20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 11

புதிய அலையில் கலை வெளிப்பாடு
Art Nouveau 1880s- (New Art for a new Age)

இலண்டன் நகரில் தோன்றிய நுண்கலை, கைவினைக் கலைகளின் இயக்கம் (Arts and Crafts Movement) சார்ந்த கலைப்பாணி உலகின் பல நாடுகளுக்குப் பரவி விரிந்தது. பிரென்ச் மொழியில் Art Nouveau என்று விளிக்கப்பட்ட அது ‘புதுக் கலை’ என்று பொருள்படும். ஜெர்மனியில் பிறந்து, ஃபிரான்ஸ் நாட்டுக் குடிமகனான ஸீக்ஃப்ரீய்ட் பிங் (Siegfried Bing) என்ற கலைப் பொருள் வர்த்தகர் 1896 இல் தொடங்கிய தமது கடைக்கு ‘Maison de l`Art Nouveau Bing ( பிங் என்பவரின் புதிய கலை வர்த்தக வளாகம் ‘interior design Gallery’) என்று பெயரிட்டார்.

இதனால் இந்த புதிய கலைப்பாணி அந்தப் பெயரால் அறியப்பட்டது மட்டும் அல்லாமல், உலகில் பின்பற்றப்பட்ட அந்த வழிக்கெல்லாம் அடையாளச் சொல்லாயிற்று. ஆனால், ‘யூகெண்ட்’ (‘Jugend’- The Youth) என்னும் பத்திரிகையால் ஜெர்மனி நாட்டில் ‘ய்கெண்ட்ஷ்டீல் (‘Jugendstil’ அல்லது ‘Yellow Book Style’) என்றும், இத்தாலியில் ‘ஸ்டீலெ லிபர்டி’ (‘Stile Liberty’) அல்லது ‘ஃப்ளோரியால்’ (‘Floreale’) என்றும், ஸ்பெயின் நாட்டில் ‘மாடர்னிஸ்ட்’ (‘Moderniste’) என்றும், ஆஸ்திரியாவில் ‘செஸெஸியோன் ஸ்டில்’ (‘Sezession Stil’) என்றும், நாட்டுக்கு நாடு அதன் பெயர் வெவ்வேறாயிருந்தது.

01_gustav-klimtஓவியம், சிற்பம், கலை வடிவங்கள் (Art Objects), கட்டிடக்கலை, அணி கலன்கள் (Jewelery), இல்ல அலங்கரிப்பு (Home Decor), நெசவுக் கலை (Textile Designs), கண்ணாடிப் பண்டங்கள் (Galass ware) என்று அனைத்துக் கலைப் பிரிவுகளும் இந்த இயக்கத்தில் இடம் பெற்றன. 1900 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் நடை பெற்ற உலகச் சந்தையில் (Exposition Universelle{World Fair}) பன்னாட்டுக் கலைஞர்களின் பங்களிப்பால் இந்தப் பாணி பார்வையாளரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவ்வமயம் இங்கிலாந்தில் நிகழ்ந்த தொழிற் புரட்சிதான் இதன் ஊற்றுக் கண்ணாக அமைந்தது எனலாம். கலைஞர்கள் தமது படைப்புகளில் நடை முறைக்கு வந்திருந்த புதிய பொருள்களை (New Meterials) புதிய உத்திகளில் புகுத்தி முற்றிலும் நவீனமான படைப்புகளைக் கொடுக்கத் தொடங்கினர். என்றாலும் அவர் தமது கைத் தொழிலுக்கு முதன்மையளிப்பதில் உறுதியாக இருந்தனர்.

அவற்றில் ஜப்பான் நாட்டின் மரச்செதுக்கு அச்சுக்கலையும் (Wood block Prints), ‘கெல்டிக்’ பாணி (Celtic Art) யின் பின்னிப் பிணைந்த கோடுகளும், ‘காதிக்’ (Gothic) கட்டிட அமைப்பின் எழில்மிகு வளைவுகளும், பிற நாட்டிலிருந்து பெறப்பட்ட பல்வகைக் கருத்தோட்டங்களும், ஆண்-பெண் உறவை (Erotic) முன்னிறுத்தும் கற்பனைகளும் இவ்வகைப் படைப்புகளுக்குத் தூண்டு கோலாயிருந்தன. அதை மரபு சார்ந்த வழியிலிருந்து விலகி கலைஞர்கள் செய்த புரட்சி என்றுதான் சொல்லவேண்டும். ஒவியர்களும் சிற்பிகளும் கைவினைக் கலைஞர்களாகவும் இருப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டினர். அவ்வாறு அறியப்படுவதில் பெருமை கொண்டனர். பாரிஸ் நகரில் ‘ஹோனே ஜூல் லலீக்க’ (René Jules Lalique) என்னும் கலைஞரின் புதிய கலைவடிவம் கொண்ட அணிகலன்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. ‘ஸாரா பெர்ன்ஹார்ட்’ (Sarah Bernhardt) என்னும் திரைப்பட நடிகை அவரது பிரதான நுகர்வோராக விளங்கினார்.

இந்தக் கலைப் படைப்புகளில் பறவைகள், பல்வகைப் பூச்சி வகைகள், மலர்கள் இவற்றுடன் கனவுலக நூதன உருவங்களும் (Fantasy Creatures) பெருமளவில் இடம் பெற்றன. கொடி, இலை, மலர், புல்வகைகள் போன்றவை மிகுந்த எழில் கொண்டவையாகவும் பின்னிப்பிணைந்த விதமாகவும் வடிவமைக்கப் பட்டன. ஆனால் அவற்றில் முப்பரிமாணத் தோற்றம் அகற்றப் பட்டு, தட்டைத் தன்மை கொண்டவையாக அவை படைக்கப்பட்டன.

lctiffany1912 இல் ‘லலீக்க’ கண்ணாடிக் குப்பிகள் வடிவமைக்கும் தொழிற் சாலையைத் தொடங்கினார். அதில் நறுமண திரவக் கலவைக்கான குப்பிகள், மலர் ஜாடிகள், பல்வகை விளக்குகள் போன்றவைகளை இந்த புதிய வடிவங்களுடன் உற்பத்தி செய்யத் தொடங்கினார். அவை மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன. அவற்றின் படைப்பு இரகசியத்தை கண்டுபிடிக்கப் பலரும் முயன்று தோற்றனர். 1945 இல் ‘லலீக்க’ காலமானார். 1970 கள் வரை கலை உலகில் அவர் காணாமல் போனார். பின்னர் கலை ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் அவரை மீட்டெடுத்து அவரது தொழில் நுட்பம், கலை உன்னதம் ஆகியவற்றைப் போற்றி சொல்லத் தொடங்கினர். அமெரிக்காவில் இந்தப் பாணியைப் பரப்பியவர்களில் ‘வில்லியம் மோரிஸ்’ (William Morris) என்னும் கலைஞர் முதன்மையானவனாகக் கொள்ளப்படுகிறார். இந்தப் பாணியில் ஓப்ரே பியர்ட்ஸ்லி (Aubrey Beardsley), குஸ்டாவ் க்ளிம்ட் (Gustav Klimt), டுலோஸ லுட்ஹைக் (Toulouse Lautrec), அல்ஃபோன்ஸ் மூஹ்ஹா(Alphonse Mucha), லூயி கம்ஃபர்ட் டிஃபனி (Louis Comfort Tiffany), போன்ற ஓவியர்கள் கவனத்துக் குரியவர்களாவர்.

கட்டிடக்கலைஞர் ரென்னி மெக்கின்டோஷ் (Rennie Mackintosh), மெக்டானால்ட் (MacDonald) சகோதரிகள் ஆகியோர் இங்கிலாந்தில் இந்த உத்திக்கு முன் மாதிரியாக விளங்கினர். கோடுகளை முன்நிறுத்தும் வடிவங் களில்தான் (Illustrations) இந்த உத்தி பெரிதும் வெற்றியடைந்தது. யெல்லோ புக் (Yellow Book), ஸ்டூடியோ (Studio), சவாய் (Savoy), ஹாபி ஹார்ஸ் (Hobby Horse) போன்ற இதழ்களும் அச்சகங்களும் அவற்றை அச்சேற்றி மக்களிடையே பரிச்சயப் படுத்தின. ஆனால் இதன் புகழும் செல்வாக்கும் முதல் உலகப் போருக்குப் பின் வலுவிழந்து போனது.

‘யூகெண்ட்ஷ்டீல்’
JUGENDSTIL

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக் கத்திலும் ஜெர்மன் மொழி பேசப்பட்ட ஐரோப்பிய நிலப்பகுதிகளின் கலைஞர் களின் புதிய உத்தியான இது ஆர்ட் நுவோ (Art Nouveau) வைப் பெரிதும் ஒத்திருந்தது. கட்டிடக் கலை, அலங்காரக் கலை (Decorative Art) களில் ஒரு புதிய அணுகுமுறையினை அக் கலைஞர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். Jugendstil என்னும் ஜெர்மன் சொல்லுக்கு ’இளைஞர் பாணி’ என்று பொருள்.

ஜெர்மன் நாட்டின் முன்சென் நகரம் (Munich) இதன் மையமாக விளங்கியது. 1896இல் இச் சொல் ‘யுகெண்ட்’ (‘jugend’) என்னும் வார இதழின் ஆசிரியர் கெயொர்க் ஹெர்த் (George Hirth) என்பவரால் முதலில் பயன்படுத்தப் பட்டது. ஜெர்மனியின் மரபு அச்சுக்கலையால் ஈர்க்கப்பட்ட கலைஞர்கள் அதன் தெளிவான கோடுகள், பிசிரற்ற வடிவங்கள் போன்றவற்றை உள்வாங்கிக்கொண்டு அவற்றை இருக்கை, மேசை போன்ற பல்விதப் பயன்பாட்டுப் பொருள்களிலும், கட்டிடங்களிலும் பொருந்தும் விதமாகப் புகுத்தினர். ஓவியர்களும் அதில் வயப்பட்டு கேலிச் சித்திரம் (Cartoon), விளம்பரம் ஆகியவற்றில் உருவங்களையும் எழுத்துக்களையும் இணைத்து ஒரு கவர்ச்சியும் புதுமையும் கொண்ட உத்தியைப் புகுத்தினர். அதன் காரணமாக, கலைப்படைப்பில் ஒரு புதிய பார்வை கிடைத்தது. த்ரெஸ்டன், முன்சென், ஃப்ஹாங்க்ஃபர்ட் (Dresden, Munich, Frankfurt) போன்ற நகரங்களில் இந்தப் பாணியில் புதிய கட்டிடங்கள் எழும்பின. பல பிரபலமான நிறுவனங்கள் இவ்வகைப் படைப்புகளை உலகெங்கும் ஏற்றுமதி செய்து இதன் சிறப்பை அறியச் செய்தன. அது ஐரோப்பிய நிலப்பகுதி முழுவதும் பரவியது. அப்போது பெரும்பாலான ஓவியர்கள் பின்பற்றின தத்ரூபப் பாணியிலிருந்து பெரிதும் வேறுபட்டனர்.

மரபை மறுத்த புதிய குழு

Vienna Secession (1897-1939)(Austrian Artist Movement)

‘பிளவுபட்ட வியன்னா’ (Vienna Secession) என்று அழைக்கப்பட்ட குழுவின் தோற்றம், வியன்னா அகாதமி பழமைவாதத்தைப் பின்பற்றியதன் காரணமாக, அதன் உறுப்பினர்களில் ஒரு பகுதியினருக்கு (மொத்தம் 40 பேர்) ஏற்பட்ட வெறுப்பின் விளைவாக நிகழ்ந்தது.

koloman-moser1897ஆம் ஆண்டு ஓவியர் ஆடோ வாக்னெர் (Otto Wagner) அவரது மாணாக்கர், ஓவியர்கள் குஸ்டோவ் க்ளிம்ட், கொலோமன் மோசெர் (Gustav Klimt, Koloman Moser) இவர்களுடன் இன்னும் பல கலைஞர்கள் ஒருங்கிணைந்து அந்தப் புதிய கலை அமைப்பைத் தொடங்கினார்கள். அக்குழுவின் முதல் தலைவராக ஓவியர் குஸ்டோவ் க்ளிம்ட் செயற்பட்டார். அவரது கண்களுக்கு, அகாதமி பின் பற்றிய கட்டுப்பெட்டித்தனமான அணுகுமுறை மக்களிடமிருந்து கலையை தனிமைப் படுத்துவதாகத் தோன்றியது. அதன் காரணமாக, மரபை விடாது பின் பற்றிய பழமைவாதிகளின் பிடியிலிருந்து கலையை விடுவித்து, அதை மக்களுக்கானதாக மாற்றுவதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டு இளைய தலைமு¨றைனர் நுண்கலையின் எதிர்காலத்தை முடிவுசெய்யப் புறப்பட்டனர்.

நுண்கலை, கைவினைக்கலை இரண்டுக்கும் புத்துயிர் கொடுத்து, கட்டிடங்கள், மேசை நாற்காலி போன்ற இல்லப் பயன்பாட்டுப் பொருள்கள் (Furniture), கண்ணாடிப் பொருள்கள், உலோக அலங்காரப் பண்டங்கள், உடைகளில் புதிய வடிவத் தோற்றங்கள், என்பதாக அனைத்திலும் அரூபமும், புதுமையும் கொண்ட படைப்புகளை உருவாக்குவது என்று அவர்கள் செயற்படத் தொடங்கினார்கள். அவர்களுக்கு ஒரு தெளிவான கொள்கையோ, எழுத்துவடிவிலான செயற் திட்டமோ இருக்க வில்லையென்றபோதிலும் அவர்கள் ‘கலையே வாழ்க்கையாக’ (Art as Life)என்னும் நோக்கத்துடன் செயற்பட்டனர். ஓவியத்தையும் சிற்பத்தையும் ‘உன்னதமான கலை’ (Great Art) என்று பார்க்கப்பட்ட முந்தைய வழக்கத்தை மறுத்து, அவற்றுக்கும் கைவினைப் படைப்புக்கும் இருந்த ‘மேட்டுமைக் கலை’ ‘தாழ்ந்த கலை’ என்னும் பார்வையை நீக்குவதே அவர்களின் தலையாய கொள்கையாக இருந்தது.

அக்குழுவின் முதற் காட்சி (நவம்பர்-1898) தோட்டக்கலைப் பொறுப் பாளர்களின் வளாகத்தில் (Green houses of the Society of Horticulture) அமைந்தது. அதற்கென்று ஓவியர் குஸ்டோவ் க்ளிம்ட் ஒரு சுவரொட்டியை வடிவமைத்தார். அது குழுவின் பிந்தைய அனைத்து நிகழ்வுகளிலும் (அவர் குழுவில் இருந்தவரை) பயன் படுத்தப்பட்டது. பின்னர் படைப்புகளை காட்சிப்படுத்துவதற்கென்று ஒரு காட்சிக் கூடத்தை நிர்மாணித்தனர். குழுவின் உறுப்பினர் கூடி அதற்கென்று ஒரு உட்குழுவை அமைத்து அதனிடம் கட்டிட அமைப்பு, அதன் வடிவம் போன்ற வற்றை முடிவுசெய்யும் சுதந்திரத்தைக் கொடுத்தனர். முதல் காட்சியின்போது அச்சடிக்கப்பட்ட கையேட்டில் குழுவின் கொள்கையும் கோட்பாடும் முதல் பக்கத்தில் இருந்தன.

“எங்களது முந்தைய காட்சிகளில் பிறநாட்டு ஓவியர்களின் நவீனப் படைப்புகளும் இடம்பெற வேண்டியிருந்ததை வேதனையுடன் ஒப்புக் கொள்கிறோம். பொதுவாக ஓவியக் கலையின் வளர்ச்சி பற்றியும் நமது நாட்டில் அது எங்கே இருக்கிறது என்று நம்மிடையே ஒரு தெளிவு ஏற்படவும்தான் அதைச் செய்தோம். ஆனால், நிச்சயமாக அது ஒரு ஒப்பு நோக்குதலுக்கான செயற்பாடு அல்ல. எங்கள் குழுவின் குறிக் கோள் உறைந்து போன கலைப் பயணத்துக்கு புத்துயிர் கொடுத்து தொடங்கி வைப்பதுதான். மற்ற உலக நாடுகளுக்கு இணையான படைப்புகளை நாமும் படைக்க வேண்டும். எங்கள் காட்சி நிச்சயம் ஆவ்ஸ்திரியாவின் கலை உலகில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பது திண்ணம்.”

காட்சியில் ஆவ்ஸ்திரிய நாட்டின் தலைசிறந்த ஓவியர்களின் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. காட்சியின் மூலம் கிட்டிய தொகையைக் கொண்டு காட்சியில் இடம் பெற்றிருந்த பல ஓவியங்களை குழுவே வாங்கிக் கொண்டது. பின்னர் அவை பல பொதுக் காட்சிக் கூடங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்டன. அங்கு நுண்கலையும், கைவினைக் கலையும் இரு பகுதிகளாக சம அளவில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. குழு தனது நிகழ்வுகளைப் பதிவு செய்யும் விதமாக வெர் ஸாக்ரம் (‘Ver Sacrum’ – Sacred Spring) என்னும் ஒரு கலை இதழையும் வெளியிட்டு வந்தது. அவற்றில், ஓவியங்கள், கோட்டோவியங்கள், கவிதை, கிராஃபிக் (graphic) வடிவங்கள், அலங்காரமான பக்க ஓரங்கள், வடிவ வரை படங்கள், லே அவுட் (Lay out) எனப்படும் புத்தக வடிவமைப்பு, என்பதாகப் பலதரப்பட்ட விஷயங்களும் இடம் பெற்றவன. காட்சிக்கூடத்தில் பதினோராவது அறை (Eleventh Room) அவற்றைக் காட்சிப்படுத்த என ஒதுக்கப் பட்டது. அங்கு இதழ்களின் பல பக்கங்கள் படைப்பாளியின் பெரிதாக்கப்பட்ட உருவமாக சுவரை அலங்கரித்தன. இன்று அவை ஆஸ்திரிய நாட்டின் தலை நகரில் தொல்பொருட்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குழுவின் காட்சிக் கட்டிடம் பற்பல கேலிகளுக்கும், வசைகளுக்கும் ஆளானது. ‘கோயிலுக்கும் சேமிப்புக் கிடங்கிற்கும் பிறந்த தந்தை பெயர் தெரியாத குழந்தை, என்பன போன்ற வசைப்பேச்சுக்கள் மக்களிடையே உலாவின. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் ராணுவம் குண்டுகள் வீசி அதை சேதப்படுத்தியது. போரில் தோற்றுப் பின்வாங்கியபோது அக்கட்டிடத்தை நெருப்பிட்டுக் கொளுத்தியது. அக்கட்டிடம் நூறு ஆண்டுகளில் பலமுறை மாற்றி அமைக்கப் பட்டது. இப்போது அந்தக் கட்டிட வளாகத்தில் ஒரே நேரத்தில் இருபது காட்சிகள் இடம் பெறுகின்றன. அவற்றுடன், அவைபற்றின கையேடுகளும் வெளிவருகின்றன. உரை நிகழ்த்துதல், கலைசார்ந்த கருத்துப் பரிமாற்றங்கள், கருத்தரங்கங்கள் போன்றவை இணை நிகழ்ச்சிகளாக இடம் பெறுகின்றன. அக்கட்டிடம் வெளிநாட்டினர் காணவேண்டிய ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

1902ஆம் ஆண்டு அக்குழு கட்டிடத்தின் முன்புறம் இசைக் கலைஞர் பீதோவன் சிலையை நிறுவியது. அதன் வெளிப்புறச் சுவற்றில் ஓவியர் குஸ்டோவ் க்ளிம்ட் ‘வடிவமைத்து நிறுவுதல்’ (Installation) பாணியில் சிலை ஒன்றைப் நிர்மாணித்தார். பீதோவன் ப்ரியெஸ் (Beethovan Prieze) என்று அழைக்கப்பட்ட அது அடுத்த ஆண்டு முழுவதும் மக்களின் பார்வைக்கு இருந்தது. பின்னர், அந்த படைப்பு உடைக்கப்பட்டு கலை ஆர்வலருக்கு விற்கப்பட்டது.

1905 இல் குழுவில் இயற்கைவாதிகளுக்கும் (Naturalists) மாற்றம் வேண்டியோருக்கும் (Stylists) தொடர்ந்து இருந்துவந்த கருத்து இடைவெளி இட்டு நிரப்ப முடியாததாகிவிட்டது. ஓவியர்கள் குஸ்டோவ் க்ளிம்ட், தியொபால்ட் பூம் (Theobald Boehm), ஹாஃப்மான் (Hoffmann) போன்றோர் அவ்வியக்கத்திலிருந்து விலகி விட்டனர். ‘முழுவதுமான கலை இயக்கம்’ (Total work of Art) என்னும் கோட்பாடு பின்பற்றப்படவில்லை என்பதே அதன் காரணம். குஸ்டோவ் க்ளிம்ட் புதிதாக ஒரு குழுவைத் துவக்கினார். க்ளிம்ட் குழு (Klimt Group) என்று பெயர் கொண்ட அது, தனது ஓவியக்காட்சிகளை 1908 இல் தற்காலிகமாக அமைக்கப் பட்ட வளாகத்தில் நிகழ்த்தியது.

வியன்னா கலைப்படைப்புப் பட்டறை
Vienna Workshop

1903ஆம் ஆண்டு மே மாதம் 19அன்று வியன்னா நகரில் வியன்னா கலைப் படைப்புப் பட்டறை ‘Vienna Work shop’ என்னும் புதிய குழு முறைப்படி பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடங்கிய ஓவியர்கள் ஹாஃப்மான், கொலோமன் மோஸர் இருவருமே ‘பிளவுபட்ட வியன்னா’ குழுவின் உறுப்பினர்தான். குழுவுக்கான பொருளுதவியை ஃப்ரிட்ஸ் வார்ண்டார்ஃபர்(Fritz Wärndorfer) என்னும் தொழிலதிபர் தொடக்கமாகக் கொடுத்தார். புதிதாகக் கலைத்துறைக்கு அறிமுகமாகும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாகவே அது இயங்கியது. இந்தக் குழுவினர் ஆடை, அணிகலன்கள், பீங்கான் பண்டங்கள், இல்லப் பயன்பாட்டுப் பொருட்கள், போன்றவற்றை எளிய ஜியோமிதி வடிவங்களுடனும், குறைவான வேலைப்பாடுகளுடனும் வடிவமைத்தனர். ஆனால் அவர்கள் அவற்றை பொது சந்தைக்கானதாகப் படைக்கவில்லை. இங்கிலாந்தில் தோன்றிய ‘கலை கைவினைக்கான இயக்கம்’ ‘Arts and Crafts Movement” சார்ந்த பல தொழிற் கூடங்கள் தமது படைப்புகளை பொதுச் சந்தைக்குப் பெரும் எண்ணிக்கையில் கொண்டு சென்றன. ஆனால் ‘வியன்னா கலைப் படைப்புப் பட்டறை’ குழு “இவ்வகைப் படைப்புகளை அனைவருக்குமானதாக ஆக்க இயலாதென்பதால் அவற்றை வாங்கக்கூடிய நுகர்வோருக்கானதாகப் படைப்பதில் நம் கவனத்தைச் செலுத்துவோம்” (Since it is not possible to work for the whole market, we will concentrate on those who can afford it- Hoffman) என்னும் கோட்பாட்டுடன் செயற்பட்டது. ‘Wiener Werkstatte Style’ என்று சிறப்பாக இது அழைக்கப்பட்டது. தொடர்ந்து போதிய பொருளுதவி கிட்டாததால் 1932 ஆம் ஆண்டில் இக்குழு மூடப்பட்டது.

நவீனத்துவம்
(Modernisme) – Spain

1888-1911 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த சிம்பலிஸம் (Symbolism), டிகெடென்ஸ் ஆர்ட் (Decadence Art), ஆர்ட் நூவொ (Art Nouveau), ஜங்ஸ்டில் (Jugendstil) போன்ற கலை இயக்கங்களுக்கு இணையான இது, ஸ்பெயின் நாட்டின் பார்செலோனா (Barcelona) நகரை மையமாகக் கொண்டு இயங்கியது. இதை பொதுவாய் அறியப்படும் ‘நவீனத்துவம்’ (Modernism) இயக்கத்தோடு குழப்பிக் கொள்ளக் கூடாது.

இவ்வியக்கம் ஒரு கலாச்சார நிகழ்வு. இதை முன்னின்று நடத்தியவர்கள் அப்போதைய பழமை வாதத்திற்கு எதிர்குரல் கொடுத்த அறிவு ஜீவிகள். அவர்கள் ‘கேட்டலான்’ (Catalan Art) கலைப்பாணியை, அதுசார்ந்த கருத்துக்களை உலகத் தரத்துக்கு ஈடானதாக மாற்றியமைக்கவென்று செயற்பட்டனர். அது அந்நாட்டின் கலை, மரபு, இசை, இலக்கியம், மதக்கோட்பாடுகள் போன்றவற்றில் நவீனப் பார்வையைக் கொணர்ந்தது. கலை, நடுத்தர மக்களின் வாழ்க்கையைப் பிரதி பலிக்கிறது என்னும் கோட்பாடு அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. எனவே, அவர்கள் இரண்டு நிலைகளைப் பின்பற்றினர். ஒன்று, சமூகத்திலிருந்து விலகியிருப்பது-ஒரு நாடோடி போல [Bohemian]); மற்றது, கலையைப் பயன் படுத்தி சமுதாய மாற்றம் கொண்டு வருவது. மதம், மரபு சார்ந்த கலைக் கையாளல்களை அவர்கள் ஏற்கவில்லை. அவற்றைத் தங்கள் நாடகங்கள் மூலமாக ஏளனம் செய்தனர்.

19ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில் பின்பற்றப்பட்ட ‘குவிக்கப்பட்ட படையதிகாரம்’ நீங்கியபின், கேட்டலான் கலாச்சாரம் மற்ற ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரங்களுக்கு இணையானது என்னும் கோட்பாட்டை தூக்கிப் பிடித்தது மற்றொரு சிறப்பு. இவையெல்லாம் நாடகங்கள், இலக்கியப் படைப்புகள் மூலம் மக்களிடையே பரப்பப்பட்டன. அப்போதைய ஸ்பெயின் நாட்டுக் கட்டிடக்கலை, ஓவியம், சிற்பம், கைவினைக் கலைகள் மற்ற ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்பட்ட புதிய இயக்கங்களுடன் இணையாகப் பயணித்தது.

நூசெந்திஸ்டா(Noucentista) :

மாடர்னிஸம் (Modernisme) 1910 களை எட்டியபோது அதன் இறங்கு முகம் தோன்றி விட்டது. நூசெந்திஸ்டா (Noucentista) இயக்கம் கேட்டலான் கலாசார இயக்கமாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியது. ‘அவேங்கார்டிஸ்ட்’ (Avant gardists) என்று அடையாளப் படுத்தப்பட்ட அறிவு ஜீவிகள் முன்மொழிந்த கலை வழியையும், ‘மாடர்னிஸம்’ அமைப்பின் கலை மற்றும் அது சார்ந்த கோட்பாடுகளையும் மறுத்து அவற்றுக்கு மாற்றாக ஒரு புதிய கலைக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியது அவ்வியக்கம். ‘ஔஜெனி டோர்ஸ்’ (Eugeni d`Ors) என்பவரால் அது ‘நூசென்டிஸம்’ (Noucentisme) என்று பெயரிடப் பட்டது. இவ்விரண்டு இயக்கங்களுக்கும் அடிப்படையில் சில ஒற்றுமைகள் இருந்த போதிலும், மாடர்னிஸம் அமைப்பு பின்பற்றிய நாடோடி வாழ்க்கை, தனிக் கலைஞனின் பார்வை போன்றவற்றை ‘நூசென்டிஸம்’ இயக்கம் வெறுத்து ஒதுக்கியது. சமூக ஒழுக்கத்தை அது போற்றியது. இருபதாம் நூற்றாண்டில் நாட்டில் நிகழவிருக்கும் கலாசாரமாற்றம் பற்றிக் கூறியது. இலக்கியத்தில் புதினத்தின் இடத்தை கவிதை வடிவம் பிடித்துக் கொண்டது. அவ்வியக்கத்தின் புதிய கோட்பாடுகளைக் கூற அதுவே உகந்த சாதனமாக இருந்தது. கலைஞர் களும் அரசியல்வாதிகளும் இணைந்து செயற்பட்டனர். ஆட்சியைப் பிடித்த ‘லிகா ரெஹியோனாலிஸ்டா’ (Lliga Regionalista)வுடன் ‘நூசெந்திஸ்டா’ இயக்கக் கலைஞர்கள் மாடர்னிஸம் இயக்கத்தின் கோட்பாடுகளை மறுத்து ஏளனம் செய்து, மக்கள் சார்ந்த புதிய கலைப் பார்வையையும் கேட்டலான் தேசியத்தையும் முன் நிறுத்தினர். ‘ மிகெய்ல் ப்ரீமோ த ரிவேரா’ (Miguel Primo de Rivera) வின் எதேச்சதிகாரம் இருந்தவரை கேட்டலான் கலாசாரம் அழுத்தி வைக்கப் பட்டிருந்தது.

இரண்டாம் ஸ்பெயின் குடியரசு ஆட்சியில் மாடர்னிஸம் இயக்கத்திற்குப் புத்துயிர் தோன்றியது. என்றபோதும், 1930 களுக்குப் பின்னர் இந்த இயக்கம் மெல்லக் கரைந்து போயிற்று. கலை, கலாசாரம் போன்றவற்றில் வேறு பாதிப்புகள் வந்துவிட்டன.

(வளரும்)

[DDET படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்.]
01_aubray-beardsley02_ab02_by-gk03_ab03_bygk04_bygkbtlbyk-mby-ab31by-alphonse-mucha-11by-am-2by-lctby-lct1by-kmctldtl
[/DDET]