மகரந்தம்

பலூச்சிகள் மீது பாகிஸ்தான் தொடுக்கும் ரகசியப் போர்

பலுசிஸ்தானியர்கள் பாகிஸ்தானின் பஞ்சாபி இஸ்லாமிஸ்டுகளின் பேராதிக்கத்தை எதிர்த்துப் பல பத்தாண்டுகளாகப் போராடி வருகின்றனர். அங்கு பாகிஸ்தான் மறைமுகமாக பலுசிஸ்தானின் படித்த மக்களில் பலரை ஆண்டுதோறும் கொன்று வருகின்றன. இது குறித்த உண்மைத் தகவல்கள் பாகிஸ்தானில் உள்ள ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. நூற்றுக்கணக்கானவர்கள் வதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட போதிலும் இதுவரை ஒருவர் கூட குற்றம் சாட்டப்படவோ கைது செய்யப்படவோ இல்லை. பாகிஸ்தானுக்கு எதிராக பிரிவினைக் குரல் எழும்பும் இந்த கனிம வளம் மிகுந்த மாகாணத்தில் அரசு நிகழ்த்தும் நிழல் யுத்தம் குறித்து இந்திய ஊடகங்களும் மௌனமாகவே இருக்கின்றன. கார்டியன் பத்திரிக்கை பலுசிஸ்தான் நிகழ்வுகள் குறித்து விரிவான கட்டுரை ஒன்று பதிப்பித்திருக்கிறது.

http://www.guardian.co.uk/world/2011/mar/29/balochistan-pakistans-secret-dirty-war

பெல்ஜியத்தில் விநோதம்

ஐரோப்பிய வரலாற்றில் பெல்ஜியர்களின் நிலை விசித்திரமான ஒன்று. ஃப்ளெமிஷ் (கிட்டத் தட்ட 60 சதவீதம் மக்கள்), ஃப்ரெஞ்சு (கிட்டத் தட்ட 40 சதவீதம் பேர்), கொஞ்சம் ஜெர்மன் இவையே பெல்ஜியத்தில் புழங்கும் மொழிகள். அடிப்படையில் மொழிக்குழுக்களுக்கு இடையிலான மோதலே அந்நாட்டின் அரசியல் பிளவுக்குக் காரணமாக இருக்கிறது. நாட்டில் 10-12 கட்சிகள் உண்டு. எந்தக் கட்சியும் பெரும்பான்மையைத் தாமே அடைய முடியாத நிலை. ஒவ்வொரு மொழிக்குழுவும் தன் குழுவுக்கு மட்டும்தான் வாக்களிக்கிறது. அரசாங்கம் கவிழ்ந்து 10 மாதங்களாயிற்று. மாற்று அரசு இல்லாத நிலை. யூரோப்பிய ஒன்றிய கூட்டரசின் தலைமைப் பிரதிநிதி, அவை, அரசு எல்லாம் பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸ்ஸல்ஸ் மாநகரில் உள்ளன. இதன் காரணம் இந்த ஒரு நாட்டில் ஜெர்மன், டச்சு, ஃப்ரெஞ்சு ஆகிய பெரும் மொழிகள் அனைத்தும் புழங்குகின்றன, இது யூரோப்பின் மையத்தில் உள்ள பழம்பெரும் நகரம் என்ற பெருமையும் இதன் முதன்மைக்கான காரணமாக இருக்கலாம். பத்து மாதங்களாக ஒரு ‘அரசு’, பார்லியமெண்ட், மந்திரிகள் எதுவும் இல்லாமல் ஒரு தேசம் இயங்க முடியும் என்று உலகுக்கு பெல்ஜிய மக்கள் உணர்த்துகிறார்களா என்ன என்று நமக்கு ஒரு சந்தேகம் எழுந்தால் அதில் என்ன தவறு இருக்க முடியும்? பெல்ஜியம் நாட்டின் அரசில்லாத ஆட்சி குறித்து மேலும் பல வினோதங்களை அறிய இங்கே சுண்டுங்கள்.

http://www.slate.com/id/2289797/

செயற்கை இலை

அமெரிக்காவில் உள்ள எம்ஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இயற்கையில் இலைகளைப் போல் ஒளிச்சேர்க்கையால் மின்சக்தியை உற்பத்தி செய்யும் கதிரொளி மின்கலம் ஒன்றை வடிவமைத்து இருக்கிறார்கள். நாம் செட் சேர்த்து விளையாடும் சீட்டு ஒன்றின் அளவுள்ள இந்த கதிரொளி மின்கலம் தண்ணீரில் மிதக்கக்கூடியது. இது சூரிய ஒளியைப் பயன்படுத்தி தண்ணீரை அதன் மூலக்கூறுகளான பிராண வாயுவாகவும் ஹைதரஜன் வாயுவாகவும் பிரிக்கிறது. இவை மின்கலம் ஒன்றில் சேமிக்கப்படும்போது எரிபொருளை உற்பத்தியாகிறது. இந்தக் கதிரொளி மின்கலங்கள் ஒளிச்சேர்க்கை செய்வதில் இயற்கையில் காணப்படும் இலைகளைவிட பத்து மடங்கு கூடுதல் செயல்திறன் கொண்டதாக இருக்கிறது என்பது ஆச்சரியமான செய்தி. பரவலாகக் கிடைக்கும் மலிவான மூலப்பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கதிரொளி மின்கலங்கள் வளரும் நாடுகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான மின்சக்தியைத் திரட்டித் தர வல்லவை. வீட்டுக்கு ஒரு கதிரொளி மின்கலத்தை அரசு இலவசமாகத் தரும் நாள் தொலைவில் இல்லை – இது நம் கிராமங்களின் மின்சக்தி பற்றாக்குறைக்குத் தீர்வாகவும் அமையக் கூடும்.

செய்தி இங்கே : http://www.wired.com/wiredscience/2011/03/artificial-leaf/

இராக் குறித்த அமெரிக்கப் பொய்கள்

ஏகாதிபத்தியங்கள் தமக்குத் தேவையான சான்றுகளைத் தாமே தயாரித்துவிட்டு, அதை தம் எதிரிகளின் கையிலுள்ள பேராபத்தான ஆயுதங்கள் என்று வாதிட்டு, பிற நாடுகளைத் தாக்க ஒரு பொய்க் காரணத்தை, சாக்கை உருவாக்கும். இது மிகப் பழைய உத்தி. ஈசாப்பின் குழந்தைக் கதைகளிலேயே இந்த உத்தி பேசப்பட்டு, நமக்கு ஒரு முன்னெச்சரிக்கை குழந்தைப் பருவத்திலேயே நம் அனைவருக்கும் தரப்பட்டிருக்கிறது. ஓநாய் ஆடு கதை நினைவிருக்கும். இராக் போரே அப்படிப் பொய்ச் சான்றுகளின் ஆதாரத்தில்தான் நடத்தப்பட்டது என்பதை இன்று அனேக அமெரிக்க ஊடகங்கள் வெளிப்படையாகச் சொல்லத் துவங்கி இருக்கின்றன. சதாம் ஹுசைன் ஒழித்துக் கட்டப்பட வேண்டியவரா இல்லையா என்பது இங்கு நாம் கருத வேண்டிய பொருளல்ல. யார், எப்படி, எதற்கு அதைச் செய்ய முனைந்தார்கள் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. நாளை இந்த யுத்திகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் சிதைத்து அழிக்கப் பயன்படுத்தப்படக் கூடும் என்பதை நாம் உணர வேண்டிய தேவை இருக்கிறது.

இதோ இராக் மீது போர் தொடுக்க எப்படி அமெரிக்கா பொய்க்காரணிகளைத் தயாரித்தது என்று விளக்கும் கட்டுரை.

http://www.wired.com/dangerroom/2011/03/did-the-anthrax-attacks-kickstart-the-iraq-war/

ஆராவாரம் தவிர்த்த ஜப்பான்

ஜப்பானியர்கள் அண்மையில் சந்தித்த பூமி அதிர்ச்சியைத் தொடர்ந்த ஆழிப் பேரலையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். உயிரிழப்பு, பொருளாதார இழப்பு என்ற அளவில் மட்டுமில்லாமல் தேசிய அளவில் ஜிஷுக்கு என்ற சுய கட்டுப்பாடு கடைபிடிக்கும் வகையில் அனைத்து தளங்களிலும் ஆரவாரங்களைத் தவிர்க்கிறார்கள். விளக்குகளை தேவைக்கதிகமாகப் பயன்படுத்துவதில்லை, லிப்டுகள் தவிர்க்கப்படுகின்றன, தேர்தலில் வேட்பாளர்கள் சைக்கிள் ஓட்டிக் கொண்டு போய் வாக்கு திரட்டுகிறார்கள். சத்தம் போடுவது கிடையாது.

bp1

ஒரு தேசமே எந்த உத்தரவுமில்லாமல் துக்கத்தில் ஆழ்வதை ந்யூ யார்க் டைம்ஸ் கட்டுரை சித்தரிக்கிறது.

http://www.nytimes.com/2011/03/28/world/asia/28tokyo.html?_r=2&pagewanted=all

அமெரிக்காவின் அடுத்த தடாலடி

ஜமீன்தார்கள், நவாப்கள் போன்றாரிடம் இருந்து பிரிட்டிஷ் ஆட்சி ஏகமாகச் சுரண்டிய காரணத்தால் அவர்களிடம் இருந்த நிதி காலியாகிக் கொண்டே போயிற்று என்பது ஒரு நூறாண்டுக்கு முந்தைய வரலாறு. அப்படி வற்றிய செல்வத்தையும், அந்தஸ்தையும் அறிய மறுத்து டம்பமாக வாழ்ந்து வருவதையே தொடர்ந்த பலர் நடுத்தெருவுக்கு வந்து இறந்தனர் என்பதும் கர்ண பரம்பரைக் கதை. சத்யஜித் ராய் கூட வங்காளத்தில் ஒரு ஜமீந்தார் இப்படி வீழ்ந்ததை, விபத்தும் (படகு விபத்தில் மனைவி, மகன் இறக்கிறார்கள்) புதுப்பணக்காரர்களின் ஆக்கிரமிப்பு முனைப்புகளுமாக அரித்து இற்றுப்போனதை ஒரு படமாக எடுத்திருந்தார். ‘ஜல்சாகர்’ என்று பெயர்- இது ஒரு எதார்த்த தரிசனம்.

spaceplane4

இந்த ஜமீன்தாரின் இடத்தில் அமெரிக்காவை வைத்துப் பார்ப்பதில் தவறில்லை. பொருளாதார மற்றும் அரசியல் பின்னடைவுகளை அமெரிக்கா சந்தித்து வரும் நிலையில், அது தன் மகோன்னதக் கனவுகளில் இருந்து விழிப்பதாக இல்லை. அந்த மூடத்தனத்தில் அது வாண வேடிக்கை, கேளிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருகிறது. இராக், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தானாயிற்று, இப்போது லிபியா. அமெரிக்காவின் இன்னொரு போதைப் பழக்கம் ராணுவம், உலக ஏகாதிபத்தியம் தானென்னற மமதை சார்ந்த நடவடிக்கைகள். அமெரிக்க உளவு விமானங்கள், ஆளில்லாது இயங்குபவை, காற்றில்லா விண்வெளியில் செலுத்தப்பட்டு, உலகைத் தினம் கண்காணிப்பவை ஒரு வகைச் செலவினம். உளை சேற்றில் காலை விட்டால் பின் எடுப்பது எப்படி. இதோ ஒரு செய்தி, ஒரு புது உளவு-விண்-விமானம் பற்றியது. இது அதிகம் உலவும், கண்காணிக்கும் பகுதி, மேற்காசியா, ஆஃப்ரிக்கா, மற்றும்- வேறென்னவாக இருக்க முடியும்?- சீனா. இந்தியாவும் அடுத்த கட்ட உளவுக்கான இலக்குதான். படத்தைப் பார்த்தால் புரியும்.

http://www.wired.com/dangerroom/2011/03/secret-space-plane-cant-hide-from-amateur-sleuths/