வாசகர் மறுமொழி

mast21

அந்தக் காலத்தில் பட்டணத்தில் பூதம் படத்தில் ஜெய்சங்கர் படிக்கும் பேப்பர் விளம்பரத்தில் உள்ள எம்.ஜி.ஆர், சிவாஜி எல்லாம் உயிர் வந்து பேப்பருக்கு்ள்ளேயே திரைப்படமாக உயிர்பெறுவார்கள். அப்படியெல்லாம் பேப்பர் வந்திடாதா என்று கனவு கண்டதுண்டு. இன்று சொல்வனம் அப்படி ஒரு பேப்பராக உருவெடுத்துவிட்டது. கட்டுரை படிக்கும்பொழுதே இசையும், படங்களும் தமிழின் புதுமை இதழ் சொல்வனம்.

சுகாவின் கட்டுரை ஷெனாயைப் போலவே கடைசி வாக்கியத்தில் உருக்கி விட்டது.

“உஸ்தாத் பிஸ்மில்லா கான் போன்ற மேதைகளுடன் ஷெனாய் வாசித்த பாலேஷ் என்னும் அந்த ஒப்பற்ற கலைஞர், தனது சாலிகிராமத்து வீட்டில் தன் மகனுடன் இணைந்து எனக்காக ‘ஜோக்’ ராகம் வாசித்தார். கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத பேரனுபவம் அது.”

”மும்தாஜே முத்தே என் பேகமே பேசும் முழுமதியே என் இதய தீபமே” என்ற காவியமா பாடல் வரிக்குப் பின்னால் இழைவதும் ஷெனாய் தானே?

சொல்வனம் குழுவினருக்கும் என் நன்றிகள்.

அன்புடன்
ச.திருமலை

கூட்டுக்குள் அலையும் தேனீக்கூட்டம்” நன்றாக எழுதப்பட்டதொரு கட்டுரை. என்னுடைய சீன நண்பர்கள் சிலர் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக அமெரிக்காவிலிருந்து கூட சீனாவுக்குச் சென்றுவருகிறார்கள்.

ஷெனாய் பண்டிட் பாலேஷ் அவர்களின் பேட்டியும் நன்றாக இருந்தது. பாலேஷ் ஷெனாய், நாகஸ்வரம் இரண்டையும் வித்தியாசப்படுத்திச் சொன்னதை ரசித்தேன். (”மேலும் நாதஸ்வரம் ஸ்டுடியோ போன்ற closed space-இல் வாசிப்பதற்கான வாத்தியம் இல்லை. கோயில் பிரகாரங்கள், திருவிழாக்கள், ஊர்வலங்கள் போன்ற திறந்தவெளியிலும், இயற்கையான feedback இருக்கும் இடங்களிலும் அது கேட்பதற்கு அற்புதமாக இருக்கும்.”)

பாலேஷின் குரல் ஆரம்பகால P.B.ஸ்ரீனிவாஸ் குரலை நினைவுபடுத்தும் வகையில் அருமையாக இருக்கிறது.

ஷெனாயைப் பல்வேறு பிட்ச்களில் உபயோகப்படுத்துவதைக் குறித்து அவர் சொன்ன விஷயங்கள், எனக்கு ஷஷாங் தன் கச்சேரிகளில் பல்வேறு புல்லாங்குழல்களை லாவகமாக மாற்றி மாற்றி வாசித்ததை நினைவுபடுத்தியது. அப்படி வாசிப்பது மிகவும் கஷ்டம், ஏனென்றால் அது வேறொரு வாத்தியத்தை வேறொரு fingering-இல் வாசிப்பதைப் போன்ற விஷயம்.

பேட்டியில் கொடுக்கப்பட்ட இசைத்துணுக்குகள் அபாரமாக இருந்தன. அவற்றைக் கேட்டு நான் என் மாணவப் பருவத்துக்கே சென்றுவிட்டேன். “நானாக நானில்லை தாயே” பாட்டுக்கு நான் பாஸ் கிடார் வாசித்திருக்கிறேன். அப்போது ஷெனாய் இசைத்துணுக்கை வேறொரு தொழில்முறைக் கலைஞர் க்ளாரினெட்டில் வாசிப்பார். அது ஒரிஜினல் வாசிப்புக்கு அருகில் கூட வந்ததில்லை என்பதை கவனித்திருக்கிறேன்.

மிக நல்ல பேட்டி. ஒரு மாபெரும் கலைஞரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி.

அன்புடன்,
ஓப்லா விஸ்வேஷ்

பண்டிட் பாலேஷுடன் ஒரு மாலை

இசை மேதைகளை பற்றி மற்றுமொரு இசை மேதை சொல்லும் அனுபவங்கள் எங்கும் கிடைக்காத ஒன்று. இவர்கள் எல்லாம் தாம் மேற்கொண்ட, கைக்கொண்ட அந்த கடமையின் மேல் எத்துனை ஆழ்ந்த அக்கறையும், கடமையுணர்வும் கொண்டுள்ளனர் என்பதை காட்டியது. பெரும்பாலும் நாம் அறிந்த வரை பேட்டிகள் சுய புராணங்களாகவே அமையும் அவலங்கள்தான் இன்று நாம் காணுவது. ஆனால் இந்த இசை மேதையின் ஆழ்ந்த அனுபவங்கள் ,அவைகளை சொன்ன விதம் எல்லாம் ஒரு பேட்டிதருபவர் எப்படி தன்னை வெளிபடுத்த வேண்டும் என்ற இலக்கணத்தை நமக்கு தருகிறது. ஆங்காங்கே இளையராஜாவின் தீவிரமான கடமை உணர்வால் உண்டான இயற்கையான நகைச்சுவை என அனுபவித்துப் படித்தேன். ஒரு அரிய கோமேதகம் உங்களின் இந்த படைப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

kakkoo – Maanickam

சுகா அவர்களுக்கு,

உங்கள் கட்டுரை மிக வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை தந்தது. இடைஇடையே வரும் இசை.. நிறைய உழைப்பு!

நன்றி
நாசர்

பண்டிட் பாலேஷ் அவர்களின் நேர்காணல் அருமை.. எனது வலைப்பதிவில் அவரை சுட்டி எழுதியதும் அதை அவரே ஆமோதித்து ஒரு பின்னூட்டம் எழுதியதையும் நினைத்து இன்றும் நான் நெகிழ்கிறேன். அந்த பதிவில் மேற்கோள் காட்டிய பல துணுக்குகள் அவரும் சொன்னது ரொம்பவே மகிழ்ச்சி.

சுகாவைப் போன்ற விஷயம் தெரிந்தவர் அவரைப் பேட்டி எடுத்ததுதான் சரி. அருமையான கேள்விகள், இன்னும் பல உட்தகவல்களை கொண்ட ஒரு அறிவார்ந்த பதில்கள். இவ்வளவு ஒரு தரமான பேட்டிக்கு சுகாவுக்கு மிக்க நன்றி.

அன்புடன்
விக்கி

பாலேஷ் ‘பேட்டி’ என் ஐம்புலன்களையும் தொட்ட மல்ட்டி மீடியா அனுபவமாக இருந்தது. திரும்பத் திரும்பக் கெட்டுக்கொண்டிருக்கிறேன். சொல்வனம் போன்ற ரசனையுள்ள ஊடகத்தால்தான் இந்த மீடியாவை இப்படிப் புரிந்துகொண்டு முழுக்கப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அன்புடன்,
ராமன் ராஜா

பாலேஷ் பேட்டியும் அவரது எளிமையும் அருமை. ஒரு நல்ல பேட்டி எப்படி இருக்கலாம் என்பதற்கு பாலேஷின் பேட்டி உதாரனம். சரியான கேள்விகள். அவர் சொல்வதை இசையைப் பற்றி அறியாதோரும் தெரிந்துகொள்ள வசதியாக சம்பந்தப்பட்ட இசைத்தொகுப்புகள். கிட்டத்தட்ட ஒரு மியூசிக்கல் கிரீட்டிங் கார்டை கையில் வைத்திருப்பதைப் போன்ற மகிழ்வைத் தந்தது அந்த பேட்டி.

இதுதவிர சிறந்த கதைகளும் கட்டுரைகளும் இருக்கலாம். ஆனால் இதைப் படித்த மகிழ்வு கொஞ்ச நாள் இருக்கட்டும் என மற்றதை இன்னும் படிக்கவில்லை.

ஜெயக்குமார்

பாலேஷ் பேட்டி இதுவரை நான் படித்த பேட்டிகளிலேயே மிகச்சிறந்த ஒன்று. குறிப்பாக, அவர் பாடிக்காட்டும் இடங்களில் அவர் குரலிலேயே கேட்கும்படி ஆடியோவை இணைத்தது, பின்னணி இசைக்கு வாசித்ததை காட்சியோடு வீடியோவாகச் சேர்த்தது, ஆங்காங்கே தேவையான ஆடியோ துணுக்குகளை திரையிசையிலிருந்தும், பிஸ்மில்லா கான் கச்சேரியிலிருந்தும் சேர்த்தது… பிரமிக்க வைத்துவிட்டீர்கள்!

வாழ்க! நன்றி!

ஜே.ராபர்ட்

The recent two articles by S.Suresh in solvanam have been terrific… To be honest I am not aware of RK Sreekandan. But the Padams and jaavalis of Muktamma that he mentioned in the latest article is also one of my favorites albums. Never knew that Suresh has such a great knack of taking interviews. Following both the interviews thoroughly are very really high quality reads that I have done in a long time.. Superb!

With Love
Vicky

Courtesy my son, I have the pleasure of reading S.Suresh’s interesting essays on film music, musicians and now the article on Smt. Mukta of Brinda-Mukta; Suresh’s writing style is superb, befitting the topics he chooses.This is just to say thank you while looking forward to such more rewarding experiences.

Krishnan.

“கூட்டுக்குள் அலையும் தேனீக் கூட்டம்” நல்ல தகவல் செறிவு நிறைந்த, சுவாரஸ்யமான கட்டுரை..

இந்தியாவிலும் பண்டிகைக் காலங்களில் பயணம் செய்வது ஒரு மோசமான அனுபவம்தான்.. ஆனால் இங்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு பண்டிகை முக்கியமானதாக இருப்பதால், ஒரே நேரத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான, நாடு தழுவிய ”இடப்பெயர்வுகள்” இருப்பதில்லை.

– ஜடாயு

ப.கோலப்பன் எழுதிய ‘வெறுமை’ சிறுகதை மிக அருமை. பொதுவாகத் தமிழில் நல்ல சிறுகதைகள் அருகி வரும் காலத்தில் இது ஒரு ஆசுவாசமளிக்கும் நல்ல எழுத்து, நல்ல கதை. கதையில் வரும் விவரணைகள் அருமை.

“தாமரைக் குளத்து அட்டைகளை நினைத்தால் பயம். பகலில் மாட்டைக் குளிப்பாட்டும் போது அதன் மீது ஏறி ஒட்டிக் கொண்டு இரத்தம் குடித்து ஊதிப் போய் இருக்கும் அட்டைகளைப் பார்த்திருக்கிறேன். பிடித்து இழுத்தாலும் வராது. தீயைக் கொளுத்தி சுட்டால் கீழே விழும். இல்லையென்றால் சுண்ணாம்பை அதன் மேல் தடவ வேண்டும். குடித்த இரத்தத்தையெல்லாம் கக்கிக் கொண்டே சுருண்டு விழும்.”

இந்த விவரணைகள் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் எழுத்துகள். கோலப்பன் தொடர்ந்து சிறுகதைகள் எழுதவேண்டும்.

அன்புடன்,
ராஜேஷ்

வெறுமை சிறுகதை சங்கீத வெறுமையை வெகு அழகாகச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது. சங்கீதம் ரசிப்பவர்களுக்கு, முக்கியமாக நாதஸ்வர ரசிகர்களுக்கு இச்சிறுகதை ஒரு பொக்கிஷம். தி.ஜா எழுத்துகளைப் போல அரிதான சங்கீதப் புனைவு.

நன்றி,
ஃபிரான்சிஸ் குமார்