தமிழின் மூத்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களைக் குறித்ததொரு திறனாய்வு நூல் வரும் 30-ஆம் தேதியன்று (30-04-2011) தேவனேயப் பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணியளவில் வெளியிடப்படவிருக்கிறது. பல மூத்த படைப்பாளிகளும் இப்புத்தகத்தில் வெ.சா அவர்களின் எழுத்துலகைக் குறித்து எழுதியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றவுமிருக்கிறார்கள்.
இத்தருணத்தில் வெ.சா அவர்களைக் குறித்து ச.திருமலைராஜன் எழுதியிருக்கும் சிறப்புக்கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கட்டுரையிலிருக்கும் ஓவியங்கள்: வெ.சந்திரமோகன்.
எழுத ஆரம்பித்து சென்ற வருடத்தோடு ஐம்பது வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கும் வெங்கட் சாமிநாதன் அவர்களுடனான நேரடி அறிமுகம் எனக்கு இணையம் மூலம்தான் கிடைத்தது. திண்ணை இணைய இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரையினைப் படித்துவிட்டு வெ.சா அவர்களிடமிருந்து வந்திருந்த ஒரு மின்மடல் மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. ஊர் பெயர் தெரியாத அறிமுகநிலை பத்திக்கட்டுரை எழுதும் ஒரு கட்டுரையாளரைப் பாராட்டி தமிழ் இலக்கிய உலகின் பெரும் விமர்சகரிடம் இருந்து வந்த பாராட்டு மடல் ஆச்சரியம் அளித்ததை விட, புதிதாக எழுதும் எவரையும் உற்சாகத்துடன் ஊக்குவிக்கும் அவரது பெருந்தன்மையே அவர் மீது பெரும் மரியாதையை உருவாக்கியது. அன்று தொடர்ந்த நட்பு கடந்த ஆறு ஆண்டுகளாக உரையாடல்கள் மூலமும் அவரது கட்டுரைகளை, சிந்தனைகளைத் தொடர்ந்து படிப்பதன் மூலமாகவும் வளர்ந்து வருவது.
இணையம் மூலம் கிடைத்த நட்பு விரிவடைந்து நான் சென்னை செல்லும் பொழுது அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். வெ.சா போன்ற ஒரு பெரும் ஆளுமையை நேரில் சந்திக்கப் போகிறோம் என்பதில் இருந்த ஆர்வத்தை விட சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்று தமிழ் இலக்கிய உலகத்தினரால் அபவாதத்திற்குள்ளாகிய ஒருவரை சந்திக்க வேண்டும் என்ற குறுகுறுப்பும் இருந்தது என்பதும் உண்மை. அதுவரை நான் அறிந்திருந்ததெல்லாம் எல்.ஐ.சி ஏஜெண்டுகள் மட்டுமே. சென்னையில் நான் நேரில் காண நேர்ந்த வெ.சா, சென்னையின் புறநகர்ப் பகுதிகளின் மேடும் பள்ளமுமான சாலைகளைத் தாண்டி அமைதியாக ஒதுங்கிய வீட்டில் அரைக்கை பனியனில், தன் கண்ணாடியின் பின்னால் வழியும் கனிவான பாசம் ததும்பும் பார்வையிலும், உற்சாகமூட்டும் பேச்சுக்களுமாக இருந்தார். கடுமையான விமர்சகர், கலகக்காரர் என்ற பிம்பத்திற்கு மாறாக வாஞ்சையும், அன்பும் வழியும் ஒரு இளைஞனின் உற்சாகமும், ஆர்வமும் கூடிய, ஒரு நட்பான இளகிய மனிதராக எங்கள் முதல் சந்திப்பில் அறிமுகமானார். இருந்தாலும் ஹாலிவுட் சினிமாக்கள் ஏற்படுத்தியிருக்கும் சி.ஐ.ஏ ஏஜெண்ட் பிம்பத்திற்குப் பொருந்தி வரும் கம்பீரமும் கொண்டிருந்தார் என்பதும் உண்மைதான்.
அவரது அறச்சீற்றம், கருத்துக்கள் விமர்சனங்கள் காரணமாக அவரைக் கடுமையாக விரோதிக்கும் தமிழ் இலக்கியவாதிகள் எவரும் அவரை ஒரு முறை நேரில் சந்திக்க நேரிட்டிருந்தால் அவரது நெருங்கிய நண்பராக மாறி விட்டிருந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். வலைப் பதிவு ஆரம்பிப்பது குறித்து சிறுவர்களுக்குரிய ஆர்வத்துடன் எங்களுடன் அவரை சந்திக்க வந்திருந்த டோண்டு ராகவன் அவர்களிடம் கேட்டு அறிந்து ஒரு வலைப்பதிவையும் உடனே துவங்கிவிட்டிருந்தார். கனத்த பவுண்டன் பேனாக்களில் மசி நிரப்பி தன் கனத்தக் கருத்துக்களை கட்டுக் கட்டான வெள்ளைக் காகிதங்களில் எழுதிக் கொண்டிருக்கும், சி.சு.செல்லப்பா காலத்து மூத்த எழுத்தாளர் ஒருவரை சந்திக்கப் போகிறோம் என்று நினைத்துக்கொண்டு, எழுதுவதற்கு ஏற்ற வழுவழுப்பான உயர்தர வெள்ளைப் பேப்பர்களும், பேனாக்களையும் அவருக்கு அளிப்பதற்காக வாங்கிக் கொண்டு சென்றிருந்தேன். தொழில்நுட்ப மாறுதல்களுடன் தன்னை இயல்பாக இணைத்துக் கொண்டு பயன்படுத்தும் அவரது ஆர்வமும், உற்சாகமும், இனிய அதிர்ச்சியையும், வெட்கத்தையும் ஏற்படுத்தியது. சத்தம் போடாமல் நான் கொண்டு சென்றிருந்த வழவழ பாண்டு பேப்பர்களையும் பேனாக்களையும் பையில் இருந்து வெளியே எடுக்காமல் மறைத்துவிட்டேன். அந்த குறைவான நேரத்தில் அவருடன் பேச நினைத்த எதையும் பேச முடியாமல் திரும்பி விட்டாலும் கூட, இணையம் மூலமாகவும் அவரது எழுத்துக்கள் மூலமாகவும் நான் அன்றாடம் நெருங்கி உரையாடும் ஒரு ஆத்மார்த்தமான நண்பராக, மானசீகமான குருவாக, வழிகாட்டியாக தொடர்ந்து வருகிறார். அந்தச் சிறிய சந்திப்பில் அவருடன் பேசியதை விட நான் அவருடைய மனைவியிடம் பேசிய நேரமே அதிகமாயிருந்திருக்கும்.
அமெரிக்க நூலகங்களின் உயர்ந்த அலமாரிகளில் பல முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றி எழுதப்பட்ட நூல்களையும், அவர்களது படைப்புக்களைத் திறனாய்வு செய்து எழுதப்பட்ட நூல்களையும் நான் அதிகம் காண்கின்றேன். ஒவ்வொரு முறை நான் இணையத்தில் எந்தவொரு ஆங்கில எழுத்தாளரையும் தேடும் பொழுது அவரைப் பற்றிய அவர் படைப்புகளை அலசும் நூல்களும் அருகிலேயே தென்படுகின்றன. ஜான் ஸ்டைன்பெக், ஹெமிங் வே, மார்க் ட்வெய்ன் என்று இலக்கிய எழுத்தாளர்களில் துவங்கி ஜான் லெக்கார், கென் ஃபோலட் என்று பொழுது போக்கான உளவுப் புதினங்கள் எழுதும் எழுத்தாளர்கள் வரை ஒவ்வொரு எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் திறனாயும், அலசும் நூல்கள், அவர்களின் எண்ணப் போக்குகளையும், படைப்புகளையும் வாசகர்கள் அணுக வேண்டிய முறைகள் குறித்தான நூல்களையும் அவர்களது படைப்புகளுக்கு அருகிலேயே அணி வகுப்பதைத் தவறாமல் கண்டிருக்கிறேன். ஆனால் தமிழில் இந்த நிலைமை அனேகமாக இல்லை. வெகு அபூர்வமாகவே எழுத்தாளர்களையும், படைப்புகளையும் திறனாய்வு செய்யும் நூல்கள் படிக்கக் கிடைக்கின்றன. தமிழில் திறனாய்வு என்பது ஒரு எழுத்து இயக்கமாக அல்லது அதிகம் வாசகர்களைச் சென்றடைந்த படைப்புக்களாக உருவாகவில்லை என்றே தோன்றுகிறது. இலக்கியப் படைப்புக்கள் மட்டும் அல்ல, வேறு எந்தவகை இந்தியக் கலைகளுக்குமே கிட்டத்தட்ட இதே நிலைதான் என்றே தோன்றுகிறது.
எழுபதுகளில் இருந்து வாசிப்பைத் தொடர்ந்திருந்தாலும் திக்கு திசையின்றி கையில் கிடைக்கும் எந்த நூல்களையும் எந்தவிதமான ஆழமான பார்வைகளும் இன்றி படிக்கத் துடிக்கும் பசியுள்ள வாசகனான எனக்கு, படைப்பாளிகளைப் பற்றிய அவர்கள் ஆளுமை குறித்த பார்வைகளும், படைப்புகள் குறித்த ஆழமான விமர்சனங்களும் சற்று காலம் கடந்து 80களின் இறுதியிலேதான் எப்பொழுதாவது படிக்கக் கிடைக்கும் சிற்றிதழ்கள் மூலமாகவே கிட்டின. அவற்றில் பெரும்பாலான ஆளுமைகள், படைப்புகளின் அறிமுகமும், வழிகாட்டுதலும் வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகள் மூலமாகவே எனக்குக் கிடைத்தன.
வெ சா அறிமுகப் படுத்திய ஆளுமைகள்:
எனக்குப் பெரும்பாலும் வெ.சா வழியாகவே பல கலைஞர்களின் சிந்தனையாளர்களின் படைப்புக்கள் குறித்த உரிய அறிமுகம் கிட்டியது. அவர் வழியாகவே அவர்களது படைப்புக்களுக்குள் செல்லும் பார்வை கிட்டியது. ந.பிச்சமூர்த்தி, சோ.தருமன், பாமா, மொளனி, விட்டல் ராவ், சம்பத், நகுலன் போன்ற முக்கியமான எழுத்தாளர்களை நான் அறிந்து கொண்டதும் படிக்க விரும்பியதும் வெ.சா அவர்களின் விமர்சனங்கள் மூலமாகவே. அது போலவே திலீப் குமார், சுந்தரராமசாமி, ஜெயமோகன், ஜானகிராமன் ஆகியோர் படைப்புக்களில் இருக்கும் புதிய பரிமாணங்களின் வாசல்களத் திறந்ததும் வெ.சா-வின் பார்வைகளே. ஏற்கனவே அறிந்திருக்கும் ஆளுமைகளைப் பற்றி கூட வெ.சா-வின் சாளரம் மூலம் நாம் புதிய தரிசனங்களைத் தொடர்ந்து அடையவே முடிகிறது. திரு.வி.க, உ.வெ.சா, ந.பிச்சமூர்த்தி, செல்லப்பா போன்ற பெருமக்களைப் பற்றி நாம் யோசித்திராத மாறுபட்ட கோணங்களில் நமக்கு அறிமுகப்படுத்துபவர் வெ.சா. நாம் இதுவரை முற்றிலும் அறிந்திராத பல கலைஞர்களின் சிறப்புக்களையும் கூட வெ.சா வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது.
உ.வெ.சா பற்றியும், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி பற்றியும் வெ.சா நமக்கு காண்பிக்கும் பார்வைகள் முக்கியமானவை. சந்திரசேகர சரஸ்வதி அவர்களைப் பற்றி நமக்குச் சொல்லப்பட்ட விஷயங்களையும் தாண்டி அவருக்கு இருக்கும் விசாலமான, ஆழமான அறிவுத்திறன் குறித்த பிரமிக்கத்தக்க கேள்விகளை எழுப்புகிறார் வெ.சா. பரமாச்சாரியாரின் உபதேசங்கள் வாயிலாக அவர் வெளிப்படுத்தியிருக்கும் வரலாறு, பொருளாதாரம், இசை, மொழியியல், தமிழ் இலக்கியம், தொல்லியல், பொளதீகம், சமிஸ்கிருதம் என்று விரிந்து கொண்டே போகும் அறிவுத் தீஷண்யம் குறித்து பெருவியப்பு கொள்கிறார். அவர் வியப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா போன்று சகல துறைகளிலும் விசாலமான அறிவை பரமாச்சாரியார் அவற்றையெல்லாம் கற்றுக் கொள்ள முடியாத ஒரு ஆச்சாரமான மடம் சம்பந்தக் கடமைகள் உள்ள சூழலில் எப்படி அறிந்து கொண்டார் என்று வியக்கிறார் வெ சா. இதற்கான நேரமும், சூழலும் அவருக்கு எப்படி வாய்த்திருக்கக் கூடும் என்ற வெ.சா-வின் ஆச்சரியம் நமக்கு பரமாச்சாரியார் பற்றிய ஒரு புதிய பார்வையை அளிக்கின்றன.
பரமாச்சாரியார் போலவே மற்றொரு சுவாமிநாதனாகிய உ.வெ.சுவாமிநாத ஐயரவர்கள் குறித்தும் அவரது படைப்புக்களில் காணப்படும் நவீன அம்சம் குறித்தும் அதே பெருவியப்பை எழுப்புகிறார் வெ.சா. உ.வெ.சா இன்று தமிழர்களிடம் சங்க இலக்கியங்களை மீட்டுத் தந்தவராக மட்டுமே அறியப்படுகிறார். ஆனால் வெ.சா தமிழின் இலக்கியத்திற்கு அவர் அளித்த பங்களிப்பை நமக்கு அறியத் தருகிறார். நமக்கு இதுவரை கிட்டியிராத ஒரு பார்வையில் உ.வெ.சா அவர்களை ஒரு சிருஷ்டி எழுத்தாளர் என்ற கோணத்தில் வெ.சா நமக்கு ஆணித்தரமாக அறிமுகப்படுத்துகிறார். மணிக்கொடி காலத்திற்குப் பின்னால் தமிழின் நவீன இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டு மரபாகிப்போன க்ளிஷேக்கள் இல்லாமல் அடக்கி எழுதுதல், அசட்டு உணர்ச்சியைத் தவிர்த்தல், ஒதுங்கி நின்று நோக்கல், நாடக பாணியைத் தவிர்த்தல் போன்ற உத்திகளை இவற்றில் எல்லாம் எந்தவிதப் பரிச்சியம் இல்லாமல் இவற்றைக் கற்றுக் கொள்ளும் காலத்தில் வாழ்ந்திராத உ.வெ.சா மிகக் கச்சிதமாகக் காலத்தின் முன்னோடியாக தன்னியல்பிலேயே வரப் பெற்று தன் படைப்புக்களைப் படைத்திருக்கிறார் என்று வெ.சா சொல்லும் பொழுது உ.வெ.சா அவர்களது படைப்பாற்றல் குறித்து நமக்கு பெரு வியப்பு ஏற்படுகிறது. ஞானபீட விருது பெற்ற அகிலன் போன்றவர்களின் படைப்புக்களில் காணப்படும் அபத்தங்களைக் கூட உ வே சா எழுதிய ஆயிரக் கணக்கான பக்கங்களில் ஒரு இடத்தில் கூடக் காணக் கிடைக்காது என்று உ.வெ.சா அவர்களின் இன்னொரு பரிமாணத்தை நமக்கு அறியத் தருகிறார்.
பொதுவாக அரசியல்வாதிகள் பற்றியும் அரசியல் பற்றியும் பொதுவில் கருத்துத் தெரிவிக்காத வெ.சா, அபூர்வமாக அலசியுள்ள ஒரு அரசியல் விமர்சகர் சோ.ராமசாமி. அரசியலில் நேரடியாக ஈடுபடாதவர் என்றாலும் கூட ஒரு சிந்திக்கும் தமிழ் வாக்காளர்களிடம் தனது தர்க்கபூர்வமான அரசியல் கருத்துக்கள் மூலமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர் சோ. மாசடைந்த தமிழக அரசியல் சூழலில் சோ.ராமசாமியின் வரவு உயர்ந்த லட்சியங்களினாலான தார்மீக அறவுணர்வின் அடிப்படையில் அமைந்த ஒரு உன்னத தன்னிகரில்லாத அரசியல் நிகழ்ச்சியாகவே, ஒரு எழுச்சியாகவே தோன்றியதாக வெ.சா சோவை அடையாளப் படுத்துகிறார். மேடை நாடகத்தில் சோவின் பங்களிப்பை தமிழ் தெருக்கூத்தின் கட்டியக்கார, விதூஷக மரபின் நீட்சியாகவே வெ.சா கருதுகிறார். சோவிற்கு கலையுணர்வு இல்லாததை ஒரு பெரும் குறையாக, இழப்பாகவே சோவின் பலவீனமாக வெ.சா கருதுகிறார். ஆனால் அப்படி நுண்கலையுணர்வின்றியே அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்கும் சோவை கண்டிக்கும் அதே வேளையில் அவை போன்ற சிறு குறைபாடுகளை விட அவர் ஏற்படுத்திய அறிவார்ந்த தார்மீகமான அரசியல் களம் பாரதிக்குப் பின்னால், திரு.வி.கவுக்குப் பின்னால், தான் காண நேர்ந்த ஒரு நேர்மையான அரசியல் நிகழ்வாகவே காண்கிறார்.
தமிழ்நாட்டின் பொது சிந்தனை மரபிலும் வாசிக்கும் வழக்கத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றும் ஒரு பன்முக வித்தகராகிய கல்கி குறித்து வெ.சா, கறாரான விமர்சனங்களை வைக்கின்றார். சுமார் 25 வருட காலமாக தமிழ் மக்களைப் போதை நிலையில் ஆழ்த்தி விட்டவர் கல்கி என்று சற்றும் தயங்காமல் குற்றம் சாட்டுகிறார் வெ.சா. கல்கி குறித்தான மயக்கமான மதிப்பீடுகள் கொண்டிருந்த சராசரி வாசகனாகிய என்னைப் போன்றவர்களிடம் கல்கி ஏற்படுத்திய பாதிப்புக்களை, மறுபக்கத்தையும் எடுத்து வைக்கிறார் வெ சா. கலைத்திறன் அறிவுத்தளம் ஆகியவற்றை மனதில் கொண்டால், கல்கி தமிழர்களின் இல்லத்தை வெறும் அலங்காரமான வைக்கோல்களைக் கொண்டு மட்டுமே நிரப்பியிருக்கிறார் என்பது புரியும் என்கிறார் வெ சா. கல்கியின் கதை கேட்கும் போதையில் தமிழன் பெருமைக் கோஷம் போடும் இரைச்சலில் பாரதியின் குரல் எழுப்பிய திசை மறந்து விட்டது என்றும், புதுமைப்பித்தனும், மணிக்கொடியும் இந்த போதையில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு விட்டார்கள் என்று தன் வேதனையை வெ.சா மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறார். தமிழ் நாட்டின் பொதுப் புத்தியில் கலந்து போன எந்தவொரு வாசகனுக்கும் கல்கியின் படைப்புக்கள் குறித்தான ஒரு வேறுபட்ட விமர்சனக் கோணத்தை வெ.சா அளிக்கிறார் வெகுஜன இலக்கியத்திற்கும் தரமான இலக்கியத்திற்கும் உண்டான இடைவெளி குறித்தும் அவற்றின் வேறுபாடுகள் குறித்துமான கோணங்களை நமக்குக் காட்டுகிறார்.
தமிழர்களின் பொதுப்புத்தியில் தமிழ் நாட்டின் மாபெரும் கவிஞராக உருப்பெற்று விட்ட பாரதிதாசனை எடை போடும் பொழுது அவரது ஆரம்ப கால கவிதைகளுக்கு உரிய இடத்தை வழங்கினாலும் பின்னாளில் அவை மொழி வெறியாக மாறியதைச் சுட்டிக்காட்டுகிறார். பாரதிதாசன் வெறும் வெற்று துவேஷப் பிராச்சாரங்களை எழுப்பும் துண்டுப் பிரச்சாரகராக பாரதிதாசன் சிறுத்துப் போன உண்மையைத் தயங்காமல் சொல்கிறார் வெ.சா. தமிழ் இலக்கியங்களில் அவருக்கு இருந்த ஆழ்ந்த பரிச்சயங்களும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளோடு பிறந்த சொல்லாட்சியும் மட்டுமே அவரைக் கவிஞராக்கின என்று தயவு தாட்சண்யமின்றி பாரதிதாசன் பற்றிய உண்மையான தன் அபிப்ராயத்தைச் சொல்கிறார். தமிழ் உணர்வின் சின்னமாக உயர்ந்த பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பாரதிதாசன் குறித்து இன்று தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு இலக்கியவாதியும் சொல்லத் தயங்கும் உண்மையாகும் இது. இது போன்ற விமர்சனங்களினாலேயே வெ.சா இதர தமிழ் இலக்கியவாதிகளிடம் இருந்து வெகு உயரத்திற்கு விலகிச் செல்கிறார்.
வெ சா தரும் இலக்கிய அனுபவங்கள்:
இந்தியக் கலைகள், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை பல்வேறு இனங்களின் நிறங்களின் கலப்பில் பரிமாற்றத்தினால் நிகழ்வது என்ற ஒருமைப்பாட்டுத் தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர் வெ.சா. அதற்கு இலக்கியத்தின் மூலமாக பல்வேறு ஆதாரங்களைத் தொடர்ந்து நிறுவி வருகிறார். தமிழ் சங்கப் பாடல்களின் அகத்துறைப் பாடல்களுக்கும், பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ள காதா சப்தசதிக்கும் உள்ள பொதுவான கூறுகளை அடையாளம் காண்பிப்பதன் மூலம் இந்தியக் கலைகளும், பண்பாடும் பூகோளங்களைக் கடந்து கலந்தவை என்பதை உறுதிப்படுத்துகிறார். இன்று தமிழ்மொழி, வடமொழி என்று பிரிவினைவாதம் பேசி மக்களைப் பிரிக்கும் அரசியலின் நடுவே இரண்டு மொழி இலக்கியங்களுக்குள்ளும் நடந்த கொடுக்கல் வாங்கல்களை, பொதுக் கூறுகளை ஆணித்தரமாக நிறுவுகிறார் வெ.சா. மழையைத் தேடி அலையும் வண்டுகள், தலைவன் தலைவிகளைப் பெயர் சுட்டாமல் பொதுகாக்க் குறிக்கும் தன்மை, பயணிக்கும் மக்கள், மழைப் பருவம் என்று பல விதங்களிலும் இரு மொழி இலக்கியங்களுக்கும் இடையேயான பொதுவானக் கூறுகளை இனம் கண்டு சொல்கிறார். மேலும் இன்று பிரிவினைவாதம் பேசி அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ் பற்றாளர்கள் கொண்டாடும் பெரும்பாலான சங்கப் புலவர்கள் கூட புலம் பெயர்ந்தவர்களாகவும், சமண மதத்தினராகவும் தமிழை தாய்மொழியாகக் கொள்ளாமல் கற்றுத் தேர்ந்து தமிழுக்குப் பங்களித்தவர்களாகவுமே இருக்கக் கூடும் என்கிறார். பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரங்களில் காணப்படும் சிருங்காரங்கள் கூட காதா சப்தசதி மூலம் பிராகிருதத்திற்குச் சென்ற தமிழ்மொழியின் கூறுகளாக இருக்கக்கூடும் என்கிறார். சங்கப் பாடல்களில் வட பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தங்கள் கொடைகளை அளித்திருக்கலாம், அது போலவே இருமொழிப் புலவர்கள் மூலமாக சங்கத் தமிழின் சுவை பிராகிருதத்திற்கும் பின்னர் சமிஸ்கிருத இலக்கியத்திற்கும் சென்றிருக்கலாம். இந்தியக் கலைகள் அனைத்துமே என்பது தொடர்ந்து நடந்த பண்பாட்டுப் பரிமாற்றங்களால் செழுமை அடைந்திருப்பவை என்ற கருத்தை வெ.சா வலியுறுத்துகிறார். பாரத தேசம் ஒன்றுடன் ஒன்றுப் பின்னிப் பிணைந்த மாபெரும் கலாச்சாரச் சரடுகளால் இணைக்கப் பட்ட ஒரு மாபெரும் கலாச்சாரப் பரிமாணம் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார்.
பக்தி இலக்கியங்கள் ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களில் இருந்து கிளம்பி இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவிய கண்ணன் பக்தி பாடல்களுக்கு அடிப்படையாக இருந்திருக்கும் என்பதும் கலாச்சார பரிவர்த்தனையை அழுத்தமாகச் சொல்லும் கருத்தாக்கமாகும். இந்தியா முழுவதும் பரவிய பக்திப் பாடல்களுக்கு ஆழ்வார் பாசுரங்களும், அவற்றில் காணப் படும் நாயகன் நாயகி பாவத்திற்கான அடிப்படை சங்கப் பாடல்களிலும் காதா சப்த சதியிலும் துவங்குகின்றது என்பது வெ.சா நமக்கு அறிமுகப் படுத்தும் இலக்கியத்தின் மூலமாகப் பரவும் பாரதத்தின் ஒருமைப்பாடு.
இலக்கியத்தின் உள்ளடக்கம் என்பது கலைஞனின் அனுபவம்தான் என்பதில் உறுதியான கருத்து கொண்டிருப்பவர் வெ.சா. அனுபவம் என்றால் வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், வர்க்கப் போராட்டம் என்ற பிரச்சாரக் கருத்தியல் சார்ந்த அனுபவம் அல்ல என்பது அவர் கருத்து. அவர் கூறும் அனுபவம் பார்வை, தீட்ச்சண்யம், நாடு, பிறப்பு, மரபு, கல்வியறிவு, சூழ்நிலை, என் தனித்தன்மை இயல்பான அக்கறை, இவற்றால் ஆக்கப் பட்டு ஆகிக் கொண்டு வரும் ஒரு தொகைப் பொருள் என்பதே. இது மேம்பட்ட ஒரு அனுபவம் என்பார் வெ சா. தன் அனுபவத்தில் பிரதானமான ஒன்றல்லாதவற்றை உருப்பெருக்கி தன் இயக்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்று செய்யப்படும் இலக்கியம் யதார்த்தமான ஒன்றாக இருக்க முடியாது என்பது அவரது உறுதியான கருத்து. இவற்றை மீறி யதார்த்தமாக ஆத்மார்த்தமான அனுபவங்களில் இருந்து கிளைக்கும் படைப்புகளை அவர் எந்தவித எதிர்பார்ப்புக்களும் இன்றி கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து அடையாளம் கண்டு அவற்றிற்கான அங்கீகாரங்களை வழங்கியே வருகிறார்.
திருப்தியற்ற வெகுஜன வாசிப்பிற்கு மட்டும் தீனி போடக் கூடிய படைப்புக்களின் மீதான தனது கடும் விமர்சனங்களை அந்தப் படைப்பாளர்களின் கடும் எதிர்ப்பையும் கண்டனங்களையும் வசை மொழிகளையும் பொருட்படுத்தாமல் வைத்துக் கொண்டே வருகிறார். ”எத்தகைய படைப்பும் திருப்தி தரக் கூடிய சில மன நிலைகள் உண்டு. அத்தகைய மனநிலை கொண்ட மக்கள் திருப்தி அடைகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அக்குணங்கள் இலக்கியம் என்ற அடைமொழிக்கு உரியவை ஆகி விட முடியாது என்ற அறிவு இன்னும் சித்திக்கவில்லை” என்று பொதுப்படையாக இலக்கிய விமர்சனம் செய்பவர்களை நோக்கித் தன் கண்டனங்களை வெளியிடுகிறார். அவரது தரம் சமரசத்திற்கு உரியதல்ல என்பதை நிலை நிறுத்துகிறார். தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரனாகும் அபாயம் போலவே பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளன் ஆகிவிடும் அராஜகத்தை எதிர்த்து பேனா பிடிப்பவர்களையெல்லாம் விமர்சனம் செய்ய வேண்டி வருகிறது என்று அயர்வடைகிறார். அந்த வகையில் தமிழின் பிற்கால இலக்கியத்தின் ஆரம்ப கால எழுத்தாளர்களான ராஜம் ஐயரில் இருந்து ஆரம்பித்து தமிழின் தற்கால இலக்கியவாதிகளின் படைப்புக்கள் வரை தாட்ச்சண்யம் இல்லாமல் ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணரின் கத்தியின் கூர்மையுடன் தர வரிசைப் படுத்தி வருகிறார்.
எந்தக் கலைத்துறையை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் காணப்படும் வேற்றுமை இல்லாத வறட்சியின் அடிப்படை தமிழ் இனத்தில் காணப்படும் பொதுவான சிந்தனை வறட்சி, கலையுணர்வின் வறட்சியே என்று குற்றம் சாட்டும் வெ.சா, அந்த வறட்சியை நீக்கும் பொருட்டுத் தன்னால் ஆன ஒரு விழிப்புணர்ச்சியை, சிந்தனை இயக்கத்தை தனி நபராக தொடர்ந்து நடத்தி வருகிறார். தமிழ் கலைத்துறைகளில் மணிக்கொடி காலத்தில் கொஞ்சம் காலம் ஏற்பட்ட மறுமலர்ச்சி மீண்டும் மங்கிப் போய் விட்டதாகக் கருதுகிறார். அந்தக் காலக் கட்டத்தில் அனைத்து கலைத் துறைகளிலும் விழிப்புணர்வும், மலர்ச்சியும், வளர்ச்சியும் தற்காலிகமாகவேயானும் ஏற்பட்டது தமிழ் சமூகத்தில் அடியோட்டமாக எழுந்த ஒரு விழிப்பின் விளைவான புத்தியக்கம் என்கிறார்.
சங்க இலக்கியம் தொடங்கி தற்கால இலக்கியம் வரை தன் விமர்சனங்களையும் அறிமுகங்களையும் தொடரும் வெ.சா மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் குறித்தும் தெளிவான கருத்துக்களைக் கொண்டவராக இருக்கிறார். ஆர்.கே.நாராயணனது ஆங்கில ஆக்கங்களின் நாடகங்களைப் பார்க்கும்பொழுது ஏற்படும் அந்நிய உணர்வுக்கான காரணத்தை நான் வெ.சா மூலமாகவே அறிந்து கொண்டேன். ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த லா.ச.ரா, பின் தமிழில் எழுதத் துவங்கியதால் மட்டுமே அவரது உச்சத்தை அடைய முடிந்தது என்கிறார் வெ.சா. ஆங்கிலமோ, தமிழோ கன்னடமோ தன் அனுபவம் கிளைக்கும் மொழியில் எழுதுவதே அந்தப் படைப்புக்களுக்குச் சிறப்புத் தரும் என்கிறார். எழுத்தாளனுக்கு எந்த மொழியில் அவன் படைக்க இருக்கும் உலகமும் அனுபவங்களும் அவனை வந்தடைந்தனவோ எந்த மொழியில் அனுபவ உலகிற்கும் அவனுக்கும் இடையேயான உறவும், உரையாடல்களும் வந்து சேர்ந்தனவோ அந்த மொழியில் படைக்கும் பொழுதே அந்தப் படைப்பு இயல்பானதாக இருக்கும் என்பது அவரது தெளிவான கருத்து. அதை பல உதாரணங்கள் கொண்டு நிரூபிக்கிறார்.
நாவல்களில் நாடகபாணி உருக்க விளைவுகள், அதீத உணர்ச்சிகள் விரும்பத்தக்கவையல்ல என்பதை தெளிவாக உணர்த்தும் வெ.சா, எந்தக் கலைப்படைப்பிலும் ஊதிப் பெருக்கும் உணர்ச்சிகளுக்கு இடமில்லை என்கிறார். அதைப் போலவே சரித்திர நாவல்களுக்கு இலக்கிய அந்தஸ்து உண்டா என்பதையும் சந்தேகிக்கிறார். சரித்திர நாவல்களுக்கு இலக்கிய அந்தஸ்து கிட்ட வேண்டுமானால் அவற்றில் அக்கால மனிதனின் தத்துவம், தர்ம நோக்கு, நெறிமுறைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் பின்ணணியில் அமைய வேண்டும் என்பதைத் தெளிவாக்குகிறார். நம் சரித்திர நாவலாசிரியர்கள் இவ்வாறான பிரச்சினைகளை அணுகுவதில்லை என்பது அவரது குற்றச்சாட்டு. பொதுவாகவே நம் சரித்திரத் திரைப்படங்களையும், நாவல்களையும் கவனிக்கும் பொழுது அதன் மொழி செயற்கையானதாகவும் காலத்தைப் பிரதிபலிக்காதவையாகவுமே தோன்றுவதை எளிதில் அறியலாம். வெ.சா சரித்திரப் பாத்திரங்கள் பேசும் மொழியும் கால உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்துகிறார். இருபதாம் நூற்றாண்டின் நாடக பாணி மொழியில் ராஜராஜ சோழன் பேசியிருக்க முடியாது என்கிறார்.
(தொடரும்)