பாலையும், சில பாம்புகளும்

moving-desert-snake-1

ந்தச்சிறுவன் பயந்து போயிருந்தான். ஸ்னேக் அவனது சூடான நெற்றியை ஆதரவாகத் தொட்டாள். அவளுக்குப் பின்னே மூன்று பெரியவர்கள், அவளை சந்தேகத்துடன் கவனித்துக்கொண்டு, ஆனால் தம் கவலைகளை வெளியே காட்டப் பயந்து, கண்களைச் சுற்றி இருந்த மெலிதான கோடுகளால் மட்டும் வெளிப்படுத்தியபடி, நெருக்கமாய் நின்றனர். தமது ஒரே குழந்தையின் சாவுக்குப் பயந்த அளவு அவர்களுக்கு ஸ்னேக்கிடமும் பயமிருந்தது. கூடாரத்தின் மங்கலான சூழலில் சிமிட்டிக்கொண்டிருந்த விளக்குகளின் வெளிச்சமும் அவர்களுக்கு நம்பிக்கை தரவில்லை.

குழந்தை பார்த்த பார்வையில் கண்ணின் மணியே தெரியாத கருமையும், ஒளியின்மையும் சேர்ந்து ஸ்னேக்குக்கே அவன் உயிரைப் பற்றி அச்சம் தந்தன. அவன் தலைமுடியை வருடிக்கொடுத்தாள். நீளமாகவும், மிக வெளுத்தும் இருந்த முடி, அதன் நிறம் அவனது கருத்த தோலில் ஒட்டாது தனியாய் தெரிந்ததோடு, வறண்டு போய், தலையின் தோலருகே பல அங்குலங்களுக்கு அடர்த்தியற்று இருந்தது. சில மாதங்களுக்கு முன் ஸ்னேக் இவர்களைப் பார்த்திருந்தால் இந்தக் குழந்தையின் நோய் முற்றுவதை முன்கூட்டிக் கண்டிருப்பாள்.

“என் பெட்டியைக் கொஞ்சம் கொண்டு வரீங்களா?” என்றாள் ஸ்னேக்.

அவளின் மென் குரலைக் கேட்ட குழந்தையின் பெற்றோர் அதிர்ந்தனர். ஒருவேளை அவர்கள் ஒரு கருங்காக்கையின் உரத்த கரைசல் குரல் அல்லது ஒரு மின்னுகிற பாம்பின் சீறலைப் போன்ற சப்தத்தை எதிர்பார்த்திருக்கலாம். அவர்கள் மத்தியில் ஸ்னேக் பேசியது இதுவே முதல் முறை. அவர்கள் தூரமாக நின்று அவளை நோட்டம் விட்டபடி, அவளது தொழில் மற்றும் இளமையைப் பற்றி அவர்களுக்குள் தணிந்த குரலில் பேசிக் கொண்டபோது அவள் வெறுமே அவர்களைக் கவனித்தாள். அவர்கள் அவளிடம் வந்து உதவி கேட்டபோது, அவர்கள் சொன்னதைக் கேட்டுவிட்டு வெறும் தலையசைப்பால் சரி என்றிருந்தாள். அவள் ஊமை என அவர்கள் நினைத்திருந்தனரோ என்னவோ?

வெளுத்த முடியுடன் இருந்த இளைஞன் அவளது தோல்பெட்டியைத் தூக்கினான். அந்த வறண்ட பாலைவனக் காற்றிலிருந்த மெல்லிய மக்கல் மணத்தை எதிரிட, விரிந்திருந்த அவனது நாசித் துவாரங்களால் மேலோட்டமாய் வேகமூச்சு விட்டபடி, தன் உடம்பை விட்டுத் தள்ளி அந்தப் பையைப் பிடித்திருந்தவன், எட்டி அவளிடம் அதைக் கொடுத்தான். அவனிடம் இருந்த சகஜமின்மை அவளுக்கு ஓரளவு பழகிப் போயிருந்தது; ஏற்கனவே பலமுறை அதை அவள் கவனித்திருந்தாள்.

ஸ்னேக் கையை நீட்டியபோது அந்த இளைஞன் துள்ளிப் பின்னே போனபடி, பெட்டியைக் கை தவற விட்டுவிட்டான். அவள் பாய்ந்து தரையில் மோதுவதற்குச் சிறிது முன்னரே பிடித்துக் கொண்டாள். அதைக் கவனமாய்த் தரையில் வைத்துவிட்டு அவனைக் கண்டிப்பதுபோலப் பார்த்தாள். அவன் பயத்தைக் குறைக்க, அவனது கூட்டாளிகள் முன்னே வந்து அவனைத் தொட்டனர். “அவன் ஒருமுறை கடிபட்டான்,” அங்கிருந்த கருப்பான அழகான பெண் சொன்னாள். “சாக இருந்தான்.” அவள் குரலில் வருந்தும் தொனி இல்லை, அவன் செயலை நியாயப்படுத்தலே இருந்தது.

“வருந்துகிறேன்,” என்றான் அந்த இளைஞன். “அது-” என்றபடி அவளை நோக்கி சைகை செய்தான். தன் நடுக்கத்தினிடையே அவன் பயத்தின் விளைவுகளை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. தோளருகே ஒரு சின்ன பாரமும் அசைவும் இருப்பதைத் தானறியாமல் உணர்ந்த ஸ்னேக் அங்கே குனிந்து பார்த்தாள். சிறு குழந்தை விரல் போல மெல்லிய குட்டிப் பாம்பு ஒன்று, அவள் கழுத்தைச் சுற்றி வழுக்கி வந்து அவளது குட்டையான சுருண்ட கருத்த முடிகளின் கீழ் தன் ஒடுங்கிய தலையைக் காட்டிக் கொண்டிருந்தான். சூல வடிவான தன் நாக்கால் மேலே, கீழே, உள்ளே, வெளியே என்று நிதானமாய் காற்றைத் துழாவி மணங்களை ருசி பார்த்துக் கொண்டிருந்தான். “அதுதான் க்ராஸ். அவனால் உனக்குக் கெடுதல் செய்ய முடியாது,” என்றாள் ஸ்னேக். கொஞ்சம் பெரியவனாய் இருந்தால் அவன் பயமூட்டுவானாயிருக்கும்; அவனது நிறம் வெளிர் பச்சை, ஆனால் வாயின் அருகில் இருந்த செதிள்கள் சிவப்பாய் அப்போதுதான் பாலூட்டிகள் உண்பது போல, உணவைக்கிழித்து, விருந்து சாப்பிட்டாற்போல் இருந்தன. அவனோ, உண்மையில் மிகவுமே சுத்தமாய் இருந்தான்.

குழந்தை முனகினான். ஆனால் வலியைக் காட்டாமல் அமுக்கி விட்டான்; அழுதால் ஸ்னேக்குக்கும் பிடிக்காது எனச் சொல்லி இருந்தனரோ என்னவோ. பயத்தைக் குறைப்பதற்கு இத்தனை எளிமையான ஒரு வழியை அவர்கள் தமக்கு மறுத்துக் கொள்வதை நினைத்து அவர்களுக்காக அவளுக்கு வருத்தமே. அங்கு, பெரியவர்களிடம் தன்னைக் கண்டு எழும் கடும் அச்சத்தை நினைத்து வருந்தினாலும், அப்படிப்பட்ட மறுவினைகள் நியாயமற்றவை என அவர்களுக்குப் புரிய வைக்கத் தேவையான நேரத்தைச் செலவழிக்க மனமின்றி அவர்களை விட்டுத் திரும்பினாள். “எல்லாம் சரியாத்தானே இருக்கு,” அந்தச் சின்னப் பையனிடம் அவள் சொன்னாள். “க்ராஸ் வழவழப்பாய், உலர்ந்து, மிருதுவாய் இருப்பான். அவனை நான் உனக்குக் காவலிருக்க விட்டால், சாவு கூட உன் படுக்கையருகே வரமுடியாது.” க்ராஸ் அவளது குறுகிய அழுக்கான கையில் சரிந்து இறங்கினான், அவனை அவள் அந்தக் குழந்தையை நோக்கி நீட்டினாள். “நிதானமாய்!” அவன் கையை நீட்டி அதன் பட்டிழை போன்ற செதிள்களை ஒரு விரல்நுனியால் தொட்டுப்பார்த்தான். அத்தனை சிறு அசைவுக்குக்கூட அவன் பட்ட சிரமத்தை ஸ்னேக்கால் உணர முடிந்தது. ஆனாலும் அந்தப் பையன் கொஞ்சமாய் புன்னகைத்தான்.

“உன்னை எப்படிக் கூப்பிடுகிறார்கள்?”

அவன் அவசரமாய்த் தன் பெற்றோரை நோக்கினான், அவர்கள் இறுதியில் தலை அசைத்தனர். “ஸ்டாவின்” எனத் தாழ்ந்த குரலில் சொன்னான். பேசுவதற்கான வலிமையும், மூச்சும் அவனிடம் இல்லை.

“ஸ்டாவின், என் பெயர் ஸ்னேக். இன்னும் கொஞ்ச நேரத்துல, காலைல நான் செய்யப் போறது உனக்கு வலிக்கும். உனக்கு சட்டுனு ஒரு வலி தெரியும், அப்புறமா பல நாளைக்கு உன் உடம்பு நோகும், ஆனால் அதுக்கப்புறம் உனக்கு உடம்பு குணமாகும்.”

அவன் அவளை உற்று, மதிப்போடு பார்த்தான். அவள் என்ன செய்யப் போகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. அது பற்றிப் பயம் இருந்தும், அவள் பொய் சொல்லி இருந்தால் வந்திருக்கக் கூடியதைவிடக் குறைவாகவே அவன் பயந்தான் என்று அவளுக்குத் தெரிந்தது. நோய் அதிகமாகி வருகையில் அவனது வலி மிகவும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் மற்றவர்கள் அவனுக்கு நம்பிக்கை மட்டுமே கொடுத்திருந்தார்கள் என்பதாகத் தெரிந்தது. அவனது நோய் தானே போய்விடும், அல்லது வேகமாய்க் கொன்று விடும் என எதிர்பார்த்ததாகவும்பட்டது.

க்ராஸை பையனின் தலையணையின் மேல் வைத்துவிட்டு ஸ்னேக் தன் பெட்டியை அருகே இழுத்தாள். அந்தப் பெரியவர்களுக்கு இன்னும் அவளிடம் பயம்தான் இருந்தது; அவளை நம்புவதற்குத் தேவையான அளவு நேரமோ காரணமோ அவர்களிடம் இல்லை. அந்தக் கூட்டாளிகளில் இருந்த பெண் வயதானவள். அவர்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்காமலே போகலாம். அவர்களது கண்கள், அவர்களிடையே ரகசியத் தொடுகைகள், அவர்களின் கவலை இவற்றின் மூலம் ஸ்னேக்குக்கு அவர்கள் இந்தக் குழந்தையை மிகவும் நேசிக்கிறார்கள் என்பது தெரிந்தது. அவர்கள் அவளைத் தேடி வந்திருக்கின்றனர், அதுவும் இந்த நாட்டில் என்றால், அது நிச்சயம் ஆழமான அன்புதான்.

இரவாகி, குளிர்ந்தது. ஊக்கமில்லாமல், ஸாண்ட் பெட்டியிலிருந்து நழுவி வெளியேறி, தலையை அசைத்தபடி, நாக்கை ஆட்டிக்கொண்டு, முகர்ந்து, ருசி பார்த்துக்கொண்டு உடம்புகளின் வெதுவெதுப்பை கண்டுபிடித்துக்கொண்டு வந்தான். “அதுதானா?” மூவரில் மூத்தவரின் குரல் தாழ்ந்து, விவேகத்துடன், ஆனால் மிகுந்த பீதியுடன் இருந்தது. ஸாண்டால் அந்த பயத்தை உணரமுடிந்தது. பின்னே நகர்ந்து, தாக்கும் நிலையில் தனது வால்வளையங்களை மெதுவே ஆட்டி ஒலியெழுப்பினான். ஸ்னேக் பேசினாள், உள்ளங்கையை ஆட்டியபடி, முழுக்கையை நீட்டினாள்.

அந்தப் பள்ள விரியன் தணிந்து அவளது மெலிந்த மணிக்கட்டை சுற்றி வழிந்து கருப்பும் பழுப்புமான வளைகளைப் போலானான். “இல்லை,” என்றாள், “உங்கள் குழந்தைக்கு இருக்கும் நோயின் கடுமைக்கு ஸாண்டால் உதவ முடியாது. உங்கள் கஷ்டம் எனக்குப் புரிகிறது. ஆனால் அமைதியாக இருக்க முயற்சியுங்கள். இதெல்லாம் உங்களுக்குப் பயமாகத்தான் இருககும், ஆனால் இவ்வளவுதான் நான் செய்ய முடியும்.” என்றாள்.

albino-monocled-cobra-bigமிஸ்ட்டை வெளியே வரச்செய்ய அவளைச் சீண்ட வேண்டி இருந்தது. ஸ்னேக் பையின் மேல் தட்டுத் தட்டி, பின் அவளை இரண்டு முறை குத்தினாள். நகரும் செதிள்களின் அதிர்வு ஸ்னேக்குக்கு கேட்டது. திடீர் என அந்தப் பாண்டு நாகப்பாம்பு கூடாரத்துள் குதித்தது. வேகமாக ஊர்ந்த போதிலும், அவள் உடல் முடிவில்லாமல் நீண்டு வந்தபடியே இருந்தாற் போலிருந்தது. தலையைப் பின்னே இழுத்துத் தூக்கி எழுந்தாள். அவளது மூச்சு சீறலாய் வந்தது. தரைக்கு மேல் ஒரு மீட்டரையும் விடக் கூடுதலாக அவள் தலை உயர்ந்தது. தனது அகண்ட படத்தை விரித்தாள். படத்தின் பின்புறமிருந்த பழுப்புக் கண் வடிவின் பார்வை தம் உடலைத் தாக்கியது போல் அவள் பின்னிருந்த பெரியவர்கள் மூச்சு விடத் திணறினர்.

அம்மனிதர்களை லட்சியம் செய்யாமல், ஸ்னேக் அந்தப் பெரும் நாகப்பாம்பிடம், தன் வார்த்தைகளில் அவளின் கவனத்தைக் குவித்துப் பேசினாள்.

“அட நீதானா. சீற்றம் கொண்ட ஜந்துவே, கீழே படு; உன் இரவு உணவை நீ சம்பாதிக்க வேண்டிய நேரம் இது. இந்தக் குழந்தையுடன் பேசு, அவனைத் தொடு. அவன் பெயர் ஸ்டாவின்.”

மிஸ்ட் மெதுவாய் தனது படத்தைத் தளர்த்தி ஸ்னேக் தன்னைத் தொட அனுமதித்தாள். அவளுடைய தலையின் பின்புறம் கெட்டியாய்ப் பிடித்த ஸ்னேக், அவளை ஸ்டாவினைப் பார்க்கும்படி வைத்தாள். அந்த நாகப்பாம்பின் வெள்ளிக்கண்களில் விளக்கு வெளிச்சத்தின் மஞ்சள் ஒளிர்ந்தது.

‘ஸ்டாவின்,” ஸ்னேக் அழைத்தாள், ‘மிஸ்ட் உன்னை இப்போது சந்திக்கத்தான் வந்திருக்கிறாள். சத்தியமாய் சொல்கிறேன், இந்த தடவை அவள் உன்னை மிருதுவாகத்தான் தொடுவாள்.”

ஆயினும் மிஸ்ட் அவனது மெலிந்த மார்பைத் தொட்ட போது ஸ்டாவின் நடுங்கினான். ஸ்னேக் நாகத்தின் தலையை விட்டு விடாமல், அவள் உடம்பை மட்டும் பையனின் உடலுக்கு மேல் சறுக்க விட்டாள்.

ஸ்டாவினின் உயரத்தைக் காட்டிலும் அந்த நாகப்பாம்பு நாலு மடங்கு இருந்தாள். விறைப்பான வெள்ளை வளையங்களாய் அவனது வீங்கிய வயிற்றுப்பகுதியின் மேல் நெளிந்து நீண்டு கொண்டு, ஸ்னேக்கின் பிடியை மீறித் தன் தலையை அவனது முகத்தருகே கொண்டு செல்ல யத்தனித்தாள். ஸ்டாவினின் பயந்த பார்வையை தன் இமையற்ற கண்களால் மிஸ்ட் சந்தித்தாள். இன்னும் சற்று அருகில் செல்ல ஸ்னேக் விட்டாள்.

குழந்தையை ருசி பார்க்க மிஸ்ட் தன் நாக்கை நீட்டினாள்.

கூட்டாளிகளில் இளையவன் பயத்தோடு சிறிதாய், அமுக்கிய ஒலி ஒன்றை எழுப்பினான். அதைக்கேட்டு ஸ்டாவின் அதிர, மிஸ்ட் பின் வாங்கியபடி, தன் வாயைத் திறந்து, தைக்கும் பற்களை வெளிக்காட்டிக் கொண்டு, தன் பெருமூச்சை தொண்டை வழியே ஒலியோடு வெளியே வீசினாள். ஸ்னேக் பின்னே சாய்ந்து தன் குதிகால்மேல் உட்கார்ந்து, மூச்சை விட்டுக் கொண்டாள். சில சமயங்களில், வேறு இடங்களில், அவள் தன் வேலையைச் செய்கையில், உறவினர்கள் கூட இருக்க அவள் அனுமதிப்பாள். “நீங்கள் எல்லாம் போய் விட வேண்டும்,” அவள் மிருதுவாய் சொன்னாள், “மிஸ்ட் பயந்தால் ஆபத்து நேரும்.”

“நான் இனிமேல் அப்படி-”

“மன்னியுங்கள். நீங்கள் வெளியே போய்க் காத்திருக்கத்தான் வேண்டும்.”

அந்த இளைஞனோ, அந்த பெண்ணோ கூட, எதிர்க்க முடியாத மறுப்புகளையோ, பதில் சொல்ல முடியாத கேள்விகளையோ முன்வைத்திருக்கக் கூடும். ஆனால் அந்த முதியவர் அவர்களைத் திரும்பச் செய்து அவர்கள் கைகளைப் பிடித்து வெளியே அழைத்துப் போனார்.

”எனக்கு ஒரு சின்ன மிருகம் வேண்டும்,’ கூடாரத்தின் வாயில் தடுப்பை அவர் உயர்த்தும்போது ஸ்னேக் சொன்னாள், “உடலில் முடியிருக்க வேண்டும், உயிருடன் இருக்கவேண்டும்.”

”ஒன்று கண்டுபிடிக்கப்படும்,” அவர் சொன்னார். மூன்று பெற்றோர்களும் பிரகாசிக்கும் இரவினுள் சென்றனர். வெளியில் மணலில் அவர்களுடைய காலடிச் சப்தம் ஸ்னேக்குக்குக் கேட்டது.

மிஸ்டை தன் மடியில் இருத்திக்கொண்டு சமாதானம் செய்தாள். ஸ்னேக்கின் மெல்லிய இடுப்பைச் சுற்றிகொண்டு அவளின் கதகதப்பை உணர்ந்து கொண்டிருந்தாள் அந்த நாகப்பாம்பு. பசி வழக்கத்துக்கும் மேலாய் அந்த நாகத்தை பதற்றமாக்கியது. அவளுக்குப் பசி, ஸ்னேக்கிற்கும்தான். அந்த கருத்த மணல் பாலைவனத்தினுள் வரும்போது அவர்களுக்குப் போதுமான அளவு நீர் கிடைத்திருந்தது. ஆனால் உணவுக்காக ஸ்னேக் வைத்த பொறிகள் வெற்றி பெறவில்லை. அது கோடைகாலம், சூடான பருவமானதால் ஸாண்டுக்கும் மிஸ்டுக்கும் பிடித்த ரோமமுடைய சிறிய மிருகங்கள் கோடைத் தூக்கத்தில் காணாமல் போயிருந்தன. பாம்புகளுக்கு வேளைக்கு சாப்பாடு கிட்டாததினால் ஸ்னேக்கும் உண்ணாவிரதம் தொடங்கி இருந்தாள்.

ஸ்டாவின் முன்னைவிட இப்போது அதிகம் பயந்திருந்ததைப் பார்த்து ஸ்னேக் வருந்தினாள். “உன் பெற்றோரை அனுப்பியதற்கு வருந்துகிறேன்,” அவள் சொன்னாள், “சீக்கிரமே அவர்கள் திரும்ப உள்ளே வரலாம்.”

அவன் கண்கள் பனித்தன. ஆனால் கண்ணீரை அடக்கிக் கொண்டான். “நீங்கள் சொன்னபடி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.”

“உன்னால் முடியுமென்றால், அழு என்றுதான் நான் சொல்வேன்,” ஸ்னேக் சொன்னாள். “அது ஒன்றும் அத்தனை மோசமான விஷயம் இல்லை.” ஸ்டாவினுக்கு அது புரியவில்லை போலிருந்தது. ஸ்னேக்கும் அவனை வற்புறுத்தவில்லை; இவர்கள் அழ மறுத்து, துக்கம் காக்க மறுத்து, சிரிக்க மறுத்து அந்தக் கடினமான நிலத்தோடு போராடப் பழகி இருக்கிறார்கள் என அவளுக்குத் தெரியும். அவர்கள் தங்களுக்கு சோகத்தை மறுத்தனர், சந்தோஷங்களை அனுமதித்துக் கொள்ளவில்லை, ஆனால் உயிர் பிழைத்திருந்தனர்.

மிஸ்ட் அமைதி பெற்றாலும் வாடி இருந்தாள். ஸ்னேக் அவளைத் தன் இடுப்பிலிருந்து விடுவித்து, ஸ்டாவினுக்கு அருகில் இருந்த பாயில் வைத்தாள். நாகம் நகர நகர ஸ்னேக் அதன் அடித்துத் தாக்கும் தசைகளின் இறுக்கத்தை உணர்ந்தவாறே, அதன் தலையை வழி நடத்தினாள்.

“அவள் நாக்கால் உன்னை தொடுவாள்,” ஸ்டாவினிடம் ஸ்னேக் சொன்னாள், ”அது உனக்குக் குறுகுறுப்பை உண்டாக்கலாம், ஆனால் வலிக்காது. நீ மூக்கால் மணங்களை உணர்வது போல அவள் அப்படி முகர்கிறாள்.”

“நாக்காலா?”

ஸ்னேக் புன்னகையுடன் தலையசைத்தாள். மிஸ்ட் தன் நாக்கை சொடுக்கி வெளிநீட்டி ஸ்டாவினின் கன்னத்தை வருடினாள். ஸ்டாவின் கூசவில்லை; பார்த்துக்கொண்டிருந்தான், அறிவதில் கிட்டும் குழந்தைக் குதூகலம் சற்று நேரம் அவன் வலியை வென்றது. மிஸ்ட்டின் நீண்ட நாக்கு அவனது கன்னம், கண்கள், வாய் இவற்றை உரசியபோது அவன் சற்றும் அசையாமல் படுத்துக் கிடந்தான். “நோயை ருசி பார்க்கிறாள்,” என்றாள் ஸ்னேக். அவளுடைய பிடியின் கட்டுப்படுத்தலை எதிர்ப்பதை நிறுத்தி, மிஸ்ட் தன் தலையை பின்னுக்கிழுத்துக்கொண்டாள். ஸ்னேக் தன் குதிகால்களின் மேல் உட்கார்ந்து நாகத்தை விட்டு விட்டாள், அது அவளது கையின் மேல் சுழன்று ஏறி தோளின் மேல் படுத்துகொண்டது.

“தூங்குப்பா ஸ்டாவின்,” ஸ்னேக் சொன்னாள். “என்னை நம்ப முயற்சி செய். காலையைப் பற்றி பயப்படாமல் இருக்கப் பார்.”

ஸ்டாவின் சில வினாடிகளுக்கு அவளை உற்றுப் பார்த்து ஸ்னேக்கின் வெளிறிய கண்களில் உண்மையைத் தேடினான். “க்ராஸ் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பானா?”

அந்தக் கேள்வியை, அல்லது அதன் பின் இருந்த ஒப்புதலைக் கேட்டு அவள் திடுக்கிட்டாள். அவனது நெற்றியிலிருந்து முடியை ஒதுக்கியபடி அவள் செய்த புன்னகைக்குக் கீழ் கண்ணீர்தான் இருந்தது.  “அதுதானே?” என்று சொல்லி அவள் க்ராஸைத் தூக்கினாள். “நீ இந்தக் குழந்தையை பார்த்துக் கொள்வாய், அவனைக் காப்பாய்.” அந்தப் பாம்பு அவள் கையில் அரவமற்றுக் கிடந்தான். அவனது கண்கள் கருப்பாய் ஒளிர்ந்தன. அவள் ஸ்டாவினின் தலையணையின் மேல் அவனை மெதுவாய்க் கிடத்தினாள்.

“இப்போ தூங்கு.”

ஸ்டாவின் கண்ணை மூடினான். உயிரோட்டம் அவனுள்ளிருந்து வெளியே ஓடிப் போவது போல் இருந்தது. அத்தனை பெரிய மாற்றத்தைப் பார்த்த ஸ்னேக் அவனைத் தொடக் கையை நீட்டினாள், பின் அவன் மெதுவாய், மேலோட்டமாய் மூச்சு விடுவதைப் பார்த்தாள். அவனைச் சுற்றி ஒரு போர்வையைப் போர்த்திவிட்டு எழுந்து நின்றாள். தன் நிலையில் அந்த திடீர் மாற்றம் அவளுக்குத் தலை சுற்றியது. தடுமாறித் தன்னை சுதாரித்துக் கொண்டாள். அவளது தோளின் குறுக்கே மிஸ்ட் இறுக்கமானாள்.

ஸ்னேக்கின் கண்களில் எரிச்சல், பார்வை படுகூர்மையாய் இருந்த்து. கற்பனையில் கேட்டதாய் அவள் நினைத்த ஓசை அருகாமையில் பாய்ந்து வந்தது. பசியையும், களைப்பையும் எதிர்த்துத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, மெதுவாய் குனிந்து தன் தோல் பெட்டியை கையில் எடுத்தாள். மிஸ்ட் தன் நுனி நாக்கால் அவளது கன்னத்தை தொட்டாள்.

கூடாரத்தின் தடுப்பை விலக்கிப் பார்த்து இன்னும் இரவுதான் என்பதை அறிந்து நிம்மதி அடைந்தாள். அவளால் உஷ்ணத்தை தாங்கிக்கொள்ள முடிந்தது ஆனால் சூரியனின் பிரகாசம் அவளுக்குள் சுருண்டு அவளை எரித்தது. முழு நிலவாய் இருந்திருக்க வேண்டும்; ஆனால் மேகங்கள் எல்லாவற்றையும் மறைத்து, வெளிச்சத்தைச் சிதற அடித்ததில் வானம் தொடுவானத்திலிருந்து தொடுவானம் வரை சாம்பல் நிறமாய் இருந்தது. கூடாரங்களுக்கு அப்பால், உருவமில்லா நிழல்கள் கும்பலாய் தரையிலிருந்து நீண்டன. இங்கே, பாலைவனத்தின் விளிம்பில், போதுமான நீர் இருந்ததால் கூட்டமாகவும், திட்டுகளாயும் புதர்கள் வளர்ந்து பலதரப்பட்ட ஜீவராசிகளுக்கு ஆகாரமும், புகலிடமும் கொடுத்தன. சூரிய வெளிச்சத்தில் பளபளத்து, கண்ணைக் குருடாக்கும் கருப்பு மணல், இரவில் மெத்தென்ற கரிப்புகைப்படலம்போல் இருந்த்து. ஸ்னேக் கூடாரத்துக்கு வெளியே அடி எடுத்து வைத்ததும் அந்த மென்மையின் மாயை மறைந்தது; கூர்மையான கடின மண்துகள்களை நொறுக்கிக்கொண்டு அவளது காலணிகள் சரிந்தன.

மணலில் ஒரு திட்டில் புதர்களை பிடுங்கி எரித்த இடத்தில் இருந்த சில இருண்ட கூடாரங்களின் நடுவே ஸ்டாவினின் குடும்பத்தினர் நெருங்கி உட்கார்ந்துகொண்டு காத்திருந்தனர். கண்களில் நம்பிக்கையை வைத்துக்கொண்டு, முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் அவர்கள் அவளை மௌனமாய் பார்த்தனர். ஸ்டாவினின் தாயை விடக் கொஞ்சம் இளையவளாய் ஒரு பெண் அவர்களுடன் உட்கார்ந்திருந்தாள். அவர்கள் அனைவரையும் போல், அவள் ஒரு நீண்ட தளர்த்தியான அங்கியை அணிந்திருந்தாள். ஆனால் அவள் கழுத்தில் மட்டும் இந்த மக்களிடையே ஸ்னேக் பார்த்த ஒரே அணிகலனை அணிந்திருந்தாள்: தலைவருக்குரிய வட்டம் அவள் கழுத்தைச் சுற்றி ஒரு தோல் பட்டையால் கட்டப்பட்டிருந்தது.

அவளும் ஸ்டாவினின் மூத்த தந்தையும் நெருங்கிய உறவினர்கள் என்று அவர்களின் உருவ ஒற்றுமைகளில் தெரிந்தது: செதுக்கிய பரப்புகளாலான முகம், உயர்ந்த கன்ன எலும்புகள், அவரது முடி வெளுப்பு, அவளது நல்ல கருமையாயிருந்தாலும் இள நரைமுடிகள் தெரிந்தன. இருவரது கண்களும் சூரியனின் தாக்கத்தில் பிழைத்திருக்க ஏற்றபடி நல்ல கரும் கபில நிறத்தில். மண்ணில் அவர்கள் காலடியில் ஒரு சிறிய கருத்த மிருகம் ஒரு வலைக்குள் விட்டு விட்டு குதித்துக்கொண்டு, அவ்வப்போது பலவீனமாய் கீச்சுக்குரலில் கத்திக்கொண்டிருந்தது.

“ஸ்டாவின் தூங்குகிறான்,” என்றாள் ஸ்னேக். “அவனைத் தொந்தரவு செய்யாதீர்கள். ஆனால் அவன் எழுந்தால் அவனிடம் போங்கள்.”

ஸ்டாவினின் தாயும், எல்லோரிலும் இளைய கூட்டாளியும் எழுந்து உள்ளே சென்றனர், ஆனால் மூத்தவரான மனிதர் அவள் முன் நின்றார். “உங்களால் அவனுக்கு உதவி செய்ய முடியுமா?”

“எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கட்டி வளர்ந்த நிலையில் இருந்தாலும் கெட்டியாய் இருக்கிறது.” அவளுக்கே தன் குரல் விலகி, சற்றே வெறுமையாய், பொய் சொல்வது போல் ஒலித்தது. “மிஸ்ட் காலையில் தயாராய் இருப்பாள்” அவருக்கு உறுதியளிக்க வேண்டிய தேவையை அவள் உணர்ந்தபோதிலும், அவளுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

“என் சகோதரி உங்களுடன் பேச வேண்டுமென்றாள்,” என்று சொல்லி, அறிமுகம் எதுவும் இல்லாமல், அந்த உயரமான பெண் இந்த குழுமத்தின் தலைவி என்று சொல்லித் தன்னை உயர்த்திக் காட்டாமல், அவர்களைத் தனியே விட்டுச் சென்றார். ஸ்னேக் திரும்பிப் பார்த்தாள் ஆனால் அதற்குள் கூடார மறைப்பு மூடப்பட்டது. அவள் தன் களைப்பை இன்னும் ஆழமாய் உணர்ந்தாள். முதல் முறையாய் அவள் தோளின் குறுக்கே இருந்த மிஸ்டின் எடை அவளுக்கு பாரமாய்த் தோன்றியது.

“நீங்கள் நன்றாய் இருக்கிறீர்களா?”

ஸ்னேக் திரும்பினாள். அந்தப் பெண் நாளான கர்ப்பத்தால் சற்றே சிரமப்பட்டு அசைந்தாலும் ஒரு இயல்பான நளினத்துடன் அவளை நோக்கி வந்தாள். அவளது பார்வையைச் சந்திக்க ஸ்னேக் நிமிர வேண்டி இருந்தது. அவள் கண்களின் ஓரத்தில் இருந்த சிறிய மெலிந்த கோடுகளால், சிலசமயங்களில் அவள் ரகசியமாய் சிரிப்பாள என்பது போலத் தெரிந்தது. அவள் கவலையுடன் புன்னகைத்தாள். “நீங்கள் மிகவும் களைப்பாய் இருப்பது போல் தோன்றுகிறது. யாரையாவது விட்டு உங்களுக்கு படுக்கை விரிக்கச் சொல்லட்டுமா?”

“இப்போது வேண்டாம். காரியம் முடியும்வரை நான் தூங்கமாட்டேன்.” என்றாள் ஸ்னேக்.

தலைவி அவள் முகத்தில் தேடிய விதத்தில், பொறுப்பைப் பகிர்வதில் தம்முள் விளைந்த ஒரு உறவை ஸ்னேக் உணர்ந்தாள்.

“எனக்குப் புரிந்த மாதிரி இருக்கிறது. நாங்கள் ஏதாவது உங்களுக்கு கொடுக்கலாமா? உங்களைத் தயார் செய்துகொள்வதில் ஏதேனும் உதவி வேண்டுமா?”

கேள்விகளுக்குப் பதிலளிப்பது ஏதோ சிக்கலான பிரச்சினைகளாகத் தனக்குத் தெரிவதுபோல அவள் உணர்ந்தாள். அவளது களைத்த மனதில் அவற்றைப் போட்டுத் திருப்பி, அவற்றைச் சோதித்து, துண்டாக்கி, கடைசியில் அவற்றின் அர்த்தங்களைப் புரிந்துகொண்டாள். “என்னுடைய மட்டக்குதிரைக்கு உணவும், நீரும் தேவை-”

“அதை கவனித்துக் கொண்டு விட்டோம்.”

”எனக்கு மிஸ்டைச் சமாளிக்க யாராவது ஒருவர் உதவி தேவை. பலமாய் இருக்க வேண்டும் ஆனால் அதை விட முக்கியமாக, பயப்படக்கூடாது.”

தலைவி தலையாட்டினாள். “நானே வந்திருப்பேன்,” அவள் சொன்னாள், சிறிது புன்னகைத்தாள். “ஆனால் இப்போது நான் கொஞ்சம் ஏடாகூடமாய் இருக்கிறேன். வேறு யாரையாவது கண்டுபிடிக்கிறேன்.”

“நன்றி.”

மீண்டும் இருண்ட முகத்துடன், அந்த மூத்த பெண்மணி தலையை சாய்த்துக்கொண்டு ஒரு சில சிறிய கூடாரங்கள் இருந்த இடத்தை நோக்கி நகர்ந்தாள். அவளது எழிலை ரசித்தபடி, ஸ்னேக் அவள் போவதைப் பார்த்திருந்தாள். அவளோடு ஒப்பிடுகையில் தான் உருவில் குறைந்து, சிறு வயதினளாய், அழுக்காய் இருப்பது போல உணர்ந்தாள்.

ஸாண்ட் அவளுடைய மணிக்கட்டிலிருந்து தன்னை அவிழ்த்துக்கொள்ளத் தொடங்கினான். தன் சருமத்தில் அவனுடைய செதிள்களின் சறுக்கலை எதிர்பார்த்த அவள், அவன் நிலத்தில் விழும் முன் அவனைப் பிடித்தாள். அந்தச் சிறிய மிருகத்தின் உடல் உஷ்ணத்தை உணர்ந்து, அதன் பயத்தை முகர்ந்து, அதை நோக்கிச் சாய்ந்து தன் நாக்கை சொடுக்கினான்.

“நீ பசியோடு இருக்கிறாய், எனக்குத் தெரியும்,” ஸ்னேக் சொன்னாள், “ஆனால் இந்தப் பிராணி உனக்காக இல்லை.” ஸாண்டை பெட்டியினுள் வைத்து, மிஸ்டைத் தோளிலிருந்து தூக்கி அதன் பெட்டியின் இருண்ட பிரிவில் சுருட்டிக்கொள்ள விட்டாள்.

ஸ்னேக்கின் பரவலான நிழலுருவம் தன்னைக் கடந்தபோது அந்த சிறிய பிராணி மீண்டும் கிரீச்சிட்டுப் போராடியது. அவள் குனிந்து அதைக் கையில் எடுத்தாள். துரிதகதியில் ஆரம்பித்த அதன் பயந்த ஓலங்கள் அவள் அதை வருட, வருட மெதுவாய் குறைந்து நின்று போனது. இறுதியில் அது சலனமற்று, வேகமாய் மூச்சு விட்டபடி, களைத்துப் போய், அவளைத் தன் மஞ்சள் கண்களால் உறுத்துப் பார்த்தபடி இருந்தது அதற்கு நீண்ட பின்கால்களும், விரிந்த கூர்மையான காதுகளும் இருந்தன. பாம்பின் வாசனை அறிந்து அதன் நாசி துடித்தது. அதன் மென்மையான கருத்த ரோமம் வலைக்கயிற்றின் கோணலான சதுரங்களால் வகுக்கப்பட்டிருந்தது.

“உன் உயிரை எடுப்பதற்கு வருந்துகிறேன்,” ஸ்னேக் அதனிடம் சொன்னாள். ”ஆனால் இனிமேல் பயம் இருக்காது, உனக்கு வலியும் கொடுக்க மாட்டேன்.” அதன் உடம்பைச் சுற்றித் தன் கையை மூடி, அதை வருடிக்கொண்டே, கபாலத்தின் அடியில் அதன் முதுகெலும்பைப் பற்றினாள். வேகமாய் ஒரு முறை இழுத்தாள். சற்றே போராடியது போல் தோன்றினாலும், அது ஏற்கனவே இறந்து விட்டிருந்தது. அது துடித்தது. அதன் கால்கள் உடம்போடு ஒடுங்கிக் கொள்ள, அதன் கால்விரல்கள் சுருண்டு நடுங்கின. இப்போதும் அது அவளை உற்றுப் பார்ப்பதுபோல இருந்தது. அவள் அதன் உடலை வலையிலிருந்து விடுவித்தாள்.

ஸ்னேக் தனது இடுப்பு வாரில் இருந்த பையிலிருந்து ஒரு சின்ன புட்டியைத் தேர்ந்தெடுத்து, இறுகி இருந்த அதன் வாயைப் பிளந்து, அந்த புட்டியினுள்ளிருந்த புகையான கலவையிலிருந்து ஒரு சொட்டை அதன் வாயில் விட்டாள். அவசரமாய் பையை மறுபடி திறந்து மிஸ்டை வெளியே அழைத்தாள். அந்த நாகப்பாம்பு மெதுவாய், விளிம்பு மேல் நழுவி, படத்தை ஒடுக்கிக்கொண்டு கூர்மையான மண் துகள்களில் சறுக்கிக்கொண்டு வெளியே வந்தது. பால் போன்ற அவளது செதில்கள் மெல்லிய வெளிச்சத்தை பிடித்தன. அவள் அந்த மிருகத்தின் மணத்தை முகர்ந்து, அதனருகே வழிந்து போய், அதை நாக்கால் தொட்டாள். அவள் இறந்த மாமிசத்தைத் தின்ன மாட்டாள் என ஒரு கணத்துக்கு ஸ்னேக் பயந்தாள். ஆனால் உடல் இன்னும் அனிச்சையாய் துடித்துக்கொண்டு சூடாய் இருந்தது. அவளுக்கும் நல்ல பசி. “உனக்குச் சிறு தீனி.” என்று ஸ்னேக் நாகப்பாம்பிடம் பேசினாள்: தனிமை வாழ்வில் ஏற்பட்ட பழக்கம். “உன் பசியைத் தணிக்க.” மிஸ்ட் அந்த மிருகத்தை மூக்கால் உரசி, பின்வாங்கித் தாக்கினாள். அவளது சின்னப் பற்களால் அந்த சிறிய உடலைக் கடித்து, தன் உள்ளே சேமித்திருந்த விஷத்தைக் கக்கினாள். அதை வெளியேற்றியபின், இன்னும் இறுக்கமாய் பற்றிக்கொண்டு, தன் தாடைகளால் அதை மசித்து விழுங்க அவள் தொண்டையை அகட்டக்கூட வேண்டி இருக்கவில்லை. மிஸ்ட் அந்தக் குறைந்த ஆகாரத்தை ஜீரணிக்க அமைதியாய் படுத்திருந்த போது, ஸ்னேக் அவளைப் பிடித்துகொண்டு, அவளருகே உட்கார்ந்திருந்தாள். சொரசொரப்பான மணலில் காலடி சப்தம் அவளுக்குக் கேட்டது.

’உங்களுக்கு உதவி செய்ய என்னை அனுப்பி இருக்கிறார்கள்.”

(தொடரும்)

ஆசிரியர் குறிப்பு:

வாண்டா நீல் மேகிண்டையர் ஒரு அமெரிக்க அறிவியல் புனைவு எழுத்தாளர். அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தின், லூயிவில் நகரத்தில் 1948 இல் பிறந்தவர். வாஷிங்டன் பல்கலைகழகத்தில் படித்தது உயிரியல்; பின்னர் மரபுக்கூறியல்.

1970 ஆம் வருடம் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருக்கையில், க்ளாரியன் எழுத்தாளர்கள் பட்டறையிலும் பங்கு பெற்றார். 14 வயதில் எழுதிய முதல் கதை நிராகரிக்கப்பட்டாலும், இரண்டாவது கதை, 1969 இல் அவரது 20வது வயதில் பிரசுரமானது. எழுதிய முதல் நெடுங்கதை ‘The exile waiting’.

இங்கு மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் கதையின் இங்கிலீஷ் மூலமான, “Of Mist, and Grass and Sand” என்ற இந்தக் குறுநாவலுக்காக அவருக்கு அவரது முதல் ‘நெபுலா விருது’ (nebula award) கிடைத்தது. இது அமெரிக்காவில் சிறந்த அறிவியல் புனைவு மற்றும் விசித்திரப் புனைவு எழுத்துக்கு (science fiction and fantasy writing) வழங்கப்படும் விருதாகும். பின்னால் இந்தக் கதை ‘Dreamsnake’ என்ற அவரது நாவலின் ஒரு பகுதியானது. இதற்கும் ஹ்யுகோ (Hugo)மற்றும் நெபுலா (Nebula) விருதுகள் கிடைத்தன.

இந்தக் கதை எப்படி உருவானது என்பது பற்றி அவரது பேட்டியிலிருந்து ஒரு கேள்வி:

‘Dreamsnake’ நாவலின் முதல் அத்தியாயமான “Of Mist, and Grass, and Sand,” என்ற சிறுகதை எழுத உங்களுக்கு தூண்டுதலாய் இருந்தது எது?”

வாண்டா: “இந்த ஒரு கதை எங்கிருந்து வந்தது என்று எனக்கு நன்றாய்த் தெரியும். 1972இல் க்ளாரியன் எழுத்தாளர் பட்டறையில் அவ்ரம் டெவிட்ஸன் ஒரு எழுத்துப்பணியைக் கொடுத்தார். தொழில் நுட்பவியல் சார்ந்த சொற்கள் மற்றும் இடையர்களின் வாழ்க்கைமுறை சார்ந்த சொற்களை இரண்டு பட்டியல்களிலிட்டார். பின்னர் அந்த பட்டியல்களை துண்டுகளாக்கி தனித்தனி கோப்பைகளில் போட்டார். நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோப்பையிலிருந்தும் ஒரு வார்த்தையை எடுத்து அவற்றைப்பற்றி ஒரு கதை எழுத வேண்டும். இதுவே பணி.

எங்களுக்குக் கிடைத்த விசித்திரமான வார்த்தைகளைப்பற்றி முனகிக்கொண்டும் திட்டிக்கொண்டும் சாப்பிடப் போனோம். எனக்குக் கிடைத்த வார்த்தைகள் ‘பாம்பு’ (Snake) மற்றும் ‘பசு'(Cow). எப்படி இரண்டுமே இடையர் வாழ்க்கைமுறை சார்ந்த வார்த்தைகளாக எனக்குக் கிடைத்தன என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவரும் ‘ஸ்னேக்’ என்பதை தொழில்நுட்பத்துறை சார்ந்த வார்த்தை என நினைத்தாரோ? எப்படியோ அந்த இரண்டு வார்த்தைகள்தான் எனக்கு வாய்த்தன. என்னுடைய நண்பர் “ஹா ஹா ஹா, முக்கிய கதாபாத்திரத்துக்கு ஸ்னேக் என்ற பெயர் வைத்து ஒரு கதை எழுதேன்” என்றார். நான் “ஓ..கே” என்று இழுத்தேன். பின் என் அறைக்குச்சென்றபின் கதையை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். பசுவைக் குறிக்கும் ‘கௌ’ (cow) என்ற வார்த்தையை எப்படி உபயோகிப்பது என்று எனக்குப் புரியவில்லை. பின்னர் அதே வார்த்தையை வினைச்சொல்லாக உபயோகித்தால் ‘அச்சுறுத்துதல்’ என்று பொருள்படும் என்பதை கண்டறிந்தேன். அப்படித்தான் கதையின் ஆரம்பம் தொடங்கியது.

முழு பேட்டியை இங்கே படிக்கலாம்:

http://io9.com/#!5670273/feminism-astronauts-and-riding-sidesaddle-talking-to-dreamsnake-author-vonda-mcintyre

ஏராளமான புத்தகங்களும் சிறுகதைகளும் எழுதியுள்ள வாண்டா வசிப்பது சியாட்டில் நகரில்.

அவரது வலைத்தளம்: http://www.vondanmcintyre.com/