக்கின்றன.

இதற்கு ஒரு காரணி அவர்கள் படிப்புக்கு முன்னுரிமை தருவதனால் இருக்கலாம். ஜப்பானில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 99.6 விழுக்காடு. (அந்த அரைகுறை ஆசாமியையும் பிடித்துக்கொண்டு போய்ப் பள்ளிக்கூடத்தில் உட்கார வைத்துவிடுவதுதானே ?)

நடுத்தரப் பள்ளி வரையில் கட்டாயக் கல்வி. அதற்கு மேல் படிக்காமல் வேலைக்குச் சென்றுவிடுகிற இளைஞர்கள் தனியாகப் படித்து உயர் தகுதி பெற முடியும். இதற்காக ஜப்பானின் பொது ஒலிபரப்புக் கார்ப்பொரேஷன் பெரிய அளவில் பல பாடங்களில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. குழந்தைகள், முதியோர், தொழில் நுணுக்கம் கற்க விரும்புகிறவர்கள் – இப்படிப் பலதரப்பட்டவர்களுக்காக வாரம் 84 மணி நேரத்துக்கு நிகழ்ச்சிகள் இருக்கின்றன. எல்லா விதமான அயல் மொழிகளையும் ரேடியோவே சொல்லித்தருகிறது.

எனினும் மொழிப் பிரச்சினை நிறையவே இருந்தது. ‘டகாமோ டபேமாஸேன் (நான் கோழி முட்டை சாப்பிடமாட்டேன்)’ என்பது வரைதான் ஜப்பான் மொழியைக் கற்க முடிந்தது. பால் வேண்டுமென்றால் மைம் ஷோ மாதிரி மாடாக நடித்துப் பால் கறக்கும் அபிநயம் பிடித்துத்தான் சமாளிக்க வேண்டியிருந்தது.

ஜப்பான்காரர்கள் அந்நிய மொழிகளைக் கற்காமல் இல்லை. நிறையக் கற்கிறார்கள். ஆனால் தேவை உள்ளவர்கள்தான் கற்கிறார்கள். மற்றவர்கள் கற்பதில்லை. ஜப்பானிய மொழியிலேயே மிக உயர்ந்த விஞ்ஞானம், சரித்திரம், தத்துவம் எல்லாவற்றையும் படித்துவிடுகிறார்கள். கல்லூரிப் படிப்பு, பொறியியல், மருத்துவம் எல்லாமே ஜப்பானிய மொழியில்தான் நடைபெறுகின்றன.

சைவர்களுக்கு ஜப்பானில் காலம் தள்ளுவது கஷ்டம். காய்கறி உணவுதான் சாப்பிடுவேன் என்ற நம்முடைய வழக்கத்தைச் சொன்னால், நமக்கு விருந்திடும் நண்பர்கள், ஹோட்டல்காரர்கள் எல்லோருமே தவித்துத் தண்ணீராக உருகிவிடுகிறார்கள். “இவர்களுக்கு என்னத்தைக் கொடுக்கலாம் ? இவர்கள் பசி ஆறிப் போக வேண்டுமே ! நல்ல பேரோடு நாம் விடுபட வேண்டுமே !” என்று அவர்கள் படுகிற கவலை கொஞ்ச நஞ்சமல்ல.

thija-logo3நல்ல வேளையாக நாயர் ஒருவர் டோக்கியோவில் ஹோட்டல் நடத்துகிறார். பருப்பு, நெய், அப்பளத்துடன் புகுந்து விளாசுகிறார் பிரயாணி. பக்கத்து டேபிளில் சாப்பிடும் மற்றொரு தென்னிந்தியர், “தயிர் சாதத்தைப் பார்த்து மாசக் கணக்கில் ஆகிவிட்டது சார்,” என்கிறார். “கோபே, கியோத்தோ போன்ற இடங்களுக்கெல்லாம் போய்விட்டால் ஒன்றும் நடக்காது. வேறு வழியில்லாமல் வயிற்றுக் கொடுமையிலிருந்து தப்புவதற்காக மாட்டிறைச்சி கூடச் சாப்பிடப் பழகிவிட்டேன். சார், நல்ல வேத வித்துக்கள் பிறந்த குடும்பம். எங்கள் தகப்பனார், தாயார் நல்ல ஆசார சீலர்கள். எனக்கு இப்படி ஆகிவிட்டது,” என்று பறந்து போன குலதர்மத்தைச் சூன்யத்தில் பார்த்துக்கொண்டே பேசுகிறார்.

போய் இறங்கியதும் விமான நிலையத்திலேயே ஒன்றைக் கவனித்திருக்கிறார் : ‘ஆயிரம் ஜனங்களுக்கு மேல் கூட்டம். ஆனால் யாருமே இல்லாதது போல ஒரு அமைதி அங்கே நிலவியிருந்தது. ஜப்பானில் எங்கு போனாலும் காச்சு மூச்சு சத்தத்தைக் கேட்க முடியாது என்று பின்பு தெரிந்தது. எப்படி இந்தப் பண்பை உருவேற்றியிருக்கிறார்கள் ? மதப் பயிற்சியா ? வாழ்க்கை முறையா ? பிறவிக் குணமா ? இல்லை, நடிப்பா ?’

‘முதல் ஒரு வாரத்துக்குள் எங்கள் குரல்கள் தாமாகத் தழைந்துவிட்டன. உரக்கக் கத்துவது, தனக்கு முடியும் என்று ஒரு கட்டை அதிகமாகவே சுருதியைப் பெருக்கிக்கொண்டு பேசுவது – இது அநாகரிகக் காட்டுத்தனம் என்று ஒரு உணர்வு படிந்துவிடுகிறது. ஜப்பானிய வாழ்க்கையின் ஆதார சுருதி இது. ஒரு அமைதி, ஒரு நிதானம், ஒரு எளிமை. அதனால்தான் ஆர்ப்பாட்டமான களியாட்டங்களைக் காணும்போதும், விளையாட்டுக்களைப் பார்க்கும்போதும் தாட்பூட் என்று நடக்கவும் கத்தவும் கூச்சலிடவும் நமக்குத் தோன்றுவதில்லை. அந்த அடக்கமும் நயமும் நம்முடைய உடலிலும் படிந்துவிடுகின்றன.’

ஜப்பானில் பஸ் கண்டக்டர்கள் கூட முரட்டுத்தனமாகப் பேசுவதில்லை. வார்த்தைக்கு வார்த்தை ‘அரிஙாதோ கொஸாய்மாஸ்’ என்று தாங்க்ஸ், ப்ளீஸ் போடுகிறார்கள். பல கடைகளில் முதலாளி எங்கோ பின்னால் உட்கார்ந்திருப்பார். குரல் கொடுத்தால் வந்து விலை சொல்லவோ, விற்கவோ செய்வார். கூப்பிடாமல் நீங்களாக ஏதாவது எடுத்துக்கொண்டு போனாலும் போனதுதான். மனிதர்களில் யாரும் அப்படிச் செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அரையணாவுக்கு சாமான் வாங்கினாலும் அழகான காகிதத்திலோ, துணியிலோ, பைன் மரப் பெட்டியிலோ கலையுணர்வோடு கட்டி ஒட்டித்தான் ஜப்பானில் கொடுப்பார்கள். அதை ஒரு தொழில் மரியாதையாகவே வளர்த்திருக்கிறார்கள்.

டோக்கியோவின் வீடுகள் இன்னும் ஜப்பானிய வீடுகளாகத்தான் இருக்கின்றன. மேற்கத்திய கட்டிடக் கலை நம் நாட்டில் திணித்திருக்கும் நெருப்புப் பெட்டி- சிகரெட் பெட்டி வீடுகளை அங்கே காண்பது அரிது. ஜப்பானியக் கூரையுடன் சின்னச் சின்ன மர வீடுகளாகத்தான் டோக்கியோ நகரம் காட்சியளிக்கிறது. கொழுத்த தொழில் முதலாளிகள் கூட அரண்மனைகளைக் கட்டிக் கொள்வதில்லை. வீட்டுத் தோட்டமே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. பைன் போன்ற ஊசியிலை வர்க்கங்கள் அதிகம். ரயிலிலிருந்தோ, மலையிலிருந்தோ எங்கிருந்து பார்த்தாலும் பைன் காடுகளும் சின்ன இலை மரங்களும் செடிகளும்தான் நம் கண்ணில் படுகின்றன.

ஒரு சினேகிதரின் வீட்டுக்கு அழைத்துப் போகிறார்கள். சின்ன வீட்டைச் சுற்றிய சிறிய இடத்தில் ஒரு காடே உருவாகியிருக்கிறது. இயற்கையை அப்படியே தோன்றியவாக்கில் அங்கே உருவாக்கியிருந்ததுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது. வீட்டுக்காரரைக் கேட்டால், “தோட்டம் அமைத்திருப்பதாகவே தெரியக் கூடாது. அது வருகிறவர்களை இழுத்துப் பிடித்து நிறுத்தக் கூடாது. நிலத்தோடு நிலமாக, வானத்தோடு வானமாக, வீட்டோடு வீடாக அது கிடக்க வேண்டும்” என்கிறார்.

“வீட்டுக்குள் எங்கும் தரை தெரியாமல் பாய் போட்டு வைத்திருக்கிறார்கள். நம்ம ஊரில் பார்க்கிற சீர்காழி, அய்யம்பேட்டை, பத்தமடைப் பாய்கள்தான். இதே கோரையால்தான் அங்கேயும் பாய் முடைகிறார்கள். வீடுகளுக்கு மரச் சுவர்தான். இடுப்பு உயரத்திற்கு மரம்; அதற்கு மேல் எண்ணெய்க் காகிதம் போன்ற, பிஸ்கட் சுற்றுகிற காகிதம் போன்ற காகிதம். பார்க்க அழகாக இருக்கிறது. இரவு வேளைகளில் விளக்குப் போட்டதும் அந்தக் காகிதத்தில் கண்ணுக்குக் குளிர்ச்சியான மென்மையான ஒளி பரவி, ஒரு கனவுலகப் பிரமையை எழுப்புகிறது. ஒரே ஒரு சிறு ஓவியம் மாட்டியிருக்கிறது. அறையின் ஒரு மூலையில் ஒரு அகலச் சட்டியில் மலர்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

நம்முடைய குழந்தைகளுக்குக் கோலம் போடும் கலையைக் கற்பிப்பது போல், ஜப்பானில் இந்த ‘இக்கிபானா’ என்ற மலர் அலங்காரக் கலையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அதற்குத் தனியாகப் பள்ளிக்கூடங்களே இருக்கின்றன. இக்கிபானாவில் எத்தனையோ வகை, எத்தனையோ கொள்கைகள். வர்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது, உருவ அமைதிக்கு முக்கியத்துவம் கொடுப்பது இப்படிப் பலப்பல வகை. சுற்றுப் புறத்தில் கிடைக்கும் செடிகளையும் மலர்களையும் கொண்டே அலங்காரத்தைச் செய்துவிடுவதுதான் இதில் விசேஷம்.

இன்னொரு மூலையில் ஒரு சாண் உயர – அகல மண் தொட்டியில் ஒரு மரத்தைப் பார்த்தேன். ஐம்பது அறுபது வயதான குள்ளர்களைப் பார்க்கிறோமே, அம்மாதிரி இருந்த கிழ மரம். ஆனால் மூன்றடி உயரம்தான். காட்டில் வளர்ந்தால் முப்பது அடி – அறுபது அடி உயரம் இருக்கும் அது.

அதுவும் அவர்கள் அதை வீட்டில் வைத்திருக்கிற விதம் இன்னும் அழகாக இருக்கிறது. ஒரு ஓவியம், ஒரு மலர் அலங்காரம், ஒரு குள்ளச் செடி, மரச் சுவர்கள், காகிதத் தடுப்புகள் – இவ்வளவும் உலகில் வேறு எங்கும் காண முடியாத ஒரு விசித்திர அமைதியை, சூழ்நிலையை உருவாக்கிவிடுகின்றன. கண்டான் முண்டான்களைப் போட்டு அடைக்காத வீடுகள் அவை. எளிமை, கவர்ச்சி, நிசப்தம், இனிமை, மென்மை, சிக்கனம் எல்லாம் சேர்ந்து ஒரு வடிவமாக உருவான வீடு ஜப்பானிய வீடு. வீடு மட்டும் இல்லை, வாழ்க்கையே அதுதான்”.

மெய்ஜி அரசரின் பூங்காவில் செர்ரி, பைன், மூங்கில் மரங்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு தடாகம். அங்கே உள்ள தேநீர் உபசார விடுதிக்குப் போகிறார். (ஜப்பானியத் தேநீர் – ‘டீயா அது ? பச்சையாக இருந்தது; ஒரு வாய் சாப்பிட்டால் புதுச் சீட்டுக்கட்டு வாசனை அடித்தது’). தேநீர் உபசாரத்தின்போது பேசக் கூடாது. முழு மௌனம் நிலவ வேண்டும். நடக்கிறவர்கள் சந்தடியின்றி அடக்க ஒடுக்கமாக நடக்கிறார்கள். மூச்சு விடுவதைக் கூட யோசித்து, அடக்கி ஒடுக்கி விட வேண்டியிருக்கிறது. அப்படி நிரம்பி வழிகிறது மௌனம்.

முதலில் உட்கார்ந்திருந்த பெண் தேநீர்க் கிண்ணத்தைக் கையில் எடுத்து உள்பக்கம், மேல் பக்கம் எல்லாவற்றையும் நன்றாகப் பார்த்தாள். புன்னகை பூத்தாள். ஒரு நிமிஷம் அப்படிப் பார்த்த பின் லேசாக சிரம் தாழ்த்தினாள். பிறகு பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் அதையே செய்கிறார். “அது உயர்ந்த ரகப் பீங்கான். கறுப்பும் சிவப்பும் நீலமும் கலந்த ஒரு வர்ணம். நாள் முழுவதும் அதன் வடிவைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் எங்களுக்கோ இந்த மௌனமும் அடக்க ஒடுக்கமும் தாங்கவில்லை. ஐந்து வினாடியில் நகர்த்திவிட்டோம். இது எவ்வளவு பெரிய தவம், பயிற்சி என்பது இப்பொழுதுதான் தெரிகிறது. வாழ்க்கையில் ஒரு அரை மணி நேரம் மௌனமாகவும், விச்ராந்தியாகவும் அதே சமயம் ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டும் இருப்பதுதான் எவ்வளவு கடினமாக இருக்கிறது !”

பாத்திரம், அகப்பை இவற்றின் வடிவழகை வியந்த பிறகு ஒரு தட்டில் பட்சணம் போல ஏதோ வந்தது. வறுத்த மாவில் செய்த பிசைவு போல இருந்தது. அரை இனிப்புடன் ஏதோ வாசனை கலந்திருந்தார்கள். அவ்வளவுதான். அதற்கு சிப்பியைப் போல அழகு வடிவம் கொடுத்துச் செய்திருந்தார்கள். ‘முதலில் உட்கார்ந்திருந்த பெண் ஒரு டிஷ்யூ பேப்பரை மூலை மடிப்பாக முக்கோணமாக மடித்தாள். பட்சணத்தை அதன் நடுவில் வைத்து இரண்டு கைகளாலும் காகிதத்தைப் பிடித்துக்கொண்டாள். பிறகு கன்னங்களை மறைத்து, தின்பது தெரியாமல், மெல்வது தெரியாமல் தின்றாள் அவள். மற்ற கடன்களைப் போலவே சாப்பிடுவதும் அவ்வளவு ரசிக்கத்தக்க காட்சியல்ல என்பதை ஜப்பானியரும் புரிந்துகொண்டிருக்கிறார்கள் !’

‘பீங்கானில் தேநீர் வந்தது. பச்சையாக, மரகதம் போல் கண்ணைக் கவர்ந்தது அந்தத் திரவம். எல்லோருக்கும் வைத்த பிறகு இரண்டு கைகளாலும் எடுத்து புர்ரென்று உறிஞ்சிவிடாமல் மெதுவாக, சத்தம் போடாமல் இருந்து அருந்தினோம்.’

தேநீர் உபசார அறை சூன்யமாகத்தான் இருக்கும். தேநீர் அருந்தும் பாத்திரம், இருக்கைகள் இவற்றைத் தவிர வேறு ஒன்றும் இருக்காது. அதாவது, வறுமை அழகாகத் தோற்றம் அளிக்க வேண்டும். வறுமையிலும் துப்புரவு, இனிமை எல்லாம் சாத்தியம் என்பதுதான் அர்த்தம்.

japan1

இந்த பூலோக வாழ்க்கையை அழகுணர்சியுடன் மென்மையாக வாழக் கற்பிக்கிறது தேநீர் உபசாரம். புத்த மதத்தில் விதிக்கப்பட்டுள்ள ஸதிபத்தானம் என்ற பயிற்சி ஞாபகம் வருகிறது. தன்னைத் தானே பார்த்துக்கொள்ளும் கலை அது. பெரிய வித்தை. அடிப்படையான அளவில் சொல்ல வேண்டும் என்றால், எந்தக் காரியத்தையும் உணர்வோடு, நினைவோடு செய்ய வேண்டும் என்று அது விதிக்கிறது. உட்கார்ந்திருந்தால், உட்கார்ந்திருப்பதாக அடிக்கடி நினைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டால் சாப்பிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். நடக்கும்போது அதில் நினைவு இல்லாமல் நடக்காதீர்கள். அப்படியே சரீரத்தைக் கடந்து மனத்தையும் அதன் எண்ணங்களையும் எட்ட நின்று பார்க்கச் சொல்கிறது அந்த விதி.

மதம் ? ‘ஜப்பானில் மதத்தின் பிடிப்பு மிக மிகக் குறைவு என்றுதான் எனக்குப் படுகிறது. நம்மைப் போல் மதச் சடங்குகளில் ஈடுபடுவது, செலவழிப்பது, விடுமுறை விடுவது இவற்றை அங்கே காண்பது அரிது. ஜப்பானில் பூகம்பம், கடல் கொந்தளிப்பு இரண்டும் தண்ணீர் பட்ட பாடு. ஆசைகளையும் நம்பிக்கைகளையும் முன்னறிவிப்பின்றி திடீர் என்று பொசுக்கிச் சாம்பலாக்கி இடுப்பொடிக்கும் வேகத்துடன் இயற்கையின் சீற்றங்கள் அங்கு வருகிறது வழக்கம். காயமே இது பொய்யடா என்று துந்தினம் ஏந்தும் மனப்பாங்கும் நிராசையும் விதிவாதமும் மலிந்து நிற்கக்கூடிய ஒரு அநிச்சயமான சூழ்நிலை’.

நம் நாட்டைப் போல இமயமும் கங்கையும் கோதாவரியும் அங்கு இல்லை. ஆனால் இருக்கிற சில மலைகளையும் குன்றுகளையும் பார்த்துப் பார்த்து, போற்றிப் போற்றி, அவற்றைப் பற்றிச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போகிறார்கள்.

ஜப்பானியரின் தூய்மை, மென்மை, எளிமை, இனிமை எல்லாம் ஜென் குருமார்கள் போதித்தவை. 6-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மர் அந்த போதனைகளைக் கிழக்கு ஆசியாவுக்கு எடுத்துச் சென்றார். தியானம் – தியான் என்பதுதான் மருவி ஜென் என்று ஆகியிருக்கலாம். இதே அடிப்படையில் புஷிதோ என்ற மரபும் கிளம்பிற்று. புஷிதோ என்பது கடமை, மென்மை, வீரம், இரக்கம் எல்லாம் கலந்துகட்டியாக வாழ்வது. ஒரு பெரிய ராணுவப் படை முன்னேறும் வழியில் ஒரு மலர் கிடந்தால், அதை மிதிக்காமல் காப்பாற்றுவதற்காக தளபதி தன் படையை நிறுத்திவிட வேண்டும். புஷிதோ மரபுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

பூவை மிதிக்காமல் சுற்றிக்கொண்டு அவர்கள் சென்ற இடம் நான்கிங் என்பதை, ஜானகிராமன் லேசாகத்தான் கோடிட்டுக் காட்டுகிறார்.