லாட்டரி

இச்சிறுகதையைப் பற்றிய அறிமுகம், குறும்படவடிவம், இக்கதையைப் பற்றிய எழுத்தாளர் சுஜாதாவின் எண்ணங்கள் கதையின் முடிவில் தரப்பட்டிருக்கின்றன.

கோடையின் வெம்மை புதுசாய்ப் பரவத்தொடங்கிருந்த ஜூன் 27ம் தேதியின் காலை வானம் மேகங்களில்லாமல் பளிச்சென்றிருந்தது; பூக்கள் எங்கும் மலர்ந்திருந்தன, புல் அடர் பசுமை பூண்டிருந்தது. பத்து மணி அளவில் தபால் நிலையத்துக்கும் வங்கிக்கும் இடையில் இருந்த ஊர்ப் பொதுவில் அந்த கிராமத்து மக்கள் கூடத் துவங்கினர். சில ஊர்களில் நிறைய பேர் இருந்ததால் அங்கு லாட்டரி இரண்டு நாட்கள் நடக்கும். அதனால் ஜூன் 26ம் தேதியே அதைத் துவங்க வேண்டியதிருக்கும். ஆனால் இந்தக் கிராமத்தில் முன்னூறு பேரே இருந்ததால் லாட்டரி இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான பொழுதில் நடந்து முடிந்து விடும். காலை பத்து மணிக்கு லாட்டரியைத் துவங்கினால்கூட கிராமத்தினர் மதிய உணவுக்கு வீடு திரும்ப அவகாசமிருக்கும்.

முதலில் குழந்தைகள்தான் வந்தனர், எப்போதும் போலவே. கோடை விடுமுறை அண்மையில்தான் துவங்கியிருந்தது. சுதந்திர உணர்வு அவர்களில் பலருக்கு சங்கடமான ஒன்றாக இருந்தது; கொஞ்ச நேரம் அமைதியாகக் கூடியிருப்பதும் ஆர்ப்பாட்ட விளையாட்டில் வெடித்தோடுவதுமாக இருந்தனர் அவர்கள். இன்னமும் வகுப்பறையைப் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் படிப்பு தண்டனை என்றும்தான் பேசிக் கொண்டிருந்தனர். பாபி மார்டின் அதற்குள்ளாகவே தன் பாக்கெட்டுகளில் கற்களை நிரப்பி விட்டிருந்தான். மற்ற சிறுவர்களும் அவனைப் போலவே செய்தனர். இருப்பதில் வட்டமான வழவழப்பான கற்களைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டனர். பாபியும் ஹாரி ஜோன்சும் டிக்கி டெலாக்ரோவும் (கிராமத்தினர் “டெல்லாகரோய்” என்று அந்தப் பெயரை உச்சரித்தனர்) பொதுவின் ஒரு மூலையில் பெரிய ஒரு கற்குவியலை மெல்ல மெல்ல சேர்த்து வைத்தனர். மற்ற சிறுவர்கள் அதைக் கவர்ந்து செல்லாதபடிக்கு அவர்கள் காவல் காத்தனர். தங்களுக்குள் பேசிக்கொண்டு, சிறுவர்களைத் தங்கள் தோள்களைத் தாண்டித் திரும்பிப் பார்த்தபடி சிறுமிகள் ஒதுங்கி நின்றனர். அங்கிருந்தவர்களில் மிகச் சிறியவர்கள் புழுதியில் உருண்டு புரண்டனர் அல்லது தம் அண்ணன்கள் அக்காக்களின் கைகளைப் பற்றிக்கொண்டு நின்றனர்.

சிறிது நேரத்தில் ஆண்கள் கூடலாயினர். குழந்தைகளைத் தங்கள் கண்களில் இருத்தியபடி நடவு செய்வதைப் பற்றியும் மழை, டிராக்டர்கள், வரிகள் குறித்தெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர். மூலையில் இருந்த கற்குவியலை விட்டு விலகி அவர்கள் ஒன்று கூடி நின்றனர், அமைதியாக ஜோக்கடித்தனர், சிரிப்பதைவிட முறுவலிக்கவே செய்தனர். பெண்கள், சாயம் போன வீட்டு உடைகளும், ஸ்வெட்டர்களும் அணிந்துகொண்டு, தங்கள் வீட்டு ஆண்கள் வந்த சற்றுநேரத்திலெல்லாம் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஒருவரையொருவர் வரவேற்றுக் கொண்டனர், வம்புத் தகவல்களைப் பரிமாறியபடி தங்கள் கணவர்கள் இருக்கும் இடத்தைச் சேர்ந்தனர். சிறிது நேரத்தில் அந்தப் பெண்கள், தங்கள் கணவர்களின் அண்மையில் நின்று, குழந்தைகளை அழைக்கத் துவங்கினர்.  நான்கைந்து முறை அழைக்கப்பட்டபின், குழந்தைகள் அவர்களிடம் விருப்பமில்லாமல் வந்தனர். பாபி மார்டின் தன்னைப் பிடிக்க வந்த தன் தாயின் கைகளுக்குக் கீழே குனிந்து கற்குவியலை நோக்கி சிரித்துக் கொண்டே திரும்பி ஓடினான். அவனது அப்பா குரலை உயர்த்தி அழைத்தார். பாபி உடனே வந்து தன் அப்பாவுக்கும் பெரிய அண்ணனுக்கும் நடுவில் தன் இடத்தில் வந்து நின்றான்.

ஊர்ப்பொதுவின் நடனங்கள், டீன் க்ளப், ஹாலோவீன் நிகழ்ச்சிகள்- போன்ற எல்லா சமூக நிகழ்ச்சிகளைப் போலவே லாட்டரியையும் மிஸ்டர் சம்மர்ஸ்தான் முன்னின்று நடத்தினார். அவருக்குதான் ஊர் விவகாரங்களை செயல்படுத்தத் தேவையான நேரமும் சக்தியும் இருந்தது. வட்ட முகம், சிரித்துப் பேசக் கூடியவர். அவர் நிலக்கரி வியாபாரம் செய்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லாததாலும் அவரது மனைவி வசைபாடி என்பதாலும் ஊர்க்காரர்கள் அவரைப் பார்த்து பரிதாபப்பட்டனர். அந்த கருப்பு மரப் பெட்டியுடன் அவர் ஊர்ப் பொதுவுக்கு வந்து சேர்ந்ததும் கிராம மக்கள் தாழ்குரலில் பேசத் துவங்கினர் “சற்றே தாமதமாகி விட்டது மக்களே,” என்று அவர் கையசைத்து அவர்களை விளித்தார். அவரைத் தொடர்ந்து முக்காலி ஒன்றைத் தூக்கிக் கொண்டு போஸ்ட்மாஸ்டர் மிஸ்டர் க்ரேவ்ஸ் வந்து சேர்ந்தார். அந்த முக்காலி பொதுவின் மையத்தில் வைக்கப்பட்டது. மிஸ்டர் சம்மர்ஸ் கருப்பு பெட்டியை அதன் மேல் வைத்தார். தங்களுக்கும் முக்காலிக்கும் இடையே இடைவெளி விட்டு கிராமத்தினர் எட்டி நின்றனர், “தோழர்களே, எனக்கு உதவி செய்ய உங்களில் சிலருக்கு விருப்பம் இருக்குமே?” என்று மிஸ்டர் சம்மர்ஸ் கேட்டபோது அனைவரும் தயங்கி நின்றனர். மிஸ்டர் மார்டின் மற்றும் அவரது மூத்த மகன் பாக்ஸ்டர் ஆகிய இருவரும் முன் வந்து பெட்டியை முக்காலியில் நிலையாய்ப் பிடித்துக் கொண்டனர். மிஸ்டர் சம்மர்ஸ் அதிலிருந்த காகிதங்களைக் கலக்கினார்.

லாட்டரிக்கான மூல சாமக்கிரியைகள் எப்போதோ மறக்கப்பட்டு விட்டிருந்தன. ஊரில் இருப்பவர்களில் மூத்தவரான வார்னர் தாத்தா பிறப்பதற்கு முன்னமேயே முக்காலியின் மேல் இப்போதிருக்கும் கருப்பு பெட்டி பயன்பாட்டுக்கு வந்து விட்டது. புது பெட்டி செய்ய வேண்டியிருப்பது குறித்து மிஸ்டர் சம்மர்ஸ் கிராமத்தினருடன் அடிக்கடி பேசினார், ஆனால் மரபை மீற எவரும் விரும்பவில்லை, அதன் குறியீடாய் இருக்கும் கரும்பெட்டியைக்கூட அவர்கள் மாற்ற ஒப்புவதாயில்லை. இதற்கு முன்னர் இருந்த பெட்டியின் பாகங்களைக் கொண்டு தற்போதிருக்கும் பெட்டி செய்யப்பட்டிருப்பதாக ஒரு கதை இருந்தது. அந்தப் பெட்டி இங்கு கிராமத்தை நிறுவிய மூத்த குடிகளால் செய்யப்பட்ட ஒன்று என்று சொன்னார்கள். ஒவ்வொரு ஆண்டும், லாட்டரிக்குப் பின், புதிய பெட்டியைப் பற்றி மிஸ்டர் சம்மர்ஸ் பேச்செடுப்பார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் எதுவும் செய்யாமல் அந்த விஷயம் மங்கி மறைய விட்டு விடப்படும். ஒவ்வொரு ஆண்டும் கரும் பெட்டி பழசாகிக் கொண்டிருந்தது; இப்போது அது முழுமையான கருப்பாய் இல்லை, பெட்டியின் ஒரு பக்கம் மோசமாகப் பிளவடைந்து அங்கு மரத்தின் நிறம் வெளிப்பட்டிருந்தது, சில இடங்களில் சாயம் வெளுத்திருந்தது, கறை பட்டிருந்தது.

c443மிஸ்டர் சம்மர்ஸ் காகிதங்களைத் தன் கையால் முழுசாகக் கலக்கி முடிக்கும் வரை மிஸ்டர் மார்டினும் அவரது மூத்த மகன் பாக்ஸ்டரும் கரும்பெட்டியை முக்காலியில் பத்திரமாகப் பிடித்துக் கொண்டார்கள். சடங்கின் பெரும்பகுதி மறக்கப்பட்டும் கைவிடப்பட்டுமிருந்த காரணத்தால் பரம்பரை பரம்பரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மரச் சில்லுகளுக்கு பதில் காகிதச் சிட்டைகளை மிஸ்டர் சம்மர்ஸ் வெற்றிகரமாகப் பழக்கத்துக்குக் கொண்டு வந்திருந்தார். கிராமம் மிகச் சிறியதாக இருந்தவரை மரச் சில்லுகளைப் பயன்படுத்தியது சரிதான் என்று வாதம் செய்தார் மிஸ்டர் சம்மர்ஸ் இப்போது மக்கட்தொகை முன்னூறைத் தாண்டி இன்னமும் வளர்ந்து வருவதால் கரும்பெட்டியில் இன்னும் எளிதாக அடங்கக்கூடிய எதையேனும் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்று மிஸ்டர் சம்மர்ஸ் சொல்லியிருந்தார். லாட்டரிக்கு முந்தைய நாள் இரவு மிஸ்டர் சம்மர்ஸும் மிஸ்டர் க்ரேவ்ஸும் காகிதச் சிட்டைகளை செய்து பெட்டியுள் போட்டார்கள். அதன்பின் அது மிஸ்டர் சம்மர்ஸின் நிலக்கரி கம்பெனியில் உள்ள பெட்டகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அடுத்த நாள் காலை மிஸ்டர் சம்மர்ஸ் அதை ஊர் பொதுவுக்கு எடுத்துச் செல்ல வரும்வரை பூட்டி வைக்கப்பட்டது. வருஷத்தின் மற்ற நாட்களில் அந்த பெட்டி சில சமயம் ஒரு இடத்திலும் வேறு சமயம் வேறு இடத்திலும் போட்டு வைக்கப்பட்டிருந்தது; அது ஒரு ஆண்டு மிஸ்டர் க்ரேவ்ஸின் விவாசாயக் கிடங்கில் (barn) இருந்திருக்கிறது, இன்னொரு ஆண்டு தபால் நிலையத்தில் ஒதுக்குப்புறமாக (underfoot) போட்டு வைக்கப்பட்டிருந்திருக்கிறது, சில சமயம் அது மார்டினின் மளிகைக் கடையில் ஒரு அடுக்கில் (shelf) விட்டு வைக்கப்பட்டும் இருந்திருக்கிறது.

லாட்டரி துவங்கிவிட்டது என்று மிஸ்டர் சம்மர்ஸ் அறிவிக்குமுன் ஏராளமான சில்லறை வேலைகள் (fussing) செய்யப்பட வேண்டியிருந்தன. குடும்பத்தலைவர்கள், ஒவ்வொரு குடும்பத்தின் தனிக் குடித்தனங்களின் தலைவர்கள், குடும்பங்களின் ஒவ்வொரு குடித்தனத்தின் உறுப்பினர்கள் என்று பட்டியல்கள் எழுதப்பட வேண்டியிருந்தன. போஸ்ட்மாஸ்டரால் மிஸ்டர் சம்மர்ஸ் முறைப்படி லாட்டரி நிகழ்ச்சியின் அதிகாரியாக பதவியேற்றுக்கொள்ள வேண்டியிருந்தது; ஒரு காலத்தில் லாட்டரி அதிகாரி ஜெபம் மாதிரி ஏதோ ஒன்று செய்தார் என்பது சிலருக்கு நினைவிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் லயமில்லாத ஒரு ஜெபம் ஒப்புக்கு (perfunctory) வேகமாக வாசிக்கப்பட்டது. சிலர் அந்த ஜெபத்தை சொல்லும்போதோ பாடும்போதோ குறிப்பாக இப்படித்தான் லாட்டரி அதிகாரி நின்று கொண்டிருப்பார் என்று கூட நினைத்தார்கள். சிலர் அவர் மக்களிடையே நடப்பது வழக்கம் என்று நினைவில் இருந்தார்கள். ஆனால் ஆண்டாண்டு காலங்களுக்கு முன்னமேயே சடங்கின் இந்தப் பகுதி கைவிடப்பட்டு வழக்கற்றொழிந்திருந்தது. பெட்டியில் இருந்து சீட்டெடுக்க வரும் ஒவ்வொருவரோடும் லாட்டரி அதிகாரி ஒரு குறிப்பிட்ட சடங்கு விளியைப் பயன்படுத்தி உரையாற்றும் வழக்கமும் இருந்திருந்தது. இதுவும் காலப்போக்கில் மாறி தற்போது வருகிற ஒவ்வொருவருடனும் அதிகாரி பேசினால் போதும் என்றாகி விட்டிருக்கிறது. மிஸ்டர் சம்மர்ஸ் இதையெல்லாம் நன்றாகவே செய்வார். நீல ஜீன்ஸும் தூய்மையான வெண்ணிற சட்டையும் அணிந்து அவர் தனது ஒரு கையை கரும்பெட்டியில் அலட்சியமாக வைத்தபடி மிஸ்டர் க்ரேவ்ஸுடனும் மார்டின்களுடனும் ஓயாமல் பேசும்போது அவரிடம் தகுந்த அதிகாரமும் முக்கியத்துவமும் மேலோங்கிய தோற்றம் தென்பட்டது.

மிஸ்டர் சம்மர்ஸ் ஒரு வழியாக பேச்சை முடித்துக்கொண்டு கூடியிருந்த கிராமத்தினரை நோக்கித் திரும்பும் நேரத்தில் மிசர்ஸ் ஹட்சின்சன் ஊர்ப் பொதுவுக்கான பாதையில் அவசர அவசரமாக ஒடி வந்தாள். அவள் ஸ்வெட்டரைத் தனது தோள்களைச் சுற்றி போட்டிருந்தாள். கூட்டத்தின் பின்புறத்தில் தனக்குரிய இடத்தில் நுழைந்து கொண்டாள். தன்னருகே நின்ற மிசர்ஸ் டெலாக்ரோவிடம் அவள், “இன்றைக்கு என்ன நாள் என்பதை சுத்தமாக மறந்தே விட்டேன்,” என்று சொன்னாள், இருவரும் மெல்ல சிரித்தனர். “அவர் வீட்டின் பின்பக்கத்தில் (புழக்கடையில்) விறகு அடுக்கிக் கொண்டிருக்கிறார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்,” என்று தொடர்ந்தாள் மிசர்ஸ் ஹட்சின்சன். “பிறகு நான் சன்னல் வழியே பார்த்தேன், குழந்தைகளைக் காணோம், அப்புறம்தான் எனக்கு இன்று இருபத்து ஏழாம் தேதி என்பது நினைவுக்கு வந்தது, இங்கே ஓடி வந்தேன்”. அவள் தனது கைகளை மேலங்கியில் துடைத்துக் கொண்டாள், மிசர்ஸ் டெலாக்ரோ சொன்னாள், “இருந்தாலும் நீ நேரத்துக்குத்தான் வந்திருக்கிறாய். அவர்கள் இன்னமும் அங்கே மேலே பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.”

மிசர்ஸ் ஹட்சின்சன் கூட்டத்தினூடே பார்க்க முனைந்தவளாய்த் தன் கழுத்தை நீட்டி தன் கணவனும் குழந்தைகளும் முன்புறத்தில் நின்று கொண்டிருப்பதைத் தேடிக் கண்டுபிடித்து விட்டாள். தான் விடைபெறுவதைக் குறிக்கும் வகையில் மிசர்ஸ் டெலாக்ரோவின் கரத்தில் தட்டிவிட்டு கூட்டத்தின் உட்புகுந்து தனக்கு வழி செய்து கொள்ளத் துவங்கினாள். சிரித்த முகத்துடன் அவளுக்கு வழி விட்டுப் பிரிந்தனர் அங்கு கூடியிருந்தவர்கள்: கூட்டத்தில் இருப்பவர்களின் காதில் விழுமளவுக்கு உரத்த குரல்களில், இரண்டு மூன்று பேர் “இதோ உங்கள் மிசர்ஸ் ஹட்சின்சன் வந்து விட்டார்கள்,” என்றும், “பில் அவள் ஒரு வழியாக வந்து விட்டாள்,” என்றும் சொன்னார்கள். மிசர்ஸ் ஹட்சின்சன் தன் கணவனை அடைந்தாள். அதுவரை காத்துக் கொண்டிருந்த மிஸ்டர் சம்மர்ஸ் சிரித்துக் கொண்டே, “டெஸ்ஸி, நீ இல்லாமல் நாங்கள் துவங்க வேண்டி வந்துவிடும் என்று நான் நினைத்தேன்,” என்று சொன்னார். மிசர்ஸ் ஹட்சின்சன் வாயெல்லாம் சிரிப்பாக, “ஜோ, நான் ஸிங்கில் என் பாத்திரங்களைப் போட்டது போட்டபடி விட்டு வருவதை நீ ஏற்றுக் கொள்வாயா என்ன?” என்று கேட்டாள். ஒரு மெல்லிய சிரிப்பு கூட்டத்தினூடே பரவியது, கூட்டத்தினர் மிசர்ஸ் ஹட்சின்சனின் வருகையையொட்டி மீண்டும் நகர்ந்து தத்தம் இடங்களில் நின்றனர்.

“சரி,” என்று மிஸ்டர் சம்மர்ஸ் உறுதியான குரலில் சொன்னார், “இனி நாம் துவங்கலாம், இதை முடித்து விடுவோம், நம் அடுத்த வேலையைப் பார்க்கப் போக வேண்டும். இங்கே இல்லாதவர்கள் யாராவது உண்டா?”

“டன்பார்,” என்றனர் சிலர், “டன்பார், டன்பார்.”

மிஸ்டர் சம்மர்ஸ் தன் பட்டியலை சரி பார்த்தார். “க்ளைட் டன்பார்,” என்று அவர் சொன்னார். “ஆமாம். அவன் தன் காலை உடைத்துக் கொண்டு விட்டான், இல்லையா? அவனுக்காக யார் சீட்டெடுக்கப் போகிறார்கள்?”

“நான்தான் சீட்டெடுக்க வேண்டியிருக்கும்,” என்று ஒரு பெண் சொன்னாள், மிஸ்டர் சம்மர்ஸ் அவளைப் பார்க்கத் திரும்பினாள். “கணவனுக்காக மனைவி சீட்டெடுக்கப் போகிறாள்,” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ். “ஜேனி, இதைச் செய்ய உனக்கு வளர்ந்த மகன் இல்லை?” மிஸ்டர் சம்மர்ஸுக்கும் கிராமத்தில் இருந்த மற்றவர்கள் அனைவருக்கும் பதில் நன்றாகவே தெரிந்திருந்தாலும் இவ்வகையான கேள்விகளை முறைப்படி கேட்கவேண்டியது லாட்டரி அதிகாரியின் வேலை. மிசர்ஸ் டன்பார் பதில் சொல்கையில் மிஸ்டர் சம்மர்ஸ் தன்மையான ஆர்வம் காட்டும் முகத்துடன் (expression of polite interest) காத்திருந்தார்.

“ஹோரேஸுக்கு இன்னும் பதினாறு ஆகவில்லை,” என்று வருத்தத்துடன் சொன்னாள் மிசர்ஸ் டன்பார். “அவருக்காக இந்த வருடம் நான்தான் இதைச் செய்தாக வேண்டுமென்று நினைக்கிறேன்”

“சரி,” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ். அவர் தான் வைத்திருந்த பட்டியலில் குறிப்பெழுதிக் கொண்டார். பின்னர், “வாட்சனின் மகன் இந்த ஆண்டு சீட்டெடுக்கிறானா?” என்று கேட்டார் அவர்.

உயரமாக இருந்த ஒரு பையன் கூட்டத்தில் தன் கையை உயர்த்தினான். “இங்கே இருக்கிறேன்,” என்றான் அவன். “என் அம்மாவுக்கும் எனக்குமாக நான் சீட்டெடுக்கிறேன்.” அவன் தன் கண்களை கவலையுடன் இமைத்தான், கூட்டத்தில் இருந்த சில குரல்கள் “ஜாக் நல்ல ஆள்தான்,” என்றும் “இதை செய்ய உன் அம்மாவுக்கு ஒரு ஆண்மகன் இருக்கிறான் என்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது,” என்றும் சொல்லக் கேட்டு அவன் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

“சரி,” என்றாள் மிஸ்டர் சம்மர்ஸ், “எல்லாரும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கிழவர் வார்னர் வந்திருக்கிறாரா?”

“இங்கே இருக்கிறேன்,” என்றது ஒரு குரல், மிஸ்டர் சம்மர்ஸ் தலையசைத்து ஆமோதித்தார்.

மிஸ்டர் சம்மர்ஸ் தன் தொண்டையை செருமி பட்டியலைப் பார்த்ததும் கூட்டத்தில் ஒரு திடீர் அமைதி கவிந்தது. “எல்லாரும் தயாரா?” என்று அவர் கேட்டார். “இப்போது நான் பெயர்களைப் படிக்கப் போகிறேன் – குடும்பத் தலைவர்களின் பெயர்களை முதலில் படிக்கிறேன் – ஆண்கள் வந்து பெட்டியிலிருந்து ஒரு காகிதத்தை எடுக்க வேண்டும். அனைவரின் முறையும் முடியும் வரை உங்கள் கையில் உள்ள காகிதத்தைப் பிரிக்காமல் மடித்து வைத்திருக்க வேண்டும். எல்லாம் தெளிவாகப் புரிந்ததா?”

இதை ஏராளமான முறை செய்திருப்பதால் மக்கள் அவரது செயல்முறைக் குறிப்புகளை அரைகுறையுமாகவே செவித்தனர்: அவர்களில் பெரும்பாலானவர்கள் வைத்த கண் வாங்காமல் தங்கள் உதடுகளை ஈரப்படுத்தியபடி அமைதியாக இருந்தனர். அடுத்து மிஸ்டர் சம்மர்ஸ் ஒரு கையை உயர்த்தி, “ஆடம்ஸ்,” என்றார். கூட்டத்திலிருந்து ஒருவன் பிரிந்து முன் வந்தான். “ஹி ஸ்டீவ்,” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ். மிஸ்டர் ஆடம்ஸ், “ஹி ஜோ” என்றார். அவர்கள் சிரிக்காமல் ஒருவரைப் பார்த்தொருவர் புன்னகைத்துக் கொண்டனர். அடுத்து மிஸ்டர் ஆடம்ஸ் கரும்பெட்டியுள் கையை விட்டு மடித்த காகிதம் ஒன்ற வெளியே எடுத்தார். அதன் ஒரு முனையை திட்டமாகப் பற்றியபடி அவர் திரும்பி கூட்டத்தில் தன் இடத்துக்கு வேகமாகச் சென்றார். அங்கே அவர் தன் கையைக் குனிந்து பார்க்காமல் தன் குடும்பத்தை விட்டு சற்றே விலகி நின்றார்.

“ஆலன்,” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ். “ஆண்டர்சன்… பென்தாம்”

“இப்போதெல்லாம் லாட்டரிகளுக்கிடையே காலம் போவதே தெரிவதில்லை,” என்று பின் வரிசையில் இருந்த மிசர்ஸ் டெலாக்ரோ மிசர்ஸ் க்ரேவ்ஸிடம் சொன்னாள்.

“நேரம் வேகமாகத்தான் போகிறது” என்று சொன்னாள் மிசர்ஸ் க்ரேவ்ஸ்.

“க்ளார்க்… டெலாக்ரோ”

“அதோ போகிறார் என்னவர்,” என்றால் மிசர்ஸ் டெலாக்ரோ. அவளது கணவன் முன் சென்றார், அவள் மூச்சு விடாதிருந்தாள்.

“டன்பார்,” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ், மிசர்ஸ் டன்பார் நடுக்கமில்லாமல் பெட்டிக்குச் சென்றாள், அப்போது ஒரு பெண், “போ, ஜேனி,” என்றாள், “அதோ அவள் போகிறாள்.”

“அடுத்தது நாம்தான்,” என்றாள் மிசர்ஸ் க்ரேவ்ஸ். பெட்டியின் பக்கவாட்டிலிருந்து மிஸ்டர் க்ரேவ்ஸ் சுற்றிவந்து மிஸ்டர் சம்மர்ஸை காத்திரமான குரலில் வாழ்த்தி பெட்டியில் இருந்து ஒரு காகிதத்தைத் தேர்ந்தெடுப்பதை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது கூட்டமெங்கும் ஆண்கள் தங்கள் அகலமான கைகளில் சிறிதாக மடித்து வைத்திருந்த காகிதங்களை மென்கவலையுடன் திருப்பித் திருப்பிப் பார்த்தபடி பற்றி நின்றனர்.

“ஹர்பர்ட்… ஹட்சின்சன்”

“மேலே போ பில்,” என்றாள் மிசர்ஸ் ஹட்சின்சன், அவளருகே இருந்தவர்கள் சிரித்தனர்.

“ஜோன்ஸ்”

“வடக்கே இருக்கிற கிராமத்தில் லாட்டரியை நிறுத்திவிடப் போவதாகக் பேசிக் கொள்கிறார்களாம்” என்றார் மிஸ்டர் ஆடம்ஸ் தன்னருகே நின்றிருந்த வார்னர் தாத்தாவிடம்.

வார்னர் தாத்தா ஹூங்காரம் செய்தார். “பைத்தியக்கார முட்டாள்கள் கூட்டம்,” என்றார் அவர். “இந்த சின்னப் பசங்கள் சொல்வதைக் கேட்டால் அவர்களுக்கு எதுவும் திருப்தி கொடுக்காது போலிருக்கிறது. அடுத்தது என்ன செய்வார்கள் தெரியுமா, குகைகளுக்குப் போக வேண்டும் என்பார்கள். யாரும் வேலை செய்ய வேண்டாம். அப்படியே கொஞ்ச காலம் வாழலாம். ஒரு பழமொழி இருந்தது, “ஜூனில் லாட்டரி அடுத்து சோளம் சாகுபடி” (‘Lottery in June, corn be heavy soon.’). அடுத்தது என்ன ஆகும் தெரியுமா நாம் சிக்வீட்களையும் அகார்ன்களையும் அவித்து சாப்பிடப் போகிறோம். (eating stewed chickweed and acorns.). லாட்டரி எப்போதும் இருந்திருக்கிறது,” என்றார் அவர் கொஞ்சம் கோபமாக (petulant). “ஜோ சம்மர்ஸ் அங்கே எல்லாரோடும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கவே சகிக்கவில்லை”

“சில இடங்களில் லாட்டரியை ஏற்கனவே நிறுத்தி விட்டார்கள்” என்றார் மிசர்ஸ் ஆடம்ஸ்.

“அதனால் கஷ்டத்தைத் தவிர வேறொன்றும் பயனில்லை,” என்று பிடிவாதமாக சொன்னார் வார்னர் தாத்தா. “பைத்தியக்கார முட்டாள்கள் கூட்டம்,”

“மார்டின்.” பாபி மார்டின் தன் அப்பா முன் செல்வதைப் பார்த்தான். “ஓவர்டைக்… பெர்ஸி”

“சீக்கிரம் முடித்து விட்டால் நன்றாக இருக்கும்,” என்றாள் மியார்ஸ் டன்பார் தன் மூத்த மகனிடம், “சீக்கிரம் முடித்து விட்டால் நன்றாக இருக்கும்.”

“அவர்கள் முடிக்கப் போகிறார்கள்,” என்றான் அவளுடைய மகன்.

“அப்பாவிடம் ஓடிப் போய் சொல்லத் தயாராய் இரு,” என்றாள் மிசர்ஸ் டன்பார்

மிஸ்டர் சம்மர்ஸ் தன் பெயரையே அழைத்துக் கொண்டு துல்லியமாக முன்வந்து பெட்டியிலிருந்து ஒரு சிட்டியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். அதன் பின் அவர் அழைத்தார், “வார்னர்.”

“எழுபத்து ஏழு ஆண்டுகளாக நான் இந்த லாட்டரியில் இருக்கிறேன்,” என்று சொல்லிக் கொண்டே கூட்டத்தினூடே சென்றார் வார்னர் தாத்தா. “எழுபத்து ஏழாவது தடவை.”

“வாட்சன்” உயரமான அந்த சிறுவன் தடுமாறி முன்வந்தான் கூட்டத்தினூடே. “பயப்படாதே ஜாக்,” என்று யாரோ சொன்னார்கள். மிஸ்டர் சம்மர்ஸ், “உனக்கு வேண்டிய நேரம் எடுத்துக் கொள்ள மகனே,” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ்.

“ஜனினி”

அதன் பின் நீண்ட நேரம் மௌனம் நிலவியது, மூச்சற்ற மௌனம். கையில் காகிதச் சிட்டையைக் காற்றில் உயர்த்திப் பிடித்தபடி மிஸ்டர் சம்மர்ஸ், “சரி, தோழர்களே,” என்றார். ஒரு நிமிடம் யாரும் அசையவில்லை. அதன்பின் அனைத்து காகிதச் சிட்டைகளும் பிரிக்கப்பட்டன. திடீரென்று பெண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பேசத் துவங்கினர், “யார் அது?”, “யாருக்குக் கிடைத்தது?” “டன்பார்களா அது?” “வாட்சன்களா?” என்று பேசிக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்தெழுந்த குரல்கள், “ஹட்சின்சன்கள். பில்”, “பில்லுக்குக் கிடைத்து விட்டது” என்று சொல்லத் துவங்கின.

“போய் உன் அப்பாவிடம் சொல்,” என்று மிசர்ஸ் டன்பார் தன் மூத்த மகனிடம் சொன்னாள்.

சுற்றும் முற்றும் ஹட்சின்சன்களைத் தேடிப் பார்க்கத் துவங்கினர். பில் ஹட்சின்சன் மௌனமாக நின்றுக் கொண்டிருந்தார், தன் கையில் இருந்த காகிதத்தை வெறித்தபடி. திடீரென்று டெஸ்ஸி ஹட்சின்சன் மிஸ்டர் சம்மர்ஸைப் பார்த்து கத்தினாள். “அவர் விரும்பிய காகிதத்தை எடுக்கும் அவகாசத்தை நீங்கள் தரவில்லை. நான் பார்த்தேன். இது நியாயமே இல்லை!”

“நல்லபடி எடுத்துக்கொள் டெஸ்ஸி,” என்று சொன்னாள் மிசர்ஸ் டெலாக்ரோ, மிசர்ஸ் க்ரேவ்ஸ் “நம்மெல்லாருக்கும் சம வாய்ப்பு கிடைத்ததே” என்று சொன்னாள்.

“டெஸ்ஸி, வாயை மூடு,” என்றார் பில் ஹட்சின்சன்.

“சரி, எல்லாரும் கேளுங்கள், ” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ், “வெகு விரைவிலேயே முடித்து விட்டோம், இப்போது நாம் இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்தால் நேரத்தில் முடித்து விடலாம்”. அவர் தன்னிடமிருந்த அடுத்த பட்டியலை சரி பார்த்தார். “பில்,” என்றார் அவர், “ஹட்சின்சன் குடும்பத்துக்காக நீ சீட்டு எடு. ஹட்சின்சன்களில் வேறு ஏதாவது குடித்தனங்கள் உண்டா?”

“டானும் ஈவாவும் இருக்கிறார்கள்.” என்று உரக்கச் சொன்னாள் மிசர்ஸ் ஹட்சின்சன். “அவர்களும் தங்களுக்கிற வாய்ப்பைப் பார்க்கட்டும்”

“பெண்கள் தங்கள் கணவர்களின் குடும்பங்களுடன் சீட்டு எடுக்கிறார்கள், டெஸ்ஸி,” என்று தன்மையாக சொன்னார் மிஸ்டர் சம்மர்ஸ். “இது உனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதானே”

“இதில் நியாயமில்லை” என்றால் டெஸ்ஸி.

“இல்லை ஜோ” என்று வருத்தமாக சொன்னார் பில் ஹட்சின்சன். “என் பெண் தன் கணவரின் குடும்பத்துடன் சீட்டு எடுக்கிறாள்; அதுதான் நியாயம். எனக்கு என் குழந்தைகளைத் தவிர்த்து வேறு குடும்பம் கிடையாது”

“அப்படியானால், குடும்பங்களின் சார்பாக சீட்டு எடுப்பது என்ற வகையில், நீதான் சீட்டு எடுத்திருக்கிறாய்” என்று விளக்கினார் மிஸ்டர் சம்மர்ஸ், “குடித்தனங்களின் சார்பாக சீட்டு எடுப்பது என்ற வகையிலும் நீதான் செய்ய வேண்டும். சரியா?”

“சரி” என்றார் பில் ஹட்சின்சன்.

“எத்தனை குழந்தைகள் பில்?” என்று முறைப்படி கேட்டார் மிஸ்டர் சம்மர்ஸ்.

“மூன்று” என்றார் பில் ஹட்சின்சன்.

“பில் ஜூனியர், நான்சி, சின்னவன் டேவ். டெஸ்ஸியும் நானும் இருக்கிறோம்”

“அப்படியானால் சரி,” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ். “ஹாரி, அவர்களுடைய டிக்கெட்டுகளை திரும்ப வாங்கி விட்டாயா?””

மிஸ்டர் க்ரேவ்ஸ் தலையசைத்தார், தன் கையில் இருந்த காகித சிட்டைகளை உயர்த்திக் காட்டினார். “சரி, அவற்றைப் பெட்டியில் போடு” என்று உத்தரவு கொடுத்தார் மிஸ்டர் சம்மர்ஸ். “பில்லுடையதை எடுத்து உள்ளே போடு”

“நாம் மறுபடியும் முதலில் இருந்து துவங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்றாள் மிசர்ஸ் ஹட்சின்சன், எவ்வளவு அமைதியாக இதைச் சொல்ல முடியுமா அவ்வளவு அமைதியாகச் சொன்னாள். “இது நியாயமே இல்லை என்று நான் சொல்கிறேன். நீங்கள் அவருக்குத் தேர்ந்தெடுக்கத் தேவையான அவகாசம் தரவில்லை. எல்லாரும் பார்த்தீர்கள்”

மிஸ்டர் க்ரேவ்ஸ் ஐந்து சிட்டைகளையும் தேர்ந்தெடுத்து பெட்டியில் போட்டார். அவற்றைத் தவிர ஏனைய காகிதங்களைக் கீழே போட்டார், காற்று அவற்றைத் தன் கையில் ஏந்தித் உயரத் தூக்கிச் சென்றது.

“எல்லாரும் கேளுங்கள்,” மிசர்ஸ் ஹட்சின்சன் தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ரெடியா பில்?” என்று கேட்டார் மிஸ்டர் சம்மர்ஸ். விரைவாகத் தன் பார்வையை ஓட்டித் தன் மனைவியையும் குழந்தைகளையும் பார்த்து விட்டு பில் ஹட்சின்சன் ஆமோதிக்கும் வகையில் தலையசைத்தார்.

“நினைவிருக்கட்டும்,” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ். “எல்லாரும் எடுத்து முடிக்கிற வரை நீங்கள் எடுக்கிற காகித சிட்டைகளை மடித்தே வைத்திருக்க வேண்டும். ஹாரி, சின்னவன் டேவுக்கு நீ உதவி செய்.” மிஸ்டர் க்ரேவ்ஸ் அந்த சிறு பையனின் கையைப் பற்றிக் கொண்டார், அவன் எந்த தயக்கமும் இல்லாமல் அவருடன் பெட்டிக்கு வந்தான். “பெட்டியில் இருந்து ஒரு காகிதத்தை எடு, டேவி” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ். டேவி தன் கையை பெட்டிக்குள் விட்டு சிரித்தான். “ஒரே ஒரு காகிதத்தை மட்டும் எடு” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ். “ஹாரி, அவனுக்காக நீ அதை வைத்துக் கொள்”. மிஸ்டர் க்ரேவ்ஸ் சிறுவனின் கையைப் பிடித்து அவனது இறுகிய கரங்களில் இருந்து மடிக்கப்பட்ட காகிதத்தை அகற்றித் தன் கையில் வைத்துக் கொண்டார். சின்னவன் டேவ் அவரருகில் எதுவும் புரியாதவனாக அவரை நிமிர்ந்து பார்த்தபடி நின்றான்.

“அடுத்தது நான்சி” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ். நான்சியின் வயது பன்னிரெண்டு, அவள் தன் ஸ்கர்ட் அசைய முன்செல்கையில் அவளுடைய பள்ளி நண்பர்கள் பெருமூச்சு விட்டனர். “பில் ஜூனியர்” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ், சிவந்த முகத்துடன், அகன்ற பாதங்களுடன் வந்த பில்லி தன் காகிதத்தை எடுக்கும்போது பெட்டியைத் தட்டியே விட்டிருப்பான். “டெஸ்ஸி” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ். அவள் ஒரு நிமிடம் தயங்கினாள், தன் எதிர்ப்பைத் தெரிவிக்கிற மாதிரி தன்னைச் சுற்றிப் பார்த்தாள், பின்னர் பல்லைக் கடித்துக் கொண்டு பெட்டிக்குப் போனாள். அதிலிருந்து ஒரு காகிதத்தை வெடுக்கென்று எடுத்து தனக்குப் பின்னால் வைத்துக் கொண்டாள்.

“பில்” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ். பில் ஹட்சின்சன் பெட்டிக்குள் கையை விட்டுத் துழாவினார், முடிவில் காகிதச் சிட்டை வைத்திருந்த தன் கையை வெளியில் எடுத்தார்.

கூட்டம் அமைதியாக இருந்தது. ஒரு பெண் மெல்லிய குரலில் “அது நான்சியாக இருக்கக் கூடாது” என்று சொன்னாள், அவள் சொன்னது கூட்டத்தின் விளிம்புகளைச் சென்றடைந்தது.

“முன் இருந்த மாதிரி இப்போதெல்லாம் இல்லை” என்றார் வார்னர் தாத்தா தெளிவாக, “முன் இருந்த மாதிரி இப்போது இருக்கிறவர்கள் இல்லை.”

“சரி,” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ். “காகிதங்களைப் பிரிப்போம். ஹாரி, நீ சின்னவன் டேவின் காகிதத்தைப் பிரி.”

மிஸ்டர் க்ரேவ்ஸ் காகிதச் சிட்டையைப் பிரித்தார். அவர் அதை உயர்த்திக் காட்டினார். கூட்டத்தில் ஒரு பெருமூச்சு பரவிச் சென்றது. அது வெற்றுக் காகிதமாக இருந்ததை அனைவராலும் பார்க்க முடிந்தது. நான்சியும் பில் ஜூனியரும் ஒரே சமயத்தில் தங்கள் காகிதங்களைப் பிரித்துக் காட்டினர், இருவரும் வாயெல்லாம் பல்லாய் சிரித்தனர்- தங்கள் கைகளில் இருந்த காகித சிட்டைகளைத் தலைக்கு மேல் ஏந்திப் பிடித்தபடி கூட்டத்தைச் சுற்றித் திரும்பி நின்றனர்.

“டெஸ்ஸி,” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ். யாரும் பேசவில்லை, மிஸ்டர் சம்மர்ஸ் பில் ஹட்சின்சனைப் பார்த்தார், பில் தன் காகிதத்தைப் பிரித்துக் காட்டினார். அது வெற்றுத் தாளாய் இருந்தது.

“டெஸ்ஸிதான்,” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ். அவருடைய குரல் அடங்கியிருந்தது. “அவளது காகிதத்தைக் காட்டு பில்.”

பில் ஹட்சின்சன் தன் மனைவிடம் சென்று அவளது கரத்திலிருந்த காகிதச் சிட்டையை வலுக்கட்டாயமாகப் பிரித்து எடுத்தார். அதில் ஒரு கருப்பு புள்ளி இருந்தது. அதைத் தனது நிலக்கரி கம்பெனி அலுவலகத்தில் ஒரு அடர்த்தியான பென்சிலைக் கொண்டு முந்தைய நாள் இரவுதான் மிஸ்டர் சம்மர்ஸ் வரைந்திருந்தார். பில் ஹட்சின்சன் அதை உயர்த்திக் காட்டினார், கூட்டத்தில் ஒரு சலனம் எழுந்தடங்கியது.

“சரி மக்களே,” என்றார் மிஸ்டர் சம்மர்ஸ். “சீக்கிரம் முடிப்போம்.”

கிராமத்தினருக்கு சடங்கு மறந்திருந்தாலும், முதலில் இருந்த கரும்பெட்டியைத் தொலைத்திருந்தாலும் அவர்களுக்குக் கற்களை உபயோகிக்கும் விதத்தை மறந்திருக்கவில்லை. சிறுவர்கள் முன்பு உருவாக்கியிருந்த கற்குவியல் தயாராக இருந்தது. தரையிலும் கற்கள் இருந்தன. அவற்றுக்கருகே பெட்டியிலிருந்து வந்த காகிதத் துண்டுகள் பறந்துகொண்டிருந்தன. இரண்டு கைகளாலும் தூக்கவேண்டிய அளவுக்குப் பெரிய கல்லைப் பொறுக்கி எடுத்த மிசர்ஸ் டெலாக்ரோ, மிசர்ஸ் டன்பாரைப் பார்த்து, “வா, சீக்கிரம்” என்று அவசரப்படுத்தினாள்.

மிசர்ஸ் டன்பார் தன் இரு கைகளிலும் சிறு கற்கள் வைத்திருந்தாள். அவள் மூச்சிரைத்தபடி சொன்னாள், “என்னால் ஓட முடியாது. நீங்கள் முன்னே செல்லுங்கள், நான் பின்னால் வந்து சேர்ந்து கொள்கிறேன்.”

குழந்தைகள் அதற்குள் கற்களோடு தயாராக இருந்தனர். யாரோ ஒருவர் சின்னவன் டேவி ஹட்சின்சனிடம் சில கூழாங்கற்களைக் கொடுத்தார்.

டெஸ்ஸி ஹட்சின்சன் இப்போது காலி செய்யப்பட்ட வெளியின் மையத்தில் இருந்தாள், செய்வகை அறியாதவளாய் (desperately) அவள் தன் கைகளை நீட்டி நின்றாள். “இது நியாயமில்லை,” என்றாள் அவள். ஒரு கல் அவளது தலையின் பக்கவாட்டுப் பகுதியில் விழுந்தது. வார்னர் தாத்தா, “வாருங்கள், வாருங்கள், எல்லாரும் வாருங்கள்,” என்று சொல்லிக் கொண்டிருந்தார். கிராமத்து மக்கள் கூட்டத்தின் தலைமையில் ஸ்டீவ் ஆடம்ஸ் இருந்தான், அவனருகே மிசர்ஸ் க்ரேவ்ஸ் இருந்தாள்.

“இது அநியாயம், இது அநியாயம்,” என்று அலறினாள் மிசர்ஸ் ஹட்சின்சன். அதையடுத்து அவர்கள் கற்களை அவள் மேல் எறியத் தொடங்கினர்.

(முற்றும்)

200full-shirley-jacksonஷெர்லி ஜாக்ஸன் – Shirley Jackson (1916 – 1965) ஒரு அமெரிக்கப் புனைகதை எழுத்தாளர். இப்போது பிரபலமாக இருக்கும் பல அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் ஆதர்சமாக விளங்கியவர். இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ‘லாட்டரி’ (The Lottery) என்ற சிறுகதை, அவருடைய மிகப் பிரபலமான சிறுகதையாகும். மனிதர்களைக் கல்லெறிந்து கொல்லும் ஒரு பழமையான சடங்கை நவீன உலகின் பின்னணியில் மீண்டும் கதையாகச் சொன்னதன் மூலம் மக்களிடையே நிலவிய தேவையற்ற குரூரம், மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளைக் கதையாக்கியதாகச் சொல்லியிருக்கிறார் ஷெர்லி ஜாக்ஸன். 1948-இல் இச்சிறுகதை ‘தி நியூயார்க்கர்’ பத்திரிகையில் வெளிவந்தபோது, பலத்த கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளானது. பலர் ’தி நியூயார்க்கர்’ பத்திரிகையின் சந்தாவை ரத்து செய்தார்கள். தென்னாப்பிரிக்காவில் இச்சிறுகதை தடைசெய்யப்பட்டது. வெகுஜன வாசகர்களின் ஆரம்ப அதிர்ச்சி நீங்கி, மனிதர்களின் வன்முறை மனோபாவத்தை விமர்சிக்கும் இக்கதையின் கோணம் வெளிச்சம் பெற்றபின், இன்றும் இச்சிறுகதை அமெரிக்காவின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. இப்போது பள்ளிகளில் இது பாடமாக வைக்கப்பட்டுள்ளது. பலமுறை திரைவடிவமும் பெற்றிருக்கிறது. மனிதர்களைப் பொதுவில் கல்லெறிந்து கொல்லும் வழக்கம் 1940களில் ஒரு புனைவாகச் சொல்லப்பட்டதற்கே இத்தனை கொந்தளிப்பு ஏற்பட்டாலும், இன்றும் உலகின் சில பகுதிகளில் இக்கொடும்பழக்கம் நிலவுவதையும், அதை அப்பகுதி மக்கள் கூடி நின்று பார்த்து ரசிப்பதையும் எப்படி அணுகுவதென்று புரியவில்லை.

இச்சிறுகதையைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா எழுதியிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகள் கீழே. நன்றி: சுஜாதா தேசிகன்.

ஒரே சிறுகதையால் உலகப் புகழ்பெற்றவர் என்றால் அமெரிக்காவைச் சேர்நத ஷர்லி ஜாக்ஸன் தான்(1919-1965). அவர் எழுதிய ‘லாட்டரி’ என்னும நிஜமாகவே சிறிய சிறுகதை பலமுறை தொகுக்கப்பட்டு பலமொழிகளில் பெயர்க்கப்பட்டு நாடகமாக, டெலிவிஷனாக ஏன் பாலே நடனமாகக்கூட நடிக்கப்பட்டு, பல கோணங்களில் விவாதிக்கப்பட்ட இந்தக் கதை முதலில் 1948ல் வெளிவந்தபோது, அமெரிக்க நாடே பலவிதங்களில் கண்டனம் தெரிவித்து, அதைப் பிரசுரித்த நியுயார்க்கர் பத்திரிகையை கண்டபடி திட்டினார்கள். முற்றிலும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி முடிவைக் கொண்ட இந்தக் கதை ஆயிரக்கணக்கான வாசகர்களை சங்கடம் பண்ணியது. இந்தக்கதையின் ஆழக்கருத்து என்ன என்று பலபேர் யோசித்திருக்கிறார்கள்.

ஆசிரியையே கேட்டபோது “என்ன என்று விளக்கம் கூறுவது? கதையில் என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் என்று விளக்குவது கஷ்டம். ஒரு மூர்க்கத்தனமான புராதனப் பழக்கத்தை தற்காலத்தில் என் சொந்த கிராமத்தில் அமைத்து வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இன்றைய தினங்களின் அர்த்தமில்லாத வன்முறைகளையும் அவரவர் வாழ்க்கையில் உள்ள மனிதாபிமானமற்ற செயல்களையும் சுட்டிக் காட்ட முயற்சித்தேன்” என்றார்.

‘பாலம்’ என்கிற கதை எழுதியபோது எனக்கு சிறிய அளவில் இந்த மாதிரியான ஒரு எதிர் விளைவு ஏற்பட்டது. குறிப்பாக கோவையிலிருந்து ஒருவர் ‘அந்தக்கதையைப் படித்ததும் உன்னையே கொல்ல வேணும் போலிருக்கிறது. வரவா?” என்று எழுதியிருந்தார்.

2007-ஆம் ஆண்டு இச்சிறுகதையை அகஸ்டின் கென்னடி ஒரு குறும்படமாக இயக்கினார். பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்ட இக்குறும்படத்தை கீழே பார்க்கலாம்.