மாக்ஸீன் க்யூமின் – இரு கவிதைகள்

wodchuck-siblings-pepperell-ma_dsc0038-2007-06-30

குழி அணில்கள்

குழி அணில்களைக் கொல்ல விஷப்புகை சரிப்படவில்லை.
தீவன, தானிய சந்தையினரின் அதிரடி குண்டின்
விளம்பரம் சொன்னபடி அது
கருணை நிரம்பியது, எலும்பு வரை வேகத் தாக்கம் உண்டு.
நாங்கள் வைத்த மொத்தப் பெட்டியும் காற்று கூடப்புகாமல்,
இரு வாயிலும் கல்பாறைகளால் மூடித்தானிருந்தது,
ஆனால் அவற்றுக்கோ எட்டாத் தூரத்தில் கீழ்த்தளத்துக்குக் கீழொரு அடித்தள்ம் இருந்தது.

மறுநாள் காலை மறுபடியும் வந்தன,
சிகரட்டாலும் அரசாங்கக்கடை ஸ்காட்ச்சாலும்
நாங்கள் இருந்ததைவிட மோசமாய் எதுவும்
சயனைடால் அவைகளுக்கு ஆகிவிடவில்லை
எல்லோரும் நன்றாய்தான் இருந்தோம்.
முதலில் சாமந்திகளை முறையாய் அழித்துப்
பின் காய்கறிப் பாத்தியை ஆக்கிரமித்தன
ப்ராக்கலித் தண்டுகளை கிள்ளி,
காரட்டுகளின் தலையை சீவிக்கொண்டு.

நம் வாய்களுக்கான சாப்பாடு என்றேன் நான்,
புள்ளி 22 குண்டுகளின் நேர்த்தியான மூக்குகளைத்
தொட்டு நீதி உணர்வால் புல்லரித்துக்கொண்டு.
நான், ஒரு வழி தப்பிய அமைதிவாதி,
வீழ்ந்து அருளை இழந்தேன்
இப்போது டார்வினிய நியாயங்களில் ஊறி உப்பிக்
கொல்லத் தயாராய்,
ஒரு சின்னக் குழி அணிலின் முகத்தை நோக்கிக் கணக்கிட்டுச் சுட்டேன்.
என்றும் பூக்கும் ரோஜாக்களிடையே அவன் வீழ்ந்து இறந்தான்.

பத்து நிமிடங்களுக்குப் பின் அவன் அம்மாவை வீழ்த்தினேன்.
அவள் காற்றில் கர்ணமடித்து விழுந்தாள், ஊசிப்பற்கள்
இன்னும் ஒரு ஸ்விஸ் கீரை இலையில் குத்தியபடி இருக்க.
அடுத்து ஒரு குழந்தை. ஓ, ஒன்று இரண்டு மூன்று
என்னுள் இருந்த கொலைகாரி முறுக்கி மேலெழும்ப.
கழுகுக்கண் கொலையாளி மேடையேறி முன் நின்றாள்.

இன்னும் ஒரு குழி அணில் பாக்கி. வயசாளி எத்தன்,
என்னை ஒவ்வொரு நாளும் தயார் நிலையில் வைக்கிறான்.
இரவெல்லாம் அவனது கூனிச் சுருண்ட உடலை வேட்டையாடுகிறென்.
தூக்கத்திலும் துப்பாக்கிக்குழாய்க் குறி வழி பார்ப்பதாய்க்
கனவு காண்கிறென்.
அவை மாத்திரம் கண்காணாமல் சாக ஒப்பி
எல்லாமாகப் பூமியின் கீழ் விஷப்புகையில் போயிருந்தால்
சத்தமில்லா நாஜி வழியில்.

மறு பார்வைக் கனவு

ஆனால், அன்று மதியம் அவள் தன்னை மாய்த்துக்கொள்ளவில்லை.
அக்டோபரில் அதொரு மிதமான நாள், வெளியே அமர்ந்திருந்தோம்
ஸாண்ட்விச்களுடன், அவள் ஆரம்பித்திருப்பதாய்ச் சொன்னாள்

யோகாப்பியாசமும், பியானோ பாடங்களும்,
தன் நாடகத்தைக் காமமும், பெருமையும் நிறைந்ததாய் திருத்தி எழுதவும்
அதனால் அன்று மதியம் அவள் தன்னை மாய்த்துக்கொள்ளவில்லை.

என்னை அணைத்தாள், வீட்டுக்குப் போனாள்,
கராஜின் கதவுகளை சுழற்றி மேலேற்றினாள்,
ஆரஞ்சும், சிவப்புமாய் பகட்டான இலைகளில் கால் தேய்த்தது
சோகத்தைக் கிளப்பியது. அவள் ஆரம்பித்திருப்பதாய் சொன்னாள்

அக்மதோவாவை மொழி பெயர்க்க, அவளது அழகான ரஷிய
பியானோ ஆசிரியர் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்ல
அதனால் அன்று மதியம் அவள் தன்னை மாய்த்துக்கொள்ளவில்லை.

அவனுக்காக அவள் மே கீஷும் கொக் ஓ வானும் சமைத்தாள்
அவன் சர்னீயின் பியானொ முறையை தலைகீழாய் மாற்ற
அவளது விரல்கள் பறந்தன. அவள் ஆரம்பித்திருப்பதாய் சொன்னாள்

துரித கதி வாசிப்பும், ஜூலியா சைல்டின் சமையலும்,
நுரையீரலைப் பெருக்கும் ப்ராணயாமங்கள் படுக்கையில் செய்ய
அதனால் அன்று மதியம் அவள் தன்னை மாய்த்துக்கொள்ளவில்லை.
நாங்கள் ஸாண்ட்விச்சுகளை சாப்பிட்டோம்.
அந்தக் கனவு வைகறையில் வெடித்து சிதறியது.

மாக்ஸீன் க்யூமின் – Maxin Kumin (1925- )

இரண்டாம் கவிதை மாக்ஸீன் க்யூமினின் நெடுநாள் தோழியான கவிஞர் ஆன் செக்ஸ்டன் தற்கொலை செய்து கொண்டதைப் பற்றியது. இருவரும் உற்ற நண்பர்கள், பாஸ்டன் அருகே உள்ள கேம்ப்ரிட்ஜ் நகரில் வாழ்ந்தவர்கள். ஆன் 1974ஆம் வருடம் தற்கொலை செய்து கொண்டார். அது அவரது இரண்டாவது முயற்சி. 20வருடம் முன்னால் ஒரு தடவை முயன்று அப்போது தப்பி விட்டிருந்தார்

சில குறிப்புகள்:

Anna Akhmatova:  1889- 1966 ரஷிய பெண் கவி.இயற்பெயர் அன்னா அன்ட்ரெயெவ்னா கொரெங்கொ.
Mae Quiche: பால் மற்றும் முட்டை சேர்த்து கணப்பு அடுப்பில் வேகவைத்து சமைக்கப்படும் பிரெஞ்சு உணவு.
Coq au vin: கோழியுடன் வைன் சேர்த்து செய்யப்படும் ஒரு பிரெஞ்சு உணவு
Czerny:  கார்ல் சர்னீ. ஆஸ்த்ரிய நாட்டு பியானொ கலைஞர், இசை அமைப்பாளர் மற்றும் இசை பயிற்றுவித்தவர்.
Accelerando:  இசையின் கதி அதிகமாகிக்கொண்டுபோவதை உணர்த்தும் இசைக் குறியீடு.
Julia Child: அமெரிக்க தொலைக்காட்சியில் பிரெஞ்சு சமையல் கற்றுக்கொடுத்துப் பிரசித்தமான பெண்மணி.