அதெல்லாம் மாறியபோது – 3

இக்கதையின் முதல் பகுதி | இரண்டாம் பகுதி

femaleman_03

அவள் திரும்பத் திரும்ப தணிந்த குரலில் புலம்பினாள், “எனக்குத் தெரியும் யாரையாவது கொல்வேன், எனக்குத் தெரியும் யாரையாவது கொன்னுடுவேன்னு, அதான் அதை நான் ஒருநாள் கூடத் தொடாம இருந்தேன்.” அந்த முதல் நபர்- என்னிடம் முதலில் பேசிய மனிதன் – எல்லா இடங்களிலும் மறுபடி காலனிகளை நிறுவி, மறுபடி பல இடங்களைக் கண்டுபிடித்து, பூமி இழந்ததை எல்லாம் மறுபடி அடைய, ஒரு விஸ்தாரமான திட்டத்தைப் பற்றி வீட்டுக்குள் இன்னும் பேசிக்கொண்டிருந்தான். வைலவே கிரகத்துக்கு என்னென்ன நன்மைகளெல்லாம் கிட்டும் என்பதை மறுபடி அழுத்தமாக விளக்கினான்: வியாபாரம், அறிவு, கருத்துகள் பரிமாற்றம், கல்வி.  பூமியில் பால்குழுச் சமத்துவம் மறுபடி நிறுவப்பட்டு விட்டதாக அவனும் சொன்னான்.

கேட்டி செய்ய நினைத்தது சரிதான், அதிலென்ன சந்தேகம்; அவர்கள் நின்ற இடத்திலேயே அவர்களை எரித்திருக்க வேண்டும். ஆண்கள் வைலவேக்கு வரப்போகிறார்கள். ஒரு பண்பாட்டிடம் பெரிய பீரங்கிகள் இருந்து இன்னொன்றிடம் இல்லை என்றால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பது சுலபம்தானே? ஒருக்கால் ஆண்கள் திரும்ப வருவது என்பது எப்படியுமே நடந்திருக்கலாம். ஒரு நூறாண்டுகள் கழித்து இது நடந்திருந்தால், என்னுடைய கொள்ளுப் பேத்திகள் அவர்களை எதிர்த்து நின்றிருக்கலாம், ஒருவேளை மடக்கி நிறுத்தக் கூட முடிந்திருக்கலாம், அப்போதும் கூட முடிவில் சம வாய்ப்பு கிட்டியிராது; நான் முதலில் சந்தித்த மாடுபோலத் தசைத்திரளோடு நின்ற அந்த நான்கு ஆண்களை எனக்கு வாழ்நாள் பூரா நினைவிருக்கும்- அது ஒரு கணம்தான் நேர்ந்தது என்றாலும் கூட- அவர்கள் என்னை எப்படித் துரும்பாக உணர வைத்தார்கள்? கேட்டி அதை ஒரு உணர்ச்சி வசப்பட்டதால் நேர்ந்தது என்கிறாள். அன்றிரவு நடந்தது எல்லாம் எனக்கு நினைவிருக்கிறது; காரில் யுகியின் அதிக உற்சாகமான நடத்தை, வீட்டுக்குத் திரும்பியதும் கேட்டி தன் இதயமே உடைந்தது போல விம்மி அழுதது, எனக்கு அவள் என்னோடு அன்று சேர்ந்த விதம், எப்போதும்போல கொஞ்சம் தன் விருப்பப்படி என்னை இழுத்து ஆட்டிப் படைத்து, ஆனால் அற்புதமாக சுகம் தருவதாகவும், ஓய்வாகவும் அன்பைக் கொடுத்தது எல்லாம். அதற்குப் பிறகு, நான் வீட்டில் சுற்றிச் சுற்றி நடந்ததும், ஆடை விலகியதால் தன் ஒரு கை முழுதும் விசாலமான நடு அறையிலிருந்து வீசிய ஒளிச் சதுரத்தில் தெரியும்படி கிடந்து கேட்டி உறங்கியதும். தொடர்ந்து எந்திரங்களை ஓட்டி, அவற்றைச் சோதித்து, அவளுடைய மேல்கைத்தசைகளே வலுவான உலோகத் துண்டுகள் போலத்தான் இருக்கும். சில சமயம் நான் அவளுடைய கைகளைப் பற்றிக் கனவு கூட கண்டிருக்கிறேன். பின்னர், குழந்தை தூங்கும் அறைக்குள் போய், என் மனைவியின் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டேன், என் மடியில் உறங்கிய கைக்குழந்தையின் அற்புதமான மனதை உருக்கும் கதகதப்புடன் நான் ஒரு கோழித் தூக்கம் போட்டேன். கடைசியாக சமையலறைக்கு வந்தால் அங்கு யுகி உறங்குமுன் கடைசித் தடவையாக எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். என் பெண் பெரிய டேன் வகை நாய்களைப் போலச் சாப்பிடுகிறவள். “யுகி,” நான் அழைத்தேன், “உன்னால் ஒரு ஆணைக் காதலிக்க முடியும் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டதற்கு, அவள் பெரிதாகக் கெக்கலித்து இழிவாகச் சிரித்தாள். “ஒரு பத்தடித் தவளையால்!” என்றாள் என் மரியாதை தெரிந்த பெண்.

ஆனால் வைலவேக்கு ஆண்கள் வரப் போகிறார்கள். இப்போதெல்லாம் சில இரவுகள் நான் தூங்காமல் விழித்துக் கவலைப்படுகிறேன், இந்த கிரகத்துக்கு வரப்போகிற ஆண்களைப் பற்றி, என் இரண்டு பெண்களைப் பற்றி, கடைசிக் குட்டி பெட்டா காதரீனாஸன்னைப் பற்றி, கேட்டியையும், என்னையும் பற்றி, என் வாழ்வுக்கு என்ன ஆகும் என்பதைப் பற்றி. எங்கள் முன்னோர்களின் நாளேடுகள் ஒரு நீண்ட கதறலாக ஒலிக்கின்றன, நான் இந்த மாறுதலைக் குறித்து மகிழ வேண்டுமோ என்னவோ. ஆனால் ஆறு நூற்றாண்டுகளை அப்படி உதறி எறிய முடியவில்லை. அல்லது 34 வருடங்களைக் கூட உதற முடியவில்லை (இதை நான் இப்போது உணர்கிறேன்). அன்று முழு மாலையும் நாங்களெல்லாமே, சரியான நாட்டுப்புறங்களாய், மெகானிக்குகளின் ஓவரால் உடைகளில், விவசாயிகளின் கான்வஸ் முழுக்கால் சராய்களில், சாதாரணச் சட்டைகளோடு நின்று கொண்டிருந்தோம்: அந்த நான்கு ஆண்களும் தாம் கேட்க விரும்பிய ‘உங்களில் யார் ஆம்பிளையாக இருக்கிறீர்கள்?’ என்ற அந்தக் கேள்வியை நேராகக் கேட்காமல் மென்று விழுங்கித் திக்கித் திணறி, அந்த மாலை முழுதும் எங்களைப் பார்த்து வியந்தபடி நின்றதை நினைத்தால் சில சமயம் சிரிப்புதான் வருகிறது. ஏதோ அவர்கள் செய்த தவறுகளையெல்லாம் நாங்கள் நகலெடுக்க வேண்டும் போல! பூமியில் பால் குழுச் சமத்துவம் திரும்ப நிறுவப்பட்டு விட்டதென்பதை நான் துளியும் நம்பவில்லை. நான் ஏளனம் செய்யப்பட்டதாகவோ, கேட்டி மெலிவானவள் என்று பரிதாபம் காட்டப்பட்டதாகவோ, யுகி சிறிதும் முக்கியமில்லாதவள் போலவோ, கோமாளி போலவோ அலட்சியம் செய்யப்பட்டதாகவோ, எங்கள் குழந்தைகளின் மனிதம் கேள்விக்குள்ளதாக்கப்பட்டு, அவர்கள் எங்களுக்கே அன்னியராக ஆக்கப்பட்டதாகவோ நினைக்க நான் விரும்பவில்லை. சில நேரம் என் கவலை என்னவாக இருந்ததென்றால், என் சாதனைகள் என்ன வகையாகத் தெரிந்தனவோ- நான் அவை எப்படிப்பட்டவை என்று நினைத்தேனோ – அந்த அளவிலிருந்து, கவனிக்கப்படுவது குறைந்து கொண்டே போய், உருச்சிறுத்து, மனித இனத்தின் எத்தனையோ சுவாரசியமற்ற விசித்திரங்களில் ஒன்றாக ஆகிவிடும் என்பதே. புத்தகங்களின் கடைசிப் பக்கங்களில் படிப்போமே ஏதோ எசகுபிசகான சம்பவங்கள் பற்றி அப்படி ஆகிவிடுமோ, சில நேரம் அவற்றைப் படித்துச் சிரிக்கவும் நேரும்படியான விசித்திரங்கள், வசீகரமான ஆனால் சற்றும் பயனற்ற நிகழ்வுகள் என்று தோன்றுமே அவை போலக் கருதப்படும் என்ற பயம் எனக்கிருந்தது. என்னால் சொல்ல முடியாத அளவுக்கு இது எனக்குத் துன்பமாக இருந்தது. மூன்று துவந்தச் சண்டைகளைப் போட்டவளுக்கு, எல்லாம் மரணத்தில் முடிந்தவை, இந்த மாதிரிப் பயங்கள் எழுவது அபத்தம் என்று நீங்களுமே ஒத்துக் கொள்வீர்கள். ஆனால் இப்போது முனை திரும்பினால் வரவிருக்கும் துவந்தச் சண்டையோ அத்தனை பெரிதாகத் தெரிந்தது, அதில் இறங்க எனக்கு தைரியம் உண்டா என்று கூட எனக்குத் தெரியவில்லை; ஃபாஸ்ட்டுடைய சொற்களில் சொன்னால்,’Verweile doch, du bist so schoen!’ அதை அப்படியே வைத்திரு. மாற்றாதே.

இரவில் சில நேரம் இந்தக் கிரகத்தின் மூலப்பெயர் எனக்கு நினைவு வரும். அதை முதல் தலைமுறை மூதாதையினர் மாற்றினர், அந்த வினோதமான பெண்களுக்கு, எல்லா ஆண்களும் இறந்தபின் அந்த நிஜப்பெயர் மிகவும் துன்பமானதாக இருந்தது என்று நினைக்கிறேன். இப்படி எல்லாம் மறுபடி துவங்கிய இடத்துக்கே போய் நிற்கும்படி திருப்பப்படுவதை நோக்கும்போது, அது நகைப்பூட்டுவதாக, கொஞ்சம் அவலச் சுவையுள்ளதுதான் அது, இருக்கிறதென்று நான் நினைக்கிறேன். இதுவும் போயொழியும். எல்லா நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வந்துதானே ஆகும்.

என் வாழ்வை அகற்றிக் கொள்ளுங்கள், ஆனால் என் வாழ்வின் அர்த்தத்தை அகற்றாதீர்கள்.

‘சிறிது நேரம்’ (For -A- While)

(முற்றும்)