ராகம் தானம் பல்லவி – பாகம் ஏழு

mast2

கர்நாடக இசைக்கச்சேரியின் பிரதான உருப்படி ராகம் தானம் பல்லவி. சுருக்கமாக ரா.தா.ப. இதுவரை துரிதப் பாடமாய் ரா.தா.ப.வில் இருக்கும் அங்கங்களை விளக்கியும், அவற்றை எவ்வாறெல்லாம் கவனித்து ரசிக்க வேண்டும் என்று ஒரு ராகமாலிகை ராட்டை பல்லவியை வைத்தும், திரையிசை உதாரணங்களுடனும், அறிமுகப்படுத்திக்கொண்டோம். ராக ஆலாபனையில் தொடங்கி, தானம் பற்றியும் பல்லவி பற்றியும் இரண்டாம் மூன்றாம் பாகங்களில் விவரித்தோம். தாளத்தை அறிமுகம்செய்துகொள்ள, ஆதி தாளம் மட்டும் விவரித்தும் மற்ற தாள வகைகளை குறிப்பிட்டும், நடைகள் பற்றி உதாரணங்களுடன் நான்காம் பாகத்தில் விவரித்தோம். நிரவல் பற்றி தெரிந்துகொள்வதற்காக முதலில் சங்கதியை அறிந்துகொண்டோம். ஐந்து மற்றும் ஆறாம் பாகங்களில் இவற்றை விவரித்துள்ளோம். இக்கட்டுரையில் அனுலோமம் பிரதிலோமம் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்வோம்.

சென்ற ஆறாம் பாகக் கட்டுரையின் முடிவில் ரா.தா.ப. உருப்பிடியில், கச்சேரியில், பல்லவியின் நிரவலுக்கு பின் ஸ்வரகல்பனை (கற்பனைத்திறனுக்கேற்ப ராகத்தில் ஸ்வரக்கோர்வைகளாகப் பாடுவது) செய்வார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். இதில் திருத்தம். அதாவது, அனுலோமம், பிரதிலோமம் என்று இக்கட்டுரையில் விவரிக்கப்போகும் அங்கத்தை மேடையில் பல்லவி பாடுகையில் ஒதுக்கிவிடும் பாடகர்களே, நிரவலுக்கு பின் நேரடியாக ஸ்வரகல்பனைக்கு செல்வர். தேர்ந்த பாடகர் ரா.தா.ப.வில் எடுத்துக்கொண்ட பல்லவியில் அனுலோமம், பிரதிலோமம் செய்த பிறகே ஸ்வரகல்பனை அங்கத்திற்கு செல்வார்.

அனுலோமம், பிரதிலோமம் கர்நாடக இசை கச்சேரியில் ராகம் தானம் பல்லவி உருப்படியின் முத்தாய்ப்பு அங்கங்கள். செய்வதற்கு அசாத்திய மனஒருமுகம் வேண்டும். மேடையில் இவ்விஷயம் அரங்கேறுகையில் முழுமையாக ரசிப்பதற்கு, கூடவே சரியாகத் தாளம்போட்டுத் தேர்ந்த விரல்களும், கர்நாடக இசை கேட்டு வளர்ந்த காதுகளும் அவசியம்.

என்னடா இப்படி ஓவரா ஸீன் காட்றானே, அனுலோம பிரதிலோமங்களை புரிந்துகொள்வதே கடினமோ என்று பயந்துவிடாதீர்கள். விஷயம் என்னவென்று அறிமுகநிலையில் தெரிந்துகொள்வது சுலபம், மிகச்சுலபம். இதன் அனைத்து பரிமாணங்களையும் அனுபவித்து அறிவதற்கே நாட்டமும் உழைப்பும் அவசியம். முன்னர் சொன்னதுபோல, பல படிமங்களில் விளங்குவதுதான் கலை. அவரவரின் அப்போதைய புரிதல் படிமத்திற்கு ஏற்ப இசைக் கலை மனதிற்கு இசைந்து அனுபவப்பொக்கிஷங்களை அருளும். தன்னால் மேலும் விளங்கும்.

அனுலோம, பிரதிலோமங்களை அறிமுகப்படுத்திக்கொள்வோம். உதவிக்கு நிறைய வீடியோ டெமோக்கள் உண்டு.

ரா.தா.ப.வின் பல்லவி ஒரு தாளத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். அந்த தாளத்தை பாடகர் தொடையில் ஒரு காலப்பிரமாணத்தில் (வேகத்தில், ஸ்பீடில் அல்லது டெம்போவில்) தட்டிக்கொண்டு, பல்லவியையும் அதே வேகத்தில் முதலில் பாடுவார். அதாவது, ஐந்தாம் பாகத்தின் தொடக்கத்தில் விவரித்ததுபோல, பல்லவியின் இசையும் தாளமும், சம எடுப்பாக இருப்பின், ஒருசேர ஆரம்பித்து ஒருசேர சில ஆவர்த்தங்களுக்கு பிறகு முடியும்.

உதாரணத்திற்கு மூன்றாம் பாகத்தில் கொடுத்த

ராக தான பல்லவியே | கொண்டு வா பல்வலியே ||

என்று ஆதி தாளத்தில், இரண்டு களையில் சம எடுப்பில் தொடங்கி ஒரு பல்லவி அமைந்திருக்கிறது என்போம். இதில் பல்லவியின் முன்பாகத்தையும் (ப்ரதமாங்கம்) பின்பாகத்தையும் (த்விதீயாங்கம்) பிரிக்கும் அறுதி (பதகர்பம்), நான்கு அக்‌ஷரத்தில் தாளத்தின் நடுவில், ’கொண்டு’வில் விழும்.

நான்காம் பாகத்தில் விளக்கியதுபோல, ஆதிதாளம் என்பது 4 + 2 + 2 = 8 அக்ஷரம் கொண்டது. ஒரு 4 அக்ஷர லகுவையும், இரண்டு 2 அக்ஷர த்ருதத்தையும் கொண்ட சதுஷ்ர திரிபுடை தாளத்திற்கு இன்னொரு பெயர். ஆகவே, மேற்கூறிய பல்லவியை பாடுகையில் பாடகர் “ராக…” என்று ஆரம்பிக்கையில் தொடையில் ஆதிதாளத்தின் லகுவை தட்டியிருப்பார். பின்னர், பல்லவியை முழுவதும் பாடி “…வலியே” என்று முடிக்கையில், தாளத்தின் இரண்டாவது த்ருதத்தில் கையை வீசிக்கொண்டிருப்பார்.

இதை, பாக்கெட்டில் சிகப்பு கர்சீப் துருத்த, ஒடித்து ஒடித்து சோம்பலாய் ஓடிவந்து மிதவேகத்தில் பந்துவீசும் மொஹீந்தர் அமர்நாத் போல, பாடகரும் பல்லவியில் மிதவேகத்தில் செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். இது பல்லவியை மத்தியமகாலத்தில் பாடும் முறை.

இப்போது தொடையில் தாளம் தட்டும் வேகத்தை அப்படியே வைத்துக்கொண்டு, தாளத்தின் ஒரே ஆவர்தத்தில் (அதாவது ஒரு சுற்று 4 + 2 + 2 = 8 அக்ஷர அவகாசத்தினுள்) பல்லவியை பாடும் வேகத்தை மட்டும் அதிகரித்து, ஸாஹீர் கான் போன்ற வேக பந்துவீச்சாளராகி இருமுறை பாடினால், பாடகர் பல்லவியை மேல் காலம் செய்கிறார் என்று அர்த்தம். மேற்கூறிய உதாரண பல்லவியில், லகுவின் முடிவில் ஒருமுறையும் த்ருதத்தின் முடிவில் ஒரு முறையும் பல் வலித்திருக்கும்.

பிறகு, தாளத்தின் வேகத்தை முன்புபோல் மாற்றாமல் அதில் ஒரே ஆவர்தத்தில், பல்லவியை மட்டும் ”ப்ரெட் லீ” யாகி சூப்பர் ஃபாஸ்ட்டாய் நான்குமுறை பாடுவார்.

இப்படி பல்லவியை பாடும் முறைக்கு அனுலோமம் என்று பெயர். குறிப்பாக சொல்லவேண்டுமானால், மேல்கால அனுலோமம் அல்லது கிரம அனுலோமம் என்று பெயர்.

இதே வேகமாற்ற விஷயத்தை, தாளத்தின் காலப்பிரமாணம் மாறாமல், பல்லவியை மட்டும் ஸ்பீடு குறைத்து, தாளத்தின் இரண்டு ஆவர்தத்திற்கு ஒருமுறையோ நான்கு ஆவர்தத்திற்கு ஒரு முறையோ முழுவதும் வருமாறு, ”ஸ்லோ” மற்றும் ”ஸ்லோ ஸ்டாப்” வகை சுருள் பந்துவீச்சாளராகி பல்லவி பந்து வீச முடியும். இப்படி மத்திய காலத்தில் அமைந்த பல்லவியை, அதற்கு இரண்டு குறைவான வேககாலத்தில் பாடுவதும் அனுலோமம்தான். ஆனால் இதற்கு பெயர் கீழ்கால அனுலோமம் அல்லது விலோம அனுலோமம்.

விலோம அனுலோமம் செய்கையில் மேற்கூறிய உதாரண பல்லவியில் பல் மெதுவாகவோ அல்லது மிக மெதுவாகவோதான் வலிக்கும். ஆனால் சற்று மறந்தாலும், தாள அக்‌ஷரங்ளுடன் ஒவ்வாத இடங்களில் எல்லாம் வலிக்கும்.

ஆகமொத்தம் பொதுவாக அனுலோமத்திலேயே மத்தியகாலம், வேக, அதிவேக காலம், மெது, மிகமெது காலங்கள் என ஐந்து காலங்களில் பாடமுடியும்.

உதாரணங்கள் பார்ப்போம். முதலில் நாமே சுயமாக ரூம் போட்டு யோசித்தமைத்த ஒரு இல்லார்வல வீடியோ.

[தன்னார்வல போல ஹோம்மேட் மேட்டருக்கு இல்லார்வல. நாமும் தமிழ் வளர்ப்போமேன்னு ஹி ஹி]

அனுலோமம் விளக்கம் வீடியோ சுட்டி

மேலே வீடியோவில் சற்று வேடிக்கைக்காக பல்லவியை ஜோடித்துள்ளேன். அதிலிருந்து அனுலோமம் விளக்கம் புரிந்தால் ஷேமம். ஏனெனில் நிஜப்பல்லவிகள் இவ்வாறு எளிமையாக அமையாது. உதாரணமாக, ஆதிதாளத்திலேயே அமைந்திருந்தாலும், சம எடுப்பில் தொடங்காது. அல்லது அறுதி கார்வை இடக்கான அவகாசத்துடன் செய்யப்பட்டிருக்கும்.

முன்னர் குறிப்பிட்டதுபோல, அறுதி என்பது பல்லவியை முன் பின் பாகங்களாய் பிரிப்பது. அ னுலோமம் பிரதிலோமம் செய்வதற்கேற்ப சரியாக பல்லவி கட்டமைக்கப்படவேண்டுமென்றால், அறுதி தாளத்தின் அக்‌ஷரத் தட்டில் விழுமாறு அமைக்கப்படவேண்டும். அப்போதுதான் பல்லவியின் தொடக்கம் சம எடுப்பில் இன்றி அதீத அனாகத எடுப்பில் அமைந்தாலும், அனுலோமம் பிரதிலோமம் பல காலப்பிரமாணங்களில் தடையின்றி செய்துகாட்ட சாத்தியங்கள் அமையும். இது இசைப்பேராசிரியர் சாம்பமூர்த்தியின் கட்சி.

இதைவைத்துப் பார்த்தால், மேலே வீடியோவில் உள்ள ”பாலும் பழமும் கைகளில் ஏந்தி, (இரண்டாவது வரி ட்யூனில்) பாலும் பழமும் கைகளில் ஏந்தி” என்கிற பல்லவியில், அறுதியே தாள அக்‌ஷரத் தட்டின் மேல் விழுமாறு அமையவில்லை. லகு முடிந்ததும், முதல் த்ருத தொடக்கத் தட்டில் ”பாலும்” என்கிற சாஹித்யம் தொடங்காமல், அரை இடம் தள்ளித் தொடங்கும். மீண்டும் வீடியோவை கவனித்துப்பாருங்கள். ஆனாலும் ஏன் அனுலோமம் செய்யமுடிகிறதென்றால், பல்லவி மொத்தமும் சம எடுப்பில் தொடங்கி, சரியாக ஆதி தாளத்தின் ஒரு சுற்றினுள் பொருந்தி முடிந்துவிடுகிறது. அடுத்த வேகத்தில் பாடுகையில், எட்டு அக்‌ஷர அவகாசத்தில் பாடியதை நான்கு அக்‌ஷர அவகாசத்தினுள் பாடினால் மேட்டர் ஓவர். அடுத்த வேகத்திற்கு, இரண்டு அக்‌ஷரத்தினுள் பாடவேண்டும்.

ஒரு ரெகுலர் பல்லவியில் எப்படி அனுலோமம் செய்வது. அலுவலில் ஓய்வகத்தில் பேசிக்கொண்டிருக்கையில் ஸ்பாட்டில் நண்பர் செய்துகாட்டியதின் வீடியோ.

இதுவும் ஆதி தாளத்தில் அமைந்த பல்லவிதான். வீடியோவில் தெரியும் நண்பரின் விரலுக்கும் குரலுக்கும் அறுபது வயதுதான். இசையறிவில் முன்னூறு வயதொத்தவர். இறுதியில், சற்று தடுமாறி, மூன்றாவது முறையே அனுலோமம் தாளத்தினுள் வருகிறது பாருங்கள்.

சரி, ஆதிதாளம் சதுஸ்ர திரிபுடையில் பல்லவியில் அனுலோமம் பார்த்தாயிற்று. பொதுவாக மேடைகளில் கண்ட ஜாதி திரிபுடையில் (5 + 2 + 2 = 9 அக்‌ஷரங்கள், நான்காம் பாகம் பார்க்கவும்) பல்லவியை அமைத்திருப்பார்கள். இந்த தாளத்தில் அனுலோமம் செய்தால் எப்படி இருக்கும். வீடியோவில் ஒரு சாம்பிள் கேளுங்கள்.

டி.என்.சேஷகோபாலன் பல்லவி – கண்ட திரிபுடை பல்லவி சுட்டி

கடினமான தாள வகைகளிலும் பலல்வி அமைத்துப்பாடமுடியும் என்று மூன்றாம் பாகத்திலேயே விளக்கினோம். அப்படி ஒரு தாளத்தில் அனுலோம எப்படி அமையும்? ஒரு சாம்பிள் அடுத்த வீடியோக்களில் பார்ப்போம்.

பல்லவி அமைந்துள்ள தாளம் சங்கீர்ண திரிபுடை. அதாவது, 9 + 2 + 2 = 13 அக்‌ஷரங்கள் கொண்டது (நான்காம் பாகம் பார்க்கவும்). பாடுபவர் இன்றைய வளரும் கலைஞர், டி.என்.எஸ்.கிருஷ்ணா

முதலில் பல்லவியை கேளுங்கள். வீடியோ சுட்டி

இதேபோன்ற ஒரு சாம்பிள் பல்லவியை மூன்றாம் பாகத்தில் அறிமுகப்படுத்தினோம். ஒப்பிட்டுப்பாருங்கள். இப்போது அடுத்த வீடியோவில் இந்த பல்லவிக்கு சங்கீர்ண திரிபுடை தாளம் எப்படி போடுவது, பல்லவி அதில் எவ்வாறு அமைந்துள்ளது என்று என் ”சொந்தக் கைப்பட” கொடுத்துள்ளேன். கவனித்துக்கொள்ளுங்கள்.

தாள விளக்கம் வீடியோ சுட்டி

கவனித்தீர்களா, பல்லவி தாளத்தின் தொடக்கத்தில், சம எடுப்பில் தொடங்கவில்லை. சமத்தில் இருந்து முக்கால் இடம் தள்ளித் தொடங்குகிறது. இதை நீ எப்படி கண்டுகொண்டாய் என்றால் ஜஸ்ட் பல கச்சேரிகளின் ரஸிகானுபவம்தான். இங்குதான் அறுதியின் முக்கியத்துவம் புலப்படும். பல்லவி பாடப்படுகையில் முதலில் தாளம் போடத்தொடங்காமல், அறுதி எங்கு விழுகிறது என்று கவனித்துத்தெரிந்துகொள்ளவேண்டும். அறுதியும், அதன் கார்வையும் (இடைவெளி) புரிந்தவுடனேயே, பல்லவி அடுத்த சுற்று வருகையில் என்ன தாளமாக இருக்கும் என்று அணுமானிக்கவேண்டும். பல்லவி பாடப்படுகையில், தொடக்கத்தில் இவற்றை காட்டிக்கொடுத்து தன் கையில் தாளம் போட்டுக்காட்டி பாடகர் உதவுவார். இப்போதைக்கு இதையெல்லாம் கண்டு ஆயாசிக்காமல், அனுலோமம் புரிந்த சந்தோஷத்தில் அடுத்த வீடியோவை கவனியுங்கள். சங்கீர்ண திரிபுடையில் அனுலோம வகைகளை பாடகர் கச்சிதமாக அளித்துள்ளார்.

அனுலோமம் பகுதிகள் வீடியோ சுட்டி

வீடியோவில் வரும் பகுதிகளில், முன் வீடியோவில் போட்டுக்காட்டிய சங்கீர்ண திரிபுடை தாளத்தை ஒரே வேகத்தில் போட்டுப்பார்த்து சரியாக பல்லவி பொருந்துமாறு வந்து வெற்றி கண்டீர்களென்றால், சபாஷ்மா என்று உங்கள் நடு முதுகில் (முடிந்தால்) தட்டிக்கொள்ளுங்கள். மொத்தமாக சொதப்பிவிட்டீர்கள் என்றால், வெறுப்பில் ”அப்படி போடு போடு போடு” என்று ஆதிதாளம் தாண்ட முடியாத குத்துப்பாட்டில் அமிழ்கையில் (தவறொன்றுமில்லை), நம் மரபிசையின் சாத்தியங்களை, அனாயாசங்களை நினைவில் கொள்ளுங்கள். கூடவே டிசெம்பர் சீசனில் இவ்வகை அசாத்தியமான மரபிசையை அப்பியாசம் செய்து நமக்கு அளிக்கும் இளம் வித்வானின் கச்சேரிக்கு சென்று (டேப்பில் கேட்பது தப்பாட்டம்), மொத்தமாக புரிகிறதோ இல்லையோ, அவர் இந்த உருப்பிடிகளை செய்துமுடித்ததும் ஜஸ்ட் கைதட்டிவிட்டு வாருங்கள். நம் ஆய கலைகள் அறுவத்திமூன்றில் ஒன்றின் முதுகில் இன்றளவில் நம்மால் கொடுக்கமுடிந்த ஷொட்டு.

பல்லவி பாடுவது இருக்கட்டும், கேட்பதே இவ்வளவு கடினமா, மேட்டர் கந்தலாயிடும் போலிருக்கே என்கிறீர்களா. ஆறுதலுக்காக ஒரு எளிய பல்லவி, திஸ்ர திரிபுடை தாளத்தில் தருவோம். பல்லவி பட்டம்மா என்று அழைக்கப்பட்ட டி.கே.பட்டம்மாள் பாடியது.

டி.கே.பட்டம்மாள் திஸ்ர திரிபுடை வீடியோ சுட்டி

பல்லவியை கேட்டதும், ஜுஜுலிபா புகழ் வியட்நாம் காலனி திரைப்படத்தின் வெங்கடகிருஷ்ணன் சங்கடகிருஷ்ணன் ஜோக்கின் (வசனகர்த்தா: கிரேஸி மோகன்) ரிஷிமூலம் நதிமூலம் புலப்படுகிறதா. இந்த பல்லவியில் அறுதி கார்வை மிகக்கம்மி. (”வெங்கட ரமணா”விற்கு பிறகு வரும் இடைவெளி). இவ்வகை பல்லவியில் அனுலோமம் செய்கையில் பட்டம்மாள் கில்லேடி.

(மிஸ்ர திரிபுடை நீங்கலாக) திரிபுடை தாளத்தில் அமைந்த பல்லவிகளில் மட்டுமே அனுலோமம் உதாரணம் காட்டியுள்ளேன். மற்ற துருவ, மட்டிய, ரூபக , ஏக , ஜம்ப, அட தாளவகைகளிலும் பல்லவி அமைகையில், அவற்றிலும் அனுலோமம் செய்வது வழக்கம். அதிலும் இரண்டும் மூன்று ராகங்களில், நடைகள் மாறியபடியும், விஷம எடுப்புகளிலும் அமைந்த பல்லவிகளில் அனுலோமம் செய்துள்ளனர். யோசித்துப்பாருங்கள் அந்தவகை வித்வான்களும் கேட்டு ரசித்த ரசிகர்களும் நிரம்பிய நம் தமிழ்ச் சமூகத்தின் மன ஒருமுகத்தை.

***

இப்போது பிரதிலோமம். பல்லவியை வேக மாற்றம் செய்வது அனுலோமம். தாளத்தை வேகமாற்றம் செய்வது பிரதிலோமம். பல்லவியை முதலில் அமைந்த காலப்பிரமாணத்திலேயே (அதாவது மத்தியமகாலத்தில், மிதவேகத்தில்) பாடிக்கொண்டு, தாளத்தை மட்டும் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ போடுவது பிரதிலோமம்.

வேகமாகவோ (இரண்டு மடங்கு வேகத்தில்) அதிவேகமாகவோ (நான்கு மடங்கு வேகத்தில்) தாளம் போடுவது மேல்கால பிரதிலோமம் அல்லது கிரம பிரதிலோமம். மெதுவாகவோ (அரை மடங்கு வேகத்தில்) அல்லது மிகமெதுவாகவோ (கால் மடங்கு வேகத்தில்) தாளம் போடுவது கீழ்கால பிரதிலோமம் அல்லது விலோம பிரதிலோமம்.

அதாவது மத்தியகாலத்திலிருந்து இரண்டு மடங்கு ஸ்பீடில் கிரம பிரதிலோமத்தை செய்கையில், நமது உதாரண பல்லவியில்

ராக தான பல்லவியே | கொண்டு வா பல்வலியே ||

பாடகர் சாகித்தியத்தை ஒருமுறை பாடுவதற்கு ஆதி தாளத்தை தொடையில் இரண்டு முறை போட்டுமுடித்திருப்பார். இதற்கு அடுத்த ஸ்பீடில் செய்கையில், ஒருமுறை பல்லவியை பாடுவதற்குள் சரியாக நான்கு முறை தாளத்தை போட்டு முடித்திருப்பார்.

விளக்க வீடியோ தருவோம். அனுலோமத்திற்கு பாலும் பழமும் என சற்று வேடிக்கை ரசத்துடன் எடுத்துக்கொண்ட உதாரணத்தையே பிரதிலோமத்திற்கும் கைகளில் ஏந்துவோம். மேலே விவரித்ததை ஆதி தாளத்தில் (சதுஸ்ர ஜாதி த்ரிபுடை தாளம்) எப்படி செய்யலாம் என்பதை வீடியோவை பார்த்துகொள்ளுங்கள்.

பிரதிலோமம் விளக்க வீடியோ சுட்டி

உதாரணம் அவ்வளவே. இவ்வகையில் பல்லவிக்கு பல வேகங்களில் தாளம் போடுவதை மட்டும், நேரிடையாக கச்சேரியில் வீடியோ பதிவு செய்யாமல், லைவ் டெமோ காட்ட இயலாது. நான் செல்லும் கச்சேரிகளில் பிரதிலோமம் செய்பவர்கள் இசைந்து சற்று வீடியோ எடுக்கவிட்டால், பின்னர் தனியே தருகிறேன். ஆனாலும் பிரதிலோமம் மேட்டர் என்னவென்று ஓர ள வு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆகமொத்தம் சாகித்தியத்தை ஐந்து காலங்களிலும், தாளத்தை ஐந்து காலங்களிலும் பல்லவியில் ஒரு தேர்ந்த விதுஷகரால் தவறில்லாமல் செய்து காட்ட முடியும்.

அனுலோமத்தில் விவரித்த அனைத்து விதிகளும், சார்ந்த சாத்தியங்களும், கடினங்களும், பிரதிலோமத்திற்கும் பொருந்தும். உதாரணமாக, தொடங்குவது சமத்திலும், பதகர்பம் லகு த்ருத தட்டில் பொருந்துமாறும் அமைந்த பல்லவிக்கு பிரதிலோமம் செய்வது சார்ந்தீட்டில் சுலபம். அதீத அனாகத எடுப்பு பல்லவிகளில் (ஆனால் பதகர்பம் பொருத்தமாக அக்‌ஷரத் தட்டில் பொருந்தி இருக்கையில்) பிரதிலோமம் கடினம். நம் ”பாலும் பழமும்” வேடிக்கை பல்லவியில், சமத்தில் தொடங்கி, பதகர்பம் சரியாக தட்டில் விழவில்லையெனினும், சரியாக எட்டு அக்‌ஷரத்தில் பல்லவியை முடித்துவிடுவதால் தப்பிக்கிறோம்.

மேல் பத்தி புரியவில்லையெனில் பாதகமில்லை. இதுபோன்ற டீட்டெய்ல்ஸ் கர்நாடக சாங்கீத அனுபவத்தின், கேள்விரஸனையின், அடுத்த கட்டம். இப்போதைக்கு சாய்ஸில் விட்டுத் தொடருங்கள்.

மூன்று வருடம் முன் காலைக்கச்சேரியில் விதூஷி வேதவல்லி மியூஸிக் அகதெமியில் கரஹரபிரியாவில் ரா.தா.ப. செய்தார். பல்லவி கண்ட திரிபுடை தாளத்தில், திஸ்ர நடையில் அமைந்தது (நடை பற்றி நான்காம் பாகத்தில் விவரித்துள்ளோம்). விலோம அனுலோமம் செய்கையில் பல்லவி தாள இடத்திற்கு வரவில்லை. அதேபோல 21/12/07 காலை கச்சேரியில் விதூஷி நீலா ராம்கோபால் ஸரஸாங்கியில் ரா.தா.ப. செய்தார். மிஸ்ர திரிபுடையில் பல்லவி அமைந்தது (கவனிக்கவும். இதுவரை கட்டுரையில் குறிப்பிட்ட திரிபுடை தாள பல்லவி உதாரணங்களில் விட்டுப்போன தாளம்). இவருக்கும் விலோம அனுலோமத்தில் இடத்திற்கு வராமல் பல்லவி யானிகானிபாப்பானி என்று சுற்றிக்கொண்டிருந்தது.

இதை இவர்களை குறை கூறுவதற்காக எழுதவில்லை. அபரிமிதமான ராக ஞானத்துடன் ராக தான ஆலாபனைகள் இன்றளவும் பொழியும் வேதவல்லியின் கச்சேரியையும், விஷய ஞானத்தையும் விமரிசிக்க எனக்கு ஒரு யோக்யதையும் இல்லை. அதேபோல ஸரஸாங்கி ராகமெல்லாம் ஆலாபனை செய்து கேட்டு எத்தனை யுகங்களாகிறது. அதில் விஸ்தாரமாக பல்லவி பாடுபவர் என்றும் போற்றத்தகுந்தவர். ராகம் தானம் பல்லவியில், அனுலோமம் பிரதிலோமம் செய்வதற்கு அசாத்தியமாக மனதை ஒருமுகிக்கும் திறன் வேண்டும். இல்லையேல், செஞ்சுரிதான் என்கையில் சிலவேளைகளில் சொதப்பிவிடும் சச்சின்போல, யானையாக இருந்தாலும் அன்றைய கச்சேரியில் அடி சறுக்கிவிடும்.

இப்போது கச்சேரிகளில், ரா.தா.ப. உருப்படியை தங்கள் அநேக கச்சேரிகளில் பாடும் சொற்ப சிலரால் அனுலோமம் ஒரளவு திறம்படவே செய்யப்படுகிறது. வளரும் கலைஞர்களும் செய்ய முயல்கின்றனர் (மேற்சொன்ன டி.என்.எஸ்.கிருஷ்ணா, ஒரு உதாரணம்). ஆனால் இக்கால கச்சேரிகளில் பிரதிலோமம் செய்து பார்ப்பது மிகவும் அரிது. எனக்கு தெரிந்து விதூஷி சுகுனா புருஷோத்தமன் செய்கிறார். ஒரே கீர்த்தனத்திற்கு இரண்டு கையில் இரண்டு வேறு தாளம்போடும் வல்லமை பெற்ற இவர் பிரதிலோமம் செய்வது பொருத்தமானது. சேஷகோபாலன் பிரதிலோமம் அநாயாசமாக செய்துகொண்டிருந்தார். மனதுவைத்தால் இன்றும் செய்வார். ஆந்திரா பாடகிகள் பந்துலராமா, மண்டா சுதாராணி செய்து பார்த்திருக்கிறேன். பல்லவி கணக்குவழக்குகளில் சாம்ராட்டுகளான ஆலத்தூர் சகோதரர்களின் நேரடி சிஷ்யரான, இன்றைய மூத்த வித்வான் செங்கல்பட் ரங்கநாதன், திருச்சி வெங்கட்ராமன் போன்றோர் பல்லவி பயிலறங்குகளில் பிரதிலோமம் செய்துகாட்டுகின்றனர்.

***

முடிக்கும்முன் சில உபரி கருத்துகள்.

அனுலோமம் செய்கையில், மத்யமகாலத்தில் மித வேகத்தில் பல்லவி பாடப்படுகையில், ராகத்தின் பாவம், ஸ்வரூபம் கெடாமல், கமகங்களுடன் மிளிர்ந்து வெளிப்படுவது இயல்பு. ஆனால், பல்லவியின் வேகம் அதிகரிக்கையில், ராகத்தின் ஸ்வரூபம் குறைந்துவிடும் இதுவும் இயல்பே. குறைந்த அவகாசத்தினுள் ஒரு ராகத்தின் கமகக்கார்வைகளை மனதில் பதியுமாறு தனித்து ஒலித்து பாடுவது முடியாது. பேராசிரியர் சாம்பமூர்த்தியும் தன் இசைப்புத்தகங்களில் இதைக்குறிப்பிடுகிறார். இந்த அனுலோமத்தின் நியதியை ”ஹும், வெறும் கணக்குவழக்கு; ராக பாவமே போச்சு” என்றெல்லாம் குறைசொல்வது சில இசை விமர்சகர்களின் பொழுதுபோக்கு. எடுத்துக்கொண்ட ராகத்தை முதலில் ஆலாபனை செய்து, பிறகு அதே ராகத்தில் தானம் பாடி, பிறகே பல்லவியின் முத்தய்ப்பாக சொற்ப அவகாசத்தில் வரும் அனுலோமத்தின் உச்சத்திலும் ராகத்தை தேடுவது, விமர்சகர்களுக்கு கையில் தாளம் ஓடாததினால் இருக்கலாம். இவ்வகை விமர்சகர்களின் கர்மபலனில்தான் இன்று மொத்த அவகாசத்திற்கும் விஸ்தாரமாக ராக ஆலாபனையற்ற கச்சேரிகளை சபையில் கேட்டு கைதட்டிக்கொண்டிருக்கிறோம்.

தாளத்தின் சமத்தில் இருந்து விலகி அதீத அனாகத எடுப்பில் முக்கால் இடம் தள்ளி என்பது போல் தொடங்கும் பல்லவிகளில் அனுலோமம் செய்வது பொதுவில் கடினம். மேல் காலத்தில் நான்குமுறை ஒரே ஆவர்தத்தில் தாளத்திற்குள் வருவதற்கு, இல்லை கீழ்காலம் மிகமிக மெதுவாக பல்லவியை நான்கு தாளச்சுற்றுகளில் பாட, ஒன்றேயரைக்கால், காலரைக்கால் அக்‌ஷர இடத்திலெல்லாம் தொடக்கம், அறுதி என்று வந்து படுத்திவிடும். பாடுவதும், தொடர்வதும் கிட்டத்தட்ட இயலாகாரியம்.

இப்போது நாம் கட்டுரைத்தொடரில் மெகா உதாரணமாக விவாதித்துக்கொண்டிருக்கும் நமது அரியக்குடியாரின் ராகமாலிகை ராட்டைப்பல்லவியை யோசித்துப்பாருங்கள். ஆதி தாளம்தான் என்றாலும், ஒரு முறை பல்லவியை பாடுவதற்கே ஆதிதாளம் இரண்டு சுற்று வரும். நான்கு ராகங்களில், ஒவ்வொரு ராகத்திற்கான பல்லவி வார்த்தைகளும் ஆதி தாளத்தின் எந்த அக்‌ஷரத்திலும் பொருந்தாத இடக்கு இடங்களில் தொடங்குகிறது. (ஐந்தாம் பாகத்தில் இப்பல்லவியின் அமைப்பை விவரித்துள்ளோம்.) இந்தப் பல்லவியில் அனுலோமம் செய்வது கடினம். அத்துடன் விடுவோம்.

அனுலோமத்தின் ஐந்து காலப்பிரமாணங்கள் தவிர இன்னொரு வகை இருக்கிறது. திஸ்ரம் செய்வது என்பார்கள். அதாவது ஒரு தாளத்தில் ஒரு சுற்று வருமாறு பல்லவி அமைந்திருக்கிறதென்றால், இரண்டு சுற்று அத்தாளத்தை ஒரு வேகத்தில் போடுகையில், பல்லவியை மூன்று முறை முழுவதுமாக பாடிமுடிக்கவேண்டும். இப்படி செய்வது பல்லவியை திஸ்ரம் (மூன்று) செய்துகாட்டுவது என்று பொருள். கவனியுங்கள், இது அனுலோமத்தின் இரட்டிப்பாக அதிகரிக்கும் வேகத்தில் இருந்து மாறுபட்டது. அனுலோமத்தில் தாளத்தின் ஒரு சுற்றில், பல்லவி ஒருமுறை, இருமுறை, நான்கு முறை என வரும். திஸ்ரத்தில், தாளத்தின் இரண்டு சுற்றில், பல்லவி மூன்றுமுறை, அதாவது தாளத்தின் ஒரு சுற்றில், பல்லவி ஒன்றரை முறை வரவேண்டும்.

இப்போது ஜஸ்ட் ஆதி தாளத்தில், சம எடுப்பாக இல்லாமல், அரை இடம் தள்ளித் தொடங்கும் பல்லவியில் திஸ்ரம் செய்வதின் கடினத்தை யோசித்துப்பாருங்கள்.

பொதுவாக அனுலோமம் செய்கையில், பல்லவியை மத்தியமகாலம் பாடுவதில் இருந்து பாடகர்கள் மிதவேககாலம் என்று ஏற்றி, மெதுவானகாலம் என்று குறைத்து மட்டும் பாடி, மீண்டும் மத்தியமகாலத்திற்கு வந்துவிடுவர். இப்படி செய்தாலே பாடகர் பல்லவியை த்ரிகாலம் (மூன்று காலங்கள்) செய்துள்ளார் என்று பொருள்.

மேல்கால கீழ்கால அனுலோமங்களை ஓரளவு கவனித்து ஐந்து காலங்களிலும் பாடிவிடமுடிகிற பல்லவிகளையும் த்ரிகாலம் மட்டும் பாடுவது இன்றைய கச்சேரிகளின் ரசிகர்களின் பொறுமையின்மை, நேரமின்மை. இல்லை பாடகரின் பயிற்சியின்மை. இப்படிப் பாடினால் ரசிகர்களுக்கு புரியாது என்று ஒட்டுமொத்தமாக கழித்துகட்டுவது, நல்ல திரைப்படம் எடுத்தால் பார்க்கமாட்டார்கள் என்பதற்கொப்பானது. இரண்டு வகை சால்ஜாப்புகளுமே, புறவயமான மதிப்பீட்டில், கலைத்துரோகம்.

ஆனால் இக்காலத்தில் நாம் இவற்றை குறையாக நினைப்பதிற்கில்லை. ஏனெனில் இன்றைக்கு முக்கால்வாசி கச்சேரிகளில் ரா.தா.ப.யில் த்ரிகாலமும் இல்லை, தனியே ஷட்காலமும் இல்லை. ரா.தா.ப.விற்கே கஷ்டகாலம்.

***

[தொடரலாம்…]