சென்ற இதழில் வெளியான இக்கட்டுரையின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.
ஜனநாயகம் அவசியம்தானா?
பொருளாதாரம், எண்ணெய் வளம் என்றெல்லாம் பேசினாலும், ஐரோப்பிய அமெரிக்க நாகரீகங்களுக்கும் அரபு நாடுகளுக்குமான உரசல்கள் அனைத்திலும் – சிலுவைப்போர்களில் தொடங்கி இன்றைய இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை வரை – அந்தந்த சமூகங்களையும் கலாசாரங்களையும் வரையறை செய்யும் தத்துவங்களின் அடிநாதம் பல நூற்றாண்டுகளின் கால இரைச்சலைத் தாண்டி இன்றும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதுதான் “நாகரீகங்களின் மோதல்” என்று சாமுவேல் ஹண்டிங்டனை இதனைக் குறிப்பிட வைத்தது.
இஸ்லாமிஸ்டுகளை ஒரு நிலையில் வலுவிழக்கச் செய்யும் மேற்கு நாகரீகத்தின் இத்தகைய முயற்சிகளை அரபுச்சமூகங்கள் சந்தேகத்துடனேயே பார்க்கும். மட்டுமல்ல, மஃப்டிக்களும், முல்லாக்களும், உலெமா அமைப்புகளும் வலுவிழந்து போகும் ஒரு அரசியல் நிலை ஜனநாயகத்தால் மட்டும் எளிதாய் வந்து விடும் என்று எனக்குத்தோன்றவில்லை. எகிப்து, ஈரான், சவுதி அரேபியா ஆகியவையே அரபு சமூகத்தின் அதிகார மையங்கள். அதில் ஈரான் அரசு மதவாத அயதுல்லாக்கள் பிடியில் இருக்கிறது. சவுதி அரேபிய சமூகம் இஸ்லாமிய அடிப்படைவாத வஹாபியிசத்தின் பிடியிலும், அதனைப் பெரும் செலவு செய்து பரப்பி வரும் முல்லாக்கள் மற்றும் அரச குடும்பம் ஆகியவற்றின் பிடியிலும் இருக்கிறது. ஈரானும் சவுதி அரேபியாவும், வரலாறு (பெர்ஷியன் x அரபு); நாகரீகம் (பாரசீக நாகரீகம் அரபை விடத் தொன்மையானது; இஸ்லாத்துக்கு முந்தைய நாகரீக வெற்றிகள் பலவற்றை உள்ளடக்கியது); மதப்பிரிவு (ஷியா x சுன்னி) ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்ததொரு நிழல் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக சவுதி அரேபியாவின் வஹாபி மன்னர் குடும்பத்துக்கு மெக்கா-மெதினா காப்பாளர்கள் என்பது ஈரான் தலைமைக்குக் கிடைக்காத ஒரு தனிப்பெரும் அந்தஸ்தைத் தந்துள்ளது. அந்த தனிப்பெரும் அந்தஸ்தை முன்வைத்தே சவுதி அரேபியாவின் மன்னர் வம்சம் அரசாளும் தகுதியை பெற்றிருக்கிறது. சவுதி அரேபியாவின் மன்னர் அளவுக்கு அந்நாட்டுத் தலைமை முல்லாவும் பல விஷயங்களில் அதிகாரம் மிகுந்தவராக இருக்கிறார். இஸ்லாமிய சட்டதிட்டங்களை தெளிவுபடுத்திக்கொடுப்பதே இப்படிப்பட்ட முல்லாக்கள்தான் எனும்போது அரசன் அந்தத்திட்டத்தை சரியாக அமுல்படுத்துபவன் மட்டுமே. இந்நிலையில் சவுதி போன்ற அடிப்படைவாத இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகத்தின் குரல் எப்படி எழும்ப முடியும் என்கிற கேள்வி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகம் என்பதே அத்தனை அவசியம்தானா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்விக்கு பதில் என்று சொல்வதென்றால் இப்படிச் சொல்லலாம். ஜனநாயகம் என்பது படகின் துடுப்பு போல. துடுப்பு இல்லாத படகிலும் அலையும் காற்றும் சாதகமாக இருந்தால் தொடர்ந்து பயணித்து தூரத்தில் தெரியும் கரையை அடைந்துவிட முடியலாம்தான். வழியில் சுழல் தெரிகிறது என்றால் துடுப்பு அவசியம். பாறையில் இடிக்காமல் சுற்றிச்செல்ல துடுப்பு அவசியம். எதிரிப்படகு துரத்தினால் துடுப்பு அவசியம்.
ஒவ்வொரு மனிதனும் சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து அதிகார தளங்களிலும் பங்கேற்க ஜனநாயகம் வழி காட்டுகிறது. ஜனநாயகத்தின் நடைமுறைத் தவறுகள் பல இருக்கலாம். ஆனால், அதன் தொடர்ந்த செயல்பாடு தவறுகளைத் திருத்தும் வழியையும் திறந்து வைக்கிறது. அதிகாரத்தைப் பரவலாக்குவதன் மூலம், பெரும்பாலான மக்களுக்கு அரசாங்கத்தில் தனக்கும் பாத்தியதை இருக்கிறது என்கிற உரிமை உணர்வை அளிக்கிறது. அப்படிப்பட்ட உரிமைக்கான குரலை எழுப்ப அனுமதிப்பதன் மூலம், தனது எதிர்காலத்தையும், சமூகவிதியையும் உள்ளிருந்தே வடிவமைத்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் அந்த சமுதாயத்தின் முன் விரிகிறது.
அது அந்த சமுதாயத்திற்கு எதிர்காலத்தையும், தன் சந்ததிகளின் நல்வாழ்வையும் குறித்த நம்பிக்கையை வளர்க்கிறது. எதிர்காலம் குறித்த அந்த நம்பிக்கை வன்முறை வெடிப்புகளிலிருந்து அந்த சமுதாயத்தை மெதுவாக விலக்குகிறது. மென்மையாக்குகிறது. நாகரீகப்படுத்துகிறது. பேரரசுகளால் நாகரீகத்தை உருவாக்க முடிந்ததற்குக் காரணம் அவை தமது ஸ்திரத்தன்மையின் மூலம் அந்த மக்களுக்கு ஒரு நீண்ட கால பாதுகாப்பு உணர்வையும் எதிர்காலம் குறித்த உத்தரவாதத்தையும் அளித்தன என்பதுதான். ஆனால் பேரரசின் மிகப்பெரிய பலமும் பலவீனமும் மன்னன் என்கிற ஒற்றைப் பேரதிகார மையம்தான் என்பதையும் வரலாறு நமக்குக் காட்டிக்கொண்டே வந்திருக்கிறது.
சர்வாதிகார அமைப்பில் இரக்கம் மிகுந்த சர்வாதிகாரி இருக்கும்வரை படகு நன்றாகச் செல்லலாம். ஆனால் அது எளிதில் கவிழ்க்கப்படக்கூடிய நிலையற்ற ஒரு அமைப்பு. மட்டுமன்றி, பல சர்வாதிகாரிகளுக்கு மக்களின் அதிருப்தி தெரிவிக்கப்படும் ஊடகப் பாதைகள் மூடப்பட்டு விடுகின்றன. எனவே தவறான பாதையில் படகு சென்றாலும் சரியான நேரத்தில் சரியான வழியில் திருத்திச்செலுத்துவது கடினமாகிறது. அவசர நிலைக்குப்பிறகு நடந்த தேர்தலில் இந்திரா தோற்றவுடன், தனது நண்பர் குஷ்வந்த் சிங்கிடம் “இவ்வளவு கொடுமைகளும் துஷ்பிரயோகங்களும் நடக்கின்றன என்று ஏன் என்னிடம் ஒருவருமே சொல்லவில்லை?” என்று கேட்டதற்கு, குஷ்வந்த் சிங் சொன்ன பதில் “சொல்லக்கூடிய அத்தனை வாய்களையும்தான் நீங்கள் அடைத்து விட்டிருந்தீர்களே?”
இஸ்லாமிய அரசுகளில் ஜனநாயகம் சாத்தியமா?
கடந்த ஆண்டு மறைந்த பிரான்ஸ் நாட்டு அரசியல் தத்துவவாதி க்ளாட் லிஃபோர்ட் (Claude Lefort) ஜனநாயகத்தின் மிகப்பெரும் பலம் ‘அதிகாரத்தின் காலி நாற்காலி’ என்கிற கோட்பாடுதான் என்றார். அதாவது ஜனநாயக அமைப்பில் அதிகாரத்தின் நாற்காலி நிரந்தரமாகக் காலியாகத்தான் இருக்கிறது, அது தொடர்ச்சியாக ஆனால் தற்காலிகமாக அவ்வப்போது வெவ்வேறு மக்கள் பிரதிநிதிகளால் மக்களின் இறையாண்மை மூலம் (sovereignty of people) நிரப்பப்படுகிறது, என்கிறார் லிஃபோர்ட்.
ஆனால் சர்வாதிகார அரசுகளில் – குறிப்பாக இஸ்லாமிய அரசுகளில்- மக்களின் இறையாண்மையால் நிரப்பப்படும் அரசு அதிகாரம் என்பதானது மிகவும் சர்ச்சையைக் கிளப்பும் விஷயமாக இருக்கிறது. இஸ்லாமிய அரசியல் சட்டகத்தில் அதிகாரம் என்பது அல்லாவிடனிடத்திலேயே எப்போதும் இருக்கிறது, அது காலியாகவே இருப்பதில்லை. அந்தப்பீடம் நிரந்தரமாக ஏக இறைவனால் நிரப்பப்பட்ட ஒன்றே. ஆட்சிக்கு வருபவர்கள் (தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்) செய்ய வேண்டியதெல்லாம் ஏக இறைவனின் சட்ட திட்டங்களை கறாராகச் செயல்படுத்துவது மட்டுமே. இது ஜனநாயகம் நோக்கிய இயக்கத்தில் இஸ்லாமிய சமூகங்களுக்கு இருக்கும் கோட்பாடு ரீதியான முக்கியத் தடை எனலாம்.
ஜனநாயகத்தில் மேலும் இரண்டு விஷயங்கள் அடிப்படையானவை:
– ஒன்று கூடி முடிவெடுப்பது- இதனை கலந்தாலோசித்தல் எனலாம், – இரண்டாவது பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து சமூக சட்டதிட்டங்களை அரசியல் சாஸனங்களின் மூலம் வரையறை செய்து கொள்வது- இதனை பெரும்பான்மையின் இறையாண்மை (popular sovereignty) எனலாம் (இறையாண்மை என்பதே loaded term என்பது எனக்குப்புரிகிறது, வேறு புது வார்த்தை ஒன்றை இந்த இடத்தில் கண்டுபிடித்துப் புகுத்துவதை விட இறையாண்மை என்றே குறிப்பிடுவதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்)
கூடி முடிவெடுப்பது என்பது இஸ்லாத்தில் ஸுரா அடிப்படையில் ஏற்கனவே இருக்கிறது என்று வாதாடுபவர்கள் உண்டு,. அதன் அடிப்படையில் தேர்தல் என்கிற அம்சத்தை இஸ்லாமிஸ்டுகளும் மதவாதிகளும்கூட ஒப்புக்கொள்ளக்கூடும். ஆனால், இதில் ஒரு முக்கியமான வித்யாசம் உள்ளது. ஜனநாயகத்தின் தேர்தலில் தெரிவு செய்யப்படும் நபருக்கு புதிய சட்டம் இயற்றுவது, பழைய சட்டத்தை மாற்றியமைப்பது ஆகிய அடிப்படை சமூக நிர்ணய அம்சங்களில் பங்கு இருக்கிறது. ஆனால் சுரா கவுன்ஸில் தேர்ந்தெடுக்கும் (இமாம் அல்லது கலீபாவின்) தலைமைக்கு இஸ்லாமிய ஷரியா சட்டத்தை சரியாகப் பொருளுணர்த்த (interpret) மட்டுமே அதிகாரம் இருக்கிறது. ஷரியா சட்டத்திற்கு மாற்றாய் புதிதாய் சட்டம் இயற்றவோ இருக்கும் சட்டத்தை மாற்றவோ அதிகாரமில்லை. இஸ்லாமிய அரசு என்று வரையறுத்து விட்டால் இதுதான் அங்கே நடக்கக்கூடியது.
இஸ்லாமிஸ்ட் கோட்பாடு பெரும்பான்மையின் இறையாண்மை என்பதை ஒப்புக்கொள்வதில்லை. இஸ்லாமிய அரசில் நிலவக்கூடியது அல்லாவின் இறையாண்மை மட்டுமே என்பதால் மக்களின் இறையாண்மை என்ற கருதுகோள் ஒரே இறைவனுக்கு இணைவைக்கும் அபச்செயலாகக் கருதப்படுகிறது. ஒரு தீவிர இஸ்லாமிஸ்ட் சமூகமோ அரசோ ஜனநாயகம் நோக்கி நகர முதற்பெரும்தடையாக ஆவது இதுதான்.
ஆனால் அரபு சமூகங்கள் தீவிர இஸ்லாமிஸ்டுகளால் மட்டும் (அல்லது இஸ்லாமிய மதத்தவரால் மட்டும்) நிரப்பப்பட்டிருக்கவில்லை. அங்குள்ள அரசியல் உரையாடல் தளங்கள் அனைத்தும் இஸ்லாமிஸ்டுகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பதே உண்மை. அதனை மாற்ற முடியுமா என்கிற பரிசோதனைக்கு மேற்கின் இந்த ஜனநாயக முனைப்புகள் வழிசெய்யுமா என்பதே முக்கியக்கேள்வி. மேற்கின் பல பாலிஸி அமைப்புகள் இறுக்கமான இஸ்லாமிய சமூகங்களில் எடுத்தவுடனேயே சமத்துவத்தையும் சமூகத்தில் தாராள மனப்பான்மையையும் முதன்மைப்படுத்தும் தவறைச்செய்கின்றன. அதாவது பேச்சுரிமை, பெண் சமத்துவம், மதப்பொறுமை ஆகியவை வளராத சமூகத்தில் ஜனநாயகம் நிலைக்காது என்பது அவர்கள் வாதம். இது இரண்டு காரணங்களால் சரியான வாதம் இல்லை:
ஒன்று: எந்த ஐரோப்பிய நாடும் ஜனநாயகத்தொடக்க காலத்தில் தாராள மனதுடனோ இளகிய சமூகக்கட்டமைப்புடனோ இருந்தது கிடையாது. அமெரிக்காவிலும் இதே நிலைதான். பிரான்ஸில் 1945 வரை பெண்கள் ஓட்டுப்போட முடிந்ததில்லை. 1964-இல்தான் அமெரிக்காவில் சமத்துவ சிவில் உருமைச்சட்டம் இயற்றப்பட்டது. இரண்டாம் உலகப்போர் வரை யூதர்களை இனரீதியாக கீழ்மைப்படுத்தும் சட்டங்கள் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் இருந்தன.
இரண்டு: ஜனநாயக அமைப்புகள் -இஸ்லாமிய அரசமைப்புக்குள்ளேயே என்றாலும் கூட – படிப்படியாக வலுப்பெறுவது இஸ்லாமிய சமூக இறுக்கம் காலப்போக்கில் தளர உதவும். இதன்மூலம் சமுதாயம், கலாசாரம், நாகரீகம் என்று பலதளங்களில் மாற்றங்கள் நிகழவல்ல பல திறப்புகள் அச்சமுதாயத்திற்குக் கிடைக்கின்றன. அராபிய சர்வாதிகார அரசுகளின் பின்னணியில் 30 வருடங்களுக்கும் மேலாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு அதிகார யந்திரம் இருக்கிறது. அது. எனவே அதன் நிறம், மணம், குணம் எல்லாம் ஒரே நாளின் விடியலில் மாறிவிடும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் படிப்படியாக மாற வாய்ப்பு இருக்கிறது. இந்த மாற்றங்கள் ஒரு நிலையில் இந்தோனேஷியா போன்ற ஒரு இளகிய இஸ்லாமிய சமூகத்தை அரபு நாடுகளில் உருவாக்கலாம். உத்தரவாதம் தர முடியாது. இவை நடக்காமலும் போகலாம்தான், ஆனால் இந்த முயற்சியைக்கூட மேற்கொள்ளாத நிலையில், மதவாத இஸ்லாமிஸ்டுகள் வலுவான சக்திகளாக காலாகாலத்திற்கும் இருப்பது மட்டுமே உறுதி செய்யப்படும். எனவே இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகப்பரிசோதனைக்கு ஒரு முயற்சியை செய்து பார்ப்பது அவசியமாகவும் ஆகின்றது.
சீனாவும் ரஷ்யாவும்
சவுதி அரேபியா போலவே ரஷ்யாவும் மிகப்பெரும் எரிசக்தி வளத்தைக்கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் நடைபெறும் ஒவ்வொரு கலவரமும், புரட்சியும் எண்ணெய் விலையை அதிகரித்து ரஷ்யாவுக்கு மிகப்பெரும் லாபத்தை ஈட்டித்தருகின்றன. ஆனால் அதைத்தாண்டி அரபு நாடுகளின் தொலைதூர அரசியல் பயணத்தை செலுத்தும் வசதியோ விருப்பமோ இன்றைய ரஷ்யாவிற்கு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். எகிப்தின் அன்வர் சதாத் சோவியத் துருப்புகளை தன் நாட்டில் வெளீயேற்றியதில் இருந்தே அரபு நாடுகளில் அதன் தாக்கம் குறையத்தொடங்கி விட்டது. மட்டுமன்றி செச்னியாவின் முஸ்லீம் தீவிரவாதிகளை புடின் அரசு கடுமையாக அடக்கி வருவது இஸ்லாமிய நாடுகளுக்கு ரஷ்யாவின் மேலுள்ள எதிர்ப்புணர்வையே வலுப்படுத்தி இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் சோவியத்துக்கெதிரான நிழல் போரை அமெரிக்கா நடத்த பெருமளவு நிதியுதவி செய்தது சவுதி அரேபியா என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அரபு புரட்சி நிகழ்வுகளைப் பொறுத்தவரை ரஷ்யா இவற்றை வெளியிலிருந்து கவனிக்கும் ஒரு சக்தியாக மட்டுமே இதுவரை இருந்து வருகிறது. எண்ணெய் வளம் நிறைந்த காக்கஸஸ் பகுதிகளில் இவை கலவர சூழலைக்கிளறி விடுமோ என்கிற அச்சம் அதற்கு இருக்கிறது. நிலையான அரசுகளை சிதறச்செய்து மத்திய ஆசியாவின் சில பகுதிகளில் மத வெறியர்கள் அதிகாரத்தைப்பிடித்து விட இந்தப்புரட்சிகள் வகை செய்து விடலாம் என்று ரஷ்ய அதிபர் மெட்வதெவ் தெரிவித்துள்ளார். ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கும் நிலையில் இருக்கும் ரஷ்யாவை இந்தப்புரட்சிகள் மேலும் சிந்திக்க வைக்கும் என்பது மட்டும் நிச்சயம். அமெரிக்கா, ஐரோப்பா போல ரஷ்யாவும் மத்திய கிழக்கிலும், தெற்காசியாவிலும் மீண்டும் தன் அரசியல் கவனத்தை கூர்மைப்படுத்தத்தொடங்கலாம். அதன் தொடர்ச்சியாக சோவியத் யூனியன் கால பழைய தொடர்புகளை ரஷ்யா புதுப்பித்து வலுப்படுத்த தொடங்கலாம். ஆனால் அது முன்புபோல் வலுவானதாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.
சீனாவிற்கோ அரபு நாடுகளை நோக்கிய பலமான பொருளாதாரப் பெருநோக்கங்கள் உள்ளன. மத்திய கிழக்கிலும், வட ஆப்பிரிக்காவிலும் சீன பொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்தும் திட்டம் அதற்கு இருக்கிறது. ஆனால் மேற்கு நாடுகளின் ஜனநாயகப்புரட்சி என்கிற கோஷத்தை சீனா மிகவும் சந்தேகத்துடனேயே பார்க்கிறது. எகிப்தின் ஜனநாயகப்புரட்சியை அடுத்து சீனாவில் இண்டர்நெட் கடுமையாக சென்ஸார் செய்ய்ப்பட்டுள்ளது. அரபு நாடுகளின் புரட்சி உய்கூர் முஸ்லீம்களை தூண்டி விடலாம் என்று எண்ணுவதால் வலைத்தளங்களில் தன் கண்காணிப்பை இன்னமும் அதிகமாக்கி உள்ளது. ஆனால் சீனாவில் இதுபோன்ற ஜனநாயகப் புரட்சிகள் வரும் வாய்ப்பு மிகவும் குறைவென்றே நினைக்கிறேன். அரபு நாட்டு ஜனநாயகப்புரட்சிகள் –குறிப்பாக எகிப்தில் நடந்தது- வாய்ப்பு மறுக்கப்படும் நகரங்களின் இளைஞர்களால் முன்னின்று நடத்தப்பட்டது. சீனாவின் நகர்ப்புற இளைஞர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்குப் பஞ்சம் இல்லை. சீனாவின் கிராமப்புறங்களில் நிலைமையே வேறு, ஆனால் அவர்கள் ஒரு திரளாகத்திரண்டு சீன அரசை எதிர்த்து தம் கோரிக்கைகளை முன் வைத்து புரட்சி செய்ய முனைவது என்பது எளிதில் நிகழ முடியாத ஒன்று. சிறு சிறு கலவரங்கள் ஆங்காங்கே தோன்றி மறைவது சீனாவில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அவற்றை பாதுகாப்பு படைகளைக்கொண்டு அங்கங்கே பற்றியெரியும் தீயை அணைப்பதுபோல் சீனா அடக்கிக்கொண்டே வருகிறது என்கிறார் பத்திரிகையாளர் பல்லவி அய்யர் (பார்க்க: ”சீனா- விலகும் திரை”). அரபு நாடுகள் போல சீனாவில் ஜனநாயகப்புரட்சி உருவாவது என்பது மேற்குலகிற்கும் தற்போது தேவையில்லாத தலைவலியையே உருவாக்கும். சர்வாதிகாரிகளாக இருந்தாலும் ஸ்திரத்தன்மை பொருட்டு அத்தகைய அரசுகளை மேற்குலகு ஆதரித்தே வந்திருக்கிறது. சீனாவைப்பொறுத்தவரை இந்த புரட்சிகள் உள்நாட்டில் உள்ள இளைஞர்களை உசுப்பி விடாவண்ணம் கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். அவ்வளவே.
இறுதியாக
மத்திய கிழக்கைப் பொருத்தவரை அரேபிய நாடுகளில் மத இறுக்கத்தின் கட்டுப்பெட்டித்தனங்கள் விலகி, நவீன கல்வியின் அம்சங்கள் உள்வாங்கப்பட்டு உருவாக்கப்படும் ஜனநாயகம்தான் நீண்டகால பயனைத்தரும். அந்த மாற்றம் சவுதி அரேபியாவில் நடக்காமல் மத்திய கிழக்கில் பெரிய மாற்றங்கள் எளிதில் வந்து விடாது. ஆனால் கட்டுப்பெட்டித்தனங்கள் விலகும்வரை காத்திருப்பது என்பது இஸ்லாமிஸ்டுகளின் தரப்பை மேலும் வலுப்படுத்தலாம் என்பதால் ஜனநாயகத்திற்கான ஒரு வெளியை உருவாக்குவதில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் இறங்கியுள்ளன. உள்ளூர் இளைஞர்களின் அதிருப்தி உணர்வுகளுடனான உரையாடலைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் இதனை பல அரபு நாடுகளும் ஆதரிக்கத் தொடங்கியுள்ளன.
மத்திய கிழக்கில் மிகப்பெரிய புதியதொரு ஆட்டம் – வலைத் தொழில்நுட்பம், ஜனநாயகம் – ஆகியவற்றை முன்னிறுத்தி தொடங்கியிருக்கிறது என்பதை புரிந்துகொள்வது நல்லது. மத்திய கிழக்கில் நடக்கும் எதுவும் இந்தியாவையும் பாதிக்கும் என்பதால், இந்திய உள்துறை இதனைக் கவனமாக அவதானித்து நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஜனநாயக அமைப்புகளின் வலுப்படுத்தலையும் கருத்தில் கொண்டு தனக்கென்று ஒரு தொலைநோக்குத் திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.
பொறுப்பான அரசாங்கம் என்பது உலக அரசியலைப் பின்தொடர்ந்து கவனித்துக்கொண்டே, அதன் மாற்றங்களுக்கேற்றவாறு தம்மை வலிவமைத்துக்கொண்டே இருக்கும் ஒன்றுதான். பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் –குறிப்பாக அமெரிக்கா- எவ்வாறு உரையாடலின் சட்டகத்தை மட்டுமல்ல, அதனை வடிவமைக்கும் கூறுகளையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கப் பயின்றிருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனைத்தொடர்ந்து செய்ய ஒரு மாபெரும் அறிவுஜீவிக்கூட்டமே – பல்கலைக்கழகங்கள், திட்ட அமைப்புகள், அரசுசாரா நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை சார்ந்து இயங்கும் தொலைநோக்கு ஆராய்ச்சி மையங்கள்- என்று பல்வேறுபட்ட அறிவுத்துறைகளையும் வியாபித்து இயங்குகின்றது. (இவ்வளவு பேர் வேலை செய்தும் பல விஷயங்களில் கோட்டை விடுகிறதுதான்; ஆனாலும் உடனே சுதாரித்து எழவும், course correction செய்யவும், புதிய யதார்த்தத்தை கையகப்படுத்தவும் இப்படிப்பட்ட தொடர்ந்த அறிவுலக செயல்பாடுகள் உதவுகின்றன). பாரதம் ஒருகாலத்தில் இப்படியான கருத்துலக வடிவமைப்பை எந்த வித திணிப்பும் இன்றி இயல்பாகவே செய்து வந்திருக்கிறது. இந்திய ஞான மரபின் கூறுகள் கீழை தேசங்களில் மட்டுமன்றி கிரேக்கம் அலெக்ஸாண்ட்ரியா, பாரசீகம் ஆகிய பகுதிகளுக்கும் பரவியிருந்தது. பிராந்திய சக்தியாக வளரும் பாரதம் தனது பழைய நாட்களை நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்ற நாட்கள் கழிந்து விட்டன. சிந்தனையில் தன்னம்பிக்கையையும், உலக அரசியல் செயல்பாடுகளில் உறுதியையும், தொலைநோக்குத் திட்டங்களில் சுயச்சார்பையும் வளர்த்துக்கொள்வது இக்காலகட்டத்தின் உடனடி அவசியம் ஆகும்.