விலங்குகளின் அறம்

1-elephant-family-carl-purcell

அண்மையில் நான் படித்ததொரு செய்தி வியப்பளிப்பதாக இருந்தது. செய்தி என்னவோ எளிமையான ஒன்றுதான், ஆனால் அதன் அவசியம் நம் அறிவியல் அடிப்படையிலான தேர்வுகளைக் கேள்விக்குறியாக்குவதாக இருந்தது – மரபணுவின் அடிப்படையில் மனிதர்கள் சிம்பன்ஸீக்களைவிட பொனோபோ குரங்குகளுக்கே நெருங்கியவர்களாக இருக்கிறார்கள்.

குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்று சொல்கிறோம், ஆனால் மனிதன், சிம்பன்ஸீ, பொனோபோ இந்த மூன்றும் (இதில் மனிதனைத் தவிர மற்ற இரண்டும் குரங்குகள்) 98.8 சதவிகித மரபணுத் தொகுப்பில் ஒன்றே போலிருக்கின்றன. இவற்றுக்குப் பொதுவான யாரோ ஒரு மூதாதையர் இருக்கிறார். இவர்களில் இத்தனை நாட்கள் நாம் சிம்பன்ஸீ குரங்குகளைப் போலிருக்கிறோம் என்று அறிவியலாளர்கள் சொல்லி வந்தனர். ஆனால் இப்போது சிம்பன்ஸீயின் மரபணுத் தொகுப்பு விரைவான மாற்றங்களுக்கு உட்படுவதால் அவை மனிதனை விட வெகு தூரம் விலகிப் போய் விட்டதாகவும், மனிதன் பொனோபோ குரங்கைப் போன்றவன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று சொல்கின்றனர்.

bonobo

இது ஒன்றும் அறிவுலகில் ஒரு ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பைப் போன்ற மாபெரும் புரட்சியல்ல. ஆனால் இதைத் தொட்டு எழும் சிந்தனைகள் மனிதனுடைய இயல்பு குறித்து ஒரு பெரிய அளவில் பார்வை மாற்றம் செய்வதாக இருக்கிறது.

டார்வினின் காலம் வெள்ளையர்களை உயர்ந்தவர்களாகப் பார்த்த காலம். மற்றவர்கள் விலங்களைப் போன்றவர்கள் என்று நினைத்த காலம். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது அறிவியல் உண்மையாக அடையாளம் காணப்பட்டு அதைத் தொடர்ந்து அது பொருளாதார உண்மையாகவும் அறியப்பட்டு, அரசியலில் சொல்லப்படாத நடைமுறையாக இன்று இருக்கிறது.

இதற்கெல்லாம் மனிதன் சிம்பன்ஸீயைப் போன்றவன் என்று சொல்வது பயனுள்ளதாக இருந்தது. காரணம் சிம்பன்ஸீக்களின் இயல்பு அப்படி. குரங்குகள் தங்கள் பகுதியைக் காக்க ஆண்களைக் காவல் குரங்குகளாய் நியமிக்கின்றன – அவை அந்நியக் குரங்குகளைக் கொலை செய்கின்றன. குழந்தைகளைக் கொல்கின்றன, அடித்துக் கொன்ற குரங்குகளைத் தின்கின்றன, வழிக்கு வராத தம் கூட்டத்தைச் சேர்ந்த குரங்குகளையும் கொல்லத் தயங்குவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் குரங்குகள் வேட்டையில் ஆவேசமான களிப்படைகின்றன. இது எல்லாம் மனிதன் வன்முறைக்குப் புதியவனல்ல, அது அவனது இயல்பு என்று நியாயப்படுத்த உதவுவதாக இருந்தன. ஆனால் பொனோபோக்கள் பாவம், அவற்றின் பெண்கள் ஆண்களை எதிர்த்து நிற்கிறார்கள், ஒன்றோடொன்று சேர்ந்தியங்குகின்றன:

இதெல்லாம் நமக்கு சரிப்படவில்லை. இங்கு மனிதனின் பிம்பம் கிடைக்கவில்லை. இப்போதிருப்பதற்கு இணையான தகவல் அப்போது இருந்தாலும், நமக்கு சிம்பன்ஸீக்களே நெருங்கியவர்களாக இருந்தார்கள். பொனோபோ குரங்குகள் புறக்கணிக்கப்பட்டன.

காலம் மாறுகிறது, நமது விழுமியங்களும் மாறி வருகின்றன. இப்போது பொனோபோக்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அவை நம்மைப் போன்ற இனமாக அடையாளம் காணப்படுகிறது. சிம்பன்ஸீக்கள் இனி மெல்ல மெல்ல நமது ஆய்வுக் கூடங்களில் இருந்து வெளியேற்றப்படும் என்று நம்பலாம். எதிர்கால ஆய்வுகளில் பொனோபோக்கள் உட்படுத்தப்படும்.

–ooOOOoo–

பொனோபோக்கள் என்றில்லை, அனைத்து விலங்குகளும்கூட வளமான உணர்வுலகில் வாழ்வனவாக இருக்கின்றன என்று சில தகவல்களைப் படிக்கும்போது தோன்றுகின்றது. அறவுணர்வு, அல்லது நடத்தையின் அடிப்படையில் நம் முன்னோர்களைத் தீர்மானிப்பதானால் அதற்குத் தகுதியுள்ள விலங்குகளுக்குப் பஞ்சமில்லை.நாய்களின் நுகர்வுத்திறன் மனிதனதைவிட இருபத்து ஐந்து மடங்கு ஆற்றல் மிகுந்தது. பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தன் சகாக்களுடன் யானைகள், திமிங்கலங்கள், நீர்யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள் மற்றும் முதலைகள் தாழ் அலைவரிசை ஓலி எழுப்பி உரையாடுகின்றன. இவற்றுக்கு மாறாக வௌவால்கள், டால்பின்கள் போன்றவை உயர் அலைவரிசையைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மனிதனைத் தவிர வேறெவருக்கும் கருவிகளை வடிவமைக்கத் தெரியாது என்று சொல்லலாம். சிம்பன்சிகளுக்கு இதில் ஓரளவு நிபுணத்துவம் உண்டு. பசிபிக் தீவிலுள்ள காகங்கள் கருவிப் பயன்பாட்டில் தேர்ந்தவைகளாகவே இருக்கின்றன. நீளமான ஒயர்களை வெவ்வேறு வடிவங்களில் வளைத்து அவை தம் உணவைக் கைப்பற்றுகின்றன. ஆய்வுக்கூடத்தில், ஒரு நூலில் கட்டப்பட்ட குச்சியை அந்த நூலை இழுத்துக் கைப்பற்றுகின்றன. இந்த சிறு குச்சியைக் கொண்டு இதனினும் பெரிய குச்சியைத் தம் பக்கம் இழுத்து, அதைக் கொண்டு தொலைவில் இருக்கும் உணவை அடைகின்றன.

ந்யூசீலாந்தில் உள்ள காகங்கள் தம் குஞ்சுகளுக்கு கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுத் தருகின்றன. ஆக்லாந்து பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இத்தகைய கல்வி பழக்க இந்தக் காகங்கள் பிரத்யேக இடம் வைத்திருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

மிருகங்களுக்கும் ஆனந்தம், மகிழ்ச்சி, கருணை, துக்கம், வெட்கம் போன்ற உணர்ச்சிகள் உண்டு. இதில் சந்தேகப்படவோ ஆச்சரியப்படவோ ஒன்றுமில்லை. நம்மைப் போன்றே அவற்றுக்கும் மூளையின் லிம்பிக் அமைப்பு உணர்ச்சிகள் எழும் மையமாக இருக்கிறது.

ஸீ லயன்களின் குழந்தைகளைத் திமிங்கலங்கள் கொன்று தின்னும்போது அவை துயரத்தில் ஓலமிடுகின்றன. இறந்து போன தன் குட்டியை டால்பின்கள் கடலின் மேற்பரப்புக்குத் தள்ளி வந்து உயிர்ப்பிக்க முனைகின்றன. சிம்பன்ஸீ குரங்குகளும் யானைகளும் தங்கள் நட்பு மற்றும் சுற்ற வட்டத்தில் இழப்புகள் நேரும்போது வருந்துகின்றன. கொரில்லாக்கள் இறந்தவர்களுக்காக இரங்கி அழுகின்றன. பாஸ்டன் பிராங்க்ளின் ஜூவில் புற்றுநோயால் இறந்த தன் துணைக்காக ஒரு கொரில்லா ஓலமிட்டு தன் நெஞ்சில் அறைந்து கொண்டது. இறந்த கொரில்லாவுக்குப் பிடித்தமான பண்டத்தை அதன் கையில் தந்து அதை எழுப்பப் பார்த்தது.

b-315034-gorilla_looking_to_him_dead_baby_cry_cry

[தன் இறந்த குழந்தைக்காக அழும் கொரில்லா]

மாக்பை என்ற சிறு பறவைகள், தம் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கும்போது அவற்றை எழுப்ப முயற்சி செய்கின்றன; அதன் அருகில் சுள்ளிகளை வைத்து அஞ்சலி செலுத்துகின்றன. இறந்த நரிகள் புதைக்கப்படுகின்றன. யானைகள் உடல் ஊனமுற்ற சக யானைக்காக நிதானித்து அதையும் தம்முடன் அழைத்துச் செல்கின்றன.

துயரம், கருணை ஆகிய உணர்வுகள் மட்டுமல்ல, ஆனந்தம் கூட விலங்குகளுக்கு சாத்தியமாக இருக்கிறது. ஜேன் குட்டால் ஒரு அருவிக்கு மெய்யாகவே மெய் சிலிர்த்த நிலையில் வந்தடைந்த ஒரு சிம்பன்ஸீ குறித்து விவரிக்கிறார். “நெருங்கி வருகையில், அருவியின் நீர் வீழ்ச்சி அதன் செவியில் உரத்து ஒலிக்கையில் அதன் நடையில் வேகம் கூடுகிறது; அதன் சரும முடிகள் குத்திட்டு நிற்கின்றன; அருவியின் அண்மையை நெருங்கியதும் அது நீரினருகில் அற்புதமாக ஆடக் கூடும். நிமிர்ந்து நிற்கிறது, காலோடு கால் மாற்றி ஒரு லய உணர்வுடன் சாய்ந்தாடுகிறது. பெருகி ஓடும் ஆழமில்லாத தண்ணீர் பரப்பைத் தன் கால்களால் தட்டுகிறது; மிகப் பெரிய கற்களை எடுத்து வீசுகிறது. சில சமயங்களில் அது நெடிந்து வளர்ந்து நிற்கும் மரங்களின் சன்ன விழுதுகளைப் பற்றி மேலேறுகிறது- அருவியிலிருந்து தெறிக்கும் நீர்த்திவலைகளில் அந்த விழுதுகளைப் பற்றித் தொங்கி ஆடி மகிழ்கிறது. இந்த “அருவி நடனம்” பத்து பதினைந்து நிமிடங்களுக்கு நீடிக்கலாம்” என்று எழுதுகிறார் குட்டால். சிம்பன்ஸீக்கள் பலமான மழை வரும்போதும் கடுங்காற்று வீசும்போதும் அருள் வந்தது போன்ற உத்வேகத்துடன் ஆடுகின்றன.

ஜேன் குட்டால் பொருத்தமான பெயர் சூட்டப்பட்ட ஒரு சிம்பன்ஸீ குடும்பத்தில் நடந்த நிகழ்வை விவரிக்கிறார். பிபியின் ஐந்தரை வயது மகன் பிராய்ட். அவளது அண்ணன் பிகாண் அந்தக் கூட்டத்தின் தலைவன். ஒரு முறை பிபி தன் அண்ணனுக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தபோது காட்டு வாழை மரமொன்றின் மேலேறிய பிராய்ட் தண்டு உடைந்து கீழே விழுந்ததாம். விழுந்ததும், தான் விழுந்ததைத் தன் மாமன் கவனித்துவிட்டானா என்று ஒரு அவமான உணர்ச்சியுடன் அவனைப் பார்த்தது பிராய்ட். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றறிந்ததும் சத்தமில்லாமல் இன்னொரு மரமேறி சாப்பிடத் துவங்கிற்று.

மார்க் ஹௌசர் ரீசஸ் குரங்கு ஒன்றைப் பற்றி சுவையான கதை சொல்கிறார். அந்தக் கூட்டத்தின் தலைவன் ஒரு பெண் குரங்கைப் புணர்ந்து முடித்ததும் பெருமிதமாக நடை போடுகையில், கவனமில்லாமல் போய் ஒரு சாக்கடையினுள் விழுந்து விட்டது. அது அவசர அவசரமாக எழுந்து, தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு ராஜ நடையைத் தொடர்ந்தது என்கிறார் ஹௌசர். அந்த ரீசஸ் குரங்கு உண்மையில் இப்படியெல்லாம் அவமானப்பட்டதா இல்லையா என்பது உறுதியாகத் தெரியாது, ஹௌசர் அந்தக் கவலை எதுவும் இல்லாமல் தன் ஆய்வு முடிவுகளைத் திருத்தி எழுதி அவமானப்பட்ட கதை நமக்குத் தீர்மானமாகத் தெரியும், இல்லையா? அவமானப்பட்ட பிறகு அவர் இன்னும் ஹார்வர்ட் பல்கலை வகுப்பறைகளில் ‘ராஜ நடை’ போடுகிறாரா என்பது குறித்துத் தகவல் இல்லை, ஆனால் ஹார்வர்ட் அவமானப்பட்ட பிறகு ஒரு நிறுவனமாக நடந்து கொண்டு அவரை வேலையை விட்டுத் தள்ளி வைத்திருக்கிறது. இன்னும் நீக்கவில்லை. ஹார்வர்ட் அவரை நீக்காமல் மறுபடி வேலையில் அமர்த்தினால், அவமானப்பட்ட பிறகு ஹார்வர்டும், ஹௌசரும் மேற்படி ரீசஸ் குரங்கைப் போல நடந்தனரா என்று நாம் யோசிக்கலாம்.

யானைகள் புதிதாக அறிமுகமாகிக் கொள்ளும்போது அவ்வளவு சீக்கிரம் பழகுவதில்லை. டென்னசீயில் உள்ள யானைகளின் சரணாலயத்துக்கு கொண்டு வரப்பட்ட இரு முதிய யானைகள் ஒன்றை ஒன்று கண்டதும் பிளிறி அழைக்கத் துவங்கின. அவை இருந்த கூண்டுகளின் கம்பிகளுக்கு இடையே தம் துதிக்கைகளை நுழைத்து ஒன்றை ஒன்று தொட்டுத் தடவின. என்ன நடக்கிறது இங்கே, என்ற ஆச்சரியத்துடன், இந்த யானைகள் குறித்த ஆவணங்களைத் தேடிப் பார்த்தபோதுதான் இவை இரண்டும் இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சர்க்கஸில் இணைந்திருந்திருக்கின்றன என்ற தகவல் தெரிந்ததாம். யானைகளின் நினைவுத் திறன்!

சிறு வயதில் தன்னைக் குட்டியாக எடுத்து வளர்த்த எஜமானர்களை மீண்டும் பார்த்தபோது ஒரு ஆப்பிரிக்க சிங்கம் கட்டியணைத்துக்கொண்டது ஒரு பிரபலமான நிகழ்ச்சி.

கூட்டங்களாய் வாழும் மிருகங்களின் அறம் சார்ந்த விதிகள் கூட்டத்தினுள் சண்டையைக் குறைத்து ஒத்துழைப்பை அதிகரிக்கின்றன. ஓநாய்கள் கூட்டம் கூட்டமாக வேட்டையாடும் என்பது நாமனைவரும் அறிந்த ஒன்று. அவை மிக சாதுரியமாக தாம் வேட்டையாடும் விலங்கை சுற்றி வளைக்கின்றன. விளையாட்டின் மூலமே இவை இத்திறனை வளர்த்துக் கொள்கின்றன. ஓநாய்களின் விளையாட்டு விதிகள் மிகக் கடுமையானவை, அவற்றின் வேட்டை விதிகளைப் போலன்றி விளையாட்டு விதிகள் நியாயமானவை. விளையாடும்போது அதிகாரம் செலுத்தும் ஓநாய்கள் மற்ற ஓநாய்களிடம் பணிந்து போகின்றன, ‘செல்லமாகக்’ கடிக்க அனுமதிக்கின்றன- ஓநாய்களின் அதிகாரம் கவர்ச்சியாலோ பிரபல்யத்தாலோ அடையப்பட்ட ஒன்றல்ல- அது ஆற்றலால் ஈட்டப்பட்ட ஒன்று. எளிதில் தம்மால் வெல்லப்படக் கூடியவர்களிடம் விளையாட்டுக்காக கடி வாங்குவது, அவற்றுக்கு நுட்பமான்தொரு அற உணர்வு உள்ளது என்ற உண்மையைச் சுட்டுகிறது, இல்லையா? அப்படி விளையாட்டு சுவாரசியத்தில் கொஞ்சம் பலமாக பதம் பார்த்து விட்டால் தவறு செய்த ஓநாய் வணங்கி மன்னிப்பு கேட்டுவிட்டு விளையாட்டைத் தொடர்கிறது.

wolves

கொயோட் என்றழைக்கப்படும் நாய் வகை பிராணிகளின் விளையாட்டு விதிகள் இன்னமும் கடுமையானவையாக இருக்கின்றன. வெறித்தனமாக விளையாடும் குட்டிகள் வலுவாகக் கடித்த காரணத்துக்காக கூட்டத்தை விட்டு விரட்டப்படுகின்றன. இவை தனியாக வேட்டையாடி வாழ்வது என்பது மிகக் கடினமான ஒன்று- இங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக ’இயற்கை நெறி’ தெரிவு செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும். காலப்போக்கில் கூட்டங்களில் இருக்கும் கொயோட்கள் அனைத்தும் விதிகளுக்குப் பணிந்து ஒத்துழைப்பனவாகவே இருக்கும், இல்லையா? சொன்ன பேச்சு கேட்காதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அழிந்து போகிறார்கள். இவை போலல்லாமல் மனிதர்களின் அறவுணர்வு கூட்டத்துக்கு எதிரானவர்களின் உரிமைகளுக்காகவும் வாதாடுகிறது என்பது மானுடத்தின் பலமும் பலவீனமுமாகும்.

ஆனால் நமது தேவைகள் மற்ற விலங்குகளில் தேவைகளைப் போன்றதல்ல, நமது வாழ்வாதார கட்டாயங்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவனவாக இருப்பதால் தனி மனித உரிமைகள் குழு சார்ந்த உரிமைகளுக்கு இணையான முக்கியத்துவம் கொண்டிருக்கின்றன.

கூடி வாழும் பிராணிகளுக்கு கருணையும் இரக்கமும் தேவைப்படுகின்றன. அவை குழு ஒற்றுமையைக் கூட்டி வாழ்வாதாரத் தேவைகளை நிறைவு செய்துகொள்ள உதவுவதால் இக்குணங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்று சொல்லலாம்- அல்லது கூடி வாழும் எந்தக் குழுவிலும் தம் குழுவைச் சார்ந்தவர்கள்பால் அனுதாப உணர்வு தோன்றுவது இயற்கையே என்றும் சொல்லலாம். டயானா குரங்குகள் சோதனைக் கூடத்தில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர். ஒரு சோதனையில் ஸ்லாட்டில் வில்லையை நுழைத்தால்தான் உணவு அவற்றுக்குத் தரப்பட்டது. இந்தக் கலையில் தேர்ந்த குரங்கு ஒன்று, தன் கூட்டத்தின் மூதாட்டியின் சார்பில் ஸ்லாட்டுக்குள் வில்லையைப் போட்டு உணவு வரவழைத்துக் கொடுத்தது- இதில் அதற்கு என்ன லாபம் இருந்திருக்க முடியும்?

செரிப்ரல் பால்சி என்பது உடல் மற்றும் மனதைப் பெருமளவில் பாதிக்கும் நிலை- நம் ஊரில் பெற்ற தாயே இத்தகைய குழந்தையைக் கைவிடுவதும் உண்டு. ஆனால் ப்ளோரிடாவில் உள்ள ஒரு வனவிலங்கு மையத்தில் இந்நிலையில் உள்ள சிம்பன்ஸீ குரங்கை மற்ற சிம்பன்ஸீக்கள் கருணையுடன் அணுகுவதை விஞ்ஞானிகள் கவனித்திருக்கின்றனர். பொதுவாகவே சிம்பன்ஸீகள் நியாய உணர்வு மிகுந்தவை. யாராவது இவற்றின் நடத்தை விதிகளை மீறினால் உடனே மற்றவர்கள் ஒன்று சேர்ந்து தண்டிப்பது உறுதி.

சிம்பன்ஸீக்களாவது மனிதனுக்கு நெருங்கின சொந்தம், அவற்றுக்கு அறவுணர்வு இருப்பதிலோ அதைக் கட்டிக் காக்கக்கூடிய சட்ட விதிகள் இருப்பதிலோ ஆச்சரியமில்லை. ஆனால் எலிகள்?

ஒரு குரூர சோதனை- சோதனைக் கூடத்து எலிகளை இரண்டு குழுக்களாகப் பிரித்தனர் விஞ்ஞானிகள். ஒரு குழு சாப்பிடும்போது மற்ற குழுவில் உள்ள எலிகளுக்கு மின் அதிர்ச்சி தரப்பட்டது. சகாக்கள் தம் செயலால் வதைபடுவதைப் பார்த்து தாம் சாப்பிடுவதை நிறுத்துகின்றன எலிகள்.

வலியால் அவதிப்படுகிற ஒரு எலியைப் பார்க்கிற இன்னொரு எலி, தானும் வதை செய்யப்படும்போது மிகை வலியை உணர்கிறது. பிறரது உதவியைப் பெற்ற எலிகள் மற்ற எலிகளுக்கு உணவு பெற்றுத் தந்து உதவுகின்றன. சில வௌவால்கள் பிராணிகளின் ரத்தத்தைக் குடிக்கும். இந்த காட்டேரி வௌவால்கள் வேட்டை முடிந்து திரும்பியதும் இரை கிடைக்காமல் பசியோடிருக்கும் சகாக்களுக்கு தாமருந்திய ரத்தத்தைப் பகிர்ந்தளித்து உதவுகின்றன. பெண் வௌவால் ஒன்று பிரசவ வேதனையில் இருக்கும் இன்னொரு வௌவாலுக்கு சரியான முறையில் பிரசவிக்க உதவியதை ஃஃப்ளாரிடாவில் ஒரு விஞ்ஞானி ஆவணப்படுத்தி இருக்கிறார்.

–ooOOOoo–

விலங்குகளுக்கு விளக்கத் தெரியாது- இருந்தாலும் அவை அற உணர்வுகளால் உந்தப்படுகின்றன என்பதை அவற்றின் செயல்களைக் கொண்டு நாம் அனுமானிக்க முடியும். அடுத்தது மனிதனின் கதையைப் பார்க்கலாம்.

உலகில் உள்ள பண்பாடுகளில் பல பண்பாடுகள் மனிதனை மனிதன் தின்பதை அங்கீகரிக்கின்றன. இன்னும் அதிக அளவிலான பண்பாடுகள் பலதார மணம் செய்வதை ஊக்குவிக்கின்றன. விளையாட்டுக்காக வேற்றுக் குடிகளுடன் மோதி அவர்களது தலைகளை மனிதர்கள் கொய்கிறார்கள். சித்திரவதை காலங்காலமாக மனிதனால் கையாளப்பட்டு வந்திருக்கிறது. இது தவிர உடல் உறுப்புகளைப் பின்னப்படுத்திக் கொள்வதும் மனிதனின் இயல்பாக இருக்கிறது- சீனாவில் ஆயிரமாண்டுகள் போல, சில குழுப் பெண்களின் கால்கள் இறுக்கக் கட்டி வைக்கப்பட்டு ஊனமாக்கப்பட்டது ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. சிசுக்கள் கொலை செய்யப்படுகின்றன. இன்றும் சில இசுலாமிய நாடுகளில் பெண்களின் பாலியல் உறுப்புகள் பின்னப்படுத்தப்படுகின்றன. எந்திரமயமாகிவிட்ட முன்னேறிய நாடுகளில்கூட அடிமை முறை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக மிகச் சமீப காலம் வரை இருந்திருக்கிறது. சட்ட அங்கீகாரம் இல்லாத, ஆனால் சமூக கவனிப்பு அதிகம் இல்லாது இன்றும் அடிமை முறைப் பாலுறவு மேற்கு நாடுகளில் ஒரு வாணிபமாகவே புழங்குகிறது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இன்று அறிவியலின் பயன்கள் அனைவருக்கும் உரியனவாக இல்லை. வறுமை நிலையில் வாழ்பவர்களை அலட்சியப்படுத்தி வளங்கள் ஒரு சிலரால் மட்டும் ஆண்டனுபவிக்கப்படுவதை பொருளாதாரக் கோட்பாடுகள் நியாயப்படுத்துகின்றன- அவற்றை ஏற்பவர்கள் கல்வி அறிவற்ற காட்டுமிராண்டிகள் அல்ல- மிக்கப் படித்தவர்கள், உயர் பண்பாட்டின், நாகரீக வளர்ச்சியின் பிரதான முகங்கள்.

யோசித்துப் பாருங்கள், பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு அசையக்கூட இடமில்லை. மேலை நாடுகளில் மாடுகளுக்கும் இந்நிலைதான். நம்மால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பேரழிவு பூமி முன்னெப்போதும் காணாதது. இது போதாதென்று அணு ஆயுதங்கள். முதலியத்தின் பெயரால் சுரண்டல், சமத்துவத்தின் பெயரால் அடக்குமுறை, உலகமயமாக்கத்தின் கோரப் பசிக்கு இரையாகும் மூன்றாம் உலக வளங்கள்…

மனிதனின் அறவுணர்வுக்கு என்னாயிற்று? அது தர்க்க நியதிகளால்- சுருக்கமாக சொன்னால் அறிவால்- மிகைபலம் பெற்றிருக்கிறது. நியாயப்படுத்துவதன் மூலம் எதையும் நிகழ்த்திக் காட்டக் கூடியவனாக மனிதன் இருக்கிறான். அறிவு, மனிதனின் அறவுணர்வின் கேடாக இருக்கிறது.

hh-coverஒரு யானைப் பாகனைப் போன்றது அறிவு, என்று சொல்கிறார் ஜோனதன் ஹெய்ட். நமக்கு விலங்கு உணர்வுகள் உண்டு, அவையே மேலோங்கிய ஆற்றல் கொண்டவை. அவற்றுக்கு திசையறிவிக்கும் பணியையே அறிவு செய்கிறது என்கிறார் அவர். ஆமாம், அறவுணர்வு அறிவைக் கொண்டு அடையப்பட்டதல்ல என்கிறார் ஹெய்ட். அறிவு அறம் குறித்தெழும் உணர்ச்சிகளுக்கு நியாயப்படுத்தலை மட்டுமே செய்கிறது. இதை சுட்டும் விதமாக ஒரு கேள்வியை முன் வைக்கிறார்-

ஒரு சகோதரனும் சகோதரியும் பயணம் செய்கிறார்கள். ஒரே ஒரு நாள் இரவு, ஒருவரை ஒருவர் மகிழ்விப்பதற்காக காண்டம் அணிந்து பாதுகாப்பான பாலுறவு கொள்கிறார்கள். இதை யாரிடமும் சொல்வதுமில்லை, இனித் தொடர்வதுமில்லை என்று உறுதி பூண்டவர்களாக அடுத்த நாள் அவரவர் வேலையைப் பார்க்கிறார்கள். இவர்கள் செய்தது சரியா?

நாமெல்லாரும் தவறு என்றுதான் சொல்வோம், ஆனால் ஏன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது, இல்லையா? ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று சொல்ல முடியாது. இதில் யாருக்கும் எந்த கெடுதலும் இல்லை. அப்புறம் என்ன? இருந்தாலும் இது ஒழுக்கக் கேடான செயல் என்றுதான் நாம் சொல்வோம். காரணம், அறத்தை நாம் அறிவைக் கொண்டு அறிவதில்லை. நாமறிந்த அறத்துக்கான நியாயங்களை மட்டுமே அறிவு கொடுக்கிறது.

நிலைமை இப்படி இருக்கையில், எந்த நம்பிக்கையில் குறிப்பிட்ட சில அறங்களை மேலான அறங்களாக நாம் முன் வைக்கிறோம்? சிந்திக்க வேண்டிய கேள்விதான், இல்லையா?

ஹெய்ட் அறவுணர்வின் அடிப்படைகளை ஐவகையாக பிரிக்கிறார்-

1. நியாயவுணர்வு: நாம் நியாயமாக நடந்து வேண்டும், அனைவருக்கும் சம உரிமை, நமக்குக் கிடைத்த நன்மைகள் பிறருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

2. தீதின்மை, அக்கறை – எல்லாருக்கும் நன்மை செய்யவேண்டும், யாருக்கும் தீமை செய்யக் கூடாது.

இவ்விரண்டு விழுமியங்களும் தனி மனித உரிமைகளை அரண் போல் காக்கின்றன. இவையே தற்போது நாகரீக நாடுகளில் மேலாதிக்கம் செய்யும் அற விழுமியங்களாக இருக்கின்றன.

ஆனால், இவற்றை அன்றி மேலும் மூன்று முக்கியமான விழுமியங்கள் இருக்கின்றன என்கிறார் ஹெய்ட். அவை,

1. குழு மனப்பான்மை, விசுவாசம்
2. மதிப்பு, மரியாதை
3. சுத்தம், புனிதம் குறித்த அக்கறை.

இந்த மூன்றும் குழு ஒற்றுமைக்கு உதவி செய்கின்றன என்கிறார் ஹெய்ட்.

இவை குறித்து நிறைய விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது- ஆனால் தற்போது நாம் கவனிக்க வேண்டியவை இந்த ஐந்து அற அடிப்படை உணர்வுகளும் மனிதனோடு ஏனைய மிருகங்களுக்கும் இருக்கின்றன: ஓநாய்கள்கூட விளையாடும் பொழுதில் சம உரிமை தருகின்றன, எலிகள் மற்ற எலிகள் தங்கள் செயலால் வதைபடுவதை விரும்புவதில்லை, விலங்குகளின் குழு ஒற்றுமை குறித்தும் கீழ்படிதல் குறித்தும் சொல்லவே வேண்டாம்- நரிகள் கூட இறந்த நரிகளைப் புதைத்து ஏதோ ஒரு வகையில் அவற்றின் சீர்கேட்டைத் தவிர்க்கின்றன. இதற்குத் தற்காப்பு என்பது ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் நரிகளின் தர்க்கத்தை நாம் எப்படி அறிவோம்?

அறத்தின் இந்த ஐந்து அடிப்படை கூறுகளையும் நாம் மற்ற உயிர்களோடு பகிர்கிறோம். அறிவைக் கொண்டு ஒன்றை மற்றதைவிட உயர்த்திக்கூற முடிகிறதென்பதால் மட்டுமே அவை உயர்வானவையாகி விடுவதில்லை. அற உணர்வு அறிவை விட உணர்ச்சியின் ஆளுகைக்கு உட்பட்டிருப்பதால் இந்த ஐந்து கூறுகளும் ஒன்றுக்கொன்று இணையாகவே கருதப்பட வேண்டும். சரியாக சொல்வதென்றால், ஒன்றைக் காட்டிலும் மற்றதை உயர்வாய்ப் பேசுதல் ஒரு சுவை மற்றதைக் காட்டிலும் உயர்ந்ததென்று கொண்டாடுவதைப் போன்றது: இனிப்பு எனக்கு புளிப்பைக் காட்டிலும் உவப்பானதாக இருக்கலாம். ஆனால் அதற்கு என் சுவை நுகர்வுக்கு அப்பால் வேறென்ன நியாயம் இருக்க முடியும்?

இங்கே நாம் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். அறம் என்பது அதன் பயன்பாட்டை ஒட்டியோ அதன் பின்விளைவுகளை ஓட்டியோ தீர்மானிக்கப்படுவதில்லை. ஹெய்ட்டின் பார்வையில் அத்தகைய வாதங்கள் நம் அடிப்படை உணர்வுகளின் தர்க்க ரீதியான நியாயப்படுத்துதல்கள் மட்டுமே- உண்மையில் அறம் உணர்வுகளின் எழுச்சி. அறிவின் சமன்பாடு அதன் பிற்சேர்க்கை.

தனி மனித சுதந்திரத்தை ஒரு பண்பாடு கொண்டாடலாம். ஆனால் அது அந்த ஒரு காரணத்தால் மட்டும் குழு ஒற்றுமையைக் காக்க அதிகாரத்தை வெவ்வேறு தளங்களில் பகிர்ந்தளிக்கும் பண்பாட்டைவிட உயர்ந்ததாக மாறி விடாது. ‘தூய்மை’யைக் காரணம் காட்டி பெண்களுக்கு திரை போடும் பண்பாடுகள், மாதவிலக்கைக் காரணம் காட்டி பெண்களை ஒதுக்கி வைக்கும் பண்பாடுகள் நமக்கு பிற்போக்கானவையாகத் தெரியலாம். ஆனால் அத்தகைய அடையாளப்படுத்துதல் பொருளற்றது. எனது பண்பாட்டின் சுதந்திர உணர்வின் அடிப்படை எதுவோ அங்கிருந்துதான் இன்னொரு பண்பாட்டின் சுகாதார உணர்வும் குழு மனப்பான்மையும் எழுகின்றன.

இன்று நாம் பல பண்பாடுகளாய்ப் பிரிந்து நிற்கிறோம். நமக்கிடையே உள்ள இடைவெளி இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு ஆழமானதாகத் தோற்றம் தருகிறது. இதில் ஒரு பண்பாடு தன்னை முற்போக்கு என்று சொல்லிக் கொண்டு இன்னொரு பண்பாட்டைப் பிற்போக்கானதாக அடையாளம் காட்டி அதைத் தர்க்கத்தின் வழியாகவும் அதிகாரத்தின் வழியாகவும் திருத்த நினைப்பது பெரும் பிழையாகவே இருக்கும்.

ஹெய்ட் சுட்டிக் காட்டும் அறத்தின் ஐந்து அடிப்படைக் கூறுகளையும் அவற்றின் தொன்மை மற்றும் பரிணாமப் பயன்பாடுகளையும் குறித்த அறிதல் வெவ்வேறு விழுமியங்களை மேலானதாகக் கருதும் பல்வகைப் பண்பாடுகளுக்கிடையில் ஒரு புரிதலை உருவாக்கக் கூடும். அறம் உணர்ச்சி சார்ந்தது, அறிவு சார்ந்ததல்ல என்ற பார்வை, தர்க்கம் மற்றும் பொருளாதார, அறிவியல் ஆதாரங்களைத் துணைக்கழைத்து நியாயப்படுத்துதலின் நீட்சியான ஆதிக்க உணர்வுகளுக்கு அணை போடக் கூடும். அடிப்படையில் அறம் பல வண்ணங்களைக் கொண்ட நிறப்பிரிகையை ஒத்தது- உயர்ந்து செல்லும் ஒரு நேர்கோட்டின் முனையில் நிற்கும் இலக்கல்ல அது என்பது ஹெய்ட்டின் புதிய அறத்தின் அடிப்படையாக இருக்கிறது.

குறிப்புகள்:

http://www.timeshighereducation.co.uk/story.asp?sectioncode=26&storycode=415874&c=2
http://www.yesmagazine.org/issues/can-animals-save-us/we-second-that-emotion
http://www.telegraph.co.uk/earth/wildlife/5373379/Animals-can-tell-right-from-wrong.html
http://faculty.virginia.edu/haidtlab/mft/index.php