வெங்கட் சாமிநாதன் – பகுதி 2

வெ.சா-வின் பார்வையில் பிற கலைகளும் அவரது சமூக அக்கறைகளும்

லக்கியம் மட்டுமின்றி சமயம், ஓவியம், சிற்பக் கலை, தெருக்கூத்து போன்ற தொன்மையான நாட்டாரியல் கலைகள், நாட்டியம், இசை, பிற நுண்கலைகள் போன்ற அனைத்துக் கலைத்துறைகள் குறித்தும் வெ.சா தொடர்ந்து அளித்து வரும் சித்திரங்கள் தமிழுக்கு அவர் அளித்த கொடைகள் என்றே சொல்லவேண்டும். நம் பாரம்பரியக் கலைகள் அழிந்து வருவது குறித்து அளவற்ற கவலைகள் கொண்டவர் வெ.சா. அவற்றை மீட்டெடுக்க முயலும் கலைஞர்களையும், அவர்களது அர்ப்பணிப்பையும் அவர்கள் எங்கிருந்தாலும் தேடிச்சென்று தமிழ் உலகத்திற்கு அறிமுகம் செய்வதில் அவர் காட்டும் உற்சாகமும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியவை. நியாயமாகப் பார்த்தால் நிறுவன பலமும், நிதியுதவியும், அதிகாரமும் படைத்துள்ள தமிழக அரசின் பல்வேறு கலாசார அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சியாளர்களும், பேராசிரியர்களும் செய்திருக்க வேண்டிய பணிகள் இவை.

தமிழ்நாட்டின் நுண்கலைகளைப் பொருத்தவரை நாம் இழந்து வரும் கலைகள் குறித்து பெருத்த கவலை கொண்டுள்ளவர் வெ.சா. குளிப்பாட்டிய நீரோடு குழந்தையையும் வெளியில் கொட்டி விடுகிறோமே என்ற வேதனை கொள்கிறார். தேவதாசிகள் பாதுகாத்த வடிவில் பரதநாட்டியம் காப்பாற்றப்பட வேண்டும் என்று அக்கறையுள்ள இந்து வர்மாவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். தேவதாசி முறை ஒழிக்கப்பட்டபோது, அவர்கள் பாரம்பரியமாகப் பாதுகாத்தக் கலையையும் தொலைத்து விட்டோம் என்பது குறித்து வெ.சா-வின் கவலை இன்றைய உலகில் திரிக்கப்பட்டு அனர்த்தப்படுத்தப்படும் அபாயம் உடையது. இருந்தாலும் அவரது விசனத்தை அவர் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. மாறுதல் தேவைதான் ஆனால் மாறுதல்கள் நம் தொன்மையின் சிறப்பையையும் கூடவே அழித்து விடுவது குறித்தான கவலைதான் வெ.சா-வின் கவலை.

நாடகக்கலைகளிலும், சிற்பக்கலைகளிலும், ஓவியக்கலைகளிலும் அவருக்கு ஏற்பட்ட ஆர்வமும் அக்கறையும் அவரது டெல்லி வாழ்வில் மண்டி ஹவுசைச் சுற்றியுள்ள கலைக் கூடங்களில் இருந்து பெறப்பட்டவை என்பதை அறிகிறோம். அதன் தாக்கமே மறைந்து கொண்டிருக்கும் கலைகளைப் புனரமைக்கும் கலைஞர்களிடம் அவர் கொண்டிருந்த அக்கறையும் ஆர்வமும் என்பதை உணர முடிகிறது. தேவதாசி முறையுடன் கைகழுவி விடப்பட்டுவிட்ட ‘கைசிகி புராணம்’ என்ற கலையை மீட்டெடுத்த ராமானுஜம் அவர்களை நம்மிடம் அறிமுகப்படுத்தும்போது வெ.சா மறைந்து வரும் கலைகளுக்கும், அவற்றை மீட்டெடுப்பவர்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தின் அக்கறை புலப்படுகிறது. நமது தொன்மையான கலைகள் யாவும் கோவில்களைச் சார்ந்தும், குறிப்பிட்ட சில ஜாதிகளின் பங்களிப்பினாலும் காலத்தைக் கடந்து இன்றும் பேணப்படுபவை என்பதைக் குறிப்பிடுகிறார். சங்கீதமாக இருந்தாலும் நாட்டியமாக இருந்தாலும் அவை எல்லாம் இளங்காற்றில் மெல்லிய மஸ்லின் ஆடை ஆகாயத்தில் மிதந்து செல்வது போல இருப்பதே அழகு என்றும் இனிமையாக இருந்தாலும் கூட சூறைக் காற்றின் வேகத்துடன் செல்வது அழகல்ல என்பதை எம்.டி.ராமனாதனையும், சுதா ரகுநாதனையும் ஒப்பிட்டு உணர்த்துகிறார்.

நவீன ஓவியங்கள் குறித்த பாமரத்தனமான கிண்டல்களை அவர் ரசிப்பதில்லை. ஓவியத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்று தன் மனைவி அருண்மொழிக்கு சொல்லித் தந்த விதத்தை வெகு அழகாக ஜெயமோகன் விவரித்திருக்கிறார். தமிழ்நாட்டு ஓவியக்கலை குறித்து விரிவாக அலசியிருக்கிறார் வெ.சா. “தமிழ் நாட்டில் தொடர்ந்து நம் கண் முன்னே கலை உணர்வூட்டும் வகையில் சிற்பங்கள்தான் கோவில்களில் உள்ளன. ஓவியத்திற்கு அத்தகைய தொடர்ச்சி இல்லை. சற்று முந்தியது என்று நாயக்கர் கால சுவரோவியங்கள், அதற்கு முன், மறைந்திருந்து வெளித்தெரிந்த தஞ்சை கோயில் ஓவியங்கள். அதற்கு முன் சித்தன்ன வாசல் என்று பல நூற்றாண்டுகள் இடைவெளி கொண்ட ஒன்றைப் பார்க்கலாம். முதலில் கோவில் சிற்பங்களை, சுவரோவியங்களை பிரதி செய்யும் ஒரு கட்டம் தாண்டி, ஒவ்வொருவரும் தன் மொழியை, தன் பாணியை உருவாக்கிக் கொண்டனர். அதற்கு நீண்ட காலம் தேவையாக இருந்தது.” என்ற தமிழக ஓவியக்கலையின் வரலாற்றினை நமக்கு அளிக்கும் வெ.சா, அந்தக் கலைகளை முன்னகர்த்திச் செல்லும் கலைஞர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ”ராமானுஜம், மனம் பேதலித்த சமூகத்தோடு ஒட்ட முடியாத தோற்றம் அளித்த தன் தனிப்பட்ட உலகை உருவாக்கிக்கொண்ட கனவுலக மனிதர். தன் மண்ணில் கால் அழுத்தமாகப் பதித்து தன் கிராமீய ஏக்கமும், வறுமையும், வான் நோக்கி வாழும் மனிதனை உணர்வுகளை சிற்பங்களாக்கும் தக்ஷிணாமூர்த்தி, வெகுகாலம் தான் ஒரு மாஸ்டர் ஆகிவிட்ட கோட்டுச் சித்திரங்களைக் கைவிட மறுத்து இப்போது ரூபங்களிலிருந்து பிறந்த அரூபங்கள் படைக்கும் ஆதிமூலம், பூனைகளையே தன் வற்றாத கற்பனை ஊற்றாகக் கொண்ட பாஸ்கரன், எல்லா தளங்களிலும் கால் பரப்பியுள்ள பி.கிருஷ்ணமூர்த்தி, ட்ராட்ஸ்கி மருது, பழமையின் பிடிப்பிலேயே புதிய பிம்பங்களை உருவாக்கி நம்மைத் திகைக்க வைக்கும் வித்யா சங்கர் ஸ்தபதி” என்று வெ.சா வாயிலாக நம் ஓவியக் கலைஞர்களை அவர்களது சாதனைகளுடன் அறிந்து கொள்கிறோம்.

vesa-resizedதிராவிட இயக்கங்களின் ஆபாசக் கூச்சல்களில் தமிழுக்கு வளம் சேர்த்த பக்தி இலக்கியங்களும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்த கோவில்களும் புறம் தள்ளப்பட்டுவிட்டது தமிழ் சமூகத்திற்கு நேர்ந்த ஒரு கொடுமையான அவலமாகும். அந்த வெற்றுக் கூச்சல்களையும் மீறி கோவில்களும் கோவில்களின் சிற்பங்களும் தமிழ் சமூகத்திற்கு அளித்த பங்களிப்புக்களை வெ.சா உரக்கச் சொல்லத் தயங்கியதேயில்லை. தமிழ் வாழ்க்கையே கோவில்களை மையமாகக் கொண்டதுதான். கோவில் தமிழனுக்கு வாழ்வளித்தது என்பதை எந்தவித முத்திரைக் குத்தலுக்கும் பயப்படாமல் தயங்காமல் சொல்பவர் வெ.சா. தமிழ் கலைகளுக்கு ஊக்கம் கொடுத்ததே கோவில்தான். சிற்பக் கலையும், நாட்டியக் கலையும், சங்கீதமும், ஓவியக் கலையும் வளர்ந்தது கோவில்களிலேயே என்பதை அழுத்தமாகச் சொல்பவர் வெ.சா. தமிழ் நாட்டுக் கோவில்களில் இருந்து பிறந்த பக்தி இயக்கம் இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலுமான கலை, இலக்கியம், மொழி வளர்ச்சிக்கு ஆதர்சமாக இருந்தது என்ற உண்மையைச் சொல்கிறார். கோவில்கள் என்பவை பக்திக்கு மாத்திரம் உறைவிடமான இடங்கள் அல்ல. அவை ஓவியம், சிற்பம், ஆடல், பாடல்கள், கவிதைகள், நாட்டுப்புறக் கலைகள், கட்டிடக்கலை போன்ற அனைத்து கலைகளுக்குமே அடித்தளமாக அவற்றின் வளர்ச்சிக்கு வித்திட்டவையே கோவில்கள்தான்.

வெ.சா-வின் கலை இலக்கிய விமர்சனங்கள் போலவே, அவரது சமூக அக்கறைகளும், சமூக விமர்சனங்களும் குறிப்பிடத்தக்கவையே. பொதுவாகவே சர்ச்சைகளுக்குரிய விஷயங்களைப் பற்றி எவரும் பேச விரும்புவதில்லை. நம்மைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துக்களையும் சீரழிவுகளையும் பற்றி கேள்விகள் எழுப்புவதும் அதற்குக் காரணமானவர்களை கண்டிப்பதும் சபை நாகரீகம் இல்லாத காரியமாகவே இன்று கருதப்படுகிறது. அது போன்ற ஒரு சூழலில் வெ.சா திராவிட இயக்கங்களினால் சீரழிந்து போயிருக்கும் தமிழ்ப் பண்பாட்டுச்சூழல் குறித்தோ, மார்க்ஸியப் பிரச்சாரங்களினால் கலை இலக்கியங்களின் தரம் பிரச்சாரமயமாவது குறித்தோ, தீவீரவாத அடிப்படைவாத இஸ்லாம் குறித்தான தன் கவலைகளையும் கண்டனங்களையும் தெரிவிப்பது கூட இன்றைய இந்திய அறிவுச் சூழலில் ஒரு விரும்பத்தகாத கலகக் குரலாகவும், சமூகநீதிக்கு எதிரானதாகவும், மதச்சார்பின்மைக்குக் குந்தகம் விளைவிப்பதாகவும் முற்போக்கு இலக்கியவாதிகளாலும், போலி செக்குலரிஸ்டுகளாலும் முத்திரை குத்தப்படுகிறது. இன்றைய அரசியல் சூழலில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கடுமையாக எதிர்க்கும் அச்சமில்லாத குரல்களில் வெ.சா-வின் குரலும் ஒன்று. இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் விளையும் பயங்கரவாதத்தைத் தங்கள் செக்குலர் மதிப்பிற்கு பங்கம் வந்து விடும் என்று பயந்து அனைவரும் ஒடுங்கி அமைதி காக்கும் நேரத்தில் ஒரு இலக்கியவாதிக்குரிய சமூக அக்கறையுடனும் கடமையுடனும் அவற்றுக்கு எதிராக தன் தனிக்குரலை துணிந்து பதிவு செய்து வருபவர் வெ.சா.

அவரது குரலில் தெனிக்கும் அறமும், சத்தியமும் போலிகளைச் சுடுகிறது. அதனால் ஏற்படும் ஆத்திரத்தினாலேயெ அவரை இந்துத்துவவாதி என்றும், சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்றும் அவர் மீதான அவதூறாக வெளிப்படுகின்றது. இந்த சலசலப்புகளுக்கெல்லாம் அவர் பணிந்ததே இல்லை. இன்றைய தமிழ்ச் சூழலில் பெரியார் என்று ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு சிலை வைத்துப் போற்றப்படும் ஒருவரைப் பற்றிய உண்மையான தன் துணிவான விமர்சனங்களை வெ.சா வைக்கத் தயங்கியதேயில்லை. ஈ.வெ.ராவும் அவருடைய சீடர்களும் என்றுமே தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து அக்கறை கொண்டது கிடையாது என்பதையும் அவர்களது கொள்கைகள் எல்லாமே பிராமணத் துவேஷம் என்ற ஒரு அடிப்படையை மட்டுமே கொண்டது என்பதை இன்றைய சூழலில் துணிந்து சொல்லக் கூடியவர் வெ.சா.

தன் விமர்சனங்களிலும் கருத்துக்களிலும் சமுதாயக் கேடுகளுக்கு எதிரான கண்டிப்புகளிலும் கறாரான மதிப்பீடுகளும் போலிகளுக்கும் ஏமாற்றுக்காரர்களுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழும் வெ.சா தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு வெகு அற்புதமான ஒரு மனிதர். சிறந்த மனிதாபிமானியும் நுட்பமான நகைச்சுவை உணர்வுக் கூடிய உற்சாகமான ஒரு மனிதர். பழகுவதற்கு இனிய தோழமை உணர்வு மிக்க நண்பர். தன் விமர்சனங்களையும் தனிப்பட்ட வாழ்வில் நட்புக்களையும் குழப்பிக் கொள்ளாமல் தன்னால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்களுக்கும் கூட தனிப்பட்ட விதத்தில் உதவி செய்திருப்பதாக அவரை அறிந்த எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். அவரது தனி மடல்களிலும் விசாரிப்புகளும் எப்பொழுதும் கனிவும், பரிவும், வாஞ்சையும் நிரம்பியிருப்பதை அவருடன் பழகும் எவரும் அறிவார்கள். தொலைபேசி உரையாடல்களிலும் கூட அவரது உற்சாகமும் அன்பும் நம்மையும் தொற்றிக் கொள்பவை.

தன் எழுத்துக்களிலும் உரையாடல்களிலும் கருத்துப் பரிமாறல்களிலும் அவர் பயன்படுத்தும் நுட்பமான நகைச்சுவை உணர்வு அபாரமானது. அவரது ஆளுமை குறித்து உருவாக்கப்பட்டிருக்கும் “கடுமையானவர்” என்ற பிம்பத்திற்கு முற்றிலும் எதிரானது அவரது உண்மையான ஆளுமை. அவரது மடல்களில் சில சமயம் தொக்கி நிற்கும் அங்கதங்களைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். தனது கடுமையான விமர்சனப் பார்வைகளுக்கு நடுவிலும் கூட வாய்விட்டுச் சிரிக்கக்கூடிய பல குத்தல்களைப் பொதிந்து வைத்திருப்பவர் வெ.சா. ”எந்தவொரு 35 வயதான இந்தியனுக்கும் என்றாவது ஒரு நாள் இந்தியாவின் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பது போலவே என்றாவது ஒரு நாள் மு.மேத்தாவும் கூட கவிதை ஒன்றை எழுதக் கூடும்” என்ற கிண்டல் வெகு பிரபலமான ஒன்று. இதழாளர் மாலனை “தென்னாட்டு குல்தீப் நய்யார் என்றும் பெஞ்சமின் ப்ராட்லி” என்றும் புகழும் உதயமூர்த்தியைப் பற்றி தனக்கேயுரிய அங்கதத்துடன் வெ.சா எழுதுகிறார், “ இதன் மூலம் மாலனைப் பற்றி மட்டும் அல்ல தன்னைப் பற்றியும் எம்.எஸ்.உதயமூர்த்தி சொல்லிவிடுகிறார்.” “ஹிட்லர் ஒரு கொடிய பாசிஸ்டாக இருந்த பொழுதும் கூட அவன் ஒரு ஓரினச்சேர்க்கையாளனாக இல்லையென்பது புதுமைப்பித்தனுக்குத் திருப்தி” என்று கிண்டலடித்த அ.மார்க்ஸ் குறித்து கிண்டலாக வெ.சா வினவியது, “அப்படியானால் அவன் கொடிய பாசிஸ்டாக இருந்தாலும் கூட ஓரினச் சேர்க்கையாளனாக இருந்திருந்தால் மார்க்ஸுக்குத் திருப்தியாக இருந்திருக்குமோ?” கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன் உ.வெ.சாமிநாதைய்யருடைய சீடர் என்பது குறித்து வெ.சா, “மகாத்மா காந்தி கூடத்தான் சில்லறைத் தவறுகளாகப் பாபங்களாக சிலவற்றைச் செய்து விட்டுப் போயிருக்கிறார். அதைப் போல உ.வெ.சா-வும் பெரிய பாபமாக ஒன்றைச் செய்திருக்கிறார். போகட்டும், அதற்காக உ.வெ.சா-வைப் போய் குற்றம் சொல்ல முடியுமா என்ன?” என்று எழுதியதைப் படிக்க நேரும்போது பொங்கும் சிரிப்பை யாராலும் எளிதில் அடக்க முடியாது.

தமிழ் எழுத்துலகின் ஜாம்பாவானாகிய தி.ஜானகிராமன் அவர்களை கவுரவிக்க ஒரு கன்னட இலக்கிய அமைப்புக்குத்தான் அக்கறை இருந்தது. நாடகக் கலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் சே.ராமானுஜம் போன்றவர்களை மலையாள அமைப்புகள்தான் கவுரவிக்கின்றன. அது போலவே வெ.சா அவர்களையும் கடல் தாண்டி கனடாவில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள்தான் அங்கீகாரம் செய்திருக்கிறார்கள். ஒரு மாபெரும் கலைஞனை அவன் சினிமா, அரசியல், மலினமான தமிழ் இலக்கிய அரசியலில் சம்பந்தப்படாதவராக இருந்தால் அவன் வாழும் காலத்திலும் அதற்குப் பின்னரும் கூட அங்கீகரிக்காத கவுரவிக்காத ஒரு கேவலமான மரபுதான் தமிழ்நாட்டில் இருந்துவருகிறது. வெங்கட் சாமிநாதன் விஷயத்திலும் அது தன் தமிழ்மரபை விட்டுத் தரவில்லை என்பதை வேதனையுடன் நாம் நினைவு கூற வேண்டியிருக்கிறது.

தமிழ் கலைகளுக்காக அவற்றின் வளர்ச்சிக்காக கைம்மாறு எதிர்பாராமல் தான் எதிர் கொண்ட கல்லடிகளையும் காயங்களையும் பொருட்படுத்தாமல் இத்தனை வருடங்கள் தன் உழைப்பையும் அறிவையும் அளித்திருக்கும் வாழ்வு வெ சா அவர்களுடையது. அவர் இன்னும் பல ஆண்டுகள் இதே துடிப்புடனும் உற்சாகத்துடனும் செயல்பட அவருக்கு ஆண்டவன் ஆரோக்யத்தையும் மன வலிமையையும் அளிக்க வேண்டும். அவர் நோக்கங்கள் நிறைவேறும் காலம் வர வேண்டும்.

(ஓவியம்: வெ.சந்திரமோகன்.)