“மூடிய அரசுகளைத் திறக்கும் தொழில்நுட்பங்கள்” கட்டுரையை முன்வைத்து நான்குவிதமான கேள்விகள் வந்தன.
ஒன்று: ஜனநாயக புரட்சி என்று தோன்றினாலும் அதன் மூலம் உருவாகும் அரசு அடிப்படைவாத இஸ்லாமிஸ்டுகள் கையில் போய்விடாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படிப்போகும் பட்சத்தில் அது மீண்டும் மத சர்வாதிகாரத்தை நோக்கிய சரிவுதானே? இந்த புரட்சிகளின் தாக்கம் பிற அரபு நாடுகளில் எந்த அளவுக்கு இருக்கப்போகிறது?
இரண்டு: ஜனநாயகம் எல்லா அரபு நாடுகளுக்கும் அவசியமா என்ன? பொருளாதாரம் நன்றாய் இருக்கும் நாடுகளில் ஜனநாயகம் இல்லாவிட்ட ல் என்ன குடிமுழுகி விடப்போகிறது?
மூன்று: இஸ்லாமிய அரசுகளில் ஜனநாயகம் வருவது சாத்தியம்தானா?
நான்கு: ரஷ்யாவும் சீனாவும் இந்தப்புரட்சிகளை எப்படிப்பார்க்கின்றன? அரபு அரசியலில் இந்நாடுகளின் பங்கு எந்த வகையில் இருக்கப்போகிறது?
இந்த நான்கு அம்சங்களையும் முக்கியமான விவாதப்பொருட்களாக இந்தக் கட்டுரை விரித்துப் பேசுகின்றது.
முதல் கேள்வி, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பாலிஸி அமைப்புகளிலேயே கடுமையாய் விவாதிக்கப்பட்டு வரும் ஒன்றுதான். ஜனநாயகப்புரட்சிகள் மதவாதிகளால் கடத்தப்பட்டதற்கு மிகச்சமீப கால உதாரணம் அல்ஜீரியா.
அரபு சமூகங்களின் இஸ்லாமிஸ்டுகளின் பங்கு
அல்ஜீரியா வட ஆப்பிரிக்க நாடு. இதன் மேற்கே மொராக்கோவும் கிழக்கே டுனீஷியாவும் லிபியாவும் இருக்கின்றன. இன்றைய எகிப்து போல அன்றைய அல்ஜீரியாவிலும் கணிசமான சதவீதம் இளைஞர் தொகை இருந்தது- வேலை கிடைக்காத, பொருளீட்ட வழியில்லாத, எதிர்காலம் பற்றிய தெளிவோ நம்பிக்கையோ இல்லாத இளைஞர் கூட்டம் அது. ராணுவத்தால் முட்டுக்கொடுக்கப்பட்ட அல்ஜீரியாவின் ஒரு-கட்சி சர்வாதிகாரத்தை எதிர்த்து 1988-இல் மக்கள் புரட்சி வெடித்தது. இதைத்தொடர்ந்து பல கட்சி ஜனநாயகம் அமல்படுத்தப்பட்டது. 1989-இல் இதற்கான அரசியல் சாஸனம் இயற்றப்பட்டது. 60 அரசியல் கட்சிகள் முளைத்தன. ஆனால் 1990-இல் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் மிகப்பெரும்பான்மையான இடங்களை யாருமே எதிர்பார்த்திராத விதத்தில் இஸ்லாமிய ஸால்வேஷன் முன்னணி (ISF) என்கிற இஸ்லாமிஸ்டுகளின் கட்சி வென்றது. 1991-இல் அல்ஜீரியா பொதுத்தேர்தல் நடந்தது. இதன் முதல் கட்ட வாக்குப்பதிவிலும் ISF முன்னணியில் வந்தது. இதனை எதிர்பார்க்காத ராணுவம் உடனே தேர்தல்களை தடை செய்தது. அல்ஜீரியாவின் ஜனநாயக பரிசோதனை மூன்று ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இதன் பின் இஸ்லாமிஸ்டுகளுக்கும் ராணுவ அரசுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப்போர் மூண்டு ஏறத்தாழ பத்து ஆண்டுகள் தொடர்ந்தது; பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர்.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த மேற்கு நாடுகளுக்கு அன்று கிடைத்த பாடம்: முஸ்லீம்/அரபு நாடுகளில் கொண்டு வரப்படும் ஜனநாயகம் இஸ்லாமிஸ்டுகள் கையில்தான் அதிகாரத்தைக் கொண்டு சேர்க்கும்; அது ஜனநாயக மரபுகளுக்கே உலை வைப்பதாக முடிந்து விடும் என்பதாக ஆனது. பின்னர் பாலஸ்தீனத்தில் நடந்த ஜனநாயகத் தேர்தலில் பயங்கரவாதக்கட்சியென்று பெயர் பெற்ற ஹமாஸ் வென்ற நிகழ்வு ஐரோப்பிய அமெரிக்க பாலிஸி அமைப்புகளில் இந்த சிந்தனையை மேலும் வலுப்படுத்தியது. (ஹமாஸிற்கு ஈரானின் ஆதரவு இருப்பதும், ஈரான் இஸ்ரேலை ஒழிக்க வேண்டும் என்று கறுவி வருவதும், ஷியா ஈரான் அமெரிக்காவின் சுன்னி அராபிய நட்பு நாடுகளுக்கும்- குறிப்பாக சவுதி அரேபியாவிற்கு- சவால் விடும் இஸ்லாமிய அதிகார மையமாக ஆகக்கூடிய ஆபத்தும், ஹமாஸை அமெரிக்கா ஏற்க முக்கியத்தடைகளாகின்றன.)
இங்கு ஒரு விஷயம் முக்கியமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அல்ஜீரியாவின் அதிகாரபூர்வ மதம் இஸ்லாம். அல்ஜீரிய ராணுவமும் சரி, அதன் முந்தைய சர்வாதிகாரியும் சரி, அல்லது அதன் ஆதரவு பெற்ற தேசிய விடுதலை முன்னணியும் சரி, எல்லா அதிகார அமைப்புகளும் இஸ்லாமிய மயமாகத்தான் இருந்தன. 99% மக்கள் இஸ்லாமியர்கள். இந்நிலையில் இஸ்லாமிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதை ராணுவம் எதிர்த்ததற்கு, அல்ஜீரிய ராணுவம் மதச்சார்பற்ற அரசை விரும்பியது என்று காரணம் சொல்ல முடியாது. இதற்கு மிகவும் நேரடியான வேறொரு காரணம் இருந்தது. ராணுவத்தின் அதிகாரிகள் பல வருடங்களாக பல காண்ட்ராக்டுகளில் பெருமளவு பணம் சுருட்டியிருந்தார்கள், ராணுவத்தின் கையில் சட்டம்/நீதித்துறை, உள்துறை மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகள் இருந்தன. ராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பு துறை காண்ட்ராக்டுகளை எதிர்த்து சட்ட ரீதியாக கேஸ் போட்டு வென்றுவிட முடியாது. இந்நிலையில் ISF தன் தேர்தல் அறிக்கையில் சட்டம்/நீதி மற்றும் உள்துறை அமைச்சகங்களை ராணுவத்தின் பிடியில் இருந்து சிவில் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் என்று அறிவித்தது. இது ராணுவத்தின் அதிகார மையத்திற்கு மிகப்பெரும் அச்சத்தை விளைவித்தது. எந்தக்கட்சியும் அறுதிப்பெரும்பான்மை பெறாமல் கூட்டணி ஆட்சி ஏற்படும், அப்படிப்பட்ட அரசை தன் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற ராணுவத்தின் எண்ணத்தில் இஸ்லாமிய ஸால்வேஷன் முன்னணி பெற்ற அறுதிப்பெரும்பான்மை ஆதரவு, மண்ணை அள்ளிப்போட்டது. ஆனால், எந்த ஒரு கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்று ராணுவத்தின் முக்கிய அமைச்சகங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிவித்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.
அரபு சமூகவியல் நிலை
அல்ஜீரிய ஜனநாயக பரிசோதனையின் விளைவு ஐரோப்பிய/அமெரிக்க நாடுகளுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை. எண்ணெய் ஆதார இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளில் உருவாகும் ஒவ்வொரு கலவரமும் எண்ணெய் விலையையும் அதன் மூலம் உலகப்பொருளாதாரத்தையும் பாதிக்கவல்லதாய் இருந்தன. எனவே அரசியல் ஸ்திரத்தன்மை முதன்மைப்படுத்தப்பட்டு ஜனநாயகப்பரவல் முக்கியமற்றதாய் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டது.
செப் 11-இன் இரட்டைக்கோபுர தகர்ப்பிற்குப்பின் புஷ் அரசு ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பின் மூலம் அந்நாடுகளில் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்தி இஸ்லாமிஸ்டுகளைப் பின்னுக்குத் தள்ளி விட முடியும் எனவும் அதன்மூலம் மத்திய கிழக்கில் ஜனநாயக அலையொன்றைப் பரவச்செய்து விட முடியும் என்றும் கொள்கை ரீதியான முடிவெடுத்தது. (இந்த அணுகுமுறையை புஷ் அரசின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் ஸ்காட் மெக்லிலான் “கட்டாய ஜனநாயகம்”(!) (coercive democracy) என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்). ஆனால் இந்த வகை கட்டாய ஜனநாயகத் திணிப்பு, ஜனநாயக அலையை மத்திய கிழக்கில் உருவாக்குவதற்குப்பதிலாக அமெரிக்கா மீதான அவநம்பிக்கை மற்றும் வெறுப்பு அலைகளைத்தான் பெருமளவில் உருவாக்கின. மட்டுமன்றி புஷ் அரசின் இறுதி நாட்களில் உருவான நிதி நிறுவன சரிவுகளும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அமெரிக்க அரசு 700 பில்லியன் டாலர் வரை முடக்க வேண்டிய அவசியமும் சேர்ந்து கொண்டதில் ஒபாமாவின் அரசு ராணுவச்செலவுகளையும் போர்களையும் உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அதே சமயம் அரபு நாடுகளில் பெருகிவரும் மக்கள் தொகை, வேலையில்லாத்திண்டாட்டம், ஏழ்மை, வீட்டுவசதி இல்லாத ஒண்டுக்குடித்தன நிலை, ஆகியவை இளைய சமுதாயத்திற்கு எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையையும் ஆளும் மன்னர் குழுக்களை நோக்கிய ஒரு பெரும் எதிர்ப்பு அலையையும் உருவாக்கிக்கொண்டிருந்தன என்று பல ஆய்வு அறிக்கைகளும் பாலிஸி மையங்களும் தொடர்ந்து சுட்டிக்காட்டியபடியே இருந்தன.
தொலைக்காட்சியை அனுமதித்தன் மறைமுக விளைவாக 1975-இல் சவுதி மன்னர் பய்ஸல் கொல்லப்பட்டார். ஆனால் இன்று அரபு நாடுகளில் தொலைக்காட்சி சாதாரணமாக ஆகி விட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாய் இன்று இண்டர்நெட் போன்ற மாற்று ஊடகங்களும் வேகமாய்ப்பரவி வருகின்றன. இவை பிற நாடுகளின் இளைஞர்களுக்குக் கிடைத்து தமக்குக்கிடைக்காமலேயே போய்க்கொண்டிருக்கும் பல விஷயங்களை அவர்களுக்கு வெளிச்சம் போடுகின்றன. சமுதாயம், பொருளாதாரம், அரசியல் ஆகிய மூன்று அதிகார தளங்களிலும் உலகின் பிற வளர்ந்து வரும் நாட்டு மக்களுக்குக் கிடைத்து வரும் புதிய வாய்ப்புகள் தமக்குக்கிட்டாத நிலை அவர்களுக்குத் தெரிந்து விட்டிருக்கின்றது. மதவாதப்பழமையின் கட்டுப்பெட்டித்தனத்துக்கும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மைக்கும் நவீன வாழ்க்கை வசதிகள் குறித்த கனவுகளுக்கும் இடையே அரபு இளைய சமுதாயம் அலைக்கழிக்கப்படுகின்றது. அரபு நாடுகளில் இருபத்தைந்து வயதுக்குட்பட்டோர் 60 சதவீதம். ஆனால் பல நாடுகளில் மூன்றில் ஒருவருக்கு வேலையில்லை என்கிற அளவுக்குக்கூட வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடும் நிலை.
இதில் ஒரு முக்கியமான ஆனால் அதிகம் கவனிக்கப்படாத ஒரு பரிமாணம் உண்டு. அது அரபு இளைஞர்கள் வயது மிகவும் தள்ளிப்போய் திருமணம் செய்ய வேண்டிய நிலை. எகிப்து போன்ற பெரும்பான்மையான நாடுகளில் முப்பதை அடையும்வரை திருமணம் என்பதையே நினைத்துப்பார்க்க முடியாத நிலை இளைஞர்களுக்கு இருக்கிறது. எகிப்தில் ஓர் ஆண்டு வருமானத்தை விட நான்கு மடங்கு ஒருவன் திருமணம் செய்ய செலவழிக்க வேண்டி உள்ளது. மொராக்கோ இளைஞனின் சராசரி திருமண வயது 32 என்கிறது நியுஸ்வீக் செய்தி ஒன்று. கடந்த முப்பது வருடங்களில் ஏற்பட்டு விட்ட பண வீக்கத்தால் திருமண செலவு பெருமளவு அதிகரித்திருக்கிறது, குடும்பம் நடத்த ஆகும் செலவும் அதிகரித்திருக்கிறது, ஆனால் வேலைக்கான சம்பளம் மட்டும் முப்பதாண்டுக்கு முன்னிருந்த அதே நிலையில் இருக்கிறது என்கிறது புரூக்கிங்க்ஸ் நிறுவன கொள்கைத்திட்ட ஆய்வு நூல் ஒன்று (பார்க்க: Freedom’s Unsteady March by Tamara Cofmen Wttes).
இஸ்லாமிய ஒழுக்க இறுக்கம், ஷரியா சட்ட திட்டங்கள், பழங்குழு (tribal) கட்டுப்பெட்டித்தனங்கள், குடும்ப மரியாதை (family honour) ஆகியவைகளில் பிணைக்கப்பட்டுக் கிடக்கும் சாதாரண அரபு இளைஞனுக்கு சட்டமும் சமூகமும் ஏற்கும் வகையில் ஒரு பெண்ணின் அணுக்கம் கிடைக்க ஏறக்குறைய 30 வயது வரை காத்திருக்க வேண்டும்.
ஜனநாயகம் என்கிற மாற்று வெளி
ஒருபக்கம் படித்தாலும் வேலையில்லை என்னும் நிலை, மறுபுறம் வேலை கிடைத்தாலும் குடும்ப பாரத்தில் சம்பளம் முழுவதும் செலவாகும் நிலை, பாதிக்கிழவனாகி திருமணம் செய்ய வேண்டிய எரிச்சல் ஆகிய அனைத்தும் சேர்ந்தும் அரபு நாடுகளின் இளைஞர்களை கையாலாகாத கோபத்திற்குள் தள்ளுகிறது. அந்தக் கோபத்திற்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்திற்குள் எளிதாக வந்து சேர்ந்து விடலாம். ஏன்?
ஏனெனில், ஒவ்வொரு சர்வாதிகார அரபு நாட்டிலும் சர்வாதிகார அரசுக்கு எதிராக குரல் எழுப்ப அனுமதிக்கப்படும் ஒரே இடம் மசூதி மட்டுமே. இஸ்லாமிய வெளியில் நின்றுகொண்டு மட்டுமே ஒருவன் அரசாங்கத்தை விமர்சனம் செய்ய முடியும். அரசைக்கேள்வி கேட்பதற்கு முன்னால் இஸ்லாமிய வளையத்திற்குள் இருக்கிறோமா என்று அவன் சரிபார்த்துக்கொண்டு விட வேண்டும். அங்கே நின்றுகொண்டு அரசு அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்டால் மட்டுமே அது செவிமடுக்கப்படாவிடினும் தண்டிக்கப்படாமலாவது இருக்கும். ஏனெனில் மற்ற எல்லா எதிர்ப்பு வெளிகளும் அவனுக்கு தீர்மானமாக அடைக்கப்பட்டு விட்டிருக்கின்றன. ஆக, இஸ்லாமிஸ்டாக இல்லாமல் இருக்கும் ஒருவன் கூட இஸ்லாமிஸ்டுகளின் களத்துக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டு அரசைக் கேள்வி கேட்பதே அவனுக்குப் பாதுகாப்பு என்கிற நிலை இருக்கின்றது. இஸ்லாமிய அடிப்படைவாதம் அந்த அளவுக்கு காணப்படாத எகிப்தில்கூட இதுதான் உண்மை.
ஹார்வர்டின் மெஷ் அமைப்பின் (MESH-Middle East Strategy at Harvard) உறுப்பினர் ஸ்காட் கார்ப்பெண்டர் கெய்ரோவில் தனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறார். தனது நண்பருடனும் அவரது கெய்ரோ நண்பியிடமும் உணவருந்தச் செல்கிறார். கெய்ரோ நண்பி மிகவும் நவீனமானவள். பிரிட்டிஷ்காரனை காதலிப்பவள். வைன் அருந்துபவள். புர்கா கிடையாது; ஜீன்ஸ் உண்டு. மொத்தத்தில் மேற்கத்திய நாகரீகம் சார்ந்த மேல்தட்டு அடுக்கைச் சேர்ந்தவள். அவளுடன் பேசிக்கொண்டிருக்கையில் பேச்சு அரசியலை நோக்கித் திரும்புகிறது: ”இன்றைய நிலையில் தேர்தல் வந்தால் யாருக்கு உன் ஓட்டு” என்று கேட்கிறார். அவள் ஒரு நிமிடம் கூடத்தயங்காமல் ”முஸ்லீம் சகோதரத்துவம் (Muslim Brotherhood)” என்று சொல்லி அவரை அசர வைக்கிறாள். காரணம், ”அரசாங்கம் என்ற பெயரில் நடக்கும் சுரண்டலை அவர்களால்தான் ஒழித்துக்கட்ட முடியும்” என்று சொல்கிறாள். இத்தனைக்கும் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்புக்கு எகிப்தில் அரசியல் அங்கீகாரம் கிடையாது.
இந்த நிலைக்கு முதற்காரணம் மதம் என்கிற வட்டத்தை விட்டு வெளியே இயல்பாக வளர்ந்திருக்கக்கூடிய பரவலான ஜனநாயக இயக்கங்களுக்கு எகிப்தின் அரசியலில் போதுமான இடம் அளிக்கப்படவில்லை என்பதே. எகிப்திலேயே இந்த நிலை என்றால், மத்திய கிழக்கின் பிற இஸ்லாமிய அடிப்படைவாத அரபு நாடுகளுக்கு இன்னும் அதிகமாகவே இது பொருந்தும்.
அரபு மன்னர்களின் அணுகுமுறை
அரபு நாடுகளின் மன்னர்களுக்கும் இந்த உண்மை புரிந்தே இருக்கிறது. பல அரபு நாடுகள் – குறிப்பாக துபாய் போன்ற எமிரக அரசுகளும், கத்தார் போன்ற நாடுகளும் அரபு நாடுகளில் ஜனநாயகம் குறித்து மேற்கு நாடுகளுடனும் அமெரிக்க பல்கலைகளுடனும் இணைந்து பல கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஒரு காலத்தில் எதிர்க்கப்பட்ட தொலைக்காட்சியை இன்று கத்தார் அரசு வெற்றிகரமாக உபயோகப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. அல்-ஜஸீரா கத்தார் அரசு நிதியுதவியில் தொடங்கி நடத்தப்பட்டு வரும் சேனல் ஆகும்.
இந்த முனைப்புகளின்பின் இருப்பது உண்மையில் தற்காப்பு உணர்ச்சியே என்பதை அடிக்கோடிட வேண்டும். சிறிய போலீஸ் படையை வைத்துக்கொண்டு பெருகி வரும் அதிருப்தி நிறைந்த ஒரு இளைஞர் கூட்டத்தை அடக்கி வைப்பது என்பது உண்மையில் மதவாதிகளின் கரத்தை வலுப்படுத்தி அவர்களை அரசுக்கு இணையான சக்தி வாய்ந்த மாற்று அதிகாரக்குவியமாக ஆக்குகின்றது என்பதை அரபு அரசுகள் உணர்ந்தே இருக்கின்றன. இந்த அதிகார மையத்துக்கு மாற்றாக இன்னொரு அதிகார மையத்தை உருவாக்குவதன் அவசியத்தை அரபு நாட்டு சர்வாதிகார அரசுகள் உணரத்தொடங்கி உள்ளன. ஏனெனில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கொம்பு சீவப்படும் இளைஞர் கூட்டம் ஒரு கட்டத்தில் தன்மீதே பாயலாம் என்பதை மத்திய கிழக்கின் சர்வாதிகார அரசுகள் உணர்ந்தே இருக்கின்றன.
புதிய ஆட்டக்களன்
எகிப்தின் புரட்சி படிப்படியாக அத்தனை சர்வாதிகார அரபு நாடுகளையும் கவிழ்த்து விடும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமல்ல. வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு என்று இஸ்லாமிய/அரேபிய பகுதிகள் சொல்லப்பட்டாலும். வட ஆப்பிரிக்காவிற்கும் மத்திய கிழக்கிற்கும் (அதாவது எகிப்திற்கு கிழக்கே, எகிப்திற்கு மேற்கே எனலாம்) அவற்றின் சமூக, அரசியல் வரலாற்றை ஒட்டி பல வேறுபாடுகள் உள்ளன. எகிப்திற்கு கிழக்கில் மத்திய கிழக்கில் புகுந்து போகப்போக இது போன்ற புரட்சிகள் எளிதாக வெற்றி பெறுவது கஷ்டம். இருந்தாலும் ஜனநாயகம் என்ற காற்று வீசத்தொடங்கி விட்டதை அமெரிக்காவோ ஐரோப்பாவோ –ஏன் அரபு அரசுகளோ கூட- தடுக்க முடியாது, (அல்லது அவ்வாறு தடுப்பதற்கு மிக அதிக விலை கொடுக்கப்பட வேண்டியியிருக்கும். அது அந்த அரசுகளுக்கே பாதகமாய்க்கூட முடியலாம்) ஆனால் இந்த அரசுகள் அந்தக்காற்றை தன் பாய்மர ஓட்டத்திற்கு ஏதுவாக உபயோகப்படுத்திக்கொள்ள முடியும். அந்தக்காற்றில் பரவும் மணம் எதுவாக இருக்க வேண்டும் என்பதைத் தன் கட்டுக்குள் வைத்திருக்க சகல முயற்சியும் எடுக்க முடியும்.
அதன் ஒரு பகுதியாகத்தான் USAID என்கிற அமெரிக்க வெளியுறவுத்துறை சார்ந்த அமைப்பின் மூலமும், அமெரிக்க காங்கிரஸால் நிதி உதவி தரப்படும் “ஜனநாயகத்திற்கான தேசிய நிதி அமைப்பு” – National Endowment for Democracy – என்கிற தனியார் அமைப்பின் மூலமாகவும் உலக அளவில் ஜனநாயகப் பரவலுக்கு என்று தனியாக நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகிறது. இரண்டு அமைப்புகளின் கைவசம் ஏறக்குறைய 900 மில்லியன் டாலர்கள் உள்ளன. குடிமைச்சமூகம் – Civil Society- திட்டம் மூலம் அரபு நாடுகளில் ஜனநாயகப்பரவலுக்கு என்று இந்த ஆண்டு பட்ஜெட்டில் 104 மில்லியன் டாலர்கள் ஒதுக்க தற்போதைய கேட்கப்பட்டுள்ளதாக அசோஸியேடட் ப்ரஸ் செய்தி தெரிவிக்கிறது. எகிப்தில் உருவான ஜனநாயகப்புரட்சிக்குப்பின்னால் உள்ள பல இளைஞர்கள் குடிமைச்சமூக திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்று இப்போது வெளிப்படையாகவே செய்திகள் வெளியாகத்தொடங்கி விட்டன. (பார்க்க: http://articles.sfgate.com/2011-03-12/world/28685046_1_arab-leaders-arab-street-egypt). அமெரிக்கா மட்டும்தான் என்றில்லை, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் ஆகிய நாடுகளும் இது போன்ற அரபு நாடுகளை நோக்கிய ஜனநாயகப்பரவலுக்காக நிதியமைப்பு ஒன்றை ஏற்படுத்தி செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக இந்த அமைப்பின் நிதி ஆதாரத்துக்காக அரபு அரசுகளையும் பணம் போட வைக்க வேண்டும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
இத்தனை நாட்கள் சர்வாதிகார அதிகார மையங்களை ஆதரித்து வளர்த்து விட்ட மேற்குலகு இப்போது ஜனநாயகப்பரவல் என்பதை மையமாக்கி ஒரு புதிய ஆட்டக்களனை உருவாக்க முனைந்திருக்கிறது என்றுதான் இதனைப்புரிந்து கொள்ள வேண்டும். அரபு அரசியலில் மதவாத இஸ்லாமிஸ்டுகளுக்கு என்று இருக்கும் போட்டியில்லா அரசியல் வெளியை மேற்கின் ஜனநாயக முனைப்புகளில் பட்டை தீட்டப்பட்ட ஒரு இளைஞர் அணியைக்கொண்டு எதிர்கொள்வதே இதன் நோக்கம்.
இந்த ஜனநாயக முனைப்புகளின் ஆரம்ப நிலை அரசியல் வெற்றிகள் “மிதவாத” இஸ்லாமிஸ்டுகளைப் போய் சேர்ந்தால் கூட அதுவும் வெற்றியே என்று பார்க்கின்றன மேற்கின் கொள்கைத்திட்ட (பாலிஸி) அமைப்புகள். இதற்கு ஒரு காரணத்தையும் சொல்கின்றன. இஸ்லாமிஸ்டுகள் என்று எல்லா அரசியல் இஸ்லாமிய குழுக்களையும் ஒன்றாக பொதுமைப்படுத்துவது மிதவாத இஸ்லாமிஸ்டுகளையும் (உ-ம். எகிப்தின் முஸ்லீம் சகோதரத்துவம்), தீவிரவாத இஸ்லாமிஸ்டுகளையும் (உ-ம் பாலஸ்தீனத்தின் ஃபாட்டா கட்சி) , பயங்கரவாத இஸ்லாமிஸ்டுகளையும் (உ-ம் அல்-க்வைதா) ஒரே மாதிரி எடைபோட்டு ஒரே அணியில் வைப்பது பயங்கரவாத இஸ்லாமிஸ்டுகளுக்கு லாபமாகி விடுகிறது; மாறாக ஓட்டு ஜனநாயகத்தில் முதல் இரண்டு தரப்பினரையும் பங்கெடுக்க வைத்தால், அது பயங்கரவாத இஸ்லாமிஸ்டுகளைத் தனிமைப்படுத்துவதோடு, பிற ஜனநாயக குரல்களுக்கும் அரசியல் வெளி ஒன்றை ஏற்படுத்தித்தரும், இது ஆரம்பத்தில் ”மிதவாத” இஸ்லாமிஸ்டுகளுக்கு உதவினாலும் போகப்போக ஜனநாயக அமைப்புகள் வலுப்பெறுவதற்கும், மத இறுக்கங்கள் குறையவும், ஒட்டு மொத்த சமூக இளகலுக்கும் பெரிதும் உதவும் என்பதே இதற்குப்பின்னால் உள்ள தர்க்கமாகும்.
விலை குறைந்த சேஃப்டி வால்வ்
இந்த தர்க்கம் சரியானதா இல்லையா என்பது விவாதத்துக்குரியது. ஏனென்றால் முஸ்லீம் சகோதரத்துவம் எகிப்தில் வேண்டுமானால் மிதவாதத்தைக் கடைப்பிடிக்கலாம், ஆனால் வன்முறையை வெளிப்படையாகவே ஆதரிக்கும் தரப்பு அது; பிற நாடுகளில் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டிருக்கின்றது. அதேபோல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பாக இருந்தாலும் பாலஸ்தீனத்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாகவும் இருக்கிறது – ஆட்சிக்கு வந்தபின்னும் வன்முறையை விட்டுவிடவில்லை. என்றாலும் மேற்கு நாடுகள் இந்த ஜனநாயக முயற்சியில் இறங்கக் காரணம் – அரபு இளைஞனின் அதிருப்தியையும் கட்டுக்குள் வைக்கவும், மன அழுத்தம் வெடிக்காமல் பாதுகாப்பான விதத்தில் வெளியேற்றப்படவும் இதை விட வேறு “விலை குறைந்த” வழி அவைகளுக்கு இன்றைய நிலையில் எதுவுமே இல்லை என்பதுதான்.
“விலை குறைந்த வழி” என்பது இன்றைய தேதியில் அமெரிக்காவிற்கும் சரி, ஐரோப்பிய யூனியனுக்கும் சரி, மிக மிக முக்கியம். ஐரோப்பிய யூனியனின் நிதி ஆதாரமே ஆட்டம் கண்டு இருக்கிறது. போர்ச்சுகல், அயர்லாந்து, இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் என்று பல நாடுகளில் பரவிவரும் அரசுப் பொருளாதார திவால் நிலையானது ஐரோப்பிய மைய வங்கியின் ஆரோக்கியத்தையும் ஐரோப்பிய யூனியன் மற்றும் யுரோவின் எதிர்காலத்தையுமே கேள்விக்குள்ளாக்கி விட்டிருக்கின்றன. ஆனால் அரபு நாடுகளின் அரசியல் என்பது – எண்ணெய் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பிருந்தேகூட- ஐரோப்பாவாலும், பழைய சோவியத் யூனியனாலும், அமெரிக்காவுலும் செதுத்தப்பட்டும் செலுத்தப்பட்டுமே இன்றைய நிலையை அடைந்திருக்கின்றன.
(தொடரும்)