காற்றை நன்கு சூடாக்கியோ கந்தக அமிலம்/ சோடியம் ஹைட்ராக்ஸைடு வழி செலுத்திய பிறகோ பாயவிட்டால், சூப்பில் நுண்ணுயிரிகள் தோன்றுவதில்லை என்பதை முறையே தியோடர் ஸ்வானும் சுல்ஸ் (Frantz Schulze) என்பவரும் 1836-ஆம் ஆண்டில் தனித்தனியே செய்து காட்டினர். மேற்கண்ட வழிகள் மூலம் காற்றில் ஏற்கனவே உள்ள நுண்ணுயிரிகளைக் கொன்றதால்தான் அவை வளரவில்லை என்ற வாதத்தை ’உயிரிகள் திடீரெனத் தானாகவே தோன்ற முடியும் சித்தாந்திகள்’ ஏற்கவில்லை. மாறாக காற்றை சூடாக்கினாலோ, அமில/ காரம் வழி செலுத்தினாலோ காற்றின் “உயிராற்றல்” பாதிக்கப்படுகிறது ஆகவேதான் அதில் நுண்ணுயிரிகள் தோன்றுவதில்லை என்று வாதிட்டனர்.
1854-ஆம் ஆண்டில் ஷ்ரோடர் (Schroder, H.G.F) மற்றும் டுஷ் (Theoder von Dusch) என்ற இருவரும் காற்றை சுருட்டிய பஞ்சின்(cotton plug) வழி செலுத்துவதன் மூலம் காற்றில் நுண்ணுயிரிகளைத் தாங்கும் தூசியை வடிகட்டிப் பிரிக்க முடியும் என்று கண்டுபிடித்தனர். பஞ்சு அடைப்பு வழி செலுத்தப்பட்டு . “உயிர்ச்சக்தி சேதமடையாத” காற்றை சூப்பில் பாய விட்டும் கூட சூப்பில் நுண்ணுயிரிகள் தோன்றுவதில்லை என்பதையும் செய்து காட்டினர். இருந்தும் காற்றிலிருந்து உயிரிகள் தானாகவே திடீரெனத் தோன்ற முடியும் என்ற நம்பிக்கையை அவ்வளவு சீக்கிரம் வீழ்த்த முடியவில்லை.
ஆகவே, ’தானாகவே உயிரிகள் தோன்றுகின்றனவா இல்லையா’ என்ற விவாதம் பிரெஞ்சு விஞ்ஞானக் கழகத்தில் கடுமையாகியும் முடிவுக்கு வரவில்லை. கடைசியில், 1859-ஆம் ஆண்டில்’தானாகவே உயிரிகள் தோன்றுகின்றனவா இல்லையா’ என்பதை பரிசோதனை மூலம் சந்தேகமின்றி நிரூபிப்பவர்களுக்குப் பரிசு என பிரெஞ்சு அறிவியல் கழகம் அறிவித்த போட்டியில் 1864-ஆம் ஆண்டு பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்ச்சர்(Louis Pasteur) பங்கேற்று வெற்றி பெற்றார்.
உயிரிகளின் திடீர்த்தோற்ற சித்தாந்த வீழ்ச்சி
பாஸ்ச்சரின் பரிசோதனை பின்வருமாறு: வாத்து போல நீண்ட கழுத்துக் கொண்ட ஒரு கண்ணாடிக் குடுவையில் உணவுக்கரைசலை (மாட்டுக்கறி சூப்பு) [அ.கு-1] ஊற்றி அதன் கழுத்தைச் சூடாக்கினானார். கண்ணாடி வளைய ஆரம்பித்ததும் அதை ”S” வடிவத்தில் வளைத்துக் கொண்டார் (படத்தில் காண்க). இந்தக் குடுவையில் உள்ள சூப்பைக் கொதிக்க வைத்தபின் எத்தனை நாட்கள் வைக்கப்பட்டிருந்தாலும் அது கெட்டுப் போவகவில்லை. இந்தக் குடுவைக்குள் காற்று நுழையும் என்றாலும் கழுத்து வளைந்திருப்பதால் காற்றில் உள்ள தூசி மற்றும் நுண்ணுயிரிகள் புவி ஈர்ப்பு விசை காரணமாக கழுத்திலேயே தங்கிவிடுவதே காரணம். அதே சமயம் அதில் உள்ள சூப்பை கழுத்து வரை வருமாறு ஒருமுறை சாய்த்தாலும் குடுவையின் கழுத்தில் படிந்திருக்கும் நுண்ணுயிரிகள் சூப்பில் படிந்து வளர்ந்து சூப்பு கெட்டுப் போவதையும் செயல் முறை விளக்கமாகக் காண்பித்தார்(1).
இவ்வாறு கொதிக்கவைத்து நுண்ணுயிர் நீக்கப்பட்டு (sterilized) இறுகி மூடிய உணவுக்கரைசல் கொண்ட கண்ணாடிக் குடிவைகளை தான் உரையாற்றிய பிரெஞ்சு அறிவியல் கழகத்தின் சொற்பொழிவுக் கூடத்திலும் இன்னும் சில குடுவைகளை கூடத்துக்கு வெளியே மரத்தடியிலும் காற்றுப் படும்படி திறந்து சில நாட்களில் அவற்றில் நுண்ணுயிரிகள் வளர்வதையும் செய்து காண்பித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். திறக்கப்படாமல் மூடியே இருந்த குடுவைகள் நுண்ணுயிரிகள் இன்றி சுத்தமாக இருந்தன. ஆல்ப்ஸ் மலையின் உச்சியிலும், தூசு படிந்த கட்டிடங்களிலும், பிரான்ஸ் நகரத்தின் கடைவீதியிலும் இக்குடுவைகளைத் திறந்து அவற்றில் தோன்றும் நுண்ணுயிரிகள் வெவ்வேறு விதமாக இருப்பதையும் செய்து காண்பித்தார்.
உணவுக்கரைசல் கெட்டுப் போனதுக்குக் காரணம் காற்றில் ஏற்கனவே இருந்த நுண்ணுயிரிகள் உணவுக்கரைசலில் வளர்ந்து பெருகியதுதான் காரணமே தவிர ’திடீரென தானகவே நுண்ணுயிரிகள் உண்டாகி விடுவதில்லை’ என்பது இதன் மூலம் தெளிவாகியது. குடுவையில் வளர்வது உள்ளே நுழையும் காற்றில் உள்ள நுண்ணுயிரிகளே தவிர திடீரென தானாகவே அவை உண்டாகிவிடுவதில்லை என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்து விளக்கி பிரெஞ்சு அறிவியல் கழகத்தின் போட்டியை வென்றார் பாஸ்ச்சர் [அ.கு-2]. உயிரிகள் தானகவே திடீரென ஒருசில நாட்களில் தோன்றிவிட முடியாது என்பதும் காற்று உட்பட எல்லா இடங்களிலும் நுண்ணுயிரிகள் உள்ளன என்பதும் இதன் மூலம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியது.
மேலும், கொதிக்கவைத்து நுண்ணுயிர் நீக்கப்பட்டு (sterilized) இறுகி மூடிய உணவுக்கரைசலில் ஒரு வகையான பாக்டீரியாவை மட்டும் தனிப்படுத்தி வளர்த்தால் அவை ஒரே மாதிரியான பாக்டீரியக் கூட்டமாக (pure culture) பெருகி வளர்வதையும் பாஸ்ச்சர் செய்து காண்பித்தார்.’ஒரு நுண்ணுயிரி அதே மாதிரியான நுண்ணுயிர்களாக மட்டுமே பெருகி வளர்கிறது’ என்பதும் இதன் மூலம் நிரூபணமாகியது [அகு-3].
இப்பிரபஞ்சம் எப்படித்தோன்றியது? உயிரிகள் எவ்வாறு தோன்றின? இவை ஏன் இவ்விதம் உள்ளன?
மானுடச் சிந்தனையின் கணிசமான பகுதி நேரடியாகவோ மறைமுகவாகவோ இக்கேள்விகளை மையம் கொண்டதாகவே உள்ளது. இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தின் முன் தான் ஒரு அற்பத்துணுக்கு மட்டுமே என்பதை அறியும் மனித மனம் கொள்ளும் தனிமையின் அச்சமும் உணர்வெழுச்சியும் வியப்புமே ஆதி மனிதனைச் சிந்திக்கும் மிருகமாக்கின [அ.கு.4].
மனித இனத்தின் மொத்தச் சிந்தனைக்குமே கடும் சவாலாக அமைபவை என்பதால் மானுடச் சிந்தனையையே திரட்டி அதன் விளிம்பில் நின்று கொண்டுதான் இக்கேள்விகளை விவாதிக்க முடிகிறது. தோற்றுப்போவதால், போதாமையால் இன்னும் புதிய தர்க்கங்களைத் தேடிப்போக வேண்டியுள்ளது.
மனித இனத்தின் சிந்தனையை நாம் குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. அதே சமயம் நம் சிந்தனையின் எல்லைகளை ஒத்துக்கொண்டு விவாதிக்காமல் அவற்றைக் கடந்து செல்லவும் முடியாது என்பதை நினைவில் கொள்வோம். ஆகவே இக்கேள்விகளை விவாதிக்கு முன் நம் அறிதல் முறைகளையே நாம் இன்னொருமுறை வறையறுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது[அ.கு.4].
அறிவியல் என்பது தர்க்கமா, யூகமா அல்லது கற்பனையா?
இந்தக்கேள்வி கட்டுரைத்தலைப்புக்கு தொடர்பில்லாதது போல் தோன்றுகிறதல்லவா? இக்கேள்விகள் இங்கே எவ்வளவு முக்கியம் என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.
நாம் இப்பிரபஞ்சத்தை அறியும் வழிகளை தர்க்கம்(logic), கற்பனை(imagination), உள்ளுணர்வு(intuition) என மூன்றாக வகுக்கலாம்(2). தர்க்கத்தின் சரத்தில் கற்பனையும் உள்ளுணர்வும் கோர்ந்தே இருக்கின்றன. தெளிவாக அறிந்து சந்தேகத்திடமின்றி நிரூபிக்கபட்ட தர்க்கங்களாக அடிப்படை விதிகள் (laws/ basic concepts), உள்ளுணர்வு மற்றும் கற்பனை வழி இத்தர்க்கங்களை நீட்டி, அறியாததை உருவகித்து யூகித்து அறியமுயலும் கருத்தாக்கங்கள் (hypothesis), இவை வழி தான் அறிவியல் இயங்குகிறது[அ.கு.4].
வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்திருந்தாலும் கற்பனையே தர்க்கத்தின் வழிகாட்டும் நூலிழையாக உள்ளது. சிந்தனையைத் தொகுப்பது என்பது கற்பனையின் சக்தியினால் தான் சாத்தியப்படுகிறது என்பதால் கற்பனையே அறிதல் முறைகளின் இதயத்துடிப்பாக உள்ளது என்றும் சொல்லலாம் (3). ஆகவே நாம் பொதுவாக நினைப்பது போல அறிவியலில் கற்பனை மற்றும் யூகம் ஆகியவற்றின் பங்கு குறைவானது அல்ல. தர்க்கத்தின் நீட்சி என்பதால் ஒரு வகையில் இவையும் தர்க்கமே.
கற்பனை என்பது தான் என்ன? கற்பனையும், உள்ளுணர்வும் ’நாம் புலன் வழி அறிந்ததன் அடிப்படையில் ஏற்படுவது அல்ல’ என்று முற்றாக மறுக்க முடியாது என்பதால் புலன் அறிதலின் வழி ஏற்படும் பிம்பமே இவை. இவையும் முழுக்க உருப்பெறாது மறைந்து நிற்கும் நம் புலன்களே என்றும் சொல்லலாம்.
நம் மொத்த புலன்களுமே குறையுள்ளவை. வெளிச்சம் சிறிதாவது இல்லையென்றால் நம்மால் கொஞ்சமும் பார்க்கவே முடியாது. ஒரு சிறு தோட்டத்தின் நடுவே நின்றாலும் அதில் உள்ள எல்லாப் பூச்சிகளின் ஒலியையும் நம்மால் கேட்டு விட முடியாது, 20 முதல் 20 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரையுள்ள ஒலி அலைகளை மட்டுமே நம் காது உணர முடியும் என்பதால்[அகு-6].
ஒரு செடியில் உட்கார்ந்திருக்கும் ஒரு சிறு வண்டையே நம்மால் முழுக்க புலன்வழி உணர முடியாது எனில், நம் புலன்வழி அறிவது மட்டும்தான் இப்பிரபஞ்சம் என்றோ இப்பிரபஞ்சம் முழுதும் நம் அறிதல் எல்லைக்குள் வரும் என்றோ நிச்சயமாகக் கருதமுடியுமா என்ன?
இப்பிரபஞ்சத்தின் இன்னொரு மூலையிலிருந்து இக்கட்டுரையைப் படிக்கும் ஒரு அதிபுத்திசாலி உயிரினம்[அ.கு-5] ’அறிவியல் என்று மனிதர்கள் கருதுவது அவர்களின் அறிதல் எல்லைக்குள் அடங்கும் எளிய தர்க்கங்கள் மட்டுமே’ -என்று சொன்னால், அதை நம்மால் தர்க்க ரீதியாக மறுக்க முடியாது. நம்மால அறிய முடியாதவைகளைப் பற்றி யோசித்து என்ன பயன்? ஆகவே, நினைவில் வைத்துக் கொண்டு, நம் புலன்கள் மற்றும் அறிதலின் எல்லைகளை (limitations) கணிதச் சமன்பாட்டில் வரும் ஒத்த எண்களைப்போல விவாதத்திலிருந்து தற்போதைக்காவது நீக்கி விடலாம்.
–oOo–
முதல் உயிரி எவ்வாறு தோன்றியது என்ற கேள்வி பூமி எப்படித் தோன்றியது என்பதிலிருந்து ஆரம்பித்து விவாதித்தால் தான் முழுமை பெறும். ஒரு ஆசாமியைப் பார்த்து அவர் குழந்தையாக இருக்கையில் எப்படி இருந்தார் என்று சொல்வதே சிரமம் என்றால் பூமி தோன்றியபோது எப்படி இருந்தது என்பதை எப்படி அறிவது? அதுவும் பல பில்லியன் வருடங்கள் ஆகி விட்ட பின். ஏற்கனவே சொன்னது போல் பிரபஞ்சம், பூமி, முதல் உயிரி ஆகியவை எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கான பதிலில் தர்க்கம், கற்பனை, யூகம் எல்லாம் உண்டு என்பதை அறிக.
வீட்டுத்தோட்டத்தில் தொலைந்துபோன நாணயத்தைப்போல தடயங்களை பிரபஞ்சத்தில் போய் சாவகாசமாகத் தேடிப்பார்க்க முடியாது என்பதாலும் பூமி உண்டாகியது போக மீந்தது, என்பதாலும் பூமியில் மேல் விழும் எரிகற்களை வைத்து இக்கேள்வியை ஆராய்ந்து பார்த்தார்கள் விஞ்ஞானிகள். 2000-ஆம் ஆண்டில் ஜனவரி 18-ஆம் தேதி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் (குளிரில் முற்றிலும் உறைந்து போன) டாகிஷ் ஏரியில் விழுந்த ஒரு பெரிய எரிகல்லை (meteorite) எடுத்து ஆராய்ந்து பார்த்ததில்[4] பூமியைப் போலவே இதிலும் 90 மூலகங்கள் வரை இருந்தன என்பதாலும் இதிலிருந்த கதிரியக்க தனிமங்களில் கதிர்வீச்சு பூமியில் உள்ள கதிரியக்க தனிமங்களில் கதிர்வீச்சுக்கு இணையாக இருந்ததாலும் பூமி ஏறக்குறைய 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் தோன்றியிருக்கலாம் என்ற கணிப்பு வலுப்பெற்றுள்ளது.
ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 300,000 கிலோமீட்டர்கள். ஒளி ஒரு ஆண்டு முழுதும் பயணம் செய்து கடக்கும் தூரம் ஒரு ஒளிஆண்டு (10 டிரில்லியன் கி.மீ) என அறியப்படுகிறது. பூமி உட்பட நம் சூரியக்குடும்பம் அமைந்துள்ள பால்வீதி (milky way) எனப்படும் நம் நட்சத்திரப் பெருங்கூட்டம் (galaxy) சுமார் 100 ஒளி ஆண்டுகள் உயரமும் 100,000 ஒளி ஆண்டுகள் குறுக்களவும் கொண்ட தட்டு வடிவானது. இதில் மட்டும் சுமார் 200 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றுள் ஒரு நட்சத்திரம் மட்டுமே நம் சூரியன். நமக்கு மிக அருகில் உள்ள அடுத்த கேலக்ஸியான ஆண்ரமெடா கேலக்ஸி (M31) சுமார் இரண்டு மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது போல பல கோடி கேலக்ஸிகளால் ஆகி ஆகியது இப்பிரபஞ்சம் என்பதைக் கற்பனை செய்து பார்க்க முயலுங்கள்.
சில விஷயங்களைக் கற்பனை செய்து பார்க்கக் கூட சில சமயங்களில் நம்மிடம் போதுமான அளவு கற்பனை கைவசம் இருப்பது இல்லை. இப் பிரபஞ்சத்திற்கு மையமோ, விளிம்போ இருப்பதை யூகித்துச் சொல்ல இன்றுவரை நம்மால் இயலவில்லை. பிரபஞ்சத்தின் வடிவம் கோளம், தட்டை அல்லது வடிவமின்றி முடிவற்றது என்பதே இதுவரை நம்மால் சொல்ல முடிந்தது. கற்பனை உருவாகக் கருவிகளான நம் புலன்களே எல்லைக்குட்பட்டவை என்பதால் ஒரு வகையில் நம் கற்பனையுமே கூட எல்லைக்கு உட்பட்டதுதானா?
நெருப்புப்பந்தாகப் பிறந்த பூமியின் மையத்தின் (6,400 கி. மீ ஆழத்தில்) வெப்பநிலை இன்றைக்கும் ஏறத்தாழ 7000 டிகிரி செல்ஸியஸ்[5]. அதாவது பூமி தோன்றி 4.5 பில்லியன் வருடங்கள் கழிந்த பிறகும் கூட. என்றால் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன் பூமி தோன்றிய போது நிலவிய வெப்பநிலையை நம்மால் கற்பனை செய்ய முடிகிறதா? தோன்றி சுமார் 4.5 பில்லியன் வருடங்கள் ஆன பிறகும் சூரியனின் மையத்தின் வெப்பநிலை 15-20 மில்லியன் டிகிரி செல்ஸியஸ்[6]. இதை கற்பனையால் ஒப்பிட்டு அறிய நம் வீட்டு அடுப்பில் கொதிக்கும் கத்தரிக்காய் குழம்பின் வெப்பம் 100 டிகிரி செல்ஸியஸ் மட்டுமே என்பதை நினைத்துப் பார்க்கவும் [அ.கு-7]. உங்கள் கற்பனைக்கு சவாலாக எண்ணிக்கொண்டு முழுக் கற்பனையையும் பயன்படுத்த முயன்று மேற்கொண்டு படிக்கவும்.
பூமியின் தோற்றம்
ஆதியிலே வாயுக்களால் ஆகிய மேகக்கூட்டம் இருந்தது. அதிலிருந்து நம் சூரியக் குடும்பம் பிறந்தது.
நெபுலா (latin: cloud) என்றழைக்கப்படும் வாயுக்களால் ஆகிய பிரம்மாண்ட மேகக்கூட்டம் ஒரு நிலையில் அதி பிரம்மாண்டமாக வளர்ந்து அதன் ஈர்ப்பு விசையும் பிரம்மாண்டமாகி விட்டதன் விளைவாக தன்னையே சுருக்கிக் கொள்ள ஆரம்பிக்கிறது. இவ்வாறாக தொடர்ந்து சுருங்கிச் சுருங்கி மிகச் சிறியதாகச் ஆகி, மையத்தில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போய் வெப்பநிலையும் உயர ஆரம்பித்து ஒரு நிலையில் மையத்தில் ஹைட்ரஜன் அணு தீப்பற்றி எரிய ஆரம்பிக்கையில் நட்சத்திரமாக மாறுகிறது. இவ்வாறு ஒரு நட்சத்திரம் பிறக்க சராசரியாக 40 பில்லியன் வருடங்கள் ஆகிறது.
நட்சத்திரம் என்பது வாயுக்களால் ஆன ஒரு பந்து. ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய வாயுக்களால் ஆகிய நம் சூரியன் ஒரு உதாரணம். இதன் மையத்தின் வெப்பம் நிலை 15-20 மில்லியன் டிகிரி செல்ஸியஸ் என்பதால் ஹைட்ரஜன் அணுக்கள் உட்கரு இணைவு (nuclear fusion) வினை மூலம் எரிந்து இணைந்து ஹீலியமாக மாறுகின்றன. இவ்வாறு தொடர் வினையில்(chain reaction) ஹைட்ரஜன் வாயு முழுக்க எரிந்து ஹீலியம் வாயுவாக மாறி எஞ்சிய பின் ஹீலியம் வாயு எரிய ஆரம்பித்து கரி(carbon)யும், ஆக்சிஜனும் தோன்றுகின்றன. பிறகு இவையும் எரிந்து கந்தகம், சிலிகன் போன்ற தனிமங்கள் உண்டாகின்றன. இவ்வாறாக, தொடர்வினையின் இறுதியில் இரும்பு உண்டாகும் போது வெப்பநிலை 3.5 பில்லியன் டிகிரி செல்ஸியஸ் வரை எகிறிவிடுகிறது. இரும்பு மட்டுமே மிஞ்சி மேற்கொண்டும் எரிய ஒன்றுமில்லாமல் நெருக்கடியாகி நிலமை கட்டுக்கடங்காமல் போய் ஒரு சாதா நட்சத்திரம் ’சூப்பர்நோவா’ என்றழைக்கப்படும் வெடிநட்சத்திரமாகி தீப்பந்தாக வெடித்துச் சிதறுகிறது [அ.கு.8].
ஒரு நட்சத்திரம் சூப்பர்நோவா ஆக சுமார் நான்கு பில்லியன் வருடங்கள் ஆகலாம். ஒரு சராசரி சூப்பர்நோவாவின் வெப்பம் சுமார் நான்கு பில்லியன் சூரியன்களுக்குச் சமம். அப்போது ஏற்பட்ட கடும் வெப்பம் இரும்பையும் எரிக்கப் போதுமானதாகி இரும்பு உட்கரு எரிந்து இணைந்து மேற்கொண்டும் புதிய தனிமங்கள், கதிர் வீச்சுத் தனிமங்கள் உண்டாகின்றன. ஒரு சராசரி நட்சத்திரத்தின் எளிமைப்படுத்திய வாழ்க்கைச் சுருக்கம் இதுவே. வயசைப் பொருத்து ஒரு நட்சத்திரம் சிவப்பு ராட்சதன் (Red Giant) அல்லது வெள்ளைக் குள்ளன் (White dwarf) என அழைக்கப்படலாம்.
இவ்வாறு வெடித்துச் சிதறிய சில/ பல வயசான நட்சத்திரங்களிலிருந்து சுமார் 4.5 பில்லியன் (4.5 x 108) வருடங்களுக்கு முன் நம் சூரியக் குடும்பம் பிறந்தது. முதலில் மையத்தில் அதிக அழுத்தமுள்ள வாயுக்களால் ஆன மிக அதிக வெப்பநிலை கொண்ட சூரியன் பிறந்து ‘சூரியநெபுலா’ என்றறியப்படும் சுற்றிக்கொண்டிருக்கும் தட்டாகியது. இதன் மையத்திற்கு வெளியே தெறித்த நெருப்புப்பந்துகள் (ஒன்றோடொன்று) மெதுவாக மோதினால் இனணவதும் வேகமாக மோதினால் உடைந்து சிதறுவதுமாக கொஞ்ச காலம் கழிந்தது. ஈர்ப்பு விசை காரணமாக இக்கோள் துணுக்குகள் (planetisimals) இணைந்து இணைந்து கூழாங்கற்கள் அளவாகி இவைகள் இணைந்து பெரும் கற்களாகி பின் அவை இணைந்து மிகப்பெரும் மலைகளாகி ஒன்றோடொன்று முடிவற்று மோதிக்கொண்டு பிரபஞ்ச வெளியில் சுற்றிக் கொண்டிருந்து முடிவில் கோள வடிவமுள்ள மார்ஸ் மெர்க்குரி (புதன்), வீனஸ்(வெள்ளி), எர்த் (பூமி) மற்றும் மார்ஸ் (செவ்வாய்) ஆகிய கடினமான பாறைகளால் ஆன கோள்களாக மாறின. இவற்றிற்கு வெளியே பாறைகளற்ற வாயுக்களால் ஆன ஜூபிடர் (வியாழன்), சட்டர்ன் (சனி), யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் தோன்றின(7).
பிறந்த புதிதில் பூமி ஒருபிரம்மாண்டமான பாறைக்குழம்புப் பெருங்கடலாக(magma ocean) தகித்துக் கொண்டிருந்தது. 4.5 பில்லியன் வருடங்களுக்குப் பிறகும் முழுக்கக் குளிர்ந்து விட முடியாத ஒன்றாக. எரிமலை வெடிப்பு, தொடர்ந்த எரிகற்களின் தாக்குதல் ஆகியவற்றால் பெரும் போர்க்களமாக இருந்தது புதிய பூமி. தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றும் ஈர்ப்பு விசை காரணமாக கொதிக்கும் எரிமலைக் குழம்பு அடர்த்திக்குத் தக்கவாறு பிரிந்து இடம் மாற ஆரம்பித்தது. இரும்பு, நிக்கல் ஆகிய எடைமிகுந்த தனிமங்கள் கொண்ட குழம்பு மையத்தைநோக்கிச் செல்ல எடை குறைந்த தனிமங்களின் பாறைக்குழம்பு இன்னும் அடர்த்தி குறைந்த பொருள்கள் இதன் மீதும் உறைபோலச் சூழ்ந்தன. இன்னும் எடை குறைந்த நீராவி, மற்றும் இதர வாயுக்கள் பூமியைச்சுற்றிப் படர்ந்தன.
இப்போது நிலாவைப் பற்றி ஒரு குட்டிக்கதை. நிலாவுக்குப் போனவர்கள் கொண்டு வந்த கற்களின் கதிர்வீச்சை அளந்து கணக்கிட்டுப் பார்த்ததில் பூமியை விட 15 மில்லியன் வருடங்கள் குறைவு என்று நிலாவின் வயதுக் கணக்கு உதைக்க, பூமி தோன்றி 15 மில்லியன் வருடங்களுக்குப் பிறகே பூமிக்கு அருகில் நிலா வந்து சேர்ந்தது என்பது ஒரு கருத்தாக்கமாக முன்வைக்கப் பட்டு இன்று பல ஆதாரங்களுடன் பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டடுள்ளது. பூமி தோன்றி 15 மில்லியன் வருடங்களுக்குப் பிறகு பூமியின் மீது நிலா வந்து பிரம்மாண்டமாக மோதியதில் பூமியும் நிலாவும் இணைந்து பூமியே பெரிதாகி அதன் ஒரு பகுதி உடைத்து எறியப்பட்டு அந்தத்துண்டு தான் நிலாவாகியது என்பது சமகால வனவியல் நம்பிக்கை. நிலாவின் ஈர்ப்பு விசையே பூமியை அதிர்ந்து ஆடாமல் சுமுகமாக சுற்றவைக்கிறது என்பதாலும், பூமியில் இன்று நாம் காணும் பருவகால மாற்றங்கள் தோன்றக் காரணம் நிலா பூமியின் மீது மோதிய தாக்கத்தினால் பூமியின் சுற்றும் அச்சு நிரந்தரமாக சற்றே சாய்ந்துவிட்டதே என்பதாலும் நிலாவுக்கு நிச்சயம் நாம் நன்றி சொல்ல வேண்டும் [அ.கு-9].
நெருப்புப்பந்தான பூமி மேற்பரப்பில் இறுகினாலும் அடியாளத்தின் மையத்தில் கொதிக்கும் எரிமலைக்குழம்பாகவே இன்றும் இருக்கிறது. உருகிய இரும்பு, நிக்கல் போன்ற எடை மிகுந்த உலோகங்களின் எரிமலைக் குழம்பாலான பூமியின் மையக்கரு நிலாவைப் போல இருமடங்கு பெரியது. இது பூமியின் மையத்தில் எப்போதும் தத்தளித்துச் சுழன்று கொண்டுள்ளதால் பூமியே ஒரு பிரம்மாண்டமான மின்காந்தமாகி, பூமியின் வெளிப்புறத்தை மின்காந்தப்புலம் (electromagnetic field) கண்ணுக்குத்தெரியாத உறை போலச் சூழ்ந்துள்ளது [அ.கு-10].
பிரம்மாண்டமான அணு உலையான சூரியனின் வெடிப்பிலிருந்து கிளம்பி பூமியையே நொடியில் சுடுகாடாக்கிவிடும் வல்லமை கொண்ட மின்காந்தப்புயலில் ஆவியாகிவிடாமல் தப்பிப்பிழைத்து டிவியில் நாம் கிரிக்கெட் பந்தயம் பார்க்க முடிவதற்கு, பூமியை பாதுகாப்புக்கேடயமாகச் சூழ்ந்திருக்கும் இந்த மின் காந்தப்புலமே காரணம். பூமியை விட 11 மடங்கு பெரிய ராட்சத ஜூபிடர் கிரகம் அதிகமான ஈர்ப்பு விசைகொண்டது என்பதால் பூமிமேல் மோத வரும் எரிகற்களை காந்தம் போல ஈர்த்துக்கொண்டு பூமியின் மெய்க்காப்பாளன் போல இருப்பது இன்னொரு காரணம்.
பூமியை விடவும் சிறியது என்பதாலும் சூரியனை விட்டு விலகி இருப்பதாலும் உட்கருவின் எரிமலைக் குழம்பு சீக்கிரமே ஆறி இறுகி சுழற்சியற்று விட்டதால் தன் மின்காந்தப் புலத்தை இழந்து விட்டது என்பது செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் நீர் இருந்ததற்கான தடயங்கள் தென்பட்டாலும் உயிரிகள் அற்று இருப்பதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது [8].
முதல் உயிரியின் தோற்றம்
உயிர்ப் பொருள்கள் உருவாக முக்கியத் தேவைகள் நீர், மற்றும் கரிம மூலக்கூறுத் தொடர்கள்.
நீரின்றி அமையாது உயிர். நம் உடலின் பாதிக்குமேல் இருப்பதும் பூமியின் முக்கால்வாசியை மறைத்திருப்பது தண்ணீரே. நீர் கரைப்பானாகச் செயல்பட்டு இதர மூலக்கூறுகள் தம் செயல்களைச் செய்ய உதவுகிறது.
பூமியின் மேற்பரப்பை முக்கால்வாசி மூடும் அளவுக்கு நீர் எப்படி வந்தது? பூமியின் ராட்சத எரிமலைகளிலிருந்தும் வெளியேறிய நீராவி பிரம்மாண்ட மேகங்களாகிச் சூழ்ந்தது. வெளிப்புற வெப்பம் குறையத்தொடங்கி மேகக்கூட்டதின் நீராவி குளிர்ந்து பெருமழையாகப் பிரவாகமெடுத்துப் பொழிந்தது. பூமியின் மீது விழுந்த பனிக்கட்டியாலான பிரம்மாண்டமான எரிகற்களின் வழியாகவும் பூமியின் மேற்பரப்பில் நீர் சேர்ந்திருக்கக் கூடும். 4.3 பில்லியன் வருடம் பழையது என்று நிர்ணயிக்க முடிகிற ஸிர்கோன்(zircon) கற்படிகங்களில் இருக்கும் (நீரில் இருந்து மட்டுமே வந்திருக்கக்கூடிய) கதிரியக்க ஆக்ஸிஜனை வைத்து 4.3 பில்லியன் வருடங்களுக்கு முன் திரவ நிலையில் பூமியில் நீர் இருந்திருப்பதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில பெரும் எரிகற்கள் பூமியில் விழுந்த போது கடல் நீரை ஆவியாக்குமளவுக்கும் ஒருவேளை ஏற்கனவே உயிர்கள் இருந்தால் அவற்றைப் பூண்டோடு அழித்து நீக்கும் அளவுக்கும் கடும் வெப்பம் ஏற்பட்டது. சுமார் 3.8 வருடங்களுக்கும் முன் முதல் உயிரி தோன்றியிருக்கலாம் என்றாலும் பூமியின் மேற்பரப்பு தொடர்ந்த எரிகற்களின் தாக்குதலுக்கு உள்ளாகி நொறுங்கி சேதமடைந்து வந்ததால் புவியின் மூல மேற்பரப்பு பாதுகாக்கப் படவில்லை என்பதால் தொன்மையான கற்படியுருவங்கள் பெரும்பாலும் பாதுகாக்கப் படவில்லை. 3.5 பில்லியன் வருடங்களுக்கு முந்தைய நுண்ணுயிரியின் கற்படியுருவங்கள் கடந்த பிப்ரவரி மாதம் கண்டெடுக்கப்பட்டுள்ளன (9).
முதல் உயிரி பூமியில் எவ்வாறு தோன்றியது என்று விளக்கி அலெக்ஸாண்டர் ஒபாரின் (1924) மற்றும் ஜான் ஹால்டேன் (1929) ஆகியோர் முன்வைத்த கருத்தாக்கங்களை எளிமை கருதி பின்வருமாறு சுருக்கலாம்: எளிய கரிம மூலக்கூறுகள் படிப்படியான மாறுதலுக்கு உட்பட்டு பெரிய சிக்கலான மூலக்கூறுகளாகி அவை எண்ணெய்த்துளிப் படலங்களால் சூழ்ப்பட்டு சுற்றுப்புறத்திலிருந்து பிரிக்கப்பட்டு உயிருள்ள ஸெல்களாயின.
கொதிநீர் கொப்பளிக்கும் வெந்நீர் ஊற்றுக்களின் மிக அதிக வெப்பநிலையில் (80 ° செல்ஸியஸ்) வாழும் வெப்பவிரும்பி (10) நுண்ணுயிரிகள், மற்றும் (அழுகிய முட்டை போல நாறும்) சல்பர் டையாக்ஸைடு மிகுந்த குகைகள், கடலடி எரிமலைகள், போன்ற இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சல்பர் டையாக்ஸைடு வாயுவை உணவாகக் கொள்ளும் நுண்ணுயிரிகள்(11) ஆகியவை பூமியின் ஆதிகால உயர் வெப்ப, சல்பர் டையாக்ஸைடு போன்ற நச்சு வாயு மிகுந்த சூழலில் உயிரிகள் தோன்றி நிலைபெற்று இருந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகளை உறுதி செய்கின்றன.
உயிரிகளின் ஸெல்களில் அமைப்பு (தசை) மற்றும் இதர பணிகளைச் செய்யும் வேதிவினை நிகழ்த்தும் நொதிகள் புரதங்களே. புரதங்கள் அமினோ அமிலங்களின் சங்கிலித்தொடர்களால் ஆனவை. உயிரின் ஆதாரமான புரதங்கள் உட்கரு அமிலங்கள் எப்படித்தோன்றின என்ற கேள்விக்குப் பதில் தேடி1953-ஆம் ஆண்டில் சிகாகோ பல்கலையின் ஆராய்சி மாணவரான ஸ்டான்லி மில்லர் ஒரு முக்கியமான பரிசோதனையைச் செய்தார். இரண்டு கண்ணாடி அறைகளை ரப்பர் குழாய்கள் மூலம் இணைத்து ஒரு அறையில் தண்ணீரைக் கொதிக்கவைத்து வெளியேறும் நீராவியை ஹைட்ரஜன், மீத்தேன், மற்றும் அம்மோனியா ஆகிய வாயுக்களால் நிரப்பிய இன்னொரு அறைக்குள் செலுத்தி உயர் மின்னழுத்தம் மூலம் மின்பொறிகளை ஏற்படச் செய்தார்(பார்க்க படம்). பூமிதோன்றிய ஆதி காலத்தின் வளிமண்டலத்தை மறு உருவாக்கம் செய்து அதில் உயிரின் அடிப்படைக்கான மூலப்பொருள்கள் உண்டாகிறதா என்று பரிசோதிப்பது அவரின் நோக்கம். இவ்வினையில் உண்டாகும் பொருள்கள் குளிர்ந்து சேகரமாகி திரும்பவும் கொதித்து அதன் நீராவி வாயு அறைக்குள் சென்று, என்ற தொடர்வினையை ஒரு வாரம் நிகழ்த்தி முடிவில் மீந்த கலவையை ஆராய்ந்து பார்த்ததில் சில சந்தோஷமான ஆச்சரியங்கள். புரதங்களின் அடிப்படைக் கூறான கிளைஸின், அலனைன், போன்ற அமினோ அமிலங்கள் தவிர பியூட்டிரிக் ஆமிலம் ஆகியவை அதில் இருந்தன(12).
மில்லரின் பரிசோதனையில் விளைந்த கலவையை மில்லரின் மாணவரான ஜெஃப்ரி பாடா சுமார் ஐம்பது வருடம் கழித்து சமீபத்தில் நவீனக் கருவிகள் கொண்டு சோதித்துப் பார்த்ததில் மில்லர் பதிவுசெய்ததைவிடவும் இன்னும் அதிமான அமினோ அமிலங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது (13).
பாடா இன்னொரு பரிசோதனையையும் செய்தார். மில்லரின் பரிசோதனையில் இல்லாத பூமியின் ஆதிவளிமண்டலத்தில் இருந்த ஹைட்ரஜன் சல்பைடு வாயுவையும் சேர்த்து இப்பரிசோதனைகளைச் செய்ததில், மில்லரின் பரிசோதனைக் கலவையில் இல்லாத கந்தக அணுக்களைக் கொண்ட இதர அமினோ அமிலங்களும் உண்டாவது உறுதி செய்யப்பட்டுள்ளது(13).
அமினோ அமிலங்கள் இணைந்து முதல் புரதச் சங்கிலிகள் உருவாகும் இடமாக வெந்நீர் ஊற்றுகள் இருந்திருக்கக் கூடும். பூமியில் உண்டாகிய உயிரின் மூலப் பொருள்களைப் போல பூமியில் இன்றும் தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும் எரிகற்கள், எரிநட்சத்திரங்கள், வால்நட்சத்திரங்கள் (14) ஆகியவற்றிலிருந்தும் முதல் புரதங்கள் உருவாகத் தேவையான மூலப் பொருள்கள் பூமிக்கு வந்திருக்கக் கூடும். சில எரிகற்கள் அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளன என்பதும், எரிகற்கள் பூமியில் விழும்போது ஒப்பிடத்தக்க மிக அதிக அழுத்தத்தில் வெப்பத்திற்கு அமினோ அமிலங்களின் கரைசலை உட்படுத்திப்பார்த்ததில் அமினோ அமிலங்கள் சேதமடையாமல் இருப்பதுடன் அவை இணைந்து அமினோ புதிய அமிலத் தொடர்கள் தோன்றமுடியும் என்பதும் பரிசோதனையில் நிரூபிக்கப் பட்டுள்ளது (15).
ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் கொஞ்சூண்டு எண்ணையை ஊற்றி அதை நன்றாகக் கலக்குங்கள். எண்ணெய் நுண் துளிகளாகப் பிரிந்து மிதக்கிறது. ஒரு பத்து நிமிடம் பொறுத்திருந்தால், இச்சிறு துளிகள் இணைந்து ஒரு பெரிய துளியாக மாறுவதைப் பார்க்கலாம். ஒரு எல்லைவரை குறிப்பிட்ட ஒரு ஒழுங்கில் தன்னைத்தானே வடிவமைத்துக் கொள்ளும் அடிப்படைத் திறன் பொருள்களுக்கு உண்டு. உயிரிகளின் ஸெல்களை உறைபோலச் சூழ்ந்திருக்கும் ஸெல்சவ்வின் பெரும்பகுதி இதைப்போன்ற கொழுப்பு அமிலங்களால் ஆகியதே.
பூமியின் பரப்பில் நின்ற நீர் ஆவியாகி காலப்போக்கில் மூலக்கூறுகள் அடர்ந்த கரைசலாகித் தேங்கியது. மின்கவர்ச்சி ஈர்ப்பு காரணமாக எளிய தனி மூலக்கூறுகள் பூமியின் சகதியின் தாதுக்களில் (எ.கா. montmorillonite) ஒட்டிக்கொண்டு எளிய மூலக்கூறுகள் இணைந்து நீண்ட சங்கிலித்தொடர்கள் உண்டாகும் வினை நிகழ முடியும் என்பதும், நீளமான சங்கிலித்தொடர் மூலக்கூறுகள் எளிய தனி மூலக்கூறுகளை விட இன்னும் உறுதியாக சகதியின் தாதுக்களில் ஒட்டிக்கொள்கின்றன என்பதும் பரிசோதித்து நிறுவப்பட்டுள்ளது(15). இவ்வாறாக எளிய மூலக்கூறுகளின் சங்கிலித்தொடர்களான உட்கரு அமில மரபுப் பொருங்கள், புரதங்கள் உண்டாகியிருக்கக் கூடும். இவ்வாறு நீளமாக வளர்ந்த புரதச்சங்கிலிகள் சிக்கலான முப்பரிமாண வடிவங்களைப் பெற்று படிப்படியாக முன்னேறி வினையாற்றும் திறன் பெற்று புதிய மூலக்கூறுகளின் சேர்க்கைக்கு உதவியிருக்கக் கூடும். தன்னைப் போல இன்னும் நிறைய மூலக்கூறுத் தொடர்களைத் உருவாக்கும் திறன் பெற்ற மூலக்கூறுகள் எண்ணிக்கையில் அதிகரித்துப் பெருகி நிரம்பியிருக்கக் கூடும்.
இதுபோல மூலக்கூறுகளின் கலைவைகளால் ஆன அடர்தியான துளிகள் நுண்ணிய கொழுப்பு அமிலங்களினால் ஆன சவ்வினால் சூழப்பட்டு காலப் போக்கில் மாறி மாறி முன்னேறி முதல் உயிர்ப்பொருள்(கள்) தோன்றியிருக்கக் கூடும். முழுக்கவும் அசல் போல இல்லாவிட்டாலும் ஏறக்குறைய தன்னைப்போல நிறைய பிரதிகளை உண்டாக்கும் ஆரம்பநிலை ஸெல்கள் போன்ற அமைப்பு உண்டாகி அவற்றுள் அப்போது நிலவிய சூழலுக்குத் தகுந்த பிரதிகள் மட்டுமே இயற்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டு பெருக ஆரம்பித்து இவைகளில் மேலும் எண்ணற்ற ’தற்செயலான மாற்றங்கள்’ காலப்போக்கில் சேர்ந்து சேர்ந்து ஒரு கால கட்டத்தில் ’உயிர்த்தன்மை’ உள்ள ஸெல்களாக மூதாதை நுண்ணுயிரிகள் உண்டாகியிருக்கலாம்.
உயிரிகளின் தோற்றம், பரிணாமம் இவற்றில் ’திடீர் தற்செயலான மாற்றங்களின்’ முக்கியத்துவத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக 65 மில்லியன வருடங்களுக்கு முன் பூமியின் பரப்பையே ஆண்ட ராட்சத டைனோஸார்கள் ஒன்று ஒன்று கூட இல்லாமல் ஆகிவிட்டதை உதாரணமாகச் சொல்லலாம்(15). எளிமை கருதி உயிரியின் மரபுப்பொருள்கள் எவ்வாறு தோன்றின என்பது போன்ற சிக்கலான ஆழத்துக்குச் செல்லாமல் பொதுவான அடிப்படைப் புரிதலோடு நிறுத்திக்கொள்வோம்.
ஆதிகாலச் சூரியன் இன்று உள்ளதை விட 30% மங்கலாக இருந்தது என்று கணக்கிடப்பட்டிருந்தாலும் ஆதி நுண்ணுயிரிகளிலிருந்து ஒளிச்சேர்க்கை செய்யும் நிறமிகளைக் கொண்ட நீலப்பச்சைப் பாசிகள் உண்டாகி பெருகி வளர்ந்த பிறகு பூமியில் மிக முக்கியமான ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஒளிச்சேர்க்கையின் போது கழிவாக வெளியேறும் உயிர்வாயு (oxygen) வளிமண்டலத்தில் சேகரமாகி ஆகி அதன் அளவு 1 % லிருந்து இன்று உள்ளது போல 22 % வரை கணிசமாக உயர்ந்தது. ஆக்சிஜன் வளிமண்டலத்தில் சேர்ந்தது உயிரிகளின் பரிணாமத்தில் மிக முக்கியமான மாற்றமாகும்.
இவ்வாறாக பிற்காலத்தில் ஆக்சிஜன் சுவாசம் மூலம் இயங்கும் நுண்ணுயிரிகள், சுவாசிக்கும் விலங்குகள் தோன்றிப் பெருக வழி செய்தது மூதாதையான நீலப்பச்சைப் பாசிகளே. ஒரு ஸெல் உயிரியிலிருந்து பலஸெல் உயிரிகள் தோன்றியது, பலஸெல் உயிரிகளிலிருந்து புழுக்கள், பூச்சிகள், மீன், தவளைகள், ஊர்வன மற்றும் குரங்குகள் வழி பரிணாமமடைந்து மனிதன் தோன்றியதை பின்னொருசமயம் இன்னொரு கட்டுரைத் தொடரில் விரிவாகப் பார்ப்போம்.
இப்போது முக்கியமான ஒரு கேள்வி. பூமியைப்போல பல கோடி நூறாயிரம் கோள்கள் நட்சத்திரக் குடும்பங்கள் நிறைந்த பிரபஞ்சப் பெருவெளியில் நாம் மட்டும் தான் இருக்கிறோமா? அல்லது பிரஞ்சத்தின் வேறோர் மூலையிலில் இன்னும் வேறு உயிரிகள் நம்மைப் போலவே கட்டுரை எழுதிக்கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கின்றனவா?
வீட்டுக்குள் புழுங்காமல் பவர்கட் ஆன இரவொன்றின் கும்மிருட்டில் மொட்டைமாடிக்குப்போய் வானத்தைப் பார்த்துக்கொண்டு இந்தக் கேள்வியை நிதானமாக யோசித்துப் பாருங்கள்.
உதவியவை & மேலும் படிக்க
1. Gardner, E.J., 1972. History of biology, Burgess publishing company, Minneapolis.
2. ”கற்பனை, தர்க்கம், தியானம்” -ஜெயமோகன், 2009. இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள், தமிழினி பதிப்பகம், சென்னை. (தியானம் உள்ளுணர்வு சார்ந்தது என்பதால் அதை உள்ளுணர்வாகவே சொல்லத்துணிந்தேன்)
3. “Imagination runs through the critique of practical reason as it’s mostly
concealed and silent but nevertheless guiding thread”….“And as synthesis is the mere result of power of imagination, imagination is the heartbeat of all three critiques”. Freydberg, B., 2005, Imagination in Kant’s critique of practical reason, Bloomington: Indiana university press.
4. Tagish Lake meteorite, http://en.wikipedia.org/wiki/Tagish_Lake_(meteorite), மீட்டியோரைட் மீட்டெடுக்கும் ஒளிப்படங்களை இங்கே காணலாம்.
5. பூமியின் ஆழ்மையத்தின் வெப்பநிலை
6. சூரியனின் ஆழ்மையத்தின் வெப்பநிலை
7. Pluto is not a planet, only a dwarf planet
8. Origins, PBS documentarty on origin of universe and life, WGBH, Boston
9. 3.5 பில்லியன் வருடங்களுக்கு முந்தைய நுண்ணுயிரியின் கற்படியுருவங்கள் கண்டெடுப்பு
12. மில்லரின் ஆராய்சிக்கட்டுரை, “Production of Amino Acids Under Possible Primitive Earth Conditions”
13. ஜெஃப்ரி பாடாவின் பரிசோதனை
14. தினமும் 200 டன் எடைக்கும் அதிகமான விண் பொருள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன. Burnham, R., 2007, Children’s atlas of the universe, McMahons Point: Weldon Owen.
15. Bada, J.L., 2004, How life began on Earth: a status report, Earth and Planetary Science Letters, 226, p1-15.
அடிக்குறிப்புகள்:
[அ.கு-1] பாஸ்ச்சர் பயன்படுத்தியது ஈஸ்ட் (புரதச்சத்து) சேர்த்த சர்க்கரைக் கரைசல் என்று சில நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. (எ.கா. நூல் – 1)
[அ.கு-2] இப்போட்டியில் 1859-ஆம் ஆண்டில் பொஷே (Felix A. Pouchet) என்பவரும் பங்கேற்று உயிரிகள் தானாகவே தோன்றுவதில்லை என்பதை ஏறக்குறைய நிரூபித்திருந்தார். தன் பரிசோதனைகளின் மீதான கேள்விகளை முழுக்கவும் விளக்க முடியாததால் போட்டியிலிருந்து மன வருத்தத்துடன் விலகிக் கொள்ளும்படி ஆயிற்று.
[அ.கு-3] இதற்குப்பின் உணவைப் பதப்படுத்துதல், பதப்படுத்திய உணவை குப்பிகளில் அடைத்தல் ஆகிய தொழில் நுட்பங்கள் பெரும் பாய்ச்சலோடு வளர்ந்தன. பிரசவத்துக்காக பாரிஸ் மருத்துவமனைக்கு வரும் 19 கர்ப்பிணிகளில் ஒருவர் காய்ச்சல் கண்டு இறப்பது வழக்கமாயிருந்த இக்காலத்தில் பிரசவம் பார்ப்பதற்கு முன் கைகளையும், அறுவை சிகிச்சை ஆயுதங்களையும் 5% கார்பாலிக் அமிலம் மூலம் கழுவி கிருமி நீக்கம் செய்யும் நடைமுறை புழக்கத்தில் வந்து அறுவை சிகிச்சை நோயாளிகளின் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைக்கப் பட்டது. நொதித்தல் மூலம் பியர், வைன் ஆகியவை உண்டாவதையும் அதற்குக் காரணமான நுண்ணுயிரிகளையும் வைன் மது கெட்டுப் போவதற்கான நுண்ணுயிரிகளையும் விரிவாக ஆராய்ந்து அறிந்தார் பாஸ்ச்சர். இவ்வாறாக நுண்ணுயிரியியல் தனித்துறையாக வளர்ந்தது.
[அ.கு-4] இந்த வரிகள் எங்கிருந்து கிடைத்தது என்று கடுமையாக யோசித்துப் பார்த்தும் விடை கிடைக்கவில்லை. தெரிந்த வாசகர்கள் தயவு செய்து சொல்லவும் (இந்த மாதிரியெல்லாம் எழுதுமளவுக்கு ஒருவேளை வயதாகி வருகிறதோ என்று யோசிக்கையில் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது).
[அ.கு-5] நண்பரே! நீங்கள் சந்தேகித்தது போல் இங்கு நான் குறிப்பிடுவது கடவுளை அல்ல. ஒருவேளை இப்பிரபஞ்சத்தில் ஏதாவது ஒரு மூலையில் நம்மைப் விடப் புத்திசாலி உயிரினம் ஒன்று இருந்து இக்கட்டுரையைப் படித்துக்கொண்டிருந்தால் என்ன செய்வது? என்ற அவையடக்கத்தினாலேயே இப்படிச் சொல்ல வேண்டி வந்தது.
[அ.கு-6] நுண்ணோக்கி, தொலைநோக்கி, ரேடார் என புதிய கருவிகளை நாம் கண்டுபிடித்தது ஒரு வகையில் நம் புலன்களின் எல்லைகளை நீட்டிக் கொள்ளும் முயற்சியே.
[அ.கு-7] இந்த வரியை சுஜாதாவோ அல்லது வேறு யாரோ ஒருவேளை ஏற்கனவே எழுதியிருந்தால் அதன் காப்புரிமை அவருக்கே செல்லக் கடவது.
[அ.கு-8] ஆம்! நான் நீங்கள் மற்றும் இம்மானிடக்கூட்டம் முழுவதுமே ஒரு நட்சத்திரத்தின் சாம்பலின் துணுக்குகளே என்பதையறிக! (காஸ்மிக் தூசி என்ற சித்தர் எழுதியருளிய ”விண்மீனின் சாம்பலென” என்ற 18 ஆம் பாடல்).
[அ.கு-9] எப்பவோ வந்து மோதிய நிலா பூமியிலிருந்து வருடத்துக்கு 1.5 அங்குலம் வீதம் விலகிச் சென்று கொண்டிருக்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
[அ.கு-10] பூமியின் மின்காந்தப்புலம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இத்திரைப்படத்தில் காணலாம்: The Core