பரிசோதனைகளும் நவீன சிந்தனைகளும் பெருமளவில் உலாவிப் பரவிய ஃபிரான்ஸ் நாடுபற்றி இந்த ஓவியக் கட்டுரையில் அடுத்ததாகச் சொல்ல விழைகிறேன். தொடக்கமாக இருக்கும் அட்டவணை காலவரிசைப்படி கலை வல்லுனரால் முறைப்படுத்தப்பட்டது. அதைச்சார்ந்தே இக்கட்டுரைகளும் உள்ளன. 15-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தொடங்குவது அதன் போக்கு, மாற்றம், வளர்ச்சி போன்றவற்றைத் தெரிந்துகொள்ள உதவும்.
பிரஞ்ச் கலை இயக்கங்களின் பட்டியல்
1.School of Fontainebleau(1531-1594)
2.Rococo(1730-1760)
3.Romanticism(1790-1850)
4.L’Art-Pompier
5.Barbizon School(1830-1870 )
6.Impressionism(1863-1890)
7.Post-Impressionism(1880-1900)
8.Pont-Aven School(1850’s)
9.Symbolism
10.Les Nabis(1888-1900)
11.Fauvism(1898-1908)
12.Cubism(1908)
13.Orphism or the Puteaux Group(1912-1914)
14.Dada(1916-1920’s)
15.Surrealism(1924)
16.Tachism or L’art informel(1940-1950)
17.Lettrism(1946)
18.Situationist International(1956)
19.Nouveau Realisme(1960-1970)
20.Figuration Libre(1980)
19.School of Paris(1910-1940)
20.School of Fine Arts
01 Ecole de Fontainebleau – ஃபொன்டன்ப்ளோ பள்ளி
மறுமலர்ச்சிக் காலத்தின் பிந்தைய ஆண்டுகளில் ஃபிரான்ஸ் நாட்டில் பொன்டன் புளு பண்ணை மாளிகையை மையமாகக் கொண்டு வளர்ந்த ஓவிய பாணியை கலை வல்லுனர்கள் ஃபோன்டன்ப்ளோ பள்ளி (Ecole de Fontainebleau) என்று பதிகிறார்கள். இது 1531 முதல் முதற் நிகழ்வாகவும் 1594 இல் இருந்து இரண்டாம் நிகழ்வாகவும் இரண்டு காலகட்டங்களில் நிகழ்ந்தது.
முதல் ஃபொன்டன்ப்ளோ பள்ளி-1531
1527-இல் இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் ஒரு பெரும் கலவரத்தில் சிக்கிக்கொண்டது. அதை ‘ரோமின் கலவரம்’ (sack of rome) என்று அழைக்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள். தனது சொத்துக்களை முற்றிலுமாக இழந்த ஓவியர் ரூசோ ஃபியரென்டினோ (Rooso Fiorentino) உயிர் தப்பித்து ஓடி ஃபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் புகுந்தார். அங்கு 1531-இல் மன்னரின் (Francois I) பார்வையில் பட்ட அவர் அரசு கலைக்குழுவில் இடம் பெற்றார். ஃபோன்டன்ப்ளோ மாளிகையை (Chateau)*1 ஓவியங்களாலும் சிற்பங்களாலும் அழகூட்டும் பணி அவர் வசம் கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு உதவியாக மேலும் சில கலைஞர்கள் இத்தாலியிலிருந்து தருவிக்கப்பட்டனர். அவர்களுடன் ஃபிரான்ஸ் நாட்டுக் கலைஞர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். அதுவல்லாமல் அரசவையை அலங்கரித்த செல்வந்தர் இல்லங்களிலும் அவர்களது ஓவியங்கள் இடம்பெற்றன. அதற்குத் தகுந்த சன்மானமும் கிட்டியது.
சுவர் ஓவியங்களும், கித்தான் ஓவியங்களும் அங்கு இடம்பெற்றன. கருப்பொருளாக அவற்றில் புதிரும் விவரங்களும் கூடிய சிறு சிறு கதைகள், புராணம் சார்ந்த வீர சாகசங்கள், காதற்கதைகள் போன்றவை அதிக அளவில் இடம் பெற்றன. விவரணம் கூடிய, நம்பமுடியாத, அச்சம் தரும் விதமான மறுமலர்ச்சிக் கால கற்பனை பாதிப்பு கொண்டவையாக அவை இருந்தன. காம உணர்வு கூடுதலாகவே சேர்க்கப்பட்டது. ஸ்டுக்கோ (Stucco)*2 க்ரோடெஸ்க் (Grotesques),*3 ஸ்ட்ராப் வொர்க் (Strap work),*4 புட்டி (putti)*5 போன்ற உத்திகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. இத்தாலிய ஓவியர்கள் மைக்லாஞ்சலோ, ரேப்பல் சிற்பி பார்மிகியனினொ (Parmigianino) போன்றோரின் பாதிப்பு கூடுதலாகவே இருந்தது. மேலும் மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க சிற்பி பார்மிகியனினொ (Parmigianino) ரோமன் சிலைகளை படியெடுத்தார். அதனால் அவ்விதப்பாணி என்பது அரசு ஒப்புதல் கூடியதாக பின்பற்றப்பட்டது.
ஆனால், அரசியல் மாற்றங்களாலும் அதையடுத்து நடந்தேறிய போர்களினாலும் அக்கலைஞர்களின் பல படைப்புகள் அழிந்துபோயின. மாளிகையின் பல பகுதிகள் பலமுறை மாற்றியமைக்கப்பட்டன. தொடக்கத்தில் படைப்புகளை மாளிகையிலேயே படியெடுப்பது நடந்தது. பின்னர் தலைநகர் வெர்செய்யக்கு (Versailles) இடம் பெயர்ந்தது.
[DDET Ecole-பள்ளியின் சில படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்.]
[/DDET]
இரண்டாம் ஃபோன்டன்ப்ளோ பள்ளி (1594 முதல்)
கத்தோலிக அமைப்புக்கும், அதிலிருந்து பிரிந்து போன அமைப்புக்கும் மதக்கலவரம் நிகழ்ந்த காலத்தில் (Wars of Religion- 1562-1598) ஃபோன்டன்ப்ளோ மாளிகை பராமரிப்பு இல்லாமல் கேட்பாரற்றுக் கிடந்தது. மன்னர் 4ஆம் ஹென்றி அரியணையில் அமர்ந்தபின் அம்மாளிகையைப் புனர்நிர்மாணம் செய்ய விழைந்தார். அந்த காலகட்டம் இரண்டாம் ஃபோன்டன்ப்ளோ பள்ளி என்று குறிப்பிடப்படுகிறது. அதைச் செயற்படுத்த ஒரு குழுவை அவர் தேர்ந்தெடுத்தார். அது ஆம்ப்வோ தாபுவா (Ambroise Dubois), டூசான் தூப்ரூயில் (Toussaint dubreuil), மார்டின் பெர்மினெ (Martin Freminet) என்னும் மூன்று கலைஞர்களைக் கொண்டது. அதில், டூசான் தூப்ரூயில் (Toussaint dubreuil), மார்டின் பெர்மினெ (Martin Freminet) இருவரும் பிரான்ஸ் நாட்டவராவர். காலப்போக்கில் அந்தப் பாணியின் தாக்கம் மங்கி இல்லாமற் போனதற்குக் காரணமான டச் (Dutch), ஃபிளெமிஷ் (Flemish) இயற்கைப் பாணி (Naturalist schools) 17ஆம் நூற்றாண்டில் அங்கு நிலைகொண்டது.
02-rokoko
ரொகோகோ- 1730 / 1760
ரொகோகோ (rokoko) பாணியின் அறிமுகம் என்பது 1730 / 1760 களில் கட்டிடங்களின் உட்புற அலங்கார வடிவமைப்பிலும், பொதுவாக அலங்காரம் கூடிய கலை வடிவங்களிலும் தொடங்கியது. 15ஆம் லூயி மன்னனின் அரியணை அமர்வு அரசவைக் கலைஞர்களிடையிலும் பொதுக் கலை அணுகுதலிலும் ஒரு மாற்றத்தைக் கொணர்ந்தது. அவரது ஆட்சிக்காலத்தில் பரோக் பாணி (Baroque) அதனினும் எளிய, அதிக வளைவுகளையும் இயற்கை சார்ந்த வடிவங்களையும் கொண்ட ரொகோகோ பாணிக்கு இடம் விட்டு மெல்ல ஒதுங்கியது. அப்போதைய ‘பிரதிநிதி’ ஆட்சியில் அரசவை நடப்புகள் வெர்ஸ்சை (Versailles) பகுதியை விட்டு இடம் பெயர்ந்தது. அவ்வமயம் முதலில் அரசு மாளிகையில் தொடங்கிய இந்தக் கலைமாற்றம் பிரான்ஸ் நாட்டின் செல்வம் மிகுந்த மேட்டுக்குடி மக்களிடம் விரும்பி இடம்பெறத் தொடங்கியது. 15ஆம் லூயி மன்னனின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் நிலவிய மித மிஞ்சிய உல்லாசங்கள், கேளிக்கைகள் கொண்ட வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பாக இப்பாணி உணரப்படுகிறது.
இதன் தாக்கம் 1730களில் மிக பரவலாக இருந்தது. அது, கட்டிடக் கலை, கைவினைக்கலை என்பதிலிருந்து ஓவியம், சிற்பம் போன்றவற்றிலும் தடம் பதித்தது. ஓவியர்கள் இறக்கைகளுடன் கூடிய, குழந்தைகள் கொண்ட, மதம் சார்ந்த, காதல் புதினங்களை கண்களுக்கு உவப்பான வண்ணங்களைப் பயன் படுத்தி எழிலார்ந்த வளைவுகளைக் கொண்ட, செல்வச் செழிப்பு மிக்க, காதலர்களை பசுமை நிறைந்த நிலக்காட்சிகள் கொண்ட தமது ஓவியங்களில் உலவவிட்டனர். அரச குடும்பத்தினர், செல்வச்சீமானார் உருவங்களையும் (Portrait) ஏராளமாக ஓவியங்களாக்குவது அவர்களுக்கு உகந்ததாக இருந்தது. ஓவியர் ழான் ஆந்த்வான் வாட்டோ (Jean-Antoine Watteau) மிகப் புகழ்ச்சியாகப் பேசப்பட்டார். அவரது தாக்கத்தில் ஃப்ராங்வா பூஷேர் (Francois Boucher), ழான் ஹோனோர் ஃப்ராகொனார்டு (Jean-Honore Fragonard) போன்ற பல ஓவியர்கள் பின்னாட்களில் தோன்றினர்.
கட்டிடங்களில் நுணுக்கமும் சிக்கலும் கூடிய வடிவங்களை படைக்க பரோக் பாணிதான் பொருந்தி வந்தது. ரொகோகோ பாணியின் நுழைவால் அத்துடன் கீழை நாட்டுப் பாணி, இசைவுப் பொருத்தமில்லாத வடிவக் கட்டு மானம் உள்ளிட்ட பல உத்திகளின் தாக்கம் மேலோங்கியது. ஜெர்மனி, போஹிமியோ, ஆஸ்திரியா போன்ற நாடுகளின் கத்தோலிக கிருஸ்துவர் வசித்த பகுதிகளில் இப்புதிய பாணி விரும்பி ஏற்கப்பட்டது. முன்பு இருந்த பரோக் பாணியுடன் கலந்து ஒரு புதிய கலைப்பாணி தோன்றியது.
ஆனால், அதன் வேகம் 1760 களிலிருந்து குறையத் தொடங்கியது. சிந்தனையாளர் வோல்டைர் (Voltaire), ழாக் – ப்ராங்க்வா ப்ளாண்டேல் (Jacques – Francois Blondel) போன்றோர் கலையின் நசிவு என்று அதற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினர். 1785 இல் மக்களுக்கு அதன்மேல் இருந்த ஈர்ப்பு படிப் படியாகக் குறைந்துவிட புதிய செவ்வியல் (new classical) பாணி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. ஜெர்மனி நாட்டில் இப்பாணி ‘பன்றிவால்’, ‘பொய் தலைமுடி’ என்றெல்லாம் கேவலமாக இகழப்பட்டது. இத்தாலி நெப்போலிய மன்னனின் ஆட்சியில் பிரான்ஸ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. அத்துடன் அங்கு பரவலாக இருந்த ரொகோகோ பாணிக்கு மூடுவிழா நடந்து விட்டது.
1820 / 70 களுக்கு இடையில் அதற்கு மறு வாழ்வுக்கான ஒரு வெளிச்சம் கிட்டியது. இங்கிலாந்தில் ‘14ஆம் லூயி பாணி’ (Louis xiv style) என்று தவறாக அழைக்கப்பட்ட, தரம் குறைந்தவையென பிரான்ஸ் நாட்டில் ஒதுக்கப்பட்ட அந்தப் பாணிப் படைப்புகள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டன.
[DDET rokoko-வின் சில படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்.]
[/DDET]
(வளரும்)
குறிப்புகள்
01) ஷோடோ (Chateau)- ஒரு பண்ணை மாளிகைக்கு ஒப்பானது.
02) ஸ்டுகோ (Stucco)- கட்டிடம் கட்டுவதில் பயன்படுத்தும் ஒருவித நீர்கலவை. உலர்ந்ததும் கெட்டிப்பட்டு உதிராமல் இருக்கும். புடைப்பு சிற்பங்களில் நம் நாட்டு சுதை போல பயன்படும்.
03) குரோடெக்ஸ் (Grotesque) – நம்பமுடியாத, அச்சம் தரும் விதமான கற்பனை கொண்டது. (எ.கா.மனித உடல் இரு மிருகத் தலைகள், கோர முகமும் விலங்கு அல்லது பறவையின் உடலும் கொண்ட ஜந்து.) இதை இந்திய கலைப்பாணியில் காணப்படும் யாளி, அசுர கணம், கோரமான தோற்றம் கொண்ட தீய சக்திகளுடன் ஒப்பிடலாம்.
04) ஸ்ட்ராப் வேலைப்பாடு (Strap work)- தோராயமாக 1/2″ அகலம் கொண்ட தோல்ப் பட்டையை நினைவுபடுத்தும் விதமான புடைப்புவடிவம். உருண்டும், நெளிந்தும், ஒன்றுடன் ஒன்று பிணைந்தும் இருக்கும் விதமாக வடிக்கப்படும். அவை கட்டிடங்களில் அலங்கார அமைப்புகளாக அமைந்தவை. பிளாஸ்டர் பொடிக் கலவை, மரம், கல் போன்றவற்றிலும் வடி வமைக்கப் பட்டன. இதற்கு இணையாக இந்திய ஆலயங் களில் கருவறையைச் சுற்றியிருக்கும் கற்சுவரில் உள்ள சாரளங்களில் காணப்படும் பாம்புகள் அல்லது கொடிகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.
05) புட்டி (Putti)- கொழு கொழுவென்ற செந்நிற உடல் கொண்ட, தோற்பட்டையில் சிறகுகள் கூடிய, வானில் பறக்கும் குழந்தைகள் அந்த ஓவியங்களில் இடம் பெற்றனர். அதன் தாக்கமாக இந்திய ஓவியங்களிலும் இறைவனின் திரு உருவிற்கு வானில் பறந்தவாறு மலர் தூவும் இறக்கை கொண்ட உருவங்கள் இடம்பெற்றன.