மகரந்தம்

தீமிதித்தல் எனும் காட்டுமிராண்டித்தனம் (?)

தீமிதி என்னும் கிராமியத் திருவிழாப் பழக்கங்கள் எல்லாம் காட்டுமிராண்டித்தனம் என்று பலரும் எழுதிப் பிரபலமானார்கள். அந்த மாதிரி தலையை வெட்டி காலனியத்தின் பாதத்தில் வைத்த பகுத்தறிவுதான் தமிழகத்தில் இன்னமும் அதிகாரத்தில் எங்கும் உள்ளது. இதோ ஒரு ஸ்பானிய கிராமத்து மக்களின் தீமிதி விழா பற்றிய செய்தி. பல நூற்றாண்டுகளாகியும் கிருஸ்தவத்தால் அழிக்க முடியாத இந்த கிராமத்து விழாவை இப்போது ‘அறிவியலாளர்கள்’ ஆராயத் துவங்கி இருக்கிறார்கள். மேற்கத்திய சாயத்தை எதன் மீது பூசினாலும் அது உடனே அறிவியலாகி விடும். இந்த ஆய்வின் ஒரு வியப்பான முடிவு – தீமிதிப்பாருடைய இதயங்களும், பார்வையாளரான சுற்றத்தினரின் இதயங்களும் ஒரே அலைவரிசையில் ஒத்திசைவதாகக் கண்டறிந்தார்களாம். இது முதல் கட்ட ஆய்வுதான். சிறு எண்ணிக்கை நபர்களே ஆய்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவற்றை மறுபடி மேலும் கூடுதல் நபர்களிடம் செய்வோம் என்று ‘சூளுரைத்து’ இருக்கிறார்கள். கட்டுரையை இங்கே காணலாம்.

http://www.nytimes.com/2011/05/03/science/03firewalker.html

இந்த ஆய்வைப் பற்றிப் பகுத்தறிவுப் பகலவன்களுக்குத் தெரிந்தால் என்ன செய்வார்களோ?

3,500 கோடியும் ஐன்ஸ்டைனின் கோட்பாட்டு வெற்றியும்

ஐன்ஸ்டைன் முன்வைத்த ஈர்ப்புவிசைக் கோட்பாட்டை ஒரு வழியாக நிரூபித்துவிட்டோம் என்று ஸ்டான்ஃபோர்டு விஞ்ஞானிகள் மார்தட்டிக் கொள்கிறார்கள். இதற்கான செலவு சற்றொப்ப 3,500 கோடிகள். இதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட காலம் 52 ஆண்டுகள். இத்தனை செலவும், காலமும் பிடிக்கும் ஒரு கோட்பாட்டை நிரூபிக்க ஏன் இத்தனை பிரயத்தனம் – அந்தக் காசில் எத்தனை நிலங்களை வளைத்துப் போட்டிருக்கலாம், எத்தனை அலைவரிசைக் கற்றைகளை விற்றிருக்கலாம் என்று இதைப்படிக்கும் ‘தலைவர்கள்’ நினைத்துக்கொண்டிருக்கக் கூடும்.

http://www.nytimes.com/2011/05/05/science/space/05gravity.html?hpw


மூளையில் தகவல்களை பிரதியெடுக்கும் கருவி

நமது மூளையில் 10000 கோடி ந்யூரான்கள் இருக்கின்றன. அவை ஸினாப்ஸ் என்றழைக்கப்படும் சந்திப்புகளில் தகவல்கள் பரிமாறிக் கொள்கின்றன. இப்படி ஒரு பத்தாயிரம் சந்திகள் நம் மூளையில் இருக்கின்றன. இங்கு தகவல் பரிமாற்றம் மின் மற்றும் வேதிப் பொருட்களின் வழியாக நடக்கின்றன. தற்போது விஞ்ஞானிகள் இந்த ஸினாப்சில் ஏற்படுகிற மின்சார பரிமாற்றத்தை நகலெடுக்கும் கருவியை வடிவமைத்திருக்கிறார்கள். கார்பன் நானோட்யூபால் செய்யப்பட்ட இந்தக் கருவி ஒரு பென்சில் முனையைவிட பத்து லட்சம் மடங்கு சிறியதாக இருக்கிறது. எதிர்காலத்தில் இவற்றைக் கொண்டு, மூளையில் ஏற்படக்கூடிய காயம் முதல், சுயபுத்தியுடன் இயங்குகிற கார்கள் மற்றும் கருவிகள் வரை பல பயனுள்ள உபகரணங்களை வடிவமைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். செய்தி இங்கே :

http://www.eurekalert.org/pub_releases/2011-04/uosc-rcf042111.php

சூபர்மேன் காமிக் தொகுப்பு

சூபர்மான் காமிக் புத்தகங்களை நம் ஊரில் வெகு காலமாக நடைபாதைக் கடைகள், பழம் புத்தகக்கடைகளில் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் அவை லெண்டிங் லைப்ரரி எனப்படும் வாடகைப் புத்தக நிலையங்களில்/ நூலகங்களில் கிடைத்தன. சூபர்மான் படங்கள் வந்தபிறகு, ஓரளவு காமிக் புத்தகங்களுக்கு மவுசு குறைந்திருந்தது, அதுவும் தொலைக்காட்சியில் அனிமேஷன் படங்களாக கிடைத்த பிறகு இன்னமுமே மவுசு குறைந்திருந்தது.

சூபர்மான் புத்தகங்கள் அமெரிக்காவில் துவங்கியவை, சூபர்மான் என்னும் பாத்திரமே அயல் கிரகத்தில் பிறந்த ஒரு மனித உருக் கொண்ட ஜீவராசி, அமெரிக்காவில் விழுந்து அமெரிக்கக் குடியானவர்களால் வளர்க்கப்பட்டு அமெரிக்க பண்பாட்டின் சுத்திகரிக்கப்பட்ட சான்றாக உலவுகிற ஒன்று. அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாப்பது சூபர்மானின் முக்கிய வேலைகளில் ஒன்று, அமெரிக்க நலன்களைக் காத்தால் அது உலகில் எல்லா நல்ல மனிதர்களின் நலன்களையும் காப்பதாகக் கருதப்பட்ட கருத்து மையக் கருத்து. கம்யூனிஸம், தவிர யாராரோ சூப்பர் வில்லன்கள் உலக ஏகாதிபத்தியத்துக்கு முயல்பவர்களை சூபர்மான் அடித்து உதைத்து நொறுக்கி அமெரிக்காவைக் காப்பாற்றுவார் என்பது கதைகளின் மாறாத மையம். சூபர்மான் காமிக் புத்தகங்களின் 900 மாவது இதழ் வெளி வர இருக்கிறது. இதில் சூப்பர்மான் செய்யும் ஒரு செயல் உலக அரசியல் மாறுவதற்கு ஒரு முன்னோடி எனக் கொள்ளலாம். சூபர்மான் இந்த இதழில் தன் அமெரிக்கக் குடியுரிமையை தானாக விட்டு விடுகிறார், அதுவும் ஐ.நா அவையில் அறிவித்து. இது குறித்த ஒரு செய்திக் குறிப்பைப் படித்து மகிழுங்கள் இங்கே:

http://www.wired.com/underwire/2011/04/action-comics-900/

இனவெறி இன்னமும் அகலாத ஐரோப்பிய நாடுகள்

ஹங்கேரியர் பல நூறறாண்டுகளாகத் தம் நடுவே வாழ்ந்து வந்த ரோமா எனப்படும் மக்கள் குழுவினரை (ஜிப்ஸிகள் என்றும் அழைக்கப்படுபவர்கள் இவர்கள்) எப்படி எல்லாம் துன்புறுத்துகிறார்கள் என்று பாருங்கள்.

http://www.spiegel.de/international/europe/0,1518,759586,00.html

இனவெறியின் கோரம் ஐரோப்பிய நாடுகளை இன்னும் நீங்கவில்லை என்பதைக் காட்டுவதாக இருக்கிறது இந்த செய்தி. சில மாதங்கள் முன்பு ஃப்ரான்ஸின் வலது சாரி அரசு இதே மக்களை நாடு கடத்தும் சட்டங்களை நிறைவேற்றி அமல்படுத்தவும் செய்தது என்பதை நினைவு கூர்வது உதவும்.

செர்னோபில் அழிவும் இயற்கையின் மீட்சியும்

1986ஆம் ஆண்டு யுக்ரெயினில் உள்ள செர்னோபில் அணு உலை வெடித்ததையடுத்து அது கான்க்ரீட்டால் மூடப்பட்டது. அதைச் சுற்றியிருந்த கிராமங்கள் தரைமட்டமாக்கப்பட்டன, வளர்ப்புப் பிராணிகள் கொலை செய்து புதைக்கப்பட்டன, தப்பிப் பிழைத்த நாய்கள் வேட்டையாடி சுட்டுக் கொள்ளப்பட்டன. கதிரியக்கம் இருக்ககூடும் என்ற அச்சத்தில் அணு உலையை அடுத்த நான்கு சதுர மைல் வட்டத்தில் மண் துருவி எடுத்து ஆழப் புதைக்கப்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகள் ஆன நிலையில் இன்னமும் கதிரியக்கம் குறித்த அச்சம் நீங்கவில்லை. அணு உலையை மூடியிருக்கும் கான்க்ரீட் கூடை நூறு ஆண்டுகளுக்கு மேல தாங்காதாம். அதைச் சுற்றி உள்ள 1600 சதுர மைல் வட்டம் மனிதன் புகக்கூடாத இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது- அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் கதிரியக்கத்தால் மாசுபட்டிருக்கிற நிலையில், அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் இயற்கை இந்த விபத்திலிருந்து மீண்டு விட்டதாகச் சொல்கின்றன. செடி, கொடி, பறவை, வன விலங்குகள் கூட்டுதலான எண்ணிக்கையில் வாழும். மனிதனின் காலடி படாத கன்னி வனமாக இயற்கை உருமாற்றம் கண்டிருக்கிறது. சுற்றுச் சூழல் ஆய்வாளரான ஜேம்ஸ் லவ்லாக், இதை முன்னுதாரணமாகக் கொண்டு, அமேசான் மழைக் காடுகளில் கதிரியக்கக் கழிவுகளைப் புதைத்து வைப்பது இயற்கைச் சூழலை மனிதனிடமிருந்து காக்கும் என்று யோசனை தெரிவித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் செர்னோபில்லின் இயற்கை இயல்பானதல்ல, அங்கு வாழும் உயிரினங்கள் கதிரியக்கத்தின் காயங்களுடன் குறைபட்ட, குறுவாழ்வு வாழ்கின்றனவென்றும் சில ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இது குறித்த அருமையான கட்டுரை இங்கே :

http://www.wired.com/magazine/2011/04/ff_chernobyl/all/1

பின் லாடனைக் கொல்ல அமெரிக்க கொடுத்த விலை

பின் லாடன் இறப்பில் நிறைய அமெரிக்கர்கள் பெருமகிழ்வு அடைந்தாலும் சிலர் தெருக்களில் கும்மாளம் போட்ட இளைஞர்களையும், இதர அமெரிக்கர்களையும் விமர்சித்திருக்கின்றனர். இப்படிச் செய்வது இஸ்லாமிய உலகம் அமெரிக்காவுக்கும், யூரோப்பியருக்கும் அல்கைதா கூட்டம் பெரும் நாசம் விளைவித்ததைக் கண்டு தெருக்க்ளில் கொக்கரித்ததைக் கண்டனம் செய்த நம்மை அவர்களைப் போலவே மோசமானவர்கள்தாம் நாம் என்று காட்டுகிறது என்று விமர்சித்துள்ளனர். அதுவும் ஏதோ விளையாட்டுப் போட்டியில் கத்துவது போல பெரும் கூட்டங்கள் நகரங்களில், குறிப்பாக கிழக்குக் கரை நகரங்களில் தெருக்களில் கூடி யுஎஸ் ஏ, யு எஸ் ஏ என்று முழங்கி, அமெரிக்கத் தேசீயக் கொடியை விரித்து ஆரவாரி்த்தது முதிர்ச்சியற்ற மனோபாவத்தின் விளைவு என்பது மேற்படியாரின் விமர்சனம். இவர்கள் விமர்சிப்பது சரியா தவறா என்று நம்மால் கணிக்க முடியாது. இந்தியாவுக்குள் நுழைந்து பல நூறு பேரைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப் பயப்படும் நிலையில் இருக்கும் நாம் அமெரிக்கரை என்னவென்று விமர்சிப்பது?

4103655197அமெரிக்கா இந்த ஒரு நபரைக் கொல்ல என்ன ஒரு விலை கொடுத்தது என்று யோசித்தால் நம் மூச்சு நின்று போகும். போர், அதில் செத்த பல்லாயிரம் அமெரிக்கப் படை வீரர் என்ற கணக்கைக் கூடச் சொல்லவில்லை. அமெரிக்கப் படைகள் படையெடுத்து பிற நாடுகளில் விளைத்த ஏராளமான சேதங்கள், பல ஆயிரக்கணக்கான சாவுகள் என்பனவற்றையும் சொல்லவில்லை. ஒரு குறைந்த பட்ச சேதத்தை மட்டுமே கருதிச் சொல்கிறோம். இதைச் சொல்வதும் அமெரிக்க ஊடகங்கள்தாம். அமெரிக்கா இந்த ஒரு நபரைக் கொல்ல இந்தப் பத்தாண்டுகளில் ஒதுக்கிய நிதி- 1.3 ட்ரிலியன் டாலர்கள். இது போர்ச்செலவு, நாடெங்கிலும் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், போரில் இறந்த, காயம்பட்ட வீரர்களுக்கான செலவுகள் போன்ற எல்லாவற்றையும் சேர்த்த கணக்கு. 1.3 ட்ரிலியன் என்ற எண்ணில் எத்தனை சைஃபர்கள்/ சுழிகள் உண்டு தெரியுமில்லையா? 1300,000,000,000 டாலர்கள். (குத்து மதிப்பாக 5,85,00,00,00,00,000 ரூபாய்கள். இந்த எண்ணிற்குப் பெயர் நீல் என்கிறது விகிபீடியா. நீல் என்பதில் 1,00,00,00,00,00,000 எண்கள் உண்டு. 13 ஜீரோக்கள். ஐம்பத்தி எட்டரை லட்சம் கோடி ரூபாய்கள்.) இந்தச் செய்தியை இங்கே படிக்கலாம்:

http://www.salon.com/news/osama_bin_laden/index.html?story=/politics/war_room/2011/05/02/cost_of_bin_laden_wars