ரெசுமே

மதிப்பிற்குரிய பேராசிரியர் சாமிநாதன்,

நான் நான்கிங் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உயிரியல் பிரிவில் பிஎச்.டி-யை முடிக்கும் தறுவாயில் உள்ளேன். என் ஆராய்ச்சியில் உங்கள் கட்டுரைகள் பலவற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ப்ரோமோப்ரோபேன் மற்றும் பிரிடாக்ஸமின் பற்றிய தங்கள் ஆராய்ச்சிகள் மிகமிக உன்னதம். அவை விஞ்ஞான உலகில் குட்டிப்புயலை விளைவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மிகையான புகழ்ச்சியில் சாமி புன்னகைத்தான்.

உங்கள் ஆய்வுக்கூடத்தில் சில ஆண்டுகள் பணிசெய்து என் அறிவையும் அனுபவத்தையும் விரிவாக்குவதை பெரும் பேறாகக் கருதுகிறேன். இந்த மின்னஞ்சலுடன் என் ரெசுமே இணைத்திருக்கிறேன்.

உங்கள் உடன்பாடான பதிலை ஆவலுடன் எதிர்நோக்கும்

டிங் ஸாங்.

பிஎச்.டி. பட்டம் பெறுவதற்கு முன்பே திரு டிங் ஸாங்கின் ரெசுமே இரண்டு பக்கங்களை நிரப்பியது. புத்திசாலிதான்.

திரு டிங் ஸாங்,

உன்னைப்போன்ற அறிவும் ஆர்வமும் மிக்க ஒரு இளைஞன் எங்களுடன் பணியாற்றுவது எங்களுக்கு நிச்சயம் பெருமை தரும். அரசாங்க மானியத்திற்கு விண்ணப்பித்திருக்கிறோம். இன்னும் ஆறு மாதத்தில் அது கிடைத்ததும் தொடர்பு கொள்கிறோம். இதற்கு நடுவில் வேறொரு நல்ல வாய்ப்பு உனக்கு கிடைக்கும் என்றும் நம்புகிறோம்.

முடிவைத் தள்ளிப்போட்டாகிவிட்டது. அடுத்தது, மத்திய டென்னஸி கல்லூரியிலிருந்து தேவகி ஜெயராமன். தேவகியின் நான்கு பக்க ரெசுமே நல்ல கனம். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி தொடங்கி பிஎச்.டி வரையில் நான்கு பட்டங்கள். அவற்றுக்குமேல் இந்தியாவிலும், யு.எஸ்ஸிலும் எட்டு ஆண்டுகள் மூலிகை ஆராய்ச்சியில். அவள் பெயரில் பதினாறு கட்டுரைகள், நான்கு புத்தக அத்தியாயங்கள். விஞ்ஞானத் திறன்களுக்கே அரைப்பக்கம். அடேயப்பா! எப்படி நாசுக்காக மறுப்பு தெரிவிக்கலாம்?

எங்கள் ஆராய்ச்சிக்குழுவில் உன் நீண்ட அனுபவத்திற்கு தக்கபடி பொறுப்பான பதவி காலியாக இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். என் சக-பேராசிரியர்களிடம் உன் ரெசுமேயை கொடுக்கிறேன், அவர்களில் யாரேனும் உனக்கு வாய்ப்பளிப்பார்கள் என்ற நம்பிக்கையில்.

ஒப்புக்கு எழுதப்பட்ட கடிதத்துக்கு உடனே ஒரு பதில்.

பொறுப்பான பதவி இல்லாவிட்டால் பரவாயில்லை. எந்த மட்டத்திலும் நான் வேலை செய்யத் தயார். இதுவரை நூறு பேருக்குமேல் கைவிரித்துவிட்டார்கள். தயவுசெய்து எதுவானாலும்… கருணை காட்டுங்கள்! என்னை நம்பி இந்தியாவில் முதியோர் நாலுபேர். ‘வெஸ்டர்ன் ப்ளாட்டிங்’தான் எனக்கு தெரியும். ‘வெஸ்டர்ன் குகிங்’ தெரிந்தால் சமையல் வேலைக்காவது போகலாம். ப்ளீஸ்…

இவ்வளவு படித்து இத்தனை பெரிய ரெசுமேவை சுமந்த தேவகி ஜெயராமனை தன்னிடம் கையேந்த வைத்த பொருளாதார நிலையை சாமி நொந்துகொள்வதற்குள்…

அபாய மணியின் ஓலம்.

அலட்சியம் செய்ய முடியாதபடி உச்சத்தில் காதை துளைத்தது. நடைவழியில் காலடி ஓசைகள். அபாயம் என்ன, எங்கே என்றெல்லாம் யோசிக்காமல் சாமியும் கும்பலுடன் சேர்ந்துகொண்டான். கட்டடத்தின் வாயிலை அடைந்தபோது, வெளியேற வேண்டிய அவசரத்தில் படிக்கக் கையோடு எதுவும் கொண்டுவரவில்லை என்பது ஞாபகம் வந்தது. மருத்துவ மையத்தின் செய்தித்தாள் அடுக்கிலிருந்து ஒன்றை எடுத்து வேகமாக நடந்தான். எங்கிருந்தோ நெருக்கடி வண்டிகளின் ஊளை. மத்திய நூலகத்தை தாண்டியதும் கலவர ஓசைகள் மட்டுப்பட்டன. பிரதான தெருவைப் பார்த்த படிவரிசையில் அமர்ந்து, சாவதானமாக செய்தித்தாளை பிரித்தான். படிப்பதற்குள்…

“ஐ சா யு பிஃபோர்.”

அவனிடம்தான் யாரோ பேசுகிறார்கள். நிமிர்ந்து பார்த்தான். கையில் காகித காப்பிக்கோப்பையுடன் ஒருவர். அவருடைய கரடுமுரடான ஆங்கில உச்சரிப்பு முதலில் புரியவில்லை. தோற்றம்கூட வினோதமாக இருந்தது. கூடைப்பந்தாட்டக்காரனின் உருவம், ஆறடிக்கு மேற்பட்ட உயரத்தில் மட்டுமல்ல, உடற்கட்டிலும், தோலின் கரிய நிறத்திலும். பரந்த நெற்றிக்குமேல் நீண்ட தலைமுடியை இறுக்கக் கட்டியிருந்தார். வயது நாற்பதின் பக்கம். இன்னொரு தடவை சொன்னதும் அவர் வார்த்தைகள் புரிந்தன.

“ஈஸ் இட் ஸோ?”

“ஏபெக்ஸ் பாலாஜி டெம்ப்ல், கேம்?”

“ஒன்ஸ்.”

சாமி நினைவுப் பெட்டகத்தில் தேடினான். நண்பர் சுந்தரேசனுடன் கோவிலுக்கு போயிருந்தபோது அர்ச்சனை முடிந்ததும் பக்தர்கள் தலையில் சடாரியை அவர்கள் குனியவேண்டிய அவசியமில்லாமலே உயரத்திலிருந்து வைத்து எடுத்த உதவி அர்ச்சகர்… இப்போது ஜீன்ஸ், காவி நிறத்தில் சட்டை. அவரேதான். அவனை எப்படி நினைவிருக்கிறது?

“தமிழ், தெலுங்கு…”

“தமிழ்.”

“உங்க பேர்?”

“சாமி.”

“ஓ, சாமியா? நீங்க நல்ல பரோபகாரின்னு சுந்தரேசன் சொல்லியிருக்கார்.” எதிர்பாராத புகழ்ச்சிக்கு சாமி பதில் தேடும்முன்,

“என் பேர் ராமஜெயம். ரெண்டு நாள் முன்னாடி ஏபெக்ஸ்லேர்ந்து கிளம்பினோம்” என்ற விவரத்தை கேளாமலே தந்தார்.

சாமியின் பார்வை அவரைத்தாண்டி சென்றது. கீழ்ப்படியில் தடிமனான பழுப்பு சல்வார் கமீஸில் அவர் மனைவி, அவளும் நல்ல உயரம். இன்னும் பள்ளிக்குச் செல்லாத இரண்டு பையன்கள். தெருவோரத்தில் பத்தாண்டுகளுக்குமுன் தயாரிப்பு நின்றுபோன மெர்க்குரி வேன். படியோரத்து விரிப்பின்மேல் காகித தட்டுகள். சாப்பாட்டை முடித்து மற்றவர்களும் படியேறி வந்தார்கள்.

“ஃப்ரீ-வேலேர்ந்து வெளிலே வந்ததும் சாப்பிட இடம் தேடினோம், கிடைக்கல” என்றார் மன்னிப்புக்கோரும் குரலில்.

“நீங்க இந்த தெருவுலே திரும்பறதுக்கு பதிலா எதிர்ப்பக்கம் போயிருக்கணும். அங்கே சென்டென்னியல் பார்க்.”

“நான் அப்பவே சொன்னேனோன்னோ.”

“இப்பவும் என்ன? எதேச்சையா சாரை பார்த்தேன். அதுவும் அதிருஷ்டம்தான்.”

அவள், “நமஸ்காரம்” என்றாள். சாமியும் திருப்பி வணங்கினான்.

“கை யலம்பணுமே?”

“அதோ, அந்த கட்டடத்திலே, உள்ளே நுழைஞ்சதுமே ரெஸ்ட் ரூம் தெரியும்,” என்று நூலகத்தை காட்டினான்.

அவள் பையன்களை நடைபாதை வழியே அழைத்துச்சென்றாள். பெரியவர்களின் முகங்களில் மட்டுமல்ல, பெரிய பையனின் முகத்திலும் பயணம் போகும் மகிழ்ச்சி துளியும் தென்படவில்லை.

“பக்கத்திலே இருக்கேளோ?” என்ற ராமஜெயத்தை சாமி திரும்பிப் பார்த்தான்.

“இங்கேர்ந்து அரைமணி.”

“எங்கே வேலை?”

“இங்கதான்,” என்று அபாய ஒலி மெல்லிதாக வெளிப்பட்ட கட்டடத்தை காட்டினான்.

“ஊர்லே இண்டியன்ஸ் ரொம்ப பேரோ?”

“நிறைய.”

“கல்யாணம் அடிக்கடி நடக்குமோ?”

“மாசத்துக்கு ஒரு இன்விடேஷன் வரும்.”

“குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம், உபநயனம்…”

“கோவில்லே நடக்கறதை பாத்துருக்கேன்.”

உரையாடல் நின்றது. ராமஜெயம் கீழே இறங்கியபோது சாமியும் தொடர்ந்தான். அவர் மிஞ்சிய காகிதத் தட்டுகளையும், விரிப்பையும் வேனுக்கு எடுத்துச் சென்றார். அதன் பின்-ஜன்னல் தெரியாதபடி அடைத்த சாமான்கள். பெரும்பாலும் சமையல் பாத்திரங்கள், விளையாட்டு சாமான்கள், துணி மூட்டைகள். தொலைவில் ராமஜெயத்தின் மனைவியும் இரண்டு பையன்களும் திரும்பிவருவதை சாமி பார்த்தான். சின்னவன் நடக்க முரண்டு பிடித்தான், ஆனாலும் அவள் அவனை தூக்கவில்லை. சாமிக்கு ஏதோ உறைத்தது. “நீங்க எல்லாரும் எங்கே பயணம்?” என்றான்.

“இன்னும் பகவான் எனக்கு சொல்லல. கிளம்புன்னு மட்டும் கை காட்டிட்டான்.”

“புரியலயே.”

devote“நான் ஏபெக்ஸ் கோவில்லே பத்து வருஷமா அர்ச்சகராக இருந்தேன். கோவில் பூஜையெல்லாம் சுந்தரேசன் மேற்பார்வைலே. உங்களுக்குத்தான் தெரியுமே, அவர் நல்ல பக்திமான், விஷயம் தெரிஞ்சவர். அவர்தான் என்னை மன்னார்குடிலேர்ந்து அழைச்சிண்டுவந்து விசா வாங்கிக்கொடுத்தார். தினப்படி பூஜை, அர்ச்சனை. அது தவிர அப்பப்ப கோவில்லே கல்யாணம், யாகம் நடக்கும். அவ ஆத்திலே பண்ணின லட்டு, மிக்ஸ்சர், பிசைந்த சாதம் வித்து கொஞ்சம் வருமானம். கோவில் பக்கத்திலேயே ஒரு மோபில் ஹோம். இப்படி காலம் ஓடிண்டிருந்தது.”

ஒரு இடைவெளிக்குப்பின் தொடர்ந்தார். “கோவிலை குசின் சப்ஸ் சொந்தக்காரன் விலைக்கு வாங்கினதும் எல்லாம் தலைகீழா போயிடுத்து.”

“கோவில் பொதுச்சொத்து இல்லயா?”

“அது பேர்லே ஒண்ணரை மில்லியன் டாலர் கடன் இருந்தது. மாசாமாசம் மார்ட்கேஜ் கட்டணும்.”

கடன் அடைக்கப்பட்டு கோவில் லாபம் தேடும் வணிகத்தலம் ஆனதும் ராமஜெயத்தின் பதவிக்கு மிகக்குறைவான பணத்தில் வேறு யாரையாவது நியமித்திருப்பார்கள், அவருக்கு ஆதரவாக இருந்த சுந்தரேசனையும் ஏறக்கட்டியிருப்பார்கள்.

“தனியா தொழில் நடத்தலாம்னா, ட்ரையாங்க்ல் ஏரியாலே ஏற்கனவே என்னை மாதிரி பத்துபேர். பண்டித் ராமசர்மான்னு பேரை மாத்திண்டு ஜோசியம் சொல்லலாமான்னு பார்த்தேன். எனக்கே அதிலே அவ்வளவா நம்பிக்கை கிடையாது. அப்புறம், இப்படி நடக்கலாம், அப்படியும் அர்த்தம் பண்ணிக்கலாம் என்கிற மாதிரி பேசத்தெரியணும். அந்த சாமர்த்தியமெல்லாம் எனக்கு வராது.”

அடம்பிடித்து பையன் அம்மாவை தூக்கவைத்துவிட்டான். அவள் கஷ்டப்பட்டு ஒவ்வொரு படியாக காலைவைத்து இறங்கினாள்.

“வீட்டை காலிபண்ணணும்னு நோடிஸ் கொடுத்துட்டா. எதாவது சான்ஸ் கிடைக்குமான்னு தேடிண்டு வரேன். நாக்ஸ்வில்லே புது கோவிலுக்கு ஆள் வேணும்னு யாரோ சொன்னா. நேத்து போய்ப்பாத்தப்போ தெலுங்குக்காரர் ஒருத்தர் கிடைச்சுட்டார்னு தெரிஞ்சுது. அங்கே இருக்கறதுலே லாபமில்லன்னு மறுபடி பயணம். இன்னும் எவ்வளவு தூரம் போகணுமோ?” அவனிடம் பதிலை எதிர்பார்த்ததுபோல் தோன்றியது.

“அப்பா சமஸ்க்ருத பண்டிதர். ஏழைக் குடும்பம். பத்தாவதுக்கு மேலே படிக்க வசதி இல்லை. பாடசாலைலே சேர்ந்தேன். எல்லா மந்திரமும் அர்த்தத்தோட அத்துப்படி. உபநயனமாகட்டும், கல்யாணமாகட்டும் ஒவ்வொரு சம்பிரதாயத்துக்கும் இங்க்லீஷ்லே விளக்கம் சொல்வேன்.”

அவர் ரெசுமே எப்படி இருக்கும் என்ற கற்பனையில் சாமிக்கு உள்ளுக்குள் சிரிப்பு. அது வெளிப்பட்டிருக்க வேண்டும்.

“ஏன் சிரிக்கறேள்?”

“சித்தார்த்தான்னு ஒரு நாவல், ஹெஸென்னு ஒரு ஜெர்மன்காரர் எழுதினது. படிச்சதுண்டா?”

“அந்த அளவுக்கு இங்க்லீஷ் தெரியாது. கதை புத்தரைப் பத்தியா?”

“புத்தர் காலத்திலே நடக்கறமாதிரிதான், ஆனா கதாநாயகன் ஒரு ஏழை பிராமணன். அவன் பணம் சம்பாதிக்க, வேலை தேடி ஒரு வியாபாரிகிட்டே போறான். ‘நான் வேலை தரணும்னா உனக்கு என்ன செய்யத் தெரியும்’னு வியாபாரி கேக்கறான். அதுக்கு சித்தார்த்தா, ‘எனக்கு மூணு வித்தை தெரியும். நான் சிந்திப்பேன், பொறுமையா காத்திருப்பேன், விரதத்துக்காக பட்டினி கிடப்பேன்’னு சொல்றான். அது ஞாபகம் வந்தது.”

அவன் விளக்கத்தை அவர் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை.

“பொறுமையும், பட்டினியும் எனக்கு சரி, ஆனா சிந்திக்க தெரியாது. அதுக்கு பதிலா பகவான் மேலே பக்திப்பாடல்கள் நிறையச் சொல்லுவேன். தமிழ்லே மட்டுமில்ல, தெலுங்கு கன்னடம், மராட்டிலியும்.”

கடைசிப்படிக்கு வந்த ராமஜெயத்தின் மனைவி அவர்கள் உரையாடலின் சாரத்தை ஊகித்திருக்க வேண்டும். அவளும் சாமியை நம்பிக்கையுடன் பார்த்தாள்.

அபாயமணி பட்டென்று நின்று கொஞ்சம் அமைதி.

“நான் கிளம்பறேன்” என்றார் ராமஜெயம் ஏமாற்றத்துடன்.

அவர்களுக்கு அவன் என்ன செய்ய முடியும்? “பகவான் வழிகாட்டுவான்” என்று விடைகொடுத்தான்.

அபாயம் இல்லாவிட்டாலும் அமளி அடங்கியபின் தன்னிடத்துக்கு போகலாம் என்று சாமி செய்தித்தாளை பிரித்தான். முதல் பக்கத்தில் டயபெடிஸ் பற்றிய ஆராய்ச்சி.

பையன்களை இருக்கைகளில் அமர்த்தி பெரியவர்களும் வேனுக்குள் புகுந்தாகிவிட்டது.

மேலோட்டமாக டயபெடிஸ் அறிக்கையை பார்த்துவந்த சாமியின் கண்களை, ஒரு கட்டத்துக்குள் அடைத்த பெரிய எழுத்துகள் ஈர்த்தன. ‘நெடுநேரப் பட்டினி எப்படி இரத்தத்தின் சர்க்கரை அளவை பாதிக்கிறது என்பதை கண்டறிய முப்பதிலிருந்து ஐம்பதுக்குள் ஆரோக்கியமான ஆட்கள் தேவை!’

சாமி நிமிர்ந்து பார்த்தான். வேன் நகர்ந்து பச்சை விளக்குக்காக காத்திருந்தது. “ஸ்டாப்!” என்று கத்தினான். ராமஜெயத்தின் மனைவி ஜன்னல் வழியாக அவனை கவனித்தாள். கையை ஆட்டிக்கொண்டே வேகமாக வேனை நோக்கி ஓடினான்.