“சென்ற முறை நீங்கள் வந்த போது பார்த்த சோபாவை, இணையத்தில் இலவச விளம்பரம் கொடுத்து விற்று விட்டேன்.”
“நான் செய்திதாளே வாங்குவதில்லை. இணையத்தில் இலவசமாக படித்து விடுவேன்.”
“நான் இசை குறுந்தட்டுகளே வாங்குவதில்லை. இணையத்தில் இலவசமாக கேட்டு விடுவேன்.”
“என்னிடம் தொலைக்காட்சி பெட்டியே கிடையாது. இணையத்தில் யூடியூப்பில் பார்த்து விடுவேன்.”
“நான் சினிமா தியேட்டர் பக்கம் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. இணையத்தில் எது வேண்டுமோ அந்த சினிமாவை பார்த்து விடுவேன்.”
“புதிதாக வேலையில் சேர்ந்துள்ளேன். இணையம் மூலம் வேலை தேடி, மின்னஞ்சல் பரிமாற்றி, கிடைத்த வாய்ப்பு.”
“என் நண்பர்கள் ஜப்பான், ஆஸ்திரேலியா என்று எங்கிருந்தாலும் ஸ்கைப் மூலம் இலவச அரட்டைதான்.”
“ஏதாவது சந்தேகம் வந்தால் விக்கிபீடியாவில் என் பிள்ளை படித்து அவனுடைய சக மாணவர்களை அசத்தி விடுவான்.”
சமூக உரையாடல்களில் அதிகம் நாம் கேட்கும் வாக்கியங்கள் இவை. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது – there is nothing like a free lunch. பிறகு இவை மட்டும் எப்படி சாத்தியமாகிறது?யாருமே கட்டுப்படுத்தாத இணையத்தில் எப்படி இது சாத்தியம்? மேல்வாரியாக பார்த்தால் சற்று குழப்பமான விஷயம்தான். ஆனால், மேல் சொன்ன ஒவ்வொரு இலவசத்திற்கு பின்னாலும் மிக முக்கிய வியாபார உத்திகள் மறைந்து உள்ளன. அத்துடன், மாறுகின்ற சமூக மதிப்புகளின் பிரதிபலிப்பு இவை என்றும் கொள்ளலாம். இதன் வியாபார பிரதிபலிப்பைப் பற்றி ‘சொல்வனத்தில்’ மீடியா பற்றிய கட்டுரைகளில் ஓரளவிற்கு பார்த்தோம்.
சுருக்கமாகச் சொல்வதானால், கட்டுப்படுத்தப்பட்ட ஒவ்வொரு சேவையும் இணையத்தால் விடுவிக்கப்படுவதன் வெளிப்பாடே இவை!
எப்படிப்பட்ட கட்டுப்பாடு? உபயோகித்த சாமன்களை விற்க, வாங்க செய்திதாள்களின் விளம்பர கட்டணம் அநியாயத்துக்கு உயரவே, பொதுமக்கள் அந்த சேவையை ரொம்ப அவசியமான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இதற்கு ஆயிரம் சட்ட திட்டங்கள். ஆனால், இணையத்திலோ இலவசம்.
அதே போல, இணையம் ஜனரஞ்சகமாவதற்கு முன் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் நமக்கு செய்தி மற்றும் பொழுதுபோக்காக இருந்தது. அதிலும், பத்திரிகைகள் வாரம் ஒரு முறையும், செய்தித்தாள்கள் காலையிலும் என்று கட்டுப்பாட்டுடன் வெளி வந்தன. இணையத்தில் காலை, மாலை, வாரம், மாதம் என்று எதுவுமில்லை. அத்தோடு, பழைய இதழ்களை தேடுவது காகித முறையில் மிகவும் கடினமாக இருந்தது. எதை வேண்டுமானாலும் தேடிப் படிப்பதற்கு இணையத்திலோ இலவசம்.
குறுந்தட்டுகளில் 12 பாடல்கள் இருந்தால், பிடித்ததோ பிடிக்காவிட்டாலோ, அத்தனையும் வாங்க வேண்டும். இணையத்தில் பிடித்த பாடல்களை மட்டுமே தரவிறக்கிக் கொள்ளலாம்; வாங்கலாம். மேலும் பல இணையதளங்களில் உங்களுக்கு பிடித்த பாடல்களை ஒரு பட்டியலிட்டு கேட்டு மகிழ கட்டணம் – ஏதுமில்லை!
தொலைக்காட்சியில் காட்டியதைப் பார்த்தே தொலைக்க வேண்டும். பல சேனல்கள் வந்தபோதும், பிடித்த நேரத்தில் பிடித்த நிகழ்ச்சிகள் வருவதில்லை. இணையத்திலோ, எப்பொழுது வேண்டுமானாலும் பிடித்தவற்றைப் பார்க்க முடிகிறது – முற்றிலும் இலவசம்.
சினிமா தியேட்டர் கூட்டம், படம் வெளிவந்தவுடன் அதிக டிக்கட் விலை போன்ற கட்டுப்பாடுகள் இணையத்தில் இல்லை. இணையத்தில் வெளியான பிறகு பார்ப்பதற்கு என்றும் ஒரே விலை – இலவசம்!
வார நாட்களில் பேச இவ்வளவு, வாரக் கடைசியில் பேச இவ்வளவு, ஜப்பானுக்கு நிமிடத்திற்கு இத்தனை, இத்தாலிக்கு நிமிடத்திற்கு இத்தனை என்று ஆயிரம் கட்டுப்பாடுகளை தொலைதொடர்பு நிறுவனங்கள் வைத்து படுத்தத்தான் செய்தன. ஸ்கைப்பில் எந்நேரமும் ஒரே கட்டணம் – இலவசம்!
பல நூலகங்களை சாப்பிட்டுவிடக்கூடிய விக்கிபீடியா மற்றும் உல்ஃப்ராம் ஆல்ஃபா எப்பொழுதும் திறந்திருக்கிறது. பஸ் பிடித்து செல்லத் தேவையில்லை. தாமதமாக புத்தகத்தை திருப்பி தந்ததற்கு அபராதம் கிடையாது. தேடிச் சென்ற புத்தகம் இல்லையே என்று ஏமாற்றம் இல்லை (வட அமெரிக்காவில் இணையம் மூலம் நூலக வெளியீடுகளை தேடலாம், முன்பதிவு செய்யலாம்). தேடிய விஷயத்தை விக்கி மற்றும் உல்ஃப்ராம் தளங்கள் அழகாக காலை 3:00 மணிக்கும் விளக்குகிறது. முற்றிலும் இலவசம்.
தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் SPB.சரணும், வெங்கட் பிரபுவும் தங்கள் தந்தையர்கள் SPB மற்றும் கங்கை அமரனை கிண்டலடித்தார்கள், “பழைய ஸ்கூட்டரை தள்ளிய கதை, பெட்ரோலுக்கு காசில்லை என்று பழையதைச் சொல்லி அறுக்காதீர்கள்!” 1960/70 களில் நம்முடைய பொருளாதாரம் ஒரு பற்றாக்குறை (scarcity economy) பொருளாதாரமாக இருந்தது. இன்று அது ஒரு மிகையான பொருளாதாரமாக மாறி வருகிறது (surplus economy). கட்டுப்பாடுகள் பற்றாக்குறை பொருளாதாரத்தின் வெளிப்பாடு. பழைய பற்றாக்குறை கண்ணோட்டத்தில் இன்றைய இணையத்தைப் பார்த்தால் அது ஒரு பைத்தியக்கார மருத்துவமனை போலத்தான் காட்சியளிக்கும். இதை அணுக/புரிந்து கொள்ள புதிய கண்ணோட்டம் தேவை.
பொதுவாக, இலவசங்களின் மீது நமக்கு ஒரு அவநம்பிக்கை இருக்கிறது. இலவசமாக ஒரு பொருளோ அல்லது சேவையோ தரப்பட்டால் அந்த பொருள்/சேவையின் தரத்தை சந்தேகப்படும் வாய்ப்பும் உள்ளது. அப்படிப் பார்த்தால், யாஹூவும், விக்கிபீடியாவும் தரத்தில் குறைந்தவையா? இன்று ஒரு MP3மென்பொருள் இயக்கியை (Software media player) யாரும் காசு கொடுத்து வாங்குவதில்லை. அதேபோல, யாரும் இந்தக் கட்டுரையை காசு கொடுத்து வாங்கிய உலாவியால் (browser) படிப்பதில்லை. அதற்காக ஃப்யர்ஃபாக்ஸ் அல்லது க்ரோம் போன்ற உலாவிகளை நாம் குறை சொல்வதில்லை. உலாவிகளில் ஆரம்பித்து இன்று பல இலவசவமாகத் தரப்படும் இணைய மென்பொருள்கள் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இலவச மென்பொருள் அளிப்பதில் ஏன் போட்டி நிலவ வேண்டும்? தீபாவளித் தள்ளுபடி சமாச்சாரத்திற்கே நாம் கடைத்தெருக்களில் கூட்டம் அலை மோதுகிறது. ஏறக்குறைய இணையத்தில் தினமும் தீபாவளிதான். சில இணையதளங்கள் மாம்பலம் ரங்கநாதன் தெருவை விட அதிக நுகர்வோர் வந்து போகிறார்கள். வித்தியாசம் என்னவென்றால், மற்றவருடன் இடிபட வேண்டாம், அனைவரும் மிகவும் சுகமாக சேவைகளை ஒரே தரத்தில் அனுபவிக்கலாம்! “சூர்யாவின் தம்பி வந்திருக்கார், உங்களை அப்புறம் கவனிக்கிறோம்” போன்ற புறக்கணிப்புகள் கிடையாது.
இலவசம் என்றாலே அவநம்பிக்கை கொள்ளும் நாம், நம்மை அறியாமலே ஒரு உயர் தரத்தை மேற்சொன்ன இலவச மென்பொருள்களோடு சம்மந்தப்படுத்துகிறோம். முற்றும் முரண்பாடான விஷயம் அல்லவா? குழப்பமாக உள்ளதல்லவா? சந்தேக மனோபாவம் எப்படி நம்பிக்கையாக மாறியது? என்னதான் நடக்கிறது? இப்படி இலவச மென்பொருள் சேவைகளை அள்ளி வழங்கி, வாடிக்கையாளர்களைக் கவரும் உத்திதான் ‘இணையத்தின் அன்பளிப்புப் பொருளாதாரம்’ (Internet Gift Economy) என்று அழைக்கப்படுகிறது.
ஆரம்ப நாட்களில் இலவச சேவையாகத் தொடங்கிய முன்னோடி, மின்னஞ்சல். முதலில் ஹாட்மெயில், பிறகு யாஹூ மற்றும் ஜிமெயில் மின்னஞ்சல் வந்து இன்று பல கோடி மக்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வியாபார சம்மந்தப்பட்ட செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பல கோடி மக்களின் மின்னஞ்சல் மற்றும் புகைப்படங்களை சேகரிப்பதற்கு ராட்சச வழங்கி கணினி வயல்கள் (server farms) தேவை. அவற்றைப் பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எதற்காக இலவசமாக இவர்கள் இந்தச் சேவையைக் கொடுக்கிறார்கள்? இவர்களுக்கு வருமானம் எப்படிக் கிடைக்கிறது?
உதாரணத்திற்கு, மென்பொருள் உலாவிகளை எடுத்துக் கொள்வோம். ஃபயர்ஃபாக்ஸ் இன்று பல கோடி மக்களால் உபயோகிக்கப்படுகிறது. இதை உருவாக்கிய மாஸில்லா என்னும் அமைப்பு லாப நோக்குடன் இயங்குவதில்லை. அதே போல பல கோடி இணைய நுகர்வோரைக் கொண்ட க்ரோம் உலாவி கூகிளின் அன்பளிப்பு. போட்டி என்னவோ எந்த மென்பொருள் உலாவியை அதிகம் நுகர்வோர் உபயோகிக்கிறார்கள், எது மிகவும் வேகமாக செயல்படுகிறது போன்ற விஷயங்களுக்காக. இதில் மென்பொருளை உருவாக்கிய நிறுவனங்களுக்கு என்ன ஆதாயம்? தள்ளுபடி விற்பனையில் பலருக்கும் வரும் சந்தேகம், ‘வியாபாரி, விலையை உயர்த்தி, பிறகு குறைப்பது போல நடிக்கிறார்’ என்பது. இலவசத்தில் சந்தேகம் அதிகரிக்க வேண்டுமல்லவா? அதுவும் போட்டி வேறு இருந்தால், கேட்க வேண்டுமா? ஏதாவது மேற்கத்திய சதியா? நிச்சயமாக இல்லை.
அமேஸான் இணையதளத்திற்கு சென்றால், புத்தகத்தின் அறிமுகத்தை ஒரு ட்ரெய்லர் போல படிக்க அனுமதிக்கிறார்கள். கூகிளிலோ, பல பழைய புத்தகங்களின் சில அத்தியாயங்களை வருடி (scanned books) படிக்க அனுமதிக்கிறார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் ஐடியூன்ஸ் இணையதளத்தில் பல பாட்காஸ்டுகள் இலவசம். யூட்யூபிலோ, பிகாஸாவிலோ எல்லாமே இலவசம். அதே போல வெப்எம்டி போன்ற இணையதளங்கள் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்குகிறார்கள். விக்கிபீடியா போன்ற அமைப்புகள் இலவச தகவல் மூலம் அறிவூட்டுகிறார்கள். செயல்முறை விளக்கங்களை போன்ற இணையதளங்கள் செயல்முறை அனிமேஷனோடு அழகாகப் பளிச்சென்று புரியும்படி செய்துவிடுகிறார்கள். ஆங்கிலத்தில் சொல்வார்கள் you can’t argue against free! முன்னமே நாம் ‘சொல்வனத்தில்’ விவரித்தது போல, இணைய விளம்பரங்களுக்கு இடம் பிடிக்க காசு கொடுக்கத் தேவையில்லை. அமேஸானில் பழைய புத்தகம் இருக்கிறது, ஈபேயில் 2005 மாருதி இருக்கிறது என்று விளம்பரம் செய்ய எந்த செலவும் இல்லை. விற்றால்தான் அவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும்.
தீபாவளிக்குத் தள்ளுபடியை முன்னிட்டு கூட்டம் வருவது போல, முக்கியமாக மேல் சொன்ன இணையதளங்கள் கூட்டம் சேர்க்கவே இப்படிச் செய்கின்றன. இத்தனை செலவு செய்து கூட்டம் சேர்த்தாகிவிட்டது. அதை வைத்து என்ன செய்வது? இதில் பல வியாபார உத்திகள் மறைந்து உள்ளன. சில, மிகவும் எளிதான உத்திகள். சில சிக்கலானவை. எது எப்படி இருந்தாலும், வியாபார முறைகளைப் பற்றி புரட்சிகரமாக சிந்திக்க இந்த அணுகுமுறைகள் மிகவும் உதவியுள்ளன. சில வியாபாரங்கள் இம்முறைகளால் பயனடைந்துள்ளன. பல வியாபாரங்கள் தங்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று ஒதுங்கி வேடிக்கை பார்க்கின்றன. அப்படி வேடிக்கை பார்த்த பல வியாபாரங்கள் இன்று தடுமாறவும் செய்கின்றன. இது ஏதோ மேற்கில் நடக்கும் அதிசயம் என்று இந்தியர்கள் மெத்தனமாக இருக்க முடியாது. “அட போங்க ஸார். நம் நாடு ஏழை நாடு. இதெல்லாம் பணக்கார நாட்டு சமாச்சாரம்” என்றும் ஒதுக்க முடியாது. ஏனென்றால், இணையத்தில் பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் கிடையாது. அனைவருக்கும் பல சேவைகளும் இலவசம் – அதனால், எல்லோரும் சமம். இணையத்தின் பறந்த வீச்சு நாம் எதிர்பார்ப்பதைவிட சீக்கிரத்தில் நம்மை தாக்க வாய்ப்பிருக்கிறது. இவ்வகை வியாபார உத்திகளைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. முக்கியமாக, இக்கட்டுரையை படிக்கும் வாசகர்கள் ஏதாவது வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கலாம். இக்கட்டுரை உங்களை உங்கள் வியாபார முறைகளை பற்றிச் சிந்திக்க வைத்து சில கேள்விகளை உங்கள் மனதில் தோற்றுவித்தால் அதுவே உங்களது வெற்றியின் முதல் படி.
எப்படிப்பட்ட கேள்விகள்?
1) உங்களது வியாபாரத்தின் மிக முக்கிய ஒரு வணிக செய்முறையை (commercial procedure/process) தலைகீழாக எப்படி மாற்றுவது? உதாரணத்திற்கு, வாடிக்கையாளர்களின் விற்பனை ஆணைகளை (sales orders) ஏன் வாடிக்கையாளர்களே எந்நேரத்திலும் நிரப்பக் கூடாது?
2) உங்களது பொருட்களை/சேவைகளை உங்கள் வாடிக்கையாளர்கள் ஏன் விமர்சனம் செய்யக் கூடாது?
3) நீங்கள் சினிமா எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 4 பாடல்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். ஏன், இணையத்தின் மூலம் பாடல் சூழலை விளக்கி நல்ல பாடலை யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று போட்டி வைக்கக் கூடாது? இலவசமாக அருமையான பாடல்களைப் பெற வாய்ப்பு உங்களுக்கு. வளரும் கவிஞருக்கு உங்கள் திரைப்படத்தில் வாய்ப்பு.
4) உங்கள் நிறுவனத்தின் பொருளைப் பற்றிய விமர்சனத்தை ஏன் உங்களது இணையதளத்தில் தைரியமாக வெளியிடக்கூடாது?
5) உங்களது நிறுவனத்தில் நடக்கும் சில வேலைகளை ஏன் உங்களது நுகர்வோரிடமே விட்டுவிடக்கூடாது? உதாரணத்திற்கு, உங்கள் நிறுவனம் பொறியியல் நிறுவனங்களுக்கு பாகங்களை விற்கிறது என்று வைத்துக் கொள்வோம். வாங்கும் நிறுவனங்களுக்கு கையேடு (parts manual) ஒன்றை வருடா வருடம் அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஏன் உங்கள் நுகர்வோரே அவர்கள் செளகரியப்படி உங்களது இணையதளத்தில் தேடும் வசதியோடு கையேடு உருவாக்கி அவர்களது ஆணை முறைகளை எளிதாக்கக் கூடாது?
அட, ஜாலியாக சொல்வனத்தில் ஏதாவது படிக்கலாம் என்று வந்தால் தலைகீழ் யோசனை எல்லாம் பண்ண சொல்லி கலாய்க்கிறானே என்று தோன்றினால், அது இயற்கையான ஒரு ரியாக்ஷன்தான். ஆனால், இந்த இலவசங்களின் பின்னால் இப்படிப்பட்ட அசெளகரிய சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன. இக்கட்டுரையின் இறுதியில் இணையத்தைக் கருத்தில் கொண்டு உங்கள் வியாபாரத்தைப் பற்றி எப்படி சிந்திக்கலாம் என்று மேலும் சில யோசனைகள் தர முயற்சிக்கிறேன்.
(தொடரும்)