கல்

பேராசிரியரே எவற்றை சிறுபிள்ளைத்தனமான கதைகள் என்கிறீர்கள்?”

இறுதி வரிசை மாணவன். கேள்வி அவன் சைகைகளில் கணீரென வெளிப்பட்டது. தீர்மானமான தெளிவு பேராசிரியரை நோக்கிக் கூர்மையாக நகர்ந்தது.

அந்தப் பேருரை அரங்கு ஒனார்க்கா பல்கலைக்கழக வளாகத்தின் வேறெந்த பேருரை அரங்கையும் போலவே பசுமையால் நிறைந்திருந்தது. கூடிப்படர்ந்த மர இலைகள் ஊடே கசிந்து வந்த சூரிய ஒளி கட்டிடச் சுவர்களில் பூசப்பட்ட வர்ணங்களுடன் கச்சிதமாக கலந்து மரகதப்பச்சையாக வடிந்திருந்தது. முடிந்த வரை இயற்கை ஒளியே மிகுந்திருந்தாலும் அது வெயிலாக உறுத்தாமல் இருக்கும்படியாக வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களே இருந்தாலும், பேருரை அரங்கங்கள் இன்னும் கூட தனித்தன்மையுடன் விளங்கின. அந்த அரங்கங்களில் முப்பரிமாண தோற்ற வெளியில் நிகழ்த்தப்படும் உரை தொடர்பான உருவங்கள் தோன்றி அந்த உரைக்குத் தொடர்புடன் சுழன்று மறைய, அரை வட்ட வடிவாக மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.

தன் பண்பாட்டு பரிணாமவியலின் வகுப்பின் இறுதிக்கட்டத்துக்கு நகர்ந்து கேள்விகளை வரவேற்ற பேராசிரியர் வெதூரன் கண்களைக் கூர்மையாக்கி சைகை எழுப்பிய மாணவனைப் பார்த்தார்.

அந்த மாணவனின் கண்கள் பிரகாசித்தன. அவன் நெற்றியில் வட்டத்தின் கீழே இழுத்து விடப்பட்ட பின்னிப்பிணைந்த இரு வளைவுகள் தீர்க்கமாக தெரிந்தன. வெறுந்தோலின வழிபாட்டாளன். அவன் சைகை அசைவுகளில் தீர்மானம் தெளிவாகவும் கணீரெனவும் வெளிப்பட்டது. பேருரை அரங்கில் சிறு சைகைகளின் சரசரப்புகள் அடங்கி அமைதி அடர்ந்தது. மாணவர்கள் உன்னிப்பானார்கள்.

வெதூரன் மெல்லிய புன்னகையின் சிறு சமிக்ஞையை கைகளுக்குள் அடக்கிக்கொண்டார். பல்கலைக்கழகத்தின் பரிணாமவியல் வகுப்புகள் என்றைக்கும் போல இன்றைக்கும் கோபமான கேள்விகளை உணர்ச்சி ததும்ப வேகத்துடன் பிரசவித்தபடியேதான் இருக்கின்றன.

இன்னும் சொன்னால் இந்தக் கேள்வியை எழுப்ப உத்தேசித்தே அவர் அந்த உரையை அப்படி முடித்திருந்தார்: “நம் பரிணாம வரலாற்றின் ஆழ்ந்த மர்மங்களை நாம் அத்தனை எளிதாக சிறுபிள்ளைத்தனமான கதைகளை கொண்டு விளக்கிவிட முடியாது…” இறுகிப்போன மத நம்பிக்கைகளைச் சீண்டுவது, வகுப்பினை சுவாரசியமாக்கும்படியான சூடான கேள்விகளைக் கொண்டுவரும் என்று பேராசிரியருக்கு நன்றாகவே தெரியும்.

ஆம், இந்த பூமியின் அறிவுபெற்ற ஒரே இனத்தின் பரிணாம உதயத்தை பேசும் போதெல்லாம் அவரது உரைகளில் மத நம்பிக்கை கொண்ட மாணவர்கள் குறுக்கிடுவது வெதூரனுக்கு அப்படி ஒன்றும் புதியதில்லை. ஏறக்குறைய எல்லா கேள்விகளையும் அவர் அறிவார். அதற்கு அளிக்கப்பட வேண்டிய எல்லா பதில்களையும் அவர் அறிவார். கேள்விகள் எவ்வித தொனியில் கேட்கப்படும் என்பதைப் பொறுத்து அதற்கு எவ்வித தொனியில் பதிலளிக்க வேண்டும் என்பதையும் அவர் அறிவார்.

அவன் நெற்றியின் தீட்டல், பேராசிரியரை அம்மாணவனை சீண்ட வேண்டுமென உந்தியது: “உதாரணமாக வெறுந்தோலின வழிபாட்டாளர்களின் புராண நம்பிக்கைகளையே எடுத்துக்கொள்ளலாம்” நகைப்பின் சைகைகள் மிதமான அலையாக தோன்றி அடங்கின.

பேராசிரியர் தொடர்ந்தார்,

“பொன்னிற கூந்தல் கொண்ட வெறுந்தோலின தெய்வப்பெண் கீழிறங்கி நம் மூதாதையருக்கு அறிவை வழங்கியதாக கூறப்படும் கதை. ஏகனின் இறைத்தூதாக அவள் இறங்கினாள் என்பார்கள் அவர்கள். நாம் நெருப்பை கண்டுபிடித்த காலந்தொட்டே இந்த கதை வழங்கி வருகிறது. நம் மூதாதையர் குகை ஓவியங்களைத் தீட்ட ஆரம்பித்த காலங்களிலும் நாம் இதனை காண்கிறோம். நம்மில் கீழான நம் பரிணாம மூதாதையரை நம்மில் மேலான ஒரு சக்தியாக நாம் உருவகப்படுத்தும் இந்த தொன்மங்கள் ஒருவித தீராத தனித்துவ ஏக்கத்திலிருந்து வந்திருக்கலாம். ஆனால், இவை நம் அறிவுப்பரிணாமம் எப்படி ஏற்பட்டது என்பதனை விளக்கவில்லை. மாறாக அறிவியல் தேடலுக்கு முற்றுப்புள்ளிகள் வைப்பதாகவே அமைகின்றன. இவற்றைப் புறந்தள்ளியே நாம் வளர வேண்டும்.”

அவனுடன் சுவாரசியமாக விளையாடி அவனைத் தட்டியாகிவிட்டது. இனி அந்த மாணவனை அமரச் சொல்லவேண்டும். அதற்கு முன்னால் அவனது பெயரை கேட்க வேண்டும். கேள்வி கேட்கும் மாணவர்களிடம் அவர்களது பெயரைக் கேட்பது அவர்களின் அகங்காரத்தைத் திருப்தி செய்யும் ஒரு உத்தி என்பதை எல்லா ஆசிரியர்களும் அறிவார்கள்.

ஆனால் “அருத்தின்” என்று தன் பெயரைச் சொன்ன அந்த மாணவன் அமரத் தயாராக இல்லை. “மேலும் ஒரு கேள்வி.” “சீக்கிரம் கேள் அருத்தின்.” என்றார் வெதூரன். இந்த விளையாட்டு அலுப்புத்தட்ட ஆரம்பித்திருந்தது. “மற்றவர்கள் காத்திருக்கிறார்கள். மதிய உணவுக்கும் நேரமாகிக்கொண்டிருக்கிறது”

“குகை ஓவியங்களில் தொடங்கி இன்றைக்கு தொன்மங்களாகவும் தத்துவங்களாகவும் வளர்ந்திருக்கும் ஒரு கோட்பாட்டை வெறும் உளவியல் ஏக்கம் என்று ஏன் குறுக்குகிறீர்கள்?”

பேராசிரியர் புன்னகையை சமிக்ஞை செய்தார், பின்னர் பேராசிரியர்களுக்கே உரிய அழுத்தத்துடனும் ஆதாரத்தன்மையுடனும் தொடர்ந்தார்:

“இதைவிட மெல்லியதான ஆதாரங்களுடன் வெறுந்தோலின வழிபாட்டைக்காட்டிலும் வலுவான மதங்கள் வளர்ந்து அழிந்திருக்கின்றன. ஆனாலும் வெறுந்தோலின வழிபாடே நாம் காணும் முதல் மதம் எனலாம். அதன் குகை ஓவிய ஆதாரங்கள் என அண்மையில் கண்டெடுக்கப்பட்டவை இம்மதத்துக்கு ஒரு புத்துயிரை அளித்திருக்கின்றன என்பதும் உண்மைதான் வெறுந்தோலின பிராணிகளின் நடவடிக்கைகள் இப்போது நம் நடத்தையியலாளர்களால் மிக நன்றாகவே ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.”

அருத்தின் குறுக்கிட்டான், “அறிவியல் அனைத்தையும் விளக்கிவிடவில்லை பேராசிரியரே… கல்லெறியும் சடங்கினை எப்படி விளக்குவீர்கள்?”

“அருத்தீன். இது வழக்கமான மதப்பற்றாளர்கள் செய்யும் தவறுதான். அறிவியல் மதமல்ல. அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள. உண்மைகளை அது தேடிச் செல்கிறது… அது ஒரு நீண்ட பயணம். உறைந்த கோட்பாட்டு பதில்களின் தொகுப்பல்ல. உறைந்த பதில்களிலிருந்து உயிர்க்கும் கேள்விகளை உருவாக்குவதுதான் அறிவியல்…”

அவர் தொடர்ந்தார். அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் சைகைகளாக மாணவர்களை சென்றடைந்து அவர்கள் வைத்திருந்த மின்னணு தாள்களில் அவரவர்கள் மூளைகளுக்கு செல்லும் விதமாக பதிவோவியங்களாக மாறின.

”இப்போது இந்த கல்லெறியும் விஷயத்தையே எடுத்துக் கொள்வோம்…இது என்ன? ஒரு ஆண்டின் சில வருடங்களில் கிழக்கு பிரதேசத்தின் பனிமயப்பகுதிகளுக்கு வெறுந்தோல் பிராணிகள் சென்று அங்கு கல்லெறியும் நிகழ்வொன்றை செய்கின்றன. தொல்-பரிமாணவியலாளர்கள் நம் மூதாதையரின் கல்லெறியும் சடங்கை வரலாற்றுக்கு மிக முற்பட்ட காலங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் நம்முடைய கல்லெறியும் சடங்கில் இருக்கும் தத்துவார்த்த பின்னணி இந்த தாழ்நிலை பிராணிகளின் –அவை என்னதான் நம் பரிணாம தாயாதிகளாக இருந்தாலும்- கல்லெறியும் நிகழ்வில் உள்ளதா அல்லது அது வெறும் உயிரியல் விசித்திரமா? இந்த கேள்விக்கான பதிலை நாம் கறாரான சோதனைச்சாலை, நடத்தையியல் பரிசோதனைகள் மூலம் விரைவில் கண்டடைவோம் என்பதில் எனக்கு ஐயமில்லை. அது வரை இது நம்பிக்கை கொண்டோர் பிடித்து தொங்கும் இழையாகத்தான் இருந்துவிட்டு போகட்டுமே”

மீண்டும் குறுநகையின் சைகை அலை சிறிதாக. பேராசிரியர் தொடர்ந்தார்:

”ஆனால் இந்த நம்பிக்கைகளின் இன்னொரு பரிமாணத்தையும் இங்கே சுட்டிக் காட்டுவேன். அழிவின் விளிம்பில் இருந்த வெறுந்தோலின பிராணிகளை காப்பாற்றி இன்றைக்கு இந்த பூமியில் வைத்திருக்கக் காரணம் வெறுந்தோலின வழிபாட்டு மதம்தான் என்பதில் ஐயமில்லை. நம்மை விட கீழான பிராணிகளுக்கு நம்மைவிட அதீத சக்திகள் இருப்பதாக கற்பனைகள் செய்து புனிதத்தன்மை கற்பித்ததன் மூலம் அந்த பிராணிகளை நாம் காப்பாற்றி வந்திருக்கிறோம். என்றாலும் இத்தகைய பயன்பாடுகளெல்லாம் ஒரு மதத்தின் ஆதார நம்பிக்கைக்கு சான்றாக முடியாது. மாறாக ஒரு மதத்தின் சூழலியல் பயன்பாட்டை அதை விட சிறப்பாக நமது அறிவியலின் மூலம் நாம் ஆற்ற முடியும்…அன்றைக்கு மதம் ஒரு உயிரியல் தேவையை பூர்த்தி செய்திருக்கலாம் ஆனால் நாம் இன்று அதனை கடந்து வந்துவிட்டோம். எனவே வெறுந்தோலினங்களின் காற்றொலிகளை மொழியாகவும் அவற்றின் உந்துதல் பழக்கங்களை ஆழ்ந்த இறையியல்-நம்பிக்கைகள் சார்ந்த மதச்சடங்காகவும் உருவகித்து கற்பனை உலகங்களில் வாழ வேண்டிய அவசியம் இல்லை.

சரி கேள்விகள் முடிந்தன. அடுத்த வகுப்பில் சந்திக்கலாம். இது தொடர்பான உங்கள் களப்பணிக்கு பக்கங்கள் 234 முதல் …”

o0O0o

மெதுபனி வெண் கம்பளமாக எங்கும் பரந்திருந்தது. கால் வைக்கும் இடங்களில் கால் அழுந்தி வெகுவாக உள் சென்றது. அப்பெரும் வெண் படுகையில் குழு குழுவாக மனிதர்கள் கம்பை ஊன்றி ஊன்றி மெதுவாக நடந்தார்கள். புனிதப்பயணக் குழுவினர். “இன்னும் அரை நாள் தூரம்தான்…எங்கள் இறைவனே எங்களை உயர்த்து!” என்று தனக்குத்தானே முனகியபடி நடந்தாள் அக்குழுவிலேயே வயதான மூதாட்டி அவள். அக்குழுவிலிருந்த பதின்ம வயது சிறுவன் அவளை எரிச்சலுடன் பார்த்தான்,

“….இந்த அரக்க பனியின் ஊடாக ஒருமாதமாக நடந்து கடக்க வேண்டும். எதற்காக? கல்லெறிய… ஏன்? ஆண்டவன் நம்மை மீண்டும் மகோன்னத நிலைக்கு உயர்த்துவார் என நம் இறைதூதர் சொல்லியிருக்கிறார்…அவருக்கென்ன அவர் சொல்லிவிட்டு போய்விட்டார்… எனக்கென்னவோ அவர்கள் வீசி எறிகிற காணிக்கைகளைபொறுக்கத்தான் நாம் செல்கிறோம் என நினைக்கிறேன்… தீர்க்கதரிசனமும் பனிச்சகதியும்…”

அவன் வார்த்தைகள் அவளை காயப்படுத்த என்றே சொல்லப்பட்டவையாக தோன்றின. அவள் ஊன்றுகோலை மெதுபனியில் ஆழமாக நிறுத்தி அதில் தலையை சாய்த்து அவனைப் பார்த்தாள். சுருக்கங்கள் வரி வரியாக முகத்தில் படர்ந்து கவலையுடன் நெறிந்தன:

“அப்படி சொல்லாதே மகனே… இறைத்தூதரை நிந்தனை செய்யாதே அது பாவம். நம் முன்னோர்கள் இறைவனை மறந்த பாவத்தால்தான் அவர்கள் ஆள்கிறார்கள் தாவே… நாம் பாவத்துக்கு பிராயசித்தம் செய்கிறோம்… அந்த காலத்தில் – அதாவது நம் பெரும்பாவத்தின் அக்கினி, நாய்க்குடைகளாக இப்பூமியை எரித்து பறிப்பதற்கு முன்னர் நம் முன்னோர்கள் அவர்களுக்கு மொழியை தந்தார்கள்…நம் புனித நூல் சொல்கிறதல்லவா…”

அவளுக்கு மூச்சு வாங்கியது. அவள் மூச்சை உள்வாங்கி ஆயாசமாக பெருமூச்சு விட்டு பிறகு இராகத்துடன் பாடினாள்:

“மானுடர்களே உங்களில் கீழான விலங்குகளை உங்கள் அறிவால் உயர்த்தி உங்களை ஆளச்செய்த அந்த அதிசயத்தை பாருங்கள். இதனை கண்டபின்னரும் நீங்கள் விசுவாசியாமல் இருப்பீர்களா! (முடியாது) உங்கள் இறைவனை விசுவாசியுங்கள் அவன் நியாயமும் கருணையும் கொண்டவனாக இருக்கிறான்.”

அக்குழுவில் சிறிது தொலைவில் அவர்கள கவனித்துக் கொண்டிருந்த முதியவர் அச்சிறுவனிடம் வந்தார். பழந்தோலாடைகள் போர்த்திய அவனது தோளில் கைவைத்தார்:

“உன் வயதில் நம்ப கஷ்டமாகத்தான் இருக்கும். நானும் நம்பவில்லை. நானும் புனிதப்பயணத்தை மடத்தனமாகவே நினைத்தேன். இளைஞனே…ஆனால் நான் தொல் பழங்காலம் குறித்து ஆராய்ச்சி செய்திருக்கிறேன். பழமையான செல்லுலோஸ் ஏடுகள் – அவற்றில் நிறச் சாயங்களால் பிம்பங்கள் உருவாக்கி இருப்பார்கள் … அவற்றின் பெயர் புத்தகங்கள்…தொல் பழங்காலத்திலிருந்து கிடைத்திருக்கின்றன.”

அவர் குரல் உணர்ச்சி வேகத்தால் அல்லது மெலிதாக வீசிய குளிர் காற்றால் நடுங்கியது.

“அவை அவை….அவை அவர்களால் தடைசெய்யப்பட்டுவிட்டன. ஆனால் நான் அவற்றை பார்த்திருக்கிறேன். என்னை நம்பாவிட்டாலும் என் வயதை மதித்து இதை கேள்…அவற்றில் இந்த விவரணங்கள் உள்ளன. ஒரு காலத்தில் பேரழிவுக்காலம் என நம் இறைத்தூதர் சொல்லும் காலங்களுக்கு முன்னர் நாம் இந்த பூமியை ஆண்டோம்…இவையெல்லாம் ஏக்க கனவுகளின் விளைவுதான் என நினைத்த நான் அந்த பழமையான ஏடுகளைக் கண்ட பிறகு என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். மட்டுமல்ல நாம் அதாவது பேரழிவுக்கு முன்னர் நம்முடைய மூதாதையர் அவர்களின் முன்னோர்களுக்கு மொழிகளை கற்றுசுக்கொடுத்திருக்கிறார்கள். “

“நல்ல கதை” இளைஞனின் குரலில் ஏளனத்துடன் இப்போது கடுமையும் அப்பட்டமாக தெரிந்தது, “உண்மையிலேயே நன்றாக இருக்கிறது. ஆனால் கதை….அவ்வளவுதான் பெரியவரே…இல்லை என்றால் ஏன் அந்த மொழி நம்மிடையே இப்போது இல்லை?”

“அது…அது…” அவர் திணறினார். இந்த பதில் இன்னும் அவனிடம் ஏளனத்தை வரவழைக்கும் என்பது அவருக்கு தெரியும், இருந்தாலும்… “…காது கேளாதவர்களுக்கான மொழி…அப்படி ஒரு மொழி பேரழிவுக்கு முன்னால் மானுட இனத்தால் உருவாக்கப்பட்டிருந்தது, “

“ஹா…நீங்களே யோசித்து பாருங்கள்…நம்மை விட பண்பாட்டில் சிறந்த ஒரு இனத்துக்கு நம் இனத்தில் ஊனமுற்றவர்களுக்காக நாம் உருவாக்கியதாக சொல்லப்படுகிற ஆனால் இப்போது நம்மிடையே இல்லாத ஒரு மொழியை நாம் சொல்லிக்கொடுத்தோம் என நம்ப சொல்கிறீர்கள்…இதைத்தான் தீர்க்கதரிசியும் சொல்லுகிறார். இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் நாம் நம்பவேண்டும். நம்பினால் மற்றொரு பேரழிவுக்கு பிறகு நம்மை இந்த பூமியின் அதிகாரிகளாக ஆண்டவர் ஆக்கிவிடுவார் இல்லையா”

முதியவர் பெருமூச்சு விட்டார், “நான் பார்த்தவற்றை நீ பார்க்காதவரை அவற்றை நம்பு என உன்னை கேட்பது கடினம்தான்”

அவன் புன்னகைத்தான். “என்னவோ போங்கள்… உங்கள் ஆண்டவனையும் இறைத்தூதரையும் கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால் அவர்கள்… அவர்கள் எறியும் காணிக்கைகளும், அதனை நீங்களெல்லாம் பொட்டலம் கட்டிக்கொள்வதும்… நினைக்கவே சகிக்கவில்லை… என்றாலும் இந்த புனிதப்பயணத்தின் மிகப்பெரிய நல்லவிஷயமே அந்த காணிக்கைகள்தான். பிடிக்கவில்லை என்றாலும் அவற்றுக்காகத்தான் நான் வருகிறேன். உண்மையை சொன்னால் நீங்களும் அப்படித்தான் என்றுதான் நினைக்கிறேன். நாம் தேடிப் பெறுவதைக் காட்டிலும் தரமானவையாகத்தான் இருக்கின்றன. அதுவும் நெடுநாட்களுக்கு…”

அவர் எதுவும் பேசாமல் முகத்தை விண்ணுக்கு உயர்த்தி ஏதோ பழைய பிரார்த்தனையை, அப்படியாகத்தான் இருக்க வேண்டும், முணுமுணுத்தார்.

பார்வைக் கோட்டின் ஓரத்தில் கட்டிடங்கள் தெளிவற்ற சிறிய உருவங்களாக எழும்ப ஆரம்பித்தன. பிறகு நெருங்க நெருங்க அவை பிரம்மாண்டமாக உயர்ந்தெழுந்தன. செயற்கை புல்வெளிகள் திடீரென வெண்பரப்பில் பச்சை கோடுகள் காட்டின. பெரும்பாலான கட்டிடங்கள் அரை வட்ட கோளமாக இருந்தன. மேலே சூரிய ஒளியை சேமிக்கும் வளைந்த கண்ணாடிகள் இருந்தன. ஆங்காங்கே சத்து மண் படுகைகளில் ராட்சத மரங்கள் வளர்ந்திருந்தன. முழுப் பனி மய பிரதேசத்தில் தனி வெப்பப் பிரதேச சுவர்க்க தீவாக அவர்கள் கண்கள் முன் பிரம்மாண்டமாக எழுந்தது புனித இறைவனின் ஆதி தோட்டம் – சுவார்த்வார்!

அன்றொரு காலம் மானுடத்தின் மகத்தான மையமாக அது இருந்ததாக மறைபாடல்கள் சொல்கின்றன… இன்றோ, அதுவும் அவர்களின் கையில்… ஆனாலும் குறை கூறுவதற்கல்ல. இங்குதான் இன்றைக்கும் மானுடத்துக்கு பரி பூரண பாதுகாப்பு நிலவுகிறது. பழைய மறைப்பாடல்களில் சொல்வது போல:

என் வாக்கினைப் பெற்றுக்கொள்… நீரோடையைக் கரைகள் தாங்குவது போல சுவார்த்வாரில் நான் மனிதர்களை தாங்குகிறேன். என்றென்றும் இங்கே அச்சத்துக்கு இடமில்லை என்று நான் உனக்கு உறுதியளிக்கிறேன்.

அதனை உறுதி செய்வது போல மானுடர்களுக்கு எந்த ஊறும் விளைவிக்கக் கூடாது என்பதை சொல்லும் சைகைகள் நிறைந்த முப்பரிமாண ஒளி சமிக்ஞைகள் வழிபாதைகளில் ஆங்காங்கே தென்பட்டன.

புனிதப்புயணிகளுக்காக போடப்பட்டிருந்த கோடுகள் அவர்களின் உடல்கள் அருகில் வர வர ஒளி உமிழ்ந்தன.

அவை காட்டிய பாதையில் அவர்கள் பயணித்தார்கள்.

“எம் இறைதூதரே அவரை அனுப்பிய எம் தேவனே”

என ஒருவர் சொல்ல

“சைத்தானிலிருந்து எம்மை விடுவியும்”

என மற்றவர்கள் ராகத்துடன் இழுத்தனர்.

பாடலாக இதை சொல்லியபடியே அவர்கள் உடல்கள் அங்கும் இங்குமாக அசைந்த படியே முன்னேறின.

“எம் தேற்றரவாளனே”

“எம் கவலையின் தளைகளை வெட்டிப் போடும்”

“உலகின் பேரொளியே”

“இருளின் சங்கிலிகளிலிருந்து எம்மை விடுவியும்”

“இருளின் விளிம்பில் இருக்கிறோமே தேவா”

“ஒளியின் வெளிக்கு அழைத்துச் செல்லும்”

அம்மனிதர்கள் இறுதியாக வட்டமான மைதானத்தின் திறந்த வெளி அரங்குக்குள் நுழைந்தார்கள். அரங்கின் பல்வேறு வாசல்கள் ஒவ்வொன்றிலும் உருண்டையான கற்கள் அழகாக அடுக்கப்பட்டு பீடங்களில் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பீடத்தின் கீழும் ஒரு சின்னம் இருந்தது.

அவர்கள் அவர்களுக்கென வைக்கப்பட்டிருந்த கற்களை எடுத்துக்கொண்டனர்.

அந்த அரங்கின் மைதானத்தின் நடுவில் நெடிந்துயர்ந்து அந்த கம்பம் நின்றது. அந்த கல் கம்பம் மதிய வெயிலின் உக்கிரத்தில் கருமையுடன் தகதகத்தது. அதன்உச்சியில் ஒரு வட்ட வடிவ சின்னம் இருந்தது. அதன் உடலெங்கும் பாம்புகள் நெளிவது போல செதுக்கப்பட்டிருக்க அந்த நெளிவுகளின் அலைவளைவுகளில் வட்டங்கள் அரை வட்டங்கள் பிறைகள் முழுவட்டங்கள் என பொறிக்கபப்ட்டிருந்தன. அக்கம்பத்தில் அந்த அலைவளைவுகளுக்கு கீழே அடிப்பாக பீடத்தில் ஒரு மானுடப் பெண் அவர்கள் முன் மண்டியிட்டு நின்று கொண்டிருந்தாள். அவர்கள் அவள் கைகளை தம் கரங்களால் தடவியபடி நிற்பது சிதிலமான பிறகும் தெரிந்தது. அந்த அலைவளைவு செதுக்கல்களுக்கும் பீடத்தின் சிற்பத்துக்கும் நடுபட்ட அந்த பகுதியில் கல்லடிகளின் வடுக்கள் மீன் செதில்களைப் போல நிரம்பியிருந்தன. இறுதியாக நடந்த கல்லடிகள் ஓராண்டான பழமையைப் பெற்றிருந்தன.

டக்

முதல் கல்லை அக்குழுவின் மூப்பர், சுருக்கங்கள் முகம் நிறைந்த அந்த வயோதிக மனிதர் எறிந்தார். அது கச்சிதமாக அந்த இடைப்பட்ட பகுதியில் பட்டு அக்கருமையில் ஒரு வெண்மையான காயத்தை ஏற்படுத்தியது போல் இருந்தது. ஒரு நிமிடம் அதிலிருந்து ரத்தம் கூட கசியுமோ என்பது போல ஒரு பிரமையை அது உருவாக்கியது.

டக் டக் டக்

இப்போது மற்ற மனிதர்களும் அந்த கம்பத்தின் மீது கற்களை எறிய ஆரம்பித்தனர்.

அவர்களை சுற்றியிருந்த அரங்கத்தில் வெறுந்தோலின மதத்தோர் நிரம்பியிருந்தனர். அவர்களிடையே பெரும் ஆரவார சைகைள் வெகுவேகமாக பரவியபடி இருந்தன.

வட்டமாக மேலே எழும்பிய அரங்கத்தில் நிரம்பியிருந்த அந்த பக்திமிக்க பார்வையாளர்களை அந்த இளைஞன் பார்த்தான். அங்கிருந்த ராட்சத திரைகளில் அரங்கின் நடுவே அவன் தன்னையும் தன் தாயையும் இதர புனிதப்பயணிகளையும் பார்த்தான்.

அவனறிந்த பழைய தொன்மங்கள் உண்மையெனில் இறந்து போன ஏதோ ஒரு பண்பாட்டினால் ஆப்பிரிக்கா என அழைக்கப்பட்ட அந்த நிலப்பரப்பில் இன்று அந்த பெயர் ஒரு நினைவாகக் கூட இல்லை. இறைச்சாபம்!

தொலைக்காட்சி விவரணையாளர் கண்களில் நீர் கட்டிப் பளபளக்க கைகளை விஸ்தீரமாக அசைத்துக்கொண்டிருந்தார். இதோ பண்பட்ட உலகின் ஆதர்ச நகரம். ஒனார்க்கா! வரலாறு நுழைய முடியாத பழமைக்கு உரிமைக்காரி. கலைகளின் பேரரசி. அறிவியலின் தாய். எனினும் இன்றும் உலக வணிகத்தின் இதயத் துடிப்பு. நெடிதுயர்ந்த கட்டிடங்கள், விண் நிரப்பும் முப்பரிமாண விளம்பர பிம்பங்கள். சாலைகளிலென்ங்கும் சூரிய வாகனங்கள். வர்த்தக தந்திரங்கள். அரசியல் அதிகார விளையாட்டுக்கள். கலை பரிசோதனைகள் தொழில்நுட்ப போட்டிகள் அனைத்தையும் உள்ளடக்கி பரந்து நிற்கும் பெருநகரம் ஒனார்க்கா! ஆனால் அவள் இதய மண்டலத்தில் நிமிர்ந்து நிற்கும் கற்றூண் – பழமையும் மர்மமும் புதுமையும் கனவுகளும் தொடும் புள்ளி அது. வெறுந்தோலின உயிரினங்கள் இறையருளாலோ உந்துதலாலோ நிகழ்த்தும் அற்புத நிகழ்வின் உயிர் கேந்திரம். அங்கிருந்து மின்காந்த அலைகள் பிம்பங்களைச் சுமந்து உலகெங்கும் சென்று கொண்டிருந்தன.

வெறுந்தோலின மதத்தவர்கள் உலகெங்கிலும் அவரது அசைவுகளைக் கண்டு கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தனர்:

“நம் மெய்தேவையும் ஆசிர்வதிக்கப்பட்ட வெறுந்தோலின தேவதையையும் நம் விலங்கின மூதாதையார் ஆராதிக்கின்றனர். காண்பதற்கரிய காட்சி.

அறிவியலாளர்கள் இதனை மறுக்கலாம். இதெல்லாம் அறிவற்ற விலங்கு உணர்ச்சி உந்தல்களால் நடப்பதாக அவர்கள் சொல்லலாம். ஆனால் நேரில் காணும் நமக்கு தெரிகிறது. நம்மை விட அறிவில் குறைந்த உயிரினம் நம் தேவனை மாட்சிமை செய்யும் காட்சியை பாருங்கள், எம் பிரானுக்கே மகிமை! எம் உண்மை தேவுக்கே அனைத்து புகழும்!”

“அனைத்து புகழும் உண்மை தேவுக்கே”

வெறுந்தோலின தோத்திர நடனர்களின் அசைவுகளில் அப்பாடல் உயிர் பெறலானது

“எந்த மெய்தேவு வெறுந்தோலினப் பெண்ணை தேவதையாக்கி நம்மில் அறிவின் ஜுவாலையை ஏற்றினானோ அதே மெய்தேவு நம்மில் அறிவின் ஒளியை மேலும் மேலும் கனன்றெழச் செய்யட்டும். எங்கும் அறிவின் ஒளி. ஆம்! எங்கும் அறிவின் ஒளி. ஆம்! எங்கும் அறிவின் ஒளி. ஆம்! ஆம்! ஆம்!“

தோத்திரம் இப்போது பக்தி பரவச கோஷமாக மாறி வெறி கொண்ட சைகைகளாக இதர சிம்பன்ஸிகளிடம் பரவியது. அவர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை கீழே வட்ட அரங்குக்குள் எறிய ஆரம்பித்தனர். கல் எறிவதை நிறுத்திய மானுட புனிதப்பயணிகள் வெறி கொண்டது போல அவற்றை சேகரிக்க ஒருவரை ஒருவர் முண்டித் தள்ளியபடி ஓடினர்.

One Reply to “கல்”

Comments are closed.