வன்மம்

1

tamil5wg8

மந்தையில் இருந்து கிளம்பி நாங்கள் எல்லோரும் குளத்தங்கரை ஆலமரத்துக்கு அருகே வந்தோம். எங்களுக்கு முன்பாகவே அங்கு பழனியாபிள்ளை நின்று கொண்டிருந்தார். நடந்தது எதையும் காட்டிக் கொள்ளாத முகம். நடந்த விசயம் ஏற்கெனவே ஊருக்குள் பரவி விட்டிருக்கிறது. ஊருக்குள் போகும் பாதையில் ஒரு குருவியையும் காணவில்லை. குளத்தில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாயும் தென்னாமடையின் மேலே இருந்து கொண்டு வம்பளக்கும் இளவட்டங்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. வீட்டு வேலைகளை ஒதுங்க வைத்து விட்டு, இரண்டாம் குளிப்புக்காக குளத்துக்கு வருபவர்கள் கூட வீட்டிலேயே கிணற்றில் நாலு வாளியை இறைத்து குளித்து விட்டார்கள். மரத்துக்கு பத்தடி தள்ளி பெட்டிக்கடை வைத்திருந்த கிருஷ்ணன் நாயரும் கடையை மூடிவிட்டு போய் விட்டார். புறாக்கூட்டம் ஒன்று தெற்கேயிருந்து பறந்து போனது.

எவன் நிற்பான்? மறவன் குடியிருப்பில் இருந்து போலீஸ் பட்டாளம் வருகிறது என்று சொல்லிக் கொண்டார்கள்.

எனக்கு நெஞ்சு “படக்” “படக்” என்று அடித்துக் கொண்டது. இனி மூன்று நாளைக்கு பசியே எடுக்காது என்று தோன்றியது.

“நீங்க வீட்டுக்கு போங்கடே” என் முகத்தில் இருந்த பதற்றத்தைப் பார்த்து சொன்னார் பழனியாபிள்ளை.

நான் கொஞ்ச நேரம் அப்படியே நின்று விட்டு வீட்டுக்குப் போனேன். மற்றவர்களும் புறப்பட்டார்கள்.

“அடிவாங்கிட்டு போயிருக்கது எஸ்.ஐ. கொச்சுப்பிள்ளையாக்கும். திருவிதாங்கூர் போலீசுனா சும்மையா. ஒருத்தன் கிட்ட நிண்ணு பேசிற முடியுமா? பழனியாவுள்ள துணிஞ்சு கையப்போட்டுட்டானே வே,” வீட்டுக்குள் இருந்த அப்பாவும் மாமாவும் பேசிக் கொண்டார்கள்.

“லே இரண்டு நாளைக்கு அங்கண இங்கண சுத்திட்டு அலையாத. போலீசு எவனைக் கொண்டு போலாமுண்ணு அலைவான். உளுக்கு எடுத்துப் போடுவான்” வீட்டுக்குள் நுழைந்த என்னிடம் அப்பா சொன்னார்.

நான் கொஞ்சநாட்களாக பழனியாபிள்ளையிடம் அடிமுறை படித்து வருகிறேன். ஊருக்கு தெற்கே இருக்கும் மந்தையில் சாயங்காலம் விளையாட்டு நடக்கும்.

“அடிமுறை தெரிஞ்சா மட்டும் மலத்தித் தள்ளீருவேறு. கையும் காலையும் வைச்சுக்கிட்டு பேசாம வீட்டுல கெடல. அடிமுறை தெரிஞ்சிட்டா நீரு பழனியாபிள்ளை ஆயிற முடியுமா? அவன் நிண்ணு அடிப்பான். அதுக்கு ஊக்கம் வேணுமுல,” எங்க அப்பா ஏசாத நாளே கிடையாது.

அவர் சொல்வது வாஸ்தவம்தான்.

“வந்து பாரும் ஓய் வடசேரிக்கு” என்று சவால் விட்ட அந்தோணியைத் தேடி அடி நடத்தப் போனவர் பழனியாபிள்ளை.
நாகர்கோவிலில் அந்தோணி பெரிய சட்டம்பி. சந்தையில் பலிசைக்கு பணம் விட்டு வசூல் நடத்தினான். கூடவே அடிபிடிக்கு ஆட்கள் உண்டு.

எதிரி யாராய் இருந்தாலும் தேடிப் போய் அடி நடத்த பழனியாபிள்ளையால்தான் முடியும். துணைக்கு புதுக்குடியிருப்பு ஸ்டீபன் நாடாரை கூட்டிக் கொண்டு போவார். சந்தைக்கு வண்டி கொண்டும் போது இரண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நெருக்கமானது.

வடசேரி ஏற்றம் முடிந்து திருவனந்தபுரம் ரோட்டின் திருப்பத்தில் அந்தோணி நிற்பதைப் பார்த்ததும் நெருங்கி சென்றார்.
இவர் சாடி வருவதைப் பார்த்ததும் வெட்டுக்கத்தியைத் தூக்கினான் அந்தோணி. இரண்டு பக்கமும் நல்வாய் உள்ள வெட்டுக்கத்தி. தாமரைக்குளம் இசக்கி ஆச்சாரி பட்டறையில் அடித்தது.

கழுத்தில் கிடந்த துவர்த்தை முறுக்கிக் கொண்டு வெட்ட வரும் கையை பிடிக்க முன்னே பாய்ந்தார் பழனியாபிள்ளை. அதற்குள் ஆறடி உயரம் இருக்கும் ஸ்டீபன் நாடார் வலது காலைத் தூக்கி சுழற்றி அந்தோணியின் கையில் உதைத்தார். வெட்டுக்கத்தி எகிறி விழுந்தது. ஆனால் கால் கரண்டையில் வெட்டு விழுந்தது. அவர் அதை கூட்டாக்கவில்லை. அடி தொடங்கியதும் சந்தைக்கு வந்த கூட்டம் சிதறியது.

வெட்டுக் கத்தி கீழே விழுந்ததும் அந்தோணி ஒரு நிமிடம் திகைத்துப் போனான். கண்ணை மூடி முழிப்பதற்குள் அந்தோணியின் கழுத்தை ஒரே பாய்ச்சலில் எட்டிப்பிடித்தார் பழனியாபிள்ளை. இடது கையால் அவனது வலது கையைப் பிடித்துக் கொண்டு, தனது வலது காலை அந்தோணியின் இரண்டு கால்களுக்கும் பின்னால் மடித்து கழுத்தை நெட்டித் தள்ளினார். அவன் கீழே விழுந்ததும், வலது முட்டியால் இடது நெஞ்சில் டம்மென்று ஒரு இடியை இறக்கினார். வலது கையால் இரண்டு விலா எலும்புகளிலும் குத்து குத்தென்று குத்தினார். அந்தோணியின் ஆட்கள் யாராவது வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி நின்றார் ஸ்டீபன் நாடார். காலில் இரத்தம் ஒழுகிக் கொண்டுதான் இருந்தது.

“இடது நெஞ்சிலும் விலா எலும்பிலும் இடிச்சா போறுண்டே. தாயோளி எத்தனை குப்பி காயத்திருமேனி தைலம் குடிச்சாலும் வறட்டு இருமல் வந்துதான் சாவான் பார்த்துக்கோ” இதுதான் பழனியாபிள்ளையின் அடிமுறை சூட்சமம்.

படக்கூடாத இடத்தில் அடிபட்டு வர்மம் ஏறி வருபவர்களுக்கு அவர் வைத்தியமும் பார்ப்பார்.

“அடி வாங்கினதும் மூத்திரத்தை குடிச்சியா” என்று வைத்தியத்துக்கு வந்தவனிடம் கேட்பார்.

“ஈ” என்று இளிப்பவனிடம், “ஓம் மூத்திரத்தைதானே குடிச்சியாணு கேட்டேன்” என்பார்.

“வர்மத்துக்கு பெஸ்ட் மருந்து அதாண்டே” என்று அடிமுறை சொல்லித் தரும்போது சொல்வார்.

விளையாடுகையில் அடிபட்டவனை அப்படி குடிக்கவும் வைப்பார்.

அது முதலுதவிதான். அதன்பிறகு வேலிபருத்தி இலையை அரைத்து சாறு பிழிந்து நாட்டுக்கோழி முட்டையில் கலக்கிக் கொடுப்பார். இது இரண்டு மூன்று நாளைக்குத் தொடரும்.

பின்னர் வேலப்பனை விட்டு, மூன்று நாளைக்கு தெண்டல் பிடித்து வரச் சொல்லுவார். நீண்ட மூங்கில் கழியில் கட்டப்பட்ட கண்ணியுடன் வேலப்பன் தோப்பெல்லாம் அலைவான். வேலிகளில் தலை ஆட்டிக் கொண்டு மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கும் தெண்டல். தூரத்தில் நின்றபடியே கண்ணியை அதன் கழுத்தில் மாட்டி ஒரு இழுப்பு இழுத்தால் மாட்டிக் கொள்ளும். நாலைந்து பிடித்ததும் சுருக்குப் பையில் போட்டு பழனியாபிள்ளையிடம் கொடுப்பான்.

தலையையும் வாலையும் வெட்டி, தோலை உறித்து, தெண்டலை உரலில் போட்டு இடிக்கச் சொல்வார். இறைச்சியை முரட்டு வெள்ளைத்துணியில் வைத்து பிழிந்து, சாறு எடுத்து அரைத்தத் திப்பிலியைச் சேர்ப்பார். அதனுடன் வில்லுக்குறியில் இருந்து வாங்கி வந்த வடிப்புச் சாராயத்தை ஊற்றிக் கலக்குவார். சரக்கு நல்ல வடிப்பாக இருக்க வேண்டும். சாராயத்தில் ஒரு குச்சியை நனைத்து கொளுத்துவார். அது எரிந்தால், “பெஸ்ட் அயிட்டமிடே” என்று முகம் மலர்வார்.

“கண்ணை மூடிட்டுக் குடி. காபி கடையிலே போய் பத்து தோசையும் ஆறு இரசவடையும் தின்னு. முடிஞ்சா துரை கடையிலே ஆட்டு எலும்பும் நெஞ்சாங் குழலும் வேண்டி சீரகமும் மிளகும் உள்ளியும் போட்டு சூப்பு வைச்சுக் குடி. ஒரு கைப்பிடி உளுந்தை தண்ணில ஊற வைச்சு காலம்பர திண்ணுட்டு தாமரைக்குளம் வரைக்கும் நடந்துட்டு வா” என்று கூறுவார்.

வசதி உள்ளவனுக்கு இதே பக்குவத்தில் விடைக்கோழி குஞ்சு வைத்தியம் நடக்கும். கொம்பரக்கு கசாயமும் கொடுப்பார். அடிபட்டவன் ஐந்தாவது நாளில் நெஞ்சை மலத்திக் கொண்டு யாரை அடிக்கலாமுணு நடப்பான்.

ஆனால் அவர் குடித்து நான் பார்த்ததே இல்லை.

“எத்தனைக் கலை தெரிஞ்சாலும் அது ஆளைச் சாய்ச்சுப் போடும் பார்த்துக்கோ” குடிக்கு எதிராக அவர் செய்யும் பிரச்சாரம் இது.

அதிக உயரம் இல்லை. அதற்காக கட்டையன் என்றும் சொல்ல முடியாது. எப்போதும் கதர் ஜி்ப்பாவை அணிந்து, முழுக் கையை மடித்து விட்டிருப்பார்.

உருண்டு திரண்ட அவருடைய கையில் ஒரு தாயத்து கட்டப்பட்டிருக்கும். அவர் ஜிப்பாவைக் கழற்றி நான் பார்த்ததே இல்லை. வேட்டியைத் தார்ப் பாய்ச்சிக் கொண்டு அடவுகளைச் சொல்லித் தரும் போது கூட ஜிப்பாவோடுதான் நிற்பார். சாயங்காலம் நன்றாக இருட்டிய பிறகு ஆளில்லாத இடமாகப் பார்த்து குளத்தில் இறங்கி குளிப்பார்.

“ரெட்டைப் பாளை உடம்பு கேட்டியா. இரண்டு கருப்பட்டி உருட்டி வைச்ச மாதிரி ரெண்டு நெஞ்சும் இருக்கும்,” எங்க அப்பா சொல்வார்.

“அவன் அப்பா சிற்பத்திலேயே தவறிட்டாரு. அவ அம்மை வீடு வீடா நெல்லு குத்தி வளத்தா. சம்பா அரிசி தவுட்டல கருப்பட்டி போட்டு விரவி கொடுப்பா. தேகத்துக்கு ரொம்ப நல்லது பார்த்துக்கோ”

எங்க அப்பாவுக்கும் அவருக்கும் எழெட்டு வயது வித்தியாசம் இருக்கும். சின்ன வயதில் இரண்டு பேரும் உப்பளத்தில் ஒன்றாக வேலைக்கு போயிருக்கிறார்கள். கொஞ்சம் வளர்ந்ததும் பழனியாபிள்ளைக்கும் அப்பாவுக்கும் இடைவெளி ஏற்பட்டது.

“அவன் போக்கு நமக்கு சுகப்படல. சேர்க்கை மாறிப் போச்சு. போலீசு கேசுண்ணு போனா நமக்கு ஒக்காது. நான் ஒதுங்கிட்டேன்” என்பார்.

ஆனாலும் சாயங்காலம் வேலைக்குப் போய் விட்டு வீட்டுக்கு வரும் போது, ஆலமரத்தடியில் பழனியாபிள்ளை நின்றிருந்தால் பேசாமல் வரமாட்டார்.

“ஓய் எத்தான் ஒரு வாய்க்கு வெத்தலை தாரும்” என்று அவர் கேட்டதும் அப்பா பழைய பிஎஸ்ஏ சைக்கிளை நிறுத்துவார்.

அதில் இருந்து இறங்காமலே பேச்சு நடக்கும்.

வெற்றிலை மட்டும்தான் பழனியாபிள்ளை போடுவார். யாழ்ப்பாணப் புகையிலையை வெட்டி நீட்டினால் வேண்டாம் என்று மறுத்து விடுவார்.

“சவம் நெஞ்சை அடைச்சு விக்கல் எடுக்கும்”

“சட்டம்பிதான். ஆனால் ஆளு தராதரம் தெரியும். எல்லாத்திட்டேயும் கை நீட்டமாட்டான். சின்னப்பிள்ளையில சண்டை நடந்தா அவன்தான் விலக்கி விடுவான். சந்தைக்கு வண்டி கொண்டு போகையில மேற்கே உள்ள வியாபாரிகளோடு சேர்க்கை வந்தது. அடிமுறை படிச்சான். இப்பம் பெரிய சட்டம்பி ஆயாச்சு,” அப்பா பழனியாபிள்ளையின் மறு அவதாரம் நடந்த கதையை சொல்வார். .

பெரிய சட்டம்பி என்று பெயரெடுத்தாலும், அவரிடம் ஒரு மரியாதை கலந்த பயம் எல்லோருக்கு்ம் இருந்ததது. பஞ்சாயத்துக்கு வருபவர்களுக்காக ஒரு தரப்பில் பேசும் போது அவர் கை நீளும். இபபடித்தான் நிறைய இடத்தில் பகையை வளர்த்துக் கொண்டார்.

ஊர் வாலாமடைகள் எங்கேயோ போய் சண்டை போட்டு விட்டு, “பழனியாபிள்ளைக் கூட்டிட்டு வாரோம். அவரு தருவாரு” என்று சவால் விட்டுட்டு வருவார்கள். அவனுகளுக்காக சண்டைக்குப் போனார்.

திருவனந்தபுரத்துக்கு நெல் கொண்டு போகையில் புலியூர்குறிச்சிக்குக் கிட்டே பழைய பகையாளி ஆட்களுடன் வந்து செறுத்தான். வண்டியில் இருந்த ஊணிக் கம்பைப் பிடுங்கி அத்தனை பேரையும் நொறுக்கி அனுப்பினார். அவரைப் பற்றி என்னென்னமோ கதை சொன்னார்கள்.

ஊரில் இருக்கும் போது அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். சந்தைக்கெல்லாம் தனி ஆளாகத்தான் போனார்.

ஒற்றைக்கட்டை என்றாலும் சில ஊர்களில் அவருக்கு பெண்கள் தொடர்பு இருந்தது. ஆனால் வெளியே தெரியாது. சிதம்பரவடிவு விசயம் அவரை சிக்கலில் மாட்டி விட்டது. பிரச்சினை போலீசுக்குப் போனது. ஆனால் போலீஸ்காரனை அவர் அடிப்பார் என்று நான் ஒரு போதும் நினைக்கவில்லை.

சிதம்பரவடிவு விசயமாக அவரைத் தேடி எஸ்.ஐ. கொச்சுப்பிள்ளை மந்தைக்கு வந்த போது இருவரும் அமைதியாகத்தான் பேசினார்கள்.

“ஓய் பழைய மாதிரி இல்ல. மேல வரைக்கும் பெட்டிசன் போயிருக்கு. உமக்கு வேண்டாதவன் எவனோ எழுதி போட்டிருக்கான். ஏன் புடிக்கலேணு என் தலையைப் போட்டு உருட்டுகான் ஆபிசரு. நீரு பேசமா எங்கூட வந்துரும். கோர்ட்டுல எல்லாம் பார்த்துகிடலாம்” என்றார் கொச்சுப்பிள்ளை.

“அவ நாண்டுட்டு நிண்ணதுக்கு என்னை எதுக்குவே புடிக்கணுங்கீறு”

“அவளுக்கு வயத்துல ஆக்கிட்டு கெட்ட மாட்டேனு சொன்னதுனாலதான அவா செத்தா”

“நான் வயத்துல ஆக்கினதெல்லாம் கெட்டணுமுண்ணா நெறைய பேர கெட்ட வேண்டி வரும் பார்த்துகிடும்”

பேச்சு தடிக்க ஆரம்பித்தது.

“என்னவே பெரிய மயிரு மாதிரி பேசுகேறு. நானும் போட்டும் போட்டுமுணு பார்த்தா ரொம்ப ஏறிட்டு போகு பேச்சு” என்று கத்தி விட்டு, பழனியாபிள்ளையின் ஜிப்பாவை நெஞ்சோடு சேர்த்து இழுத்தார்.

“ஓய் கைய எடும். இது நல்லதுக்கு இல்ல பார்த்துகிடும்”

“எரப்பாளி கூதிமவன. போலீசுகிட்ட எதிர்த்து பேசுகியால” செவிட்டில் ஒங்கி அறைந்தார் கொச்சுப் பிள்ளை.

அவ்வளவுதான். வினை விழுந்தது. மின்னல் வேகத்தில் கொச்சுப்பிள்ளையைத் தூக்கிச் சுற்றி, பொத்தென்று போட்டார். தரையில் துருத்திக் கொண்டிருந்த மரத்தின் வேர் முண்டு முதுகில் நச்சென இடித்ததும் “எம்மா” என்றார் கொச்சுப்பிள்ளை. வலியில் ஒரு நிமிடம் அப்படியே உட்கார்ந்தார்.

பழனியாபிள்ளை பாய்ச்சியிருந்த தாரை இறக்கி விட்டு மந்தையை விட்டு வெளியே நடந்தார்.

“பார்த்துகிடுகமில உன்னை” வெப்ராளம் தாங்காமல் அலறினார் கொச்சுப்பிள்ளை.

“லே இனிமேல இங்க விளையாட்டு நடக்காணு பார்க்கலாம். நல்லவழியா பேசிக் கூட்டிட்டு போகலாமுணு வந்தேன். துப்பாக்கியை எடுத்துட்டுவரல. தப்புனான். இல்லாட்ட செறுக்கியுள்ளய குழியில கிடத்தி கதம்பையில அடுக்கிட்டுப் போயிருப்பேன்”

எங்களைப் பார்த்து கத்தி விட்டு, மெதுவா முதுகைப் பிடித்தவாறு எழுந்தார் கொச்சுப் பிள்ளை.

பைய நடந்து சுடுகாட்டு கேட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த புல்லட்டை ஸ்டார்ட் செய்து கிளம்பிப் போனார்.

நாங்களும் மந்தையில் இருந்து ஆலமரத்தடிக்கு போனோம்.

போலீஸ் பட்டாளம் வந்து அவரை தூக்கிட்டுப் போவார்கள். வர்ம அடி வாங்கி வருபவருக்கு வைத்தியம் பார்க்க வேண்டி வரும் என்று நினைத்தோம். ஒன்றும் நடக்கவில்லை. குளத்தங்கரை பக்கமாய் பலமுறை கொச்சுப்பிள்ளை பைக்கில் போனார். அதே ஆலமரத்தடியில் பழனியாபிள்ளை நின்று கொண்டிருந்தார். தினசரி மந்தையில் விளையாட்டு நடந்தது.

“வக்கீலு சுந்தரம் பிள்ளை எல்லாத்தையும் பார்த்துக்கிடுவாரு. திருவிதாங்கூருல அவருக்கு ஒருவாடு ஆளுகோ உண்டு கேட்டியா. மேல யாரையாம் புடிச்சு காரியத்தை பாஸாக்கியிருப்பாரு” என்று விசயம் தெரிந்தவர்கள் ஊரில் பேசிக் கொண்டார்கள்.

2

tamil4sa8

ஒரு வாரம் மழை ஊற்று ஊற்று என்று ஊற்றியது.

“சை என்னத்துக்கு இந்த மழை. இந்தப் போக்குல போனா வெளங்கினாலதான். பயிரு அம்புடம் அழுகிரும்” வயலில் நடவை முடித்தவர்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

கையை வைத்து கோரும் அளவுக்கு குளத்தில் தண்ணீர். தெருவெல்லாம் தண்ணீர்ப் பாம்புகள். காற்றில் தணுப்பு நன்றாக ஏறி விட்டது. பஜனை மடத்துக்கு வெளியேயும் அம்மன் கோவில் படிப்புரையிலும் உட்கார்ந்து சர்வதேச விசயங்களை அலசி தீர்ப்புச் சொல்லும் ரிட்டையர்டு கேசுகள் வெளியே இறங்கவில்லை. ஒன்றுக்கு மூணாக சாக்கை விரித்து, கம்பளியைப் போர்த்திக் கொண்டு வீட்டுக்குள்ளேயே படுத்து கிடந்தார்கள்.

மழைக்கு முந்தியே இழுத்துக் கொண்டு கிடந்த பழனியாபிள்ளையின் அம்மா சிவகாமி ஆச்சி மட்டும் போய்ச் சேர்ந்தாள்.

மழையில் நனைந்து கொண்டே சுடுகாட்டுக்கு போனோம். கொள்ளி வைப்பதற்காக தலையில் புது துவர்த்தைக் கட்டியபடி வரும்போது எல்லோர் பார்வையும் அவர் உடம்பு மீதுதான் இருந்தது.

“தேகத்தை பார்த்தீரா. குத்துனா கத்தி இறங்காதுவே. நம்ம ஆளுகளுல என் ஆயுசுல இப்படி ஒருத்தன பார்த்ததில்ல”

செல்லம்பிள்ளை பாட்டா மாகாதேவன் பிள்ளையிடம் கிசு கிசுத்தார்.

கொள்ளி வைத்து முடித்ததும் மொட்டைப் போட்டுக் கொண்டார். ஆனால் மீசை இருக்கட்டும் என்று சொல்லி விட்டார்.

நான்கு நாட்களில் மழை நின்றது. சின்னப்பயல்கள் தென்னாமடையின் மேலே இருந்து அம்மணமாக தண்ணீரில் சாடினார்கள்.

“லே கரையேறுங்கல. புதுத்தண்ணில ரொம்ப நேரம் குளிக்காதீங்கோ. தடுமல் புடிச்சிக்கிடும்” என்று அம்மாக்கள் கரையில் நின்று சொல்வதை எவனும் கேட்கவில்லை.

குளித்து விட்டு கரையேறி போட்டிருந்த நிக்கரால் தண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள். குறைந்தது ஒரு மணிக்கூராவது குளித்திருக்க வேண்டும். குளிரில் இலேசாகக் குறுகிப் போய் நின்றார்கள். இரத்த சிவப்பில் கண்கள். குஞ்சுகள் சுருங்கிப் போய் காந்தாரி மிளகாய் மாதிரி இருந்தன. சிதம்பரவடிவின் தம்பி பாக்கியமும் அதில் இருந்தான். கீரைத் தண்டு மாதிரி நெடுக வளர்ந்த பயல். முகத்தில் மீசை பென்சிலால் வரைந்தது போல முளைக்க ஆரம்பித்திருந்தது.

சிதம்பரவடிவின் அப்பா கோயில் முக்கில் சுக்குக்காப்பி கடை வைத்திருந்தார். சொந்த ஊர் உண்ணாமலைக்கடை. தொடக்கத்தில் கோவில் மதிலையொட்டி அவர் கூரை போட்ட போது சிரீகாரியம் பிரித்து எறிந்து விட்டார். விசயம் பழனியாபிள்ளைக்கு போனதும் ஜிப்பாவைக் கூட கழற்றாமல் கோயிலுக்குள் இருந்த ஆபிசுக்குள் நுழைந்தார்.

“ஓய் நீரு பெரிய மத்தவனா? இரப்பெட்டியை கலக்கிறுவேன். சுக்குக்காப்பியை வித்து பொழைச்சிக்கிட்டிருக்கான். அவன் கடையை பிரிச்சு எறிஞ்சிருக்கேரு. நாளைக்கு நான் இங்கண வருவேன். மொத இருந்த மாதிரி கடை இல்லேண்ணா என்ன நடக்குமுணு பாரும்”

சிரீகாரியத்துக்கு ஒண்ணுக்கும் இரண்டுக்கும் சேர்ந்து வருவது போல் இருந்தது.

“அதைப் போட்டு பெருசாக்காண்டாம். நான் இண்ணைக்கு கடையை போட்டுக் கொடுத்திருகேன்” என்றார்.

கடையில் நல்ல வியாபாரம். அவளுடைய அம்மா சூடாக பருப்பு வடையும் உளுந்த வடையும் போடுவாள். சில நாள் பப்பட பஜ்ஜியும் உண்டு. இரண்டு மணிக்கூரில் விற்று விடும். சிதம்பரவடிவு கடைக்கு வர ஆரம்பித்த போதுதான் பழனியாபிள்ளைக்கும் அவளுக்கும் பச்சம் உண்டானது. அவள் செத்து ஒரு மாதம் கடை திறக்கவில்லை. போலீசுக்கும் பழனியாபிள்ளைக்கும் நடந்த அடிபிடி பற்றி தெரிந்ததும் ஊரை விட்டு உண்ணாமலைக்கடைக்கே போக முடிவு செய்தார்கள்.

“அதுகளை நான் உபத்திரவம் செய்ய மாட்டேன். ஊரை விட்டு போகாண்டாமுணு சொல்லு” என்று ஆள் அனுப்பினார்

கடை மறுபடியும் நடந்தது. சிதம்பரவடிவின் அம்மா கடைக்கு வருவதை நிறுத்திக் கொண்டாள். பாக்கியம் சாயங்காலம் கடையில் கூடமாட அப்பாவுக்கு உதவிக்கு இருந்தான்.

சாயங்காலம் அந்தப் பக்கமாக போனால் கூட பழனியாபிள்ளை கடையை நோக்கி தலையை திருப்புவதில்லை. அவருடைய அடிதடிகளும் கொஞ்சம் குறைய ஆரம்பித்திருந்தன.

கடைக்கு வெளியே உள்ள பெஞ்சில் ஒரு கூட்டம் உட்கார்ந்து அரசியல் பேசிக் கொண்டிருக்கும். முத்தம்பெருமாள் அண்ணாச்சிதான் நீட்டி முழக்கிக் கொண்டிருப்பார். அண்ணாமலை சர்வகலாசாலையில் படித்தவர். “பிள்ளைப்” பட்டம் தேவையில்லை என்று தூக்கி எறிந்து விட்டார். பேசுகையில் இடையிடையே இங்கிலீசு வார்த்தைகள் வந்து விழும். சுக்குக்காப்பி ஊற்றிக் கொடுத்து விட்டு, பாக்கியம் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பான். அண்ணாச்சி பேசும் விசயங்கள் அவனுக்கு லயிப்பாக இருந்தன.

“சுதந்திரம் வந்து நாளு எவ்வளவு போயாச்சு. நாங்கதாம் வாங்குனோம், நாங்கதான் வாங்குனோமுண்ணு எவ்வளவு நாளைக்குத்தான் சொல்லிக்கிட்டிருக்கது. எதாம் நடந்திருக்காடே. பக்கா காங்கிரசுகாரன் ஒருத்தனும் இல்லை கேட்டியா. இப்பம் இருக்கவனுகோ சொக்கா காங்கிரசுகாரன்”

பரம்பரை காங்கிரசுகாரர்களான ஊர் மூத்தப்பிள்ளைகளுக்கும் அண்ணாச்சிக்கும் ஏழாம் பொருத்தம்.

“லே விசக்கிருமி என்ன சொல்லுகான்” என்று தங்களுக்குள் விவாதித்துக் கொள்வார்கள்.

பஞ்சாயத்து போர்டு எலெக்சன் வந்த போது சண்முகம் பிள்ளையை எதிர்த்து அண்ணாச்சி நின்றார். ஆனால் தோற்றுப் போனார். ஆனால் அவர் கட்சியின் செல்வாக்கு பெருக ஆரம்பித்தது. கட்சிக்காரர்களில் பலருக்கு அரசியல் பேச தோதுவான இடமாக சுக்குக்காப்பி கடை மாறியது.

நாகர்கோவிலில் தலைவர்கள் முழக்கம் செய்யும் போது ஊரில் இருந்து ஒரு கூட்டம் போனது. பாக்கியத்தையும் அண்ணாச்சி கூட்டிட்டுப் போனார்.

அவனுக்கு படிப்பில் பெரிய விருப்பமில்லை. ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் பள்ளிக்கூடத்துக்குப் போவதை நிறுத்திக் கொண்டான். ஞானக்கண் வாத்தியார் கடைக்கு வந்து சொல்லிப் பார்த்தார்.

“தோளுக்கு மேல வளந்தாச்சு. இனி நான் சொன்னா கேக்க மாட்டான். அவன் தலையில சுக்குக்காப்பி கடையினு எழுதியிருந்தா என்ன செய்ய முடியும்? விதிபோல நடக்கட்டும்” அவன் அப்பா வாத்தியாரிடம் சொல்லி அனுப்பினார்.

பாடப்புத்தகத்தில் இல்லாத அக்கறை பேப்பர் படிப்பதில் இருந்தது. முத்தம்பெருமாள் அண்ணாச்சி படித்து விட்டு எட்டாக சுருட்டி கைக்கிடையில் வைத்திருக்கும் தினமணியை வரி விடாமல் வாசித்தான். ஆனால் சுக்குக்காப்பி கடை அரசியல் விவாதங்களில் அவன் பேசுவதேயில்லை. கேட்டுக் கொண்டிருப்பான். காலையில் ஒரு தடவையும், சாயங்காலம் கடை அடைத்ததும் இன்னொரு முறையும் போய் குளத்தில் குளித்தான். இக்கரைக்கும் அக்கரைக்கும் நீந்தி நீந்தி நெஞ்சு பாம்பு படம் போல் விரிய ஆரம்பித்தது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே “அறிவுலக மேதை” என்று பெயரெடுத்த தலைவர் ஊருக்கு பேச வந்தார். அண்ணாச்சியின் ஏற்பாடு. இரண்டு பேரும் ஒன்றாய் சர்வகலாசாலையில் படித்தவர்கள்.

சாயங்காலம் கூட்டம் நடக்கையில் சண்முகம் பிள்ளையின் வழி நடக்கும் சில “காங்கிரஸ் தியாகிகள்” கூட்டத்தில் தண்ணீர்ப் பாம்பை பிடித்து விட்டார்கள்.

கூட்டம் கலைந்து, பெகளம் தொடங்கியது. மேடையின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த பாக்கியம், “எவமுல பாம்பைப் புடிச்சு வுட்டது” என்று சொல்லிக் கொண்டே கீழே சாடினான்.

சண்முகம் பிள்ளையின் மகனும் வேறு இரண்டு பேரும் முன்னே வந்து, “நாங்க தாம்ல. என்ன செய்வேறு நீரு” என்றார்கள்.

கொஞ்சமும் யோசிக்காமல் கையை மடக்கி சண்முகம் பிள்ளையின் மகனின் நெஞ்சில் ஓங்கி குத்தினான் பாக்கியம். “டொம்” என்று சத்தம் கேட்டது. சண்முகம் பிள்ளையின் மகன் பின்னால் விழுந்தான். கூடவே நின்ற இரண்டு பேரும் பின் வாங்கினார்கள்.

சட்டைப் பிடித்து அவனைத் தூக்கிய பாக்கியம், “அலவு திரும்பிரும். பஞ்சாயத்து தலைவருக்கு மகன்னா பெரிய ஊச்சாளியா. தரிக்குத்தியிலே வைச்சு தரிச்சி போடுவேன் பார்த்துக்கோ. அந்தால போயிரு” என்றான்.

முத்தம்பெருமாள் பெருமிதத்துடன் மேடையில் நின்று பார்த்தார். நடந்த தகராறு குறித்து “அறிவுலக மேதை” முழங்கினார். வன்முறையை ஆதரிக்க முடியாது என்றார். ஆனால் தம்பி பாக்கியத்தைப் போல் எல்லோரும் சுயமரியாதையைக் காப்பாற்ற “ரௌத்திரம் பழகினால்” இயக்கம் கோட்டையில் அமரும் காலம் அதிக தொலைவில் இல்லையென்றார்.

நடந்த விசயம் பழனியாபிள்ளையின் காதுகளுக்கு போனது.

“ஏ நீ எனக்காக வரணுமுண்ணு கேக்கல. இந்த பயக்கள இப்பமே இரண்டு தட்டு தட்டி வைக்கணும் பார்த்துக்கோ. இல்லேணா அவனுக வளர்ந்துருவானகோ. அவனுக கட்சியும் வளர்ந்துரும்” பழைய காங்கிரசு உறவை மனதில் வைத்து சண்முகம் பிள்ளை தூபம் போட்டார்.

“அவனுக போக்குல கூட்டம் போட்டுட்டு போறான். நீரு என்னத்துக்கு பாம்பை புடிச்சு விடச் சொன்னேரு. சவத்த விட்டுத் தள்ளும். இனி வந்தா பார்த்துக்கிடலாம்” என்று சொல்லி விட்டார்.

பஞ்சாயத்துத் தலைவரின் மகனை அடித்ததில் இருந்து முத்தம் பெருமாளும் பாக்கியமும் இயக்கத் தோழர்களும் ஒரே நாளில் ஊரில் பெரிய ஆட்களாகி விட்டார்கள்.

நாகர்கோயிலுக்கு வரும் பெரும் தலைவர்கள், அதற்கு முன்னதாக முத்தம் பெருமாள் அண்ணாச்சியின் அழைப்பின் பேரில் ஊரில் ஒரு அரை மணி நேரம் பேசி விட்டுப் போனார்கள். இயக்கத்தின் கோட்டையாக ஊர் மாற ஆரம்பித்தது. காங்கிரஸ்காரர்களின் பிள்ளைகளும் இரகசியமாக இயக்கத்துக்கு ஓட்டுப் போடப் போவதாகப் பேசிக் கொண்டார்கள்.

இயக்கத் தலைவரே நாகர்கோவிலில் பேச வரும் போது, “நாஞ்சில் நாட்டில் நான் கண்டெடுத்து முத்துதான் இந்த முத்தம்பெருமாள்” என்று தூக்கி வைத்து பேசினார்.

அடுத்த பஞ்சாயத்து போர்டு எலக்சன் வந்த போது சண்முகம் பிள்ளை நிற்கவில்லை. அவருடைய மைத்துனரும் பிரபல வக்கீலுமான சுந்தரம் பிள்ளை எம்.ஏ. பி.எல். களமிறங்கினார்.

அண்ணாச்சிக்கு பிரச்சாரம் செய்ய “அறிவுலக மேதையே” ஒருமுறை மெனக்கெட்டு வந்து போனார்.

எலெக்சனுக்கு ஒரு நாள் முன்பு சாயங்காலம் சுந்தரம் பிள்ளை வீட்டில் எல்லோருக்கும் இட்டிலி, கிச்சடி, சாம்பார், இரசவடையோடு பார்ட்டி. பாசிஞ் சோ சிகரெட் பாக்கெட்டுகள் இளவட்டங்களுக்கு விளம்பப்பட்டன. வாயுவைக் கிளப்பும் இரசவடையை புகை விட்டு அடக்கலாம் என்று ஒரு கூட்டம் குளத்தாங்கரைக்கு புறப்பட்டது. போகிற வழியில் சுக்குக்காப்பி கடையில் பாக்கியத்தைப் பார்த்ததும் சுந்தரம் பிள்ளையின் மகன் அவன் கட்சியின் பேரைச் சொல்லிவிட்டு “ஊ” என்று ஊளையிட்டான். கூட்டமும் மொத்தமாக ஊளையிட்டது.

“லே அண்டி ஒரப்பு இருந்தா நேர்ல பேசுங்கோ. ஊளை ஏன் விடுகியோ” என்று கடையில் நின்ற படியே பாக்கியம் சொன்னான்.

வாய்த்தகராறு நீண்டது. கைகலப்பு நடக்கவில்லை.

“ஒனக்கு ஒரு நாள் உண்டு,” என்று கூட்டம் சொன்னது.

“இதை கூட புடுங்க முடியாது” என்று பாக்கியம் தலைமுடியைக் காட்டினான்.

காப்பி விற்று முடித்ததும் பெஞ்சைத் தூக்கி கடைக்குள் போட்டு விட்டு, தட்டியை வைத்து வாசலை அடைத்தான்.

“எப்பா நீ வீட்டுக்கு போ. நான் அண்ணாச்சி வீடு வரைக்கும் போயிட்டு வாரேன்” என்றான்.

இரண்டு எட்டு நடந்திருப்பான். சுந்தரம் பிள்ளையும் பழனியாபிள்ளையும் எதிரே வந்தார்கள்.

கிட்டே நெருங்கியதும் என்ன ஏதென்று கேட்காமலே பளாரென்று பாக்கியத்தின் செவுளில் அறைந்தார் பழனியாபிள்ளை. தலை கிரங்கியது பாக்கியத்துக்கு.

“நீரு இப்பம் ஊருல பெரிய சட்டம்பியா” சத்தம் போட்டார் பழனியாபிள்ளை.

சுந்தரம் பிள்ளை பார்த்துக் கொண்டே நின்றார். பாக்கியத்துக்கு மனசிலாகியது. பல கேசுகளில் பழனியாபிள்ளை உள்ளே போகாமல் பார்த்துக் கொண்டவர் சுந்தரம் பிள்ளை. அவருடைய மகனுடன் சண்டை போட்டதற்காக இப்போது நியாயம் கேட்க வந்திருக்கிறார்.

அடி வாங்கியபடி அப்படியே நின்று கொண்டிருந்தான். அக்கா சாவதற்கு காரணம் இவர்தான். அந்த கோபம் ஒரு பக்கம். அடிவாங்கின அவமானம் ஒரு பக்கம். வெப்ராளம் பொங்கியது. ஒரு வேகத்தில் பழனியாபிள்ளை மீது பாய்ந்தான். சட்டென விலகி நின்று அவன் காலைத் தட்டி விட்டார். கீழே விழுந்த பாக்கியத்தை கழுத்தில் கிடந்த துவர்த்தோடு பிடித்து தூக்கி வீசினார்.

கமந்து விழுந்தவனின் மூஞ்சியெல்லாம் மண். ரோட்டில் கிடந்த சரல் நெற்றியில் இடித்து லேசாகப் புடைத்தது. கீழே விழுந்தவனை தூக்கி செவுளில் இன்னும் நாலு அறை வைத்தார்.

“நம்ம மேலேயே கை போட பாக்கியா. அதுக்கு ஒருத்தன் பொறந்து வரணும் பார்த்துகோ. வேற எவனாம் இருந்தாண்ணா இப்பம் குளத்தில பொணமா மொதப்பான். நீ ஆனதால விட்டேன். ஓடி தப்பிக்கோ தாயோளி” என்று பாக்கியத்தை விட்டு விட்டு சுந்தரம் பிள்ளையை கூட்டிக் கொண்டு போனார்.

பாக்கியம் நேராக முத்தம் பெருமாள் அண்ணாச்சி வீட்டுக்குப் போனான். நடந்ததைச் சொன்னான்.

“இருக்கட்டுமிடே. இது நல்லதுதான் பார்த்துக்கோ. விசயம் பரவுனா நமக்கு பத்து ஓட்டு கூடத்தான் கிடைக்கும். நீ கொஞ்சம் அங்கண இங்கண இரண்டு நாளைக்கு தனியாக போகாத. பழனியாபிள்ளை உன்னை அடிச்சாருணு தெரிஞ்சா மத்த பயக்களும் கையைப் போடலாமுணு நினைப்பானுகோ” என்றார்.

எலெக்சன் அன்று சுந்தரம்பிள்ளை சொக்காரமாருடனும் கட்சிக்காரர்களுடனும் ஊரை வலம் வந்தார். பழனியாபிள்ளையை காணவில்லை. முத்தம்பெருமாள் அண்ணாச்சியின் கட்சி கேம்ப் ஆபிசு வழியே போகும் போது எளக்காரமாக ஒரு பார்வை பார்த்தார்கள்.

பஞ்சாயத்து யூனியன் ஆபிசில் ஓட்டு எண்ணும் நாளன்றும் அண்ணாச்சியின் கூடவே இருந்தான் பாக்கியம். பக்கத்து பஞ்சாயத்துகள் எல்லாம் எண்ணி முடிந்து ஜெயித்தவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. கடைசியாக உள்ளூர் ஓட்டுகளை எண்ண ஆரம்பிக்கையில் சாயங்காலமாகி விட்டது. கீழத் தெருவிலும் மேலத் தெருவிலும் சுந்தரம் பிள்ளைக்கும் அண்ணாச்சிக்கும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. தெற்குத் தெரு முடிக்கையில் அண்ணாச்சிக்கு கொஞ்சம் ஏறியது. இனி பாக்கி எண்ண வேண்டியது ஆசாரிமார் தெரு, வாணியத் தெரு, சவளைக்காரத் தெரு, செட்டியத்தெரு, இரண்டு காலனிகள்.

“அறிஞ்ச விசயம்தாம்டே. இந்த தெருவிலேலாம் சுந்தரம் பிள்ளைக்கு ஓட்டு கூடுதலா கிடைக்காது” என்று சிலர் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.

பாக்கியம் பஞ்சாயத்து யூனியன் ஆபிசை விட்டு வெளியே வந்தான். வீட்டுக்குப் போய் புழக்கடை தாழ்வாரத்தில் தொங்கிய சுரக்குடுக்கையை எடுத்தான். அரைக் குடுக்கை அளவுக்கு ஆமணக்கு எண்ணெய் இருந்தது. இடுப்பில் ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு எண்ணெய்யை வலது கையில் ஊற்றி உடம்பு முழுவதும் தேய்த்தான்.

புழக்கடை வாசல் வழியாகவே குளத்தை நோக்கி நடந்தான். தண்ணீர் குறைந்து வெளியே தெரிந்த பாறைகளில் எல்லாம் தேர்தல் சின்னங்கள் எழுதப்பட்டிருந்தன. குளத்துப் படிக்கட்டின் இடதுபக்கம் தண்ணீரில் சாய்ந்தபடி நிற்கும் கடுக்காய் மரத்துக்குப் பின்னே மறைந்து நின்றான்.

கொஞ்ச நேரத்தில் பழனியாபிள்ளை வந்தார். ஜிப்பாவைத் தூக்கி, இடுப்பில் கட்டியிருந்த பச்சை கலர் பெல்ட்டை கழற்றினார். பாக்கியம் மெல்ல நெருங்கினான். வேட்டியை கழற்றினார். முரட்டுக் கதரில் தைத்த நிக்கர் முட்டு வரைத் தொங்கியது.

பின்னர் ஜிப்பாவை தலை வழியாக உருவ ஆரம்பித்தார். ஜிப்பா உயர்ந்து முகத்தை மூடியதுதான் தாமதம், விருட்டென தாவிக் குதித்த பாக்கியம் கத்தியை எடுத்து அவருடைய தொப்புளில் குத்தி வலது பக்கம் ஒரு இழுப்பு இழுத்தான்.

“எம்மா” என்று அலறினார். ஜிப்பா தலையில் மாட்டிக் கொண்டதால் முன்னே யார் நிற்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. அதற்குள் மறுபடியும் குத்தி இழுத்தான் இந்த முறை இடது பக்கம்.

ஜிப்பாவை கழற்றி எறிந்த பழனியாபிள்ளை, முன்னால் நின்ற பாக்கியத்தின் குரல்வளையை ஒரே எட்டில் பிடித்தார். எதிரியை எப்போதும் அவர் பிடிக்கும் இடம். உடம்பில் தேய்த்திருந்த ஆமணக்கெண்ணை வழுக்கியது. பாக்கியம் அவர் கையைத் தட்டி விட்டான்.

இரத்தம் இரண்டு தொடைகளின் வழியே வடிந்து படிக்கட்டில் பாய்ந்தது. அவர் உடம்பு முறுகியது.
நிமிர்ந்து பாக்கியத்தைப் பார்த்தார்.

“போடே நல்லா இரி” என்று கீழே விழுந்தார்.

பாதி உடம்பு படிக்கட்டிலும் பாதி தண்ணீரிலுமாக கிடந்தது. பின்னர் விலுக் விலுக் என்று இழுத்துக் கொண்டது. கிழித்த இடத்தில் இருந்து குடல் வெளியே தள்ளியது. அப்படியே கண்களை மூடினார். சற்று நேரம் அவரையே பார்த்து நின்ற பாக்கியம் கத்தியை குளத்தில் எறிந்து விட்டு நடந்தான்

தூரத்தில் “அண்ணாச்சிக்கு ஜே!” “அண்ணாச்சி ஜே!” என்று ஒரு கூட்டம் கத்திக் கொண்டே செல்வது கேட்டது.