பீடு நடை போடும் கியூபா – சில எதிர்வினைகள்

bp14

சொல்வனம் ஆசிரியருக்கு,

நேற்று காலைதான் ஓரு வாரம் கியூபாவிற்கு சுற்றுலா சென்று திரும்பினேன். ‘சொல்வனம்’ கியூபா கட்டுரை கவனத்தை ஈர்த்தது. என்னுடைய கருத்துக்கள் ஆராய்ச்சி பூர்வமாக இல்லாவிட்டாலும், நேராக இந்த நாட்டை சமீபத்தில் பார்த்த ஒரு பார்வையாளரின் கருத்தாக கொள்ளலாம்.

முதலில், இந்நாட்டவர்கள், 1991-க்குப் பிறகு உள்ள காலத்தை கியூபா யுகம் என்கிறார்கள். 1959 வரை அமெரிக்க யுகம், 1959 முதல் 1991 வரை கம்யூனிச யுகம். கட்டுரையாசிரியர் சொல்வதில் சில தவறுகள் உள்ளன. விபச்சாரம் அமெரிக்க யுகத்தில் அதிகம் இருந்ததாக இந்நாட்டவர்கள் சொல்லுகிறார்கள். இன்று சுற்றுலாவால் ஏராளமான பணம் ஈட்டுகிறது கியூபா. சுற்றுலா விடுதிகள் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் அரசாங்கம் தனியார்துறை கூட்டு விடுதிகள் வரத் தொடங்கியுள்ளன, மேல்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சுருட்டு, மது மற்றும் சிகரெட் ஏராளமாகப் புரண்டாலும், விபச்சாரம் இருப்பதாக தெரியவில்லை. சுற்றுலாவிற்காகவே தனியாக ஒரு கரண்ஸியை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்நாட்டிற்கு அமெரிக்காவுடன் இன்னும் புகைச்சல் இருந்தாலும், கனடா, சைனா மற்றும் வெனிசுலாவுடன் வர்த்தகத் தொடர்புகள் நன்றாகவே உள்ளது.

கச்சா எண்ணெய் மோகம் யாரைத்தான் விட்டது? கனேடிய நிறுவனங்களுடன் தோண்டி பல முயற்சிகள் செய்து வருகிறார்கள். எண்னெய் கிடைத்தால் வெளிநாட்டாருக்கு 50% லாபம். இல்லாவிட்டால் நஷ்டம். கியூபா அரசாங்கத்துக்கு எந்த ரிஸ்க்கும் இல்லை. ஆனால் ஏனோ தெரியவில்லை – வருடம் முழுவதும் சூரிய வெளிச்சம் அதிகமுள்ள கியூபாவில் அதிகம் சூரிய மற்றும் காற்று மின்தளங்களைப் பார்க்கவில்லை. மற்ற ஸ்பானிஷ் நாடுகளுக்கு டாக்டர்கள், ஆசிரியர்களை ஏற்றுமதி செய்கிறார்கள். இன்னும் தகவல் தொடர்பு அதிகம் வளரவில்லை. பல விதங்களிலும் 1991 முன்னிருந்த இந்தியாவை நினைவுபடுத்தும் நாடு. அடுத்தபடி மிகப்பெரிய பிரச்சனை போக்குவரத்து. பொது மற்றும் தனியார் போக்குவரத்து பெரிய குளறுபடியில் உள்ளது. ரயில் போக்குவரத்து அமைப்புகள் இல்லை. விமானதளங்கள் மிகவும் மோசமான நிலையிலே உள்ளன.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டர் கியூபாவுடன் சுமுகமான உறவு வேண்டுமென நினைத்து பல பயணங்கள் சென்றுள்ளார். ஆனால், இன்னும் காஸ்ட்ரோ, அமெரிக்க புகைச்சல் முடிந்தது போல இல்லை. வளரத் துடிப்பது தெரிகிறது. ஆனால், சுருட்டு, மது, சுற்றுலா எத்தனை உதவும் என்பது சந்தேகமான விஷயம். மனித ஆற்றல் ஏற்றுமதி (அதுவும் ஸ்பானிஷ் நாடுகளுக்கு மட்டும்) எத்தனை தூரம் உதவும் என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நன்றி
ரவி நடராஜன்

bp16

துக்காராம் கோபால்ராவ் போகிற போக்கில் கியூபாவைத் தூற்றிவிட்டு அமெரிக்கா கஷடப்பட்டுச் சேகரித்து வைத்திருக்கும் வலைத்தகவல்களை உண்மை என்று நம்பிச் சொல்லித் திரிவது கட்டுரைக்கு எந்த வலுவையும் சேர்க்காது.

அமெரிக்காவின் காலடியில் பல லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் விழுந்து சேவகம் செய்யும் போது எப்படி சின்னஞ்சிறு கியூபாவால் மட்டும் அவர்களை எதிர்த்து கடந்த ஐம்பது வருடங்களாக சமரசமற்ற ஒரு எதிர்ப்பை நடத்த முடிகிறது? அதற்கான கோட்பாட்டு விளக்கம் தேவைப்படுகிறது. ஒட்டு மொத்தத லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் காஸ்ட்ரோ ஒப்பற்ற தலைவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான காரணம் என்ன?

எந்தவித முன் அபிப்ராயமுமின்றி காமாலைக் கண்ணின்றி பார்த்தால்தான் உண்மையைத் தரிசிக்க மடியும். உண்மையிலே கியூபாவின் இன்றைய பிரச்சினை என்ன என்பதை கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும். இல்லையெனில் கண்மூடித்தனமாய் தீக்கதிர் போற்றுகிறது என்றால் நீங்கள் கண்மூடித்தனமாய் தூற்றுவீர்கள். உங்கள் இருவருடைய பத்திகளுமே வாசகர்களின் நேரத்தை வீணாக்குபவையே!

சொ.பிரபாகரன்
தூத்துக்குடி

bp15

சொ.பிரபாகரன் அவர்களது கடிதம், பொதுவாக இடதுசாரிகளுக்கு இருக்கும் “சின்னஞ்சிறு கியூபா.. பெரிய அமெரிக்கா” தாவீது கோலியாத மன உருவங்களை அடியொற்றி இருப்பது ஆச்சரியமானதாக இல்லை.

’பல லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவின் காலடியில் விழுந்து சேவகம் செய்கின்றன’ என்று சொல்லிவிட்டு அடுத்த வரியில் ’ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் காஸ்ட்ரோ ஒப்பற்ற தலைவனாக ஏற்றுகொண்டிருக்கின்றன’ என்றும் சொல்கிறார். அது எப்படி என்று விளக்கலாம். இந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒருபக்கம் அமெரிக்காவின் காலடியில் இருந்துகொண்டே மறுபுறம் காஸ்ட்ரோவையும் ”ஒப்பற்ற தலைவனாக” ஏற்றுகொண்டுவிட்டனவோ என்னவோ.

நான் குறிப்பிட்ட இணையப்பக்கங்கள் எல்லாம் அமெரிக்கா சேகரித்தவை அல்ல. கியூபாவின் செய்திதளமே அதனைத்தான் சொல்கிறது. நான் குறிப்பிட்ட விஷயங்களில் எது தவறு என்று சொல்லி எழுதியிருந்தால் விவாதத்துக்குரியதாகவோ, அல்லது என் தவற்றை திருத்திகொள்வதாகவோ இருக்கும்.

கண்மூடித்தனமாக தீக்கதிர் மட்டுமே போற்றவில்லை. சொ பிரபாகரனும் அதனைத்தான் செய்கிறார்.

ரவி நடராஜனின் கடிதம் குறிப்பிடத்தகுந்தது. நான் கியூபாவுக்கு போனதில்லை. அவர் போயிருக்கிறார். அவருடைய கவனிப்புகள் படிக்கவேண்டியவை.

“மேல் நாட்டு சுற்றுலா பயணிகளுக்காக சுறுட்டு, மது மற்றும் சிகரெட் ஏராளமாக புரண்டாலும், விபச்சாரம் இருப்பதாக தெரியவில்லை. ” என்று சொல்கிறார்.

1959இல் “புரட்சி”க்கு பின்னர் தடை செய்யப்பட்ட விபச்சாரம் இந்த நெருக்கடி காலகட்டத்தில் திறந்துவிடப்பட்டது அதுவும் சட்டப்பூர்வமாக. கியூபாவில் விபச்சாரம் தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல. அது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தொழில். தொடர்புடைய சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன். நன்றி.

அன்புடன்,
துக்காராம் கோபால்ராவ்

http://en.wikipedia.org/wiki/Prostitution_in_Cuba

http://www.uri.edu/artsci/wms/hughes/cuba.htm
http://network.nshp.org/profiles/blogs/youth-prostitution-feeding
http://www.nytimes.com/2004/12/26/international/americas/26havana.html
http://www.latinamericanstudies.org/cuba/cuba-prostitution-11-03.htm
http://www.greenleft.org.au/node/24410
http://www1.american.edu/TED/cubatour.htm
http://translatingcuba.com/?page_id=xxx