பரந்துவிரிந்த நிலப்பரைப்பைக் கொண்டிருக்கும் சீனாவின் குடிமக்கள் பொருளாதாரக் காரணங்களால் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும், வேலை தேடிப் பல்வேறு இடங்களுக்கும் இடம்பெயர்வதைப் பற்றிய இக்கட்டுரைத்தொடரின் முந்தைய பாகங்களை இங்கே படிக்கலாம்.
நகரமயமாதலும் உள்நாட்டு இடப்பெயர்வுகளும்
உலகிலேயே மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடு சீனா. சுமார் 1.32 பிலியன் (அதாவது 1132 மிலியன், 131 கோடி) மக்கள் இன்று சீனாவில் வசிக்கிறார்கள்.[1] சீனாவில் 45% பேர் 26 வயதிற்கும் குறைவானவர்கள். இளைஞர்களே தற்போதைக்குப் பெரும் எண்ணிக்கையினர் என்றாலும், அடுத்த தலைமுறை இளைஞர்களாகப் போகிறவர்களின் எண்ணிக்கை நிறையக் குறைந்திருக்கிறது. சீனாவில் இன்னும் சில பத்தாண்டுகளில் முதியோரும் நடுவயதினரும் பெரும்பான்மையாக இருக்கும் நிலை வரலாம். அதன் விளைவுகள் நாம் கவனிக்க வேண்டியவை.
சீனப் பொருளாதாரம் கடந்த இருபது ஆண்டுகளில், ஆண்டுக்குச் சராசரியாக 6-8% வளர்ச்சியைக் காட்டுகிறது. இன்னும் பத்தாண்டில் சராசரி நபரின் வருவாய் இரட்டிப்பாகும் என்று அவ்வப்போது சொல்லப்படுகிறது. இந்த இலக்கைச் சீனா இதுவரை எட்டி இருக்கிறது என்பதை நாம் கவனிக்கலாம்.
பேய்ஜிங்கில் மத்திய அரசு, அதன் கீழ் 29 மாநில அரசுகளும் என்பதே 1987ஆம் ஆண்டில் சீனாவின் மேல் மட்ட நிர்வாக அமைப்பு. இதில் சிறுபான்மை இனங்களுக்கான ஐந்து மாநிலங்களும் அடக்கம். ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட, கிராம முனிஸிபல் மற்றும் கார்ப்பரேஷன் நிர்வாக முறைகள் வரும்.
விவசாய ஹுகோவ் பெற்ற ஒருவர் நகரத்துக்குப் போய் தொழிற்சாலையில் பணியாற்றினாலும், கோப்புகளிலும், அறிக்கைகளிலும் விவசாயியாகவே அடையாளம் காணப்படுகிறார். [2] தொழிற்சாலை ஊழியர்களுக்கான எளிய உணவை உற்பத்தி செய்யும் முக்கியத் துறையாகவே விவசாயிகளைப் அரசு நீண்ட காலமாகவே பார்த்திருக்கிறது. அதனால் தான் 1950களில் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டுக்குப் பின் நகரங்களில் வேலை செய்த விவசாயிகள் மீண்டும் கிராமத்துக்குப் போக வற்புறுத்தப்பட்டார்கள். இந்த இடப்பெயர்ச்சி மேலும் பெரும் பஞ்சத்தையே கொணர்ந்தது. [3]
பரிவில்லாத, மக்களின் விருப்பங்களைக் கணக்கில் கொள்ளாத, குறுங்குழுவினரின் அரசியல் முன்முடிவுகளுக்கு, அரசியல் உரிமைகளற்ற மக்கள் பல பத்து லட்சம் பேர் பலியாகிப் பட்டினியால் செத்தனர். அந்த பெரும் நாசத்தில் இருந்து சீன அரசு சிறிது பாடம் கற்று, விவசாயத்தை ஓரளவு மக்கள் விருப்பிற்கு விட்டு, நகரங்களில் கவனம் செலுத்தத் துவங்கியது. இந்த தாமதமான நகர்விற்கும் மக்கள் மீது பரிவு அல்லது மக்கள் நலனுக்குப் பொறுப்பு தம்முடையது எனச் சீன அரசு ஏற்றதுதான் காரணம் என நாம் நம்பி விடத் தேவை இல்லை.
இதன் அடிப்படைக் காரணம் அதிகாரத்தை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்ற நோக்கமே. தொடர்ந்து மக்களை அழிப்பது பெரும் எதிர்ப்பையே கொணரும், ஆட்சி கவிழும் என்ற புரிதலால் இந்த மாறுதல் எனலாம். பருந்துப் பார்வையில், சீனாவை உலக மையத்திலுள்ள, ஒரு தலை நாடாக ஆக்கும் குறிக்கோளும் காரணமாக இருக்கலாம்.[4]
மேலும், பொறி நுட்பத்திற்கும், அது சார்ந்த தடாலடி நடவடிக்கைகளுக்கும் நகர நாகரீகம் இணங்கும், அல்லது பொருந்தும் களம். அதிகார அழுத்தங்களுக்கும், அரசியல் முடிவுகளுக்கும் வணங்காத இயற்கையின் நெருக்கடிகளுக்கு ஆட்பட வேண்டிய வாழ்வு அங்கு அத்தனை தேவை இல்லை; பாரம்பரியம என்பது நகரங்களில் அத்தனை பொருட்படுத்தப்படுவதில்லை; முதலீட்டு சூதாட்டத்திற்கு அதிக வருவாய் நகரத்தின் வளர்ச்சி நோக்கிய நாகரீகத்தில் கிட்டும் என்பன காரணமாக இருக்கலாம். மேற்குல்கு சில நூறாண்டுகளில் கற்ற பாடங்களைச் சீனா ஒரு சில பத்தாண்டுகளில், மிக அதிக விலை கொடுத்துக் கற்றுக் கொண்டிருக்கிறது.
உண்மையில் சீனாவின் எளிய மக்களே அதிக விலை கொடுத்தனர், ஆள்வோர் எந்த நஷ்டமும் தமக்கின்றி தம் பாதையைச் சற்றே மாற்றிக் கொண்டனர். இன்னொரு பார்வையில் இன்றைய ஆள்வோரில் பலரும் ஓரளவு விலை கொடுத்தே அவர்கள் உள்ள நிலைக்கு வந்திருக்கின்றனர். இருப்பினும் அதிகாரம் அரிக்கும், எல்லையற்ற அதிகாரம் முற்றிலும் அரித்து விடும் என்ற ஆக்டனின் அறிக்கை எக்காலமும் நிற்குமன்றோ? தாம் முன்பு பெற்ற நஷ்டங்கள் தமக்கு ஆட்சி மூலம் வளம் பெற உரிமம் அளிப்பதாக இவர்களில் பலர் கருதுகின்றனர் போலும்.
அந்தக் கோணத்தில் சீனாவின் 2000 வருடப் பாரம்பரியமான, மேல் தட்டு மனிதரின் அகம்பாவ ஆட்சிமுறை இன்னும் தொடர்கிறது, சில மாறுதல்களுடன் எனலாம். இந்த மாறுதல்கள் உலகெங்கும் நிகழ்ந்துள்ள மதிப்பீட்டு மாறுதல்களினால் எழுந்த நிர்ப்பந்தம் என்பதும் தெளிவு.
இடப்பெயர்வுகளும் கட்டுப்பாடுகளும்
1970களின் இறுதி முதல் 1980கள் தொடக்கம் வரை இயற்றப்பட்ட விவசாயத் துறை சார்ந்த சட்டச் சீர்திருத்தங்கள் கொணர்ந்த வந்த உணவு உற்பத்திப் பெருக்கத்தால், பல நகரவாசிகள் கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து ரேஷன் அட்டை இல்லாமலே வாழ முடிந்தது. உணவு உற்பத்தி அதிகரிப்பால் இடப்பெயர்வுச் சட்டங்கள் தளர்ந்தன. இருப்பினும், 1984 ஆம் வருடம், மே மாதம் வரையில் மட்டுமே இருந்தது இந்தத் தளர்வு. அதன் பிறகு, சீன அரசு மீண்டும் உள்நாட்டு இடப்பெயர்வுகளைக் கட்டுப்படுத்த ஆரம்பித்தது. 1986 மார்ச்சில் இன்னொரு முறை திருத்தங்கள் செய்யப்பட்டு முழுவீச்சில் நடைமுறைக்கு வந்தது ஹுகோவ்.[5]
இந்தக் காலகட்டத்தில், சீனா தன் கதவுகளைத் திறந்து வெளியுலகையும் நகரமாக்கலையும் ஏற்க ஆரம்பித்ததும் தொழில் துறை வழி உற்பத்தியும், அன்னியச் சந்தைக்கு ஏற்றுமதியும் எதிர்பார்த்ததை விட வேகமாகவே அதிகரித்தன. கப்பல் மூலம் சரக்கனுப்புவதே மலிவாக இருந்ததால், துறைமுக நகரங்களே மளமளவென்று வளர்ச்சி கண்டன. உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க கச்சாப் பொருட்களின் தேவை கூடியது. சீனாவில் பல கனிமங்கள் குறைவு என்பதால் அவற்றை உலகெங்கும் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது.
சீனாவின் பெரும் மக்கள் தொகையும், பொதுவான ஏழ்மையும், அங்கு சராசரி ஆள் கூலியை மலிவாக வைத்திருக்க இடம் தருகிறது. இது சீனா சென்ற இருபது ஆண்டுகளில் உலகின் தொழிற்சாலையாக மாறிவிட உதவியிருக்கிறது. வேறு பல காரணங்கள் உண்டு, அவற்றைப் பின்னால் பார்க்கலாம். சீனா உலகத் தொழிற்-சாலையாக நீடிக்கும் வரை, அதற்குக் கனிமங்கள் இறக்குமதி செய்தாக வேண்டிய நிலை இருக்கும். இறக்குமதிக்கு உதவும் கடல் துறைமுக நகரங்களுக்கு உற்பத்தித் துறையில் இந்த அனுகூலம் இருந்தபடியே தான் இருக்கும். இங்கே உருவாகும் வேலைகள் பெருகுவதால், அதை நோக்கி வரும் கிராமத்தினரின் எண்ணிக்கையும் கூடி வரும்.
70-80களில் உள்நாட்டு இடப்பெயர்வுகள் பெரும்பாலும் சொந்த ஊரிலிருந்து வேலைக்குப் போகும் நகரம் இருக்கும் தூரத்தைப் பொருத்தே அமைந்தன. அவர்களில் பெரும்பாலோர் முடிதிருத்துவோர், சிறு வியாபாரிகள், உணவுப்பண்டங்கள் செய்து விற்பவர், வீடுவீடாகச் சென்று வணிகம் மேற்கொள்பவர், கட்டிடத் தொழிலாளிகள், தொழிற்சாலை ஊழியர்கள் ஆகியோர். அத்துடன், விவசாயம் போன்ற பாரம்பரியத் தொழிலிலிருந்து வேண்டுமென்றே விலகி வேறு துறையைத் தேர்ந்தெடுப்போரும் இதில் அடங்கினர். 1997ல் 12 மிலியன் பேர் இவ்வாறு கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். உள்ளூர் ஆசாமிகள் செய்யத் தயங்கிய/மறுத்த ஆபத்தும், கடின உழைப்பும், அழுக்கு நிறைந்ததுமான கட்டட வேலைகளையும் மற்ற பல சேவைகளையும் நகரில் இவர்கள் மேற்கொண்டனர். இதனாலேயே கட்சியும் நகரவாசிகளை ‘கிராமவாசிகளிடமிருந்து கற்றுக்கொள்ள’ச் சொன்னது.
உள்ளடங்கிய கிராமங்கள்/ஊர்களுக்கும் நகர/பெருநகரங்களுக்கும் இடையில் பயணிப்போர், அனுமதிப் பதிவட்டை இல்லாமல் சட்டவிரோதமாக அன்றாடம் நகரங்களுக்குச் சென்று வேலை செய்வோர் ஆகிய இரண்டு பகுதியினர் மிதந்தலையும் பிரிவினர். இவர்கள் இடம்பெயர்ந்தோர் பிரிவில் வர வழியில்லை. விழாக்காலம் தவிர மற்ற காலங்களில் இவர்களின் எண்ணிக்கை குறைவு தான். இவர்களால் நகரில் நீண்ட அல்லது நிரந்தர மாற்றங்கள் பெரிதாக ஏற்படுவதில்லை.[6] தொழில் நிமித்தம் நகரத்துக்குப் போய் தற்காலிகமாகவேனும் வசிப்போர் கணக்கெடுப்பின் போது இடம்பெயர்ந்தோர் பிரிவில் வரக்கூடியவர்கள்.
1980களில் நகரமயமாக்கலை முன்னிட்டு கிராமத்திலிருந்து நகரத்துக்கு இடம்பெயர நினைப்போருக்கு கதவுகளைத் திறந்தபோது இடம் பெயர முனைந்த மக்களின் எண்ணிக்கை 2 மிலியன் மட்டுமே. இன்றோ நாட்டின் பத்தில் ஒரு பகுதிக்கும் மேலானோர், இடம்பெயர்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் குறைந்த கல்வியும் சிறந்த ஆரோக்கியமும் கொண்டிருக்கும் 16-25 வரையிலிருக்கும் இளவயதினர். சட்டென்ற இடமாற்றத்துக்கு ஏதுவான எளிய வாழ்க்கை வாழ்வோர். தொழிற்சாலைகளில் பணிபுரியும் இவர்கள் நீண்ட வேலை நேரத்துக்குத் தயாராக இருக்கும் உழைப்பாளிகள். மிக சொற்ப உடமைகளுடன் நகருக்குள்ளேயே கட்டடத்துறையின் கட்டுமானம் நடக்கும் இடங்களுக்கு சட்டென்று மாற்றிக் கொண்டு விடும் இயல்புடையோர்.
கட்டிடத் தளத்தில் வேலை செய்த 60 வயது மூதாட்டி ஒருவர் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸுக்கு, “உழைக்கத் தயாரா இருந்தா வயசாகியிருந்தாலும் இங்க வேலை கிடைக்கும்,” என்று சொன்னதுதான் இன்றைய சீனப் பெருநகரத்திலிருக்கும் நிலைமை. இவரைப் போல உழைக்கத் தயாராக இருப்போரின் இடையறாத உழைப்பில்தான் நகரங்கள் பிரமாண்டமும் நவீனமும் கொள்கின்றன.
வறுமை, வேலைவாய்ப்பு, கல்வி, வியாபாரம், உயர்ந்த வாழ்க்கைத் தரம், பொருளாதார மற்றும் தொழிற்துறைக் கோட்பாட்டு மாற்றங்கள், தொழில்/நகர/உலக மயமாக்கம் ஆகிய பல்வேறு காரணங்களுக்காக சீனர்கள் நாட்டுக்குள் இடைவிடாது இடம்பெயர்ந்தபடியே இருக்கிறார்கள். விவசாயத்திலும் பண்ணையிலும் உழைக்க இவர்களுக்கு விருப்பமில்லாதிருக்கும் வேளையில், நகரங்களிலும் பெருநகரங்களிலும் இருக்கும் தொழிற்சாலைகளும் கட்டிட நிறுவனங்களும் குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் இவர்களது உழைப்பை உறிஞ்சக் காத்திருக்கின்றன.
சிற்றூரை விட நான்கு மடங்கு சம்பாதிக்க முடியும் என்பதால் நகரங்களில் வேலை செய்ய முனைவோரது வாழ்க்கை எண்ணற்ற சவால்களையும் கூடவே கொண்டு வருகிறது. நகர்ப் புறங்களில் உடலுழைப்பை நல்கும் ஊழியர்களில் 40% பேர் இடம்பெயர்ந்தோர். இவர்கள் தான் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். பலநூறு மிலியன் புதிய நகரவாசிகளையும் 400 மிலியன் இணையப் பயனர்களையும் கொண்ட இந்நாட்டில் அதன் அசுரவேகப் பொருளாதார வளர்ச்சியில் முழுமையாகப் பங்கேற்காத ஒரு பில்லியன் குக்கிராம, கிராம மற்றும் சிற்றூர் மக்கள் இருக்கிறார்கள் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றக் கூடியது.
2010ஆம் ஆண்டு நிலவரப்படி சீனாவிற்குள் பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுக்கு 230 மிலியன் பேர் வரை சிற்றூர்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். இது அமெரிக்காவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு. கடந்த ஒரு நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கைக்கு ஈடானதும் கூட. ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை 13 மிலியன் உயர்கிறது. 1993ல் 70 மிலியனாக இருந்த இடம் பெயர்வோர் எண்ணிக்கை 2003ல் 140 மிலியனாக உயர்ந்தது. 2012ல் 250 மிலியனாகவும் 2025ல் 300 மில்லியனைத் தாண்டி பின் 400 மிலியனைத் தொடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருக்கும் 103 மிலியன் நகர்வாழ் வெளியூர்காரர்களின் எண்ணிக்கை 2025ல் 243 மில்லியனாகக் கூடி 1 பில்லியன் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்போது இருப்பதைக் காட்டிலும் மும்மடங்கு கூடி நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் வாழ்வோரில் பாதிக்குப் பாதி இடம்பெயர்ந்தவர்கள் என்றாகி விடும்.
ஹுகோவ் இல்லாமல் ஒரு ஊரில் நீண்ட நாள் வசிக்க முடியாது. மாநிலங்களுக்குள்ளே நடக்கும் இடப்பெயர்வுகள் மொத்தத்தில் 65% என்றால் மீதி 35% மாநிலங்களுக்கிடையில் நிகழ்கின்றன. இடம்பெயர்வோரில் 70% பேர் (100 மிலியன் பேர்) 15-35 வயதினர். 16.32 மில்லியனுக்கும் அதிக முதியோரைத் தத்தமது குழந்தைகளுடன் சொந்த ஊர்களிலும் கிராமங்களிலும் விட்டிருப்பவர்கள். நண்பர் அல்லது உறவினரைச் சந்திக்கப் போனாலும் அனுமதி பெறுதல் வேண்டும்.
இடம்பெயர்தலில் வேறுபாடுகள்
சமீபத்தில் 40,576 கிராமவாசிகளிடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் படி 31% பேர் விவசாயமற்ற துறைகளிலிருந்து வருவாய் பெறுகின்றனர். வெறும் 6% பேர் மட்டுமே விவசாயத் துறை சார்ந்த வருவாய் பெற்றனர். 1996ன் இறுதியில் 1,396,300 சிறு/பெருநகர நிறுவனங்கள் 53 மிலியன் தொழிலாளிகளை வேலைக்கமர்த்தின. இதில் 55% நகரங்கள் கடலோரங்களில் இருக்கின்றன.
வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்த குடிமக்களிடையே நிலவிய பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறைய வழியே இல்லாமலிருந்தது. நகரமயமாக்கல் இந்த இடைவெளியை மேலும் அதிகரிக்கவே செய்தது. நகரங்களிடையேயும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளி. உதாரணத்திற்கு, மேற்கே இருக்கும் காங்ஸு மாநிலத்தின் தலைநகரமான லான்ஜோவ், ஷாங்காய் அருகில் இருக்கும் உற்பத்தித் தொழிற்சாலை நகரான சுஜோவ்வை வளர்ச்சியில் எட்ட முடியவில்லை.
காலங்காலமாக நடப்பது போலவே இன்றைக்கும் பேய்ஜிங், ஷாங்காய், ஷென்ஜென் போன்ற கிழக்குக் கடற்கரையோர நகரங்களுக்கு இடம்பெயர்வோர் தான் அதிகம். அதே நேரத்தில், கடலோர நகரங்களை விட உள்ளடங்கிய நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வாழும் இந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம், காப்பீடு போன்றவற்றைக் கொடுப்பதாலும் அவ்வேலையிடச் சூழலில் போட்டாபோட்டிகள் அங்கே குறைவென்ற காரணத்தின் அடிப்படையில் உள்ளடங்கிய நகரங்களுக்குப் போவோர் சமீப காலங்களில் கொஞ்சம் கூடியுள்ளனர்.
உள்ளடங்கிய பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் மிகவும் சுமாரான நிலையில் இருப்பதால் சீனாவுக்குள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போவதொன்றும் சுலபமில்லை. அதையெல்லாம் கடந்தும் தொழிற்சாலைகளை நோக்கிப் போகும் தொழிலாளி பல தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. மனைவி மக்களைப் பிரிந்து வாழும் வாழ்க்கை, அதனால் குடும்பங்கள் உடைகின்றன; முதிய பெற்றோர் பராமரிப்பில்லாமல் தனித்து விடப்படுகின்றனர். சொந்த ஊரில் தான் படிக்க வைக்க முடியுமென்று கருதி பிள்ளைகளை கிராமங்களில் விடுகிறார்கள். கிராமங்களில் 25 மிலியன் குழந்தைகள் இவ்வாறு விடப்பட்டிருக்கின்றனர்.
கச்சாப்பொருட்களையும் உற்பத்தியான பொருட்களையும் உள்ளேயும் வெளியேயும் எடுத்துச் செல்ல உள்ளடங்கிய ஊர்களில் நல்ல சாலை வசதிகள் இல்லை என்றுணர்ந்து சாலைகள் அமைப்பதில் பத்தாண்டுகளுக்கு மேலாக அரசு நிறையவே முதலீடு செய்து வருகிறது. அத்தனை முயற்சிகளையும் தாண்டி கடலோர நகரங்கள்தாம் உள்ளடங்கிய ஊர்களை விட அசுர வளர்ச்சிப்பாதையில் முன்னேறியபடியிருக்கின்றன. குறைந்த காலத்தில் நிறைந்த லாபம் காண எண்ணும் முதலீட்டாளர்களும் அந்நகரங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். சாலைகள் நன்றாக இருந்தாலும் கூட, உள்ளடங்கிய ஊர் என்றால் போக்குவரத்து வாகனப் பராமரிப்பு, ஊர் எல்லைச் சாவடியில் வரி, வாகன எரிபொருள், என்று மற்ற செலவுகள் செய்தும், கால விரயம் வேறு நிகழும், ஏற்றுமதிக்கான பொருட்கள் துறைமுகத்தை அடையவே ஐந்து நாட்களெடுக்கும் என்பது முதலீட்டாளர்கள் தரப்பு வாதம்.
கிராமங்களில் விவசாயம் செய்வதற்கு வேண்டிய விவசாயத் தொழிலாளிகள் அரிதாகிப் போனார்கள். எண்ணிக்கையிலும் உற்பத்தியிலும் பெருகியபடியே இருக்கும் தொழிற்சாலைகளில் உழைக்கவே இவர்களுக்குப் பிடித்திருக்கிறது. உள்ளடங்கிய சிற்றூர்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் தான் பெரும்பாலும் நகரங்களுக்கு வந்து வேலை செய்கிறார்கள். இவ்வுழைப்பாளிகளில் ஆண்கள் தவிர பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். ஆண்கள் கட்டிடத் தளத்திலும் பெண்கள் தொழிற்சாலைகளிலும் வேலைக்கமர்வர். மக்கள் தொகையில் 9% பேர், கிட்டத்தட்ட 120 மிலியன் பேர் இப்படி நகரத்துக்கு வந்து வேலை செய்து ஊருக்கு அனுப்பும் பணம் மிகப்பெரியது. 2005ல் மட்டும் இது 67.4 பிலியன் அமெரிக்க டாலராக இருந்திருக்கிறது.
ஆண்டுதோறும் ஸிச்சுவான், ஹென்னன், ஆன்ஹூய், ஜியாங்ஸி போன்ற மாநிலங்களிலிருந்து வருவோரே அதிகம். உள்ளூர்வாசிகளையும் விட அதிகமான இடம்பெயர்ந்தோர் வசிக்கும் நகரங்களும் சீனத்திலுண்டு. ஜென்ஜியாங் மாநிலத்தின் யீவூ என்ற தொழில்நகரத்தின் உள்ளூர்வாசிகள் 640,000 பேர். இடம்பெயர்ந்தோர் 700,000க்கும் அதிகமானோர்.
இது ஒருபுறமிருக்க தொழிலாளிகளும் மேற்கிலிருந்து கிழக்குத் திசை நோக்கியே வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு தேடிப் போகிறார்கள். கடலோர மாநகரங்கள் கவர்ச்சியான ஊதியங்களைக் காட்டி அவர்களை வரவேற்கின்றன. உற்பத்தி பெருகி சீனாவின் சராசரி வருவாய் அதிகரிக்க உதவுகிறது, இருந்தும் ஏழை-பணக்காரர்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதில்லை. உச்சபட்ச வளர்ச்சியைத் தொடும் வரை நகரங்களின் பெருகும் மக்கள் தொகை நகரச் செழுமையையும், உள்ளடங்கிய ஊர்களில் இருக்கும் குறைந்து வரும் மக்கள் தொகை வளங்களின் போதாமையையும் அனுபவித்து வருவார்கள். அதன் பிறகு என்ன என்பதே அரசின் பெருங்கவலை.
சீனாவில் இடம்பெயர்ந்து ஆங்காங்கே கிடைக்கும் வேலையைப் பொருத்து இடம் மாறி மாறிப் பிழைக்கும், வேர்களைத் தொலைத்த தொழிலாளி, தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னுள்ள அரை இருளில்தான் வாழ்கிறான். வளர்ச்சியின் பிரகாசம் அவனுக்கும் கிட்ட போராட்டங்களும், அவற்றால் மாறுதல்களும் நடந்தாலும் அதற்குப் பல பத்தாண்டுகள் எடுக்கலாம் என்று ஆய்வாளர் அனுமானிக்கிறார்கள்.
கிழக்கு-மேற்குக்கிடையில் மட்டுமின்றி வடக்கு-தெற்குக்கிடையிலும் இதே ஏற்றத்தாழ்வுகள் நிலவி வருகின்றன. உற்பத்தியும், பொருளாதார வளர்ச்சியும் இருந்தால் சமத்துவம் மலர என்ன தடை என்று தான் முன்பெல்லாம் சீனம் எண்ணியது. ஆனால், வேறு காரணிகளும் வேண்டும் என்று சீக்கிரமே புரிந்துகொண்டது. சமீபமாக தொழிலாளிகள் மற்றும் முதலாளிகளின் மேற்கு நோக்கிய, மற்றும் வடக்கு நோக்கிய நகர்வுகள் மிக முக்கியம் என்று புரிந்து கொண்டுள்ளது. நீண்டகால முன் ஜாக்கிரதை நடவடிக்கையாக அரசு ‘மேற்கே போங்கள்’ என்ற ஓர் இயக்கத்தையே நடத்துகிறது. ஆனாலும், கிழக்கில் இருக்கும் பெருநகரங்களுக்கே தொழிலாளிகளும் முதலாளிகளும் போக எண்ணுகிறார்கள்.
பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் நகரமயமாதலின் பொருட்டு 80% குடிமக்கள் வரை கடலோர நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். சீனாவும் அதே நிகழ்வைத் தான் சந்திக்கிறது. சீக்கிரமே ஏற்றத்தாழ்வுகளைக் களைந்தொழிக்கவென்று, பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறது. தொடர்ந்து நீடிக்கும் சீனத்தின் இரட்டைப் பொருளாதார முகத்தைக் களைந்து எறிய அரசு மிக ஆர்வம் காட்டுகிறது. இது அரசின் ஸ்திர நிலைக்காக என்று எடுத்துக் கொண்டாலும், மக்களுக்கு நன்மை விளைந்தால் நல்லதுதானே?
வேறுபாடுகளின் விளைவுகள்
‘பொங்கி வரும் எரிமலை’ என்று எழுத்தாளர் வாங் ஷான் சீனர்களைக் குறிப்பிடுவார். இடம்பெயர்வோர்களில் பெரும்பாலோர் தொழிற்சாலைகளில்தான் வேலைக்குச் சேர்கிறார்கள். அது தவிர ஆயிரக் கணக்கான கட்டிடத் தளங்கள், விரைவுச் சாலைகள் மற்றும் பாதாளப் பாதைகள் அமைக்கவும் பல லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்கள் குவாங்தோங் மாநிலத்தின் ‘முத்து நதிப் படுகை’யில் தான் அதிகமாகக் குடிகொண்டிருக்கின்றார்கள். இங்கே இடம்பெயர்ந்திருப்போர் 10 மிலியன் பேர். பேய்ஜிங் மாநகரில் 3 மில்லியனும் ஷாங்காய் மாநகரில் 2 மிலியன் பேரும் இருக்கிறார்கள்.
ஆன்ஹுவேய் மாநில ஹுகோவ்வை வைத்திருக்கும் லியூ குவோயான் என்பவர் இடம்பெயர்ந்து வேலை செய்து பிழைப்பது நான்ஜிங்கில். 1991முதலே அங்கே வேலைபார்க்கும் இவர் சிறந்த தொழிலாளி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 2008ல் ‘தேசத்தின் மிகச் சிறந்த குடிபெயர் தொழிலாளி விருது’ இவருக்கு அளிக்கப்பட்டது. 18 ஆண்டுகள் உழைத்த பிறகு, தானே ஒரு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். 2009 ஜூலையில் நான்ஜிங் ஹுகோவ் பெற்ற முதல் தொழிலாளி என்ற அந்தஸ்தும் இவருக்குக் கிடைத்தது. இதெல்லாம் அவரது குடும்பத்துக்கு நன்மையாக முடிந்திருக்குமென்று தானே யாரும் நினைக்கக்கூடும்? ஆனால், அதனால் எந்தப் பயனுமில்லை என்பதே வருந்தத்தக்கது. குடும்பத்தினருக்கு நகர ஹுகோவ் கிடைத்தது. ஆனால், அவர்களுக்கு மருத்துவ மற்றும் சுகாதாரச் சலுகைகள், முதுமைக் காப்பீடுகள் போன்ற எதுவுமே கிடைக்கவில்லை. நான்ஜிங் ஹுகோவ் கிடைப்பது கடினம். கிடைத்தாலும் மற்ற நகரவாசிகளைப் போல சலுகைகளைப் பெற முடியுமா என்பதும் சந்தேகம் தான். மருத்துவத்துக்கு கைவிட்டுச் செலவு செய்ய வேண்டியிருப்பது ஒன்றும் லியூ குவோயானுக்கு பொருட்டில்லை. ஆனால், நகரமும் நகரவாசிகளும் எப்போது தனது நகர அடையாளத்தை அங்கீகரிப்பார்கள் என்பதே அவரது அக்கறை. உளரீதியிலான அடையாளத் தேடலில் இது போல மாட்டிக் கொண்டு தவிப்போர் ஏராளமானோர்.
உள்நாட்டு இடப்பெயர்வுகள் எல்லாமே ஒற்றைத் திசையிலேயே நிகழ்கின்றன. கிராமத்தார் தன் ஊர் தொடர்பை விடுவதே இல்லை. நகரத்துக்குப் போய் பணத்தை ஊருக்கு அனுப்புவார். குறைந்த ஊதியத்திற்கும் ஆபத்தான வேலைச் சூழலுக்கும் இந்தத் தொழிலாளிகள் தயார். செங்கல் சூளை, சாலைப்பணி, நிலக்கரிச் சுரங்கம் உணவகம் போன்ற இடங்களில் இவர்கள் வேலை செய்யத் தயங்குவதே இல்லை. சைக்கிளை மிதித்துக் கொண்டு போய் அடுப்புக்கரி விற்பதும் குப்பைகள் அள்ளவும் செய்கிறார்கள். ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்கு வேலையின் பின்னால் போனபடியே இருக்கிறார்கள். மிகக் கடினமானதும் இழிவானதுமான வேலைகள் செய்யும் இவர்களை நகரவாசிகள் எப்போதும் கேவலமாகவே பார்க்கிறார்கள்.
ஹீபேய் மாநில ஹுகோவ் வைத்திருக்கும் வூ குவோலியாங் என்பவர் ஷென்ஜென் நகரில் தனியார் நிறுவன ஊழியர். ஹீபேய்யில் தன் சொந்த ஊரில் தொழிற்கல்வியை முடித்திருக்கும் இவருக்கு ஜேஜியாங் மாநிலத்தின் ஹாங்ஜோவ் நகரில் தான் முதன்முதலில் வேலை அமைந்தது. உள்ளூர் ஹுகோவ் இல்லாததால் அங்கே பல சலுகைகளைப் பெற இவரால் முடியாமலிருந்தது. அந்த முதலாளி தனக்கு ஹாங்ஜோவ் நகர ஹுகோவ் பெற விண்ணப்பிக்க உதவவில்லை என்று தான் தன் வேலையையே மாற்றினார். 2001ல் ஷென்ஜென் நகருக்குச் சென்று திருமணமும் முடித்தார். கடும் உழைப்பால் வீடு ஒன்றை வாங்கினார். ஹுகோவ் முறையை வெறுத்துப் பேசும் இவர், முதலாளி பரிந்துரைத்த பின்னரும் ரோஷத்துடன் ஷென்ஜென் நகர ஹுகோவ்விற்கு விண்ணப்பிக்காமலே இருந்தார். ஆனால், அதுவே அவருக்குப் பெரிய வினையாகிப் போனது.
2009ல் மனைவி இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றார். மூன்று மாதம் முன்னாடியே குறைப்பிரசவத்தில் பிறந்த சிசுக்கள் முழுதாய் இரண்டு மாதங்கள் மருத்துவமனைப் பராமரிப்பிலேயே இருக்க நேர்ந்தது. 200,000 யுவான்கள் செலவு பிடித்தது. பெற்றோருக்கு உள்ளூர் ஹுகோவ் இல்லாததால் பிள்ளைகளுக்கு குழந்தைநலக் காப்பீட்டு மான்யமும் கிடைக்கவில்லை. ஆகவே, முழுத் தொகையையும் கட்ட நேர்ந்தது. இந்த அனுபவத்தால், வூ குவோலியாங் உடனே போய் ஷென்ஜென் நகர ஹுகோவ்விற்கு விண்ணப்பித்தார். விண்ணப்பம் வெற்றியடையும் என்று நினைத்திருந்த வேணையில் இன்னொரு பூதம் கிளம்பியது. இரண்டுக்கு மேல் பிள்ளைகள் இருந்தால் ஹுகோவ் கிடைக்காதென்றனர். ஏற்கனவே இரண்டு பெற்று விட்டதால் உடனே குடும்பக்-கட்டுப்பாட்டு அறுவை செய்து கொள்ளச் சொல்லி உள்ளூர் போலிஸார் வூவின் மனைவியை நெருக்கினர். ஷென்ஜென் நகர ஹுகோவ்வே வேண்டாமென்று தீர்மானித்து விட்டார் வூ. சில மாதங்களிலேயே மூத்த மகன் கீழே விழுந்து மண்டையை உடைத்துக் கொண்ட போது மேலும் 100,000 யுவான்கள் செலவு வந்தது.
(தொடரும்)
குறிப்புகள்
1. சமீபத்திய மக்கள் கணக்கெடுப்பு, 2010ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்த எண்ணிக்கை அந்தக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.
2. இது சீனர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழத் தேவையான அனுமதிச் சீட்டு. சென்ற இதழில், ஹுகோவ் பற்றிய கட்டுரையில் இது பற்றிய விவரங்களைக் காணலாம்: http://solvanam.com/?p=14206)
3. விவசாயிகளே ஆகப் பெரும்பான்மையினராக இருந்த சீனாவின் ஏழ்மைக்குக் காரணம் விவசாயத்தின் மீது நாடும், பொருளாதாரமும் அவ்வளவு சார்ந்திருப்பதே என்பது சீனக் கம்யூனிஸ்டுகளின் கருத்து. இதே கருத்தையே முந்தைய அரசான நேஷனலிஸ்ட் கட்சியினரும் கொண்டிருந்தனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.
4. இதிலென்ன தவறு என்று கேட்கும் வாசகருக்கு, அந்தக் கேள்வியின் வறுமை, அல்லது அது என்ன விதத்தில் கடந்த ஐம்பதாண்டு கால வரலாற்றைக் கேலி செய்கிறது என்பன புரியவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும்.
5. மக்கள் விருப்பப்படி நடக்கும் இடப்பெயர்வுகள் கம்யூனிசக் கருத்தியலின் அடிப்படையான தனி மனிதரைக் கட்டுப்படுத்துதல் என்ற பார்வைக்கு, கொள்கைக்கு, இரும்பு விதிக்கு எதிரானதால், அன்றிலிருந்து இன்றுவரை சீனக் கம்யூனிஸ்டுகளால் குடி மக்களுடைய அடிப்படை உரிமைகளில் ஒன்றான வசிப்பிடத் தேர்வு என்பதை அனுமதிக்க முடியவில்லை என்பது வெளிப்படை. அதை மறைக்க என்னென்னவோ காரணங்களை அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள் என்ற போதும் மக்களின் விருப்பத் தேர்வுகள் மீது அக்கட்சியினருக்கு இருக்கும் அவநம்பிக்கை இன்று சீனாவின் வளர்ச்சிக்கு உள்ள பெரும் முட்டுக் கட்டைகளில் ஒன்று என்பது பல நாட்டுப் பொருளாதார ஆய்வாளர்களின் கருத்து. சில கட்டுரைகளுக்கான வலைத் தொடர்பு கீழே:
– http://www.project-syndicate.org/commentary/spence22/English
– http://www.project-syndicate.org/commentary/roubini37/English
சீனாவின் பொருளாதார நிபுணர்களே பலவித கருத்துகள் கொண்டிருக்கின்றனர் என்பதையும் நாம் கவனிக்கலாம். இருந்தும் புலி மீது சவாரி செய்ய விருப்பப் பட்டு உறங்கும் புலி மீது ஏறிய பின் கீழிறங்குவது கடினம்.