உதிரம்

1

தாசிவ பண்டாரம் வள்ளியூரில் மகள் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே வானம் நன்றாகக் கருத்து விட்டது.

“காலம்பற போயேம்பா. இந்த இருட்டுல எப்படி போகப்போறே”

வாசப்படி நிலையை பிடித்தப்படி மகள் பேச்சி சொன்னாள். சொல்லும் போதே அவளுக்கு மூச்சு வாங்கியது. ஏழு மாத சூலி. வயிறு கொஞ்சம் பெரிதாக இருந்தது. நிறைமாதம் போல.

“பொம்பளப் பிள்ளையா இருக்குமோ” பண்டாரம் நினைத்துக் கொண்டார்.

“கருக்கலில் வெளியே வராத மக்கா. உள்ளே போ. நான் பொறப்படுகேன். இப்பம் போனாதான் காலம்பற போய்ச் சேர முடியும். பால் கறக்க தேவர் வருவாரு. ஆடுகளுக்கு குழை முறிச்சு போடணும். சினை ஆடு ஆகாரம் இல்லாம கிடக்கும் பார்த்துக்கோ. நான் போயிருவேன். எனக்கு என்ன பயம்?” என்று சொல்லி விட்டு வானத்தைப் பார்த்தார்.

சுருக்குப் பையைப் பிரித்து வெற்றிலையை எடுத்தார். பாக்கு வெட்டியால் பதமாகச் சீவி வைத்திருந்த கோரைப்பாக்குத் துண்டை எடுத்து வாயில் போட்டு கடித்தார். வயசு அறுபதனாலும் ஒரு பல் ஆடவில்லை. கணிசமாகச் சுண்ணாம்பைத் தடவி வெற்றிலையை சுருட்டி, துண்டு துண்டாகக் கடித்து உள்ளே தள்ளினார். யாழ்ப்பாணப் புகையிலை எடுத்து வாயில் திணித்து, சாற்றை துப்பாமல் விழுங்கினார். சுர்ரென தலைக்கு ஏறியது. இரண்டு கைகளாலும் மீசையை அழுத்தி வாரி விட்டார்.

“நான் வாரேன் மக்கா. மருமகன் வந்தா சொல்லு. அடுத்த புதன்கிழமை நானும் அம்மையும் எல்லோரும் காலம்பறேய வந்திருவோம். சீமந்தத்தை முடிச்சுட்டு கூட்டிட்டு போறேன். தட்டு வண்டிலே போயிரலாம்”

பண்டாரம் ஆத்தலாக நடந்து ஆரல்வாய்மொழி நோக்கி செல்லும் பாதைக்கு வந்தார்.

அகலமான ஒற்றையடி பாதை நீண்டு கொண்டே போனது. ஆள் அரவமே இல்லை. இரண்டு பக்கமும் புளிய மரமும் ஆல மரமும் கிளை பரப்பி நின்றன. ஆல மர விழுதுகளில் சில தரையில் ஊன்றி மரத்தை தாங்கி நின்றன. சில விழுதுகள் இன்னும் தரையைத் தொட முடியாமல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. மங்கிய இருட்டில் ஆவாரைச் செடிகள் எங்கும் காடாக வளர்ந்து கிடக்கின்றன. அவற்றுக்கு இடையே ஆங்காங்கே சிறு குன்றுகள் போல் கரையான் புற்றுகள். கோடிக்கணக்கான மின் மினிப் பூச்சிகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பறந்து கொண்டிருந்தன. ஒரு கீரி தன்னுடைய பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு சாலையைக் கடந்து போனது. பகலெல்லாம் வரிசையாக பாரம் சுமந்தபடி செல்லும் மாட்டு வண்டிகள் கூட பயணத்தை நிறுத்தி விட்டன. வண்டிக்காரர்கள் மாட்டை அவிழ்த்து தண்ணி காட்டி விட்டு, வண்டிக்கடியில் வைத்திருக்கும் வைக்கோலைத் தின்னக் கொடுத்து விட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

யாரும் போகத் துணியாத பாதை. கள்ளமாரும் தீவட்டிக் கொள்ளைக்காரர்களும் மகேந்திரிகிரி மலையில் இருந்து இறங்கி இந்த சாலையைக் கடந்துதான் ஊர்களுக்குள் கொள்ளைப் போட போவதுண்டு. வாதைகளும் இசக்கியும் சாலையோரத்தில் நிற்கும் சுடலைமாடன்களும் ஆதிக்கம் செலுத்தும் பாதை. பண்டாரத்துக்கு இதெல்லாம் ஒரு பொருட்டல்ல. மந்திரவாதி சதாசிவ பண்டாரத்தை அப்படி யாரும் லேசுல நெருங்கி விட முடியாது.

“தன்னைக் கட்டிட்டு நடக்கவனை யார் என்ன செய்திர முடியும்” என்பார் அவர்.

நேரங்கட்ட நேரத்தில் இப்படி வெளியே கிளம்பும் போது மந்திரத்தால் தன்னை அவர் கட்டிக் கொள்வார். மந்திரம் கவசம் போல் காத்து நிற்கும் வேளையில் மனிதன் தெய்வம் எல்லாமே அவருக்கு ஒன்றுதான். உற்றுப்பார்த்தாலே ஒதுங்கிக் கொள்வார்கள். குரைக்கும் நாயின் வாயை ஒரு பார்வையிலேயே கட்டி விடுவார். நாய் ஊமையாகி முனகிக் கொண்டிருக்கும். அதன் உடைமைக்காரன் விசயமறிந்து அவரிடம் போவான். ஒரு மண்ணாங்கட்டியை கையில் எடுத்து மந்திரித்து, நாயின் தலையை சுற்றி ஊர் கிணற்றில் போடச் சொல்வார். மந்திரத்தின் கட்டு அறுந்ததும் “ஊ” என்று முதலில் ஊளையிடும் நாய் மெதுவாக குரைக்க ஆரம்பிக்கும்.

செய்வினை வைத்து விட்டார்கள் என்று வருபவர்களுக்கு அதை நீக்கி வைப்பார். “உன் வீட்டுக்கு தெக்க தகடு எழுதி மண்ணில புதைச்சிருக்கு. அதுதான் உன்னை போட்டு பாடா படுத்துகு பார்த்துக்கோ. வெள்ளிக்கிழமை இராத்திர நான் எடுத்து தூர எறிஞ்சிருகேன்” என்பார்.

எங்கேயோ போய் எதையோ பார்த்து பயந்து வந்து நிற்பவர்களுக்கு திருநீறு பூசி மந்திரிப்பார். வேனல் காலத்தில் மேலெல்லாம் அக்கி வந்து அவதிப்படும் சின்ன பிள்ளைகளுக்கு காவியால் எழுதுவார். சிலருக்கு தாயத்து செய்து கொடுப்பார். ஆனால் இதற்கெல்லாம் யாரிடமும் எப்போதும் அவர் காசு வாங்குவதில்லை.

“பைசாவைக் கொண்டு போய் சங்கிலி மாடன் கோயில் உண்டியலில் போடு. மந்திரவாதம் செய்யது சக்கரம் சேர்க்க இல்லை பார்த்துக்கோ,” என்று மறுத்து விடுவார்.

அவருடைய தேவைகள் குறைவு. இரண்டு பால் மாடுகள் வைத்திருந்தார். பால் விற்று பைசா வரும். பண்டாரத்திடம் யாரும் பாக்கி வைப்பதில்லை. கொஞ்சம் ஆடுகளும் உண்டு. குட்டி போட்டால் கிடாரியை வைத்து விட்டு கிடா குட்டியை விற்று விடுவார். சாயங்காலம் முழுவதும் கோயில் நந்தவனத்தில் இருந்து பறித்து வந்த பூக்களை மாலையாகக் கட்டி கொடுப்பார். பூக்கட்டுக்கு அவருக்கு நெல் உண்டு. அவருக்கு தினசரி மீன் குழம்பு வேண்டும். மாதத்தில் கடைசியில் வரும் வெள்ளிக்கிழமை மட்டும் சைவம். அன்று சங்கிலி மாடனுக்கு பூசை உண்டு.

ஒரே மகளை வள்ளியூரில் கட்டிக் கொடுத்தார். மாதத்துக்கு ஒரு முறை அவளைப் பார்ப்பதற்கு காலையில் கிளம்பிப் போவார். இராத்திரியில் அங்கேயிருந்து கிளம்பி விடுவார். வள்ளியூருக்கும் நடந்துதான் போவார். வெற்றிலை வைப்பதற்கு ஒரு சுருக்குப் பை. திருநீறு வைப்பதற்கு இன்னொரு பை. இரண்டையும் வேட்டியில் முடிந்து வைத்திருப்பார். வெற்றிலையைப் போட்டதும், திருநீறை எடுத்துப் பூசி முருகா முருகா என்று மூன்று தடவை சொல்லிக் கொள்வார்.

அவரைப் பொறுத்தவரை “நீரில்லாத நெற்றி பாழ்”

வள்ளியூரில் இருந்து பணகுடி வருவதற்குள் மூன்று முறை வெற்றிலைப் போட்டு திருநீறு பூசிக் கொண்டார்.

காவல்கிணறு திருப்பத்தில் வரும் போது நிலவு தலைக்கு மேலே வந்து விட்டது. அங்கேயும் மாட்டு வண்டிகள் நின்றன. வண்டிக்காரர்கள் வண்டிக்கு அடியில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

முப்பந்தல் எல்லையை நெருங்கும் போது நள்ளிரவு இருக்கும். ஒரு பத்து அடி நடந்திருக்கையில் ஆல மரத்தில் இருந்து விழந்து கிடக்கும் சருகுகள் மீது யாரோ நடப்பது போன்ற சத்தம் கேட்டது. காதுகளைத் தீட்டிக் கொண்டு, மந்திரத்தை உச்சரித்து மேலும் தன்னைக் கட்டிக் கொண்டார்.

இப்போது கொலுசு சத்தம் கேட்கிறது. சற்று நேரத்தில். “ஜல் ஜல்” என சலங்கையாக ஒலிக்கிறது. இந்த சத்தங்கள் அவருக்கு புதிதல்ல. கன்னியாய் செத்துப் போய், சொந்த வீட்டில் கூட ஒரு மூலையில் இடமின்றி, மஞ்சணையும பிச்சிப் பூவும் கிடைக்காமல் அலையும் பெண்கள் எத்தனையோ பேர் உண்டு. நீலியும் இசக்கியும் கூட பின்னாலே வருவார்கள்.

“வெத்தலை போட கொஞ்சம் சுண்ணாம்பு தா” குரல் பின்னாலிருந்து கேட்கும்.

கத்தியில் சுண்ணாம்பைத் தடவி திரும்பிப் பார்க்காமலே நீட்ட வேண்டும்.

“திரும்பினேனா ஒரே அடி. சோலி முடிஞ்சு போகும். அங்கணேயே இரத்தம் கக்கி சாக வேண்டியதுதான்” பண்டாரம் சொல்வார்.

மந்திரம் காத்து நிற்கையில் யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்று பண்டாரத்துக்கு தெரிந்தாலும், இந்த முறை கேட்கும் குரல் வித்தியாசமாக இருந்தது.

பார்த்து விடலாம் என்று தீர்மானித்து, கத்தியில் சுண்ணாம்பைத் தடவி நீட்டினார்.

“இதுக்கா நான் வந்திருக்கேன்?”

இரக்கத்தை ஏற்படுத்தும் குரல். ஆனால் அந்த குரலுக்குப் பின்னால் ஒரு குரூரம் இருப்பது பண்டாரத்துக்கு பிடிபட அதிக நேரம் பிடிக்கவில்லை.

“பின்ன என்ன வேணுங்க?” பண்டாரம் நடந்து கொண்டே கேட்டார். நடக்கையிலேயே யாராக இருக்கும் என்று மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டார்.

“எத்தனை வருசமா இடமில்லாம தெருத் தெருவா அலையேன். ஒரு இடம் தந்து என்னை இருத்தக் கூடாதா?” குரல் மீண்டும் கேட்டது.

“இந்த பக்கமாக எல்லா இசக்கிகளுக்கும் கோயில் உண்டு. முப்பந்தல்காரிக்கு நல்ல ஓடு போட்ட கோயில். பின்னே யாராக இருக்கும்” பண்டாரம் யோசித்துப் பார்த்தார்.

“நான் சொல்லுகத காது கொடுத்துக் கேக்கியா. ஒண்ணும் சொல்லாம நீ பாட்டுக்குப் போயிட்டு இருந்தா என்ன அர்த்தம்” பெண் குரல் ஒங்கி ஒலித்து.

“நான் கேட்டுக்கிட்டுதான் நடக்கேன். நீ யாருண்ணு மொத சொல்லு”

“என்னையா யாருண்ணு கேக்க. நீ பெரிய மந்திரவாதிதான? கண்டு புடி பார்ப்போம்…”

“சட்டுனு புடி பட மாட்டங்கு. கொஞ்சம் பேரா இப்பிடி அலைஞ்சுக்கிட்டு கிடக்கியோ. நம்பி திரும்பினா ஊருக்குப் போகமுடியுமா?”

“நான் அப்படிப் பட்டவா இல்ல கேட்டியா?”

“பின்ன எப்படிப்பட்டவா?”

“சிதம்பரத்திலேயே எனக்கு இடம் இருக்கு பார்த்துக்கோ. இந்த பாண்டியிலதான் அனாதையா திரிகேன்”

பண்டாரத்துக்கு மனசிலாகியது.

காளி வந்திருக்கிறாள். பாண்டி நாட்டிலே காளிக்கு கோயில் இல்லாமல் இல்லை. யுத்தம் நடக்கையில் ஏதோ ஒரு ஊர்க்காரர்கள் வெளியேறியிருக்கிறார்கள். கோயில் பராமரிப்பு இல்லாமல் சிதிலடைந்து போய் அவளும் வெளியே இறங்கியிருக்கிறாள்.

“ஆளைக் கணக்காக்கித்தான் வந்திருக்கிறாள். இவளை வேண்டாம் என்று சொல்லி விட்டு போவது முடியாத காரியம்” பண்டாரம் யோசிக்க ஆரம்பித்தார்.

“என்ன யோசிக்க? நான் என்ன உங்கிட்ட பூ மூக வீடா மாதிரியா கோயில் கட்டிக் கேக்கேன். ஒதுக்கமாக ஒரு இடம் குடத்தேனே அதில இருந்துட்டு போறேன்.”

“நீ நினைக்கமாதிரியான ஆளு இல்ல பார்த்துக்கோ. ஊருல என்னைப் போல என் சாதிக்காரன் இரண்டு பேர்தான் உண்டு. கோயிலுக்கு பூக்கட்டி கொடுத்து, வயல் அறுத்ததும் வரும் நெல்லை வைத்து காலம் தள்ளிக்கிட்டு இருக்ககோம். உன்னை கொண்டு போய் எங்கண இருத்த சொல்லுக?”

“நான் போக முடியாத இடமா? உன் கூட வரணுமுண்ணு பிரியப்பட்டு வந்திருக்கிறேன். நீ கூட்டிட்டுப் போறேனா சொல்லு. இல்லேனா விட்டிறு.”

பண்டாரத்துக்கு தர்ம சங்கடமான நிலைமை. இவள் திட்டம் போட்டுத்தான் வந்திருக்கிறாள். கூட்டிட்டுப் போனாலும் சிக்கல். போகாவிட்டாலும். சிக்கல்தான். வேறு வழியில்லை. சரி வருகது வரட்டும். பார்த்துக்கிடலாம் என்று முடிவு செய்தார்.

“சரி வா.”

திரும்பிப் பார்க்காமல் அவளை அழைத்துக் கொண்டு நடந்தார். முப்பந்தல் இசக்கியம்மன் கோயிருக்கு அருகே வரும் போது அவள் ஏதோ சொல்வது கேட்டது. கோயிலின் உள்ளே ஒரு விளக்கு மட்டும் மினுட் மினுட் என்று எரிந்து கொண்டிருந்தது. வெள்ளியும் செவ்வாயும் ஜனம் கூடி பொங்கல் வைத்து விட்டு, கருக்கலுக்கு முன்னால் கிளம்பி போய் விடும்.

ஆரல்வாய்மொழி கடந்து, தோவாளைக்கு வந்து, ஒழுகினசேரி ஆற்றில் முட்டளவு ஓடும் ஆற்றில் இறங்கி நடந்தார் பண்டாரம். பின்னால் தண்ணீரில் எழுந்த ஒலி அவள் கூடவே வருவதை உறுதி செய்தது. நாகர்கோவில் தாண்டி, சுசீந்திரம் பாதையே விட்டு விட்டு, ஊர் நோக்கி பண்டாரம் நடந்தார். ஊர் எல்லையைத் தொடும் போதுதான் பண்டாரத்துக்கு சிக்கல் புரிய ஆரம்பித்தது. ஏதோ அவசரத்துல கூட்டிட்டு வந்தாச்சு. இவளை எங்கே போய் இருத்தி வைப்பது?

தெற்குத் தெருவில் முத்தாரம்மன் இருக்கிறாள். மேலத்தெருவில் சந்தனமாரி. நெடுந்தெரு, வடக்குத் தெருக்களில் முத்தாரம்மனுக்கு கோயில்கள். ஆசாரிமார் தெருவில் முப்பிடாரி. எல்லோரும் சைவம்.
“இவளை யாரு சேர்த்துக்கிடுவா? எதாம் பிரச்சினை வந்தா ஊர்க்காரனுகோ நிலையழிஞ்சு நிப்பானுகோ?

ஒரு யோசனை தோன்றியது. “சங்கிலி மாடன் தனியாகத்தானே இருக்காரு. பக்கத்தில இவளையும் வைச்சுரலாம்”

ஊரையும் செட்டித் தெருவையும் பிரித்தபடி கால்வாய் ஓடிக் கொண்டிருந்தது. இரண்டு தென்னையை முறித்து குறுக்காகப் பாலம் போல் அமைக்கப்பட்டிருந்தது. கால்வாயின் இருபக்கமும் மருதமரங்கள் தழைத்து நின்றன. நல்ல நிலா வெளிச்சத்தில் கீழே தண்ணீர் தெளிவாக ஒடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

இன்னும் இருநூறு அடி நடந்தால் வீடு வந்து விடும். நூறாவது அடியில் பஜனை மடம். வைகாசியிலும் மாசியிலும் காவடிக் கட்டிக் கொண்டு, நடந்தே திருச்செந்தூர் போவார்கள். பண்டாரத்தின் தம்பிக்குத்தான் காவடிக் கட்டும் பொறுப்பு. வழக்கமாக வெளியே நின்று கும்பிட்டு விட்டுதான் போவார். இன்று திரும்ப வழியில்லை.

பஜனை மடம் தாண்டியதும் இடதுபக்கத்தில் ஒரு வயல் மட்டும் துண்டமாய் கிடந்தது. எப்போதும் தண்ணீர் நிற்கும் என்பதால் நல்ல படுவம். உழவு காலத்தில் காலைத் தூக்கி நடப்பதற்கு மாடுகள் திணறும். சின்னப் பிள்ளைகள் இறங்கினால் மாட்டிக் கொள்வார்கள். திருகுக் கள்ளியும் காரைக்காய் செடியும் அளிசமும் வேலியாக நின்றன. பசு ஈன்ற பின் வெளியாகும் எலுங்கொடிகள் பனை ஓலைப் பெட்டிகளில் கட்டப்பட்டு வேலியில் தொங்கின. விதைப்பதற்கு முன்பாக குழை அரக்கப்பட்டு அரக்கப்பட்டு தடி பருக்காமல் நிற்கும் மஞ்சணத்தி மரத்தில் இரண்டு ஆந்தைகள் தலையை ஆட்டிக் கொண்டிருந்தன. வயலுக்கு மேற்கே உள்ள மேட்டில் கிளை பரப்பி நிற்கும் வேப்ப மரத்தின் கீழ் நாலடி உயரத்தில் சங்கிலி மாடன் நின்று கொண்டிருந்தார். வேலியில் உள்ள சிறிய தொண்டு வழியாக உள்ளே புகுந்தார் பண்டாரம். வீடு இன்னும் நூறடி தள்ளியிருந்தது. மாடனின் முன்னால் வந்து நின்று கும்பிட்டார். ஒடுக்கத்தி வெள்ளியன்று சாத்தப்பட்ட சம்பங்கி ஆரம் காய்ந்து போய் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. அவர் பேச்சுக்கு கட்டுப்படும் மாடன். என்ன செய்வதென்று தெரியாமல் கண்களை மூடிக் கொண்டு நின்றார். கொஞ்ச நேரம் ஆனதும் மாடனுக்கு அருகில் விளக்குக் கொளுத்தி வைக்கும் மாடக் குழியின் ஓரத்தில் இருந்த திருநீற்றுக் கொப்பரையை கையில் எடுத்தார். வானத்தை நோக்கிப் பார்த்தவாறு, நெற்றி நிறைய திருநீற்றைப் பூசிக் கொண்டார். ஒரு ஆவேசம் பிறந்தது.

“இங்கேயே நிண்ணுக்கோ. நான் குளத்துல போய் இரண்டு முங்கு போட்டுட்டு வந்திருகேன்”

பின்னோக்கியே கொஞ்ச தூரம் நடந்து விட்டு பதிலுக்குக் காத்திராமல் விறு விறு என்று முதலில் வீட்டை நோக்கி நடந்தார்.

நான்கு முறை கதவைத் தட்டினார். வீட்டுக்காரி முத்தம்மாள் கதவைத் திறந்ததும், செம்பை எடு என்றார்.

“இப்பம் என்னத்துக்கு செம்பை கேக்கியோ. காலையிலேயே மந்திரவாதம் செய்ய புறப்பட்டாச்சா. சோலி மயிறு இல்லாம” கண்களைக் கசக்கிக் கொண்டே அவள் கேட்டார்.

“செறுக்கியுள்ள எடுண்ணா எடேன். வியாக்கியானம் பேசிக்கிட்டு நிக்காதே. அந்த நேரியலையும் எடு”

முத்தம்மாள் முணு முணுத்துக் கொண்டே உள்ளே போய் பரணில் இருந்த செம்பை எடுத்து கொடுத்து விட்டு, மீண்டும் போய் படுத்துக் கொண்டாள்.

சிறிய செம்பு அளவுக்கு சின்னதாகவும் இல்லாமல், குடம் அளவுக்குப் பெரிதாகவும் இல்லாமல் புட்டுச் செம்பை விட சற்று பெரிய வாய் அகன்ற பாத்திரம் அது. அதை கையில் தூக்கிக்கொண்டு குளத்துக்குப் போனார்.

தெப்பக்குளத்தில் குளித்து விட்டு, ஈரத்துணியுடன் வரும்போது தூரத்திலேயே அவள் நிற்பது தெரிந்து விட்டது.

ஒரு நிமிடம் ஆடிப் போனார் பண்டாரம். எத்தனையோ வாதைகளையும் இசக்கியையும், நீலியையும் மந்திரத்தில் கட்டுப்படுத்தி வைக்கத் தெரிந்த அவருக்கு இந்த உருவம் ஒரு கிலியை ஏற்படுத்தியது.

கும்மிருட்டுக்கு மனித உருவம் கொடுத்தது போல் நிற்கிறாள். கூந்தல் பின்காலைத் தொட்டுப் புரள்கிறது. பத்து கைகள். நெருங்க நெருங்க இன்னும் உருவம் தெளிவானது. கழுத்தில் போட்டிருக்கும் செவ்வரளி மாலை விம்மி நிற்கும் முலை மேடுகளில் லேசாக மடிந்து கால் முட்டுகளைத் தொடுகிறது. சூலம், அம்பு, சூரிக்கத்தி என எட்டு கைக்கும் ஒவ்வொரு ஆயுதம். ஒரு கையில் கொப்பரையில் குங்குமம். தரை வரை நீளும் ஒரு கையில் துண்டிக்கப்பட்ட தலையை முடியைப் பிடித்து தூக்கி வைத்திருக்கிறாள். எந்த யுகத்தில் கொல்லப்பட்ட எந்த அரக்கனோ? அறுபட்ட கழுத்தில் இருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. கைகளில் எல்லாம் சீமந்தம் முடிந்த சூலிக்கு அடுக்கியிருப்பது போல் வளையல்கள். இன்னும் நெருங்கிய போது அந்த கருமையான முகத்தில் செவ்வரியோடிய வெள்ளை விழிகள் பளிச்சென தெரிகின்றன. முகத்தில் சாம்பிராணி தைலம் பூசப்பட்டிருந்தது. அதன் மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கில் பேசரி பளிச்சென மின்னுகிறது. காதுகளில் குண்டலங்கள். இரத்த சிவப்பில் வாய்.

உக்கிரமான பத்திரகாளி வந்து விட்டாள். உலகம் அழியப் போகிறது. தன்னையறியாமல் கையை எடு்த்துக் கும்பிட்டார். கண்ணில் நீர் தாரை தாரையாகப் பாய்ந்தது.

“என்னைப் போட்டு சோதிக்காதே. நான் ஏழை. உனக்கு இடம் கொடுக்க என்னால் முடியாது.”

அவள் சிரித்தாள்.

“நான் உங்கிட்ட சொன்னதை மறந்தாச்சா? நான் கோபுரம் கட்டியா கேக்கேன்?”

“நீ கேக்கல. ஆனால குடிசையில உன்னை வைச்சுட்டு பாவம் புடிச்சு அலைய சொல்லுகியா?”

மறுபடியும் சிரித்தாள்.

“எனக்கு என்ன வேணுமிணு எனக்குத் தெரியாதா? நாலு கழியை நாட்டி ஒரு கூரையைப் போட்டு தா. எனக்கு உடனே இருக்கணும். எத்தனை வருசமா நடந்துக்கிட்டே இருக்கேன்!”

“சரியம்மா. தாரேன். ஆனால் இந்த உருவத்தோட நிக்காதே. எனக்கு வெப்ராளமாக இருக்கு. தாங்க மடியல.”

“சரி என்ன செய்ய சொல்லுகே?”

“உனக்குத் தெரியாதா?”

நேரே கிணற்றுக்கு சென்று தண்ணீரை இரைத்து செம்பை அலசி விட்டு, நீரை நிரப்பினார். வீட்டுக்குப் பின்னால் இருந்த செவ்வரளியில் இருந்து கொஞ்சம் பூக்களைப் பறித்துக் கொண்டார்.

சங்கிலி மாடனுக்கு முன்னே வந்து செம்பை வைத்து, மந்திரம் சொல்ல ஆரம்பித்தார். காளியின் உருவம் மெல்ல மறைந்து செம்புக்குள் புகுந்தது. செம்பின் முன்னால் அப்படியே விழுந்து கும்பிட்டார். பின்னர் நேரியலால் அதன் வாயை மூடி இறுக்கிக் கட்டினார். மாடனின் முன்னால் அதை வைத்து விட்டு, நேராகக் காக்குமூர் நோக்கி நடந்தார்.

2


வேலாயுதம் கொத்தனார் வீட்டை அடைந்த போது விடிந்து விட்டது. திண்ணையில் உட்கார்ந்திருந்த கொத்தனார், பாக்கு வெட்டியால் பாக்கை சீவிக் கொண்டிருந்தார்.

“ஓய் வாரும். என்னா காலம்பறேயே வந்திருக்கேறு?”

“ஒரு விசயம். கொஞ்சம் தள்ளிப் போய் பேசுவோம்”

கொத்தனார் துவர்த்தை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு பண்டாரத்துடன் நடந்தார்.

“இண்ணைக்கு எங்க வேலை?”

“பங்குனி உத்திரம் வருகுலா. சாஸ்தாங்கோயிலுல குதிரை பொம்மையில கொஞ்சம் வேலை இருக்கு”

“ஒரு நாளு தள்ளிப் போட முடியுமாணு பாருமே. ஒரு அவசர வேலை இருக்கு” என்றார் பண்டாரம்.

“என்ன அவசர வேலை?”

மெதுவாக நடந்ததைச் சொன்னார். கொத்தனாருக்கு நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவருடைய அப்பாவே சுடலைமாடன் கோயிலில் ஆடுபவர்தான். அது அவருக்குப் பிடிக்கவில்லை. கொடை நடக்கும் காலத்தில் கோயில் பக்கமே போகமாட்டார். கொத்தவேலையுடன், சுதை சிற்பம் செய்யும் தொழிலும் உண்டு.

“சரி நான் பயக்களை கூட்டிட்டு வந்திருகேன். நீரு சுண்ணாம்பு வாங்கி நீத்தி வையும். குளத்தில இருந்து மணல் எடுத்துகிடலாம். ஒரு நாலு கலயம் பயினியும் கிடைக்கா பாரும். நான் வரச்சில குளத்தாங்கரையில இருந்து கடுக்கா பொறுக்கிட்டு வாரேன்.”

ஒரு வித பயத்துடன் வேலாயுதம் கொத்தனார் வீடு நோக்கி நடந்தார். பண்டாரம் எதிர் பாதையில் திரும்பினார்.

அரைக் கோட்டை சுண்ணாம்பு சிப்பியை வாங்கி விட்டு வந்து முதலில் கொஞ்சம் தண்ணீரை தெளித்தார். சற்று நேரத்தில் புகை கிளம்பி, நெடி நாசியில் ஏறியது. சிப்பிகள் பூப்பூவாய் வெடித்து உதிரத் தொடங்கியதும் மேலும் தண்ணீரை ஊற்றினார். இப்போது உதிரும் வேகம் அதிகரித்தது. கொஞ்ச நேரத்தில் நல்ல இடித்து வைக்கப்பட்ட பச்சரிசி மாவு போல் ஆகி விட்டது.

கொத்தனார் கையாட்களுடன் வந்து சேர்ந்தார். குளித்து நெற்றி நிறைய திருநீறு பூசியிருந்தார்.

ஆற்று மணலுக்கு வழியில்லாததால் குளத்தில் அலை அடித்து அடித்து கரையில் ஒதுக்கியிருந்த மணலை ஆளுக்கொரு கடவத்தில் சுமந்து வந்தார்கள். மண்ணையும் சுண்ணாம்பையும் சேர்ந்து கலவை போட்டார்கள். கூடவே பயினியையும் கடுக்காயையும் சேர்த்து நன்றாகக் குழைத்தார்கள். கடைசியாக செம்பில் வைத்திருந்த தண்ணீரை கிழக்குப் பார்த்து நின்று கொண்டு சாந்தில் கலந்தார் பண்டாரம். சட்டென அதன் நிறம் மாறி மினுங்கியது.

நான்கு மூங்கில் கழிகளை நாட்டி, கூரை வேய்ந்து, சுற்றிலும் ஒலைக் கிடுவுகளால் மறைத்த இடத்தில் வடக்கு நோக்கி பார்த்த மாதிரி சிலை எழ ஆரம்பித்தது.

சுடு செங்கல், கை கால்கள் இணைப்புக்கு வைரம் பாய்ந்த மூங்கில் என சிலையை உருவாக்கினார்கள். ஒரு நாள் வேலை செய்து விட்டு ஒரு நாள் காய விட்டார்கள். பண்டாரம் சொல்ல சொல்ல உருவத்தை மனத்தில் வாங்கிக் கொண்டு வேலை செய்தார் கொத்தனார்.

புதன்கிழமை வேலையை நிறுத்தி விட்டு, குடும்பத்தோடு வள்ளியூர் போய் சீமந்தம் முடித்து பேச்சியை அழைத்து வந்தார். தட்டு வண்டியில் காலையில் நாலு மணிக்கெல்லாம் போய் கருக்கலுக்குள் ஊருக்குள் வந்து விட்டார்கள்.

பதினைந்து நாட்களில் சிலை ஏறக்குறைய முடிந்து விட்டது. முகம் மட்டும்தான் பாக்கி. கடைசி செவ்வாய்க்கிழமை முடித்து விடலாம் என்று முடிவு செய்தார்கள்.

“நீரு மட்டும் வந்தால் போதும்” என்று சொல்லி அனுப்பினார்.

செவ்வாய்க்கிழமை கொத்தனார் மட்டும் வந்தார். சாந்தை அம்மியில் வைத்து அரைத்து, முகத்தை வார்க்க ஆரம்பித்தார் கொத்தனார். அது ஒட்டவில்லை. தண்ணீரால் முகத்தை நனைத்து விட்டு மீண்டும் ஒட்டினார். அப்படியே அடர்ந்து விழுந்தது.

“ஓய் சாந்தில பசை ஏறலியோ?” பண்டாரம் கேட்டார்.

“ஒரு வாரமா நல்லா அழுகி பசை ஏறியிருக்கு. இதுக்கு மிஞ்சின சாந்து இருக்காங்கும்?” கொத்தனார் விளக்கினார்.

பண்டாரத்துக்கும் ஒன்றும் புரியவில்லை. யாழ்ப்பாணம் புகையிலையை கொஞ்சம் அதிகமாக வைத்து இரண்டு பேரும் ஒரு வாய் வெற்றிலைப் போட்டு விட்டு தூரத்தில் நின்று பார்த்தார்கள். ஏற்கெனவே சாந்தில் பதிய வைக்கப்பட்டிருந்த சுடுசெங்கல் துண்டுகள் முகத்தில் துருத்திக் கொண்டு தெரிந்தன.

பண்டாரம் சிலையின் முன்னே போய் உட்கார்ந்தார். காளி மறுபடியும் வந்தாள்.

“எனக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுக்காம நான் வர மாட்டேன்.”

“பார்த்தியா. நீ லேசுப்பட்டவள் இல்லை. எனக்குத் தெரியும்.”

பண்டாரம் யாருடன் பேசுகிறார் என்பது தெரியாமல் கொத்தனார் முழித்தார்.

“நீ எப்படி வேணுமினாலும் நினைச்சுக்கோ. எனக்கு வேண்டியதைக் கொடு.”

“கோழி அறுக்கட்டுமா?”

அவள் சிரித்தாள்.

“தாகம். தாகம். கோழி இரத்தம் எனக்கு காணாது.”

“சரி. ஆடு கொண்டு வரட்டா?”

மறுபடியும் சிரித்தாள். பின் கோபத்துடன் கண்களை உருட்டிப் பார்த்தாள். முகத்தில் வியர்வை முத்து முத்தாய் எழுந்தது. அதில் கரைந்த சாம்பிராணித் தைலம் தலையில் சொட்டு சொட்டாய் விழுந்தது.

“எறும்புக்கு சிரட்டைத் தண்ணி சமுத்திரம். நான் என்னால முடிஞ்சததானே கொடுக்க முடியும்.”

“என் தாகத்துக்கு இதெல்லாம் போதாது.”

“உனக்கு எளக்காரமா போச்சு. இதுக்குத்தான் நான் இந்த இடவாடுகளுல தலைப்படவே மாட்டேன். எத்தனையோ பேரு பின்னால வந்திருக்கா. கூட்டிட்டே வரமாட்டேன். நான் உண்டு என் சங்கிலி மாடன் உண்டுனு செவனேனு இருந்தேன். எனக்கு நேரம் சரியில்ல.”

“பேசி பிரயோசனமில்ல பார்த்துக்கோ. நான் இங்கண இருக்கணுமுண்ணு முடிவு செய்தாச்சு. இப்ப என்ன சொல்லுக? எனக்கு தாகம் நிக்க மாட்டங்கு.”

“சரி என்ன வேணுமுணு சொல்லு? என்னால முடியுமாணு பார்க்கேன்.”

“எனக்கு சூலியை பலி கொடு. தலைச் சூலி வேணும்!”

ஆடிப் போனார் பண்டாரம்.

“நரபலியா! எத்தனை வருசம் பின்னாலே போகணும். காளிப் பெரும் புலையனுக்கு நடந்தது எனக்கு நடக்கப் போகா” தவித்தார் பண்டாரம்.

“வண்டன் அந்த பெரும்புலையன் சண்டித்தனமாக
சிந்தையிலே இரக்கமின்றி செல்லமகள் தன்னை
திடமுடனே நெஞ்சதனையும் கீறி பலி செய்தானே”

சுடலைமாடன் கோவில் கொடையின் போது கடுக்கரை சுப்பிரமணியபிள்ளை பாடும் வில்லுப்பாட்டு கதை பண்டாரத்தின் காதில் ஒலித்தது.

கைலாயத்தில் இருந்து பூலோகத்துக்கு வந்த சுடலைமாடன் கேரளத்தில் புகுந்து அட்டகாசம் செய்த காலம். ஊரெல்லாம் நோய். பயிர்கள் அழிந்தன. கால்நடைகள் செத்து விழுந்தன. என்ன செய்வதென்று திகைத்த மன்னன் மந்திரவாதி காளிப் பெரும்புலையனுக்கு ஆள் விட்டான். வெற்றிலையில் மை போட்டு பார்த்தான் காளிப்புலையன். செத்துப் பிறந்த தலைச்சன் பிள்ளை சுடுகாட்டில் எரிகையில் எடுத்து வந்து கூட்டிய மை. சுடலைமாடன் இறங்கியிருப்பது வெற்றிலையில் தெரிந்தது.

சுடலையை ஆசுவாசப்படுத்த கொடை கொடுத்து சூல் கோழி, சூல் ஆடு, சூல் பன்றி, துள்ளுமறியை பலி கொடுத்தான். போதாதென்று தலைச்சூலியையும் பலி கொடுத்தத் தீர்மானித்தான்.

தலைச்சூலியாய் இருக்கும் மகள் மாவியக்கியை கொடை பார்க்க அழைத்தான். “உற்ற அப்பன்தானே என்று ஊக்கமுடனே வந்த” மாவியக்கியை பரண் மேல் கிடத்தி பலி செய்தான். அவள் சாபம் கொடுத்தாள். காளிப்புலையன் வம்சத்தில் பெண் வாரிசே இல்லாமல் வறண்டு போனது.

பண்டாரத்துக்கு இப்போது எல்லாம் நன்றாக விளங்கியது. மகள் பேச்சியை பார்த்து விட்டு வருவதைத் தெரிந்து கொண்டுதான் பின்னால் வந்திருக்கிறாள்.

“காளிப்புலையன் செய்த நீசத்தனத்தை செய்ய நம்மையும் செய்ய சொல்கிறாள். நாசமாகப் போவதற்கு வழி சொல்லுகிறாள்.” பண்டாரம் பதைப்புடன் நின்று கொண்டிருந்தார்.

“எம்மா. என் தலையை உருட்டதுக்கு திட்டம் போட்டுத்தான் நீ இங்க வந்திருக்க. என்னை வுட்டுரு. மந்திரவாதம் படிச்சது தப்புணு எனக்கு இப்பம் தோணுகு. என்னை வுட்டுரு.”

“நீ இல்லேண்ணு சொன்னா விட்டுர முடியுமா? தந்தே ஆகணும். இல்லேணா நான் சிலையில் இறங்க மாட்டேன். இப்பவே வெளியே இறங்கி எல்லாத்தையும் அழிச்சு போடுவேன்.”

ஏதோ பேசி விட்டு, சற்று நேரம் தாமதித்து விட்டு மீண்டும் பண்டாரம் பேசுவதைக் கேட்கும் போது வேலாயுதம் கொத்தனாருக்கு ஒன்றும் புரியவில்லை. கோயிலில் சாமி ஆடுபவர்கள் இது போலத்தான் யாருடனோ பேசிக் கொண்டே ஆடுவார்கள்.

மானாய் மருகினார். மன்றாடினார். சொல்லிப்பார்த்தார். அவள் மசியவில்லை.

பண்டாரம் எழுந்தார். மாடனின் முன்னால் இருந்த சங்கிலி கண்ணில் பட்டது. யானையின் காலில் கட்டும் அளவுக்கு கனமானது. கொடை நடக்கையில் இந்த சங்கிலியை பழுக்கப் போட்டு கழுத்தில் போட்டு பண்டாரம் ஆடுவார். மற்ற சமயத்தில் அதை சட்டென தூக்கி விட முடியாது. இப்போது ஒரு ஆவேசத்தில் அதைத் தூக்கி மேலே ஓங்கி தனது தலையில் அடிக்கப்பார்த்தார்.

யாரோ தட்டி விட்டார்கள்.

“என்னை மீறி உன் கதையை நீ முடிக்க முடியாது.”

காளி மூர்க்கத்துடன் சிரித்து கொண்டே மறைந்தாள்.

சோர்ந்து உட்கார்ந்தார்.

சற்று நேரம் அப்படியே இருந்து வி்ட்டு சுற்றும் முற்றும் பார்த்தார். திடீரென என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஆவேசமாக வீட்டுக்கு ஓடினார்.

“ஏவுள்ள முத்தம்மா!” என்று குரல் கொடுத்தார்.

நெற்றியில் முத்து முத்தாய் துளிர்த்திருக்கும் வியர்வையுடன் பேச்சி வெளியே வந்தாள்.

“என்னப்பா?”

“ஏட்டி உன்னை யாரு கூப்பிட்டா. நீ உள்ள போ. அம்மையை கூப்பிடு!”

அப்பாவின் முகத்தில் இருந்த ஆவேசத்தைப் பார்த்த பேச்சிக்கு பயம் பிடித்துக் கொண்டது. அவர் முகத்தில் ஏதோ ஒரு குரூரம் இருப்பது தெரிந்தது. மாதம் தோறும் முறுக்கையும் முந்திரி கொத்தையும் கட்டிக் கொண்டு நடையாய் நடந்து வள்ளியூருக்கு வரும் சதாசிவ பண்டாரம் இல்லை அவர்.

முத்தம்மை வெளியே வந்தாள்.

“பேச்சிய பார்த்துக்கோ. இனி பெத்து பொழைக்கது வரைக்கும் வெளியே வி்ட்டுராத. நான் சொல்லுகது மனசிலாகுகா?”

அப்படியே வீட்டின் பின்புறத்துக்கு வந்தார். கம்பை ஊன்றி அதில் கட்டப்பட்டிருந்த சினை ஆடு அவரை உற்றுப்பார்த்தது. வரும் பௌர்ணமிக்கு ஈணும்.

ஆட்டை அவிழ்த்து, ஒரு காதை பிடித்து இழுத்துக்கொண்டு, முகம் மட்டும் முற்று பெறாத சிலைக்கு முன்னே வந்தார். செம்பில் இருந்த தண்ணீரை அதன் மேல் தெளித்து செவ்வரளிப் பூவை தலையில் போட்டார். ஆட்டை கீழே சரித்து விட்டு, காலை பிடித்துக் கொள்ளுமாறு கொத்தனாரிடம் கூறினார்.

அவர் யோசித்தார்.

“மே மே” என்று கத்திக் கொண்டே அது திமிறியது.

“அமுக்கிப் புடியும் வே”

கொத்தனார் நடுக்கத்துடன் காலை இறுக்கிப் பிடித்தார்.

இடுப்பில் இருந்த கத்தியால் வெறி வந்தவர் போல் அதன் கழுத்தை அறுத்தார். இரத்தத்தை ஒரு மண் சட்டியில் பிடித்து சிலையின் முன்னால் வைத்தார்.

அது துடித்து அடங்கும் முன்பே வயிற்றைக் கிழித்தார். இரத்தமும் நீருமாய் இரண்டு குட்டிகள் வெளியே விழுந்தன. அவற்றின் உடலில் இலேசான அசைவு தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் அதுவும் நின்றது.

விழுந்து கிடந்ததில் ஒன்று கிடாக்குட்டி. அதன் வயிற்றைக் கிழித்து குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டார். தண்ணீர் நிறைந்திருந்த செம்பை எடுத்து தலையில் வைத்தார். அப்படியே அசையாமல் நின்றது. சிலையை மூன்று முறை சுற்றி வந்து விட்டு, கொத்தனாரைப் பார்த்து, “இப்பம் மொகத்தை ஒட்டும்” என்றார்.

நடுங்கும் கைகளுடன் சாந்தை முகத்தில் பூச ஆரம்பித்தார் கொத்தனார். பண்டாரத்தின் கண்களுக்கு மட்டுமே தெரிந்த காளியின் முகம், இப்போது மெல்ல மெல்ல உருபெற்றது.

One Reply to “உதிரம்”

Comments are closed.