“வினய், பால் டேபிள் மேலேயே இருக்கு. எங்கே போனே?”
அம்மா கூப்பிடறா. என் பேர்தான் வினய். ஜவஹர் மாண்டிஸரிலெ யூகேஜி படிக்கறேன். இன்னிக்கு சனிக்கிழமை இல்லையா? எனக்கு லீவு. வீக் எண்ட்லே நான் எங்க தொரைசாமி தாத்தா வீட்டுக்கு போயிடுவேன். அதுக்குதான் என்னொட ட்ரெஸ், ட்ராயிங் எல்லாம் பேக்லே எடுத்து வெச்சுண்டிருக்கேன்.
“இதோ வந்தேம்மா. அப்பாவை எழுப்பும்மா அப்புறம் லேட் ஆயிடும்.”
“ஆமாம் பெரிய ஆஃபிஸ் மீட்டிங் பாழாய் போறதா. ப்ரேக்ஃபாஸ்ட் சாப்டுட்டு போலாம்.”
எனக்கு அழுகையாய் வந்தது. நேத்து ராத்திரி தூங்க போறச்சே அப்பா ப்ராமிஸ் பண்ணினார். ’நாளைக்கு ஏழு மணிக்கெல்லாம் தாத்தா வீட்டுக்கு போலாம்’ னு. இப்போ அம்மா இப்படி சொல்றா.
அங்கே எனக்கு நெறைய வேலை இருக்கு. தாத்தாக்கு ஹெல்ப் பண்ணனும். இன்னிக்கு டாக்டர் வேறே வருவார். வெள்ளிக்கும், சுப்பிக்கும் இன்னிக்கு இஞ்செக்ஷன் போடணும். அது ரெண்டும் நான் புடிச்சுக்கலைன்னா பயந்து ஓடிப் போயிடும். தாத்தாவாலே அது பின்னாடி ஓட முடியாது இல்லை. புதுசா ஒரு பப்பி வேறெ வந்திருக்காம் இன்னும் நான் அதை பாக்கவே இல்லை. அதுக்குப் பேரு வெக்கணும்.
கொஞ்ச நாள் முன்னாடி வரை தாத்தாவும் பாட்டியும் இங்கேதான் இருந்தா. தாத்தாகிட்டே நெறைய அனிமல்ஸ் இருந்தது. இந்த வீடே ‘மினி ஜூ’ன்னுதான் எல்லாரும் சொல்லுவா. நாயி, பூனை, ஆடு, ரெண்டு கன்னுகுட்டி, கலர் கலரா பேர்ட்ஸ், ஷி ஷி சு சு ன்னு சத்தம் போடும் அப்புறம் ஸ்னேக்ஸ். தாத்தா கோப்ரா, க்ரேட், வைப்பர் அதெல்லாம் நேஷ்னல் பார்க்லே குடுத்துடுவார். இந்த ராட் ஸ்னேக், கேட் ஸ்னேக், வுல்ஃப் ச்னேக், கீல் பேக் அப்படி வெஷம் இல்லாத ஸ்னேக்தான் வீட்லே வெச்சுப்பார். போன வருஷம் அனிமல்ஸ்கு இங்கே எடம் போறலை. பக்கத்து வீட்டுலெ இருக்கற அங்கிள் ஆண்டி எல்லாம் அனிமல்ஸ் பத்தி கம்ப்ளெய்ன் பண்ணிண்டே இருந்தா. அதுனாலே தாத்தாவும் பாட்டியும் அனிமல்ஸ் எல்லாம் எடுத்துண்டு அமெரிக்காலெ இருக்கற என்னோட இன்னோரு தாத்தாவோட கனகபுரா ஃபார்ம் ஹவுஸுக்குப் போயிட்டா. நாமளும் போகலாம்னு அம்மாகிட்டே சொன்னேன். ஆனா “இங்கே ஸ்கூல் இருக்கு அங்கேர்ந்து தெனம் வர முடியாது. அப்பா, அம்மா ஆஃபீஸ்க்கும் தூரம்னு இங்கேயெ இரு”ன்னுட்டா. நான் அழுதேன். “அந்த அனிமல்ஸ் எல்லாம் என்னோட ஃப்ரெண்ட்ஸ். அங்கேயே வேறே ஸ்கூல் போறேம்பா”ன்னு சொன்னேன். வீக் எண்ட், வெகேஷன் எல்லாம் அங்கே இருக்கலாம்னு ப்ராமிஸ் பண்ணினா. ஆனா ஒரோரு ஸாடர்டேயும் அப்பா எழுந்துக்கவே மாட்டா. நான்தான் ரெடி ஆயிட்டு அப்பாவை எழுப்பி கூப்டுண்டு போகணும். இந்த அம்மா வேறெ பாலைக் குடி, ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடுன்னு டிலே பண்ணுவா.
ஃபோன் அடிச்சுது. அம்மா எடுத்து பேசிட்டு அப்பாகிட்டே சொன்னா:
“ஸ்ரீ, ஃபோன்லே உங்க அப்பா”
தாத்தாவா? நான் இன்னும் வரலையேன்னுதான் பண்ணி இருக்கார் போல இருக்கு.
அப்பா பேசிட்டு வந்தார்.
“ஜே பி நகர்லே ஒரு காலி ப்ளாட்லே ஒரு பாம்பை பாத்துட்டு அப்பாக்கு ஃபோன் பண்ணிருக்கா. வழிலே போய் பாத்துட்டு வர சொன்னார்.இதோ ஃபைவ் மினிட்ஸ்லே கெளம்பிடறேன்” னு என்கிட்டே சொல்லிட்டு அப்பா ரூம் உள்ளே போனார்.
என்னோட அப்பா அம்மாக்கும் அனிமல்ஸ் எல்லாம் பிடிக்கும். அப்பா இந்த ஸ்னேக்ஸ் எல்லாம் ஃபோட்டோ எடுப்பார். ஃபாரின் பேபர்லே எல்லாம் ப்ரிண்ட் ஆயிருக்கு.அம்மா அனிமல்ஸ் பத்தி ஆர்டிகில்ஸ் எல்லாம் எழுதுவா. தாத்தாவை பத்தி கூட நெறைய பேபர்லெ டிவிலெ எல்லாம் வந்திருக்கு. இந்த அனிமல்ஸ் எல்லாம் ஒண்ணும் ஹார்ம் பண்ணாதுன்னு தாத்தா எக்ஸ்ப்ளெயின் பண்ணுவார். விஸிடர்ஸ்க்கு நான் அனிமல்ஸ் பேர் எல்லாம் சொல்லுவேன், அதெல்லாம் என்ன சாப்பிடும் அப்டீன்னெல்லாம் சொல்லுவேன். அப்றம் ஸ்னேக்ஸை கைலே எடுத்து ‘ஒண்ணும் பண்ணாது’ன்னு காமிப்பேன். இந்த ஸ்னேக்ஸ் நம்ம ஃபீல்ட்ஸ்லே இருக்கற எலி அந்த மாதிரி அனிமல்ஸை சாப்டுடும். இல்லேன்னா எலி எல்லாம் நம்ம ஃபீல்ட்லே க்ராப்ஸ் எல்லாம் சாப்பிட்டுடும் இல்லே. அதுனாலே இந்த ஸ்னேக்ஸை நாம அடிக்கக் கூடாதுன்னு தாத்தா விஸிடர்ஸ்கெல்லாம் சொல்லுவார்.
அதான் சில பேர் வீட்டு கிட்டே பாம்பை பாத்தா தாத்தாக்கு போன் பண்ணி சொல்லுவா. தாத்தா இல்லேன்னா அப்பா, சித்தப்பா யாரானும் போய் அதை புடிச்சுண்டு வந்துடுவா.
அம்மாக்கு ‘பை’ சொல்லிட்டு மோடர்ஸைகிள்லெ ஏறிண்டேன். அப்பா முதுகிலே மூஞ்சிய வெச்சுண்டு காத்துலே போறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ரோடு ஃப்ரீயா இருந்தது. அப்பா மொதல்லே ஜே.பி.நகர் போயிட்டு போலாம்னு சொன்னார்.
ஜே.பி.நகர்லே அந்த ப்ளாட் முன்னாடி கூட்டமா இருந்தது. ஒரு மூலைலே அந்த பாம்பு சுருண்டு இருந்தது. சில பேர் கைலே கம்பெல்லாம் வெச்சிண்டிருந்தா.
“ப்ளீஸ்… நீங்க எல்லாம் கலைஞ்சு போனா நான் அதை மெதுவா புடிச்சுண்டு போயிடுவேன்” னு அப்பா சாக்குப் பையை காமிச்சா.
“ஐயோ பேடாரீ. ஹொடிதுபிடோனா” அப்டின்னு அப்பா கிட்டே கம்பை குடுத்தா அதை அடிக்கறத்துக்கு. அப்பா அவாளை சத்தம் போடாமே இருக்கச் சொல்லிட்டு அந்த ப்ளாட் உள்ளே போனா. நானும் கூடப் போனேன்.
உடனே ஒரு ஆண்டி “அல்லி ஹோக்பேடா மகு, இல்லி பந்துபிடு” அப்டின்னு என் கையை புடிச்சு நிறுத்திட்டா.
அப்பா மெதுவா பாம்பை அந்த சாக்குப் பைக்குள்ளெ போக விட்டு க்ளோஸ் பண்ணி கொண்டு வந்தா. எல்லாரும் க்ளாப் பண்ணினா. சில பேர் “இதை என்ன செய்வீங்க? பன்னெர்கட்டாலே வித்துடுவீங்களா?” அப்டீன்னெல்லாம் கேட்டா. ஒரு அங்கிள் “சைனீஸ் ஹோடெல்லுக்கு குடுத்துடுவீங்களா?”ன்னு கேட்டார்.
அப்பா சிரிச்சுண்டே மோடார்ஸைகிளைக் கெளப்பினார்.
தாத்தா வீட்டுக்குப் போறப்போ மணி ஒம்பது ஆயிடுத்து. நாங்க கேட் கிட்டெ போறப்பவே பைக் சத்தம் கேட்டு வெள்ளியும், சுப்பியும் ஓடி வந்துடுத்து. பைக் பின்னாடியே ஓடி வந்துது ரெண்டும். கூடவே அந்த புது பப்பியும் காலுக்கு நடுலே ஓடி வந்தது. கறுப்புக் குட்டி. கால்லே மாத்ரம் ஸாக்ஸ் மாதிரி வெள்ளை. அதை கைலெ தூக்கிண்டு வீட்டுக்குப் பின்னாடி போனேன். தாத்தா கார்த்தாலே ஆறு மணிக்கே பின்னாடி அனிமல்ஸ் கிட்டே போயிடுவார்.
“தாத்தா… வந்துட்டோம். பாம்பும் கொண்டு வந்துட்டோம்”னு சொல்லிண்டெ போனேன்.
தாத்தா ‘உஷ்’னு வாயிலே வெரல் வெச்சு காமிச்சார். ஏதோ பேர்டுக்கு மருந்து போட்டுண்டிருந்தார். மெதுவா போய் தாத்தா தோள் பின்னாலேர்ந்து பாத்தேன் – ஈகிள்! ஆனா பாவம் விங்க்ஸ் எல்லாம் பிஞ்சு போயிருந்தது.
“எங்கே கெடைச்சுது தாத்தா?”னு கேட்டேன்.
“பார்க்லே எதோ எலெக்ட்ரிக் கம்பத்துலே ஷாக் அடிச்சுடுத்து போல இருக்கு. வாக் போனவா கொண்டு வந்து குடுத்தா. மருந்து போட்டிருக்கேன், டாக்டர் வரட்டும். கேக்கலாம்”னு சொல்லிட்டு தாத்தா அதை ஒரு கேஜ் உள்ளே வெச்சார்.
அப்பா வந்தார் சாக்குப் பையை எடுத்திண்டு. கூடவே பாட்டியும் வந்தா.
“பாட்டிக்கு ஹலோ கூட சொல்லாமெ தாத்தா கிட்டே ஓடி வந்துட்டயா? பால் கலந்துண்டு வரட்டா இல்லே அக்கி ரொட்டி சாப்டறயா?”
“ப்ரேக்ஃபாஸ்ட் சாப்டுட்டேன் பாட்டி.”
“ஒரே ஒரு ரொட்டி?”
“இல்லை பாட்டி பசிக்கலை.”
தாத்தாவும் அப்பாவும் மெதுவா அந்த பையிலேர்ந்து பாம்பை ஒரு பாக்ஸ் உள்ளே விட்டா. க்லாஸ் வழியா அதைப் பாத்துட்டு அப்பா சொன்னார்:
“ஒரு வெரைடி ராட் ஸ்னேக் தான். வீடு கட்டத் தோண்டி இருக்கா. அங்கேர்ந்து வெளிலே வந்திருக்கு. அந்த ஜனங்க போட்ட கூச்சல்லே பயந்து போய் மூலையிலெ சுருண்டு இருந்தது. அடிக்க ரெடியா கம்பு கடப்பாரை எல்லாம் வெச்சிருந்தா.”
தாத்தா சிரிச்சார்.
“ஆமாம் தாத்தா. என் மிஸ்ஸூக்குக் கூட ஒண்ணுமே தெரியலை. ஸ்னேக்ஸ் ஆர் டெஞ்சரஸ். யூ ஷுட் நாட் கோ நியர் தெம் அப்டீன்னு சொல்றா தாத்தா. நம்ப நாகு, சேஷா, வாசுகி எல்லாம் எவ்வளோ சமத்து இல்லே?” ன்னு கேட்டேன்.
“உங்க மிஸ்ஸு பாம்புகளைப் பத்தி புஸ்தகத்துலேதான் படிச்சிருப்பா. நிஜம்மா பாத்திருக்க மாட்டா. நம்ம நாகுவெல்லாம் பாத்தா அப்படி சொல்ல மாட்டா.”
டாக்டர் அங்கிள் வந்துட்டார். “என் அஸிஸ்டண்ட் வந்தாச்சா. இனிமேல் என் வேலை ரொம்ப ஈஸி” ன்னு சொல்லிண்டே.
மண்டே காத்தாலே ஸ்கூலுக்குப் போகவே எனக்குப் பிடிக்கலை. இனிமேல் அடுத்த ஸாடர்டேதான் அனிமல்ஸ் எல்லாம் பாக்க முடியும். ’வயத்தை வலிக்கறது’ ன்னு சொல்லலாமான்னு நெனச்சேன். ஆனா இன்னிக்குப் போகணும். நிகில்க்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன்.
க்ளாஸ்லே என் பெஸ்ட் ஃப்ரெண்ட் நிகில். அவன்தான் என் பக்கத்திலே உக்காந்துப்பான். ஆனால் சில நாள் நாங்க ஏதானும் பேசிண்டே இருந்தா மிஸ் எங்களை தனித்தனியா உக்கார சொல்லி பனிஷ் பண்ணிடுவா. அதுனாலே மிஸ் போர்ட்லே எழுதிண்டு இருக்கறத்தே என் பேக்கை காமிச்சு அவன்கிட்டே மெதுவா “ஸ்னாக் ப்ரேக்லே ஒனக்கு மாத்திரம் ஒரு ஸீக்ரெட் காமிக்கறேன். யாருக்கும் சொல்லக் கூடாது”ன்னு சொன்னேன்.
“ஏய், சொல்லுடா… சொல்லுடா…” ன்னு கேட்டான்.
மிஸ் முறைச்சு பாத்தா.
ஸ்னாக் ப்ரேக் பெல் அடிச்சதும் என் பேக்லெ கை விட்டு “என்ன ஸீக்ரெட் சொல்லு”னு அதுக்குள்ளே நான் வெச்சிருந்த பாக்ஸை தொறந்துட்டான்.
நாகுக்குட்டி பயந்து போய் கீழே குதிச்சுடுத்து. நான் டபக்னு அதை புடிச்சுட்டேன். ஆனா ப்ரீதி, தீபா, ராஹுல், ஆன்ந்த் எல்லோரும் பெரிசா அழுதுண்டே ஓட ஆரம்பிச்சுட்டா. மத்தவா எல்லாம் டெஸ்க் மேலே ஏறி நின்னா.
“நாகு ஒண்ணுமே பண்ணாது. கடிக்காது. ஷீ இஸ் நாட் பாய்ஸனஸ்” னு நான் சொல்லிண்டே அதை கைலே எடுத்து காமிச்சேன்.
அதுக்குள்ளெ மிஸ் க்ளாஸுக்குள்ளெ வந்து ‘என்ன கலாட்டா. ஸைலென்ஸ்’னு சொல்லிண்டெ வந்தா. என் கைலெ நாகுவைப் பாத்ததும் பெரிசா கத்த ஆரம்பிச்சுட்டா.
“ஸ்னேக், ஸ்னேக், கீழெ போடு. இட் வில் பைட் யூ”னு கத்தினா.
“இல்லே மிஸ். இது எங்க வீட்டு பாம்பு. கடிக்காது.”
“நான்ஸென்ஸ். ஜன்னலுக்கு வெளிலே தூக்கிப் போடு. வாட்ச்மேனைக் கூப்பிட்டு அடிக்க சொல்லலாம். இட் மஸ்ட் பீ கில்ட். இல்லேன்னா யாரையானும் கடிச்சுடும்.”
நாகு ரூம் லெ கார்னெர்லெ போய் ஒக்காந்துடுத்து.
இதுக்குள்ளே ப்ரின்ஸிபல் மேடம் வந்துட்டா.
“வாட் இஸ் ஆல் திஸ்”னு திட்டினா. மிஸ்ஸுக்கு பேசவே வரலை. “ஸ்னேக், வினய், பேக், தேர்” அப்டின்னு எதோ சொன்னா.
ப்ரின்ஸிபலும் நாகுவைப் பாத்து பயந்துட்டா.
“இட் இஸ் நாகு மிஸ். நாட் டேஞ்சரஸ் மிஸ். ஒண்ணும் பண்ணாது”னு சொன்னேன். ஆனா மிஸ் அடிப்பான்னு பயம்மா இருந்தது. எல்லாம் இந்த நிகிலாலேதான். அவனை மொறைச்சுப் பாத்தேன். அதுக்குள்ளே க்லாஸ்லேர்ந்து எல்லாரும் வெளிலே ஓடிட்டா. மிஸ் என்னையும் வெளிலே போக சொல்லிட்டு கதவை மூடிட்டா.
“வாட்ச்மேனைக் கூப்பிடு, இதை அடிச்சுத் தூக்கிப் போட சொல்லு”ன்னு கத்தினா.
“நோ மிஸ். நோ மிஸ்”னு நான் அழுதேன்.
ப்ரின்ஸிபல் மேடம் அப்பாக்கு போன் பண்ணி உடனே வர சொன்னா. அப்பா ஓடி வந்துட்டார்.
ப்ரின்ஸிபல் மேடம் அப்பாகிட்டே வேகமா கோவமா பேசினா. அப்பா என்னை பாத்தார்: “இல்லெப்பா அன்னிக்கு க்ளாஸ் மிஸ் ‘ஸ்னேக்ஸ் ஆர் டெஞ்சரஸ்’னு சொன்னாப்பா. இல்லே அது தப்புன்னு காட்டறதுக்கு நம்ம நாகுவை எடுத்துண்டு வந்தேம்பா.”
அப்பா க்ளாஸுக்குள்ளே போயி நாகுவை எடுத்து பாக்ஸிலே போட்டுண்டு க்ளாஸ் மிஸ்கிட்டே சாரி சொல்லிட்டு வந்தார். ப்ரின்ஸிபல் மேடம் எனக்கு டி.சி குடுப்பேன்னு சொன்னா. “மத்த குழந்தைகளுக்கு ஏதானும் ஆயிருந்தா யாரு பதில் சொல்றது?”ன்னு திட்டினா.
அப்பா நெறைய ஸாரி சொன்னார். என்னையும் எல்லார்கிட்டயும் ஸாரி சொல்லச் சொன்னார். இனிமேல் இப்படி நடக்காதுன்னு ப்ராமிஸ் பண்ணிட்டு என்னைக் கூட்டிண்டு ஸ்கூலுக்கு வெளிலே வந்தார். பைக்கை நிறுத்திட்டு என்னைப் பாத்து “ஏன் இப்படி செஞ்சே?”ன்னு கேட்டார்.
எனக்கு அப்பாவைப் பாத்தா பாவமா இருந்தது. என்னாலேதானே எல்லாரும் அப்பாவைத் திட்டினான்னு தோணித்து. இந்த நிகிலாலேதான். அவன் டப்பாவை தொறந்ததுனாலேதான். இல்லேன்னா ஸீக்ரெட்டா அவனுக்கு மாத்ரம் காமிச்சுட்டு நான் நாகுவை எடுத்துண்டுபோய் இருக்கலாம் இல்லை. அப்பா என்னை அடிச்சதே இல்லை, ஆனா இன்னிக்கு அடிப்பாரோன்னு பயம்மா இருந்தது.
“நாகுவை நான் பேக்லேதான் வெச்சிருந்தேன்பா. இந்த நிகில் இல்லை அவன்தான் பாக்ஸை தொறந்துட்டான். ஆனா மிஸ்ஸு கத்தினதைப் பாத்துதான் நவீனும், ப்ரீதியும் டெஸ்க் மேலேந்து விழுந்து அடிபட்டுண்டா. மிஸ்தாம்பா டேஞ்செரஸ். நாகுவைப் போயி, பீட் இட் கில் இட் அப்டீன்னு சொல்றாப்பா. நாகு ஒண்ணுமே பண்ணலைப்பா. ஸாரிப்பா…”
நான் சொல்லிண்டே இருக்கறச்சே அப்பா பெரிசா சிரிக்க ஆரம்பிச்சுட்டார். எனக்கு ஏன்னு புரியலை. ஆனா நானும் சிரிச்சேன். சிரிச்சு முடிச்சதும் அப்பா என்கிட்டே சொன்னார்:
“உங்க மிஸ்ஸெல்லாம் பாத்து நாகு பயந்து போயிடுத்து பாரு. இனிமேல் இங்கே எல்லாம் நம்ம அனிமல்ஸ் எதையும் எடுத்துண்டு வராதே என்ன?”
“சரிப்பா. இனிமேல் பண்ண மாட்டேம்பா. ஸாரிப்பா”