ஆயிரம் தெய்வங்கள் – 8

மெஸப்பட்டேமியா

சில சொற்களுக்கென்று தனித்த கவர்ச்சி உண்டு. அந்தச் சொல்லை வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும். சில ஊர்கள், சில நாடுகள், சில நகரங்கள் உதாரணம் -நாங்கள் “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” என்று அப்போது சொன்னதை இன்று “ஐ லவ் சென்னை-ய்யா” என்கிறார்கள். 1956-இல் நான் சென்னைக்கு வந்து விவேகானந்தாக் கல்லூரியில் பி.யூ.சியில் சேர்ந்தேன். நான் சென்னைக்கு வந்து கல்லூரியில் படிக்க எண்ணியபோது “இன்டர்மீடியட்” ஒழிந்து ப்ரீ-யூனிவர்சிட்டி கோர்ஸ் கல்லூரி தொடங்கியது. இன்று பள்ளியிலேயே +2. நான் சின்னாளப்பட்டியில் எஸ்.எஸ்.எல்.சி படித்துவிட்டு சென்னையில் பி.யூ.சி சேர்ந்தபோது “ஆங்கிலம்” பெரிய பிரச்சனையாயிருந்தது. பல மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள். ஆங்கிலம், தமிழ், உயிரியல், தாவரவியல், உலக வரலாறு, மனவியல், வானவியல் என்று தமிழைத்தவிர அவ்வளவும் ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுத்தார்கள். மற்றவர்கள் ஆங்கிலத்தில் புரிந்துகொண்டு ஆங்கிலத்தில் எழுதுவதுபோல் என்னால் முடியவில்லை. தமிழில் புரிந்துகொண்டு ஆங்கிலப்படுத்துவேன். பாடம் நடத்துவது எதுவும் புரியாது. கேட்கக் கேட்கத் தன்னிலை மறந்து தூக்கம் கண்களைத் தழுவும். தூக்கம் வராத வகுப்பு உலக வரலாறு. காரணம் விரிவுரையாளர் மகாதேவனின் கணீர்குரல். தட்டி எழுப்பும் குரல் மட்டுமல்ல. என்னைப் போல் ஒரு பட்டிக்காட்டானுக்கும் புரிந்தது. பின்னர் பி.ஏ. பொருளியல் படித்த போது இந்தியப் பொருளாதாரம். இந்த இரண்டு பாடத்திலும் எனக்கு முதல் மதிப்பெண் கிட்டும். விஷயம் திசைமாறுகிறது. “மெஸப்பட்டேமியா” என்றால் பி.யூ.சியில் மகாதேவன் என்னைத் துõங்கவிடாமல் அந்தச் சொல்லை அழுத்தந்திருத்தமாகச் சொல்லி அந்த நாகரிகம் பற்றி அழகாகக் கூறுவார். அதனால் மெஸப்பட்டேமியா என்ற சொல்லே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதெல்லாம் அர்த்தம் தெரியாமல் உருப்போட்டு மார்க்கு வாங்கத் தெரிந்திருந்தது. பின்னர் அர்த்தம் அனர்த்தம் எல்லாம் தெரிந்த “அறிஞர்”(?) ஆன பிறகுதான் மெஸப்பட்டேமியா என்ற சொல்லின் உட்பொருளே புரிந்தது. இது கிரேக்கச்சொல். “மெசொ” என்றால் நடுவே என்று பொருள்.“பட்டோமே” என்றால் ஆறுகள். ஆறுகளின் நடுவே அற்புத நாகரிகங்களில் 1. சுமேரியா, 2. பாபிலோனியா, 3.ஹீனரத்தியா, 4. ஹிட்டைட்டியா ஆகியவை பழைமைச் சிறப்புள்ளவை. காவியச் சிறப்புள்ள புராணக்கதைகளும் இந்த நான்கில் உண்டு. யூஃப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இன்றை ஈராக் தேசமே அன்றைய மெஸப்பட்டேமியா ஆகும்.

மேற்படி நான்கு நாகரிகங்களின் புராணக்கதைகள், வழிபாடுகள், மெஸப்பட்டேமியாவின் உற்பத்திஸ்தானமாயுள்ள அனடோலியா என்ற இன்றைய துருக்கி, கீழே செமிட்டிக் என அடையாளமான இன்றைய பாலஸ்தீனமான உகரித், எகிப்த், பின்னர் பாரசீகம், புராதன ஆசிரியா, ஆகிய எல்லை தாண்டிய பகுதிகளிலும் பரவியிருந்தது.

சுமேரிய தெய்வங்கள்

“மெஸப்பட்டேமியா” என்பது பல நாடுகளைக் குறிக்கும். அதில் சுமேரியாவும் அடக்கம். சுமர் திரிந்து சுமேரியாவாயிற்று. எரக் பின்னர் ஈராக் ஆனது. எரிது, லகாஷ், உர் ஆகியவை சுமேரிய நகரங்கள். இந்த நகரங்களில் தொழப்பட்ட தெய்வங்கள் வேளாண்மைக்கும், நீர் மேலாண்மைக்கும் எடுத்துக்காட்டுகள். சுமேரியாவின் தனிச்சிறப்பு. உலகிலேயே முதல் விவசாயப் பண்பாடு என்று வரலாற்று அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பெருமையாகும். இதை உறுதிப்படுத்திய பாபிலோவ், மிக முக்கிய உணவுப் பயிர்களான கோதுமை, பார்லி, ரை, கொண்டக்கடலை, பட்டாணி, மசூர்பருப்பு, ஆப்பிள், பாதாம், ஆலிவ் ஆகியவற்றின் தோற்றமையங்களாக யூஃப்ரிட்டீஸ் – டைக்ரீஸ் நதிச்சமவெளிகளைக் குறிப்பிட்டுள்ளார். முறைப்படியான முதல் விவசாயம் இங்கு நிகழ்ந்ததாகவும் உலக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சுமேரிய புராணங்களில் உள்ள படைப்புப் பாசுரங்கள் கியூனிஃபார்ம் எழுத்து இலக்கியங்களாகவும் உள்ளன. கி.மு. 2500 அளவில் சுமேரியர்களை அக்காடியர்கள் வென்றனர். வென்றவர்கள் சுமேரியப் பண்பாட்டைத் தமதாக்கிக்கொண்டனர். உலகவரலாற்றில் மிகவும் புகழ்மிக்க மன்னர் ஹம்முராபி. இவர் உலகில் முதல் முறையாக அரசியல் சட்டம் வகுத்தவர். இன்றைய ஈராக் அன்றை ஹம்முராபியின் ஆட்சி எல்லை. ஹம்முராபிக்குப் பின் துருககியிலிருந்து (அன்று அனடோலியா, ஆசியா மைனர் என்று அழைக்கப்பட்டது) வந்த ஹிட்டைட் இ னம் (க்ஷத்திரியர்கள்?) பாபிலோனியாவை வென்று கூடவே ஹீராத்தியர் இனப்பண்பாட்டைத் தமதாக்கிக்கொண்டனர். இங்கு நாம் சுமேரியபுராணம், பாபிலோனிய புராணம், ஹிட்டைட்டியர் – ஹீராத்தியர் புராணம் தொடர்பான பல தெய்வங்களையும், கதைகளையும் கவனிக்கலாம். இந்த தெய்வக்கதைகள் சுவாரசியமானவை.

கி.மு. 2000 காலகட்டத்தில் சுமேரிய நிலப்பகுதிகளை ஆண்ட மன்னர்களின் ஆவணம் குடீ (Gudea) இலக்கியமாகப் போற்றப்படுகிறது. பிரபஞ்சபூதம் (Primeval Monster) பிரபஞ்சமரம் (Cosmic Tree) டில்மூன் சொர்க்கபூமி (Myth of the Dilmun) போனற் பலதரப் பட்ட கதைகளிலிருந்து மெஸப்பட்டேமிய தெய்வங்களை வகைப்படுத்தலாம்.

குடீ கதைகளில் வரும் நிப்பூர் நிங்கர் சு ஆலயமே பிரபஞ்ச மரக்குறியீடு. நிப்பூர் கோபுரம் பிரபஞ்ச மரச்சின்னம் (Cosmic Tree). இது துர்-என்-கி எனப்படும். மண்ணுடன் விண் பிணைக்கப்படுவதே இதன்பொருள். என் என்றால் விண் தெய்வம். என்லில் என்றார் காற்று தெய்வம். அதாவது வாயுபகவான். நின்-ஹர்சக் என்றால் மலையைக் குறிக்கும் பெண் தெய்வம். என்கி என்பது பூமி. பூமி ஆண்தெய்வம். பாதாள உலகில் உள்ள நீரும் அதாவது நிலத்தடி நீர் கூட “என்கி”தான்! நின்ஹர்சக் தெய்வம் நின்து, நின்மா, அருரு என்ற பெயர்களிலும் வழங்கப்பட்டது.

சுமேரியாவின் மற்றொரு புராணத்தின் படி நம்மு ஒரு கடல் தெய்வம். ஒரு கடலாக வாழ்ந்த நம்மு விண்ணையும் மண்ணையும் ஈன்றது. எல்லா தெய்வங்களுக்கும் அன்னை நம்முவே. நம்முவின் பிள்ளை என்கிறே மனிதர்களைப் படைத்த பிரம்மாவார். உலகம் தோன்றிய புராணக்கதைகளில் நாட்டுக்கு நாடு ஒற்றுமை உண்டு. உலகம் தோன்றுவதற்கு காரணமானவர் நாராயணர். சுமேரிய நம்மு நமது நாட்டில் நாராயணராகிவிட்டார். நாராயணர் என்றால் நீர்க்கடவுள். நாரா என்றால் தண்ணீர் ஆகும். திருப்பாற்கடலில் நாராயணர் விஷ்ணுவாகி ஆதிசேஷனைப் படுக்கையாக்கி சயனம் செய்கிறார். மச்சாவதாரத்தில் மீனாக வந்து முதல் மனிதனாகிய மனுவைக் (சத்தியவிரதன்) கரையேற்ற மச்சாவதாரக் கதையில் ஒரு சின்ன மீனாக அவதரித்துத் தன்னைக் காப்பாற்ற சத்தியவிரதனிடம் வேண்ட, சின்னமீன் திமிங்கலமாக மாறி ஊழிவெள்ளத்தை எதிர்கொண்டு மனுவைக் காப்பாற்றவில்லையா? யூஃப்ரட்டீஸ் நதிக்கரையில் உள்ள பிரபஞ்சமரம் வானிலிருந்து என்கியை பூமியில் இறக்கி மனிதர்களைக் காப்பாற்ற உதவியது பிரபஞ்சமரம். எனினும் என்கிட உறங்குவது தில்மூனில். தில்மூன் என்பது ஒரு கனவு நகரம் அல்லது சொர்க்கம். என்கியுடன் உறங்குவது நின்து, தூயகன்னி. தில்மூனில் காகம் கரைவது இல்லை. ஆந்தை அலறுவது இல்லை. சிங்கம் கொல்வது இல்லை. ஆட்டுக்குட்டியை ஓநாய் உண்பதில்லை. தூயகன்னிக்கு அலுத்துவிட்டது. உயிரே இல்லாத தில்முனை உயிரோட்டமாக மாற்ற வேண்டினார். பின்னர் நீரூற்றுக்கள் ஏற்பட்டன. என்கியின் மகள் நின்சிகில்லா விதைகளை வழங்கினாள் உழப்பட்ட நிலங்களில் தானியங்கள் செழித்தன.

தெய்வீகக் கடல், புதிய தெய்வங்களின் ஜனனம் பற்றி தில்மூன் இலக்கியத்தில் உண்டு. தூயகன்னி,நின்து என்கி உதவியின்றி நின்ஹர்சக்குடன் கலந்து தன் விதைகளை வழங்குகிறாள். நின்ஹர்சக் என்பவள் பூமாதேவி. மண் தெய்வம். அது உரமிட்ட சேற்று நிலம். தூயகன்னியின் விதைகள் விழுந்து உயிர்கள் தோன்றின. நின்மு என்ற பெண்தெய்வம் தோன்றியது. என்கி (ஆண்பூமி) நின்முவுடன் கூடி நின்துர்ரா என்ற தெய்வம் பெண்ணுக்குத் தந்தையானார். நின்துர்ராவிடம் ஒன்றுகூடி உட்டு என்ற பெண் தெய்வத்தை உருவாக்கிப்பின் அந்த உட்டுவையும் விட்டு வைக்காமல் என்கி கூட நினைத்தபோது, “போதுமடா சாமி”என்று நின்ஹர்சக் என்கி மீது சினமுற்று சாபம் தரவே, என்கி வாதநோயால் உடல் அசைவற்றுப் போனார். நின்ஹர்சக் விண்ணில் மறைந்துவிட்டாள். பெருந்தெய்வமான அனுன்னகி கவலையுற்று உலகில் படைப்பையும் உயிர்களையும் உருவாகக் என்கியை குணப்படுத்த விரும்பினாள். அதற்கு நின்ஹர்சக் உதவ வேண்டுமே. நின்ஹர்சக்கின் சினத்தைத் தவிர்க்க நரித்தந்திரம் – அதாவது நரியைத் தூது அனுப்பினாள். நரியோ கைம்மாறுகேட்டது. நரிக்கு என்கி குணமானதும் தோட்டம், துறவு, வயல், மரங்கள் எல்லாம் மானியங்களாக வழங்கப்படும் என்று வாக்களிக்கப்பட்டது. நரியின் தந்திரம் பலித்தது. என்கி எட்டு இடத்தில் வலிப்பதாகக் கூறவே நின்ஹர்சக் எட்டு சித்த முனிவர்களையும் படைத்து என்கியை வலியிலிருநந்து விடுவித்தாள். பின் அந்த எட்டில் ஏழு தெய்வங்கள் சப்தரிஷிகளாயினர். எட்டாவது முனி, என்ஷலிக் தின்முன் காவலரானார். இக்கதையில் தாவரங்களின் தோற்றம் பற்றிய கருத்து உள்ளுறை உவமமாகக் கூறப்பட்டுள்ளது.

நின்து அல்லது நின்ஹர்சக் என்பது பூமி. என்கி என்பது நீராகும். பூமியைக் குடைந்து நன்னீர் ஊற்று வெளிப்பட்டு நதிகளாயின. நதிநீர் பாய்ந்து நிலம் வளம் பெற்றது. பயிர்கள் தோன்றின. அப்பயிர்களே தெய்வங்களாயின. நின்மு பயிர் வளர்ச்சி. நின்சிக் பசுமை. என்கி தூவிய விதைகளில் புதிய பயிர்கள் தோன்றின. என்கி அறியாவண்ணம் நின்ஹர்சக் மூலிகை விதைகளைத் தூவி எட்டு தெய்வங்களை அல்லது சப்தரிஷிகளை உருவாக்கினார். அம்மூலிகைகளைக் கொண்டு உடல் குணமான என்கி, நின்ஹர்ச்ககைப் போற்றினார். இவ்வாறு மூலிகைகள் சித்த முனிவர்களாயினர் அல்லது தெய்வங்களாயின.

சியுசுத்ரா

மனிதத்தோற்றம், பயிர்த்தோற்றம், அரண்மனைத் தோற்றம், பழைய பைபிளில் கூறப்பட்ட நோவாப் பிரளயயம், அப்பிரளயத்திற்கு முற்பட்ட ஐந்து நகரங்கள் பற்றிய பல விவரங்களை சுமேரியப் புராணங்கள் கூறுகின்றன. நோவாப் பிரளயத்திற்குப் பின் சிரஞ்சீவியான சியுசித்ரா மட்டுமே எஞ்சிய கதை சுவாரசியமானது அநேகமாக இதுவே இந்தியாவின் மச்சாவதரமாகப் பிரதிபலித்திருக்கலாம். திருமூர்த்திகளான என், என்லில், என்கி மற்றும் பூமி தேவியான நின்ஹர்சக் ஆகியவை மனிதர்களையும், மிருகங்களையும், பயிர்களையும் படைத்தபின்னர் அரண்மனையையும் அரசுரிமையையும் விண்ணுலகிலிருந்து மண்ணுலகுக்கு அனுப்பிவைத்தனர். நோவாப் பிரளயத்திற்கு முற்பட்ட எரிது, பத்திபாரா, லாரக், சிப்பர், ஷீருப்பாக் ஆகியவையும் பூஉலகுக்கு வந்தன. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், மனிதர்களுக்கு தேவர்கள் புத்தி புகட்ட யுகப்பிரளயத்தை ஏற்படுத்த முடிவுசெய்தனர். தேவர்களின் ஒருவரான ஷீருப்பாக் நகர மன்னர்இந்த விஷயத்தை சியுசித்ராவுக்குத் தெரிவித்தார். பழைய பைபிளில் கூறப்பட்ட நோவா, ஊழி வெள்ளத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு மனிதர்களைப் படைக்க, எவ்வாறு விஷ்ணு சத்தியவிரதனைக் காப்பாற்றினாரோஅவ்வாறே நோவா, நோவாவோ கரையேறத்தானே கப்பல் கட்டினார். நோவாவின் கப்பலில் சியூசுத்ரா மானுட விதைகளை ஒளித்து வைத்துக்கொண்டான். மிகவும் உத்வேகத்துடன் ஏழு இரவுகள் ஏழு பகல்கள் யுகப்பிளயம் நீடித்து மனிதர்களும் நகரங்களும் அழிந்தன. சியு சுத்ரா ஒரு தெய்வமாக ஏற்கப்பட்டான். மரணபயம் இல்லாத சீரஞ்சீவியானான். சுமேரிய புராணத்தின்படி தில்மூனே சூரியன் உதிக்கும் இடம். அதுவே வானத்தின் எல்லை. சியுசுத்ராவே தில்மூனுக்கும் அதிபதியானான்.

(தொடரும்)