இத்தனை நேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையே என்ற எண்ணம் பிரபுவின் மனதில் கவலையாக மாறத் தொடங்கிய போது மணி பதினொன்று ஐம்பது. இடப்பக்கம் ஒருக்களித்து படுத்திருந்தவன் திரும்பி, வலப்புறம் டீப்பாயில் இருந்த கடிகாரத்தை பார்த்தான். ஐம்பதின் ஒரு இலக்கமாக இருந்த சிவப்பு வண்ண டிஜிட்டல் சுழி, ஒன்றாக மாறி ஐம்பத்தி ஒன்றென மின்னத் துவங்கியது. மறுபடியும் இடது பக்கம் திரும்பிக் கொண்டான்.
பத்து மணியிலிருந்தே இப்படி இடமும், வலமுமாக புரண்டுப் புரண்டு பார்க்கிறான். தூக்கம் மட்டும் வந்த பாடில்லை. அவன் தூங்க வேண்டும். அதுவும் இப்போதே! தூங்கினால் தான் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியும். ஆறரைக்காவது எழுந்தால் தான் குளித்து, சாப்பிட்டு கிளம்ப முடியும். கிளம்ப வேண்டும். எட்டரை மணிக்கு அங்கே இருக்க வேண்டும். முதல் நாளே சொதப்பி விடக் கூடாது என்று எத்தனையாவதோ முறையாக தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
நாளை, அவனுக்கு ஒரு முக்கியமான நாள்… பல நாட்களாக எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நாள்… அவன் வேலைக்குச் செல்லும் முதல் நாள்.
கல்லூரி முடிந்து ஏறத்தாழ பதினோரு மாதங்களுக்குப் பின் வேலைக்குச் செல்கிறான். சரியாகச் சொன்னால், கடைசி தேர்வு எழுதி, பத்து மாதங்கள், இருபத்தியேழு நாட்கள் ஆன பிறகு.
அவன் படித்த கல்லூரிக்குப் போகவேண்டுமானால், தாம்பரத்தைத் தாண்டி ஒரு பத்து கிலோமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். ஆனால், இறுதி ஆண்டின் இரண்டாம் பாதியில் அவன் அந்தப் பக்கமாக அதிகம் செல்லவில்லை. பெரம்பூருக்கு அருகே இருக்கும் ஒரு தொழிற்சாலைக்குத்தான் சென்று கொண்டிருந்தான்… தன்னுடைய இறுதி ஆண்டு ப்ராஜெக்ட் வேலைக்காக. அந்த தினங்களில் தான், வேலைக்கு ஆள் எடுக்க வளாகத்துக்குள் கம்பெனிகள் ஒவ்வொன்றாக வரிசை கட்டி வரத் துவங்கின.
ஒரு வெள்ளிக்கிழமை. மதியம் மூன்று மூன்றரை இருக்கும். ரொம்பவும் பழக்கப்பட்டு விட்ட அதே பாடத்தை இன்னுமொரு முறை அலுப்பு காட்டாமல் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரையும், கொஞ்சமும் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து திணிக்கப்பட்ட பாடங்கள் தந்த களைப்பை வெளிப்படுத்த முடியாமல் அமர்ந்திருந்த மாணவர்களையும், கலைத்துக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்தது அந்த சர்குலர்.
தரமணியில் இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனம் வேலைக்கு ஆள் எடுக்க ஞாயிற்றுக்கிழமை வருகிறார்களாம். காலை ஒன்பதரை மணிக்கு அறிமுக உரையும், அதற்குப் பிறகு தேர்வும் இருக்கும் என்ற செய்தி வாசிக்கப்பட்டதும் வகுப்பில் பரபரப்பு பரவியது. அந்த ஆண்டு கல்லூரிக்கு வரும் முதல் காம்பஸ் இண்டர்வியூ! எல்லோருக்கும் ஒரே உற்சாகம். பிரபுவிற்கும் தான். அவன் அது நாள் வரையில் ஞாயிற்றுக்கிழமையில் கல்லூரிக்கு வராததால், உற்சாகமடைய அது ஒன்றே போதுமானதாக இருந்தது!
ஞாயிறுகளில் புறநகர் ரயில் பயணம் என்பது மற்ற நாட்களைப் போல அல்ல. அதிகக் கூட்டம் இருக்காது. ஜன்னலோர இருக்கை சுலபமாகக் கிடைக்கும். எதிர் இருக்கையில் கால்களை நீட்டிக்கொண்டு சாய்ந்தபடி பயணிக்கலாம். கும்பல் சேர்த்துக் கொண்டு உரக்க பேசி, சிரித்துக் கொண்டு போகலாம். யாரும் கேட்பதற்கில்லை. அப்படித்தான் பிரபுவும், அவனுடைய நண்பர்களும் பயணித்தார்கள். அங்கிருந்த கிண்டல் பேச்சையும், சிரிப்பையும் பார்த்தால் அவர்கள் தேர்வெழுத போகிறார்கள் என்று யாருமே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். வழக்கமான செமஸ்டர் தேர்வுகளின் போது காணப்படும் இறுக்கத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாததை அவர்களே கூட கவனித்திருக்க வாய்ப்பில்லை.
ரயிலில் மட்டும் தான் காலி நாற்காலிகளும், காற்றோட்டமும். கல்லூரி ஆடிடோரியமோ நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் நான்காம் ஆண்டு மாணவர்கள் என்பதை நம்ப பிரபுவிற்கு சில நொடிகள் ஆயின. எவ்வளவு துழாவிப் பார்த்த போதிலும், கடைசி இரண்டு வரிசைகளில் மட்டுந்தான் சேர்ந்தார்ப்போல ஐந்து வெற்று இருக்கைகள் கண்ணுக்குப் பட்டன.
ஓர நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வழி கேட்டு, பின் எஞ்சியிருந்த இருக்கைகளை அடைந்து, ஒரு வழியாக அமர்ந்து திரும்பிய போது, கடைசி வரிசையும் நிரம்பி விட்டது. அதையும் தாண்டி சிலர் நின்றபடி காத்திருந்தனர். பிரபு தன் கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் ஒன்பது பத்து. முதல் வரிசையில் இருப்பவர்கள் எத்தனை மணிக்கு வந்திருப்பார்களோ என்ற கேள்வி அவன் மனதில் ஒரு கணம் வந்து போனது.
சரியாக ஒன்பதரைக்கு அறிமுக உரை ஆரம்பமானது. வெளிர் நீல முழுக்கை சட்டையின் நடுவே சிகப்பும், பச்சையுமாக கோடு போட்ட டையை கட்டிக்கொண்டு ஒருவன் பவர் பாயிண்ட் சிலைடுகளைக் காட்டத் தொடங்கினான். அவனுக்கு இருபத்தியேழு, இருப்பத்தியெட்டு வயது இருக்கலாம். பிரபுவால் சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால் நிச்சயம் முப்பதுக்கு கீழ் தான்.
தொடக்க சிலைடுகளில் அந்த நிறுவனத்தின் தோற்றத்திலிருந்து அன்றைய நிலை வரை சொல்லப்பட்டது. பிறகு, அவன் படிக்கும் கல்லூரியுடனான உறவும், அங்கிருந்து படித்து அவர்களுடன் பணி செய்யும் முன்னாள் மாணவர்களின் அறிவும், திறமையும் நீட்டி முழக்கப்பட்டது. அவன் பேச்சில் அடிக்கடி ‘மாணவர் சமுதாயம்’, ‘இளரத்தம்’ போன்ற வார்த்தைகள் வெளிப்பட்டன.
சிறிது நேரத்திலேயே பிரபுவிற்கு அலுப்புத் தட்டத் தொடங்கியது. இடமும், வலமும் திரும்பிப் பார்த்தான். ரகுவும், ஆனந்தும் சிலைடுகளையே பார்ப்பது மாதிரி தெரிந்தது. எந்த கணமும் வரத் தயாராக இருந்த தூக்கத்தைத் தடுக்க, பெசிக்கொண்டிருப்பவனின் உரையிலிருந்து சிந்தும் “இளரத்தத்தை” எண்ணத் தொடங்கினான். பதினேழாவது ‘துளி’க்குப் பிறகு உரை முடிக்கப்பட்டது. அதன் பிறகும், சிலர் ஆர்வமாக கேள்வி கேட்ட போது வியப்பில் அவன் தூக்கம் கலைந்தே போனது.
ஆடிடோரியத்துக்கு மேற்கே இருக்கும் டிராயிங் ஹாலில் தான் தேர்வை வைத்தார்கள். ஏறக்குறைய ஐம்பதடி நீளமும், நாற்பத்தியைந்து அடிக்கும் மேலான அகலமும் கொண்ட பெரிய கூடம் அது. ஈ.டி. வரைய தோதாக, பரந்த, சாய்வான மேசைகளும், உயரமான நாற்காலிகளும் போடப்பட்டிருக்கும். இருந்தும், முதலாம் ஆண்டு ஈ.டி. வகுப்பில் சில நாட்கள் நின்று கொண்டே வரைய வேண்டிருக்கும். அன்று சாயங்காலம் எல்லாம் கால்கள் நோவெடுக்கும். அம்மா அம்ருதாஞ்சனோ, ஐயோடக்சோ தேய்த்து விட்ட பழைய ஞாபகங்கள் எல்லாம் பிரபுவின் மனதில் ஓடிக்கொண்டிருக்க, அவன் கையில் வினாத்தாள் திணிக்கப்பட்டது.
மொத்தம் எழுபத்தியைந்து கேள்விகள். தொண்ணூறு நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும். ஆங்கிலம், கணிதம், மற்றும் அனலிடிகல் என மூன்று பகுதிகள். பகுதிக்கு இருபத்தியைந்து கேள்விகள். எல்லாம் ஆப்ஜக்டிவ் மாதிரி. கேள்வியுடன் கொடுக்கப்பட்டுள்ள நான்கு பதில்களில் சரியானதை தேர்ந்தெடுத்து குறிக்க வேண்டும். சில கேள்விகள் ரொம்ப சல்லித்தனமாக இருந்தன. ஊதித் தள்ளிவிட்டான். சிலதோ தொட முடியவில்லை. பதிலைத் தோராயமாகக் கூட யூகிக்க முடியவில்லை. அவற்றுக்கு எல்லாம் ஆப்ஷன் ‘சி’யை நிரப்பிக் கொண்டே வந்தான். இறுதிக் கேள்வியை அடைந்த போது தேர்வு முடிய இன்னும் அரை மணி நேரம் இருந்தது. ஓரிரண்டு பேர் கிளம்பியிருந்தனர். ரகு, ஆனந்த், சுரேஷ், மனோ எல்லாம் எழுதிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் எப்போதும் அப்படித்தான். இறுதி நிமிடம் வரையில் எழுதிக் கொண்டே இருப்பார்கள். பிரபுவுக்கோ பசிக்கத் தொடங்கிவிட்டது. காலையில் சாப்பிட்ட ஆறு இட்லிகளும் இத்தனை நேரம் தாங்கியதே பெரிய விஷயம். யாருக்கும் காத்திராமல் கான்டீனுக்குச் சென்றான். பொதுவாக தேர்வுகளுக்குப் பிறகு அவன் யாருடனும் அதிகம் பேச விரும்ப மாட்டான். எதைப் பற்றி பேசத் தொடங்கினாலும், பேச்சு சிறிது நேரத்தில் தேர்வை நோக்கியே செல்லும். வினாத்தாளை மீண்டும் ஒருமுறை அலசுவார்கள். செய்த பிழைகள் எல்லாம் தெரிந்து தொலைக்கும். பிழைகள் சின்னதாய் இருந்தால் ஒரு மாதிரி சமாதானம் ஆகி விடலாம். பெரிதாக இருந்தாலோ ரொம்பக் கொடுமை. இரண்டொரு முறை சில பாடங்களில் தேறுவோமா மாட்டோமா என்ற பயமெல்லாம் வந்திருக்கிறது. ரிசல்ட் தெரியும் வரை பயந்து கொண்டே இருக்க வேண்டும். அப்பப்பா… அதெல்லாம் பெரிய இம்சை!
பூரியின் கடைசித் துண்டை எடுக்கப் போகுமுன் திடீரென்று சுரேஷ் ஓடிவந்து அதை பறித்துக் கொண்டான். எல்லோரும் நல்ல பசியோடு இறுக்க வேண்டும். ஜாஸ்தி பேசாமல் ஆளுகொன்றை வாங்கித் தின்னத் தொடங்கினர். அவர்கள் உணவை மெல்லுகிற ஓசையைத் தவிர அங்கே வேறொரு சத்தமில்லை. பிரபுவிற்கு அந்த அமைதி புதுசாக இருந்தது. வழக்கமாக, தேர்வைக் குறித்து இந்நேரம் தீவிரமான விவாதம் நடந்து கொண்டிருக்கும். ஒருவேளை, எல்லாம் காண்டீன் வரும் வழியிலேயே பேசி முடித்துவிட்டார்களா? என்று அவன் சிந்தித்துக் கொண்டிருக்கையில், “படம் போலாமா?” என்ற யோசனையை சுரேஷ் சொன்னான். தொடர்ந்து ரகுவும் எதோ ஒரு சினிமாவை சிபாரிசு செய்தான்.
ஒவ்வொரு முறையும் இறுதித் தேர்வுக்குப் பின் சினிமாவிற்கு செல்வது என்பது ஒரு சடங்காகவே ஆகிவிட்டதால், எல்லோரும் ஒத்துக் கொண்டனர். மேலும், தேர்வுக்கு முன் காண்டீனில் காபி அருந்துவதும், தேர்வுக்குப் பின் சினிமாவுக்குச் செல்வதும் நல்ல ராசி என்பது ரகுவின் தீவிர நம்பிக்கைகளில் ஒன்று. வரமாட்டோம் என்று சொன்னாலும் அவன் சும்மா விடப்போவதில்லை.
எல்லோரும் கிளம்ப ஆயத்தமாகையில், மனோ மட்டும், தான் வரவில்லை என்றான். மாலை வரை கல்லூரியில் இருந்து தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளப்போவதாக அவன் சொன்ன போது, ‘ரொம்பப் பண்ணுகிறான்’ என்று பிரபு எண்ணிக் கொண்டான்.
ஆரம்பத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கிய திரைப்படம், இடைவேளைக்குப் பிறகு அத்தனை சுவாரசியமாக இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு உட்கார முடியாத அளவிற்கு போரடிக்கத் துவங்கியது. இவ்வளவு மொக்கையான ஒரு சினிமாவிற்கு அழைத்து வந்த ரகுவை வெளியே சென்ற பின் வெளுக்க வேண்டும் என்று பிரபுவும் ஆனந்தும் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.
ஆனால், அப்படி வெளுக்க வாயிப்பில்லாத வகையில் ஆட்டம் முடிந்ததும் ஆனந்துக்கு ஃபோன் வந்தது. மனோ தான் கூப்பிட்டுப் பேசினான். அன்றையத் தேர்வில் ஆனந்த் மட்டும் செலக்ட் ஆகியிருந்தான். இரண்டு நாளில் இண்டர்வியூவிற்கு தரமணி செல்ல வேண்டும் என்ற தகவலை அவன் முழுவதும் அறிந்து கொள்வதற்கு முன்பே, மற்றவர்கள் எல்லோரும் அருகில் இருந்த ஐஸ் கிரீம் கடைக்குள் நுழைந்து, அவரவருக்குப் பிடித்த ஃப்ளேவரை ஆர்டர் செய்யத் தொடங்கினர். ஆனந்தின் ட்ரீட் அறிவிக்கப்படாமல் ஆரம்பமானது.
பிரபுவும் தனக்குப் பிரியமான சாக்லேட் ஐஸ் கிரீமை வாங்கிக் கொண்டான். ஆனால், ஏனோ அன்று மட்டும் அது அத்தனை ருசியாக இல்லை!
வாயில் ஐஸ் கிரீம் கரைந்ததை விட வேகமாக ரகுவிற்கும், மனோவிற்கும் அடுத்தடுத்து வேலை கிடைத்தது போல இருந்தது. இறுதித் தேர்வுகள் நெருங்கி வந்த நேரத்தில், கிட்டத்தட்ட வகுப்பில் எல்லோருக்கும் வேலை கிடைத்து இருந்தது. அவர்கள் குழுவில் பிரபுவும், சுரேஷுமே மிச்சம். காம்பஸ் இண்டர்வியூவிற்கு வரும் நிறுவனங்களும் குறையத் தொடங்கின. தேர்வுக்குப் பின் ஒன்றோ, இரண்டோ வந்தால் அதிகம் என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். அப்போது தான் முதல் முறையாக, தேர்வை விட, தேர்வுக்குப் பின் வரும் விடுமுறை பிரபுவிற்கு பதற்றமூட்டியது!
அதுவரை வந்த கம்பெனிகளில் ஒன்றில் கூட தேறாதது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனந்தும், ரகுவும் தன்னை விட அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சீக்கிரம் வேலை கிடைத்தது சரி. அனால், இந்த மனோப்பயல் தன்னை விட சுமாராகப் படிப்பவன் தானே? அவனுக்கெல்லாம் எப்படி கிடைத்தது என்று குழம்பிப்போனான். ஏதோ சுரேஷாவது துணைக்கு இருக்கிறானே… அவனுக்கும் கிடைத்திருந்தால் ரொம்ப நொந்து போயிருப்பான். இனி வருவதிலாவது சீக்கிரம் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும். சுரேஷும் தன்னை முந்தி விடக் கூடாது என்று அவன் நினைத்துக் கொண்ட போது, இறுதி ஆண்டின் கடைசித் தேர்வுக்கு பதினான்கு நாட்கள் இருந்தன.
பதினைந்தாம் நாள் காலை அவன் தாமதமாக எழுந்தான். வழக்கமாக, காபியோடு பேப்பரைப் படித்துக் கொண்டிருக்கும் அப்பா, அன்று காலுக்கு ஷூவை மாடிக்கொண்டிருந்தார். அம்மாவும் சமையலை முடித்துவிட்டிருந்தாள். மூன்று விசில்களையும் தந்துவிட்டு, மேடையின் ஓரத்தில் அமைதியாக அமர்ந்து ஆசுவாசப்பட்டுக் கொண்டிருந்தது பிரஷர் குக்கர். ஹும்…ஆசுவாசம்! ஓய்வு! இவ்வுலகில் உள்ள எல்லோரும் ஏங்குகிற ஒன்று. அன்றிலிருந்து அது அவனுக்கு விடுமுறை வடிவில் வாரி வழங்கப்பட்டதாகத் தெரிந்தது. எதற்காக தனக்கு இந்த விடுமுறை என்று தோன்றியது. இதை விடுமுறை என்று அழைப்பதே சரியா என்று கூட தோன்றியது. விடுமுறைகளுக்கு முடிவு உண்டே? ரகுவும், ஆனந்தும், மனோவும் கொண்டுள்ள விடுமுறை நாட்கள் எல்லாம் சீக்கிரம் முடிந்து போகுமே? தன்னுடையது எப்போது முடியுமோ?
அடுத்த இரண்டு வாரங்களில் கல்லூரிக்கு இன்னுமொரு நிறுவனம் வந்தது. அதன் பெயரை கேட்ட போது, அவ்வளவு பிரபலமாகத் தெரியவில்லை. இருந்தாலும், பிரபு அக்கறையுடன் தான் தயார் செய்தான். அன்று ஆடிடோரியத்தில் இரண்டாம் வரிசையிலேயே இடம் கிடைத்தது. வழக்கம் போல, ஒருவர் அறிமுக உரை தந்தார். உரையாற்றியவரின் பேச்சு அவனை வெகுவாக ஈர்த்தது. ஏனோ, இந்த வேலை கிடைத்துவிடும் என்று நம்பத் தோன்றியது. உரை முடிந்ததும் ஒரு கேள்வி கூட கேட்டான்.
தொடர்ந்து வந்த தேர்விலும், வழக்கம் போல ஆப்ஜக்டிவ் மாதிரி வினாக்கள் இருந்தன. ஆனால் அவன் அசந்து போகும் வகையில், முந்தைய தேர்வுகளைப் போல இல்லாமல், மிகக் கடினமாக இருந்தன. பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. பதில் தெரியாதவற்றுக்கு ‘சி’யோ ‘டி’யோ குறிக்க மனம் வராமல், அப்படியே விட்டு வந்தான். மொத்தமே பதினெட்டு கேள்விகள் தான் நிரப்பப்பட்டிருந்தன. இருந்தும் கடைசி நொடி வரை கிளம்பாமல் உட்கார்ந்திருந்தான். தாளைத் திரும்பத் தருகையில் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.
வெளியே வந்த போது சுரேஷ் அழுது கொண்டிருந்தான். அவனை தான் தேற்ற நேரிடும் என்று பிரபு சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேலும், அன்று வந்தது தான் அந்த ஆண்டின் கடைசி கம்பனி என்ற செய்தியை அவர்கள் இருவருமே எதிர்பார்க்கவில்லை!
வேலைக்கான தொடக்க நாளை ஆவலுடன் எதிர்ப்பாத்துக் கொண்டிருந்த ஆனந்தும், ரகுவும், மனோவும், அடுத்த இரண்டு மாதங்களில் ஒருவர் பின் ஒருவராக வேலைக்குச் செல்லத் துவங்கினர். பிரபுவிற்கு சுரேஷ் மட்டுமே துணை… இல்லையில்லை… சுரேஷுக்கு இன்னமும் வேலை கிடைக்காதது மட்டுமே துணை! இருவரும் சேர்ந்தே வேலை தேடினார்கள். ஒன்றாக மனு போடுவார்கள், ஒன்றாக தேர்வுகளுக்கு சென்று வந்தார்கள். வேலைக்கு சென்று வந்த பயல்கள் எல்லாம் முதல் வாரத்தில், வேலைப் பயிற்சியைப் பற்றியும், புது நண்பர்களைப் பற்றியும் பேசினார்கள்; முதல் மாதத்தில் ஏ.டி.எம். அட்டைகளைப் பற்றி பேசினார்கள்; இரண்டாம் மாதத்தில் பைக்கோ, செல்போனோ வாங்குவதைப் பேசினார்கள். ஆனால், ரகுவும், சுரேஷும் வேலை கிடைக்காததைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதுவும் ஒரு நாள் நின்றுபோனது.
அன்று தினசரியில் வந்த ஒரு நிறுவனத்தின் தகுதித் தேர்வைப் பற்றிய அறிவிப்பைப் பிரபு பார்த்ததும், அதைத் தூக்கிக் கொண்டு அரக்க பறக்க சுரேஷ் வீட்டிற்கு ஓடினான். வழக்கமாக இதையெல்லாம் ஆர்வமாகக் கேட்கும் அவன், “அப்படியா?” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான். பிரபுவிற்கு ஆச்சரியமாக இருந்தது. சில நிமிட அமைதிக்குப் பிறகு, மெல்ல, தனக்கு ஒரு வேலை கிடைத்து விட்ட தகவலைச் சொன்னான். பிரபுவிற்கு தூக்கி வாரிப் போட்டது.
‘அயோக்கியன்! ஒன்றுமே சொல்லவில்லை பாரேன்! எல்லாத் தேர்வுகளுக்கும் கூடவே ஒட்டிக்கொண்டு வந்தவன், இண்டர்வியூ போய் வந்ததைப் பற்றி கூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே? என்ன அழுத்தம்! நான் என்ன உன் வேலையைப் பிடிங்கிக் கொண்டா போகப்போகிறேன்?’ – இப்படி கண நேரத்தில் அவன் மனதில் ஏகப்பட்ட யோசனைகள் வளர ஆரம்பித்தன. சுரேஷ், நேர்முகத் தேர்வு ஒரு வாரம் முன்பு தான் நடந்தது என்றும், நேற்றே முடிவு தெரிந்தது என்றும், இன்று மாலை தெரிவிக்கலாம் என்றும் இருந்தேன் என்று என்னவோ சொல்லிப் பார்த்தான். பிரபுவின் செவியில் அந்த ஒலி அலைகள் சேர்ந்ததாகத் தெரியவில்லை. மெளனமாக வீடு திரும்பினான். பாதி தூரம் வந்த பின்பு, தான் அவனை வாழ்த்தவில்லை என்று அறிந்து கொண்டான்.
அன்று இரவு நெடுநேரம் பிரபு தூங்காமல் சிந்தித்துக் கொண்டே இருந்தான். தன்னை எல்லோரும் ஏமாற்றுவதைப் போல உணர்ந்தான். இந்த உலகத்திலேயே தான் தான் மிகப் பெரிய ஏமாளி என்று தோன்றியது. அம்மாவும், அப்பாவும் இதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாதது அவனுக்கு வியப்பாக இருந்தது. ஒருவேளை, இத்தனை வருடங்களில் அவர்கள் இது போன்ற நிறைய ஏமாற்றங்களைப் பார்த்திருப்பார்களோ? அதான் சாதாரணமாக இருக்கிறார்களோ? திரும்பிப் பார்த்தான். இருவரும் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். அப்பாவின் குறட்டையும், அம்மாவின் சுவாச சப்தமும் மாறி மாறி சீராக ஒலித்தன. மேலே சுழலும் மின் விசிறியின் ஓசையும் அவற்றோடு சேர்ந்து ஒலித்தது. மின் விசிறியைப் பார்த்துக் கொண்டே இருந்தவனின் விழிகள் மெல்ல இமை மூடின.
கண்கள் விழித்துக் கொண்டு பார்த்த போது நேரம் ஏழு ஆகிவிட்டிருந்தது. அன்று இன்னுமொரு தகுதித் தேர்வுக்குச் செல்ல வேண்டும். பிரபுவிற்கு இது எத்தனையாவது தேர்வு என்ற கணக்கே மறந்து போய்விட்டது. ஆனால், இது அவன் தனியாக எழுதும் முதல் தேர்வு. கூட யாரும் வராதது தான் புதிதே தவிர, மற்றதெல்லாம் அதே கதைதான்.
எழுதிவிட்டு வந்தவனிடம் எதுவும் கேட்காமல் அம்மா உணவு பரிமாறினாள். இப்போதெல்லாம் அம்மா எதுவுமே கேட்பதில்லை. ஆனால், நிறைய பூஜை பண்ணுகிறாள்; கோவிலுக்குச் செல்கிறாள். அப்பாவும் இரண்டு மூன்று கேள்விகளோடு நிறுத்திக் கொள்கிறார். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? அவன் பார்த்த சினிமாக்களில் எல்லாம் இப்படி இருந்ததேயில்லை. வேலை இல்லாதவனை எப்போதும் வீட்டில் வைது கொண்டிருப்பார்கள். ‘தண்டச்சோறு’ என்பார்கள். சோற்றை வைத்து விட்டு குத்திக் காண்பிப்பார்கள். இங்கேயோ தலைகீழ்! பிடித்ததை சமைத்துப் போட்டு “போதுமா? இன்னும் வேணுமா?” என்கிறார்கள். யாரும் கேட்காமலே, “பரவாயில்லையா எழுதிருக்கேன். இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் தெரியுமாம்,” என்று சொன்னான்.
பத்து நாட்களுக்குப் பிறகு அந்த செய்தி வந்தது. பிரபுவை இண்டர்வியூவிற்கு கூப்பிட்டு இருந்தார்கள்! அவனால் நம்ப முடியவில்லை. தபாலை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தான். பூரித்துப் போனான்.
முதல் நேர்முகத் தேர்வின் பதற்றம் நிறையவே அவனிடம் இருந்தது. எப்படி தயார் செய்வது என்று புரியவில்லை. நண்பர்களிடம் கேட்கலாம் என்றால், எல்லோரும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடுகிறார்கள். கடைசியாக சந்தித்து ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும். தவிரவும், இப்போதே சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கிடைத்தால் பிறகு சொல்லலாம் என்ற முடிவோடு தானே ஆயத்தமானான். தன் பழைய பாடங்களைப் படித்தான். முடி வெட்டிக் கொண்டான். அப்பாவோடு சென்று ஒரு வெள்ளை நிற முழுக்கை சட்டை வாங்கிக் கொண்டான்.
புது சட்டை கழுத்தைப் பிடிப்பது போல இருந்தாலும், மாற்ற விரும்பாமல், நேர்முகத் தேர்வன்று அதையே மாட்டிக்கொண்டு சென்றான். அவனை போலவே பலரும் வெள்ளை நிற முழுக்கை சட்டையில் வந்திருந்தார்கள். அதில் பாதிக்கு மேல் புதுசாகத் தெரிந்தது. அவன் அருகே அமர்ந்திருந்தவன் வெள்ளை நிற சட்டை அணியவில்லை. பச்சை நிறத்தில் அணிந்திருந்தான். பிரபுவைப் பார்த்துப் புன்னகைத்தான். அத்தனை பதற்றமாக அவன் முகம் தெரியவில்லை. ஒருவேளை, இதற்கு முன்பே பல நேர்முகத் தேர்வுகளை சந்தித்திருப்பானோ என்று தோன்றியது. ஆனால், மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம் பதற்றத்துடன் காணப்பட்டனர். அவர்களில் எத்தனை பேருக்கு இது முதல் இண்டர்வியூ என்று பிரபுவால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்கள் முகத்தை எல்லாம் பார்க்கப் பார்க்க பிரபுவிற்கு பதற்றமும், அச்சமும் அதிகரிப்பது போல இருந்தது. எல்லோரும் எதையாவது ஒன்றை படித்துக் கொண்டோ, இல்லை சிந்தித்துக் கொண்டோ இருந்தார்கள். அதைத் தவிர்க்க அவன் அந்த அறையை நோட்டம் விடத் தொடங்கினான். அங்கே வேடிக்கைப் பார்க்க ஒன்றும் பெரிதாய் இல்லை. இடப்பக்க சுவற்றில் ஒரு வட்ட கடிகாரமும், எதிர் புற சுவற்றில் ஒரு ஓவியமும் தொங்கவிடப்பட்டிருந்தன.
கடிகாரம் ஒன்பது ஐம்பதைக் காட்டியது. ஓவியமோ பல கடிகாரங்களைக் காட்டியது. நிதானமாகப் பார்த்தான். மூன்று கடிகாரங்கள் இருந்தன… வட்டமாக, நீல நிறத்தில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தைக் காட்டிக் கொண்டு. ஆனால் ஏனோ எல்லாம் மடங்கி இருந்தன. ஒன்று மேஜை மேல், இன்னொன்று ஒரு மரக் கிளையின் மீது, மூன்றாவது மீன் போல தரையில் கிடக்கும் ஒன்றின் முதுகுப்பகுதி மீது. உற்றுப் பார்த்த போது தான் தெரிந்தது. அந்த கடிகாரங்கள் எல்லாம் உருகிக் கொண்டிருந்தன. அதுவும் மூன்றில்லை. நான்கு. ஆனால் அந்த நான்காவது நீல நிறத்திலும் இல்லை, வட்டமாகவுமில்லை, உருகுவதாகவும் தெரியவில்லை. அது கடிகாரம்தானா என்றே அவனுக்கு சந்தேகம் வந்தது. அதன் மீது கருப்பாக கருகுமணி போல என்னவோ இறைந்து கிடந்தன. அவையே பூச்சி போலவும் தெரிந்ததன.
ஓவியத்தில் மூழ்கிப் போயிருந்தவனை யாரோ தட்டுவது போல இருந்தது. பக்கத்து நாற்காலி பையன் தான் அழைத்தான். பாலா என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். தூத்துக்குடியிலிருந்து வருவதாகச் சொன்னவனுக்கு அது மூன்றாவது நேர்முகத் தேர்வாம். அவனோடு பேசிக் கொண்டிருக்கையில் தான் அந்த அறையில் இருந்த பாதி பேர் கிளம்பியிருந்ததை பிரபு உணர்ந்தான்.
சிறிது நேர அமைதிக்குப் பின் பாலா திடீரென்று, “ஜாவால பூலியன் ராப்பர் கிளாஸ் தானே?” என்று கேட்டான். பிரபுவை அந்தக் கேள்வி அடித்துப்போட்டது. “ஜாவா ப்ரோக்ராமிங் எல்லாம் கேப்பாங்களா?” என்றான். கல்லூரியில் அவன் படித்த பாடங்களில் ஜாவா இல்லை. நிறைய மோட்டாரும், ஜெனரேடரும் தான் இருந்தன. “தெரியலே. ஒருவேளை கேட்டால்…,” என்று பதிலளித்தான் பாலா.
அவன் பதில் சொல்லி முடிபதற்குள், அவனை உள்ளே அழைத்தார்கள். பிரபுவும் ஜாவாவை மறக்க முடியாமல் ஓவியத்தின் மீது மீண்டும் தன் பார்வையை செலுத்தினான். இம்முறை அது மீன் போல தெரியவில்லை. மனிதனைப் போல தெரிந்தது. அதுவும் முழுதாக இல்லை. ஒரு வளர்ந்து வரும் கருவைப் போல இருந்தது. மீனா? மனிதனா? என்ற முடிவுக்கு வருவதற்கு முன்பே அவனையும் உள்ளே அழைத்தார்கள்.
வெளியில் வரும் போதே மிகவும் களைப்பாக உணர்ந்தான். வீட்டை அடைந்ததும் தூங்கச் சென்றுவிட்டான். அப்பா கேட்டதற்கு “சுமாரா போச்சு. ரெண்டு வாரத்துல தெரியும்,” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டான்.
இரவு சொப்பனத்தில் நிறைய கடிகாரங்கள் வந்தன. எல்லாம் உருகிய படி, மரத்திலும், மேஜையிலும் தொங்கிக் கொண்டிருந்தன. கீழே தரையில் மீனுக்கு பதிலாக அவன் படுத்துக் கொண்டிருந்தான். இடுப்பில் ஒற்றைத் துணியாக உருகியோடும் ஒரு கடிகாரம் மட்டும். படுத்துக் கொண்டே அவன் ஜாவாவில் ஒரு ப்ரோக்ராம் எழுத முயலுகிறான். முடியவில்லை. காலையில் கேள்வி கேட்டவர் அவனைப் பார்த்து சிரிக்கிறார். சுரேஷும், பாலாவும் பின்னால் கடற்கரையில் நின்றுகொண்டு சிரிக்கிறார்கள். அவன் தவிக்கிறான். இடுப்பில் கடிகாராம் உருகிக் கொண்டே போகிறது. திடுக்கிட்டு எழுந்தவன் இடுப்பைத் தடவிப் பார்த்தான். லேசாக விலகியிருந்த லுங்கியை மீண்டும் இறுகக் கட்டிக் கொண்டு படுத்தான். ஆனால் தூக்கம் வரவில்லை.
இரண்டு வாரங்கள் கழித்து வேலை கிடைக்கவில்லை என்று தெரிந்தது. இடையில் நண்பர்களை சந்தித்தப் போது அவனுடைய வேலை வேட்டையைப் பற்றியே கேட்டார்கள். “மச்சான்! உன் ரெசுமே ஃபார்வர்ட் பண்ணேன்… பாக்கலாம்,” என்று மனோ சொன்னதும் என்னமோ போல இருந்தது. இனி வேலை கிடைத்த பின்புதான் இவர்களை சந்திக்க வேண்டும் என்று கூட தோன்றியது. என்னமா அலட்டுகிறார்கள்? இப்போதே வீடு வாங்குவதைப் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தனக்கும் அப்படியொரு சந்தர்ப்பம் வருமா? என்று யோசித்தப்படியே அன்று இரவு படுத்துக்கொண்டிருந்தான். நேரம் நள்ளிரவையும் தாண்டியிருந்தது.
இந்த எட்டு மாதங்களில் அவனுடைய தூங்கும் நேரம் வெகுவாக மாறி விட்டது. மதியம் நிறைய தூங்கினான். இரவோ ஒன்று, இரண்டு வரை விழித்திக் கொண்டிருந்தான். அப்படியே தூங்கினாலும், ‘உருகும் கடிகாரம்’ மாதிரியான கனவு வந்து எழுப்பிவிடும்.
இரண்டாவது இண்டர்வியூவிற்கு முந்தைய இரவும் அப்படியொரு சொப்பனம் வந்தது. ஜாவாவுக்கு பதில் ஏதோ ஒரு கணக்கை முயற்சித்துக் கொண்டிருந்தான். மறுநாள் காலையில் அவசர அவசரமாகத் தன் பொறியியல் கணக்கு புத்தகங்களைத் தேடினான். கிடைக்கவில்லை. ஆனால், நேர்முகத் தேர்வில் அதெல்லாம் கேட்கவில்லை. ப்ரோக்ராம்மிங் குறித்து சில கேள்விகளை கேட்டுவிட்டு, பின் பத்து நாட்களில் தெரிவிக்கிறோம் என்று சொல்லி அனுப்பினார்கள்.
ஒன்பதாம் நாள் மதியம் வேலை கிடைத்திருப்பதாக ஒரு கடிதம் வந்தது. அதில் ஒரு வாரத்திற்குப் பிறகு, அதாவது நாளை வந்து சேருமாறு சொல்லியிருந்தது. அம்மா கடிதத்தை எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றாள். அப்பா வீட்டுக்கு வந்ததும் கடிதத்தை நான்கு தடவைக்குக் குறையாமல் படித்துப் பார்த்தார். பிரபுவுக்கோ தலை கால் புரியவில்லை. தன் நண்பர்களிடம் சொல்வதற்காகக் கிளம்பினான். யாரும் அகப்படவில்லை. தொலைபேசியில் கூட பிடிக்கமுடியவில்லை. எங்கே போய்விட்டார்கள் எல்லோரும்? அவனுக்கு யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. வீட்டு மாடியில் ஏறி உரக்கக் கத்த வேண்டும் போல இருந்தது. யாரிடமும் சொல்ல முடியாமல் அன்று இரவைக் கடத்தினான்.
மறுநாளும். அதற்கு மறுநாளும். மூன்றாம் நாள் நண்பர்களிடம் தெரிவித்தான். வாழ்த்தினார்கள். பின் வேறெதையோ பற்றி பேசினார்கள். அவ்வளவுதானா என்றிருந்தது.
அன்றிரவும் தூக்கம் வர தாமதம் ஆனது. விட்டத்தை பார்த்தவாறே படுத்துக் கொண்டிருந்தான். மின்விசிறி ஓசை எழுப்பியபடி சுழன்று கொண்டிருந்தது. அப்பாவின் குறட்டை ஒலியும், அம்மாவின் மூச்சு சத்தமும் கூடவே கேட்டன. எதிலும் மாற்றம் இல்லை… அப்படியே இருக்கின்றன… அவனுக்கு தூக்கம் வர நேரம் ஆவது உட்பட!
இன்றும் அப்படியே இருக்கின்றன.
ஆனால்… நாளை, அவனுக்கு ஒரு முக்கியமான நாள்… பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் நாள்… அவன் வேலைக்குச் செல்லும் முதல் நாள்.