பாலையும், சில பாம்புகளும் – பகுதி 2

2382

லையில் அங்கங்கே நரை தெளித்திருந்தாலும் அவன் இளைஞன்தான். ஸ்னேக்கை விட உயரம், கவர்ச்சியாய் இல்லாமலில்லை. அவன் கண்கள் கருமை, கேசத்தை நேராகப் பின்னால் இழுத்துக் கட்டியிருந்தது அவனது கூரிய முக வெட்டை இன்னும் கடினமாக்கியது.  அவன் முகத்தில் எந்த பாவமும் இல்லை.

“பயமாய் இருக்கிறதா?”

“நீங்கள் சொல்கிறபடி செய்கிறேன்.”

அவனது அங்கி உடலை மறைத்திருந்தபோதிலும் அவனது நீண்ட நேர்த்தியான கைகள் வலுவைக் காட்டின.

“அப்படியானால் அவள் உடலைப்பிடி, அவள் உன்னை அதிர வைக்க இடம் கொடுக்காதே.” அந்த சிறிய மிருகத்தினுள் ஸ்னேக் ஊட்டியிருந்த மருந்தின் விளைவில் மிஸ்ட்டுக்கு சற்றே வலிப்பு ஆரம்பித்திருந்தது. அந்த நாகத்தின் கண்கள் குத்தி நோக்கின, எதையும் பார்க்காமல்.

“அது கடித்துவிட்டால் –”

“பிடி, வேகமாய்!”

அந்த இளைஞன் பிடிக்கவே முயன்றான், ஆனால் அவன் தயங்கிய நேரம் சற்று அதிகமாய் விட்டிருந்தது. மிஸ்ட் உடம்பை நெளித்தாள், தாவி அடித்தாள், அவளது வால் அவன் முகத்தில் அறைந்தது. ஆச்சரியமும் நோவும் கலந்து, அவன் தள்ளாடிப் பின்னேறினான். ஸ்னேக் மிஸ்டின் தாடைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டே அவளது மிச்ச உடலையும் பிடிக்கத் தத்தளித்தாள். மிஸ்ட் இரையைச் சுற்றி இறுக்கி நொறுக்கும் வகைப் பாம்பல்ல என்றாலும், அவள் சீராகவும், வலுவாயும், துரிதமாகவும் இயங்குவாள். உடலை அஙகும் இஙகும் அடித்து, தன் மூச்சைத் திணறலுடன், ஸ்ஸ்ஸ் என்று நீண்ட சீறலாய் விட்டாள். அவளால் தொடமுடிந்த எதையும் கடித்திருப்பாள். அவளுடன் போராடிக்கொண்டே ஸ்னேக் அவளின் விஷச்சுரப்பியை பிழிந்து அதிலிருந்த கடைசிச் சொட்டுக்களை வெளியேற்றினாள். அவை வைரக்கல்லைப் போல வெளிச்சத்தில் மின்னி, சில நொடிகள் அவள் நச்சுப்பற்களிலிருந்து தொங்கின, அவளது வலுவான துடிப்பு அவற்றை உதறி இருட்டில் எறிந்தது. மிஸ்டுக்கு அந்த மணலில் பிடிப்பு கிடைக்காதது ஸ்னேக்குக்கு அவளுடன் போராடுவதில் உதவியாய் இருந்தது. தன் பின்னே அந்த இளைஞன் மிஸ்டின் உடம்பையும், வாலையும் பிடிப்பதை ஸ்னேக் உணர்ந்தாள். மிஸ்டின் உடல் துடிப்பு சடாலென்று நின்று அவர்கள் கையில் ஓய்ந்து கிடந்தாள்.”என்னை மன்னியுங்கள்–”

“அவளைப் பிடியுங்கள்.” ஸ்னேக் சொன்னாள். “இதற்கு இரவு பூராவும் ஆகும்.”

*** *** ***

snake

இரண்டாவது முறை மிஸ்ட் துடிக்க ஆரம்பித்தபோது, அந்த இளைஞன் அவளைக் கெட்டியாய் பிடித்துக்கொண்டு கொஞ்சம் உருப்படியான உதவியாய் இருந்தான். அதன் பின் ஸ்னேக், இடைமறிக்கப்பட்ட அவனது கேள்விக்குப் பதில் சொன்னாள். ”அவள் விஷத்தை உருவாக்கிக் கொண்டிருக்கையில் உங்களைக் கடித்தால் நீங்கள் அனேகமாக இறப்பீர்கள். இப்போது கூட அவள் உங்களைக் கடித்தால் நீங்கள் நோயாளி ஆவீர்கள். ஆனால் நீங்கள் ஏதானும் முட்டாள்தனமாய் செய்தாலன்றி, அவளால் கடிக்க முடிந்தால், என்னைத்தான் கடிப்பாள்.”

“நீங்கள் இறந்துவிட்டாலோ இறக்கும் நிலையில் இருந்தாலோ, என் உறவினனுக்கு உங்களால் பயனில்லாமல் போய் விடும்.”

“நீங்கள் தவறாய் புரிந்துகொண்டீர்கள். மிஸ்டால் என்னைக் கொல்ல முடியாது.” அவள் தன் கையில் வெட்டுக்களாலும், பொத்தலிடப்பட்டதாலும் ஏற்பட்ட வெள்ளைத் தழும்புகளை அவன் பார்க்கும்படி நீட்டினாள். அவன் அவற்றை உற்றுப்பார்த்து, அவள் கண்களுக்குள்ளும் நீண்ட நேரம் பார்த்தான், பின் பார்வையை விலக்கிக் கொண்டான்.
மேகங்களிலிருந்து ஒளி சிதறிய, பிரகாசமான ஒரு வட்டம் வானில் மேற்குப்புறம் நகர்ந்தது; அவர்கள் அந்த நாகப்பாம்பை ஒரு குழந்தையைப் போல பிடித்துகொண்டிருந்தனர். தான் அரைத் தூக்கத்தில் இருப்பதை ஸ்னேக் உணர்ந்தாள், மிஸ்ட் தலையை அசைத்து அவள் பிடியிலிருந்து தப்ப மந்தமாய் முயற்சிக்கையில், ஸ்னேக் சடாலென விழித்துக்கொண்டாள்.

“நான் தூங்கக் கூடாது,” என்று அந்த இளைஞனிடம் சொன்னாள். “என்னிடம் பேசுங்கள். உங்கள் பெயர் என்ன?”

ஸ்டாவினைப் போலவே, இந்த இளைஞனும் தயங்கினான். அவளிடமோ அல்லது வெறெதைப் பற்றியோ பயப்படுவது போலத் தெரிந்தது.

“என் சமூகத்தினர் புது ஆட்களிடம் எங்கள் பெயரை சொல்லுவது விவேகம் இல்லை என நினைப்பவர்கள்,” அவன் சொன்னான்.

“நீங்கள் என்னை ஒரு சூனியக்காரி என நினைத்தால் என்னிடம் உதவிக்கு வந்திருக்க்க் கூடாது. எனக்கு மாயாஜாலமெல்லாம் தெரியாது, தெரிந்ததாய் நான் சொல்வதுமில்லை.”

“இது மூடநம்பிக்கை இல்லை,” அவன் சொன்னான். ”நீங்கள் நினைப்பது போலில்லை. நாங்கள் வசியப்பட்டுவிடுவோம் எனப் பயப்படவில்லை.”

“இந்த பூமியில் இருக்கும் மனிதர்களின் வழக்கங்களையெல்லாம் என்னால் தெரிந்து கொள்ள முடியாது, அதனால் நான் எனக்கு என்று சில வழக்கங்களை வைத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடன் வேலை செய்பவர்களைப் பெயர் சொல்லி அழைப்பது என் வழக்கம்.”

ஸ்னேக் அவனைப் பார்த்துக்கொண்டே, அந்த மங்கிய வெளிச்சத்தில் அவன் முகபாவத்தைப் புரிந்து கொள்ள முயன்றாள்.

“எங்கள் குடும்பங்களுக்கு எங்கள் பெயர் தெரியும், எங்கள் துணைவர்களுடன் நாங்கள் பெயரைப் பரிமாறிக் கொள்கிறோம்.”

ஸ்னேக் இந்த வழக்கத்தைப் பற்றி யோசித்து இது தனக்கு ஒத்து வராது என்று நினைத்தாள். “வேறு யாருடனும் கிடையாதா? எப்போதுமா?”

“ஆனால் நண்பருக்கு ஒருத்தன் பெயர் தெரியலாம்.”

“ஆ,” என்றாள் ஸ்னேக். ”எனக்குப் புரிகிறது. நான் இன்னும் வேற்றாள்தான். .இல்லை… பகையோ?”

“ஒரு நண்பன் என் பெயரை அறியக்கூடும்,” மீண்டும் அந்த இளைஞன் சொன்னான். “நான் உங்களைப் புண்படுத்த மாட்டேன், ஆனால் நீங்கள் இப்போது தவறாய் புரிந்துகொண்டீர்கள். சந்திப்பவர்கள் எல்லாம் நண்பர் அல்ல. நாங்கள் நட்பை மிக உயர்வாய் மதிப்பவர்கள்.”

“இந்த நாட்டில் ஒருவரை நண்பரா, இல்லையா என்று உடனே சொல்லிவிட முடிய வேண்டும் போல.”

“நாங்கள் நண்பர்களை ஏற்றுக்கொள்வது அரிது. நட்பு என்பது ஒரு மிகப் பெரிய பொறுப்பு.”

“அது பயப்படவேண்டிய விஷயம் என்பது போலச் சொல்கிறீர்கள்.”

அவள் சொல்வதின் பொருத்தம் பற்றி அவன் யோசித்தான்.

“ஒருவேளை நட்புக்கு துரோகம் நடப்பதைக் கண்டு நாங்கள் பயப்படலாம். அது மிகவும் துன்பம் தரக்கூடியது.”

“உங்களுக்கு யாரானும் எப்போதாவது துரோகம் செய்திருக்கிறர்களா?”

அவள் ஏதோ அத்து மீறியதைப் போல, கூர்மையாக அவள் புறம் அவன் நோக்கினான்.

“இல்லை,” அவன் சொன்னான், அவன் முகத்தைப் போலவே குரலும் கடினமாயிற்று. ”நண்பனே இல்லை. நண்பன் என்று சொல்லிக்கொள்ள . எனக்கு யாரும் இல்லை.”

அவனது பதில் ஸ்னேக்கை அதிரவைத்த்து.

“அது ரொம்ப சோகம்தான்,” என்றாள், பின் மௌனமானாள், அவசியம் கருதித் தனக்கு விளைந்துள்ள தனிமையை, சுயத் தேர்வால் அவர்களுக்குக் கிட்டியுள்ள தனிமையுடன் ஒப்பிட்டு எந்தமாதிரியான அழுத்தங்களினால் இவர்கள் இத்தனை தூரம் தமக்குள் ஒடுங்கினார்கள் எனப் புரிந்துகொள்ள முயன்றாள்.

“என்னை ஸ்னேக் என்று கூப்பிடுங்கள்,” என்றாள் முடிவில், ”அதை உச்சரிக்கத் தயாராக உங்களுக்கு முடியுமானால். என் பேரைச் சொல்வது உங்களை எதற்கும் கட்டுப்படுத்தாது.”

அவன் ஏதோ சொல்ல வருபவனைப் போலத் தெரிந்தான்; அவளைத் தான் புண்படுத்திவிட்ட்தாய் மறுபடியும் நினைத்தானோ, இல்லை தங்களது வழக்கங்களை ஆதரித்து இன்னும் பேசவேண்டும் என்று நினைத்தானோ. அதற்குள் மிஸ்ட் அவர்கள் கைகளில் நெளிய ஆரம்பிக்கவே, அவள் தன்னையே காயப்படுத்திக்கொள்ளாமல் இருக்க அவளை சரியாய் பிடித்துக் கொள்ள வேண்டி வந்தது. அந்த நாகப்பாம்பு அவளது நீளத்துக்கு மெலிதாய் இருந்தாலும் நல்ல வலுவுடன் இருந்தாள், மேலும் இப்போது அவளது வலிப்புகள் முன் எப்போதையும் விட கடுமையாய் இருந்தன. ஸ்னேக்கின் பிடியில் இருந்து திமிறி, கிட்டத்தட்ட தப்பித்து விட்டாள். அவள் தன் படத்தை விரிக்கப் பார்த்தபோது ஸ்னேக் அவளை மிகவும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அவள் தன் வாயைத்திறந்து உஸ் என்று சப்தமிட்டாள். ஆனால் அவள் நச்சுப்பற்களிலிருந்து விஷம் எதுவும் சொட்டவில்லை.

அவள் தன் வாலால் அந்த இளைஞனின் இடுப்பை சுற்றிக்கொண்டாள். அவன் தன்னை அவள் சுருள்களிலிருந்து விடுவித்துக்கொள்ள அவளை இழுத்துக்கொண்டே திரும்பினான்.

“அவள் நெருக்கிக் கொல்லும் வகை இல்லை,” ஸ்னேக் சொன்னாள். “உங்களை ஒன்றும் செய்யமாட்டாள். விடுங்கள்-”
ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சிப்போனது; மிஸ்ட் திடுமென்று தன்னை தளர்த்திக்கொள்ள அந்த இளைஞன் தடுமாறிப் போனான். மிஸ்ட் தன்னை ஒரு சொடுக்கலில் விடுவித்துகொண்டு மணலில் நெளிந்து அடித்துச் சித்திரம் போட்டாள். ஸ்னேக் அவளுடன் தனியே போராட, அந்த இளைஞன் அவளைப் பிடிக்க முயற்சி செய்ய, அவள் ஸ்னேக்கை சுற்றிக்கொண்டு அந்த பிடிப்பை தனக்கு சாதகமாய் பயன்படுத்தினாள். ஸ்னேக்கின் கையிலிருந்து தன்னை இழுத்துக்கொள்ள ஆரம்பித்தாள். ஸ்னேக் அவளயும் தன்னையும் பின்புறமாய் இழுத்துக்கொண்டு மணலில் சரித்தாள். மிஸ்ட் வாயைத் திறந்து கொண்டு, கோபமாய், சீறலுடன் மூச்சு விட்டபடி அவளுக்கு மேல் எழுந்தாள். இளைஞன் முன்னே பாய்ந்து அவள் விரித்த படத்திற்கு நேர்கீழே பிடித்தான். மிஸ்ட் அவனைத் தாக்கப் போனாள், ஆனால் ஸ்னேக், எப்படியோ அவளைத் தடுத்து விட்டாள்.

இருவருமாய் சேர்ந்து மிஸ்டின் பிடியை விடுவித்து அவளின் மேல் தங்கள் கட்டுப்பாட்டை மீட்டுக்கொண்டார்கள். ஸ்னேக் கஷ்டப்பட்டு எழுந்தாள், ஆனால் மிஸ்ட் திடீரென்று அசைவின்றி, கிட்ட்த்தட்ட விறைப்பாய், அவர்களிடையே படுத்திருந்தாள். இருவருக்கும் வேர்த்திருந்த்து; அவனது வெய்யிலால் பழுப்பான தோலும் கூட வெளுத்திருந்தது, ஸ்னேக்குமே கூட நடுங்கிக்கொண்டிருந்தாள்.

“நமக்கு இளைப்பாறக் கொஞ்சம் நேரம் இருக்கிறது,” என்றாள் ஸ்னேக். அவள் அவனைப் பார்க்கையில் சற்றுமுன் அவன் கன்னத்தில் மிஸ்ட்டின் வால் வெட்டியிருந்த கருத்த கோட்டைக் கவனித்தாள். கையை நீட்டி அதைத் தொட்டாள்.

“காயம் இருக்கும்,” என்றாள். “ஆனால் தழும்பு ஏற்படுத்தாது.”

“பாம்புகள் வாலாலும் கொட்டும் என்றால் நீங்களே பற்களையும் கொடுக்கையும் அடக்கி வைத்திருப்பீர்கள். என்னால் ஒரு பயனுமிராது.”

“மிஸ்ட் விஷயத்தில் எனக்கு உதவியோ இல்லையொ, இன்றிரவு என்னை விழித்திருக்கச் செய்ய எனக்கு யாராவது வேண்டும்.”

நாகப்பாம்புடன் போராடியதில் அட்ரினலின் சுரந்திருந்த்து, ஆனால் அது இப்போது தணிந்து, அவளுடைய களைப்பும்,பசியும் இன்னும் வலுவாய் திரும்பின.

“ஸ்னேக்…”

“ம்?”

அவன் சட்டென்று, ஆனால் கொஞ்சம் வெட்கத்துடன், புன்னகைத்தான். “உச்சரித்துப் பார்த்தேன்.”

“சரிதான்.”

“பாலைவனத்தைக் கடக்க உங்களுக்கு எத்தனை நாள் ஆச்சு?”

“அதிக நாள் இல்லை. நிறைய நாள். ஆறு நாட்கள்.”

“எப்படி சமாளித்தீர்கள்?”

“நீர் இருக்கிறது. ராத்திரியில் பிரயாணம் செய்தோம், நேற்றைத்தவிர. நேற்று நிழலே கிடைக்கவில்லை.”

“உங்கள் சாப்பாட்டை எல்லாம் தூக்கிக்கொண்டு வந்தீர்களா?”

“கொஞ்சம்தான்.” அவன் சாப்பாட்டைப் பற்றிப் பேசாமல் இருந்தால் தேவலாம் போலிருந்தது அவளுக்கு.

“மறுபக்கத்தில் என்ன இருக்கிறது?”

“மலைகள், சிற்றாறுகள். சில மக்கள் கூட்டங்கள், வியாபாரிகள், நான் வளர்ந்த, பயிற்சி பெற்ற இடம். அதற்கும் அப்பால், இன்னொரு பாலைவனம், பின் ஒரு மலை அதனுள்ளே ஒரு நகரம்.”

“என்றாவது ஒரு நாள் நானும் ஒரு நகரத்தைப் பார்க்க வேண்டும்.”

“பாலைவனத்தைக் கடக்க முடியும்.”

அவன் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் ஸ்னேக்குக்கு தன் வீட்டை விட்டுக் கிளம்பி வந்த நினைவு இன்னும் அண்மையில் இருந்த்தால் அவளால் அவனது எண்ணங்களைக் கற்பனை செய்ய முடிந்த்து.

அடுத்த வலிப்புகளின் தொடர், ஸ்னேக் எதிர்பார்த்த்தைவிடச் சீக்கிரமாய் வந்தது. அவற்றின் கடுமையிலிருந்து அவளால் ஸ்டாவினின் நோயின் நிலையை அனுமானிக்க முடிந்தது. காலையாய் இருந்தால் நன்றாய் இருக்கும் எனத் தோன்றியது. அவனை இழக்கத்தான் போகிறாளென்றால், அது நடந்து முடிந்து, அதற்கு வருந்தி விட்டு, மறக்க முயற்சிப்பது தேவலை போல அவளுக்கு இருந்தது. அவர்கள் இருவரும் பிடித்துக்கொள்ளாமல் இருந்தால் அந்த நாகப்பாம்பு மணலிலே புரண்டு தன்னை அடித்துக் கொண்டு செத்திருப்பாள். திடீரென்று அவள் முழுதுமாய் விறைத்துபோனாள், வாய் இறுக்க மூடிக்கொண்டது, பிளவுபட்ட நாக்கு தொங்கியது.
அவள் மூச்சுவிடுவதை நிறுத்தி விட்டாள்.

“அவளைப் பிடியுங்கள்,” என்றாள் ஸ்னேக். “அவள் தலையை பிடியுங்கள். வேகமாய் அவளை எடுங்கள். அவள் விடுவித்துக்கொண்டால், ஓடுங்கள். அவளை எடுங்கள்! இப்போது அவள் உங்களை தாக்க மாட்டாள். தற்செயலாகத்தான் உங்களை வெட்டக்கூடும்.”

அவன் ஒரு கணம் தயங்கிப் பின் மிஸ்டின் தலையைப் பின்பக்கமாய்ப் பற்றினான்.

ஸ்னேக் மண்ணில் வழுக்கித் தடுமாறிக் கொண்டு, கூடாரங்களின் வட்டத்துக்கு அப்பால் புதர்கள் இன்னும் வளர்ந்திருந்த இடத்துக்கு ஓடினாள்.

காய்ந்து முட்களோடிருந்த கிளைகளை ஒடித்தாள். அவை அவளது தழும்புள்ள கைகளைக் கிழித்தன. காய்ந்த தாவரப் புதர்களிடையே குப்பலாய் கொம்புவிரியன் பாம்புகளைப் iபார்த்தாள், அவை அத்தனை அசிங்கமாய் இருந்ததால், குரூபமாகத் தெரி்ந்தன, உலர்ந்த தாவரங்களின் குவியலின் கீழே பதுங்கி இருந்தன. அவை அவளைப் பார்த்து சீறின; அவள் அவறறைப் பொருட்படுத்தவில்லை. குறுகிய குழாய் போன்ற ஒரு தண்டைக் கண்டு பிடித்து அதை எடுத்துப் போனாள். ஆழமான கீறல்களினால் அவள் கைகளில் ரத்தம் கசிந்தது.

மிஸ்டின் அருகே மண்டியிட்டு, அந்த நாகப் பாம்பின் வாயைப் பலவந்தமாய் திறந்து அந்தக் குழாயை அவள் நாக்கு அடியில் இருந்த சுவாச வழியின் மூலம் தொண்டை வரை தள்ளினாள். அருகே குனிந்து குழாயை வாயில் பிடித்துக்கொண்டு மிஸ்டின் நுரையீரலுக்குள் மிருதுவாகக் காற்றை ஊதினாள்.

அவள் கவனித்தாள்: அந்த இளைஞனின் கைகள் அவள் சொன்ன விதத்தில் அந்த நாகப்பாமபைப் பிடித்திருந்ததை; முதலில் ஒரு ஆச்சரியத்திணறலாய், பின் தாறுமாறாய் அவன் சுவாசித்ததை; அவள் சாய்நத இடத்தில் மணல் அவளது முழங்கையை உரசி அறுத்ததை; மிஸ்டின் நச்சுப்பற்களிலிருந்து வடிந்த திரவத்தின் திகட்டலான மணத்தை; தன் தலைசுற்றலை, தனக்கிருந்த அவசியத்தினால், மன உறுதியால் அவள் வலிந்து விலக்கப் பார்த்தக் களைப்பினூடே சிந்தித்ததை.

ஸ்னேக் மூச்சை ஊதினாள், பின் திரும்பவும் ஊதினாள், பொறுத்தாள், மறுபடி ஊதினாள், மிஸ்ட் அந்த சீரான கதியை பிடித்துக் கொண்டு உதவி இல்லாமல் அதைத் தொடரும் வரையில் அவள் ஊதிக் கொண்டிருந்தாள்.

ஸ்னேக் தன் குதிகாலின் மேல் சாய்ந்து உட்கார்ந்தாள். “இனிமேல் சரியாய் போய்விடுவாள்,” என்றாள் . “சரியாகி விடுவாள் என்று நம்புகிறேன்.” தன் பின்கையால் நெற்றியைத் தடவினாள். அது வலியைக் கிளப்பியது: அவள் கையைக் கீழே உதற வேதனை எலும்புகளினூடே பாய்ந்து மேல் கையில், தோளின் குறுக்கே மார்பின் வழியே சரிந்து அவள் இதயத்தை உறை போல சுற்றிக்கொண்ட்து. அவளது சமநிலை அதன் விளிம்பில் கவிழ்ந்தது. அவள் கீழே சரிந்தாள், விழாமல் நிறுத்தி விட முயன்றாள், ஆனால் மிக மெதுவாகத்தான் முயல முடிந்தது, குமட்டலையும், தலை கிறுகிறுப்பையும் எதிர்த்துப் போராடி கிட்டத்தட்ட ஜெயிக்கும் நிலையில் இருக்கையில், வலியால் பூமியின் ஈர்ப்பு நழுவிப் போவது போலிருக்க, பிடிப்பு எதுவும் கிடைக்காமல் இருட்டில் எங்கிருக்கிறோம் என்று அறிய முடியாமல் தொலைந்துபோனாள்.

கன்னத்திலும் உள்ளங்கையிலும் உரசிய மண்ணை உணர்ந்தாள் ஆனால் அது மிருதுவாய் இருந்தது.

“ஸ்னேக், விட்டுவிடவா?” அந்த கேள்வி வேறு யாருக்காகவோ கேட்கப்பட்ட்து என்று நினைத்தாள், ஆனால் அதே சமயம் அதற்கு பதில் சொல்ல, தன் பெயருக்கு விடையளிக்க, அங்கு வேறு யாரும் இல்லை என்பதையும் அவள் அறிந்திருந்தாள். கைகள் தன் மேல் படுவதை உணர்ந்தாள். அவை ஆதரவாய் இருநதன. பதிலளிக்க விரும்பினாலும் அவளுக்கு மிகவும் களைப்பாய் இருந்த்து. இன்னும் கொஞ்சம் தூஙகவேண்டும் போல் இருந்த்து. அந்தக் கைகளைத் தள்ளி விட்டாள். ஆனால் அவை அவள் தலையைப் பிடித்துக்கொண்டு அவள் உதடுகளிடையே உலர்ந்த தோலை இட்டு, அவள் தொண்டைக்குள் நீரை வார்த்தன. அவள் இருமி, மூச்சுத்திணறி அதை வெளியே துப்பினாள்.

ஒரு முழங்கையால் தள்ளித் தன்னை மேலெழுப்பிக்கொண்டாள். பார்வை தெளிவாகையில், தான் நடுங்கி உதறிக் கொண்டிருப்பதை அறிந்தாள். முதல் முறையாய் பாம்புக்கடி பட்டபோது, இன்னும் அதை எதிர்க்கும் சக்தி தனக்கு முழுமையாய் வளர்ந்திராத நிலையில் இருந்ததைப்போல உணர்ந்தாள். அந்த இளைஞன் கையில் தண்ணீர் புட்டியோடு அவள் முன் மண்டியிட்டான்.

அவனுக்குப் பின்னால் மிஸ்ட் இருட்டை நோக்கி ஊர்ந்தாள். ஸ்னேக் தன் துடிக்கும் வலியை மறந்தாள். “மிஸ்ட்!” தரையில் அடித்தாள்.

mfidf00zஇளைஞன் அதிர்ந்து பின்வாங்கித் திரும்பினான், பயந்திருந்தான்; அந்தப் பாம்பு பின்னே சாய்ந்து எழுந்து உயர்ந்தாள், அவள் தலை கிட்டத்தட்ட ஸ்னேக்கின் கண்ணுக்கு நேராய் இருந்தது. படத்தை விரித்து, ஆடியபடி, ஜாக்கிரதையாயும், கோபமாயும், கொத்துவதற்குத் தயாராய் நின்றிருந்தாள். கறுப்புப் பின்னணியில் மிஸ்ட் ஒரு அ்லையும் வெண்கோடாகத தெரிந்தாள். ஸ்னேக் தன்னையே கட்டாயப்படுத்தி எழுந்திருந்தாள், பரிச்சயமில்லாத ஒரு உடம்புடன் நிலையை அடையப் பாடுபடுவது போல உணர்ந்தாள். திரும்பவும் விழுந்து விடும் நிலையில் இருந்தபோது, தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டாள். “இப்பொழுது நீ இரை தேடப்போக்க்கூடாது,” என்றாள். “உனக்கு வேலை இருக்கிறது.” மிஸ்ட் தாக்கினால் அவளைத் திசைதிருப்பி இழுக்க, தன் வலது கையை பக்கவாட்டில் நீட்டினாள். வலியால் அவள் கை கனத்தது. கடியை எண்ணி ஸ்னேக் பயப்படவில்லை. மிஸ்டின் விஷப்பைகளில் இருக்கும் பொருள் வீணாகி விடக்கூடாது என பயந்தாள். “இங்கே வா” அவள் அழைத்தாள். “இங்கே வா உன் கோபத்தை நிறுத்து.”

தன் விரல்களின் நடுவே ரத்தம் வழிவதைப் பார்த்தாள். ஸ்டாவினுக்காக அவள் உணர்ந்த பயம் இன்னும் அதிகமாயிற்று.
“நீ என்னைக் கடித்தாயா ஜந்துவே?” ஆனால் இது தவறான வலி; விஷம் அவளை உணர்ச்சி மறக்க வைக்கும், புதிய ஊனிரோ கடுக்கும்.

“இல்லை.” இளைஞன் அவள் பின்னே இருந்து கிசுகிசுத்தான்.

மிஸ்ட் தாக்கினாள். நீண்டகாலத்துப் பயிற்சியால் ஸ்னேக்கின் அனிச்சை இயக்கங்கள் வேலை செய்தன. வலதுகை சொடுக்கி இழுத்துக்கொண்டது, இடது கை மிஸ்ட் தலையை பின்னே கொண்டு போகையில் அவளைப் பிடித்தது. நாகப்பாம்பு ஒரு கணம் துடித்துப் பின் தளர்ந்தது. “சூதுகார மிருகமே!” என்றாள் ஸ்னேக். “நீ வெட்கப்படவேண்டும்.” அவள் திரும்பினாள், மிஸ்டை தன் கையில் மேல் ஊர்ந்து தன் தோளின் மேல் படுக்க அனுமதித்தாள். மிஸ்ட் கண்ணுக்குத்தெரியாத ஒரு மேலாடையின் வெளிக்கோடு போல படுத்துக்கொண்டு தன் வாலை அங்கியின் நீண்ட பின்வடத்தைப் போல இழுத்தாள்.

“அவள் என்னைக் கடிக்கவில்லையா?”

“இல்லை,” என்றான் அந்த இளைஞன். அவனுடைய அடங்கிய குரலில் அச்சம் கலந்த மரியாதை இருந்தது. “நீங்கள் இறந்து கொண்டிருக்க வேண்டும். வேதனையால் சுருண்டு போயிருக்கவேண்டும், உங்கள் கை நீலம் பாரித்து வீங்கி இருக்க வேண்டும். நீங்கள் திரும்பி வந்தபோது -” அவன் அவள் கையை நோக்கி சைகை செய்தான். “ அது ஒரு புதர் விரியன் செய்ததாயிருக்கும்.”

கிளைகளின் கீழே சுருண்டு கிடந்த பாம்புகள் அவளுக்கு நினைவுக்கு வந்தன. அவள் தன் கையின் மேலிருந்த ரத்த்த்தைத் தொட்டாள். அதை துடைத்தாள். முட்களின் கீரல்களிடையே ஒரு பாம்புக்கடி ஏற்படுத்தி இருந்த இரட்டைப்பொத்தல் தெரிந்தது. காயம் சற்றே வீங்கி இருந்தது,

“இதைக் கழுவவேண்டும்” என்றாள். “இதனால் விழுந்தது எனக்கு அவமானம்.” அதன் வலி மெல்லிய அலைகளாய் அவள் கை பூராவும் படர்ந்தது, எரிச்சலில்லை. அவள் அவனைப்பார்த்துக்கொண்டு நின்றாள், தன்னைச் சுற்றிலும் பார்த்தாள், நிலவு அஸ்தமித்தாலும், வைகறைக்கு மு்நதைய ஜாமத்தின் குறைந்த வெளிச்சத்தை அவளது களைத்த கண்கள் சமாளிக்கையில், நிலவெளித் தோற்றம் நகர்ந்து மாறியதைக் கவனித்தாள். “நீங்கள் மிஸ்டை நன்றாய் பிடித்துக்கொண்டீர்கள், ரொமபவே தைரியம்தான்,” என்று அந்த இளைஞனிடம் சொன்னாள். “என் நன்றி.”

அவன் அவளுக்கு மரியாதை செய்யக் குனிவது போல இருந்து, தன் பார்வையை தாழ்த்தினான். எழுந்து அவளருகே வந்தான். மிஸ்ட் கலவரப்படாமல் இருக்க வேண்டி, ஸ்னேக் தன் கைகளை மெதுவாய் மிஸ்டின் கழுத்தின் மேல் வைத்தாள்.

“நீங்கள் என்னை அரெவின் என்று கூப்பிட்டால் நான் பெருமைப்படுவேன்.”

“அது எனக்கும் மகிழ்ச்சியே.”

மிஸ்ட் மெதுவாய் தன் பெட்டிக்குள் ஊர்ந்து போகையில், ஸ்னேக் மண்டியிட்டு அவளுடைய வளையும் வெண்சுருள்களைப் பிடித்துக் கொண்டாள். இன்னும் சற்று நேரத்தில், மிஸ்ட் சமநிலைப்பட்டதும், விடிகையில், அவர்கள் ஸ்டாவினிடம் செல்லமுடியும்.

மிஸ்டின் வாலின் நுனி பார்வையிலிருந்து வழுக்கி மறைந்தது. ஸ்னேக் பெட்டியை மூடி விட்டு எழுந்திருந்திருப்பாள். ஆனால் அவளால் நிற்க முடியவில்லை. புதிய விஷத்தின் விளைவுகளிலிருந்து இன்னும் அவள் முற்றிலுமாய் விடுபட்டிருக்கவில்லை. காயத்தைச் சுற்றிலும் இருந்த சதை சிவப்பாகவும் கனிந்தும் இருந்த்து ஆனால் ரத்த்க்குழாயிலிருந்து ரத்தம் கசிவது பரவாது. இருந்த இடத்திலேயே சரிந்து தன் கைகளை வெறித்து, மனதில் மெதுவாய், இந்தமுறை தனக்காக என்ன செய்யவேண்டும் என்று யோசித்தாள்.

“தயவு செய்து, என்னை உங்களுக்கு உதவ விடுங்கள்.” அவன் அவள் தோளைத்தொட்டு அவள் எழுந்துகொள்ள உதவினான். “மன்னியுங்கள்.” அவள் சொன்னாள். ”எனக்கு ஓய்வு மிகவும் தேவையாய் இருக்கிறது…”

“நான் உங்கள் கையைக் கழுவி விடுகிறேன்,” என்றான் அரெவின். “அப்புறம் நீங்கள் தூங்கலாம். எப்போது எழுப்பவேண்டும் என்று சொல்லுங்கள்—”

“நான் இப்போதைக்குத் தூங்கமுடியாது.” அவள் தன்னை சுதாரித்துக்கொண்டு, நேர்ப்படுத்திகொண்டாள், தன் குட்டை முடியின் ஈரமான சுருள்களை முன்னுச்சியிலிருந்து தள்ளிக்கொண்டாள்.

“நான் இப்போது நன்றாய்த்தான் இருக்கிறேன். உங்களிடம் நீர் இருக்கிறதா?”

அரெவின் தன் மேலங்கியை தளர்த்தினான். கீழே ஒரு கோவணமும், பல தோல் புட்டிகளும் பைகளும் கொண்ட தோல்பட்டையும் அணிந்திருந்தான். அவன் உடல் ஒல்லியாய் நல்ல கட்டோடும், கால்கள் நீளமாய், உறுதியான தசைகளுடனும் இருந்தன. அவன் தோல், சூரிய ஒளிபட்டு கபில நிறமாகி இருந்த முகத்தைவிட வெளுத்திருந்த்து. தன் நீர்க்குடுவையை வெளியே எடுத்து ஸ்னேக்கின் கையைத் தொட வந்தான்.

“வேண்டாம், அரெவின். உங்களுக்குச் சிறிய கீறல் இருந்தால் கூட அதில் விஷம் பட்டால் அதில் நோய் வரும்.” கீழே உட்கார்ந்து வெதுவெதுப்பான நீரை தன் கையில் சீரான தாரையாக ஊற்றிக்கொண்டாள்.

நீர் வெளிர் சிவப்பாய் தரையில் விழுந்து ஒரு சொட்டு ஈரப்பொட்டு கூட தெரியாமல் மறைந்தது. காயத்திலிருந்து இன்னும் கொஞ்சம் ரத்தம் வடிந்தது ஆனால் இப்போது அது வலிக்க மட்டுமே செய்தது. விஷம் ஏறக்குறைய செயலிழந்து போயிருந்தது.

“எனக்கு இது புரியவில்லை,” என்றான் அரெவின். “எப்படி உங்களுக்கு ஒன்றுமே ஆகவில்லை? என் இளைய தங்கை புதர்விரியனால் கடிக்கப்பட்டாள்.” அவனால் அவன் விரும்பியிருக்க்க் கூடிய அளவுக்குக் அக்கறை இல்லாதவன் போல் பேசமுடியவில்லை. “அவளைக் காப்பாற்ற எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை – எங்களிடம் இருந்த எதுவும் அவள் வலியைக் கூட குறைக்கவில்லை.”

ஸ்னேக் அவனிடம் அவனுடைய பையைக் கொடுத்துவிட்டு தன் இடுப்பு வாரின் பையிலிருந்து ஒரு குடுவையிலிருந்த களிம்பை எடுத்து மூடிக் கொள்ளவிருந்த துளைகளின் மேல் தடவினாள்.

“இது எங்களைத் தயார் செய்துகொள்வதில் ஒரு பகுதி,” என்றாள் அவள். “நாங்கள் பலவித பாம்புகளுடன் வேலை செய்கிறோம். அதனால் எத்தனைக்கு முடியுமோ அத்தனைக்கும் எதிரான தடுப்பாற்றலுடன் இருக்கவேண்டும்.” அவள் தோள்களைக் குலுக்கினாள். “அது சலிப்பான வழிமுறை, கொஞ்சம் வலியும் தரும்.” அவள் கைமுட்டியை இறுக்கிப் பிடித்தாள்; களிம்புப் பூச்சு மெல்லிய திரையாக நின்றது. அவளும் நிலையாக இருந்தாள். அவள் அரெவின் பக்கம் சாய்ந்து கீறல்பட்டிருந்த அவன் கன்னத்தை மறுபடியும் தொட்டாள். “ஆம்,” அவள் ஒரு மெல்லிய படலமாய் களிம்பை அதன் மேல் தடவினாள். “இதை குணமாக்க அது உதவும்.”

“நீங்கள் தூங்கமுடியாது என்றால்,” அரெவின் சொன்னான், “ஓய்வாவது எடுக்கலாமா?”

“ஆமாம்,” என்றாள். “கொஞ்ச நேரத்துக்கு.”

ஸ்னேக் அரெவினின் அருகில் அவன் மேல் சாய்ந்து உட்கார, சூரியன் மேகங்களை தங்கமாய், நெருப்பாய், மஞ்சளாய் மாற்றுவதை இருவரும் பார்த்தனர். இன்னொரு மனிதப்பிறவியுடன் இருந்த இந்த எளிய உடல் தொடுகை ஸ்னேக்குக்கு சந்தோஷமாய் இருந்தது, ஆனால் போதுமான திருப்தி தருவதாக இல்லை.. இன்னொரு சமயம், இன்னொரு இடமாயிருந்தால், அவள் இன்னும் சிறிது கூடுதலாக ஏதானும் செய்திருப்பாள், ஆனால் இங்கு அல்ல, இப்போது அல்ல.

சூரியனின் கீழ் விளிம்பின் ஒளித் தீற்றல் தொடுவானிற்கு மேலே எழுந்த போது, ஸ்னேக் எழுந்தாள், மிஸ்டை மெல்ல கூடையை விட்டு வெளியே இழுத்தாள். அவள் மெதுவாக, சுரத்தில்லாமல் வந்து, ஸ்னேக்கின் தோள்கள் மீது ஊர்ந்து ஏறினாள். ஸ்னேக் தன் பையை எடுத்துக் கொண்டாள், அவளும் அரெவினும் சேர்ந்து அந்த கூடாரங்களின் சிறு தொகுப்பை நோக்கி நடந்தனர்.

(தொடரும்)