மேகசந்தேசம் 2.0 – Cloud Computing

க்ளௌட் கம்ப்யூடிங்க் – ஓர் அறிமுகம்

மேகங்களிடையே செய்திகளைப் பதுக்கி வைப்பதோ, அதை உரியவருக்கு மேகங்கள் வழியாகவே கொண்டு சேர்ப்பதோ நமக்குப் புதிது அல்ல. வானத்தில் கனமின்றி பஞ்சு போல் நகரும் மேகக் கூட்டங்கள் ஓரிடத்திலிருந்து நீர்த்துளிகளை ஏந்தி மற்றோரிடத்தில் அவற்றைப் பொழிவதால், கவிஞர்கள் காதலுக்கு தூதுவனாக மேகத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் இப்போது நாம் பேசப்போகும் மேகம் வேறு. மேகத்தைப் போலவே வானவெளியில் ஊடகத்தைப் பயன்படுத்தி செய்திகளை அனுப்புவதாலோ என்னவோ, இணையத்தையும் மேகமாகவே சித்தரிக்கிறார்கள். (புத்தகங்களில் பார்த்திருப்பீர்களே?) இணையத்திலேயே தகவல்களை வைத்து, அவற்றை வகைப்படுத்தி உரியவருக்கு அனுப்பும் முறையை ‘Cloud Computing’ என்று சொல்லுகிறோம். Cloud என்பது இங்கு இணையத்தைக் குறிக்கிறது. Cloud Computing என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? ‘இணைய கணினியம்’ என்று சொல்லலாமா? எழுதும்போது எழுத்துப்பிழைகள் வரலாம். எத்தனை ன, ண? ஆனால் கேட்பதற்கே சங்கீதம் போல் இனிமையாக இல்லை? மேகம் என்று சொல்லாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படத் தேவையில்லை. முன்பே சொன்னபடி மேகம் இங்கு ஓர் உருவகம்தான்.

கம்பெனியில் இருக்கவேண்டிய தகவல்களையெல்லாம் வெளியில் கொண்டு வைப்பானேன்? உள்ளே பூட்டி வைத்திருந்தாலே, தகவல் திருடர்கள் கொத்திக்கொண்டு போய்விடுகிறார்கள். ரகசியத் தகவல்களையெல்லாம் வெளியே இணையத்தில் வைத்து எல்லாம் தொலைந்து போகவா?

உண்மையாகச் சொல்லுங்கள்: உங்களுடைய விலை உயர்ந்த பொருட்களை நீங்கள் எங்கே வைக்கிறீர்கள்? வீட்டுக்கு உள்ளேயா? வெளியேயா? உள்ளே என்றுதான் முதலில் சொல்லத் தோன்றும், நீங்கள் உங்களுடைய விலை உயர்ந்த பொருட்களைப் பட்டியல் இடும் வரை. தங்க நகைகள், வெள்ளிச் சாமான்கள், வீட்டுப்பத்திரம், காசு, பணம் எல்லாமே வெளியே – வங்கியில். வங்கியில் ஏன் வைக்கிறீர்கள்? பொருள்களைப் பாதுகாக்க அவர்களிடம் வசதியும் உண்டு, ஞானமும் உண்டு. அதுதான் அவர்களுடைய வேலை. ஆனால் உங்கள் பிரதான வேலை பொருள் பாதுகாப்பு அன்று. உங்களுடைய அலுவலக வேலைகளோடு, இதையும் ஒரு வேலையாகச் செய்யாமல், அதையே முக்கியத் தொழிலாகக் கொண்ட வங்கியிடம் உங்களுடைய சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை விடத் தயாராக இருக்கிறீர்கள்; அதற்கு ஒரு விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள். தகவல்களை வகைப்படுத்துவதும், அவற்றைப் பாதுகாப்பதும் கம்பெனிகளின் பிரதான வேலை அன்று. பொருட்களை உற்பத்தி செய்வது, வினியோகிப்பது, விற்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வர்த்தக அமைப்புகளுக்கு தகவல் தொழில்நுட்பம் பிரதான வேலை இல்லை என்பதால், அவை இந்த வேலையை அதைப் பிரதான தொழிலாகச் செய்யும் நிறுவனங்களிடம் விட்டு விட வேண்டும். யோசித்துப் பார்த்தால், இது உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமன்றி, வியாபாரிகள், வங்கிகள் போன்ற சேவை நிறுவனங்கள், கடைகள், அரசாங்கம் எல்லாவற்றிற்குமே பொருந்தும்.

இந்தத் தத்துவ அடிப்படையை ஏற்றுக் கொண்டுதான் மேற்படி நிறுவனங்கள் தங்கள் தகவல் தொழில்நுட்ப வேலைகளை, அதில் தேர்ச்சி பெற்ற கம்பெனிகளிடம் ஒப்பந்த வேலையாகக் கொடுக்கின்றன. தகவல் தொழில்நுட்ப வேலைகளை வெளி நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில்அளிக்கும் முறை பெரிதாக ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது. நம் நாட்டில் வந்து குவியும் டாலர்களுக்கெல்லாம் இதுதானே காரணம்? நீங்கள் நியமித்த ஒப்பந்ததாரர்கள் உங்களுக்குத் தேவையான மென்பொருளை உருவாக்குகின்றனறர். வன்பொருளை உங்களுக்காக உங்கள் இடத்திலேயோ, தங்கள் இடத்திலேயோ நிர்வகிக்கின்றனர்.

ஆனால் Cloud Computing ஒரு படி மேலே போகிறது. இந்த இணையச் சேவை கொடுப்பவர் உங்களுடைய தேவைகளை அறிந்து அதற்கேற்றவாறு வன்பொருளைத் தன்னிடத்தில் அமைத்து, மென்பொருளை அவற்றில் ஏற்றி, உங்களுக்குத் தேவையான சேவைகளையும் அவற்றில் ஏற்றி இணையத்தின் மூலம், நீங்கள் விரும்பிய சேவைகளை அளிப்பார். வன்பொருள், மென்பொருள், தொடர்புக் கருவிகள் எதுவுமே உங்களுடையது இல்லை நீங்கள் உபயோகப்படுத்திய சேவைகளுக்கு ஏற்ப, உங்களுக்கு மாதாமாதம் பில் வரும்.

நினைத்துப்பாருங்கள்: மின்சாரம் உபயோகிப்பது போல் இல்லை? மின்சாரம் உருவாக்கும், வினியோகிக்கும் எந்த இயந்திரமும் உங்களுடையது இல்லை. மின் தொகுப்பிலிருந்து மின்சாரம் வருவதற்கான வழியமைப்பு உங்கள் வீட்டுக்கு வருகிறது. நீங்கள் உபயோகித்த அளவுக்குப் பணம் கட்டுகிறீர்கள். இதே போல் கணினியின் சேவைகளையும் கொடுத்தால் என்ன?

கணினியச் சேவைகளை அளிப்பதில் நிறைய சிக்கல்கள் உண்டு. எந்த முறையில் தயாரித்தாலும், இறுதிப்பொருளான மின்சாரம் ஒன்றே. ஆனால் தகவல் தொழில் நுட்பத்திலோ, சேகரிப்பு, வகைப்படுத்துதல், சேமிப்பு, வினியோகம் ஒவ்வொன்றிலும், பயனீட்டாளரைப் பொருத்து பெரிய மாறுதல்கள் இருக்கும். உங்கள் கம்பெனி சம்பளக் கணக்கிற்கும், அடுத்த கம்பெனிக்கும் நிறைய வேறுபாடுகள். அச்சிடும் அறிக்கைகளில் ஒற்றுமை இருக்காது. எந்தத் தகவலை யார் பார்க்கலாம், யார் மாற்றலாம் என்பதில் கம்பெனிக்கு கம்பெனி வேறுபடும். பயனீட்டாளருக்கேற்ப வெவ்வேறு சேவையைக் கொடுக்க வேண்டும் என்பது இந்த இணையச் சேவையின் மிகப் பெரிய சவால்.

கூகிளில் கூகிள் டாக்ஸ் (Google docs) என்ற ஒரு சேவை இருக்கிறது. நீங்கள் உங்களுடைய தகவல்களை (doc, xls எந்த வடிவில் இருந்தாலும்) இந்த சேவை கொடுக்கும் இடத்தில் சேமித்து வைக்க முடியும். எங்கே, எந்த கணினியில் – ஊஹூம், உங்களுக்குத் தெரியாது. நீங்கள் gmail பொது மின்னஞ்சல் சேவையை உபயோகப்படுத்தும் போது உங்களுடைய அஞ்சல்கள் எங்கே சேமித்து வைக்கப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? அதேபோலத்தான். இதனால் என்ன பயன்? நீங்கள் எங்கேயிருந்தாலும், இந்த தகவல்களை அடைய முடியும். வெளியூருக்குப் பேசச் சென்ற நீங்கள் உங்களுடைய கணினியில் அடைத்து வைத்திருந்த குறிப்புகளை வெளிக்கொண்டு வரப் பார்க்கும்போது உங்கள் கணினி சத்தியாக்ரஹம் செய்கிறது. உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், இணையத்திலிருந்து இந்தச் செய்திகளை இறக்கி உங்கள் பேச்சை நேர்த்தியாக முடித்து எஸ்கிமோக்களிடம் கூடக் கைதட்டல் வாங்க முடியும் – அங்கே இணைய இணைப்பு இருக்கும் / வேலை செய்யும் பட்சத்தில்.

கூகிளிலேயே கூகிள் ஆப்ஸ் (Google Apps) என்று இன்னொரு சேவை இருக்கிறது. இதில் நீங்கள் உங்களுக்குத் தேவையான மென்பொருளையே தயார் செய்யலாம் – இணைய கணினியச் சேவைக்கு எடுத்துக்காட்டு. கூகிள் இந்தச் சேவையை இலவசமாக அளிக்கிறது. இது போன்ற சேவைகளை அளிக்கும் மற்ற சில கம்பெனிகள் அச்சேவைகளுக்கு பணம் வசூலிக்கின்றன.

பயனீட்டாளர்களுக்கு இத்தகைய சேவையால் என்ன பயன்? நிறுவனத்தில் தகவல் மையங்களைக் கட்டி, அவற்றில் கணினிகளை வாங்கி வைத்து, அவற்றை மேய்க்க, மென்பொருள் தயாரிக்க என்று ஒரு படையை உருவாக்கி அந்த எல்லா பொறுப்பையும், செலவையும் ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக இதையெல்லாம் ஞானம் நிறைந்த கம்பெனியிடம் விட்டு விட்டு நாம் ஹாய்யாக இருக்கலாம். எந்தக் கணினி எப்போது பழையதாகப் பயனற்றதாக ஆகும்? வழக்கொழிந்து போகும்? எந்த மென்பொருளில் எந்தக் குறைக்காக ஒட்டு (patch) வேலைகள் செய்ய வேண்டும் என்றெல்லாம் கவலைப் பட வேண்டாம்.

தேவைக்கு ஏற்றவாறு கணினியச் சக்தியை அதிகரித்தோ, குறைத்தோ செய்யக் கூடிய வசதி இணைய கணினியச் சேவையின் பெரிய பயன். கணினித் திறனைப் பொருத்தவரை, நிறுவனங்களில் இரண்டு விதமான தீவிரமான நிலைகளைக் காணலாம். சம்பளக் கணக்கீடு என்ற ஒரு நாள் கூத்துக்குத் தேவையான கணினியை வாங்கிவிட்டு மற்ற இருபத்தொன்பது நாட்கள், அதனுடைய திறனைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது எல்லா நிறுவனங்களிலும் நடக்கும் விஷயம். அதே சமயம், திடீரென தீபாவளிக் கூட்டம் வந்து பில் போடத் திறனினிறி நம் கணினி திணறலாம். ஆனால் இணையச் சேவை என்பது ஓட்டலில் ரூம் போடுவது போல. தேவையான அளவிற்கு அதிகரித்துக் கொள்ளலாம்; குறைத்துக் கொள்ளலாம்.. பல கணினிகள் வைத்திருக்கும் இணையச் சேவையாளர்கள் உங்கள் திடீர் தேவையை குறுகிய காலத்தில் பூர்த்தி செய்யமுடியும். பல பேருக்கு இந்த மாதிரியான சேவையை அவர்கள் வழங்குவதால் அவர்களிடம், அதிகக் கணினித் திறன் இருக்க வாய்ப்பு உண்டு. எல்லாப் பய்னீட்டாளர்களுக்குமே ஒரே சமயத்தில் அதிகத் திறன் தேவைப்படாது என்பதால், திறன் நிரவல் சாத்தியமாகிறது. ஆனால் உங்களுக்கு பில் உங்கள் பயனீட்டைப் பொருத்தே.

cloud-computing

இது போன்ற பல பயன்கள் இந்தச் சேவையைப் பற்றிப் பேசப்படுகின்றன. எதிர்காலத்தில் இந்த சேவை பெருமளவில் பயன்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் (சந்தை ஆராய்ச்சி நிறுவனங்களும் இந்த நம்பிக்கையை உறுதிப் படுத்துகின்றன) கூகிள், அமேஸான், ஐ.பி.எம், மைக்ரோசாஃப்ட் என்று எல்லாக் கம்பெனிகளும் இந்தச் சேவை அளிப்பதில் இற்ங்கியிருக்கின்றன. நம்மூர் ராம்கோ இ.ஆர்.பி என்று சொல்லப்படும் நிறுவனந் தழுவிய மென்பொருளை மேக வழியாக வழங்கிக் கொண்டிருக்கிறது.

நிறுவனத்திற்கு உயிர் நாடியான மென்பொருள் தேவைகளை இணையத்திலிருந்து பெறுவதில் ஒரு குறை உண்டு. இணையத் தொடர்பு இடையறாது இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, சேவையும் விரைவானதாக இருக்க வேண்டும். மோடத்தை ஆன் செய்து விட்டு, எத்தனை நாள் ஸ்க்ரீனைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்? இந்தச் சேவைகள் பெருவழிப் பாதைகள் வழியே வருகின்றன என்றாலும், பலரும் பயன்படுத்தும்போது இந்தப் பாதைகளும் அடைத்துப் போகும்.

இந்தச் சேவை கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘தொழில் நுட்பத்தின் எதிர் காலம்’ என்ற அளவில் பேசப்பட்ட போதிலும். நாம் மேற்கூறிய பெரிய பெரிய நிறுவனங்கள் இந்தச் சேவையை வழங்குவதில் ஈடுபட்டிருந்த போதிலும். எதிர்பார்த்த அளவுக்கு வளராமல் இந்தக் சேவை சவலைக் குழந்தையாகவே இருப்பதற்கு முக்கிய காரணம் தகவல் பாதுகாப்பு பற்றிய கவலைதான்.

வங்கிகளின் எடுத்துக்காட்டோடு நாம் கட்டுரையைத் தொடங்கினோம்.. வங்கிகள் காலம் காலமாய் தங்கள் பாதுகாப்புத் திறனை நிரூபித்து விட்டன. இணையச் சேவையில் இன்னும் அந்த அளவு முழுமையான நம்பிக்கை வரவில்லை. நம் தகவுகள் எங்கே இருக்கின்றன என்பது தெரியாத நிலை பயனீட்டாளர் பலருக்கு ஒப்பாத ஒன்று. இந்தியப் பாதுகாப்பு பற்றிய தகவல்கள் – அது கூட வேண்டாம், பொருளாதாரச் சேவைகள் பற்றிய தகவல்கள் பாகிஸ்தானில் உள்ள கணினிகளில் வைக்கப்படுமேயானால், அதற்கு அரசாங்கமோ, அந்தந்த பயனீட்டாளர் நிறுவனங்களோ அத்தகைய சேவையை நாடுவார்களா? ஒரு நிறுவனத்தின் தகவல்கள் அந்த நிறுவனத்தின் போட்டியாளருடன் ஒரே கணினியில் இருக்கக்கூடிய வாய்ப்பும் இந்தக் சேவையில் உண்டு.

வைத்திருக்கும் தகவல்கள் பூடகமாக மாற்றித்தான் வைக்கப்படும் என்றாலும், இந்தத் தகவல்கள் ஹாக்கர்களால் அழிக்கப் படும் அபாயம் இருக்கிறது. இந்த மாதிரி நட்டங்கள் ஏற்பட்டாலோ, அல்லது ஒப்பந்ததாரரே நிறுவனத்தை மூடும் நிலைக்கு வந்தாலோ, பயனீட்டாளரின் நிலை என்ன? அவர்களுடைய தகவல்களின் நிலை என்ன? என்பது போன்ற கேள்விகள் இருக்கின்றன. சேவையாளருக்கும், பயனீட்டாளருக்கும் இடையேயான ஒப்பந்தம் இத்தகைய சந்தர்ப்பங்களில் சேவையின் பொறுப்பு என்ன, பயனீட்டாளரின் உரிமைகள் எவை என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும் அரசுகளும் தேவையான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இந்தச் சேவையைப் பிரத்தியேகமாக ஒரு நிறுவனத்துக்கு மட்டும் அளிக்கும் வசதியும் உண்டு, இது private cloud என்று வழங்கப் படுகிறது.

இன்றைய நிலையில் தகவல் துறையில் எல்லோருடைய உதட்டிலிருக்கும் சொல் Cloud Computing. சொற்களைப் புரட்டிப் போட்டு, புதிய புதிய தொடர்களை உண்டாக்கிப் பிரபலப் படுத்துவதில் ஐ.டி. ஆட்களை மிஞ்ச முடியாது. க்ளௌடும் காற்றடைத்த பைதானா, அல்லது புது மாதிரியான சேவையை உருவாக்குமா? மூட்டமாக இருக்கிறது. தெளிந்தபின் பார்க்க வேண்டும்.