வாசகர் கடிதங்கள்

banner

மோகமுள் – நாவல் பிறந்த கதை

படிப்பவர்களது விருப்பத்துக்கு ஏற்றமாதிரி எழுதுவது கல்யாணம் கட்டிக் கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை போல, தனக்காகவே எழுதுவது என்பது கள்ளக் காதல் போல, அதில் ஒரு சாகசமும், ருசியும் உண்டு என்று தி.ஜா வேறு ஒரு இடத்தில் எழுதியிருப்பது ஞாபகம் வருகிறது. மனிதர் எந்த அளவுக்கு தன் வாழ்க்கையில் தோய்ந்து மோகமுள்ளை எழுதியிருக்கிறார் என்பதற்கு இந்தக் கட்டுரை இன்னுமொரு சான்று. நாவல் அவருக்கு உள்ளேயே கனன்று கொண்டிருந்திருக்கிறது, அந்தப் பெண் கல்யாணம் பண்ணிக்கொண்டு போன வேளை ஒரு ‘முகூர்த்தமாக’ நிகழ்ந்து அது பிறந்து விட்டது!

அருமையான, பொக்கிஷம் போன்ற இந்தக் கட்டுரையை எடுத்து இட்டதற்கு மிக்க நன்றி.

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள சொல்வனம் ஆசிரியருக்கு,

மோகமுள் – நாவல் பிறந்த கதை’ கட்டுரையைப் படித்தபோது என் அப்பா முன் உட்கார்ந்திருந்ததைப் போலவே உணர்ந்தேன்.

என் அப்பாவே ஆசிரியராகப் பணியாற்றியிருந்தாலும், குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில்லை என்பதால் அவருக்கு ஆசிரியர்கள் மீது பொதுவாகவே கோபம் இருந்தது. ஒருமுறை ஒரு மாணவன் எல்லா கேள்விகளுக்கும் விடையாக பானிபட் போரைப் பற்றியே எழுதியிருந்தான் என்று சொல்லியிருக்கிறார். அந்த விடைத்தாளில் பின்குறிப்பாக, “நான் 12 மைல்கள் நடந்து பள்ளிக்கு வருகிறேன். வீட்டுக்குத் திரும்பியபின் எனக்கு படிப்பதற்காக மிகக் கொஞ்சமே நேரம் இருக்கிறது” என்று எழுதியிருந்தானாம். அவனுக்குக் குறைந்தபட்ச பாஸ் மார்க் வழங்கி அடுத்த வகுப்புக்கு அனுப்பிவிட்டேன் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.

“ ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி அடைத்திருக்கிறார் பகவான்?”

அப்பா நிறைய வாசிப்பவராக இருந்தார். இரவு இரண்டு மணி வரை படித்துக்கொண்டிருப்பார். வாழ்க்கையை அதன் தீவிரத்துடனும், உணர்ச்சிபூர்வமாகவும் வாழ்ந்தவர் அவர்.

அவர் குழந்தைகள் எங்கள் எல்லோருக்கும் இலக்கியம், கலை, இசையில் ஆர்வமிருந்தாலும் நாங்கள் ‘எழுத்தாளர்களாக’ வேண்டும் என்று விரும்பியதில்லை. அவரைத் தாண்டிச் செய்வது முடியாத விஷயம் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது.

அன்புடன்,
உமா

(திரு. தி.ஜானகிராமனின் மகள்)

ப.கோலப்பனின் ‘உதிரம்’ சிறுகதை வெகு அருமை. விவரணைகளும், காட்சிகளையும் கண் முன்னே நிறுத்துமளவுக்கு நேர்த்தியாக எழுதுகிறார். இச்சிறுகதையைப் படித்துவிட்டுதான் அவருடைய முந்தைய சிறுகதை ‘வெறுமை’யையும் படித்தேன். இதே தரத்தில் தொடர்ந்து எழுதினால் இவர் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக இருப்பார்.

அன்புடன்,
முத்தையா

இந்த இதழில் வெளிவந்த எல்லா சிறுகதைகளும் அருமையாக இருந்தன. தமிழில் கட்டுரைகள் நிறைய எழுதப்பட்டாலும், சிறுகதைகளின் எண்ணிக்கையும், தரமும் திடீரென்று வீழ்ச்சியடைந்துவிட்டன. சொல்வனம் இதழில் வெளிவந்த இந்த மூன்று சிறுகதைகளும் மனநிறைவைக் கொடுத்தன. கோலப்பனின் உதிரம் நன்றாக இருந்தது. அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘கல்’ தமிழில் எழுதப்பட்ட அறிவியல் சிறுகதைகளில் மிக முக்கியமான ஒன்று. நிறைய யோசிக்க வைத்தது. அரவிந்தன் அவர்கள் கட்டுரைகளிலிருந்து புனைவெழுத்து பக்கம் நகர்ந்தது ஆச்சரியமளிக்கிறது. உஷா.வை எழுதிய ‘அக்கூ குருவி’ ஈழத்துயரைக் குறித்து எவ்வளவு இயல்பாகச் சொல்லிவிட்டது! ஈழத்துயரைக் குறித்து எழுதப்பட்ட முக்கியமான சிறுகதைகளில் ஒன்று. அதைப்போல ‘லாட்டரி’ மிக முக்கியமான உலகச்சிறுகதை என்பது அதன் குறிப்புகளில் இருந்து புரிந்துகொள்ளமுடிந்தது. மொத்தத்தில் இந்த சொல்வனம் உற்சாகமான வாசிப்பனுபவத்தைத் தந்தது.

நன்றியுடன்,
R.பிரசாத்.

நீண்ட நாட்களாய் நின்றுபோயிருந்த ‘ராகம் தானம் பல்லவி’ மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தொடரிலேயே மிகச்சிறந்த கட்டுரை இதுதான். நேரம் கிடைக்கையில் அருண் நரசிம்மன் இசை குறித்து நிறைய எழுதவேண்டும்.

அன்புடன்,
பாலரங்கன்