அதற்கு மேல், கலைஞர்கள் தம் திறமைகளை முழுநேரமும் பயன்படுத்தி எதையும் படைக்க முடியாமல் இருப்பது எத்தனை மோசமான ஒரு நிலை, எல்லாவற்றையும் செய்யச் சிலரே இருக்கும்போது, என்னையும், கேட்டியையும் போல மிகச் சிலரே சுதந்திரமாக இருக்க முடிகிறபோது, எல்லாம் கடினமாகத் தெரிகிறதென்பதை விளக்க முயன்றேன். பின் எங்கள் அரசு அமைப்பை விளக்க முயன்றேன். இரு அவைகள், ஒன்று தொழில் நிபுணர்களுக்கு, ஒன்று நிலப்பகுதி வாரிப் பிரதிநிதிகளுக்கு என்று இருப்பதை. தனி நகரங்களால் கையாள முடியாத விஷயங்களை மாவட்டக் குழுமங்கள் கையாள்வது எபபடி என விளக்கினேன். மேலும் விளக்கியவை – இன்னும் மக்கள் தொகைக் கட்டுப்பாடெல்லாம் அரசியல் பிரச்சினையாக இல்லை, ஆனால் இன்னும் கொஞ்ச காலத்தில் அந்த நிலை எழவே செய்யும். நாங்கள் வரலாற்றில் ஒரு ஊசலாட்டக் கட்டத்தில் இருக்கிறோம்; இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது எங்களுக்கு. தொழில்துறை மையமுள்ள வாழ்வுக்கு நகர்வதற்காக, புத்தி பேதலித்து அவசரப்படத் தேவை இல்லை, வாழ்வுத் தரங்களை பலியிடத் தேவை இல்லை. எங்களுடைய வேகம் எங்களுக்கு. இன்னும் அவகாசம் தேவை…..
”எல்லா மனிதர்களும் எங்கே?” தன் நோக்கிலேயே கவனமாக இருந்தவன் கேட்டான்.
எனக்குப் புரிந்தது, அவன் மனிதர்களைப் பற்றிக் கேட்கவில்லை, ‘ஆண்களை’க் கேட்கிறான். வைலவேயில் அந்தச் சொல்லுக்கு ஆறு நூற்றாண்டுகளாக அந்த அர்த்தம் இல்லாமலிருந்தது, அந்த அர்த்தத்தைக் கொணர்கிறான்.
”அவர்கள் இறந்து விட்டார்கள்,” நான் சொன்னேன். “முப்பது தலைமுறைகளாச்சு அது நடந்து.”
அவனைப் பார்த்தால் நாங்கள் அவனை ஒரு கோடரியால் வெட்டி வீழ்த்தினாற்போலத் தெரிந்தான். சுவாசிக்க முடியாமல் திணறினான். உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்க முயன்றான்; மார்பில் தன் கையை வைத்துக் கொண்டான்; எங்கள் எல்லாரையும் ஒரு சுற்று சுற்றிப் பார்த்தபோது அவன் பார்வையில் பெரும் வியப்பும், உணர்ச்சிவசப்பட்ட மென்மையும் கலந்திருந்தன. மிக உண்மையாக உணர்ந்தது போல, மிக்க உன்னிப்போடு சொன்னான்:
“மிகப் பெருஞ் சோகம்.”
நான் சற்றுப் பொறுத்தேன், அவன் சொன்னது இன்னும் புரியாதிருந்தது.
“ஆமாம்,” அவன் சொன்னான், தன் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான், ஒரு கோணல் புன்னகை செய்தான், வளர்ந்தவர்கள் குழந்தைகளிடமிருந்து எதையோ மறைத்து வைத்து விட்டு, திடீரென்று உற்சாகத்தோடும், குதூகலத்தோடும் காட்டுவதற்குச் சற்று முன் மர்மப் புன்னகை செய்வார்களே அது போல இருந்தது, “பெரிய சோகம்தான். ஆனால் அந்த சோகம் முடிவுக்கு வந்து விட்டது.” மிக்க மரியாதையோடு எங்கள் எல்லாரையும் ஒரு சுற்று கனிவாகப் பார்த்தான், ஏதோ நாங்களெல்லாம் ஊனமானவர்களைப் போல.
”நீங்கள் சமாளித்திருப்பது பிரமாதமானது,” என்றான்.
“எதைச் சமாளித்தோம்?” என்றேன். அவன் கொஞ்சம் சங்கடப்பட்டாற்போல இருந்தது. பித்துப் பிடித்தவன் போலிருந்தான். இறுதியில் சொன்னான்,’எங்கள் ஊரில், பெண்கள் இத்தனை சாதாரணமாக உடுத்துவதில்லை.’
‘உம்மைப் போலவா?’ நான் கேட்டேன். “மணப் பெண் போலவா?” அவன் தலையிலிருந்து கால் வரை வெள்ளியாக அணிந்திருந்தான். இவ்வளவு பகட்டாக எதையும் நான் பார்த்திருக்கவில்லை. பதில் சொல்ல வாயெடுத்தான், ஆனால் சொல்லாமலிருப்பது மேல் என நினைத்தவன் போல ஆனான்; என்னைப் பார்த்துச் சிரிப்பு ஒன்று விடுத்தான், அதில் ஒரு வினோதக் குதூகலம் இருந்தது-அவனுக்கு ஏதோ நாங்களெல்லாம் குழந்தைத்தனமாகவும், ஆச்சரியமானவர்களாகவும் இருப்பது போலவும், அவன் எங்களுக்கு ஏதோ ஒரு பெரிய உபகாரம் செய்வது போலவும் தோற்றமளித்தான்- ஒரு முறை நீண்ட மூச்சு விட்டு விட்டு, சொன்னான்,’ஏதோ சரி, நாங்கள் இங்கே வந்தாயிற்று.’
நான் ஸ்பெட் ஐ நோக்கினேன், ஸ்பெட் லிடியாவைப் பார்த்தாள், லிடியா அமாலியாவை, அவள்தான் உள்ளூர் கூடடங்கள் நடத்துவதற்குப் பொறுப்பு. என் தொண்டை காய்ந்து போயிருந்தது. எனக்கு உள்ளூர் பியர் கட்டோடு பிடிக்காது, உள்ளூர் குடியானவர்கள் ஏதோ தம் வயிற்றுக்குள் இரிடியம் முலாம் பூசினாற்போல, அதை மொண்டு குடிப்பார்கள். சரி தொலைகிறதென்று அமாலியாவிடமிருந்து (வெளியே பார்த்த பைசிகிள் அவளுடையது.) ஒரு கோப்பை பியரை எடுத்துக் கொண்டேன். அதை முழுக்கக் குடித்தேன். இன்று எல்லாவற்றுக்கும் நிறைய நேரம் ஆகப் போகிறெதென்று தெரிந்தது. நான் சொன்னேன், “ஆமாம், நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்,” கொஞ்சம் சிரித்து வைத்தேன் (முட்டாள் மாதிரி உணர்ந்தபடி). பூமியில் ஆண் மனிதர்களின் மூளை பூமியின் பெண் மனிதர்கள் மூளையிலிருந்து அத்தனை வித்தியாசமாகவா வேலை செய்கிறது என்று யோசித்தேன். அப்படி இருக்க வாய்ப்பில்லையே, அப்படியானால் பூமியில் மனித குலமே எப்போதோ அழிந்து ஒழிந்திருக்குமே. எங்கள் ரேடியோ வலை இதற்குள் இந்தச் செய்தியை கிரகம் முழுதும் பரப்பி விட்டிருந்தது. வார்னாவிலிருந்து இன்னொரு ரஷய மொழி பேசுபவரை பறந்து வரச் செய்திருந்தார்கள். அந்த ஆண் மனிதன் ஏதோ ஒரு மண் மூடிப் போன நம்பிக்கையின் பாதிரியார் போல இருந்த தன் மனைவியின் படங்களை எல்லாரும் பார்க்கக் கொடுத்த போது நான் விலகிப் போனேன். அவன் யுகியிடம் கேள்விகள் கேட்கிறேன் என்று சொல்லவும், அவளைத் தரதரவென்று ஒரு பின்னறையில் ஒதுக்கி வைத்தேன், அவள் ஏகத்துக்கு முரண்டு பிடித்தாள். பின் முன் வாசலில் ஒதுங்கி நின்றேன். நான் போகிற போது லிடியா பாலினக் கூட்டற்ற இனப் பெருக்கத்துக்கும் (பார்தினொஜெனெஸிஸ்-Parthenogenesis) (அது அவ்வளவு சுலபம், யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்) நாங்கள் பயன்படுத்தும் முறைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கினாள்- நாங்கள் சினைமுட்டைகளை இணைப்பது வழக்கம். அதனால்தால் கேடியின் குழந்தை என்னை மாதிரி இருக்கிறாள். லிடியா அதற்கு மேல் ஆன்ஸ்கி முறையை விளக்கிக் கொண்டிருந்தாள். கேடி ஆன்ஸ்கி, எங்கள் உலகின் முழு- அனைத்தும் தெரிந்த மேதை- என் கேதரினாவின் பாட்டிக்கு பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டிக்கு … எத்தனை தலைமுறை முந்தையப் பாட்டி என்பது எங்களுக்கு மறந்து விட்டது.
வெளியில் தள்ளி இருந்த ஒரு கட்டிடத்தில் கட்டுக் கட கட ஒலி கேட்டது, அங்கு செய்தி பரப்பும் ஊழியர்கள் துரிதமாகத் தமக்குள் ஜோக்குகளைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள் போலிருந்தது.
வாயில் முற்றத்தில் ஒரு நபர் நின்றான். அந்த இன்னொரு உயரமான மனிதன். சில நிமிடங்கள் அவனைக் கவனித்தேன் – வேண்டும் போது என்னால் கொஞ்சமும் ஒலியெழுப்பாமல் நகர முடியும்- அவன் என்னைக் கவனிக்கிற மாதிரி நான் நின்ற போது, அவன் தன் கழுத்தில் இருந்த ஒரு சிறு எந்திரத்துடன் பேசுவதை நிறுத்தினான், மிக உயர்ந்த தரமுள்ள ரஷ்யனில் பேசினான், “ பாலினச் சமத்துவம் பூமியில் மறுபடி நிலைநாட்டப்பட்டு விட்டதென்று உங்களுக்குத் தெரியுமா?”
”நீர்தான் நிஜமானவர்!” நான் கேட்டேன், “இல்லையா? அந்த மனிதன் சும்மா அலங்காரப் பொம்மைதானே?” அவன் சுலபமாக ஆமோதித்துத் தலையசைத்தான்.
“ஜனங்களென்று பார்த்தால், நாங்கள் அத்தனை புத்திசாலிகள் இல்லை,” அவன் சொன்னான். “ சென்ற பல நூற்றாண்டுகளில் உயிர்மரபணுக்களில் நிறைய சேதமேற்பட்டிருக்கிறது. கதிரலை வீச்சு. போதை மருந்துகள். வைலவேயின் உயிர்மரபணுக்கள் எங்களுக்கு நிறைய உதவும், ஜேனட்.” முகம் தெரியாத ஆட்கள் அன்னியரிடம் முதல் பெயரைச் சொல்லி அழைப்பது அத்தனை நாகரீகமில்லை.
”விழுந்து மூழ்கிற அளவுக்கு உயிர்மரபணு கிடைக்குமே?” நான் சொன்னேன், “உங்களுடைய உயிர்மரபணுவையே வளருங்களேன்.”
அவன் புன்னகைத்தான். “அந்த வழியே போக நாங்கள் விரும்பவில்லை.” அவனுக்குப் பின்னே கேடி வலைக்கதவு வழியே வீசிய ஒளிச் சதுரத்துக்குள் வருவதைப் பார்த்தேன். அவன் பேசிக் கொண்டு போனான், தணிந்த குரலில், மரியாதை கலந்த மிக்க நாகரீகப்பட்ட பாணியில். என்னை இளக்காரம் செய்வதற்காக இல்லை. எனக்குத் தோன்றியது, அவனிடம் எப்போதும் வசதியாக வாழ்ந்தவனின், நிறைய உடல் வலு இருப்பவனின் சுய நம்பிக்கை வெளிப்பட்டது என்று. ஒருபோதும் இரண்டாம் தரப்பட்டவனாகவோ, சின்ன ஊரிலேயே தேங்கியவனாகவோ அவன் இருந்ததில்லை என்று. இதை நினைப்பதே கொஞ்சம் வினோதமாக இருந்தது, ஏனெனில் அதற்கு முன் தினம் இந்த வருணனை என்னைக் கச்சிதமாக சித்திரித்தது என்று நான் சொல்லி இருப்பேன்.
”நான் உங்களிடம் பேசுகிறேனே, ஜானெட்,’அவன் சொன்னான்,” அது ஏன் தெரியுமா? இங்கு உள்ள எவரையும் விட உங்களுக்கு மக்களிடம் அதிக பிராபல்யம் இருக்கிறது என்று நான் ஊகிக்கிறேனே, அதனால். உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும், பாலினக் கூட்டு இல்லாத இனப்பெருக்கத்தில் ஏதேதோ குறைகளெல்லாம் எழும் என்று. நாங்கள்- அதைத் தவிர்க்க முடியும் என்றால்- உங்களை அந்த வழியில் பயன்படுத்திக் கொள்ள சற்றும் விரும்பவில்லை. மன்னியுங்கள்; நான் ‘பயன்படுத்திக் கொள்ள’ என்று சொல்லி இருக்கக் கூடாது. ஆனால் உங்களுக்கே தெரியுமில்லையா, இந்த சமூகம் இயற்கைக்கு எதிரானது என்று.”
“மனித குலமே இயற்கைக்கு எதிரானதுதான்.” கேடி சொன்னாள். என்னுடைய ரைஃபிளை அவள் தன் இடது கைக்கடியில் வைத்திருந்தாள். அவளுடைய பட்டுப் போன்ற தலையின் மேல்பக்கம் என் தோள் உயரம் கூட வராதுதான், ஆனால் அவள் எஃகைப் போல கடினமானவள்;அவன் கொஞ்சம் நகர்ந்தான், இன்னும் அந்த வினோதமான சிரிப்புடன் இருந்தான். (அவனுடைய சகபாடி என்னிடம் அந்தச் சிரிப்பைத்தான் காட்டினான், ஆனால் இவன் என்னிடம் அதைக் காட்டி இருக்கவில்லை.) கேட்டியின் கைப்பிடிக்கு அந்த ரைஃபிள் நகர்ந்தது, ஏதோ அவள் வாழ்நாள் பூரா அந்தத் துப்பாக்கியால் சுட்டவள் போல.
“நான் ஒத்துக் கொள்கிறேன்,” என்றான் அந்த மனிதன். “மனித இனம் இயற்கையானதே அல்ல. எனக்கு அது தெரிந்தாக வேண்டுமே. என் பற்களில் உலோகம் இருக்கிறது. இங்கே உலோகத் தகடுகள் இருக்கின்றன.” தன் தோள் பட்டையைக் காட்டினான். “சீல்கள் ஒரு ஆணுக்குப் பல பெண்களாகக் கூடி வாழும் மிருகங்கள்,” அவன் மேலே சொன்னான்,” அப்படித்தான் மனிதரும்; மனிதக் குரங்குகள் சகட்டு மேனிக்கு பாலுறவு கொள்பவை. மனிதனும் அப்படித்தான்; புறாக்கள் ஒரே ஒரு துணையோடு வாழ்பவை; மனிதரும் அப்படித்தான்; ஏன் இனப்பெருக்கம் செய்யாமல் தனியே வாழும் மனிதரும் உண்டு, தற் பால் உறவு மட்டும் கொள்ளும் ஆண்களும் உண்டு. தற்பால் உறவு கொள்ளும் பசுமாடுகள் கூட உண்டு என நான் நினைக்கிறேன். ஆனால் வைலவே எதையோ இழக்கத்தான் இழந்திருக்கிறது.” ஒரு உலர்ந்த சிரிப்பைச் சிரித்தான். அது அவனுக்குக் கொஞ்சம் உதைப்பாக இருந்ததால் என்று அவனுக்குச் சாதகமாக ஏதும் சொல்வதானால், அவனுக்கு உதைப்பாக இருந்ததனால் அப்படிச் சிரித்து வைத்தான் என்று நான் சொல்வேன்.
“நான் எதையும் இழக்கவில்லை,” கேட்டி சொன்னாள்,”வாழ்வு முடியத்தான் போகிறது என்பதைத் தவிர.’
“நீங்கள்-?” அவன் இழுத்தான், என்னிடமிருந்து அவளை நோக்கி தலையை அசைத்து.
“மனைவிகள்,” கேட்டி சொன்னாள். “நாங்கள் ஒருவரை ஒருவர் மணந்து கொண்டிருக்கிறோம்.” அவனிடமிருந்து இன்னொரு உலர்ந்த சிரிப்பு.
“பொருளாதார வகையில் நல்ல ஏற்பாடு,”அவன் சொன்னான்,”வேலை செய்யவும், குழந்தைகளைப் பராமரிக்கவும் உதவும். நம் இனப்பெருக்கம் எப்போதும் உள்ள வழியிலேயே அமைய வேண்டுமானால், அதற்கு மரபணுக்களைத் தொடர்பறுத்துக் குலுக்கிச் சீரமைக்க வேறெந்த முறைக்கும் சளைத்ததல்ல. ஆனால், கேதரீனா மைக்கெலாஸன், கொஞ்சம் யோசியுங்கள். உங்கள் பெண்களுக்கு இதை விட வேறு மேலான வழி இல்லையா? நான் உள்ளுணர்வுகளை நம்புகிறேன், மனிதர்களைப் பொறுத்து கூட. என்னால் நீங்கள் இருவரும்- நீங்கள் ஒரு எந்திர வடிவாளர், இல்லையா? அப்புறம் நீங்கள், ஏதோ போலிஸ் உயரதிகாரி என நினைக்கிறேன் – என்னவோ ஒன்றை இழந்ததாக ஏதோ ஒரு விதத்தில் உணரவில்லையா என்ன? உங்களுக்கு அதுவே அறிவு பூர்வமாக எப்படியுமே தெரியும். இங்கே ஒரு உயிரினத்தில் பாதிதான் இருக்கிறது. ஆண்கள் வைலவேக்குத் திரும்பி வர வேண்டும்.”
கேட்டி எதுவும் சொல்லவில்லை.
“கேதரீனா மைக்கெலாஸன், நான என்ன நினைக்கிறேன் என்றால்,” மென்மையாக அந்த ஆண் சொன்னான், “நீங்கள், வேறு யாரையும் விட, அப்படி ஒரு மாறுதலால் மிகவும் லாபமடைவீர்கள்,” சொல்லிவிட்டு அவன் கேட்டியின் ரைஃபிளைத் தாண்டி அந்தக் கதவு வழியே வழிந்த ஒளிச் சதுரத்தை நோக்கி நடந்தான். அப்போதுதான் என் தழும்பை அவன் பார்த்தான். பக்கவாட்டில் இருந்து ஒளி வீசினால்தான் அது தெரியும்: நெற்றிப் பொட்டுப் பக்கத்திலிருந்து தாடை வரை ஓடும் மெலிய கோடு அது. அனேகம் பேருக்கு அது இருப்பதே தெரியாது.
“இதை எங்கே பெற்றீர்கள்?” என்றான். என்னையறியாமல் ஒரு சிரிப்புடன் சொன்னேன்,”என்னுடைய போன ஒண்டிக்கு ஒண்டிச் சண்டையில்.” நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நின்றோம், சில வினாடிகள். (இது அபத்தம்தான், ஆனால் உண்மை). பின் அவன் வீட்டு உள்ளே போனான், வலைக்கதவைச் சாத்தினான். கேட்டி கொஞ்சம் உடைந்த குரலில் சொன்னாள்,”அட முட்டாளே, நம்மை அவன் கேவலப்படுத்தி விட்டான் என்பது இன்னமுமா புரியவில்லை உனக்கு?” சொன்னவள் அந்த ரைஃபிளை வலை வழியே அவனைச் சுடத் திருப்பினாள். அவள் அதைச் சுடுமுன் நான் அவளை நெருங்கி விட்டேன், அவள் குறி வைக்குமுன் ரைஃபிளைத் தட்டி விட்டேன்; அது முன் முற்றத் திண்ணையில் ஒரு ஓட்டையைப் பொசுக்கியது. கேட்டி அப்படியே நடுங்கினாள்.
(தொடரும்)
One Reply to “அதெல்லாம் மாறியபோது – 2”
Comments are closed.