‘கான வன மயூரி’ – கல்பகம் சுவாமிநாதன்

ks_2008-1

முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனங்களின் செழிப்பான வளர்ச்சிக்குப் பெயர் போனவை காவிரிக் கரையிலிருந்த சிற்றூர்களும், தாமிரபரணிக் கரையிலிருந்த கிராமங்களும். இவற்றுக்குப் பின்னர்தான் கர்நாடக இசையின் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கும் சென்னை. “தீக்ஷிதரிணி” என்று முசிறி சுப்பிரமணிய ஐயரால் பெயர்சூட்டப்பட்ட சமீபத்தில் (06.04.2011) மறைந்த திருமதி கல்பகம் சுவாமிநாதனின் வாழ்வில் இந்த மூன்று இடங்களும் பங்கு வகிக்கின்றன.

வருடம் 1930. மாயவரத்திற்கு அருகில் உள்ள செதலபதி கிராமம். ஒன்றரை வயதிலேயே தந்தையை இழந்து தன்னுடைய தாய் அபயாம்பாளிடம் இசை கற்று அங்கே வசித்து வந்தார் கல்பகம். கல்பகத்திற்கு எட்டு வயதிருக்கும்போது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறை பேராசிரியராக இருந்த அவரது தாய்மாமா வைத்தியநாத சுவாமி, அவர்கள் இருவரையும் சென்னைக்குப் புறப்பட்டு வரச்சொன்னார். எட்டு வயதுச் சிறுமி கல்பகத்தின் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை. முத்துசுவாமி தீட்சிதரின் பேரனான சுப்பராம தீட்சிதரின் மகன் அம்பிதீக்ஷிதரிடம் பாடம் பயின்ற வீணை வித்வான் கல்லிடைக்குறிச்சி அனந்தகிருஷ்ண ஐயர் இருந்த இடம் அதே சென்னைதான். காவிரி ஓடும் மண்ணில் பிறந்த கல்பகம், தாமிரபரணி சீமையில் பிறந்தவரிடம் வந்து சேர்ந்தார். அனந்தகிருஷ்ண ஐயரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட தீட்சிதர் கீர்த்தனங்களை மூன்று ஆண்டு காலத்தில் பாடம் செய்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி டி.எல்.வெங்கடராம ஐயரிடமும் பல கீர்த்தனங்களைப் பாடம் செய்தார். அவரது தாய்மாமாவின் அறிவுரையின் பேரில் இசைத்துறை பரீட்சைகளிலும் தேறினார். பேராசிரியர் வைத்தியநாத சுவாமியின் நல்ல நண்பர் இசைத்துறை பேராசிரியர் சாம்பமூர்த்தி. கல்பகம் அவரது உதவியுடன் இசையை எழுதும் நோடேஷன் முறையை நன்கு கற்றறிந்தார். பேரா.சாம்பமூர்த்தி தன்னை ‘சாவேரி கல்பகம்’ என்று அழைத்ததை நினைவு கூர்ந்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், தான் கற்ற அனைத்து தீட்சிதர் கீர்த்தனங்களையும் நேர்த்தியாக ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதியும் வைத்தார். இந்திய இசையைப் பொருத்தவரை நோடேஷன் என்பது குருவிடம் கற்றுக்கொள்வதற்கு ஒரு உதவியான வழிமுறை மட்டுமே. இவ்வாறு எழுத்து வடிவில் பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல் பல ஆண்டுகளாகப் பற்பல சிஷ்யர்களுக்கு இவற்றைக் கற்றும் கொடுத்திருக்கிறார்.

ks_2007-1

இன்று எங்கே பார்த்தாலும் பெட்டகம், பாதுகாப்பு (archival) என்ற சொற்கள் அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன. அந்தக் காலத்திலோ மரபிசை ஒரு ‘வாழும் இசைப்பெட்டகமாக’ குருவிடமிருந்து சிஷ்யர்களுக்கு புகட்டப்பட்டது. அப்படி இருப்பினும் பல இசைக்கலைஞர்கள் கச்சேரிக்காக, ஜனரஞ்சகம் என்ற பெயரில் பல கீர்த்தனங்களை உருவம் தெரியாமல் வடிவம் சிதைத்துப் பாடி வந்தனர். தியாகராஜரின் கீர்த்தனங்களுக்கும் தீட்சிதரின் கீர்த்தனங்களுக்கும் பல வித்தியாசங்கள். “தட்டி எடுப்பு” என்று வழங்கும் அதீத அனாகத எடுப்புகள், “சாபு தாளம்”, போன்றவை தீட்சிதர் கீர்த்தனங்களில் இல்லை. சாமா போன்ற பிரபலமான ராகங்களில் கூட வக்கிரப் பிரயோகங்கள் தீட்சிதரின் கீர்த்தனங்களில் காணப்படும். இன்று தீட்சிதரின் பாடல்கள் சிதைவின்றி பாதுகாக்கப்பட்டுக் கிடைக்கின்றன என்றால் கல்பகம் சுவாமிநாதன் போன்றவர்களே காரணம் எனலாம். அவரது சாமா ராகம், சாரங்க ராகம் போன்றவை இந்த விசேஷப் பிரயோகங்களோடு இருக்கும். ‘கரி களப முகம்’ என்ற சாவேரி ராகப் பாடலும் அப்படியே. ஆரம்பமே நிதானமாக நீர்த்தியாக சரியான எடுப்புடன் இருக்கும். கீர்த்தனங்களை சரியான காலப்பிரமாணத்தில் பாட வேண்டும் என்பது அவரது வழிமுறை. அதே சமயத்தில் தீட்சிதர் கீர்த்தனம் என்றால் மெதுவாக கட்டை வண்டி வேகத்தில்தான் வாசிக்க வேண்டும் என்ற கருத்தும் அவரிடம் இல்லை. ஆந்தாளி போன்ற ராகங்களை மிகவும் அழகாக சற்றே வேகமான காலப்பிரமாணத்தில் வாசித்திருக்கிறார். இசையைப் பொருத்தவரை, தக்கவற்றுக்குத் தக்கவாறு பொருத்தமாக அழகுணர்ச்சியோடு அளவோடு வாசிக்கக்கூடியவர்.

சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வீணை ஆசிரியையாகச் சேர்ந்தார். தம்மை நேர்முகத்தேர்வு செய்த டைகர் வரதாச்சாரியார் அடுத்த நாளே வேலைக்கு வரும்படி சொன்னதை நன்றியுணர்வோடு பலமுறை நினைவு கூர்ந்திருக்கிறார். அப்போதுதான் பேராசிரியர் எஸ்.ஆர்.ஜானகிராமன், திருமதி மணி கிருஷ்ணசுவாமி போன்ற பலர் அவரிடம் பயின்றனர். பேராசிரியர் எஸ்.ஆர்.ஜானகிராமனின் இந்தத் தொடர்பு பல வருடம் நீடித்தது. சமீபத்தில் பேராசிரியர் பெங்களூரில் “மாஞ்சி” மற்றும் ”பைரவி” ராகங்களைப் பற்றி ஒரு லெக்-டெம் (lec-dem) நிகழ்ச்சி கொடுக்கவேண்டி இருந்தது. ராகங்கள் நிலையாக இருப்பவை அன்று. பழையன கழிதலும் புதியன புகுதலும், சில சமயம் பழையன புதியனவாக மாறுவதும் இயற்கை நியதி. இப்படி இருக்கையில் மாஞ்சி என்ற ராகத்தின் சஞ்சாரங்கள் பலவற்றை பைரவி ராகம் அபகரித்துக்கொண்டது. அதன் விளைவாக மாஞ்சியின் தனித்துவமான வடிவம் தெரியாமல் இருக்கிறது. பைரவியும் பல பிரயோகங்களை தனக்குள் சேர்த்துக் கொண்டு அழகிய கலவையாக காட்சி அளிக்கிறது. பழக்கத்தில் இருக்கும் பாடல்களில் கூட அந்த வித்தியாசம் செவ்வனே புலப்படுவதில்லை. கல்பகம் சுவாமிநாதன் அவர்களின் பாடத்தில் தைவதம் பைரவிக்கு தைவதம் கமகங்களோடு வாசிப்பார், மாஞ்சிக்கு தைவதம் சற்றே தட்டையாக வாசிப்பார் மற்றும் அந்தர காந்தார கலப்புடன் வாசிப்பார்.  எண்பது வயதைத் தாண்டிய இளைஞரான பேராசிரியர், இந்த இரண்டு மாஞ்சி ராக கீர்த்தனங்களை அறிந்திருக்கவில்லை. புதிய விஷயங்களைக் கற்க வயது ஒரு தடையில்லை என்பதால் உடனே கல்பகம் சுவாமிநாதன் இல்லத்திற்கு விரைந்தார். அவரிடம் அந்த இரண்டு கீர்த்தனங்களை முறையாகக் கற்றார். நோடேஷன் மூலம் கற்பதை விட கல்பகம்மாளிடம் கற்பது பசுமரத்தாணி போல் நினைவில் இருக்கும் என்பது அவர் கருத்து. இப்படிப் பல வித்வான்கள், விதூஷிகளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார் திருமதி கல்பகம் சுவாமிநாதன். நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த எம்மி டே நைனுஷ், டேவிட் ரெக் போன்ற பல வெளிநாட்டு அறிஞர்கள் பேராசிரியர்கள் இவரது இசையை ரெக்கார்டு செய்திருக்கின்றனர். அவரும் காலஞ்சென்ற வீணை விதூஷி திருமதி வித்யா சங்கரும் நல்ல நண்பர்கள்.

திருமதி கல்பகம் சுவாமிநாதன் பைரவி ராகம்:

திருமதி கல்பகம் சுவாமிநாதன் மாஞ்சி ராகம்:

தீக்ஷிதரிணி என்ற பெயர் பெற்றாலும் அவரிடம் பல வாக்கேயகாரர்களின் பாடல்களை அறிந்திருந்தார். மைசூர் வாசுதேவாசாரிடம் அவரது பாடல்களை நேரடியாகக் கற்றிருக்கிறார். தியாகராஜ கீர்த்தனங்கள், கோபாலகிருஷ்ண பாரதி பாடல்கள், பல அரிய வர்ணங்கள் அவரின் பாடாந்தரத்தில் இருந்தன. வீணை வாசிக்கும்போது ராக ஆலாபனைகளில் ரசிகர்களின் கவனத்தை அலைபாயவிடாமல் சுண்டி இழுக்கும் வகையில் கச்சிதமான ஆலாபனைகள் செய்வது அவரது மற்றொரு பலம். கலாக்ஷேத்ராவில் இருக்கையில் பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுடன் இணைந்து வீணை-கோட்டு வாத்திய கச்சேரிகள் பல செய்திருக்கிறார். தனது சிறு வயதில் 22 வகை வீணை பாணிகளையும் வாசிப்பு முறைகளையும் வாசிக்க முயற்சிப்பேன் என்றும் அப்போது தம் ஆசிரியர் அதை ரசித்து விட்டு, அதே சமயம் “ஒழுங்காக வசிக்கும் வழியைப்பார்” என்று புன்முறுவலுடன் சொல்லி இருக்கிறார்.

தஞ்சாவூர் பாணியின் மிகச் சிறந்த கலைஞர். தஞ்சாவூர் பாணியில் வீணையைப் பொருத்தவரையில் கமகங்களின் சுத்தம், கமகங்களை வாசிக்கும் வழிமுறைகள், உத்திகள் இவற்றை அனுபவபூர்வமாக நன்கு கற்றறிந்தவர். அவர் வாசிக்கையில் பல முறை அவரே பாடியும் வாசித்திருக்கிறார். பல சமயம் அப்படிப் பாடாமல் இருக்கும் நேரத்திலும் நமக்கு யாரோ உடன் பாடுவது போலவே தோன்றும். ‘காயகி முறை’ எனப்படும் வாத்தியத்தில் வாய்ப்பட்டைப் போன்றே ஒலிக்க வைக்கும் நேர்த்தியை அவர் செவ்வனே அறிந்திருந்தார்.

அவருடைய மற்றொரு அதிசயமான தன்மை இவ்வளவு விஷயம் அறிந்திருந்தாலும் பணிவும், மென்மையும் நிறைந்து நின்ற எளிமையான உள்ளம். திருவையாற்றில் வீணைக்கு இடம் இன்மை போன்ற சில குறைகள் அவருக்கு இருந்தன. இசை பற்றியே எண்ணிக்கொண்டிருக்கும் மன நிலை உடையவர். அவரது சிஷ்யர் ராமகிருஷ்ணன் அவரை அன்பாக “கான வன மயூரி” (சங்கீதம் என்ற வனத்தில் உலவும் மயில் – இத்தொடர் அவர் வாசிக்கும் “கௌரி கிரிராஜ குமாரி” என்ற கௌரி ராக கீர்த்தனத்தில் வரும்.) என்ற அடைமொழி அவருக்குப் பொருந்தும் என்பார். அவருடைய இழப்பு அவரது குடும்பத்தினர், சிஷ்யர்கள், விசிறிகள் இவர்களுக்கு மட்டுமல்லாமல் வீணைக்கும், பல அரிய கீர்த்தனங்கள் என்ற “வாழும் கலைப்பெட்டகங்களுக்கும்” உண்டான ஈடு செய்ய இயலாத பேரிழப்பு!

அடுத்த முறை சென்னை செல்லும்போது அந்த நரைத்த கூந்தலையும், அன்பான சிரிப்புடன் “ஏதாவது வாசிக்கணுமா” என்ற இனிமை கலந்த குரலை நிச்சயம் மனம் தேடும்!

வித்யா ஜெயராமன் இசை, தத்துவம் மற்றும் மொழி ஆர்வலர். கர்நாடக சங்கீதத்தைக் குறித்துப் பல அரிய கட்டுரைகளை வெளியிட்டுவரும் ”குருகுஹா” என்ற வலைத்தளத்தை நடத்தி வருகிறார்.
வித்யாவின் ஆங்கில வலைத்தளம்: http://cidabhasa.blogspot.com/
தமிழ் வலைத்தளம்: யாமறிந்த மொழிகளிலே