பாலையில் துவங்கிய நெடும் பயணம்

சீனத்தின் பெரும் பரப்பில் எத்தனையோ வகையான நிலங்கள் உண்டு. சமீபத்தில் திபெத்தை விழுங்கியபின் மலைகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால் கடலையொட்டிய நிலப்பரப்பு மட்டும் குறைவு. புல்வெளிகள், பெரும் ஆற்றங்கரை நகரங்கள், மலைச்சரிவுத் தோட்டங்கள், அரிசி வயல்கள், கோதுமை வயல்கள் எல்லாம் உண்டு. பாலையும் ஏகமாக உண்டு. தலைநகரமான பெய்ஜிங்கின் விளிம்பிலிருந்தே பாலை துவங்குகிறது. இமயமலையின் மழை நிழல் பிரதேசமான கோவ் பாலைவனம் (Gobi – கோபி என்று நமக்குத் தெரிய வந்திருக்கும்) சீனாவிலும் மங்கோலியாவிலும் படர்ந்திருக்கிறது. ஒரு நாடோடிக்கூட்டம் இப்பாலைவனத்தின் ஒரு எல்லையிலிருந்து ஒரு வரலாற்றுப் பயணத்தையே மேற்கொண்டது.

இத்தனைக்கும் அவர்களின் பயணம் பற்றி அவர்கள் எழுதி வைத்தது மிக மிகக் குறைவு. ஏனெனில் அவர்கள் அனேகமாக எழுதப் படிக்கத் தெரியாத ஒரு கூட்டம். அவர்களின் நெடும்பயணம் நீடித்த காலம் ஒரு 150 வருடம் போல இருந்திருக்கும். 1220-1370 பொது ஆண்டுக் காலம் எனலாம். அவர்களின் எதிரிகளும், அவர்களால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களால் போஷிக்கப்பட்ட அந்நியர்களும் எழுதிய குறிப்புகள்தாம் அவர்களை ஓரளவு நமக்குக் காட்டி இருக்கின்றன. அவர்களது வரலாறு எழுதப்படாமல் கிடப்பதற்கு ஒரு காரணம், அந்த முயற்சி செய்பவர்களுக்குத் தெரிய வேண்டிய மொழிகளின் எண்ணிக்கை. அது ஒரு பட்டியலே போடப்பட வேண்டிய அளவு கொண்டது. சுருக்கப் பட்டியல்: சீனம், மங்கோலியம், கொரியம், ஜப்பானியம், ரஷ்யன், துருக்கி, அரபி, பெர்ஷியன், உருது, ஜெர்மன், தவிர எண்ணற்ற மத்திய ஆசிய மொழிகள். இது ஒரு துவக்கப் பட்டியல் மட்டுமே. இப்படி ஒரு மொழி வல்லமை கொண்டவர் யாருமில்லாததால் அந்த வரலாறு சரிவர எழுதப்படாமல் கிடக்கிறது.

யாரந்த நாடோடிக் குழுவினர்?

சிங்கிஸ் க்ஹானை (Chingghis Khaan) எல்லோருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். [1] ”ரத்த வெள்ளம்” என்ற சொலவடைக்கு உதாரணமே அவன் வாழ்வுப்பாதைதானே? அவன் தலைமையில் பயணம் செய்த குழுதான் அந்த நாடோடிக்குழு!

genghis20khan20blue

பாலையும் சாலையும்:

டெமுஜினாகப் பிறந்து 65 வருடம் வாழ்ந்த சிங்கிஸும், அவனது சந்ததியினரும், பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியதெல்லாம், கோவ் பாலைவனத்தின் ஊடே நிறையப் பயணித்துதான் நடந்தது.

கோவ் பாலைவனத்துக்கு சீனர்கள் வைத்த இன்னொரு பெயர், ‘எல்லையில்லாக் கடல்’. சீனர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு நுணுக்கம் எங்கோ ஒளிந்திருக்கும்.

மணல் அதிகம் இல்லாத, பெருமளவு கல்லான பாலை கோவ். உஷ்ணம் அதிகமில்லாது குளிரான பாலை கோவ். இப்படி, பாலை என்ற சொல்லைக் கேட்டதும் நம் மனதில் உருவாகும் எல்லா பிம்பங்களுக்கும் எதிரான தன்மை கொண்ட கோவியைச் சீனர்கள் ’எல்லையற்ற கடல்’ என்று அழைப்பது சரியென்றே தோன்றுகிறது. வறண்ட பூமியானாலும், தண்ணீரே இல்லாத பாலையல்ல கோவ். அது பகுதிப்பாலைதான். வருடத்துக்கு ஓரிரு முறை பெய்யும் மழை திடீரென்று பெருவெள்ளமாகப் பாய்ந்து அடித்துப் போய் மறைந்து விடும். இதைக் கடந்த டெமுஜினுக்கு ’கடலை ஆளும்’ க்ஹான் (பேரரசன் என வைத்துக் கொள்வோம்) என்ற அர்த்தமுள்ள ‘சிங்கிஸ் க்ஹான்’ என்ற பெயர் பொருந்தித்தான் போகிறது. இந்தப் பாலையில் சிறு புதர்களைத் தவிர அனேகமாக எதுவும் வளர்வதில்லை.

வாள், குறுங்கத்தி, எறிகத்தி, குதிரை, எறி ஈட்டிகள், வில், அம்பு, கொஞ்சம் வெடிமருந்து, கோட்டைகளுக்குள் உள்ள மக்களைத் தாக்கக் கவண் எந்திரங்கள், இவ்வளவுதான் மங்கோலியப் படைகளிடம் இருந்தவை. எதிர்பாராத இடங்களில் படைகளை அனுப்புதல், இரவு பகல் என்று பாராமல் பயணம் செய்து தூரங்களைக் கடத்தல், தாக்குதலில் மரபுகள் ஏதும் இல்லாத தாக்குதல், அழிப்பில் எந்த வரம்புமில்லா அழிப்பு ஆகியன மங்கோலியப் படைகள் பற்றிய பெரும் பீதியை மத்திய ஆசியாவெங்கும் பரப்பியிருந்தன. போர்களுக்கு முந்தியே முற்றுகைக்குள்ளான நகரத்து மக்கள் மனதில் அடிபணிந்தால் என்ன என்று தோன்ற வைப்பதே மங்கோல் போரில் ஒரு உத்தி. ஒரு நகரின் வாயிலில் மண்டை ஓடுகளால் ஒரு சிறு கோபுரமே கட்டினார்களாம் மங்கோல் படைகள். பல வெற்றிகள் உளவியல் போராலேயே கிட்டி இருந்திருக்கும். மீதியில் ஒரு பங்கு ஏற்கனவே இருந்த சாம்ராஜ்யங்கள், நாடோடிகள் போலத் தோற்றமளிக்கும் மங்கோலியப் படைகளைக் குறைத்து மதிப்பிட்டதால் இருக்கும்.

அந்த வரலாற்றுக் காலத்தில் உலகிலெங்கும் காணப்படாத போர்த்தந்திரங்களைப் பயன்படுத்தி, ஒரு பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றினர் மங்கோலியப் படைகள். அதற்கு கடைக்கால் ஊன்றியதோடு, தானே முன்நின்று நடத்திப் பெரும்பரப்பை போரால் வென்றவன் சிங்கிஸ். இன்று வரையிலும் கூட, இடைவெளி இல்லாது, தொடர்ந்த ஒரு பெரும் நிலப்பகுதியில் பரவிய வகையில், உலகிலேயே பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவியவர்கள் சிங்கிஸ் க்ஹானும் அவனுடைய சில வாரிசுகளும்.

mongol-the-rise-of-genghis-khan-800-75

தன் 65 ஆண்டு வாழ்வுக்குள் பல லட்சம் மக்களைக் கொன்று, அவனும் அவன் பெரும் படைகளும் உருவாக்கிய ஒரு மங்கோலியப் பேரரசு அவன் மறைவுக்குப் பின்னரும் விரிந்து பரவி, சீனா, கொரியா என்று பல ஆசிய நாடுகளையும் கபளீகரம் செய்தது. சுமார் ஒன்றரை நூற்றாண்டே இந்த சாம்ராஜ்யம் நீடித்தது, என்றாலும் அதன் தாக்கம் பல நூறாண்டுகள் தாண்டியும் நீடிக்கிறது.

மத்திய ஆசியா, சீனா, கொரியா, இந்தியாவில் ஒரு சில பகுதிகள், யூரோப்பில் பெரும் பகுதிகள் – ரஷ்யாவில் பெரும்பகுதி, இரான், இராக், அரேபியா, எகிப்தில் ஒரு பகுதி என்று அமைந்த மிகப்பெரும் சாம்ராஜ்யம் அது. ஆப்பிரிக்காவுக்கும் பரவாததற்கு ஒரு காரணம் எகிப்திய மாம்லுக்குகள். அவர்கள் முதல் முறையாக மங்கோலியப் படைகளைத் தடுத்து ஒரு போரில் வென்றனர். மங்கோலியர் பின்பு எகிப்தைக் கடந்து ஆப்பிரிக்காவுக்குள் போகவில்லை.

அதிகம் தோல்விகளைச் சந்தித்ததில்லை என்றாலும், தோல்விகளுக்கும் அஞ்சாதவை மங்கோலியப் படைகள். மறுபடி மறுபடி முயன்று வெல்வதை முனைந்து செய்பவர்கள். இது ரஷ்யாவை வருடா வருடம் கடும் குளிர்காலத்தில் தாக்கிப் பலமுறை வென்றதையும், வசந்தம் வந்ததும் பின்வாங்கிப் போய் அடுத்த வருடம் மறுபடி பெருந்தாக்குதலைக் கடும் குளிர்காலத்தில் நடத்தி, கியவ், மாஸ்கோ போன்ற பெருநகரங்களில் பேரழிப்பை நிகழ்த்தியதையும் வைத்துத் தெரிந்து கொள்கிறோம். ஆனால் இவர்கள் எகிப்தை விட்டு வேறு வழியில் ஆஃப்ரிக்கா செல்ல முயலவில்லை.

குதிரைகளுக்குப் போதிய புல் இல்லை என்பதால் மேலே செல்லவில்லை என்று ஒரு வரலாற்றாளர் காரணம் சொல்கிறார். இது ஒரு சரியான காரணமாகத் தெரிகிறது. இன்று சவுதி அரேபியா எனக் கருதப்படும் பகுதிக்குள்ளும் மங்கோலியர் செல்லவில்லை, அங்கு அதிகம் மக்கள்தொகை இல்லை என்பது மட்டுமல்ல காரணம், அது பெருமளவு பாலை – கொதி மணற்பாலை. குதிரைப்படையை நம்பும் மங்கோலியருக்கு அது ஆபத்தான பகுதியாகவே இருந்திருக்கும். அதே போல எகிப்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்த மங்கோலியப் படைகள் இன்றைய லிபியா போன்ற பகுதிகள் வழியே ஆஃப்ரிக்காவுள் செல்லவும் வழி இருந்திராது. ஏனெனில், எகிப்தில் சில பகுதிகளைத் தவிர பெரும்பகுதி வறண்ட பூமி, மணற்பாலை. லிபியாவும் அப்படியே. ஆஃப்ரிக்காவுக்குள் நுழைய இந்த இரண்டு பகுதிகளையும், (சவுதி) அரேபியாவையும் விட்டால் வேறு நிலவழி அன்று இருந்திராது. எகிப்து, இன்றைய லிபியா, அரேபியா ஆகிய மூன்றும் சிறு நிலப்பரப்புகள் அல்ல. அவற்றின் பின்னே உள்ள நிலமும் வெகு தூரம் வரை காய்ந்த பூமிதான். அத்தனை தூரத்தையும் கடந்தால் மங்கோலியர் தம் வாழ்நாளில் தீர்க்க முடியாத பெரும் வளங்களைக் கண்டிருப்பர். ஒரு வேளை யூரோப்பியர் பின்னாளில் கண்ட பெருவளங்களை மங்கோலியர் 14ஆம் நூற்றாண்டிலேயே கண்டிருக்கலாம். ஆனால் வரலாற்றின் பாதை எப்படி எல்லாமோ திரும்பி விடுகிறது! சிறு சிறு முடிவுகள், எடுக்கப்படாத மாற்றுத் தேர்வுகள், தற்காலிகம் என நினைக்கப்படும் நிலைகள் பின்னால் பெருந்திருப்பங்களைக் கொணர்கின்றன.

மங்கோலியப் படைகளின் பயணங்களை வரைபடம் மூலம் பார்த்தால் அவர்கள் கிழக்கு யூரோப், மத்திய, மேற்கு ஆசியா, சீனா போன்ற பகுதிகளிலேயே அதிகம் சஞ்சரித்தது தெரிய வரும். குளிரைக் கூடத் தாங்குவார்கள். ரஷ்யாவின் ஜார் மன்னர்கள் தம் சாம்ராஜ்யத்தைப் பரப்பப் பயன்படுத்திய ஒரு படை தாத்தர் படை. அந்த தாத்தர்கள் மங்கோலியர்களின் எச்ச சொச்சங்கள், ரஷ்யாவில் தங்கிவிட்டவர்கள்தான். தாத்தர்களும் குதிரை வீரர்கள். தாத்தர்களும் கடும்குளிரில் போரிட்டவர்கள். நாஜிகளை எதிர்த்துக் கடும்பனியில் போர் புரிந்த ரஷ்யப் படைகளில் தாத்தர்களும் இருந்தனர். [2]

சமீபத்திய மரபணு ஆய்வாளர்கள் யூரோப்,ஆசியா ஆகியவற்றின் பரந்த நிலப் பகுதிகளில் வாழும் பல லட்சம் மக்களிடம் சிங்கிஸ் க்ஹானின் மரபணுக்களைக் காணமுடிவதாகச் சொல்கிறார்கள். இது மங்கோலியரின் மரபணுவைச் சொல்லவில்லை, ஒரு தனி மனிதனின் மரபணுவே அத்தனை பரப்பப்பட்டிருக்கிறது. வன்புணர்வு என்பது சிங்கிஸ் க்ஹானின் ஒரு நடைமுறை, அவனது வாரிசுகளும் இதை மேற்கொண்டிருந்தனர்.[3]

ஒரு தோராயமான கணக்கில் சிங்கிஸ் க்ஹான் கொன்ற மக்கள் தொகை 40 மிலியன் என்று வரலாற்றாளர் சொல்கிறார்கள். அதாவது 4 கோடி மக்களை சிங்கிஸ் க்ஹானின் படைகள் கொன்றன.

ஆம், வெறும் படுகொலைகள் மட்டுமல்ல, பலவகை வன்முறைகளும் கொடூரங்களும் துவங்கிய ஒரு இடம் கோவ் பாலைவனப்பகுதிதான். ரஷ்யரைத் தோற்கடித்த பின், ரத்தமில்லாது அந்தப்பகுதி ஆட்சியாளரைக் கொல்லத் தீர்மானித்த மங்கோலியத் தளபதிகள், அவர்களைத் தரையில் படுக்கவைத்து, மேலே ஒரு மரமேடையைப் போட்டு அதன் மீது கூட்டமாக அமர்ந்து உணவு உண்டனராம். மரப்பலகைக்குக் கீழே அந்த அரச குலத்தினர் நசுங்கிச் செத்தனராம். இப்படிப்பட்ட உளவியல் வன்முறையால் மங்கோலியருக்கு என்ன லாபம் என்றால், அந்த பெரும் நிலப்பகுதியே ஒன்றரை நூற்றாண்டுக்கு பெரும் கலவரங்கள் எழுச்சிகள் இன்றி அடங்கி இருந்தது.

பழுக்கக் காய்ச்சிய இரும்பால் ஒரு முறை சுட்டு விட்டுப் பின் சுடும் இரும்பு போலப் பெயிண்ட் அடித்த இரும்புத் தண்டை வைத்துக் கொண்டு சிங்கம் புலிகளை ஆட்டிப் படைப்பார்கள் சர்க்கஸ்காரர்கள் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். அதே போல, ஒரு கொடும் தண்டனை, ஒரு கூட்டம் மக்களைக் கொல்லுதல் ஆகியவற்றை ஒரு நகர, நாட்டு மக்கள் முன் நிகழ்த்தி விட்டு, பின்  பன்னெடுங்காலம் அந்த மக்களை எளிதே எதிர்ப்பின்றி ஆளும் உத்தியை பல ஆக்கிரமிப்பாளரும் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் அரபு, துருக்கிய, மங்கோலியப் படைகள் இந்த உத்தியைத்தான் பல நகரங்களிலும் பயன்படுத்தினார்கள். கில்ஜியின் உத்தியும், கஜினி/ கோரி களின் உத்தியும், பாபரில் துவங்கி ஔரங்கசீப் வரை இதே உத்திதான்.  ஆங்கிலேயரும் இந்த உத்தியைத்தான் பயன்படுத்தினர், அவர்கள் மொத்த ஜனத்தொகையையும் கொல்லாமல் பொறுக்கி எடுத்த சில நூறு, ஆயிரம் பேர்களைக் கொன்றனர் என்பதுதான் மாறுதல்.

அதே பாலை முடியும் இடத்தில் உள்ள பெய்ஜிங் நகரில் ஆட்சி செய்ய நுழைந்து, இவனளவு மக்களைக் கொன்ற இன்னொரு கொடுங்கோலன் சீனாவின் மாஒவின் ‘பெரும் முன் தாவலும்’, ‘பண்பாட்டுப் புரட்சியும்’ இந்த முறை ஆக்கிரமிப்புகள்தாம். அதாவது சுமார் 30 மிலியன் பேர்கள் மாஒவின் முரட்டுத்தனமான அரசியல் முடிவுகளுக்குப் பலியானார்கள். (மூன்று கோடி பேருக்கும் மேலிருக்கும் என்பது பல ஜனத்தொகை ஆய்வாளர்களின் துணிபு.) ஆனால் அவன் போரால் கொன்றதை விட பட்டினி போட்டுக் கொன்றதுதான் அதிகம்.

எது அதிக பயங்கரம் என்று கறாராகச் சொல்ல முடியுமா என்ன?

இந்த விஷயத்தில் இன்றைய சூழலியலாளர்கள் இருக்கிறார்களே, அவர்களுடைய நகைச்சுவை உணர்வு கொஞ்சம் கொடூரமானது – அதன் பல்லும் நகமும் கூர்மையானது. என்ன செய்வது, நாளும் எழுந்தவுடன், இன்னும் பத்தாண்டுகளில் எல்லாம் அழியும், சாப்பிட ஏதுமில்லாமல் தெருவில் அலையப்போகிறோம் என்றே குடுகுடுப்பை அடித்துக் கொண்டிருக்கிறார்களா, அவர்களுடைய நகைச்சுவை உணர்வும் கொஞ்சம் அப்படித்தான் திகிலானதாகி விடுகிறது.

அவர்களுடைய கணக்கில் பூமிக்கு நல்லது செய்து, இயற்கைச்சூழல் பெருமளவுக்குத் தேற உதவி செய்த இரு தனி மனிதர்களில் சிங்கிஸ் க்ஹான் ஒருவன், இன்னொருவன் மாஒ. ஏன் அப்படி? இருவரும் பல கோடி மக்களைக் கொன்றதால், மனிதர்கள் உலகச் சூழலுக்கு விளைத்த நாசம் பெரிதளவு திடுமெனக் குறைந்து இயற்கையாக பூமியின் காடுகள், நீர்நிலைகள் போன்றன மறு உயிர்ப்பு பெற்று நன்னிலைக்கு மீண்டன என்பது வாதம். அந்த அளவுக்கு பெரும் மீட்பு, அத்தனை கோடி மக்களை மறுபடி காணாமலடித்தால்தான் கிட்டும் என்கிறார்கள். இதைக் குரூர நகைச்சுவை என்னாமல் வேறென்ன என்று சொல்வது?

இதே மங்கோலியர்கள் வேறு சில அதிசயங்களையும் நிகழ்த்தினார்கள். குபிலாய் கான் எனப்படும் மங்கோலியப் பேரரசர் உருவாக்கிய யுவான் வம்ச ஆட்சியில் சீனா முதல் முறையாக ஒரே நாடாகியது. காஸ்பியன் கடற்கரையிலிருந்து மஞ்சள் கடல் / சீனக்கடலின் கரை வரை பரவிய ஒரு சாம்ராஜ்யத்தில், பல நாட்டு மக்கள் எளிதே பயணம் போனார்கள், வணிகம் செய்தார்கள். குறிப்பாக தமது ஆட்சிக்கு உதவவென மங்கோலியர் வளர்த்த இரு தொழில்நுட்பங்கள் உலகைப் பெரிதும் முன்னகர்த்தின. அவை கடிதம் – செய்திப் பரிமாற்றத்துக்காக தொடர் குதிரை வீரர்கள் மூலம் தபால் அனுப்பும் முறைகளும், அந்த வகை செய்தி அனுப்பலுக்காக உருவான சாலைகளின் பெரும் வலையும். இன்னொன்று நிலப்பரப்புகளுக்கு வரைபடங்களை மங்கோலியர் நிறையப் பயன்படுத்தினர் என்று சொல்லப்படுவது. இத்தனைக்கும் மங்கோலியரின் நில வரைபடங்கள் என்று ஏதும் கிட்டவில்லை. அவை பற்றிய குறிப்புகள் மட்டும் சமகால வரலாற்றாளர் குறிப்புகளில் கிட்டுகின்றன. பாலையில் துவங்கிய ஒரு குழுவினருக்குத்தானே சாலைகளின் அருமை நன்றாகவே புரிந்திருக்கும்?

தாம் ஒரு உறைந்த இலக்காக இல்லாது, தொடர்ந்து இடம் பெயரும் வாழ்வைக் கொண்ட மக்களுக்கு சாலைகளால் ஆபத்தும் எழாது. வரைபடங்களும் அவர்கள் இருக்கும் இடத்தைக் கறாராகச் சுட்டாது. தாம் ஆளும் மக்கள் ஆங்காங்கே திட்டுத் திட்டாகத் தேங்கி இருக்கையில் அவர்களைச் சுற்றி வளைக்கவும், ஆளவும் சாலைகளின் உதவி தேவை, நிலப்பரப்பின் வரைபடங்கள் மிக அவசியம் என்பதையும் அவர்களன்றி வேறு யார் அறிவார்?

இதே சாலைகள், மங்கோலியரின் கடுமையான ராணுவக் கட்டுப்பாட்டினால் பயணிகளுக்கும், வியாபாரிகளுக்கும், தொழில் நிபுணர்களுக்கும் மிக உதவியாக இருந்தன. அதுவரை நுகர் பொருட்கள், தொழில் நுணுக்கங்கள், கலைப்பொருட்கள் போன்றன பரிமாறிக் கொள்ள எந்த வசதியும் இல்லாத நிலப்பரப்புகளெல்லாம் கூட இப்போது ஒரு பெரும் வணிக வட்டத்துக்குள் கொணரப்பட்டன.

இதைத் தவிர சீனாவில் ஆண்ட யுவான் வம்ச மங்கோலியர், சீனர்களை அதிகம் நம்பிப் பொறுப்பைக் கொடுக்கத் தயாராக இல்லாத காரணத்தால் பன்னாட்டு மக்களைத் தம் அலுவலர்களாக, அரசு நிர்வாகிகளாக அமர்த்தினர். மார்கோ போலோ என்ற இத்தாலிய வணிகர் / சாகசங்களைத் தேடி அலைந்த இளைஞர் குபிலாய் க்ஹானிடம் வேலைக்கு அமர்ந்து ஒரு அரசவை உறுப்பினரானது இப்படித்தான். இன்றளவும் மார்கோ போலோவின் ஓரளவு மிகைப்படுத்தப்பட்ட வருணனைகளே அந்தக் காலகட்டத்து வரலாற்றை ஓரளவு தெளிவுபடுத்த உதவுகின்றன. மார்கோ போலோ விவரித்த குபிலாய் கானின் க்ஸாநாடு (Xanadu) என்ற நகரம், பேரரசரின் வாசஸ்தலம் எல்லாம் வெறும் கற்பனை என்று சமீபகாலம் வரை சொல்லப்பட்டு வந்திருந்தது. 2008-இல் சீன அகழ்வாராய்ச்சியாளர்கள் இந்த நகரமும், வாசஸ்தலமும் கற்பனை இல்லை, உண்மையாக இருந்தவை எனக் கண்டுபிடித்து கடந்த சில வருடங்களாக இந்த நகரை வெளிக்கொணர அகழ்வாராய்ச்சிகள் நடக்கின்றன.

marco-polo-before-kublai-khan

[குபிலாய் கான் முன் நிற்கும் மார்க்கோ போலோ]

இந்த வகைத் தொடர்புகளிலேயே சீனர்களிடமிருந்து யூரோப்பியருக்கு வெடிமருந்து, காகிதம், பலவகை அறிவியல்நுட்பங்கள் கைமாறிக் கொடுக்கப்பட்டதாக பல வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள். துப்பாக்கி என்பது யூரோப்பிய உருவாக்கம் என்றே இன்னும் சொன்னாலும், வெடிமருந்து என்பது சீனர்களின் கண்டுபிடிப்பு என்று சொன்னாலும், போருக்கு அதைப் பயன்படுத்தியது மங்கோலியரின் உத்தி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மங்கோலியர்கள் கைத்துப்பாக்கிகளைப் பயன்படுத்த அத்தனை முனைப்பு காட்டவில்லை. ஏனெனில் நேருக்கு நேர் போரில் ‘தனிமனித வீரம்’ என்பதில் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர் என்று வரலாற்றாளர்கள் சொல்கின்றனர். (சாண்டர்ஸ், 1971/2001) இந்த மனோநிலையை, போர்க்கருவிகளை நம்பாமல் மனிதரை வைத்துப் போர் நடத்தி வெல்ல முடியும் என்று கருதிய மாஒவிடமும் காண்கிறார், அதே வரலாற்றாளர். (சாண்டர்ஸ், ப:199)

மங்கோலியரான குபிலாய் க்ஹான், சிறு வயதிலிருந்தே சீனாவில் வளர்ந்து வசித்து வந்ததால், தாம் ஆண்ட சீனாவை உலகின் மைய நாடாக, பேரரசாக உயர்த்த முனைப்பு கொண்டு ஜப்பான், கொரியா, வியத்நாம் போன்ற பகுதிகளுக்கெல்லாம் படையெடுப்புகள் நடத்திப் பார்த்தார். ஜப்பானில் அவருடைய பெரும் கடற்படை ஒரு பிரும்மாண்ட சூறாவளியில் சிக்கி முழுதும் அழிந்தது. அதையே ‘காமிகாஸி’ என்று ஜப்பானியர்கள் அழைத்தனர்.

வரலாறும் விளைவுகளும்:

யுவான் வம்ச ஆட்சிக்குப் பிறகு எழுந்தது சீனர்களின் மிங் வம்ச ஆட்சி. அதில் ஒரு நூறாண்டுக்கும் மேலாகச் சீனர் மேற்கொண்ட பெரும் கடல்பயணங்களுக்கு உந்துதல் குபிலாய் க்ஹானின் சீனப் பேரரசு குறித்த கனவு. குபிலாய் மறைந்ததும், மங்கோலிய அரசை எதிர்த்து எழுந்த சீனர், குபிலாயின் இந்த ஒரு கனவைச் சுவீகரித்துக் கொண்டனர். தாம் உலக மையம், தம் பேரரசே உலகில் மிகச் சிறந்தது என்ற கருத்து, சுய நம்பிக்கை ஆகியன அவை. ஆசியா, இந்தியா, ஆப்பிரிக்காவின் கிழக்குக் கோடி வரை கூட பயணித்த சீனக் கடற்படை / வணிகக் கப்பல்கள் சீன வணிகத்தைப் பெரிதாக்கின. மேலும், பல நூறாண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாக்கப்பட்ட நாட்டில் சீனர்கள் பிராந்திய கண்ணோட்டங்களை விடுத்து பெரும் நிலப்பரப்பில் வியாபாரம் செய்யும் ஊக்கத்தைப் பெற்றமை, அவர்களை தென்கிழக்காசியாவெங்கும் பயணிக்கும் வியாபாரிகளாகவும் ஆக்கியது.

நாடோடிகளாகத் துவங்கிய மங்கோலியர் முதலில் நகரங்களை விட்டு விலகியே வாழ்ந்தாலும் நாளடைவில், குபிலாய் காலத்துக்குப் பின் பிற சீனர்களைப் போல நகரவாசிகளாக ஆகி ஸ்டெப்பி புல்வெளி வாழ்வையும், அதன் நெருக்கத்தில் உருவாகும் போர்க்குணத்தையும் நினைவிலிருந்தும் கூட இழந்திருந்தனர். இருந்தும் சீன மொழியின் சிக்கல்களைக் குறித்தும், சுகவாசி வாழ்க்கை குறித்தும் அவர்களுக்குப் பண்பாடாகவே இளக்காரப் பார்வை இருந்ததால் தம் ஆட்சியைச் செவ்வனே நடத்த அவர்கள் சீனர்களில் ‘உயர் சாதியினரையும்’ அன்னியக் குடியேறிகளையுமே நம்பினர். நம்பியவர்கள் தேனெடுத்த கையை நிறையவே நக்கினர். மங்கோலியருக்கு இது தெரிந்தும், அனுமதித்தனர். இதனால் பெரும் பாடுபட்டது விவசாயிகள்தான். வியாபாரிகள், தொழில் நுட்பம் தெரிந்தவர்களுக்குச் சீனாவில் அன்றும் இன்றும் தனி மதிப்பு. இவர்கள் அன்று எந்த வரியும் அரசுக்குக் கொடுத்ததில்லை. இதை சீன ஆட்சியாளர்கள் மங்கோலியரிடம் கற்றனரா என்று தெரியவில்லை. அரசின் பெரும் செலவுகளுக்கான அனைத்து வரியையும் மங்கோலியரும் சீனரும் அன்றும் இன்றும் இழிவாகக் கருதும் விவசாயிகளே கொடுத்து வந்திருக்கின்றனர். இன்றும் சீனாவில் முதலீட்டாளர்களுக்கு எங்கும் தனி மதிப்பு, சலுகைகள். இன்றைய ‘பொதுவுடைமைக்’ கட்சி, இப்படி ’முதலீடு ஆட்சி’ செய்வதில் வியப்பெதுவும் இல்லையே?

மங்கோலியப் பேரரசர்களிடம் கற்ற கற்பனையை வளர்த்தெடுக்க நினைத்த மிங் வம்சத்து ஆட்சியில் இருந்த சீனர்கள், முன்னெப்போதும் இல்லாத அளவு நிறைய பயணம் செய்யத் தொடங்கினார்கள். உலகப் பயணிகளானார்கள். இன்று பல தென்கிழக்காசிய நாடுகளிலும் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் பெரும் தனிகரான சீன வணிகக் குடும்பத்தினரின் கைகளில் சிக்கியிருப்பதற்கு உள்ள பல காரணங்களில் சீனர்கள் பல நூறாண்டுகளாகவே நாடு கடந்து செல்லப் பழகியதும், குடும்பங்களையே கூட தம் புது நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருமாறு அவர்கள் ஊக்குவித்ததும் எனலாம். அந்நியருக்குத் தம் பெருநிதி குறித்தும், தம் வியாபாரத் தந்திரங்கள் குறித்தும் தகவல் தெரியாமல் மறைப்பதில் அன்றிலிருந்து இன்று வரை மிக்க நிபுணத்துவம் பெற்றவர்கள் சீன ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரக் குடும்பங்கள். தென்கிழக்காசியாவில் பல நாடுகளில் சீன வியாபாரக் குடும்பங்கள் மீது உள்நாட்டினர் பெரும் குரோதம் கொண்டிருக்கக் காரணம் இந்த ரகசிய நடத்தை என்கிறார் சீன வேர் கொண்ட ஓர் அமெரிக்க ஆய்வாளர். (ஏமி சுவா: பார்க்க.)

மாஒவின் கொடுங்கோலாட்சிக்குப் பிறகு வந்த சீன ஆட்சியாளர்களுக்கும், ராணுவத்தலைமைக்கும், தம் முந்தைய அணுகுமுறையான படைவீரர்களின் அலையலைத் தாக்குதல் இனி வெற்றி கொடுக்காது என்பது புரிந்திருக்கிறது.[4] அவர்கள் இன்று போர்த்தந்திரங்களின் இயல்பை மாற்றி, பொருளாதார அச்சுறுத்தல்கள், தகவல் போர், தவிர ஏகாதிபத்தியங்களின் வழக்கமான உத்திகளான பிறநாட்டுக் கைக்கூலிகள், பிரிவினைவாதங்களை ஊக்குவித்து, ஆயுதம் அளித்தல் போன்ற போர்த்தந்திரங்களை மேம்படுத்திக் கையாளத் துவங்கி இருக்கிறார்கள். இவற்றில் பலவும் மங்கோல் அரசுகளின் போர்த் தந்திரங்களுமாகும். தனிமனித வீரத்தை மதித்தாலும், போரில் ஆட்சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கவே மங்கோல் முறைகள் முயன்றன. பிறருக்கு ஆட்சேதம் ஏறபடுத்துவதும் அவர்கள் வழிமுறை. மங்கோலியர் ஆக்கிரமிப்புக்கு முந்தைய சீனாவில் ஜனத்தொகை சுமார் 130 மிலியனாக இருந்தது, மங்கோலியரின் யுவான் வம்சம் ஆட்சியில் அமர்ந்த பின் அதே ஜனத்தொகை 60 மிலியனாகக் குறைந்திருந்தது என இன்று சில ஆய்வாளர்கள் அனுமானிக்கிறார்கள்.

இன்னொன்று முன்பே சொல்லப்பட்ட எதிர்மறையான அம்சமான கிராமப்புறங்கள் மேலும் விவசாயிகள் குறித்த பெரும் அலட்சிய பாவம். இதுவும் மங்கோலியரின் பாரம்பரியத்தில் கிட்டியது, அல்லது நெடுநாளைய சீனப் பாரம்பரியத்திலிருந்து மங்கோலியர்களால் உறுதிப்படுத்தப்பட்ட அணுகுமுறை. அது இன்னமும் சீனாவில் தொடர்கிறது. சீன அரசாட்சி எப்போதும் உள்நாட்டுப் பயணத்துக்கு சீனர்களில் சாமானியரை, குறிப்பாக விவசாயிகளை அவ்வளவு எளிதே அனுமதித்ததில்லை. ஏதேதோ தடைகள் மூலமாக அவர்களை ஒன்று சேர விடாமல் ஆங்காங்கே தேக்கி வைக்கவே முயன்றிருக்கிறது. இதன் சில வடிவங்களே இன்றளவும் சீனாவில் தொடர்கின்றன. இன்றும் சீனருக்குப் பெருவாரி நாடுகளில் மக்களுக்குக் கிட்டும் மிகச் சாதாரணமான குடியுரிமைகள் கிடையாது என்பதற்கு பன்னெடுங்காலச் சீன ஆட்சியாளரின் சந்தேகப் பார்வையே காரணம். இத்தனை நூறாண்டுகளுக்குப் பின்னும் சீனக் குடியானவர்களுக்கு விமோசனம் கிட்டவில்லை. விவசாயிகள் மீதான இந்த அலட்சியமே தொழில்மயமான நாடாகச் சீனாவை மாற்றுவதில் இன்றைய சீன அரசுக்கு உள்ள உத்வேகத்திற்கொரு முக்கியமான காரணம்.

t1largchinadrought

அது தவிர, தொழில்நுட்பத்தாலும், தொழிலுற்பத்தியிலும் பேரளவு மேல்நிலையில் இருந்த மேல்நாடுகளால் தாம் ஒடுக்கப்படுவோம் என்ற அச்சமும் சீனாவுக்கு இருந்தது. வியத்நாமுடன் 1979-இல் நடந்த போரில் வியத்நாமியர் அமெரிக்கர்களிடம் இருந்தும், ஃப்ரெஞ்சு ராணுவத்திடமிருந்தும் கைப்பற்றிய ஏராளமான நவீனப் போர்க்கருவிகளை வைத்து நடத்திய எதிர்த்தாக்குதலில் சீன ராணுவத்துக்கு நேர்ந்த பெரும் ஆட்சேதம், சீனாவுக்குத் தன் கொரில்லா போர்முறை அன்னிய நாடுகளை ஆக்கிரமிக்க உதவாது என்று புரிய வைத்திருக்க வேண்டும்.[5] இந்தப் போருக்குப் பிறகே சீனாவின் நவீனமாக்கும் போக்கும், அரசு மைய முதலியத்தை ஓரம் கட்டி தனியார் முதலியத்துக்கு இடம் கொடுக்கும் போக்கும் நடைமுறைக்கு வந்தன.

இந்தக் காரணங்களோடு சேர்ந்து அபரிமிதத் தேசியப் பெருமிதம், உலக நாடுகளில் உச்சத்திற்கு எழும் அவசர ஆசை, அதை நிறைவேற்றப் பெரும் தொழில்திறன் தம் நாட்டில் எழ வேண்டும் என்ற புரிதல் ஆகியவையும் சீனா தொழில்மயமானதற்கான காரணங்கள்.

தொழில்மயமாவதற்கு அவசியமானது நகரமயமாதல். தொழிற்சாலைகளுக்குத் தீனி போட உழைக்கும் இளைஞர்களின் பெரும்படை தேவை. அது கிராமங்களிலிருந்து இளைஞர் பட்டாளத்தை நகரங்களுக்கு நகர்த்துவதன் மூலமே ஒரே நேரம் துரிதமாகவும், மலிவாகவும் நடக்கும். அதற்கு விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களிடம் அது எதிர்காலத்துக்கு உதவாது என்பதை உணர்த்த வேண்டிய அவசியம் எழுகிறது. விவசாயிகள் குறித்த சீன அரசு அமைப்புகளின் பாரம்பரிய அலட்சியம் கடந்த முப்பதாண்டுகளில் கூடுதலாகி, ஓரளவு கல்வி பெற்ற கிராமப்புற இளைஞர்கள் பெருமளவில் நகரங்களுக்கு இடம் பெயர்வதற்கும் உந்துதலாகிறது. எனினும் இந்த இடம் பெயர்ந்த மக்களை சம உரிமை உள்ள குடிமக்களாக உலவவிட்டால் அவர்கள் எளிதில் கம்யூனிஸ்டு கட்சியின் மேலாட்சியை எதிர்க்கக் கிளம்பிவிடுவார்கள் என்ற அச்சம் அரசை இந்த மக்களை நிறைய கண்காணிப்பு, கெடுபிடிகளுக்கு உள்ளாக்கி நடத்தவைக்கிறது.

இறுதிக் கணக்கில், சீனாவின் இந்த நகரமயமாகும் போக்கு ஒரு பெரும் பாலைவனப் பகுதியில், மரமில்லாப் புல்வெளியாலான ஒரு பிரதேசத்தில் துவங்கியது என்றே சொல்லலாம். பெய்ஜிங் ஒரு பாலைவன நகர்தான் என்பதையும் நினைவில் வைக்கவேண்டும். அப்போது இந்த உருவகம் உடனடியே எத்தனை பொருத்தம் என்பது விளங்கும். 50களில் உலகிலேயே ஆக ஏழையான சீனா, 90களில் உலகிலேயே பெரிய வேக வளர்ச்சி கொண்ட நாடாக மாறி இருக்கிற இன்றைய காலகட்டத்தில், ஜனக்கூட்டத்தின் கட்டமைப்பில் பெரும் மாறுதல்கள் நடந்திருக்கின்றன. இவற்றால் சீனாவின் நகரமயமாதல் எப்படி பாதிக்கப்படுகிறது என்று இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.[6]

——————————————————————————–

பின்குறிப்புகள்:

[1]பொதுவாக நாம் தமிழில் ‘செங்கிஸ் கான்’ என்றுதான் எழுதுகிறோம், சொல்கிறோம். ஆனால் மங்கோலிய உச்சரிப்பின்படி அப்பெயரை ‘சிங்கிஸ் க்ஹான்’ என்று இருக்கவேண்டும். ‘ஹா’ என்ற எழுத்துக்கு அழுத்தம் அதிகம்.

cinggis_qayanமங்கோலிய எழுத்தில் சிங்கிஸ் க்ஹானுடைய பெயர் இப்படி எழுதப்பட்டிருக்கும். மங்கோலிய எழுத்துகளை வலையில் தேடிப் பார்த்தால் அது தேவநாகரி இந்தியை எத்தனை ஒத்திருக்கிறது என்பது தெரிய வரும். ஆனால் சீன மொழியைப் போல, அல்லது அந்த வகைச் சித்திர எழுத்துகளைப் போல, அதில் வரிகள் மேலிருந்து கீழாக எழுதப்படுகின்றன. சிங்கிஸ் க்ஹானுடைய உருவமோ, அவன் புதைக்கப்பட்ட இடமோ தெரியாது போனாலும், அவனுடைய பேரன் குப்லாய் கான் தன்னுடன் இருந்த, செங்கிஸ் கானை நேரடியாகத் தெரிந்தவர்களின் உதவியுடன் தயாரித்த உருவப்படம், சீனாவில் பாதுகாக்கப்பட்டது ஒன்று இருக்கிறது. அதை இந்தத் தளத்தில் காணலாம்.

பெர்ஷிய வரலாற்றாசிரியர் ஒருவரின் வர்ணனைப்படி சிங்கிஸ் க்ஹான் உயரமானவர், நீண்ட தாடி வைத்திருந்தார், சிவப்பான தலை முடி, பச்சைக் கண்கள் கொண்டவர். அவருடைய பேரன் குப்லாய் க்ஹானுக்கு இந்தச் சிவப்பு முடி, பச்சைக்கண்கள் இல்லை என்பது சிங்கிஸ் க்ஹானுக்கு அதிர்வைக் கொடுத்தது என்று இவர் சொல்கிறாராம். (தகவல்: விக்கிபீடியா)

[2] கடும் உஷ்ணம் மங்கோலியர்களுக்கு உகந்ததல்ல என்று தெரிகிறது. இவர்களின் வாரிசுகளில் ஒருவனான பாபரும், இந்தியாவில் அவன் நிறுவிய அரசை விஸ்திகரித்த அவன் வம்சமும், கடும் உஷ்ணம் உள்ள பகுதிகளைத் தவிர்த்துக் குளிர்ந்த பகுதிகளிலேயே அதிகம் தம் தலைநகர் அல்லது வாசஸ்தலங்களை அமைக்க முயன்றதை நாம் காணலாம். இந்தியாவில் இயல்பாக வளரும் பெருமரச் சோலைகளை அழித்து, விரிந்த புல் தோட்டங்களை முகல் அரசர்கள் வளர்த்த விசித்திரமும் இதனால்தான். மரங்களை விடப் புல்தோட்டங்கள் அவர்களுக்கு அழகு எனத் தோன்றி இருக்க வேண்டும். ஆனால், தொலைதூரம் வரை வெட்டவெளியாக இருந்தால் மறைமுகத் தாக்குதல்கள் சாத்தியமாக இராது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

[3] சிங்கிஸ் தான் வென்ற எதிரி மக்களில் பெண்களைப் பலவந்தப்படுத்தக் கூடாது என்று கட்டளை இட்டிருந்ததாகச் சில தகவல்கள் சொல்கின்றன. பின் என்ன வகையில் சிங்கிஸ் க்ஹானின் மரபணுக்கள் மத்திய ஆசியா, யூரோப், இரான், இராக் என்று எங்கெங்கோ இன்று காணப்படும்? தன் படைகளுக்கு இதைத் தடை செய்திருந்தான் என்றாலும், போர்க்கைதிகளை படைவீரர்களுக்கு விநியோகிப்பதும், எஞ்சியோரை அடிமைகளாக உழைக்க அனுப்புவதும் மங்கோலியரின் பொதுவான வழிமுறைகள்தான்.

[4] ஹுகோவ் என்பது ஊர்களில் வாழ சீன அரசு கொடுக்கும் அனுமதி அட்டை. இது தெளிவாகவே சீனர்களுக்கு முழுக் குடியுரிமை கிடையாது, அவர்கள் தன்னிச்சையாகப் பயணிக்கும் உரிமையும், குடிபெயரும் உரிமையும் இல்லாத மக்கள் என்பதையும் சுட்டுகிறது. இந்தத் தடைகளுக்கெதிராக எந்தப் பெரும் இயக்கமும் சீனாவில் இன்னமுமே நடைபெறாதது பேச்சுரிமையும் சீனருக்கு இல்லாமையைக் காட்டுகிறது.

[5] 1979 இல் சீனா வியத்நாமைத் தாக்கியது. சீனாவின் அதிகார வட்டத்துக்குள் அடங்கியதாகக் கருதப்பட்ட பால்பாட்டிய கம்போடியாவை, க்மேர் ரௌஜின் கம்போடியாவை வியத்நாம் தாக்கி ஆக்கிரமித்தது கம்போடியாவில் நடக்கும் பெருங்கொலைகளைத் தடுக்க என்று வியந்நாம் சொன்னாலும், அதுவும் பன்னெடுங்காலமாக வியநாமியருக்கும் கம்போடியருக்கும் இருந்த பகைமையின் தொடர்ச்சிதான். பால்பாட்டின் ஆட்சி சீனாவுக்குக் கைக்கூலியாக செயல்பட்டு வியத்நாமைத் தாக்கியதும், வியத்நாம் பதிலுக்குக் கம்போடியாவைக் கைப்பற்றியதும், தன் கைக்கூலி பால்பாட்டிற்கு உதவ சீனா வியத்நாமைத் தாக்கியதும் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கின. தொழிலாளர், பாட்டளி வர்க்கப் புரட்சி என்பது பெரும் பம்மாத்து, தேசிய உணர்வுகள் அழிக்கப்படுவதில்லை, அவையே மார்க்சிய லெனினியத்துக்குப் புதைகுழி வெட்டப் போகின்றன என்பதை முன்கூட்டியே இந்தப் போர்கள் தெரிவித்தன. இந்தப் போர்களில் வியத்நாம் சீனப் படைக்கு விளைவித்த பெரும் சேதம் சீனப் படைத் தலைமைக்குத் தன் நெடுங்கால போர்முறையான அலை அலையான படைவீரர்களின் தற்கொலைத் தாக்குதல் இனி உதவாது என்பதை உணர்த்தியது. இதுவும் சீனாவின் இன்றைய பெரும் முயற்சியான சீனப் படைகளை நவீனப்படுத்துதலில் கொண்டு விட்டிருக்கிறது.

வியத்நாமியப் போர் இன்றும் பலவிதங்களில் சீனாவால் தொடரப்படுகிறது என்று முன்னாளைய வியத்நாமிய படைத் தளபதி எழுதிய ஒரு கட்டுரையை இங்கு காணலாம். சீனா தொடர்ந்து அண்டை நாடுகளின் நிலப்பகுதிகளைக் கபளீகரம் செய்வதில் முனைவதை மௌனமாகச் செய்து வருகிறது என்று இவர் சுட்டுகிறார். வியத்நாம் செய்த ஒரு நல்ல காரியம் பால்பாட்டின் பயங்கர ஆட்சியை ஒழித்துக் கட்டி பால்பாட்டை அகதியாக்கியதுதான். ஆனால் கம்போடியாவைத் தன் கைக்குள் வைத்திருக்க வியத்நாம் முயன்றது தோல்வியில் முடிந்ததையும் நாம் சுட்ட வேண்டும். தேசிய எழுச்சி மறுபடி இன்னொரு ஏகாதிபத்திய முயற்சியைத் தோற்கடித்தது எனலாம்.

மேலும் விவரங்களுக்கு: http://www.imdiversity.com/villages/asian/history_heritage/pns_vietnam_china_0405.asp

[6] இக்கட்டுரை ஜயந்தி சங்கர் எழுதி வரும் சீனாவின் பெரும் மாறுதல்கள் பற்றிய கட்டுரைத் தொடருக்கு ஒரு துணைக் கட்டுரையாக உருவமைத்தது. இந்த இதழில் உள்ள ஹுகோவ் சீட்டு முறையில் சீன அரசு சீனமக்களின் குடியமைப்புத் தேர்வுகளை எப்படி கட்டுப்படுத்தியது என்பதை அவர் கட்டுரை விளக்குகிறது. அடுத்த இதழில் அவருடைய கட்டுரை நகரமயமாதல் எப்படி நடக்கிறது என்பதை விவரிக்கும்.